மரகத மழையாய் நீ!..

17

இரண்டு நாட்கள் சென்று மஹா, தன் அக்கா தாராவிற்கு அழைத்தான். அன்று அவன் பேசும் நிலையில் இல்லையே.. எனவே தானே இன்று அழைத்தான், தமக்கைக்கு.

தாரா “என்ன டா.. எப்படி இருக்க…” என தொடங்கி பேசினாள்.

மஹா “ம்.. தரு க்கா, அப்படியே இருக்கேன். நீ என்ன சொல்ற…” என்றான் எந்த முகாந்திரமும் இல்லாமல் பேசினான்.

தாரா “டேய், முதல்ல நம்பவே முடியலை.. ரெண்டு பேரும் அப்படி முறைச்சிபீங்க.. “ என்றாள் குரலில் சந்தோசம்தான் இருந்தது.

மஹா “க்கும், இப்பவும் அப்படிதான்..” என்றான் கொஞ்சம் இளகிய குரலில்.

தாரா தொடர்ந்தாள் “ அது பார்த்துக்கலாம். எ..எனக்கு சந்தோசம் டா… ஒரு கேர்ள்லா.. முதல்ல நான் ரொம்ப ப்ரௌடா பீல் பண்றேன் உன்னை நினைச்சி.. அப்புறம்தான் என் தம்பி பீல். 

எப்படியோ எனக்கு, ஜானுவை ரொம்ப பிடிக்கும்.. ஆனா, இத நீ முன்னாடியே சொல்லி இருக்கலாம்.. எல்லாம் நல்லதா நடந்திருக்கும். பரவாயில்லை டா, விடு, எல்லாம் நல்லதுக்குதான்.” என்றாள்.

மஹா “ம்ம்…” என்றான் நீண்ட பெருமூச்சோடு.

மீண்டும் தாரா “ஜானு நல்ல பொண்ணுடா, அவ லைப்பில் சிரிச்சிட்டே இருக்கணும்.. டா. அதுக்கு என் தம்பி காரணமா இருப்பான்னு நினைக்கும் போது, ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றாள் குரலில் அத்தனை துள்ளல் இருந்தது. 

மஹா “க்கா.. தேங்க்ஸ் க்கா. நான் அப்படி எல்லாம் ஓவர் பீல் பண்ணல… அஹா… என்ன சொல்ல, ஜா… ஜானுவ முன்னாடியே பிடிக்கும் அக்கா. அப்போ என்னமோ சொல்ல வரலை… படிப்புதான் முக்கியம்ன்னு.. இருந்திட்டேன். ச்சு, அப்படியே டைம் போயிடுச்சி. 

இப்போ கூட இன்னும் அவகிட்ட எதுவுமே பேசலை க்கா… “ என்றான் கொஞ்சம் வருத்தமானக் குரலில்.

தாரா சிரித்தாள் “ஆமாம், உன்னை கண்டாலே அலறுவா…இப்போ என்கிட்டேயே.. அதிகம் பேசறதில்ல, மெதுவா பேசு.. ஜானு புரிஞ்சிப்பா” என பேச்சை வளர்த்தாள் தமக்கை.

மஹாவும், ஜனனி ஏதும் பேசாது, அவள் ஏதும் தான் சொன்னதற்கு பதில் சொல்லாதது, இன்னமும் சண்டை போடாதது என எல்லாம் சொன்னான் தாராவிடம்

தாராவும், சிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தாள். பின் “அவசரபடாத டா, அம்மாவை சரி பண்ணு முதலில். சித்தப்பா கிட்ட நீயே பேசினால் என்ன… அம்மா, சித்தியோட சொந்தத்தில் ஒரு வரன் வந்ததால்.. எப்படி சொல்றதுன்னு சங்கடப்படறாங்க. நீயே பேசேன்.. பேசி பாரேன், சித்தப்பா என்ன சொல்றாருன்னு பார்க்கலாம்.” என ஒரு புது ஐடியாவை கொடுத்தாள் தாரா.

மஹா “நானா… க்கா” என்றான் தயக்கமாக.

தாரா, ஏதேதோ சொல்லி.. சொந்தங்களிடம் எப்படி பேசுவது என தம்பிக்கு வகுப்பெடுக்காத குறையாக.. பேசி, பொறுமையாக ஜானுவிடம் பேச சொல்லி, தானும் ஜானுவிடம் பேசுவதாக சொல்லி போனை வைத்தாள் தமக்கை.

மஹாவிற்கு அன்றைய நேரம் கொஞ்சம் நெருடல்லிலாமல் சென்றது. என்னமோ பெரிய பலம் வந்ததாக தோன்றியது அவனுக்கு. அன்னையும் ஏதும் பேசவில்லை, ஜானு எப்போதும் போல ஒதுங்கி இருந்துக் கொண்டாள். அன்னையின் பேச்சை வைத்து எப்படி அவளிடம் பேசுவது என தெரியாமல் திக்கற்று நின்றவனுக்கு. ‘எனக்கு ஹாப்பி’ என்ற அக்காவின் பேச்சு யானை பலம்தான்  தந்தது.

மஹாவின், நாட்கள் யோசனையில் சென்றது. நடுவில் கொச்சின்க்கு அபிஷியல்  ட்ரிப் வேறு சென்று வந்தான் மஹாதேவ். அதனால் நாட்கள் ஒருவித அமைதியில் சென்றது.

ஜனனிக்கு, நண்பனின் பார்வையில் மஹா கொஞ்சம் நல்லவானக தெரிய தொடங்கி இருந்தான். அவளுக்கு இருந்த பொதுவான பார்வை மாறி.. ‘மஹாதேவ்’ என்றவனின் மனம், எப்படி என்ற சிந்தனைக்கு வந்தாள் ஜனனி. அதுதான் இந்த நாட்களில் அவளின் மாற்றம். இதற்கே அவள் நிறைய போராடிக் கொண்டிருக்கிறாள்.. தன் மனதோடு.  

திருமணம் எப்போது அவளுக்கு தண்டனையானதோ, அதுமுதல்.. பொதுவான மனநிலையை தனக்குள் வருந்தி கொண்டு வந்திருந்தாள் ஜனனி. தனக்கு ஒரு தீங்கு நடந்தவுடன் எல்லோரும் தப்பானவர்கள் என்ற நிலைக்கு வர கூடாது என்பதுதான் அவளின் எண்ணம். அதில் இதுவரை சரியாக இருக்கிறாள் பெண். ஆனால், யாரையும் தன்னுடைய வட்டத்தில் அனுமதித்ததில்லையே.. அதனால் இப்போது.. அந்த தீங்கு,  குழப்பமெல்லாம் நடக்கும் முன், தன்னை எதோ ஒரு வகையில் சீண்டியவன் வந்து நிற்கிறானே உடைந்த மனதின் முன்.. என்ன செய்வது.. என போராடுகிறாள் தனக்குள்.

ஒன்றுமே இல்லை என்பது வேறு.. கண்ணாடியான மனது உடைந்து சிதறிய  நிலையில், எல்லாம் கசந்த நிலையில்.. லேசாக உடைந்த சில்கள் மனதில் ஆங்காங்கே மின்னிக் கொண்டிருக்க.. ப்ரகாசமாய் வந்து நின்ற  மஹா என்ற துருவநட்சத்திரத்தின்  வரிவடிவை  அவளால் ஏற்க முடியவில்லை. முதலில் நம்பவே முடியவில்லை.. இது எனக்கு  வழி சொல்லும் என. 

என்ன செய்வது அவளின் மனதில், சிதறிய சில்லில்.. அந்த நட்சத்திரம் ஆங்காங்கே துண்டு துண்டாக சிதறிய படியேதான் காட்சி தருகிறது இப்போதும். ஒருவேலை அந்த கண்ணாடி சில்களை முழுவதுமாக ஈரத்துணி கொண்டு துடைத்தெடுக்கும் வரை.. எங்கோ கண்ணுக்கு தெரியாமல் குத்திக் கொண்டேதான் இருக்கும் போல. இந்த ப்ரகாசம் அதை செய்யுமா! தெரியவில்லை இன்னும் அவளுக்கு!!.

@#@#@#@#@#@#@

ராகவ்க்கு, மஹாவை பார்க்கும் எண்ணம் இருந்தது. ஆனாலும், மஹாவின் வீட்டிலிருந்து ஏதேனும் செய்தி வரட்டும் என அமைதியாக இருந்தான். அவர்கள் யோசிக்கும் வரை அவகாசம் கொடுக்கணும் என்பது ஒன்று. மற்றது நாமாக முன்நின்று ‘அவர்கள் சம்மதம் சொல்லியதாக’ இருக்க கூடாது என யோசித்தான் ராகவ். 

ஆனால், அவ்வபோது தன் தங்கையை கவனித்தான்.. ஏதேனும் யோசனையில் இருக்கிறாளா… நெருக்கடி அவளின் முகத்தில் தெரிகிறதா என நேரம் கிடைக்கும் போதெல்லாம் அண்ணன், தங்கையை ஆராய்ந்தான்.

காயத்ரி, கூட சில சமயம் முறைப்பாள் ‘இதென்ன.. இப்படி பார்க்கிறீங்க அவளை’ என. ராகவ் அப்போதுதான் எழுந்து வெளியே செல்வான்.  

ராகவ்க்கு, தங்கை தன்னிடம் ஏதும் சொல்லவில்லை என கொஞ்சம் தாங்கல்தான். ஆனால், அதையும் காயத்ரி நல்ல விதமாக சொன்னாள் ‘மஹாவை, காட்டி கொடுக்க வேண்டாம்ன்னு நினைச்சிருக்கலாம்’ என சொன்னாள். அப்போதுதான் அண்ணன் அமைதியானான். 

 

நாட்கள்தான் கணக்கில்லாமல் கடந்தது.. மதி, ஏதும் பதிலே சொல்லவில்லை மஹாவிற்கு. 

மதிக்கு, ஜானுவை நினைத்து சந்தோஷம் என்றாலும்.. இவன் முன்பே சொல்லி இருந்தால்.. அவன் விரும்புகிறான் என முடிந்துவிடும், இவனின் பெண் பார்க்கும் வைபவம். 

ஆனால், இப்போது இவராக பெண் தேடியது.. நிறைய பார்த்தார்.. ‘பொண்ணு இரண்டு டிகிரி படிச்சிருக்கணும்.. பொண்ணுக்கு கூட பொறந்தவன் இருக்கணும்.. நான் தாராக்கு இவ்வளோ செய்தேன் க்கா.. அவன் வேலையும் நல்ல வேலை.. அதுக்கு தக்க செய்யணும்..’ என நிறைய அடிக்கியிருந்தார். என்ன செய்வது.. திருமணம் எனும் போதும் வரட்டு கௌரவம் தன்போல வந்துவிடுகிறது போல. எனவே, அதையெல்லாம் யோசித்து.. பேசியதில்.. இப்போது ஜனனிதான் பெண் என்கையில் என்ன சொல்லும் ஊர் என பயம் வந்தது மதிக்கு. அது இயல்புதானே.

இந்த நெருக்கடியை எல்லாம் தாராதான் பேசியே சமாளித்தாள். ‘ம்மா, சொந்தத்தை மதி.. அதுக்காக அடங்கி போக முடியாதில்ல. சிலர் பேசத்தான் செய்வாங்க.. அதெல்லாம் பார்க்காத, மஹா காலம் முழுவதும் சந்தோஷமா இருக்கனும்மில்ல..’ என பலவாறாக பேசி பேசி அன்னையை தலையாட்ட வைத்திருந்தாள்.   

மதி, அந்த செய்தியை எல்லாம் உள்வாங்கி, தன்னை கொஞ்சம் தயார்ப்படுத்திக் கொண்டார் எனலாம்.

மதி, நீண்டநாள் சென்று இன்றுதான், காலை காபியோடு மகனை பார்க்க அறைக்கே வந்தார். மஹாக்கு, எழுந்ததும் இன்ப அதிர்ச்சி.. வாயெல்லாம் பல்லாக “என்ன ம்மா, கோவம் போயிடுச்சா” என்றான்.

மதி “கோவமென்ன டா கோவம், வருத்தம்தான். சரி வருமா.. அதுவும் காயம் பட்ட பொண்ணு டா, நம்மால் சரியாக பார்க்க முடியுமான்னு ஒரு எண்ணம். எனக்கு தெரியும் அவள் வாழ்ந்த வாழ்க்கை. ஆனா, மனசால் அவள் பட்ட காயம் என்னான்னு அளந்திட முடியாதே.. எல்லாம் பார்க்கணுமே. சித்திக்கு சித்தப்பா, உங்க அத்தை எல்லோரும் என்ன பேசுவாங்களோ தெரியலை.. ம்ஹம்… அத்தோடு என்னென்னமோ நினைச்சேன் உன் கல்யாணத்தை பத்தி..” என சொல்லி கண்ணை துடைத்துக் கொண்டார் மதி. இயல்பான அன்னை.. அவரின் பார்வையில் ஆயிரம் கனவுகள்.. மகனின் திருமணம் குறித்து. ஊர் மெய்ச்ச  ஒரு குடும்பம் அமைய வேண்டும்.. வசதியாக திருமணம் செய்ய வேண்டும்.. என. அது நியாமான ஆசையும் கூட. ஜனனி என்பது அவருக்கு பிடித்தம் தான் என்றாலும்.. முன்பு, அவன் ஆசைப்பட்ட போதே என்றால்.. இன்னும் ஆர்பாட்டமாக இருந்திருப்பார், மதி. ஜனனியின் பெருமையை சொல்லி சொல்லி மாய்ந்திருப்பார், கொஞ்சம் பெருமை பேசி இருப்பார். இப்போது எல்லாம் வேறு அல்லவா, எனவே அமைதியாக மகனின் சிகையை வருடினார் ஏதும் பேசாமல்.