அத்தியாயம்-6

‘எதுக்கு நன்றி சொல்லணும்?’ என குரு புருவத்தை சுருக்கினான்.

‘இந்த பிரியாணி செஞ்சது அவதான். நீ இரண்டு ப்ளேட் உள்ள தள்ளியிருக்க!’ என்றார் மணியம்மை.

‘ஓ, சமைக்கவும் செய்றாளா? அப்போ நாளைக்கு இருந்து சமைக்க சொல்லுங்க,’ என்றுவிட்டு நடந்தான்.

‘கண்ணா’ என மணியம்மை அழைக்க, ‘சமைச்சதுக்கு பணம் கொடுக்கிறேன், வாங்கிக்கட்டும். நன்றி கண்டிப்பா சொல்ல மாட்டேன்,’ என்றவன் தனது வேலட்டிலிருந்து பணத்தை எடுத்து நீட்ட நினைத்தவன், எதையோ யோசித்தவனாக மீண்டும் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு புறப்பட்டான்.

மணியம்மை ஒரு பெருமூச்சு விட்டபடி கீழே சென்றார்.

குரு ஃபோன் பேசியபடி புறப்பட்டான். அவன் வெளியே சென்று பத்து நிமிடங்கள் கழித்துதான் செம்பருத்தி வெளியே வந்தாள். அதன் பின் பெரிதாக எதுவும் நடக்கவில்லை. அதற்குக் காரணம் குருசேத்ரன் மிகவும் பிசியாக இருந்தான். ஏகப்பட்ட வேலை. செம்பருத்தி மற்றும் குரு இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் சூழல் எதுவும் ஏற்படவில்லை.

இப்படியே மூன்று மாதங்கள் ஓடி இருந்தது. செம்பருத்திக்கு வீட்டு நினைவு எக்கச்சக்கமாக வாட்டியது. அடிக்கடி ஃபோனும் கையுமாக இருந்தாள்.

‘என்னாச்சுமா?’ என மணியம்மை கேட்க, ‘ஒண்ணுமில்ல மா!’ என சமாளித்தாள் செம்பருத்தி.

‘என்னோட ஹெல்த் இப்போ ஓகேதான?’ என மணியம்மை கேட்க, ‘இந்த வீக் சுப்ரியா மேடம் வருவாங்க மா! கேட்போம்,’ என்றாள் செம்பருத்தி.

‘அப்படியா? சரி மா,’ என மணியம்மை ஒரு யோசனையுடன் இருந்தார்.

நீச்சல் குளத்தின் பக்கம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவள், ஃபோன் அலற எடுத்துப் பார்த்தாள். துளசி அழைத்திருக்க, ‘அக்கா, சொல்லுக்கா, எப்படி இருக்க?’ என செம்பருத்தி கேட்க, ‘என் நினைப்பு உனக்கு வரல போல, அதான் நானே ஃபோன் பண்ணேன்,’ என்றாள் துளசி.

‘அக்கா, அப்படி இல்ல,’ என குரல் கமறியது.

‘சரி, அதை விடு. டெலிவரி அப்பவாவது வாயேன். எனக்கு உன்னைப் பார்க்கணும்போல இருக்கு,’ என்றாள் துளசி.

செம்பருத்தியின் கண்களில் நீர் கோர்க்க, ‘சரி அக்கா, வரேன், டாக்டர் கிட்ட பேசறேன்,’ என ஆறுதலாக பேசினாள்.

‘அப்போ ஓகே! நல்லா சாப்பிடறியா? டச் ஃபோன் இருந்தாக்கூட வீடியோ கால் பார்ப்பேன். நீ இன்னும் பட்டன் ஃபோனை வச்சிருக்க!’ என துளசி கூற, ‘வாங்கிடலாம்,’ என சிரித்துக்கொண்டே கூறினாள்.

‘சரி தங்கம், நல்லா சாப்பிடு,’ என துளசி சொல்ல, பொதுவான விஷயங்களைப் பேசிவிட்டு ஃபோனை வைத்தாள் செம்பருத்தி.

அப்பொழுதுதான் உள்ளே நுழைந்தான் குரு. அவனைப் பார்த்ததும் திங்க் துள்ளிக் குதித்தது. ‘கொஞ்ச நேரம் சுத்திட்டு வா,’ என்று நாயின் சங்கிலியை அவிழ்த்துவிட்டு உள்ளே சென்றான் குருசேத்ரன்.

செம்பருத்தி ஒரு பெருமூச்சுடன் நடந்தவளை நோக்கி வந்தது திங்க். ‘வவ் வவ்’ என குரைத்துக்கொண்டே… நிச்சயமாக கடிக்க வரவில்லை. கிட்டத்தட்ட மூன்று மாதமாக இங்கிருக்கிறாளே, அதனால் அவளைத் தன் எஜமானிபோல நினைத்து கொஞ்ச வந்தது.

இதை அறியாத செம்பருத்தி வேகமாக ஓடியவள், கால் தவறி பதட்டத்தில் நீச்சல் குளத்தில் விழுந்துவிட்டாள்.

‘வவ் வவ்’ என கத்தினான் திங்க், நீச்சல் குளத்தைச் சுற்றிக்கொண்டே.

‘எதுக்கு இவன் இப்படி கத்துறான்?’ என பால்கனியில் இருந்து எட்டிப் பார்த்தான் குரு. அங்கே செம்பருத்தி தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருக்க, ‘ஓ காட்’ என வேகமாக படிக்கட்டில் இருந்து இறங்கியவன், பின்பக்கம் ஓடினான், மூச்சு வாங்க.

‘வவ் வவ்’ என திங்க் நீச்சல் குளத்தைச் சுற்றிக்கொண்டிருந்தான். அவனுக்கும் பதட்டம் தொற்றிக்கொண்டது.

‘நோ நோ நோ’ என வேகமாக குளத்தில் குதித்தவன், அவளைக் கஷ்டப்பட்டு தூக்கிக்கொண்டு மேலே வந்தான். பதட்டத்தில் என்ன செய்வதென தெரியவில்லை.

‘டூ சம்திங் குரு!’ என தனக்குத்தானே சொல்லிக்கொண்டவன், அவளின் கன்னத்தைப் பிடித்துத் தட்டினான். பேச்சு மூச்சில்லாமல் கிடந்தாள் செம்பருத்தி.

‘நோ நோ’ என அவளின் வயிற்றைப் பிடித்து அழுத்தினான். ஆனால் பேச்சு மூச்சில்லை. வேகமாக மூச்சு வாயில், இதழ்களை இதழ்கள் கொண்டு நிரப்பினான். தண்ணீரை உறிஞ்சி துப்பினான். மூன்று முறை உதடு பொருத்தினான். வயிற்றைப் பிடித்து அழுத்தியவன், மீண்டும் வாயில் ஊதினான்.

மெல்ல இரும்பியவள் மயக்கத்தில் கிடந்தாள்.

கண்கள் சுழன்றது. அவளின் துப்பட்டாவை நகர்த்தி தலையை வைத்துப் பார்த்தான். இதயத் துடிப்பு சத்தம் வேகமாக கேட்க, ‘ஓ காட்!’ என அவளின் கன்னத்தைத் தட்டினான். ‘ஹே ஹே எந்திரி!’ என சத்தமிட்டான் குரு.

மெல்ல கண் விழித்தவள், அவனைப் பார்த்ததும் வேகமாக எழுந்தாள்.

குருசேத்ரன் கோபத்துடன், ‘எதுக்கு நீச்சல் தெரியாம தண்ணில குதிச்ச? அறிவு இருக்காடி? நான் வரலைன்னா அப்புறம் நீ டிக்கெட் வாங்கிட்டு பறந்திருப்ப!’ என திட்டினான் மாணவனாக.

திங்க் நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு அமர்ந்தபடி அவர்களை வேடிக்கை பார்க்க, செம்பருத்தி தேம்பி அழ ஆரம்பித்தாள், நீச்சல் குளத்தைப் பார்த்துக்கொண்டே.

‘ஹே, இப்போ எதுக்கு அழுது டிராமா கிரியேட் பண்ற?’ என அவன் முறைத்துப் பார்க்க, ‘என்னோட ஃபோன்! என்னோட ஃபோன்!’ என அழுதாள்.

‘எங்கே?’ என அவன் கேட்க, ‘அதோ அங்கே!’ என கையைக் நீட்டிக் காட்டினாள்.

‘ஓ காட்!’ என சொல்லிக்கொண்டவன் தண்ணீரில் குதித்து ஃபோனை எடுத்தவன், முகத்தில் கோபம் மின்ன அவளைப் பார்த்தான், தண்ணீரில் இருந்தபடி.

‘சீக்கிரம் எடுத்திட்டு வாங்க!’ என செம்பருத்தி அழுதாள்.

தண்ணீரை உதறிக்கொண்டே மேலே வந்தவன், ‘சீரியஸ்லி இதுதான் உன்னோட ஃபோனோ?’

‘ம்ம்,’ என வேகமாக பிடுங்கியவள், அழுத்திப் பார்த்தாள் அந்த ஐகால் பட்டன் ஃபோனை.

‘என் ஃபோன்? என்னோட ஃபோன் பாழாய் போனதுக்கும் நான் தண்ணில விழுந்ததற்கும் இந்த நாய்தான் காரணம்,’ என கத்தினாள்.

‘அதோட நேம் திங்க், நாட் நாய். அண்டு நீ இப்போ உயிரோட இருக்கக் காரணமே அவன்தான். அவன் கத்தலைன்னா நீ செத்த,’ என்றான் தலையைக் கோதி கொண்டு.

செம்பருத்தி தேம்பி அழுதாள்.

‘ஹே, அழாத. காதுல ஈ போன போல இருக்கு,’ என்றான்.

செம்பருத்தி அவனை முறைத்துப் பார்க்க, ‘கண்ணைப் புடுங்கி திங்க்கு-க்கு போட்டுடுவேன்,’ என அவன் மிரட்ட, ‘திங்க்’ என்ற பெயரைக் கேட்டதும் அவர்களின் அருகில் வந்தான் திங்க்.

‘ஐயோ நாய்,’ என வேகமாக அவள் ஓட முயற்சி செய்ய, ‘ஹே, அறிவு கெட்டவளே, ஓடாத நில்லு! இல்லைன்னா திங்க் உன்னைத் துரத்துவான்,’ என அவளின் இடையைப் பிடித்து இழுத்து நிற்க வைத்தான்.

‘என்ன பண்ணீங்க? எங்கே பிடிச்சு தூக்கறீங்க? என்ன நினைச்சிட்டு இருக்கீங்க?’ என செம்பருத்தி அவனை கோபத்துடன் பார்க்க, தீவிரமாகப் பார்த்தவன் உதடுகள் ஏகத்தா சிரிப்பை வெளிப்படுத்திவிட்டு, திங்க்கைப் பிடித்துக்கொண்டு முன்னாள் சென்றான்.

‘எதுக்கு என்னைப் பார்த்து சிரிச்சிட்டு போறான்?’ என யோசித்தவள், ‘அவனே ஒரு பைத்தியம்,’ என தனக்குத்தானே நினைத்தவள், தொப்பலாக நனைந்தபடி சென்றாள்.

‘என்னாச்சுமா? இப்படி தண்ணில நனைஞ்சிருக்க?’ என மணியம்மை கேட்க, ‘ஃபோன் கீழே விழுந்திருச்சு மேடம், அதான். எடுக்கப் போனேன். அப்புறம் சார் தான் எடுத்து கொடுத்தார்,’ என்றாள்.

‘எந்த சார்?’ என சாந்தா கேட்க, ‘இன்ஜினியர் சார் அக்கா! அதான் ஏங்ரி ஆபீசர்,’ என்றுவிட்டு வேகமாகச் சென்றாள்.

மணியம்மை புரியாமல் நிற்க, ‘மேடம், நம்ம தம்பி ஃபோன் எடுத்து கொடுத்ததா சொல்லுது இந்தப் பொண்ணு. அப்போ இந்தப் பொண்ணு எப்படி தண்ணியில நனைஞ்சிருக்கு?’ என சாந்தா யோசனையுடன் கேட்க, மணியம்மையின் உதட்டில் புன்னகை பரவியது. ‘இதுதான் ஒரே வழி’ என நினைத்துக்கொண்டார். அன்று முழுவதும் உற்சாகமாக இருந்தார்.

இரவு உணவு தயாராக, மணியம்மை சாப்பிட்டுக்கொண்டே செம்பருத்தியிடம் பேச, ‘க்கும்’ என தொண்டையை கணைத்தபடி வந்தான் குரு.

சாந்தா கிச்சனுக்குள் செல்ல, செம்பருத்தி வேகமாக எழுந்துக்கொண்டாள்.

‘மாம், நான் என்ன கோஸ்ட்டா? சாந்தா வேகமா உள்ள போறாங்க?’ என குருசேத்ரன் குரல் கேட்க, ‘சார், அப்படியெல்லாம் இல்லை, வாங்க உட்காருங்க,’ என தட்டை எடுத்து வைத்தாள் சாந்தா.

மணியம்மையின் அருகில் அமர்ந்து உணவைச் சாப்பிட்டான் அமைதியாக.

‘குரு!’

‘ம்ம்!’

‘உனக்கு பொண்ணு பார்க்கலாம்னு இருக்கேன்.’

‘எதுக்கு?’

‘கல்யாணம் பண்ணத்தான்டா?’

‘எனக்கு மேரேஜ்ல இன்ட்ரஸ்ட் இல்ல. அதை மறந்திடுங்க,’ என்றான் வெடுக்கென்று.

‘உன்னோட மனசுல யாரும் இருக்காங்களா?’ என மணியம்மை கேட்டுக்கொண்டே செம்பருத்தியைப் பார்க்க, ‘மலைகுரங்கு மனசுல பொண்ணா?’ என செம்பருத்தியின் உதட்டில் கொஞ்சமாகப் புன்னகை பரவ, மறைத்துக்கொண்டாள்.

ஆனால் அதை மணியம்மை தவறாகப் புரிந்துகொண்டார்.

‘என்னோட மனசுல செங்கல் சிமென்ட் தான் இருக்கு. யாரும் இல்ல,’ என்றான் குருசேத்ரன் சாப்பிட்டுக்கொண்டே.

‘டேய், விளையாடாத குரு. எனக்கு உன்னோட குழந்தைகளைப் பார்க்கணும். அப்போதான் என்னோட உயிர் நிம்மதியா பிரியும்,’ என்றார்.

‘மாம், நீங்க!’ என அவன் முகம் கோபத்தைத் தத்தெடுக்க, ‘நான் சொல்றத கேளு. உனக்குப் பிடிச்ச போல ஒரு பொண்ணு கண்டிப்பா இருப்பா! இதை மட்டும் நீ கேட்கலைன்னா, நான் இனி எதையும் சாப்பிடப் போறதில்லை,’ என சொல்லிவிட்டு எழுந்தார்.

அவரின் கையைப் பிடித்து அமர வைத்தவன், ‘என்னமோ பண்ணுங்க,’ என்றுவிட்டு வேகமாக எழுந்து சென்றுவிட்டான்.

‘ஹையா, கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டான்,’ என மணியம்மை சந்தோஷமாக உறங்கச் சென்றார். அவர் மனதில் ஒரு திட்டம் போட்டிருந்தார். அது நடக்குமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

செம்பருத்தி அர்த்த ராத்திரியில் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள். முகமெல்லாம் வியர்த்துப் போனது. உதட்டைத் தொட்டுப் பார்த்தாள். ‘ஐயோ, சீ, வியாக், ஹேன் ஹேன்,’ என சிணுங்கி அழுதாள்.

‘அப்போ அதுக்குத்தான் அவன் சிரிச்சிட்டே போனானா? ஐயோ, ஃபர்ஸ்ட் எய்ட் ஆக இருந்தாலும் அவன் போய் என்னை.. ஐயோ,’ என எரிச்சல் அவளுக்கு.

அதே நேரம் கதவு தட்டப்பட்டது.

செம்பருத்தி கதவைத் திறக்க, வெளியே குருசேத்ரன்..?

‘நீங்க..?’

தொடரும்…