அத்தியாயம்- 29

ஒரு கையை இடுப்பில் வைத்தபடி இன்னொரு கையால் நெற்றியை தேய்த்துக்கொண்டு அவளைப் பார்த்தான் குரு.

“சரி மேடம், நான் போய்த் தூங்குகிறேன்,” என அவள் நேராகக் கீழே உள்ள அறைக்குச் சென்றாள்.

மணியம்மை அவளின் பின்னால் சென்றவர், படுக்கை விரிப்பைப் போட அவளுக்கு உதவி செய்ய, “நகருங்க,” என அனைத்தையும் சரி செய்து கொடுத்தான் குரு.

“சரி மேடம், நான் தூங்குறேன். ரொம்ப டயர்டா இருக்கு,” எனச் சோம்பல் முறித்தாள்.

“அடி வாங்கப் போற செம்பருத்தி! மசக்கை பொண்ணு, முறி விடாத. அப்படி செய்யக் கூடாது,” என்றார் மணியம்மை.

“அது சாரி மேடம், ஏதோ தெரியாம பண்ணிட்டேன்,” எனச் செம்பருத்தி கூற, “நான் அவளைப் பார்த்துக்கிறேன், நீங்க போங்கம்மா!” என்றான் குரு.

மணியம்மை எதுவும் பேசாமல் சென்று விட்டார். ஏதோ சரியில்லை எனத் தோன்றிக்கொண்டே இருந்தது.

அவர் சென்றதும் கதவைச் சாத்தியவன், “இப்போ எதுக்குடி எங்க அம்மாவை ‘மேடம்’ன்னு கூப்பிட்டு சீன் கிரியேட் பண்ற? என்னோட கோபத்தை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திட்டு இருக்கேன். ஓவரா ஆடாத!” என உறுமினான் குருசேத்ரன்.

செம்பருத்தி அவனை ஒரு பொருட்டாகக்கூட மதிக்காமல் நன்றாகத் தலையணை வைத்துப் படுத்துக்கொண்டாள்.

“ஹே!” என குருசேத்ரன் குரலை உயர்த்த, லைட்டைக்கூட ஆஃப் செய்திருந்தாள். ஒரு பெருமூச்சை விட்டவன் வேகமாக கதவைத் திறந்து கொண்டு அவன் அறைக்குச் சென்றான். இதுதான் சாக்கு என நினைத்தவள் வேகமாக வந்து கதவை லாக் செய்து கொண்டாள்.

குரு ஃப்ரெஷ் ஆகி உணவை உண்டு முடித்து அவள் இருக்கும் அறைக்கு வந்தவன் கதவைத் திறக்க முடியவில்லை.

தட்டித் திறக்கவும் முடியாது. ஏனென்றால் அருகில் தான் மணியம்மையின் அறை. அப்புறம் அவர் துருவி துருவி கேள்வி கேட்பார். கைகளை இறுக்கி மடக்கியவன், டிப் பேனாவை அழுத்திக் கொண்டே அவனது அறைக்குச் சென்று விட்டான். வேறு என்ன செய்ய முடியும்? அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது.

“மேடம்! மேடம்!”… பதில் இல்லை.

“மேடம் உங்களைத் தான்!”..

மணியம்மை அவளை முறைத்துப் பார்க்க, “அத்தை! சாரி! உங்க கிட்ட முக்கியமான விடயம் பேசணும்.”

“என்ன?”

“உங்க பேரன்/பேத்தி இன்னிக்கு ஸ்கேனில் பார்க்கப் போறோம். ஹாஸ்பிடல் வர்றீங்களா?” எனக் கேட்டாள்.

மணியம்மையின் முகம் புன்னகையில் விரிய, “ம்ம்… வரேன்,” என்றார்.

“அப்போ புறப்படுங்க போலாம்,” எனச் செம்பருத்தி கூற, “போலாமா!” என டிப் டாப்பாக வந்து நின்றான் குரு.

“போலாமே,” என மணியம்மை வர, அவரின் கையை கோர்த்துக்கொண்டு வந்தாள் செம்பருத்தி.

“மா! நீங்களுமா?”

“ஏன்டா நான் வரக் கூடாதா? பார்க்கப் போனால் நீதான் என்னை கூப்பிட்டு இருக்கணும், செம்பருத்தி என்னை ஆசையா கூப்பிட்டிருக்கா! எனக்கே தோணாத விஷயத்தை அவள் சொல்றா! என் மருமகள்தான் எல்லாத்துலயும் பெஸ்ட்,” என்றார்.

“ஓ காட்! இவள் வேலை தானா? நிரம்ப டென்ஷன் பண்றா! இன்னிக்கு வந்து உனக்கு கச்சேரி வச்சுக்கிறேன்,” என எதுவும் பேசாமல் முன்னால் நடந்தான் குரு.

இரண்டு நாட்களுக்கு முன்பு வரை அவன் நினைத்ததைத்தான் அவள் முதற்கொண்டு அவனைச் சுற்றி இருக்கும் அனைவரும் செய்தார்கள். ஆனால், இனி இந்த நொடிப்பொழுதில் இருந்து அவள் நினைத்ததைத்தான் இனி அவன் செய்யப் போகிறான். போர்க்களத்தில் வீரனுக்கு முக்கியத்துவம். ஆனால், செம்பருத்தி களம் காணும் செஸ் களத்தில் ராஜாவை விட ராணிக்கே அதிகாரம், ஆளுமை அதிகம்.

சுப்ரியாவின் முன் மூவரும் அமர்ந்திருந்தார்கள்.

“சரி, செக் பண்ணிடலாமா? கிட்ல இருந்து இன்னொரு தடவை செக் பண்ணுவோம்,” என மீண்டும் செக் செய்தாள் சுப்ரியா.

“பிளட் டெஸ்ட் கொடுக்கிறதுக்கு முன்னாடி ஸ்கேன் பார்ப்போம்,” என சுப்ரியா அவளை உள்ளே அழைத்துச் சென்றாள்.

செம்பருத்தி படுத்துக் கொள்ள பொறுமை இழந்த குரு அவளின் பின்னால் சென்றான்.

“டேய், கொஞ்ச நேரம் வெயிட் பண்ண முடியாதா?” என சுப்ரியா சலித்துக் கொள்ள, “சீக்கிரம் பண்ணு!” என அவசரப்படுத்தினான்.

“உங்களுக்கு ஒர்க் இருந்தால் ப்ளீஸ் கிளம்புங்க. இது ஒண்ணும் கட்டிட வேலை இல்லை, சீக்கிரம் கலவை கலக்கி பூச…”

“அடி தூள்! சூப்பர் செம்பருத்தி,” என்ற சுப்ரியா மெல்ல ஸ்கேன் செய்ய ஆரம்பித்தவள், “ஓ மை காட்! ஓ மை காட்!!” என அதிர்ந்து விழித்தாள்.

“ஹே! என்னாச்சு?” எனப் பதட்டத்துடன் கேட்டான் குரு.

“மேடம் நான் சாகப் போறேனா?” எனச் செம்பருத்தி கேட்க, “ஹே யூ! பேச வாய் இருக்காது. இன்னொரு வார்த்தை பேசின, வாயைக் கிழிச்சுவிடுவேன்,” என்றான் குரு ஆக்ரோஷத்துடன்.

“ஹே ஹே! இருங்க! டேய் குரு! ரெண்டு கரு! ஹொய் ஹொய்!” எனப் புருவம் உயர்த்தினாள் சுப்ரியா.

“என்ன சொல்ற புரியல?” என குருசேத்ரன் மீண்டும் கேட்க, “நீ ரெண்டு குழந்தைக்கு அப்பாவாகப் போற!” என்றாள் சுப்ரியா.

“என்னமா ஆச்சு? மூணு பேரும் என்ன பண்றீங்க?” என மணியம்மையின் குரல் கேட்க, “ஆன்ட்டி, உள்ளே வாங்க! உங்க வீட்ல இன்னிக்கு கியா கியா சத்தம் தான்! ஒரே நேரத்தில் ரெண்டு பேருக்குப் பாட்டி ஆகப் போறீங்க,” என்றாள் சுப்ரியா சிரித்துக்கொண்டே.

மணியம்மையின் முகம் புன்னகையில் விரிய, வெளியே வந்த செம்பருத்தியைக் கட்டியணைத்து முத்தமிட்டார்.

“அவசர அவசரமா கல்யாணம் பண்ணியே அது இதுக்குதானாடா?” என சுப்ரியா கேட்க, “டிசிப்ளின்னா பேசு இடியட்!”

“ம்ம்… நீ ரொம்ப டிசிப்ளின் வேலை பார்த்திருக்க,” என சுப்ரியா சிரித்தபடி கேட்டாள்.

“அவன் கடக்கிறான் விடு மா! சரி சொல்லு! குழந்தைக எப்டி இருக்காங்க?” என மணியம்மை கேட்க, “குழந்தைகளை விட அம்மா முக்கியம் ஆன்ட்டி. இனி நீங்க செம்பருத்தியை குழந்தை மாதிரி பார்த்துக்கணும். ஒரு பொருளைக்கூட தூக்கக் கூடாது. ஆடக் கூடாது, அசையக் கூடாது. னோ பிசிக்கல் ரிலசன்ஷிப். அவள் வாமித் பண்ணக் கூடாது. நல்லா சாப்பிடணும். ரெண்டு குழந்தை இருக்கிறதால 15 நாளைக்கு ஒரு தடவை செக் அப் வரணும். அவளைப் பெயருக்கு ஏற்ற போல அதாவது பூ போல பார்த்துக்கணும். இது பிலட் டெஸ்ட் எல்லாத்தையும் கொடுத்திடு செம்பருத்தி. ஆன்ட்டி, நீங்க அவளைக் கூட்டிட்டுப் போங்க,” என்றாள் சுப்ரியா.

அவர்கள் இருவரும் வெளியே சென்று விட, சுப்ரியாவின் பார்வை குருசேத்ரன் மீது படிந்து, “என்னடா? அவள் முகமே சரியில்லை.”

“நீ மட்டும் அந்தக் கிளினிக் கூட்டிட்டுப் போகாம இருந்திருந்தால் இத்தனை பிரச்னையில் நான் சிக்கி இருக்க மாட்டேன்,” எனக் குருசேத்ரன் கூறினான் கோபத்துடன்.

“நல்லது பண்ண கூட்டிட்டுப் போன என்னைச் சொல்லணும்,” என்றவள், “சீ, இப்போ நான் சொல்லப் போற விஷயம் கொஞ்சம் சீரியஸ்.”

“என்ன?”

“தேர்ட் மந்த் ஸ்கேன்ல குழந்தையோட பொசிஷன் அண்ட் வெயிட் பார்க்கணும்.”

“என்னாச்சு?” எனக் குருசேத்ரன் முகம் மாறிப் போக, “ரெண்டு குழந்தையைத் தாங்குற அளவுக்கு உன் பொண்டாட்டியோட கர்ப்பப்பை இருக்கா அப்டின்னு செக் பண்ணணும்.”

“என்ன சொல்ற? அவளுக்கு எதுவும் ஆகாதுதான! எனக்குக் குழந்தைங்க முக்கியம் இல்ல. எனக்கு அவள்தான் வேணும். நீ காம்ப்ளிக்கேட்டா சொல்லி டென்ஷன் பண்ணாத பிரியா.”

“அந்த அளவுக்குப் பொண்டாட்டி மேல லவ்வா?”

“நான் என்ன கேட்டுட்டு இருக்கேன்? நீ என்ன பேசிட்டு இருக்க?” என மிரட்டினான்.

சுப்ரியா பெருமூச்சுடன், “அதுக்கு லெப்ராஸ்கோபி பண்ணணும். சர்விக்கல் ஸ்டிட்ச் இருக்கு. அதை பண்ணிட்டா அவளுக்கும் குழந்தைகளுக்கும் எதுவும் ஆகாது. ஆனால் நான் சொன்ன ஸ்கெட்யூல் படி தான் அவளைப் பார்த்துக்கணும். முக்கியமா டென்ஷன் ஆகக் கூடாது,” என்றாள்.

முகத்தை அழுத்தித் துடைத்தபடி பார்த்தான் குரு.

“நீ இப்போவே சொல்லி அவளை டென்ஷன் பண்ணாத. அவள் கிட்ட அன்பா நடந்துக்கிற வழியப் பார். அது முடியலனா எட்ட நின்னுக்க,” என்றாள் சுப்ரியா.

அதற்குள் செம்பருத்தி மற்றும் மணியம்மை இருவரும் வந்து விட, “ஹே! ஒரு புரோஜெஸ்ட்ரான் இன்ஜெக்சன் போடணும். அண்ட் டெய்லி அதை நீ வச்சுக்கணும்… நான் சொல்றது புரியுதா?”

“ஹான், தெரியும் டாக்டர்,” எனச் செம்பருத்தி கூற, “இப்போ வா இன்ஜெக்சன் போட்டு விடறேன்,” என அவளுக்குப் போட்டு விட்டவள், “டெய்லி பாலில் புரொட்டீன் பவுடர் குடி. வாக்கிங் போ. நோ ஸ்ட்ரெய்ன். எந்த வேலையும் செய்யாத.”

“நான் பார்த்துக் கொள்கிறேன் சுப்ரியா,” என மூவரும் கிளம்பினார்கள்.

செம்பருத்தி எப்போதும்போல இருந்தாள். அவனை விட்டுத் தப்பிக்கவே முடியாமல் ஒன்றுக்கு இரண்டு வரம் கொடுத்து விட்டான். சும்மாவா பின்ன… ஒருநாள் கூட விலகிப் படுக்கவில்லை. ஆபீசில் இருந்து வருவான், கட்டியணைப்பான். உடனே கட்டில் அதிர ஆட்டத்தை அரங்கேற்றி அவளை மொத்தமாக ஆண்டு விட்டு கிளம்புவான். வருவான், செய்வான், செல்வான் – ‘ரிப்பீட்டு’ என்ற ரீதியில்தான் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது.

மணியம்மை நேராகக் காலையில் போடும் மாத்திரைகளை அவளுக்குக் கொடுத்துச் சாப்பிட வைத்தார்.

செம்பருத்தி புன்னகை செய்ய, “எதுக்குடி சிரிக்கிற?”

“நான் தான் உங்களைப் பார்த்துக்க வந்தேன். இப்போ நீங்க என்னைப் பார்த்துக்கிறீங்க?” என்றாள்.

“அதனால என்ன? நீ என்னைப் பார்த்துகிட்டது வேலை. ஆனால் இப்போ நான் உன்னைப் பார்த்துக்கிறது வரம்டி!” என்றார் மணியம்மை.

“பேசாமல் நீங்க இன்னொரு பையனப் பெத்திருக்கலாம், உங்களைப் போலவே,” என்றாள் செம்பருத்தி.

“எதுக்குடியம்மா?” என மணியம்மை கேட்க, “பேசினது போதும்,” என வந்தான் குருசேத்ரன் கோபத்துடன்.

“என்னடா? மிரட்டுற?” என மணியம்மை எழுந்தார்.

“அவள் இப்போ ரெஸ்ட் எடுக்கணும்,” எனக் குரு சொல்ல, “அவள் ரெஸ்ட் எடுப்பா! அதுக்கும் உனக்கும் எந்த சம்மதமும் இல்லை.”

“மா!”

“இனி நீ செம்பருத்தி பக்கமே வரக் கூடாது. என்னைக் கேட்டால் நீ வீட்டுக்கே வராத! ஆபீஸ்லயே தங்கிக்க. அவளை நான் பார்த்துக்கிறேன்,” எனக் கூறியவர் செல்விக்கு அழைத்து இரட்டை கரு விஷயத்தைக் கூறினார்.

செம்பருத்தி புன்னகையுடன் எழுந்தவள், அவனை கேவலமாகப் பார்த்தபடி அறைக்குச் சென்றாள்.

இதோ அவள் பின்னால் அறைக்குள் வந்து விட்டான்.

“இந்தக் கொசுத் தொல்லை தாங்கவே முடியல,” எனச் செம்பருத்தி வாய்விட்டு கூற, “உன்னோட ஹெல்த் பத்தி கேட்க, நான் உனக்கு போன் பண்ணுவேன். நீ எடுக்கணும்,” என குருசேத்ரன் சொல்லி முடிக்கவில்லை.

போனைச் சுவற்றில் அடித்தாள் செம்பருத்தி.

குருசேத்ரன்..?

தொடரும்…