அத்தியாயம்- 26

தனது கண்களை நம்ப முடியாமல் பார்த்தாள் செம்பருத்தி. மூச்சு விட சிரமப்பட்டாள்.

நித்யா அவளைப் பார்த்து விட்டு, “என்னாச்சு உங்களுக்கு? எதுவும் பிரச்சினையா?” எனக் கேட்டார்.

“இல்லை, இல்லை டாக்டர், நான் நல்லா இருக்கேன்,” என்றவள் மெல்ல தன்னைச் சமப்படுத்திக்கொண்டாள்.

“ப்ளீஸ், ஓப்பனா சொல்லுங்க! உங்க கிட்ட அவர் நல்ல விதமா நடந்துகிட்டாரா? இல்லை எதுவும் ‘ஹார்ஷா’ பிஹேவ் பண்ணாரா?” என நித்யா கேட்டாள்.

“ப்ளீஸ் டாக்டர்! நான்… எனக்குக் கொஞ்சம்…” என அவள் தயங்கியபடி கூற…

“சரி, எப்படி அவருக்கு நீங்க அறிமுகம்?” எனக் கேட்டாள் நித்யா.

“நான் அவரோட அம்மாவை டேக் கேர் பண்ணிக்க வந்தேன்,” என்றவள், “சாரி டாக்டர்,” என எழுந்து கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.

“ஹே, ஓகே, ஓகே. லீவ் இட்!! ஒருவேளை உங்க மேல இருந்த வெறுப்பு இப்போ காதலாக மாறி இருக்கலாம். நான் தான் ஏதோ அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கிட்டேன் போல. அவரு ஒரு சிட்டிங்தான் வந்தாரு,” என்றாள் நித்யா.

“ஓகே டாக்டர், ஒன்னும் பிரச்சினை இல்லை!!” என செம்பருத்தி அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டாள், தன் அக்காவை அழைத்துக்கொண்டு.

நித்யா சட்டென நினைவு வந்தவள் போல சுப்ரியாவுக்கு அழைக்க… அவளோ போன் எடுக்கவில்லை.

சுப்ரியா கோபத்துடன் ஸ்ரீராமின் முன்னால் நின்றிருந்தாள்.

“சொல்லுங்க மேடம்!” என ஸ்ரீராம் பார்க்க…

“என்னடா, ‘சொல்லு’ன்னு கேட்கிற? நான் எதுக்கு வந்திருக்கேன்னு தெரியாதா? உன்னோட பாஸ் இன்னும் அரை மணி நேரத்துல என் முன்னாடி இருக்கணும். இல்லன்னா நடக்கிறதே வேற,” என்று சொல்லி விட்டு வேகமாக கேன்டீன் பக்கம் சென்றாள் சுப்ரியா.

ஸ்ரீராம் விவரத்தை குருசேத்ரனிடம் கூற… அவன் கடுப்புடன் கிளம்பினான்.

“என்னாச்சு செம்பருத்தி? எங்கேம்மா போற?” என செல்வி கேட்க…

“நான் வேலை செய்யிற ஹாஸ்பிடலுக்கு போறேன்மா, ஒரு செக்கப் இருக்கு,” என்றவள், தனது முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளாமல் சென்றாள்.

போகும் வழியில் ஹாஸ்பிடலுக்கு அழைத்து கேட்டாள்.

“இல்லை செம்பருத்தி! இப்போ டாக்டர் வெளியே கிளம்பிட்டாங்க,” என ரிசப்ஷனிஸ்ட் கூறிவிட…

நேராக அவள் சென்றது எம்.ஜி. கன்ஸ்ட்ரக்ஷனை நோக்கிதான்.

சரியாக குருசேத்ரன் காரில் வந்து இறங்கவும், அவன் பின்னால் செம்பருத்தி வரவும் சரியாக இருந்தது.

அவனைப் பார்த்த அந்த நொடி, சப்த நாடியும் பற்றி எரிவது போல ஒரு உணர்வு. அத்தனையும் அடக்கிக்கொண்டவள் மெல்ல நடந்தாள்.

“சுப்ரியா எங்கே இருக்கா?” என குருசேத்ரன் கேட்க…

“கேன்டீன்ல வெயிட் பண்றாங்க பாஸ். நான் வரவா?” என ஸ்ரீராம் கேட்க…

“தேவையில்லை,” என போனை கட் செய்தவன். நேராக கேன்டீன் பக்கம் சென்றான்.

அங்கே சுப்ரியா இருப்பதைப் பார்த்த செம்பருத்தி மறைந்து நின்றுகொண்டாள்.

சுப்ரியா அவனைப் பார்த்ததும் கோபமாக வந்தவள். “உன்னோட மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க?” என அடிக்கக் கை ஓங்கியே விட்டாள்.

“என்ன பண்ணிட்டு இருக்க?” எனக் கையைப் பற்றித் தடுத்தான்.

அவர்கள் பேசுவதைக் கேட்கும் பொருட்டு நின்றுகொண்டவள், கண்களில் நீர் கொட்டியது.

“நீ செம்பருத்திய எதுக்குக் கல்யாணம் பண்ண? அதுவும் ஒரு மாசத்துல அவ்ளோ அர்ஜென்ட்டா கல்யாணம் பண்ண என்ன அவசியம் வந்தது? அவளுக்கும் உனக்கும் எவ்ளோ வித்தியாசம்? நீ உங்க அம்மாவைப் பார்த்துக்கத்தான் கல்யாணம் பண்ணியா?” என வரிசையாக கேள்விகளை அடுக்கினாள் சுப்ரியா.

“போதும், நிறுத்துறியா? உனக்கு ஏதோ விஷயம் தெரிஞ்சிருக்கு? என்ன, சொல்லு!”

“தீட்சண்யன் என்னைப் பார்க்க வந்திருந்தான். அவன் தான் சொன்னான், உன்னோட ‘சேலஞ்ச்’ பத்தி. சரி, அதை விடுடா! உன்னோட IED பிரச்சினை அவளுக்குத் தெரியுமா? எதுக்கு அவளைக் கல்யாணம் பண்ண? தீட்சண்யனை ‘சேலஞ்ச்’ல ஜெயிக்க கல்யாணம் பண்ணேன்னு மட்டும் சொல்லிடாத!” எனக் குதித்தாள் சுப்ரியா.

“ஆமா, அதுக்குத்தான் கல்யாணம் பண்ணேன்… என் அம்மாவோட சந்தோஷம் அவள்தான் தோணுச்சு, கல்யாணம் பண்ணேன். எங்க அம்மாவை வீட்ல இருந்துப் பார்த்துக்கு ஒரு ஆள் தேவைப்பட்டது, அதனால பண்ணேன். எனக்குப் பிடிக்கல. ‘ஸ்டேட்டஸ்’ வித்தியாசத்தில் எனக்குக் கல்யாணம் பண்ண எனக்குக் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. ஆனா, என் அம்மாவுக்காக பண்ணேன். எனக்கு எங்க அம்மா முக்கியம். போதுமா?” என்றான் குருசேத்ரன்.

அவன் சொன்ன வார்த்தைகள் ஒருத்தியைச் சுக்கு நூறாக உடைத்துக்கொண்டிருக்கிறது என்னும் விஷயம் குருசேத்ரனுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

“அப்போ இஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணலயாடா நீ?” என சுப்ரியா பொங்கினாள்.

செம்பருத்தி கண்களில் வழியும் நீரை வேகமாகத் துடைத்துக்கொண்டவள், நெஞ்சம் அடைக்க வேகமாக அவ்விடத்தை விட்டுச் சென்று விட்டிருந்தாள். இதற்கு மேல் அவனது வாயில் இருந்து கேட்க என்ன இருக்கிறது?

அவள் தன்னைத்தானே நினைத்து நொந்துகொண்டாள். ‘இந்த நொடியே தன்னை பூமி இழுத்துக்கொள்ளாதா’ என்று தோன்றியது. ஆம், இதுவரை ஒருமுறை கூட அவன் அவளை ‘செம்பருத்தி’ என்று பெயரைச் சொல்லியே அழைத்தது இல்லை. அவளது திருமண வாழ்க்கையை யோசித்து பார்த்தாள்… உதட்டில் சிரிப்பு தோன்றியது.

இதோ, வரிசையாக அனைத்து விஷயங்களும் சரியாகப் பொருந்தியது. ‘குருசேத்ரன்’ என்னும் ஒருவன், அதீத கோபத்தைக் கட்டுப்படுத்தத் தெரியாத ஒருவனுக்குத் தனது அன்னையைப் பார்த்துக்கொள்ள, தன் ஆண்மையை நிரூபிக்க ஒருவள் தேவைப்பட்டாள். அதற்காக இந்த ஏழைப் பெண் இப்பொழுது செல்வச் சீமாட்டி வாழ்க்கையை வாழத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறாள், அவ்வளவே!!..

‘இனி தன் வாழ்க்கையில் என்ன இருக்கிறது?’ என நொந்துகொண்டவள், எப்படி வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் என்றே தெரியவில்லை. ‘இதை வீட்டில் சொன்னால், மொத்த வீடும்…?’ அவனை கொண்டாடிய அனைவரும் மொத்தமாகத் தூக்கி எறிந்து விடுவார்கள். ஆனால், பிரச்சினை அது இல்லை. முக்கியப் பிரச்சினை செம்பருத்தி வாழாவெட்டியாக வந்து அமர்ந்தால்…? ‘இப்போதுதான் துளசி அக்காவின் வாழ்க்கை நன்றாக இருக்கிறது. தான் யார் என்றே தெரியாமல் இருந்த தாமரை, இப்போதுதான் உயிர் பெற்றிருக்கிறாள். இந்த நிலையில் என்னால் குடும்பத்தில் பிரச்சினை வந்தால்? இன்னும் ரோஜா, சம்பூர்ணம், தர்மன் என மூவரின் வாழ்க்கை இருக்கிறது,’ என உலகமே சூனியமாக இருந்தது செம்பருத்திக்கு.

வீட்டுக்கு வந்தவள், உறங்குவது போலப் படுத்துக்கொண்டாள்.

“என்னம்மா ஆச்சு? தங்கம் செம்பருத்தி!!” என்று பாரி அழைக்க…

“இல்லைப்பா, தூக்கம் வர போல இருக்கு,” எனப் படுத்துக்கொண்டாள்.

என்ன தான் இருந்தாலும் இப்படி அவன் தன்னை ஏமாற்றி விட்டதை நினைத்து உள்ளம் கனத்து போனது. எப்படி நான் இவ்வளவு முட்டாள் தனமாக இருந்தேன்? என திரும்ப திரும்ப தோன்றியது செம்பருத்திக்கு

சுப்ரியா பெருமூச்சுடன் எதிரில் இருப்பவனைப் பார்த்தாள்.

“அவளைப் பிடிக்காம தான் கல்யாணம் பண்ணேன். ஸ்டில், இப்போ கூடப் பிடிக்கல. ஆனால், அவள் இல்லாம என்னால இருக்க முடியல. அவள் கூட இருந்தால் எனக்குக் கோபமே வர மாட்டிக்குது. சோ, என்னோட கோபத்தை அடக்க அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். போதுமா?” என்றான் குருசேத்ரன்.

“நீ சொல்றது எனக்கு ஒண்ணும் புரியலடா!!” என சுப்ரியா நொந்துகொண்டே சொன்னாள்.

“புரியலைன்னா விட்டுடு! நீ வந்து அவளை எனக்கு ஞாபகப்படுத்தி விட்டுட்ட! எனக்கு இப்போவே அவளைப் பார்க்கணும்,” எனப் புறப்பட்டான் குருசேத்ரன்.

“டேய் குரு, நான் சொல்றதைக் கேளு! உன்னோட IED பிரச்சினையை சரி செய்யலாம். டாக்டர் நித்யாகிட்ட கவுன்சலிங் போடா.”

குருசேத்ரன் ஒரு பெருமூச்சுடன், “என்ன கவுன்சலிங் போனாலும் இது குறையாது. இது என் ஃபேமிலி ஜெனடிக்கில் இருக்கு. எங்க வீட்ல நானு… மிஸ்டர் வரதராஜன் வீட்ல கீர்த்தனா எனக்கு மேலே இருக்கா,” என்று விட்டுப் புறப்பட்டான்.

சுப்ரியா பெருமூச்சுடன் போனை எடுத்தவள் ஹாஸ்பிடலுக்கு அழைக்கப்போக… நித்யா அழைத்திருப்பது தெரிந்தது.

“என்ன? நித்யா கால் பண்ணியிருக்கீங்க?” என மீண்டும் அழைத்தாள் சுப்ரியா.

“ஹலோ நித்யா, கால் பண்ணிருக்கீங்க?”

“குருசேத்ரன் மனைவி செம்பருத்தி தானே! அவங்க என்னைப் பார்க்க வந்திருந்தாங்க. அவங்க அக்காவுக்கு கவுன்சலிங் கொடுக்க…”

“குரு விஷயம் அவளுக்கு சொல்லல தானே!”

“சாரி சுப்ரியா! அவங்களுக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சு போச்சு. ‘மனைவின்னு’ சொன்னாங்க. அவருக்கு ட்ரீட் பண்ணும்போது, ‘பிடிக்காத பொண்ணு செம்பருத்தி’, ‘பாட்டம் ஆஃப் தி ஹார்ட்ல வெறுக்கிறேன்’ அப்டின்னு சொன்னாரா? அந்தப் பொண்ணை எதுவும் பண்ணிட்டா என்ன பண்றதுன்னு எல்லாத்தையும் சொல்லிட்டேன்,” என்றாள் நித்யா.

சுப்ரியா பெருமூச்சுடன் போனை வைத்தவள். “குரு! டேய் குரு,” என வேகமாக ஓடினாள்.

“என்ன?” என அவன் முறைத்துப் பார்த்தான்.

“உன்னை பத்தின விஷயம் எல்லாமே தெரிஞ்சு போச்சு.”

“வாட்?” என குரு புரியாமல் பார்த்தான்.

“செம்பருத்தி உன்னோட கவுன்சலிங் வீடியோ பார்த்துட்டா! உன்னைப் பத்தின விஷயம்… நீ அவளைப் பத்தி பேசின எல்லா விஷயத்தையும் அவள் தெரிஞ்சிக்கிட்டா,” என்றாள் சுப்ரியா.

“பாஸ், மேடம் இங்கே வந்துட்டு போனதாக ஸ்டாப் சொல்றாங்க!” என சொல்லிக்கொண்டே வந்தான் ஸ்ரீராம்.

“என்ன ஸ்ரீராம் சொல்ற?” என சுப்ரியா கேட்க…

“ஆமா மேடம். அவங்க கிளம்பி ஒரு அரை மணி நேரம் இருக்கும் போல.”

குருசேத்ரன் முகம் சடுதியில் மாறிப் போனது. வேகமாக அவளைப் பார்க்கப் புறப்பட்டான்.

“என்னாச்சு?” என ஸ்ரீராம் கேட்க…

“நான் உனக்கு ஒரு அட்வைஸ் பண்ணட்டா?”

“சொல்லுங்க!”

“இவன் கிட்ட வேலை செஞ்சா உனக்குக் கல்யாணமே நடக்காது. அவனை விட்டு போயிடு, அது தான் உனக்கு நல்லது,” எனப் புறப்பட்டாள் சுப்ரியா.

“மாப்பிள்ளை, உள்ளே வாங்க!!” என பாரி அழைத்தார்.

ஷூவைக் கழட்டி விட்டு உள்ளே வந்தவன். வீட்டை சுற்றிலும் பார்த்தான் குரு.

“மாப்பிள்ளை, காபி போடவா?” என செல்வி கிச்சனுக்குள் சென்றார்.

சம்பூர்ணம் உற்சாகத்துடன், “மாமா,” என அழைக்க…

“அவள் எங்கே?”

“உள்ளே படுத்துட்டு இருக்கா!” என்றாள் சம்பு.

“ஆண்டி, உள்ளே போலாமா?” எனக் கேட்டுக்கொண்டே எழுந்தான்.

“ம்ம்… போங்க மாப்பிள்ளை,” என்றவர், தாமரை, சம்பூர்ணம், பாரி மூவரையும் அழைத்துக்கொண்டு பின் பக்கம் சென்றுவிட்டார்.

“செம்பருத்தி,” என அழைத்துக்கொண்டே உள்ளே நுழைந்தான் குருசேத்ரன்.

சிவந்து வீங்கிய முகத்தில் கண்ணீர் வழிந்துகொண்டிருக்க… அவனது குரலைக் கேட்டதும் வேகமாக எழுந்து அமர்ந்தாள் செம்பருத்தி.

குருசேத்ரன் என்ன செய்யப்போகிறான்?

தொடரும்…