அத்தியாயம்- 23

விடமாட்டேன் என ஒரே வார்த்தையில் முடித்திருந்தான் குருசேத்ரன்.

இருவர் முகமும் சடுதியில் மாற, இரண்டு கையையும் தலைக்கு வைத்தபடி அவர்களை ஏறிட்டுப் பார்த்தான்.

மணியம்மை எதுவும் பேசாமல் திரும்பி நடக்க, “ஒரு நிமிஷம் இருங்க.”

“என்ன கண்ணு?”

“நீங்க மட்டும் போக வேணாம். சாந்தாவையும் கூட்டிட்டுப் போங்க! அண்ட்,” என்றவன் செம்பருத்தியைப் பார்த்து, “உன்னோட மம்மி டாடி வருவாங்களா?” எனக் கேட்டான்.

“என்ன சொல்றீங்க?” எனக் கண்கள் விரிய செம்பருத்தி பார்க்க…

“நான் எதுவும் தப்பா கேட்டேனா?”

“இல்லை, அது… அது வந்து,” என செம்பருத்தி தயங்க…

மணியம்மை புன்னகையுடன், “நான் போன் பண்ணிக் கேட்கிறேன்,” எனச் செல்விக்கு அழைத்தார்.

கண்களில் நீர்கோர்க்க அவனைப் பார்த்த செம்பருத்தி, வேகமாகப் பாய்ந்து வந்து உதட்டில் முத்தமிட்டாள்.

“ஹே, அம்மா!” என குருசேத்ரன் பின்னால் நகர…

சிரித்துக்கொண்டே நின்றாள். மணியம்மை போனை வைத்துவிட்டு, “செல்விமா வர்றேன்னு சொன்னாங்க. இவங்க டாடி வரலைன்னு சொல்லிட்டார். என்ன பண்றது?” என்றார்.

“நீங்க அம்மாவை மட்டும் கூட்டிட்டுப் போங்க அத்தை,” என்றாள்.

இதோ சாந்தா, மணியம்மை, செல்வி என மூவரும் கொண்டாட்டத்துடன் புறப்பட்டார்கள்.

“முதல் முறை ஏரோபிளேன்ல போறேன் அக்கா,” எனச் செல்வி கூற, “நானும் தான்,” எனச் சாந்தாவும் மணியம்மையும் ஒரே நேரத்தில் கூறினார்கள். ஐந்து பெண்மணிகளும் சிரித்துக்கொண்டார்கள். உற்சாகமாக அவர்களைக் கோயம்புத்தூர் ஏர்போர்ட்டில் வழியனுப்பி வைத்தார்கள் குருசேத்ரனும் செம்பருத்தியும்.

வீட்டுக்கு வந்ததும் ஸ்ரீராம் காத்திருந்தான்.

செம்பருத்தி அவனை முறைத்தாள்.

“மேடம், என்னாச்சு?”

“ஒண்ணுமில்லை,” எனச் சொல்லிவிட்டு அவள் வேகமாக அறைக்குச் சென்றுவிட்டாள்.

“பாஸ், மேடம் என்னை முறைச்சிட்டுப் போறாங்க!”

“நான் பார்த்துக்கிறேன்,” என்றவன், “ஃபார்ச்சூன் கம்பெனியிலிருந்து சீதாராமன் அண்ட் அவங்க மிசஸ் வர்றேன்னு சொன்னாங்களே, என்னாச்சு? ரிசீவ் பண்ண பிளான் ரெடியா இருக்குதானே?”

“எஸ் பாஸ்! அவங்களை மெரிடியன் ஹோட்டல்ல ஸ்டே பண்ண வைக்கிறதா பிளான். நான் ஆல்ரெடி புக் பண்ணிட்டேன்,” என்றான் ஸ்ரீராம்.

“சரி, இன்னைக்கான வேலையை எல்லாத்தையும் நீயே பாரு. அண்ட் நாளைக்கும் பார்த்துக்கோ. இப்போ நீ புறப்படலாம்,” என்று எழுந்தான்.

“ஓகே பாஸ்! தேங்க் யூ பாஸ்,” என அவன் புறப்பட்டுவிட்டான்.

“என்னாச்சு? அவனை முறைச்சுட்டே வந்த?” என அறைக்குள் நுழைந்தான் குரு.

“எப்போ பாரு உங்க கூடவே இருக்கார். உங்களுக்கு நான் பொண்டாட்டியா? இல்லை அவர் பொண்டாட்டியா?” என்றாள் சிறுபிள்ளைத்தனமாக.

“இந்த அளவுக்கு ப்ரோமோஷன் வாங்கிட்டேனா?” எனப் புன்னகையுடன் பார்த்தான் குரு.

செம்பருத்தி வெட்கத்துடன் வேறுபுறம் திரும்பி கொள்ள, மோகம்தான் இருவரையும் ஒட்டிக்கொண்டது. அவளைக் கொண்டாடினான் குருசேத்ரன்.

“ஓ, இதுக்குதான் சார் பிளான் பண்ணி அத்தையையும் சாந்தா அக்காவையும் அனுப்பி வெச்சீங்களா?” எனக் கேட்டாள் செம்பருத்தி.

“அப்படி கூட வெச்சுக்கோ!” என நெஞ்சுக் குழியில் முத்தமிட்டான். அடிமையாகிப் போனாள் அவனுக்கு.

“ஹே, நம்ம வீட்டுக்கு நாளைக்கு கெஸ்ட் வர்றாங்க. நீ தான் சமைக்கணும்.”

“என்ன? நானா?”

“ம்ம், அன்னைக்கு செஞ்சயே! சைவ பிரியாணி, சைவ ஈரல். அதுபோல எல்லாமே சைவத்தில் இருக்கணும்,” என்றான் குரு.

“அப்படியா? பண்ணிட்டாப் போச்சு,” என்றவள் வெள்ளந்தியாக அவனுக்குத் தலையாட்டினாள்.

ஸ்ரீராமும் குருசேத்ரனும் இருவரும் ஏர்போர்ட் சென்று சீதாராமன், பல்லவி இருவரையும் வீட்டுக்கு அழைத்து வந்தார்கள்.

“இது யாரோட வீடு? ரொம்ப ரசனையா இருக்கே?” எனப் பல்லவி கேட்க…

“என்னோட வீடு மேம்,” எனப் புன்னகையுடன் அழைத்து வந்தான் குருசேத்ரன்.

“இது?” என ராமன் கேட்க,

“என்னோட மனைவி,” என அறிமுகம் செய்து வைத்தான் குரு.

வணக்கம் வைத்துத் தண்ணீர் கொடுத்தாள் செம்பருத்தி.

“சாப்பிடலாம்,” என குருசேத்ரன் அழைக்க, அனைத்து உணவுகளையும் பார்த்த சீதாராமன், “எனக்கு அசைவம் பிடிக்காது மிஸ்டர்,” எனச் சொல்ல…

“சார், எல்லாமே சைவம் தான். இது புரட்டாசி! இங்கே எங்க வீட்டிலயும் அசைவம் சாப்பிட மாட்டோம்,” என்ற செம்பருத்தி அவர்களுக்கு உணவைப் பரிமாற…

சீதாராமனின் கண்கள் விரிந்தது. பல்லவி தன் கணவனைப் புன்னகையுடன் பார்க்க, குருசேத்ரன் வெற்றிக் களிப்பில் கைகளை மடக்கினான்.

“இதென்ன?” எனப் பல்லவி கேட்க,

செம்பருத்தி புன்னகையுடன், “இது வாழைக்காய் பொரிச்சது, இது வாழைப்பூ நெத்திலி குழம்பு அதாவது மீன் குழம்பு போல இருக்கும். அண்ட் இது பலாக்காயில் பண்ண பிரியாணி, அண்ட் இது சைவ ஈரல். இது ஸ்பெஷல் கோதுமை ரவை பாயசம்,” என கூறினாள்.

“யூ ஆர் லக்கி மிஸ்டர் குருசேத்ரன். உங்க மனைவி சமையல் வேற லெவல்,” எனத் திருப்தியுடன் சாப்பிட்டார்கள் இருவரும்.

ஸ்ரீராம் பாவமாகச் செம்பருத்தியைப் பார்த்தான். அவனுக்கு நன்றாகவே தெரியும் எதற்குச் செம்பருத்தியை குருசேத்ரன் திருமணம் செய்தான் என்று.

பல்லவிக்கு செம்பருத்தி வீட்டைச் சுற்றிக் காட்டினாள்.

ஆண்கள் அனைவரும் பிசினஸ் வேலை தொடர்பாகப் பேசிக்கொண்டிருக்க, சீதாராமன் போன் செய்து மேலிடத்தில் பேசி எட்டு வருட காண்ட்ராக்ட் பேப்பரை பாஸ் செய்து அப்ரூவல் வாங்கினார். உடனே MG கன்ஸ்ட்ரக்சனுக்கு மெயில் வந்தது.

“மிஸ்டர் குரு, மெயில் வந்ததா?” எனச் சீதாராமன் கேட்க…

“சார், இன்னும் நீங்க விசிட் பண்ணவே இல்லையே! மூணு நாள் சைட் விசிட் முடிச்சிட்டு தானே ஃபர்தரா பேசறேன்னு சொன்னீங்க?” எனக் கேட்டான் குரு.

“அப்படித்தான் நினைச்சேன்,” என்றவர் பல்லவியைப் பார்த்துக்கொண்டே, “நீங்க சரியான திறமையான ஆள்னு உங்க வீட்டோட கன்ஸ்ட்ரக்சன் சொல்லுச்சு. இனி ஃபார்ச்சூன் உங்ககூட எட்டு வருட காண்ட்ராக்ட் சைன் பண்ணியிருக்கு. அதை நீங்க படிச்சுப் பார்த்திட்டு விருப்பம் இருந்தால் டீல் வெச்சுக்கலாம்,” என்றார் சிரித்துக்கொண்டே.

“என்ன சார் பேசுறீங்க?” என குருசேத்ரன் தன்மையுடன் பேசினான்.

இதோ, கைவசம் ப்ராஜெக்ட் வந்துவிட்டது. இரவு உணவையும் சமைத்து அவர்களைச் சாப்பிட வைத்து அனுப்பினாள் செம்பருத்தி. சீதாராமன் மற்றும் பல்லவி இருவரும் மூன்று நாட்கள் ஹில் ஸ்டேஷன் சென்று சுற்றிப்பார்க்க கைடாக ஸ்ரீராமை அனுப்பி வைத்தான் குரு. மொத்தத்தில் அவன் நினைத்தது அனைத்தும் கையில்.

செம்பருத்தி எப்பொழுதும்போல அருகில் வந்தாள். முத்தமிட்டாள். இருவரும் கூடி கொண்டாடினார்கள்.

குருசேத்ரன் அவனது வெற்றியைக் கொண்டாடும் விதமாகப் பார்ட்டி வைத்திருந்தான். தீட்சண்யன் அதில் கலந்துகொண்டான். அவனுக்காகத்தானே இந்த பார்ட்டி.

“இப்போ என்ன சொல்ற? நீ போட்ட சவாலில் நான் தான்டா ஜெயிச்சேன். என்னை எவள் கல்யாணம் பண்ணிப்பான்னுதானே கேட்ட? என் பொண்டாட்டியைப் பார்த்தல்ல! உன் அப்பனோட இடத்தை இப்போ நான் பிடிச்சுட்டேன். எட்டு வருஷ காண்ட்ராக்ட். கோவை, சேலம், ஈரோடு, கரூர்ல இருக்க பெரிய பெரிய ஹாஸ்பிடல், ஸ்கூல், காலேஜ் எல்லாமே MG கன்ஸ்ட்ரக்சன் பேரைச் சொல்லும்,” என்றான் குருசேத்ரன் கர்வத்துடன்.

தீட்சண்யன் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றான். ‘என்ன பேச முடியும்?’

ஆனால் விபரீதமே இனி தானே!

“அடுத்து என்ன பண்ணனும்னு தெரியும் தானே!” என குருசேத்ரன் குரலை உயர்த்த…

“ப்ளீஸ், வேணாம் குரு.”

“போய் பண்ணுடா! இப்போவே,” என குருசேத்ரன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே போன் வந்தது.

“என் பொண்டாட்டி கால் பண்றா?” என்றவன் போனை எடுத்து வைத்துக்கொண்டே, “சொல்லு டி,” என்றான்.

“என்னங்க! நீங்க அப்பாவாகப் போறீங்க!” எனச் செம்பருத்தி கூற…

குருசேத்ரன் கர்வத்துடன் புன்னகைத்துக்கொண்டே, “கான்ஃக்ராட்ஸ் டி! வீட்டுக்கு வரேன்,” என போனை கட் செய்தவன், மீசையை முறுக்கிக்கொண்டே, “நான் அப்பாவாகப் போறேன். நீ இன்னும் ஒத்தையா சுத்து. என்னை என்ன சொன்ன? பைத்தியமா நான்? இப்போ யாரு மொட்டைப் பையன்னு தெரிஞ்சிருக்குமே? இனி என்கிட்ட வாய் சவடால் விட்டால் இதுதான் நடக்கும்,” எனத் தன் பெரியப்பா மகனைப் பார்த்தான் குருசேத்ரன்.

மீசையை எடுத்திருந்தான் தீட்சண்யன். உள்ளுக்குள் மிகவும் வேதனையாக இருந்தது. ‘இருடா, நான் யாருன்னு காட்டுறேன்,’ என அவ்விடத்தை விட்டு வேகமாகச் சென்றான் தீட்சண்யன். குருசேத்ரன் IED பிரச்னையில் பாதிக்கப்பட்டிருக்கிறான் எனத் தெரிந்துகொண்ட தீட்சண்யன் அவனை மொத்தமாக பிசினஸை விட்டுப் போக வைப்பதற்காகச் சவால் விட, அது அவனுக்கே பாதகமாக முடிந்தது. ‘என்னை மீசையை எடுக்க வெச்ச உன்னைத் தனி ஆளா நிக்க வெச்சுப் புலம்ப விடறேன்டா,’ எனச் சொல்லிக்கொண்டு சென்றான்.

குருசேத்ரன் உச்சத்தில் ஆடினான். சைக்காட்ரிஸ்ட்டைச் சந்தித்துவிட்டு வந்ததிலிருந்து அதிக மன அழுத்தத்தில் சுற்றிக்கொண்டிருந்தான் குரு. அந்த நேரம் தான் தீட்சண்யன் வாயை விட, இருவரும் மோதிக்கொண்டு சவால் விட்டுக்கொண்டார்கள்.

குருசேத்ரனால் அவனது கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவனுக்குச் செம்பருத்தியை அறவே பிடிக்காது. ‘அப்போ எதற்குத் திருமணம் செய்தான்?’ அன்று அவள் தெரியாமல் கால் இடறி நீச்சல் குளத்தில் விழுந்தபொழுது முதலுதவி செய்யும் பொருட்டு அவளிடம் இதழும் இதழும் பொருத்தினானே, அந்த நொடிதான் தனது மொத்த கோபத்தையும் அவளின் முத்தம், மோகம் தீர்த்து வைக்கும் எனத் தெரிந்துகொண்டான்.

குருசேத்ரனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை அவளை. ஆனால் அவனுக்கு அவள் தேவைப்பட்டாள். தனது கோபத்தை அடக்க, உணர்வுகளை அடக்கிக்கொள்ள… குருவுக்கு அவளின் குடும்பத்தில் இருக்கும் யாரையும் பிடிக்கவில்லை. ஆனால் தீட்சண்யனிடம் விட்ட சவாலில் தோற்கக் கூடாது. தினமும் செம்பருத்தி வேண்டும், அவளை ஆள வேண்டும் அதற்கு ஒரே வழி திருமணம் என முடிவெடுத்தவன், ஒரே மாதத்தில் அவளைச் சொந்தமாக்கிக்கொண்டான்.

தேவைக்காகத் திருமணம் செய்துகொண்ட குருசேத்ரன் அவனுக்கே தெரியாமல் அவளுக்கு அடிமையாகிவிட்டான் என்பதை அறியவில்லை. ஆனால் இதையெல்லாம் அறியாத செம்பருத்தி அவனது மகவை வயிற்றில் சுமந்துகொண்டு அமர்ந்திருக்கிறாள்.

‘பணம் பத்தும் செய்யும்’ என்னும் கொள்கையில் சுற்றுபவன்தான் குருசேத்ரன். அவனைப் பற்றிய உண்மைகள் அனைத்தும் செம்பருத்திக்குத் தெரிய வருமா?

பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

இதோ, ஆல் இந்தியா டூர் சென்ற அனைவரும் வந்து சேர்ந்தார்கள்.

பார்ப்போம்.

தொடரும்…