அத்தியாயம்-2

செம்பருத்தி, “ஒருவழியாக முடிவுக்கு வந்தாள்! நம்ம கேர் டேக்கரா போக வேணாம். இருபதாயிரம் சம்பளத்துக்கே போவோம்” என வீட்டுக்குள் நுழைந்தாள்.

அவளின் அக்காக்கள் அனைவரும் தந்தையைச் சுற்றி இருக்க, “என்னாச்சு?” என வேகமாக ஓடினாள் செம்பருத்தி.

“ப்பா, என்னாச்சு?” என அவளின் கண்களில் நீர் வழிய, “பொண்ணு, ஒண்ணுமில்ல தங்கம். வேலை செய்யும் போது கொஞ்சம் தடுமாற்றம் ஆகிப்போச்சு. அதனால ஹாஸ்பிடல் போய் மாத்திரை வாங்கிட்டுதான் வரேன்” என்றார் பாரி, வலியை அடக்கிக்கொண்டு.

“அப்பா, உங்களோட முகமே சரியில்ல. சொல்லுங்க, எதுவும் பண்ணுதான்னு?” என துளசி ஒருபக்கம் கேட்க, இன்னொரு பக்கம் தாமரை, சம்பூர்ணா என அனைவரும் அழுதபடியே கேட்டார்கள்.

அந்த நேரம் தடாலடியாக உள்ளே வந்தாள் ரோஜா, மூன்றாவது மகள். “என்னாச்சு?” என விரைப்புடன் கேட்டாள். “கொஞ்சம் நிதானம் இல்லாம கீழே விழுந்துட்டேன்” என்று பாரி பயத்துடன் கூறினார்.

செல்வி, காபியைத் தன் கணவருக்குக் கொடுக்க, “எழுந்திருங்க! வாங்க, போலாம் ஹாஸ்பிடல்” எனக் கூப்பிட்ட சொல்லுக்குப் புறப்பட்டார். ரோஜா என்பவள் பெயரில் மட்டும்தான் சாஃப்ட். மற்றபடி, கொஞ்சம் ரக்கட்.

மொத்த கூட்டமும் புறப்பட, வெளியே கர்ணன் வந்தான். அவன்தான் துளசியின் கணவன். “மாமா, இன்னும் எதுக்கு வேலைக்குப் போறீங்க? அதான் நான் இருக்கேன்ல” எனக் கூறியபடி காரை ஸ்டார்ட் செய்தான். கர்ணன் கார் டிரைவர்.

“இல்ல மாப்ளை” என பாரி ஆரம்பிக்க, “வாயை மூடுங்க!” என்ற ரோஜா, “நாங்க மட்டும் போயிட்டு வரோம், நீங்க இங்கயே இருங்க” எனக் கிளம்பிவிட்டாள்.

வீடே பரபரப்பாக இருக்க, இரண்டு மணிக்குச் சென்றவர்கள் வீடு வந்து சேர மாலை நான்கு ஆனது.

“என்னாச்சு அப்பாவுக்கு?” என செம்பருத்தி பதட்டத்துடன் கேட்க, செல்வி வாசலைப் பார்த்து, “எங்கேடி உங்க அப்பா?” என்று கேட்டார் உருக்கமாக.

“மூட்டு விலகி இருக்கு. ஆபரேஷன் பண்ணனும்னு சொல்லிட்டாங்க” என்றான் கர்ணன்.

“என்ன மாப்ளை சொல்றீங்க? பணத்துக்கு நான் எங்கே போவேன்? துளசி வேற மாசமா இருக்கா?” என செல்வி கலங்கினார்.

“பார்த்துக்கலாம் அத்தை! நான் பத்தாயிரம் கட்டிதான் அட்மிட் பண்ணிட்டு வந்திருக்கேன். எப்படியும் பண்ணியே ஆகணும்” என்றான் கர்ணன்.

செம்பருத்தி ஒரு முடிவெடுத்தவளாய், “மா, என்னோட அக்கவுண்ட்ல ஒரு லட்சம் இருக்கு. மாமா, உங்களுக்கு அனுப்புறேன். நீங்க பாருங்க” என கூறினாள்.

ரோஜா போன் செய்து, “நான் பர்சனல் லோன் டாப்ப் பண்ணிட்டேன். சோ, பிரச்னை இல்லை. அம்மா கிட்ட சொல்லு” என சொல்லிவிட்டு போனை வைத்தாள்.

செல்வி அழுதுகொண்டே, “தர்மனுக்கு படிப்பு லோன் இருக்கு, துளசி டெலிவரி, தாமரையோட மருத்துவச் செலவு” என இன்னும் அழுதார்.

செம்பருத்தி தன் அம்மாவின் முன்னால் வந்தவள், “மா, நான் இப்போ ஜாயின் பண்ற ஹாஸ்பிடல்ல நாற்பதாயிரம் சம்பளம்” என்றாள்.

“என்னடி சொல்ற?” என செல்வி அதிர்ச்சியில் கேட்க, “அது வந்து… என் ஹாஸ்பிடல் டாக்டர் சுப்ரியா அவங்களோட அத்தைக்கு கேர் டேக் பண்ணணும். அதாவது, பக்கத்துல இருந்து பார்த்துக்கணும். அதுக்குதான் நாற்பதாயிரம் சம்பளம். நான் சரின்னு சொல்லிட்டு வந்துட்டேன். ஆறு மாசம் மட்டும் அங்கே தங்கி இருக்கணும். நடுவில் லீவுக்கு வருவேன். ஆனால், ஒண்ணும் பிரச்னை இல்லை. சாப்பாட்டுச் செலவும் இல்ல. தாமரையோட மருத்துவச் செலவுக்கு, தர்மன் படிப்புச் செலவு எல்லாத்துக்குமே ரோஜா அக்கா ஒருத்தி தலையில் போட முடியாதில்லை. அதனாலதான் மா! அதே போல, வேலையும் தூரம் இல்ல, ரொம்பப் பக்கம் தான்” என்றாள் செம்பருத்தி.

“அப்படியா?” என செல்வி யோசிக்க, “இப்போதானடி, வீட்டில் இருந்து வேலை பார்க்கப் போறேன்னு சொன்ன? திடீர்னு என்ன?” என சம்பூர்ணா கேட்க, “செம்பா, நம்ம எதுவும் பண்ணலாம்டா கண்ணு” என கர்ணன் கூற, “இல்ல மாமா, இதைவிட நல்ல ஐடியா எனக்கு எதுவும் இல்ல. வேலைதானே செய்யப் போறோம். இதுதான் சரி. நான் நாளைக்கே ஜாயின் பண்றேன். நமக்கு படிப்பு போதும். அப்பாவை வந்து ஹாஸ்பிடல்ல பார்க்கிறேன்” என்றுவிட்டு டீ குடிக்கச் சென்றாள் செம்பருத்தி.

செம்பருத்தியின் அப்பா பாரிவேந்தன், அம்மா செல்வி. அவர்களுக்கு துளசி, தாமரை, ரோஜா, செம்பருத்தி, சம்பூர்ணா, தர்மன் என மொத்தம் ஐந்து பெண் பிள்ளைகள். ஆண்பிள்ளை பிறக்க வேண்டும் என செல்வி ஆசைப்பட்டு, வரிசையாகப் பெண் பிள்ளைகள்தான் பிறந்தார்கள். பாரியின் வற்புறுத்தலில் குடும்பக் கட்டுப்பாடு செய்ய நினைத்த தருணத்தில் கருவும் உருவாகிப் போனது. அதுவும் இரட்டைக் கரு என மருத்துவமனையில் கூறிவிட, “கடவுள் கொடுத்த உயிரை அழிக்கக் கூடாதுங்க” என வற்புறுத்திப் பெற்றார் செல்வி. அவர் நினைத்ததை போல, மகன் பிறந்தான் கடைசியாக. அவனுக்கு தர்மன் எனப் பெயர் வைத்தார் பாரி. செல்வி, “இதற்கு மேல் பெண் பிள்ளை நிறைவு” என சம்பூர்ணா என்று பெயர் வைத்தார்.

பிள்ளைகள் அனைவரும் தமிழ் வழியில் அரசுப் பள்ளியில் படிக்க, மகன் தர்மன், ஆங்கில வழித் தனியார் பள்ளியில் சேர்த்தார் செல்வி. அதில் துளிக்கூட பாரிக்கு விருப்பம் இல்லை என்றாலும், மகள்கள் அனைவருக்கும் விருப்பம். அதனால் ஒத்துக்கொண்டார். தர்மன், குடும்பக் கஷ்டத்திற்கு மேலும் தன்னால் கஷ்டம் வந்துவிடக் கூடாது என நன்றாகவே படித்தான்.

இப்போது தர்மன் சிவில் என்ஜினீயரிங் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறான். இதுதான் அவர்களின் குடும்பம். செம்பருத்தி நர்சிங் முடித்து இரண்டு வருடம் வெளியூரில் வேலை செய்தாள் நல்ல சம்பளத்தில். இப்போதான் சொந்த ஊரிலேயே வேலை பார்க்க முடிவெடுத்தாள்.

இங்கே குரு, அங்கே நின்றிருந்த சாந்தாவை முறைத்து பார்த்தான்.

“தம்பி, நான் ஒண்ணுவிடாமல் உண்மையை சொல்லிடறேன். அம்மா தான் ஸ்வீட் வேணும்னு கேட்டாங்க. ஆனால் நான் கொடுக்கல தம்பி. அதுக்குள்ள நீங்க வந்துட்டீங்க. என் தலை போனாலும் கண்டிப்பா கொடுக்க மாட்டேன் தம்பி” என்றார் சாந்தா.

“அய்யோ, இந்தக் குந்தாணி மொத்தமாப் போட்டுக் கொடுத்துட்டாளே! இப்போ நான் என்ன பண்ணுவேன்?” எனத் தீவிரமாக யோசித்தவர், கண்ணாடியை மூக்குக்குத் தள்ளியபடி, “அட சுப்ரியா கண்ணு, வா வா!” என்று அழைத்தார்.

“என்ன நடக்குது மா?” என்று குருசேத்ரன் கத்த, “நான் உட்கார்ந்திருக்கேன்டா! நீதான் ஏன் நிக்கிற! இங்கே யாருமே நடக்கலையேடா!” என்றார் மணியம்மை.

குருசேத்ரன் கண்கள் சிவக்க, “யூ.. மண்டையில் மூளை இருக்கா?”

“டேய், அது உனக்கு இருக்கா? நான் உன்னோட அம்மாடா! என்கிட்ட இப்படி ரூடா பேசுற!” என மணியம்மை கூற, கோபத்துடன் பார்த்தவன், “எழுந்திருங்க! எழுந்திருங்க!” என்று உசுப்பினான்.

“என்னடா கடங்காரா! என்ன வேணும்?”

“போங்க, தோட்டத்தை அஞ்சு சுத்து சுத்திட்டு வரணும். இதுக்கு மேலே இங்கே ஒரு நிமிஷம் நின்னீங்க, நான் டயாபடீஸ் ஹாஸ்பிடல்ல ஒரு பெட் புக் பண்ணி உங்களை ஷிப்ட் பண்ணிடுவேன். அப்புறம்…” என அவன் ஆரம்பிக்க, “டேய் லூசா நீ!” என்ற சுப்ரியா, “அவங்கதான் ஸ்வீட் சாப்பிடலையே, அப்புறம் என்ன?” என்று கேட்க, “சாப்பிடுற எண்ணம் வந்ததுதானே! அப்புறம் என்ன? எனக்கு டிசிப்ளின் ரொம்ப முக்கியம். என்னோட கட்டளைக்கு ஒபே பண்ணணும். அவ்வளவுதான்” என்றவன், “மாம், டைம் ஸ்டார்ட் நௌ!” எனக் கூறிவிட்டு அவனது அறைக்குச் சென்றான்.

மணியம்மை நொந்துகொண்டே செல்ல, “என்ன ஆன்டி இப்படி அமைதியா இருக்கீங்க? அவனை கேட்க மாட்டீங்களா?” என்று சுப்ரியா பின்னால் செல்ல, “இருமா, நான் பனிஷ்மென்ட்டை முடிச்சுட்டு வரேன்” எனச் சென்றார்.

“ஓ காட்” என மலைத்துப்போய் சுப்ரியா அமர, “மேம், எதுவும் வேணுமா?” என்று கேட்டுக்கொண்டே அவளின் முன்னால் வந்தான் ஸ்ரீ ராம்.

“எப்படி ராம் இவன் கூட இருக்கீங்க? அய்யோ, நான் ஸ்கூலில் பார்த்ததைவிட அஞ்சு மடங்கு இருக்கான். அய்யோ, ஜெயிலவிட மோசமா இருக்கு. இவன் கூட அரை மணி நேரம் பேசவே மூச்சு முட்டுது. அய்யோ, முடியல!” என்று நெஞ்சைப் பிடித்தாள்.

அரை மணி நேரம் கழித்து வந்தான் குருசேத்ரன்.

சுப்ரியா திரும்பிப் பார்க்க, ஃபார்மல் உடையில் அழகாக இருந்தான். “அய்யோ, அழகு இருக்கிற இடத்தில்தான் ஆபத்து இருக்கும்னு சொல்லுவாங்க சுப்ரியா. இவன் ஆபத்து இல்ல, இந்த பிரபஞ்சத்திலேயே பேராபத்து” என நினைத்துக்கொண்டாள்.

அவளுக்கு எதிரில் வந்து அமர்ந்தவன், “ஸ்ரீராம், நீ லஞ்ச் முடி, ஷார்ப்பா நாலு மணிக்கு சைட் விசிட் போகணும்” என்றான். “ஓகே பாஸ்” என வேகமாக அவ்விடத்தை காலி செய்தான் ஸ்ரீராம்.

“டேய், ஆன்டியைக் கூப்பிடுடா!” என்று சுப்ரியா கூற, “பனிஷ்மென்ட் முடிய இன்னும் அஞ்சு நிமிஷம் இருக்கு” என்று கறாராக இருந்தான் குருசேத்ரன்.

அடுத்தநாள் ஆரவாரத்துடன் விடிந்தது. சுப்ரியா கூலாக ஆபிசுக்குள் நுழைந்தாள். கண்களில் தூக்கம் கரைபுரண்டு ஓடியது. நேற்று அந்தப் படுபாவி குருசேத்ரன் அவள் படித்த மருத்துவத்தையே மறக்கடித்துவிட்டான். ஏதோ ஒரு மூலையில் நம்பிக்கை எட்டிப்பார்த்தது அவளுக்கு. கண்டிப்பாக செம்பருத்தி தனது ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு வேலைக்கு வருவாள் என நினைத்தாள்.

இதோ, அவள் அறைக்கு முன்னாலேயே நின்றிருந்தாள் செம்பருத்தி.

“குட் மார்னிங் டாக்டர்.”

“மார்னிங் டா! என்ன, நம்ம ஹாஸ்பிடல்லயே ஜாயின் பண்ணப் போறியா?” என கேட்டுக்கொண்டே சுப்ரியா உள்ளே செல்ல, “இல்ல டாக்டர், நான் அது வந்து உங்க ஆன்டியைப் பார்க்கப் போறேன்” என்று கூறி முடித்தாள் செம்பருத்தி.

“அப்படியா மா! திடீர்னு என்னால முடியாதுன்னு பின்வாங்கக் கூடாது. நோ எக்ஸ்சியூஸ்!” என்றாள் சுப்ரியா, உள்ளுக்குள் குத்துக்களித்துக்கொண்டே. அவளுக்கு வானத்தில் பறப்பதுபோல இருந்தது. குருசேத்ரனை இனி செம்பருத்தி பார்த்துக்கொள்வாள், தனக்கு வேலை இல்லை என நினைத்தாள்.

“ஓகே டாக்டர். அப்படியெல்லாம் பண்ண மாட்டேன்” என செம்பருத்தி உறுதியளிக்க, “ஓ சூப்பர் மா! உங்களோட நம்பருக்கு இந்த மன்த் சேலரியில் இருந்து இருபதாயிரம் சென்ட் பண்ணியிருக்கேன். மந்த் எண்டுல மீதி பணம் கிரெடிட் ஆகும்மா” என்றாள் சுப்ரியா.

“தேங்க்ஸ் மேம்” என்றவள், பணத்தை அப்படியே செல்வியின் எண்ணுக்கு அனுப்பி வைத்தாள்.

“போலாமா செம்பா?”

“மேம்?” என அவள் திடுக்கிட்டுப் பார்க்க, “கொஞ்சம் நேம் நீளமா இருக்கு, அதான் ஷார்ட் ஃபார்ம்ல…” என்றாள் சுப்ரியா.

“ம்ம்… போலாம் மேம்” என்று மறுப்பேதும் சொல்லாமல் புறப்பட்டாள்.

இதோ, வந்தாகிவிட்டது செம்பருத்தி குருசேத்ரன் வீட்டில்.

அடுத்து என்ன நடக்கும்?

 பார்ப்போம்,

தொடரும்…