அத்தியாயம்-16

ஒவ்வொரு படிகளும் ஏறவே அவளுக்கு சிரமமாக இருந்தது. அவன் அறை வரவே கூடாது என வேண்டிக்கொண்டாள். முகமெல்லாம் வியர்த்துப் போனது.

செம்பருத்தி!

“மேடம்” எனத் திரும்பினாள்.

“என்ன சொன்ன?”

“அத்… அத்தை!!”

“கொஞ்சம் வேகமா போம்மா!” என மணியம்மை சிரித்துக்கொண்டே கூற,

“இதோ அத்தை” என வேகமாகச் சென்றாள்.

குருசேத்ரன் அவனது மடிக்கணினியைப் பேக்கில் போட்டுவிட்டு வேகமாக வேறு உடைக்கு மாறியிருந்தான். கதவைத் தட்டியபடி உள்ளே நுழைந்தாள்.

அவளையே குறுகுறுவெனப் பார்த்துக்கொண்டே சட்டையைப் போட்டான்.

“இது, இதைச் சாப்பிடச் சொன்னாங்க!”

“அதை அங்கே டீபாயில் வச்சிட்டு கிட்ட வா!” என்றான் குரு.

“ஹாங்?” என அவள் பார்க்க,

“ப்ச், வா!”

“ம்ம்..”

“இன்னும் வா!”

“சொல்லுங்க” என்று மெல்லிய குரலில் கூறினாள். காற்றுக்குக்கூட கேட்கவில்லை.

“ம்ம், இந்த சர்ட் பட்டனைப் போட்டு விடு!” எனக் கூறியவன் அவளின் இடையை இழுத்தான்.

“ஹக்” எனத் துள்ளியவள் அவனை அதிர்ச்சியுடன் பார்க்க,

“ம்ம், என்ன அப்படி பார்க்கிற? பட்டன் மை சர்ட்,” என்றான் குரு.

கைகள் நடுங்க அவள் வேகவேகமாகப் போட்டுவிட்டு நகர, “எங்கே போற?” என மார்க்கமாக் கூறியவன், அவளை இழுத்து இடையைப் பிடித்துக் கீழே வளைத்து உதட்டைக் கவ்வினான் ஆவேசமாக.

செம்பருத்தியின் கண்கள் அதிர்ச்சியில் விரிய, அவனை வேக மூச்சுடன் பார்த்தவள் நகர முற்பட, இடையை இழுத்து உரசி, வருடிவிட்டு முத்தமிட்டான் மூர்க்கத்துடன்.

அவனது திடீர் முத்தத்தில் மயங்கி விழப் போனவளை மெல்ல பிடித்து நிற்க வைத்தவன், நெஞ்சு குழியில் “பச்சக்” என்று முத்தமிட்டுக் “கூலாக” சென்றான் கீழே.

செம்பருத்தி இன்னும் சுயநினைவுக்கு வரவில்லை. இப்படி ஒரு தாக்குதலை அவனிடம் அவள் எதிர்பார்க்கவில்லை.

“டேய்! பால், பழம் சாப்பிட்டியா?” என மணியம்மை கேட்க,

“பழம் சாப்பிட்டேன்.”

“பால் குடிக்கல” என்றவன், “getting too late. நான் கிளம்புறேன். ஸ்ரீராம்!” என அழைத்துக்கொண்டே சென்றுவிட்டான்.

உதட்டைத் தொட்டுப் பார்த்தவள் அதே இடத்தில் அமர்ந்தாள், தன்னிலை மறந்து. இதயம் வேகமாகத் துடித்தது. ‘எப்படி அவனுடன் ஒரே அறையில்? கனவில் கூட இப்படி ஒரு காட்சியை அவள் நினைத்ததில்லை. எதற்கு நினைக்க வேண்டும்? ஐயோ! இப்பொழுது நிஜத்தில் நடக்கிறதே! அறை நியூட்ரல் கலரில் இருந்தது. அவனது உடையும் அப்படித்தான். ஆனால் நான் மட்டும் ஏன்?’

‘எப்படி என்னைக் கட்டிக்க ஓகே சொன்னான்?’ என்ற ஒரே விசயம் தான் அவளின் மண்டையைக் குடைந்தது. ஆனால் அதுக்கு முன்னாடி, போய் இவனோட அம்மா கிட்ட சில விசயங்களைக் கேட்கணும் என நினைத்தவள், ‘என்ன ட்ரெஸ் மாத்த?’ என்று யோசித்தாள்.

“செம்பருத்தி!” என மணியம்மை குரல்.

“மேடம்… இல்லல்ல… அத்தை” என தனக்குத்தானே சொல்லிக்கொண்டவள், “அத்தை, சொல்லுங்க” என வேகமாக வெளியே வந்தாள்.

“கண்ணு! கீழே வர வேணாம்மா. அங்கேயே இரு” என்றவர், “உனக்கு ட்ரெஸ் எல்லாமே அங்கே வலது பக்கம் ஒரு கபோர்ட் இருக்கும், பாரு அதுல இருக்கு. உனக்கு தேவையான எல்லாமே இருக்கும். ட்ரெஸ் மாத்திக்கோ” என்றார் மணியம்மை.

“சரிங்க அத்தை” என அவள் நேராக அலமாரியைத் திறந்து பார்த்தவள் கண்கள் இன்னும் அகல விரிந்தது. ஆம், காட்டன் புடவைகள், ஃபேன்சி புடவைகள், சுடிதார், லாங் டாப் உடைகள், அவளுக்குத் தேவையான உள்ளாடைகள் என எல்லாமே 7 செட் இருந்தது. ஒரு நாளைக்கு ஒன்று என்ற கணக்கில். இரவு உடை அதாவது நைட்டி கூட இருந்தது, பைஜாமா இருந்தது.

‘இத்தனை இருக்கே! இதெல்லாம் எனக்குப் பத்துமா?’ எனக் கேட்டால் கண்டிப்பாகக் கச்சிதமாகப் பொருந்தும். அது அனைத்தும் குரு தேர்வு செய்தது.

அவள் யோசனையுடன் ஒரு உடையை எடுத்துக்கொண்டவள் ஒப்பனையை கலைக்க ஆரம்பித்தாள். கழுத்தில் தாலி தொங்கிக்கொண்டிருந்தது. அரை மணி நேரத்தில் ஒப்பனை கலைத்து புதிய உடைக்கு மாறியவள் அப்படியே நேராக அந்த அறையைச் சுற்றிப் பார்த்தாள். மிகவும் சுத்தம். ஒரு ஷோ ரூம் போல இருந்தது.

வீட்டுக்கு பேச வேண்டும் என்று தோன்ற உடனே அழைத்தாள்.

“நான் பேசறேன்! நானு… நானு” என ஆளாளுக்குப் போட்டி போட்டு போனைப் பிடுங்க, அவர்களிடமிருந்து போனை வாங்கிய செல்வி தனியாகச் சென்று, “ஹே, மாப்ள என்ன பண்றார்? உன் மாமியார் எதுவும் கேட்டாங்களா? உன்கிட்ட நல்லா நடந்துகுறாங்களா?” எனக் கேட்டார்.

“எந்தப் பிரச்னையும் இல்ல. என்கிட்ட எப்பவும் போல பேசுறாங்க. எனக்கு ட்ரெஸ் எல்லாம் எடுத்து வச்சிருக்காங்க. தூங்க சொன்னாங்க.”

“அப்போ மாப்ளை?”

“அவருக்கு முக்கியமான மீட்டிங். வீட்டுக்கு வந்ததும் புறப்பட்டுப் போயிட்டார். ஆமா, எதுக்கும்மா இதையெல்லாம் கேட்கிற?” எனச் செம்பருத்தி சலித்துக்கொண்டே கூறினாள்.

“அது… இது வந்து… உனக்கு ஒரு பவுன் தோடு அப்புறம், நம்ம கர்ணன் மாப்ளை வாங்கிக் கொடுத்த மோதிரம், இவ்ளோ தாண்டி உனக்கு பொறந்த வீட்டிலிருந்து போட்டுவிட்டிருக்கோம். எனக்குத் தயக்கமா இருக்கு. அவங்க ரொம்பப் பெரிய இடம். அதான்.”

“அப்புறம் எதுக்கும்மா கல்யாணம் பண்ணி வச்ச? நம்ம தகுதிக்கு ஏத்த போலதான் ஆசைப்படணும்” என்றாள் செம்பருத்தி.

“உன்னோட தகுதிக்கு என்ன குறைச்சல்?”

“தகுதி! அந்த வார்த்தையைச் சொல்றதுக்கே ஒரு தகுதி வேணும்மா!” என்றாள் செம்பருத்தி.

“ஹே, எதுக்குடீ இப்படி வெட்டி வெட்டி பேசுற?” என செல்வி கேட்க,

“பின்ன என்ன? நான் எப்பவும் இப்படி இந்த மாதிரி ஒரு வாழ்க்கை வேணும்னு நினைச்சதே இல்ல. எனக்கு சாதாரண வாழ்க்கை தான் வாழ நினைச்சேன். ஒரு குண்டு மணி தங்கம் வாங்க முடியாத என்னால தங்கத் தட்டில் எப்படி சாப்பிட முடியும்?” எனக் கேட்டாள் செம்பருத்தி.

“இதே போல உன்னோட மாமியார்கிட்டயும், வீட்டுக்காரர்கிட்டயும் பேசி வைக்காத! உன்னை போய் எப்படி அவங்களுக்குப் பிடிச்சதுன்னு தெரியல” என திட்டினார் செல்வி.

“உன்கிட்ட பேச எனக்கு விருப்பமில்லை. நீ அப்பாகிட்ட போனை கொடு!” என செம்பருத்தி கேட்க,

“பேசு உன் அப்பன்கிட்ட!” என முனகியபடி போனை கொடுத்தார் செல்வி.

அனைவரிடமும் பேசினாள் மணிக்கணக்கில். அதன் பின் அப்படியே படுக்கையில் ஒரு ஓரத்தில் படுத்து அசதியில் மொத்தமாகத் தூங்கிவிட்டாள்.

மதியம் இரண்டு மணிக்கு அறைக்குள் நுழைந்தார் மணியம்மை. அவள் அசந்து உறங்கிக்கொண்டிருக்க,

“செம்பருத்தி” என அவர் எழுப்பவும் மெல்ல கண்களைத் திறந்தவள்,

“மேட… அத்தை, சொல்லுங்க” என்று விருட்டென எழுந்து அமர்ந்தாள்.

மணியம்மை சிரித்துக்கொண்டே “வாம்மா, சாப்பிட்டு வந்து தூங்கு” என அழைத்தார்.

“நீங்க சாப்பிட்டீங்களா?” என செம்பருத்தி கேட்க,

“இனி தான்.”

“ஐயோ மேடம்… அத்தை! இந்நேரம் நீங்க மாத்திரை போடணும். இனி இப்படி இருக்காதீங்க. வாங்க சாப்பிடப் போலாம். எனக்காக எதுக்கு வெயிட் பண்ணீங்க?” என அவருடன் கீழே சென்றவள் சாந்தாவுடன் சேர்ந்து சாப்பிட்டாள். மணியம்மை சாப்பிட வேண்டிய அனைத்து மாத்திரையையும் எடுத்துக்கொடுத்தவள், அரை மணி நேரம் கழித்து சுகர் டெஸ்ட் ஸ்ட்ரிப் வைத்து செக் செய்தாள். கூடவே பிரஷர் செக் செய்தாள்.

“எப்டி இருக்கு?” என மணியம்மை கேட்க,

“ம்ம், பிரஷர் சரியா இருக்கு. எப்பவும் இதேபோல இருக்கணும்.”

“அதுக்கு நீ என் பக்கத்தில் இருந்தால் போதும்” என்றார் மணியம்மை சிரித்துக்கொண்டே.

“அதான் பக்கத்துல கொண்டு வந்துட்டீங்களே! எப்பவும் இருக்கப் போல” என இரண்டு புருவம் தூக்கினாள் செம்பருத்தி.

“நான் உன்னோட மாமியார், அது நினைப்பிருக்கா?”

“பயமா இருக்கு” என சிரித்துக்கொண்டே கூறினாள்.

“அப்போ என்மேல் உனக்குப் பயம் இல்லையா? நான் உன்னை கொடுமை பண்ண நினைச்சேன்” என்றார் சிரித்துக்கொண்டே.

“என்னை உங்களால கோபமா கூடப் பார்க்க முடியாது மாமியாரே” என்றாள் செம்பருத்தி.

“அது என்னமோ சரிதான்! எனக்குக் கோபம் கொஞ்சம் கூட வர மாட்டிக்கிதே” என மணியம்மை கூற,

செம்பருத்தி சிரித்துக்கொண்டே, “வேணும்னா உங்க பையன்கிட்ட ட்ரெய்னிங் எடுத்துக்கோங்க” என்றாள்.

“அடேங்கப்பா! மருமகள் மாதிரி ஃபார்முக்கு வந்துட்டீங்க மேடம்” என மணியம்மை கூற,

“அச்சோ” என நாக்கைக் கடித்துக்கொண்டாள்.

மணியம்மை அவளின் கையைப் பிடித்து, “உன்கிட்ட முக்கியமா ஒரு விசயம்மா!”

“சொல்லுங்க மேட… அத்தை… அத்தை!”

“எப்படி வேணாலும் கூப்பிடுடி! இப்போதைக்கு உனக்குச் சரளமா அத்தை வராதுன்னு எனக்குத் தெரிஞ்சு போச்சு. இனி நான் உன்னைக் கம்பல் பண்ண விரும்பல.”

“சாரி, ப்ளீஸ் எனக்குக் கொஞ்சம் டைம் கொடுங்க.”

“ஒன்னும் பிரச்னையில்லைமா! நான் உன்கிட்ட குருசேத்ரன் பத்திப் பேசணும்.”

“சொல்லுங்க.”

“அவன் ரொம்ப நல்லவன். ஆனால் கொஞ்சம் கோபக்காரன். உன்கிட்ட கூடக் கோபமா நடந்திருக்கான். நீ அவன்கிட்ட கொஞ்சம்… அதாவது, அவன் கோபப்பட்டால் உடனே நீ கோபப்படாத! அதுக்குன்னு என் பையன் சரியா கோபப்படுவான் அப்டின்னு நான் சொல்ல வரல. அவன் ஒரு குழந்தை மாதிரி. கோபப்பட மட்டும் தான் தெரியும்.”

“ஆனால் அதுக்கு பிறகு அவனுக்குக் குற்ற உணர்வு வந்திடும். யார்கிட்டயும் பேச மாட்டான். கொஞ்சம் முசுடு மாதிரி தான் இருப்பான். ஆனால் பாசம் வச்சிட்டா, பச்சப் புள்ளை போல டிபென்ட் ஆகிடுவான். உன்னோட சூழல் எனக்குப் புரியுது. திடீர்னு உன்னை இந்த வாழ்க்கைக்குள் இழுத்துவிட்ட போல… இல்லல்ல, அப்படித்தான் இருக்கு. அவன் நார்மலா இருக்க நேரத்தில் நல்லது கெட்டது எடுத்துச் சொல்லு, புரிஞ்சிக்குவான்” என்றார் மணியம்மை.

“சரிங்க மேடம்… அத்தை!”

“ரொம்ப நல்லது தங்கம். எனக்குத் தெரியும் நீ சமத்துக் குட்டி அப்டின்னு.”

“ஐஸ் வைக்க வேணாம்” என செம்பருத்தி உதட்டைச் சுழிக்க,

“அட, நிஜம் தான்” என்றார் மணியம்மை.

“நான் நம்ப மாட்டேன்” என செம்பருத்தித் திரும்பி கொண்டாள்.

“சரி சரி, நீ போய் தூங்குடா.”

“ஒரு முக்கியமான விஷயம் உங்ககிட்ட சொல்லணும்.”

“என்ன செம்பருத்தி?” என மணியம்மை அவளைப் பார்த்தார்.

அவள் சொன்ன விடயத்தில்…?

தொடரும்…