“என்ன மாமியாரா? எனக்கு மாமியாரா?” என செம்பருத்தி அதிர்ச்சியுடன் கேட்டாள்.
சம்பூர்ணம் ஆர்வத்துடன் கண்கள் விரிய, ”அக்கா, நான் குளிச்சிட்டு தலையை துவட்டிட்டு வெளியே நின்னுட்டு இருந்தேன். திடீர்னு ஒரு காரு வந்தது. நல்லா பளபளன்னு! இந்த எதிர்த்த வீட்டு பையன் ரோகன், ‘வாயை திறந்து பார்த்துகிட்டே ஆடி கார்!’ அப்டின்னான். அது நேரா நம்ம வீட்டு வாசல்ல நின்னுச்சு” என்றாள்.
செம்பருத்தியின் இதயம் வேகமாக துடிக்க, முகமெல்லாம் வியர்த்துப் போனது. ”அக்கா, சத்தியமா நினைக்கல அந்த கார் நம்ம வீட்டுக்கு வந்திருக்குன்னு” என்ற சம்பு, கண்கள் விரிய, ”பாகுபலி ராணா போல அப்டியே ஒருத்தர் இறங்கி பார்த்தாரு. நான் வில்லன்னு நினைச்சேன். பார்த்தால் அவருதான் ஹீரோ! அவர் கூட விஐபி சரண்யா பொன்வண்ணன் மாதிரி ஒரு அம்மா வந்தாங்க. ‘இது செம்பருத்தி வீடு தானே?’ன்னு கேட்டாங்க.”
(அப்படி என்ன தான் நடந்தது? )
வழக்கம் போல செல்வி அனைத்து வேலைகளையும் முடித்து துளசியின் மகனை பின்பக்கமாக குளிக்க வைத்து கொண்டிருந்தார்.
“அழகா? எங்க ராஜன்? எங்க வீட்டு ராஜன் எதுக்கு அழனும்? அம்மா இங்கே தான் இருக்கா! குளிச்சிட்டு துடைச்சிட்டு பொட்டாட்டம் அம்மா கிட்ட இருப்பீங்களாம்!” என்று துடைத்து கொடுத்தார்.
“அம்மா!! அம்மா!” என சத்தமிட்டு கொண்டே வந்தாள் சம்பூர்ணம்.
“என்னாச்சு? எதுக்கு டி கத்தற?” என்று செல்வி கோபத்துடன் கேட்க..
“நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க!”
“என்னடி சொல்ற?” என செல்வி குழந்தையை தூக்கி கொண்டே முன்பக்கம் சென்றார்.
“வணக்கம் மா!” என மணியம்மை புன்னகையுடன் கூறினார்.
“யாருங்க நீங்க? எங்களுக்கு ஒன்னும் பிடிபடலையே?” என மணியம்மையின் அருகில் நிற்கும் குருசேத்ரனை மிரட்சியுடன் பார்த்தார் செல்வி.
“மன்னிச்சிடுங்க மா சொல்லாம வந்தது தப்பு தான். செம்பருத்தி எங்கே?” என கேட்டார் மணியம்மை.
“என் பையனுக்கு செம்பருத்திய பொண்ணு கேட்டு வந்திருக்கோம். வாங்கிக்கோங்க” என கையில் திணித்தார் மணியம்மை.
“என்னங்க சொல்றீங்க? காதல் எதுவும் பண்ணிட்டாலா? என் பொண்ணு அந்த மாதிரி எதுவும் பண்ற ஆள் இல்லையே” என செல்வி திகைத்து பார்க்க..
“அய்யோ இல்லமா!! செம்பருத்தி தங்கமான குணம். இத்தனை நாள் எங்க வீட்ல தான் இருந்தாள்.”
“உங்க வீடா? என்ன சொல்றீங்க?” என மிரட்சியில் பார்த்தார்.
“அய்யோ இல்லமா!! அவள் என்னை பார்த்துக்க ஹாஸ்பிடலில் இருந்து வந்தா. நல்ல குணமான பொண்ணு. என்னை இந்த நாலு மாசமும் நல்லா பார்த்துக்கிட்டா! நல்ல பொறுப்பான பொண்ணு. என்னோட பையனையும் வீட்டையும் அவள் கிட்ட ஒப்படைக்கலாம்ன்னு.”
“நீங்க சொல்றது கேட்க நல்லாருக்குதுங்க. ஆனால் மன்னிச்சுக்கங்க. எங்களால உங்க வசதிக்கு ஏற்ப எதுவும் பண்ண முடியாது. எனக்கு அஞ்சு பொண்ணுங்க” என்றார் செல்வி.
“எனக்கு ஒரு குண்டுமணி தங்கம் கூட வேணாம். உங்களோட பொண்ணு எங்க வீட்டுக்கு வந்தால் போதும். அதை மட்டும் தான் நான் எதிர்பார்க்கிறேன். உங்களுக்கு இதை நம்ப முடியாமல் இருக்கலாம். நான் உண்மைய தான் சொல்றேன். எங்க வீட்டுக்கு அவள் தான் மருமகள்” என மணியம்மை நேராக செல்வியின் கையில் தாம்பூல தட்டை நீட்டி வாங்க வைத்து விட்டார்.
சம்பூர்ணம் நடந்தவற்றை உற்சாகமாக தன் அக்காவிடம் சொல்லி கொண்டிருக்க..
”நீ எதுவும் சொல்ல வேணாம். அம்மா எங்கே?” என செம்பருத்தி ஆற்றாமையுடன் அழைத்தாள்.
”அக்கா, சொல்றத கேளு! அவங்க நேராக உள்ளே வந்துட்டாங்க. எனக்கு ஏரியாவுல செம்ம கெத்து தெரியுமா? அந்த அம்மா என் கன்னத்தை கிள்ளி, ‘நீ அப்படியே உன் அக்கா போல இருக்கா’ன்னு சொன்னாங்க. உள்ளே வந்தாங்க, அம்மா கைய புடிச்சாங்க. கடைசியில, உன்னை பொண்ணு கேட்டு மேரேஜ் பிக்ஸ் பண்ணிட்டு போயிட்டாங்க!” என்றாள் சம்பூர்ணம்.
செம்பருத்தி தலையை பிடித்தபடி அப்படியே அமர்ந்து கொண்டாள். அவள் கனவிலும் இதை எதிர்பார்க்கவில்லை. ‘நடக்காது, இது நடக்கவே நடக்காது!’ என அவள் நினைத்துக்கொண்டிருக்க…
”அக்கா, சினிமா மாதிரி இருந்தது தெரியுமா? மாமா என் கையில போனை கொடுத்து உன்கிட்ட கொடுக்க சொன்னார். உன்னோட மாமியார் இந்த வளையலை போட்டுக்க சொன்னாங்க. நீ சூப்பர் கா! எனக்கு இது மாதிரி ஒருத்தன் கடல் கடந்து வந்தால் எப்படி இருக்கும்? ப்பா செம்மையா இருக்கும்!” என சம்பு பகல் கனவு கண்டுகொண்டிருக்க…
அந்த நேரம் பார்த்து, பாரி, செல்வி, தாமரை, துளசி, கர்ணன் என அனைவரும் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.
”மா! அப்பா! என்ன நடக்குது?” என செம்பருத்தி பதட்டத்துடன் எழுந்தாள்.
”எதுக்கு மா ஒத்துகிட்டீங்க? தாமரை அக்கா எந்த நிலையில் இருக்குன்னு தெரியுதுதானே! இந்த பணக்காரங்கள நம்ப முடியாது. எனக்கு இதுல விருப்பம் இல்ல. எனக்கு முன்னாடி தாமரை அக்கா, ரோஜா அக்கா, ரெண்டு பேரும் இருக்காங்க. நான் எப்டி கல்யாணம் பண்ணிக்க முடியும்?” என விடாப்பிடியாக குதித்தாள் செம்பருத்தி.
”அது எனக்கு தெரியாதா? நல்ல சம்மந்தம். அந்த அம்மாவ பார்த்தாலே தெரியுது தங்கமான குணம் அப்டின்னு. வார்த்தைக்கு வார்த்தை உன்னை கொண்டாடுறாங்க. நீ அவங்க வீட்டுக்குதான் மருமகளா போகணும். உனக்கு இப்போ 25 ஆகிடுச்சு. உனக்கு அடுத்து சம்பூர்ணம் இருக்கா! ஒரு பொண்ணைத்தான் கட்டி கொடுத்து கரை சேர்த்திருக்கேன். உன்னோட குணத்துக்காக அவங்க வீடு தேடி வந்திருக்காங்க. கண்டத கற்பனை பண்ணி வாழ்க்கைய அழிச்சுக்காத! இந்த கல்யாணம் நடக்கணும். அவ்ளோதான் சொல்லிட்டேன்!” என்று விட்டு சென்றார் செல்வி.
”மாமா, நீங்களாவது சொல்லுங்க” என செம்பருத்தி கர்ணன் பக்கம் சென்றாள்.
”நீ ஒத்துக்கோ செம்பருத்தி. நம்ம உறவுல யாருடி நம்ம வீட்டு படியேறி பொண்ணு கேட்டிருக்காங்க? யாராவது ஒரு மாப்ள கூட்டிட்டு வந்து பேசியிருப்பாங்களா? அப்படிப்பட்ட சொந்தத்திலிருந்து வந்த ஒருத்தன் தான் என்னோட வாழ்க்கைய அழிச்சான்” என துளசி விரக்தியுடன் பேச…
”துளசி” என தோளை ஆதரவாக பிடித்தான் கர்ணன்.
”மாமா மட்டும் இல்லன்னா நான் என்ன ஆகி இருப்பேன்? யோசி! உன்னோட குணத்துக்காக வந்திருக்காங்க. தாராளமா கட்டிக்கோ. அவ்ளோதான் சொல்லிட்டேன்” என சென்றாள்.
செம்பருத்தி எதுவும் பேசாமல் அப்படியே அமர்ந்திருக்க…
”அக்கா, உனக்காக ஏதோ கொடுத்தாங்க, இந்தா” என ஒரு பையை நீட்டினாள் சம்பூர்ணம்.
”ப்ச்” என அவள் எழுந்து பாத்ரூம் சென்றுவிட்டாள்.
கர்ணன் நேராக செல்வி மற்றும் பாரியின் பக்கம் சென்று, ”மாப்ள பத்தி ஒரு தடவை விசாரிக்கலாமா மாமா? அத்தை, நீங்க என்ன சொல்றீங்க?” என கேட்டான்.
”மாப்ளையோட அப்பா பேரு தியாகராஜன். அவரோட அப்பாகிட்டதான் நானு என்னோட கட்டிட தொழிலை ஆரம்பிச்சேன். அப்புறம் தான் மேஸ்திரி ஆனேன். ரொம்ப நல்ல மனுஷன், கொஞ்சம் கோபக்காரர். 15 வருசத்துக்கு முன்னாடி ஹார்ட் அட்டாக்ல இறந்து போயிட்டார். நான் கூட போயிருந்தேன். அப்புறம் இத்தனை வருஷம் கழிச்சு அந்த அம்மாவை இன்னைக்குதான் பார்க்கிறேன்” என்றார் பாரி.
”அப்புறம் என்ன? இது போதாதா?” என செல்வி கேட்டார்.
”அப்டின்னா சரி மாமா! நம்ம பொண்ணு அங்கே சந்தோஷமா இருந்தால் அது போதும்” என்றான் கர்ணன்.
அந்த நேரம் செல்வியின் போன் சினுங்க. ”என்னங்க, அந்த அம்மா தான் கூப்பிடுறாங்க” என அட்டன் செய்தார்.
”செம்பருத்தி வீட்டுக்கு வந்துட்டாளா மா? அவகிட்ட பேசி நாலு நாள் ஆச்சு?” என மணியம்மை கூற…
”ஒரு நிமிசம் இருங்க மா! இதோ தரேன்” என செல்வி ஓட்டமும் நடையுமாக போனை அவளின் கையில் திணித்தார்.
”ஹலோ, செம்பருத்தி, அந்த வளையலை கையில போட்டியா?” என மணியம்மை கேட்க…
”அது மேடம்!” என செம்பருத்தியின் கண்களில் நீர் கொட்டியது.
”என்ன மேடம்? உரிமையா அத்தைன்னு சொல்லு செம்பருத்தி! அவங்க உன்கிட்ட ஆசையா பேசுறாங்க!” என செல்வி கூறுவது மணியம்மையின் காதில் விழுந்தது. அவருக்கு மிகவும் சந்தோஷம்.
”அத்.. அத்தை” என செம்பருத்தி தயங்கிக்கொண்டே கூறினாள்.
”சரிடா தங்கம், நீ ரெஸ்ட் எடு! இப்போதானே டியூட்டி முடிச்சிட்டு வந்திருப்ப? நீ சாப்பிட்டு தூங்கு. எனக்கு முடிஞ்சா சாயங்காலம் போன் பண்ணு” என்று விட்டு வைத்தார்.
செல்வி போன் செய்து ரோஜாவிடம் விவரம் கூற… ”நான் எதுக்கும் குடும்பத்தைப் பத்தி விசாரிக்கிறேன்” என சொன்னாள்.
”அதுக்கு அவசியமே இல்ல. உங்க அப்பாருக்கு மாப்ளை அப்பாவை நல்லா தெரியுமாம். செம்பருத்தியை எப்டி கவனிக்கிறாங்க தெரியுமா? எனக்கு சந்தோஷமா இருக்குடி! கடவுள் புண்ணியத்தில் உனக்கும் ஒரு நல்லது” என அவர் பேச பேச கட் செய்தாள் ரோஜா.
செம்பருத்தி இயல்பு நிலைக்கு வர இரண்டு நாட்கள் தேவைப்பட்டது. ஒரு பெரு மூச்சை விட்டவள், துளசியின் பக்கம் சென்று, ”கல்யாணத்தை அடுத்த வருஷம் பண்ணிக்கிறேன். ஏன்னா அப்புறம் வேலைக்கு போக முடியாது. இன்னும் ஆறு மாசத்துல நான் குட்டி பையன் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணனும். அடுத்து, இந்த வருடத்துக்குள் அப்பாவுக்கு ஒரு எக்செல் வாங்கிக் கொடுக்கணும். என்னோட கரியர், என்னோட வேலை” என அவள் சொல்ல வர…
”ஹே, கல்யாணத்துக்கு இன்னும் 20 நாள் தான் இருக்கு” என அடுத்த குண்டை தூக்கிப் போட்டாள் துளசி.
”என்ன 20 நாளா?”
”ஆமா! உன்னை இப்போவே அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகணும்னு ஒரே அலப்பறை. அதனால மருதமலையில் கல்யாணம் பண்ணி பதிவு செஞ்சிட்டு, மூணு மாசம் கழிச்சு வரவேற்பு வைக்கிறாங்களாம்” என்றாள் துளசி மகனை கொஞ்சிக்கொண்டே…
மணியம்மை தினமும் அழைத்து பேசுவார். வேலைக்கு செல்ல வேண்டாம் என்று புகும் புதிய வீட்டில் இருந்து உத்தரவு வர… வேலையை விட்டு நின்றாள். இதுவரை குரு சேத்ரனிடம் ஒரு வார்த்தை கூட அவள் பேசவில்லை. அவனும் தான்… அவன் என்ன நினைக்கிறான் என அவளுக்கு ஒரே குழப்பம். செம்பருத்தி எது நினைத்தாலும், அதைப்பற்றி குருவுக்கு கவலை இல்லை. அவன் நினைத்ததை அடைய எந்த எல்லைக்கும் செல்வான்.
இதோ முகூர்த்த புடவை எடுத்தாகிவிட்டது. அதற்கு குரு வரவில்லை. மணியம்மை மற்றும் சாந்தா இருவரும் வந்தார்கள். செம்பருத்தி வேறு வழியில்லாமல் அனைத்தையும் பிடித்ததை போல ஏற்றுக்கொண்டாள்.
இத்தனை நாள் கழித்து அவனிடமிருந்து செய்தி வந்திருந்தது. “உனக்கு புடவை ஓகே தானே?”வேகமாக அவனுக்கு அழைத்தாள்.
ஒன்லி டெக்ஸ்ட் என அவன் பதில் அனுப்பினான்.
செம்பருத்தி டைப் செய்ய, உனக்கு புடவை ஓகே தானே என மீண்டும் அதையே அனுப்பினான்.
அது ஓகே என அவள் பதில் கொடுத்து விட்டு நீளமாக டைப் செய்தாள். திருமணத்தை பற்றி பேச வேண்டும் பார்க்க வேண்டும். சில தீர்வுகள் வேண்டும் என்று.
ஆனால் குருசேத்ரனுக்கு அவள் அனுப்பிய அனைத்து செய்திகளும் டபிள் டிக்கில் மட்டுமே இருந்தது. அய்யோ என்றானது அவளுக்கு.
இதோ திருமணத்தன்று காலைதான் செம்பருத்தி அவனையே பார்த்தாள். கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் ஓடி இருந்தது.
அவள் அழுகையை அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள். ஆனால் அந்த பக்கம் பார்த்தால் குருசேத்ரன் உற்சாகமாக புறப்பட்டு கொண்டிருந்தான். அவனுக்கு எதை பற்றியும் கவலை இல்லை. பட்டு வேஷ்டி சட்டையில் மிகவும் அழகாகவே இருந்தான்.
எதுக்கு செம்பா இப்படி முகத்தை வச்சுட்டு இருக்க? என சம்பூர்ணம் கேட்டாள். அவள் மட்டுமா கேட்டாள்? மொத்த குடும்பமும் கேட்டது. கண்ணை கட்டி காட்டில் விட்டதை போல கல்யாண கோலத்தில் அமர்ந்திருப்பதை போல ஒரு உணர்வு அவளுக்கு.
செம்பருத்தியின் மொத்த குடும்பமும் உற்சாகமாக இருந்தார்கள். ரோஜா வந்திருந்தாள். எப்படியாவது தாலி கட்டுறதுக்கு முன்னாடியாவது அவன் கிட்ட பேசணும் என அவள் நினைத்து கொண்டிருக்க.. இதோ அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில்.. உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்? என ஆரம்பித்தாள் செம்பருத்தி.
“ம்ம் பேசு!!” என்றானே பார்க்கலாம்.
எப்டி இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சீங்க? என அவள் மெல்லிய குரலில் கேட்க..
நீ எப்படி ஒத்துகிட்ட என திரும்ப கேட்டான் குரு.
அவள் என்ன சொல்வது என தெரியாமல் விழி பிதுங்கி பார்க்க.. அவன் ஒரு காந்த புன்னகையுடன் இதோ அவளின் கழுத்தில் தாலியும் கட்டிவிட்டான். பாரியின் மகளாக இருந்தவள். இன்றிலிருந்து இந்த நொடியில் இருந்து செம்பருத்தி குருசேத்ரனாக மாறியிருந்தாள்.
ஸ்ரீராம் திருமண வேலை மொத்தத்தையும் சிறப்பாக செய்து மணியம்மையிடம் பாராட்டைப் பெற்றான்.
“வீட்ல இருந்து அம்மாவும் அப்பாவும் கல்யாணத்துக்கு வந்திருக்கலாம் நீ கூட்டிட்டு வரலாமே டா” என மணியம்மை கூற..
பாஸ் அதுக்கு ஓகே சொல்லனும் என்றான் ஶ்ரீராம்.
எல்லாம் என்னோட நேரம் என மணியம்மை வேறு எதுவும் பேசவில்லை.
தர்மன் நேராக செம்பருத்தியின் பக்கம் சென்று, ”அக்கா, எனக்கு மாமாவை intro பண்ணி வையேன். ஃபார்ச்சூன் MNC ப்ராஜக்டை அவர் தனியா எடுத்திருக்கார் தெரியுமா? அவர் செம்ம டேலன்ட். நான் expect பண்ணவே இல்ல என்னோட மாமா MG கான்ஸ்ட்ரக்சன் M.D! கேட்கவே எப்டி இருக்கு தெரியுமா? ப்ளீஸ் கா! அவரு என்னோட இன்ஸ்பிரேஷன் கா!” என்று கேட்டான் ஆசையுடன்.
”சரிடா, இப்போவே பேசணுமா?” என செம்பருத்தி கேட்க…
”ம்ம்” என மின்னும் விழிகளில் பார்த்தான் தர்மன்.
ஒரு பெரு மூச்சை விட்டவள், குருசேத்ரன் நின்றிருக்கும் இடத்துக்கு சென்றாள்.
”க்கும்!!”
”சொல்லு! என்ன விஷயம்?” என வெகு சாதாரணமாக கேட்டான். என்னமோ நீண்ட நாள் பழகியவனை போல…
”என் தம்பிக்கு உங்களை ரொம்ப பிடிக்குமாம். அவன் உங்ககிட்ட பேசணும்னு ஒரே டார்ச்சர்” என செம்பருத்தி தன்னை மிகவும் இயல்பாக காட்டிக்கொள்ள…
”வாங்க!” என அழைத்தான்.
”ஹாய் சார்!” என பதட்டத்தில் அழைத்துவிட்டான் தர்மன்.
”உங்க அக்கா போலவே பேசுற!” என மெல்லிய புன்னகை சிந்தினான் குருசேத்ரன்.
செம்பருத்தி அவனை புருவம் சுருக்கி பார்க்க, தோல் மேல் கைகளைப் போட்டபடி தர்மனை அழைத்து சென்றான் குரு.
‘இவன் நல்லவனா கெட்டவனா? என்னை ரொம்ப நல்லா தெரிஞ்சதுபோல பேசுறான்! இவன் மனசுக்குள்ள என்ன இருக்கு?’ என நினைத்தாள் செம்பருத்தி.