அனுஷாவின் தம்பி வினோத் அழைத்தான், தியாகுவின் எண்ணுக்கு இப்போது. தியாகு வண்டியை ஓரமாக நிறுத்தி தன் அழைப்பினை எடுக்க முற்பட்டான். போன் அழைப்பு நின்றது.
தியாகுவிற்கு யோசனை.. எதற்கு அழைக்கிறான் இவன், அண்ணி ஏதாவது சொல்லியிருப்பார்களோ.. விஷயம் தெரிந்து கேட்க அழைக்கிறானோ.. பேசுவதா வேண்டாமா என யோசனை.
தியாகு தன் மனையாளை பார்த்தான். முழு அமைதியில் லலிதா. என்ன யோசிக்கிறாள் என முகத்தில் தெரியவில்லை. ஆனால், எதையோ மனதில் நினைத்து வருந்துகிறாள் என புரிகிறது. நேற்றிலிருந்து என்னை நம்பி வந்தவளை.. இப்படிதான் நிற்க இடமில்லாமல் கூட்டிக் கொண்டு சுற்றுகிறேன்.. இன்னமும் சரியாக உண்ணவில்லை உறங்கவில்லை ஒருநாள் ஆகிற்று. இந்த ஒருநாள் கூட என்னால் அவளை பார்த்துக் கொள்ள முடியவில்லையோ.. அவசரப்பட்டுவிட்டேனோ.. என மனது அழுந்துகிறது. தியாகுவும் அவளை பார்த்தபடியே நின்றான்.
இப்போது அனுவிடமிருந்து அழைப்பு வந்தது தியாகுவிற்கு.
தியாகு அந்த அழைப்பினை ஏற்றான்.
அனு “தம்பி..” என்றாள் தயங்கிய குரலில்.
தியாகுவும் ஏதும் பேசவில்லை.
அனு “உண்மையாக கல்யாணம் ஆகிடுச்சா.. இல்ல, வீட்டில் காட்ட கூட்டி வந்தீங்களா.. உண்மையை சொல்லுங்க” என்றாள்.
தியாகு பெரிதாக அண்ணியிடம் பேசுபவன் இல்லை.. சாப்பிட அழைத்தால் வருவான்.. யாருமில்ல நேரத்தில் ‘நான் கிளம்புகிறேன்.. சாப்பிட வரமாட்டேன்’ என பொதுவான தகவல்களை சொல்லி செல்வான் அவ்வளவுதான். இப்போது அண்ணி இப்படி கேட்கவும்.. இருக்கும் எரிச்சலில் கோவமே வந்தது.
அனுதான் தொடர்ந்தாள், இவனின் அமைதி பார்த்து “இல்ல, சொல்லியிருந்தால்.. அத்தை மாமாவிடம் பொறுமையாக பேசியிருக்கலாம்.. அத்தோடு, வேறு ஏற்பாடு செய்திருக்கலாம்ன்னு கேட்டேன்.” என்றாள்.
தியாகு “இல்ல, இது நாங்களே எதிர்பார்க்காதது. அவர்கள் வீட்டில் நேற்று ஊருக்கு கிளம்ப முடிவு செய்திருந்தார்கள், அதான் என்ன செய்வதென தெரியாமல் கூட்டி வந்துவிட்டேன்.” என்றான்.
அனு “சரி, இப்போது எங்க.. அவங்க அந்த பொண்ணு வீட்டுக்கு.. ஏதாவது போறீங்களா” என்றாள்.
அனு “சரி, நீங்க தப்பாக நினைக்கலைன்னா.. வினோத் பிரெண்ட்ஸ் வீட்டின் மேலே ஒரு போர்ஷன் இருக்காம்.. நான் பேசியிருக்கேன். நீங்க போங்க.. அந்த பொண்ணு பாவம்” என்றாள்.
தியாகு “அண்ணனுக்கு தெரியுமா” என்றான்.
“இல்ல.. அத்தைக்கு மூச்சு வாங்க ஆரம்பிச்சிடுச்சி. ராஜி ஒரே ரகளை.. அத்தையோடு தூக்க மாத்திரையை வைத்துக் கொண்டு. உங்க அண்ணன்தான் மாமா ரூமில் இருக்கார். நான் நைட் சொல்லிவிடுகிறேன்” என்றாள்.
தியாகுவிற்கு யோசனை.. சபரி ஏதாவது அண்ணியை சொல்ல போகிறான் என.
அனு “தம்பி, உங்க அண்ணன் ஏதும் சொல்லமாட்டார். அந்த பொண்ணு உங்களை நம்பி வந்திருக்கு. எதையும் இப்போது யோசிக்க வேண்டாம்.. நீங்க முதலில் வீடு போங்க” என்றாள்.
தியாகுவிற்கும் வேறு வழி இருக்கவில்லையே.. “ம்..” என்றான்.
அனு “சாப்பிடுங்க.. வீட்டில் இன்று நடப்பதை விட்டிடுங்க.. அந்த பெண்ணை நல்லா பார்த்துக்கோங்க.. அப்புறம்.. தாலி கண்டிப்பாக அவங்க கழுத்தில் இருக்கணும்” என்றாள்.
தியாகு “ம்.. சரிங்க” என்றான்.
அழைப்பினை துண்டித்தனர் இருவரும்.
லலிதா அவனையே பார்த்திருந்தாள்.
தியாகு, வினோத்திற்கு அழைத்தான். இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
பேசி முடித்துதான், தியாகு அவளின் முகத்தினை.. பார்த்தான் புன்னகையோடு.
பேச பேச அவனின் கவலையான முகம், நம்பிக்கைக்கு மாறியிருந்தது தியாகுவிற்கு.. அது.. இவளையும் தொற்றிக் கொண்டது. அவனின் நம்பிக்கை தொற்றுபுன்னகையாக.. இவளிடமும் மெதுவாக மலர்ந்தது. தியாகு அவளின் கைபற்றிக் கொண்டான்.. அவள் அவனிடம் தன் கையை விடுவிக்க முயன்றாள்.. பொதுவிடம் என்பதால். ஆனாலும், தியாகு விடாமல் பற்றிக் கொண்டு “போலாமா” என்றான்.
லலிதா எதுமே கேட்கவில்லை.. தலையசைத்தாள்.
தியாகு “எங்கேன்னு கேட்கமாட்டியா” என்றான்.
லலிதா, பதில் என்ன சொல்லுவதென தெரியாமல்.. அதிர்ச்சி அகலாத பார்வைதான் பார்த்தாள்.
தியாகு அந்த அதிர்ச்சியான பார்வையை உள்வாங்கிக் கொண்டு.. என்ன பேசுவதென தெரியாமல் நின்றான். மலை பயணங்களில்.. சிலநேரங்களில்.. மூடுபனி சட்டென பாதையை மறைக்கும் போது.. ஒரு கலக்கம் வரும்தானே.. எதிரே என்ன இருக்கிறது.. வழி இருக்கிறதா என ஒரு பயம் வரும்தானே பயணிப்பவர்களுக்கு.. அதற்காக வண்டியை செலுத்தாமல் இருக்க முடியாதே.. வண்டியின் விளக்குகளை.. ஒளிரவிட்டு.. மனதில் தைரியத்தை எரியவிட்டும்.. பயணத்தை தொடர்ந்துதானே ஆகவேண்டும்.. அப்படிதான் தியாகு தன்னை அவளுக்காகவே தைரியமாக்கிக் கொண்டு.. “வா.. போலாம்..” என சொல்லி அவளை வண்டியில் அமர்த்திக் கொண்டு கிளம்பினான்.
வினோத் சொன்ன இடத்திற்கு வந்தனர் இருவரும்.
மேலே ஒரு வீடு.. கீழே வினோத்தின் நண்பன் வீடு. தியாகு, நேரே அவர்களிடம் பேசினான்.. அவர்களும் “அனுஷியா சொல்லிவிட்டாள் தம்பி.. நீ எதுக்கும் தயங்காத.. மேலே போய் வீடு பாருங்க” என சொல்லி சாவி கொடுத்தார்கள்.
லலிதாவோடு தியாகு வினோத் மேலே வந்தனர்.. அளவான வீடு.. முன்புறம் இடமிருந்தது.. பாத்ரூம் அங்கே.. வீட்டின் உள்ளே பைப் வசதி சிங்க் என இருந்தது. தியாகு லலிதா இருவரும் இவ்வளவு வசதியை எதிர்பாத்திருக்கவில்லை. நிம்மதியானது.
லலிதாவை மேலே விட்டு கீழே வந்தான், தியாகு. அவர்களிடம் அட்வான்ஸ்.. வாடை என கேட்டு தெரிந்துக் கொண்டான். அவர்கள் முதலில் அனுவிடம் பேசிவிட்டோம் என்றனர். தியாகு அதெல்லாம் அண்ணிகிட்ட நான் பேசிக்கிறேன் என சொல்லி.. விசாரித்துக் கொண்டான்.
தியாகு நன்றாகவே சம்பாதித்தான். லலிதாவை நேசிக்க தொடங்கியது முதல்.. பணம் கொஞ்சம் சேர்த்துதான் வைத்திருந்தான். அதனால் தேவையான அளவு கையிருப்பு இருந்தது. எனவே, வெளியே சென்றான் வினோத்தோடு. பணம் ATMல் தேவையான அளவு எடுத்துக் கொண்டான். கடைவீதி சென்றான்.. அவனுக்கு தெரிந்த சாமான்களை வாங்கிக் கொண்டு.. உணவு வாங்கிக் கொண்டு வீடு வந்தான்.
அதற்குள் லலிதா, கீழே அவர்களிடம் சென்று.. ஒரு பழைய துணி துடைக்க.. துடைப்பம் வாங்கி வந்து வீட்டினை சுத்தம் செய்தாள். அவர்களும் வந்து வீட்டினை துடைக்க மாப் கொடுத்து.. அவளிடம் பேசி.. உதவி சென்றனர்.
தியாகு வந்தான் உணவோடு.. மதிய உணவு. மாலை ஐந்து மணியிருக்கும் மூவரும் உண்டனர். வினோத் வேண்டாம் சாப்பிட்டேன் என்றாலும்.. அவனையும் தங்களோடு உண்ண வைத்தனர்.
தியாகு உடை பேஸ்ட் ப்ருஷ்.. பெட்ஷீட்.. தலையணை வாங்கி வந்தான். பேஃன்.. சமைக்கும் பாத்திரம் இதெல்லாம் இல்லை.
அனு வினோத்திடம் அழைத்து பேசினாள். அதன்பின் தியாகுவிற்கு அழைத்தாள்.. “ வினோத், ப்பேஃன் இல்லைன்னு சொன்னான்.. சிலிண்டர்.. காஸ் அடுப்பு அம்மா வீட்டில் இருக்கு.. டிரைவர் எடுத்து வந்திடுவார். நீங்க பால் காய்ச்ச பாத்திரம், குக்கர்.. கரண்டி.. தட்டு.. அப்புறம் கண்ணாடி, சீப்பு.. எங்க, அவங்கிட்ட கொடுங்க” என்றாள்… தியாகுவிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே.
தியாகு லலிதாவிடம் போன் கொடுத்து “எங்க அண்ணி” என்றான்.
லலிதா “ஹலோ” என்க.
அனு தன்னை அறிமுகம் செய்துக் கொண்டாள்.. “உங்க பேர் என்ன.. தம்பி சொன்னாங்க.. ஆனாலும் மறந்துட்டேன்” என்றாள்.
லலிதா தன் பேர் சொன்னாள்.
அனு “எதுக்கும் வருத்தப்படாதீங்க. சீக்கிரம் தம்பி உங்களை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்திடுவாங்க.. திடீர்ன்னு நடந்ததால்.. ஏதும் செய்ய முடியவில்லை.” என்றாள்.
“ம்..” என்றாள் லலிதா.
அனு தன் அம்மாவீட்டிலிருந்து பொருட்கள் வருவது பற்றி சொன்னாள்.. வேறு எனக்கு இவ்வளவுதான் ஞாபகம் இருக்கு.. உங்களுக்கு ஏதாவது வேண்டுமா எனவும் வினவினாள். லலிதா “இல்ல, இதுவே போதுங்க.. எனக்கும் ஏதும் ஞாபகம் இல்லை” என்றாள்.
வினோத் பொருட்களை எடுக்க சென்றான்.
தியாகு லலிதா இருவரும் கடைவீதி சென்றனர் மீண்டும். பாத்திர கடையில் வண்டியை நிறுத்தினான். லலிதா தெரிந்தவைகளை.. தேவையானவை என தனக்கு தெரிந்தவைகளை வாங்கினாள். ஒரு சாமி படம் வாங்கிக் கொண்டாள். வீடு வந்தனர் இருவரும்.
வினோத் அதற்குள் வீட்டில் எல்லாம் சேர்த்திருந்தான்.
லலிதா பால்காய்ச்சினாள். கீழ் வீட்டில் கொடுத்தாள். தங்களுக்கு ப்ரூ கலந்தாள். டிரைவர், வினோத் தியாகு லலிதா என நால்வரும் பருகினர்.
வினோத் கிளம்பினான். தியாகு “ரொம்ப தேங்க்ஸ் டா” என்றான்.. கைகளை குலுக்கி. இருவருக்கும் மூன்று வயது வித்யாசம்தான்.
வினோத் “அதெல்லாம் ஒண்ணுமில்ல தியாகு, சீக்கிரம் நீங்க வீட்டுக்கு போகனும்.. பெஸ்ட் ஒப் லக்..” என கூறி விடைபெற்று கிளம்பினான்.
தியாகுவும் லலிதாவும் அப்படியே முன்பிருந்த இடத்தில் அமர்ந்தனர்.. இருவர் மட்டுமே. மீண்டும் அதே பயம்.. இருவரிடமும். ஷனங்கள் கடக்க.. நிமிடங்களும் கடந்துக் கொண்டிருந்தது.. வானமும் இருட்டிக் கொண்டது.. இருவருக்கும் என்ன பேசுவது.. எப்படி ஆரம்பிப்பது என ஏதும் தெரியாமல் தடுமாறினார் இருவரும்.
தியாகு “அப்புறம்..” என்றான் நீண்ட நேரம் சென்று.
லலிதா “ம்..” என்றாள் அனிச்சையாய்.
தியாகு திரும்பி பெண்ணவளை பார்த்தான்.. “கஷ்ட்டமா இருக்கா” என்றான் அவளையே இமைக்காமல் பார்த்து.
லலிதாவிற்கு பதில் சொல்ல முடியவில்லை.. ஒரு சஞ்சல மனதுதான்.. என்ன நடக்கும்.. என் குடும்பம் என்னை அப்படியே விட்டுவிட்டனரா.. என நிறைய யோசனை.. அமைதியாகவே இருந்தாள்.
தியாகு கைகளை பின்னால் ஊன்றி, தன் கால்களை நீட்டிக் கொண்டு.. லேசாக பின்பக்கம் சாய்ந்துக் கொண்டு வானத்தை பார்த்தான். நிலா இல்லாத வானம்.. நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தது.
லலிதா “நாம தப்பு பண்ணிட்டோமா தியாகு” என்றாள்.
சத்தமாக சொல்ல முடியவில்லை அவனால்.. ஆனால், உறுதியாக ‘இல்லை’ என தலையாட்டினான்.
பெண்ணவள் தன் முழங்கால்களை கட்டிக் கொண்டு.. அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
வீட்டு ஓனர்.. சின்ன சின்ன பாத்திரங்களில் இட்லி சட்டினி.. என இரவு உணவு எடுத்து வந்தார் தன் இரண்டாவது மகனோடு. அவர்கள் இருவரின் அமைதி பார்த்து சற்று நேரம் பேச்சுக் கொடுத்துவிட்டு.. “சரியாகிவிடும்” என நம்பிக்கையையும் கொடுத்துவிட்டு கிளம்பினர்.
இருவரும் எதோ உண்டனர். பெண்ணவள்.. பாத்திரங்கள் எடுத்து துலக்கி வைத்தாள். தியாகு.. அதனை எடுத்து இங்கும் அங்கும் வைத்தான்.
இருவரும் மீண்டும் அந்த மொட்டைமாடி சென்றனர்.. உறக்கம் வரவில்லை. பேச்சுகளும் வரவில்லை. இருவரும் பாய்விரித்து அமர்ந்தனர். பயம்தான் பிரதானமாக இருந்தது.. காதல் என்பது பாரமானது இப்போது. அங்கீகாரம் இல்லா திருமணம்.. எப்படி உறவுகள் இல்லாமல் வாழ்வது.. என பயங்கள் எழுந்தது.
தியாகு “சரி, பெரியவர்களை பற்றி இப்போது பேச வேண்டாம். நீ என்ன செய்ய போற.. படிக்கிறீயா வேலைக்கு போறியா” என்றான்.
லலிதாவிற்கு பதில் தெரியவில்லை.
தியாகு “பணம்.. பத்தி கவலையில்லை. உன் விருப்பம்தான்” என்றான்.
“படிக்கிறேன்.. MA படிக்கிறேன். ஆனால், வேற காலேஜ் போகணும்” என்றாள்.
கணவன் “சரி.. எல்லாம் புதிதாக ஸ்டார்ட் பண்ணுவோம்.. நீ படி. வேறு எதை பற்றியும் யோசிக்காத. காலேஜ் பார்க்கிறோம்.. நாளைக்கு. அதைவிட முக்கியம்.. தாலி.” என்றான்.
“ம்..” என்றாள்.
தியாகு “எனக்கு எங்க வழக்கப்படி வாங்க பிடிக்கலை.. அதாவது நம்மை ரெண்டுபேரும் வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க.. நாம் ஏதாவது சாமி.. மாதிரி வாங்கி போட்டுக்கலாம்.. உனக்கு என்ன சாமி பிடிக்கும்” என்றான்.
லலிதா “ஏன்.. தெரிந்தால் அவங்க திரும்பவும் நம்மேல கோவப்பட போறாங்க” என்றாள்.
“இல்ல.. இது நமக்கான வாழ்க்கை.. இனி நாமதான் எல்லாம்” என்றான் உறுதியாக.
லலிதாவிற்கு அவனின் அந்த கோவமும் பிடித்திருந்தது.. எந்த அடையாளமும் வேண்டாமே என அவளுக்குமே தோன்ற.. “ராம்சீதா மாதிரி..” என்றாள் யோசனையோடு.
கணவனும் “ம்.. நாளைக்கு நாம் கடைக்கு போலாம்.. இதே மாதிரி செய்ய சொல்றோம்..” என்றான்.
லலிதா “உடனேவா.. அமௌன்ட்” என்றாள்.
தியாகு அவளின் அருகில் நெருங்கி அமர்ந்தான் “ஏன், சம்பாதித்திருக்க மாட்டேனா..” என்றான்.
“இல்ல.. அப்படி நினைக்கவில்லை. இதெல்லாம் வாங்கிட்டீங்களே” என்றாள்.
தியாகு அவளை தோளோடு சேர்த்து அணைத்தான் “பிஸினெஸ் ஆரம்பிக்க வேண்டும் எனத்தான் எனக்கு ரெண்டு வருடமாக எண்ணம்.. கொஞ்சம் கொஞ்சம் சேர்த்து வைத்திருக்கிறேன். அப்புறம் இவ்வளவுநாள் எனக்கென பெரிதாக என்ன செலவு.. வீட்டுக்கு எதுவும் நான் கொடுத்ததில்லை. அதனால் நோ வொர்ரி.. செயின் கூட சேர்த்து வாங்கிக்கலாம்..” என்றான்.
லலிதா அவஸ்த்தையாகவே அமர்ந்திருந்தாள்.. ஆனால், அவன் பேச்சினை கவனிக்க தொடங்கி, கவனமாக “எல்லாவற்றையும் அதற்கே செலவு செய்ய வேண்டாமே. காலேஜ் வேற சேரனும்.” என்றாள்.
தியாகுவும் “ம்.. வேற என்ன வேண்டும்” என்றான்.
பெண்ணவள் “தெரியலை.. இது போதுமில்ல” என்றாள்.
தியாகு அவளை தன்னோடு சாய்த்துக் கொண்டே சாய்ந்தான் கீழே. பெண்ணவள் அவன் நெஞ்சில் கைவைத்து சட்டென எழ முயல.. கணவன் அவளின் கைகளை தன்னை சுற்றி எடுத்து கொண்டே “இல்ல போதாது.. எனக்கு நிறைய வேண்டும்.. எனக்கு உன்னை முன்போல பார்க்கனும்.. ஹாப்பியா நீ கலகலன்னு இருக்கணும்.. ம்.. நாம் மட்டும்தான் இனி. நீ ஹாப்பியாக இருந்தால் போதும்.. நான் எல்லாவற்றையும் பாத்துக்குவேன்.. ம்” என சொல்லி அவளின் நெற்றியில் முத்தமிட்டான். காதல் மெல்ல மெல்ல மீண்டும் அவர்களுக்குள் நுழைந்தது.
மறுநாள் முதல் வேலையாக நகைக் கடையில் சென்று தாங்களின் விருப்பம் பற்றி சொல்லினர். அவர்கள், முதலில் ஏளனமாகவே பார்த்தனர். தியாகு, வேறு கடைக்கு போகலாம் என எழுந்தான்.
ஒரு பவுன்.. அதனால், ஊழியர்கள்.. கடையின் முதலாளியிடம் வந்து சொல்லினர். அவரும் முதலில் வேண்டாவெறுப்பாகவே விசாரித்தார்.. நீங்க என்ன வகையறா என பலவாறாக கேட்டார். ‘எங்களுக்கு எங்கள் விருப்படி வேண்டும்.. முடியுமா முடியாத’ என கேட்டான் தியாகு. லலிதா பேசுவதை வைத்து ஓரளவு அவர்களின் வகையை தெரிந்து கொண்டனர் நகைக்கடை உரிமையாளர். அதற்கு தகுந்தார் போல செய்தும் கொடுக்கிறோம் என அட்வான்ஸ் வாங்கிக் கொண்டனர்.
அடுத்து இருவரும் கம்ப்யூட்டர் சென்ட்டர் சென்றனர். எதோ வேலைகளை பார்த்தனர். தியாகுவின் தோழர்கள் எதையும் கேட்க்காமல் இதமாக பேசி.. வேலையை பார்த்தனர்.
அடிக்கடி வீட்டு நிலவரம் பற்றி அனுஷியா பேசினார் இருவரிடமும்.
பத்துநாளில் தாலி வந்துவிட்டது, மறுநாள்.. கோவில் சென்றனர். அய்யரிடம் விவரம் சொல்லினர். அய்யர் ‘முடியாது முறையாக அலுவலகத்தில் சொல்லணும்’ என்றார்.
தங்களின் பெயருக்கு அர்ச்சனை செய்துக் கொண்டனர். தங்களின் வீட்டில் வந்து தியாகு தன்னவளுக்கு மாங்கல்யம் சூட்டினான். நல்லவிதமாக இவர்கள் எண்ணியது போலவே.. வில்லேந்திய ராமர் தாமரை பூ ஏந்திய சீதையுமாக.. இருவரும் தாலியில் நிறைந்திருக்க.. அதில் சந்தனம் குங்குமம் வைத்தான் தியாகு. இருவருமாக அங்கிருந்த பிள்ளையார் படத்தின் முன் நமஸ்கரித்து வணங்கினர். சூரியன் தன் கிரணங்களால்.. அவர்களின் இல்லம் வந்து வாழ்த்தினான்.
தியாகு அதை உணர்ந்தான்.. “வா.. நம் வீட்டுக்கு வந்த சூரியனுக்கு ஒரு கும்பிடு போடுவோம்” என மனையாளோடு.. சூரியனையும் வணங்கினர் இருவரும்.
ம்.. வாழ்க்கை எல்லோருக்குமானது. சொந்தபந்தம்.. பணம் காசு.. ஆடம்பரம்.. மாலைகள்.. தோரணங்கள்.. வாழ்த்துகள்.. இல்லையென்றாலும்.. வாழ்க்கை எல்லோருக்கும் உண்டு. சூரியன் உதிப்பதும் மறைவதும் போல.. அது அது அதனதன் போக்கில் சென்று கொண்டுதான் இருக்கும்.