மனம் மறுபடி சரிகிறதே!

1

மாலை மணி 5. லலிதா, கல்லூரியிலிருந்து கிளம்பினாள். சிவப்பு வண்ண ஆக்டிவா எடுத்துக் கொண்டு.. டிராபிக் சாலையில் பயணித்து.. வக்கீல் அலுவலகம் வந்தாள்.

சேலம் பழைய பேருந்துநிலையம் அருகே.. ஒரு வணிக வளாகத்தில் அந்த வக்கீல் அலுவலகம். உள்ளே நுழைந்தாள்.. மணி ஆறு. அங்கே பணிபுரிந்துக் கொண்டிருந்த ஜூனியர் வக்கீல் “வாங்க மேம்.. சார் உள்ளே இருக்கார்” என்றாள் புன்னகை முகமாக.

லலிதாவிற்கு, அந்த புன்னகை வேண்டுமாக இருந்தது. அவளையறியாமலே.. இந்த சூழ்நிலையிலும்.. அவளிடம் ஒரு சின்ன புன்னகை எழுந்தது. முன்பெல்லாம் அவளிற்கே தோன்றும்.. சிலர் சொந்தமில்லாத புன்னகையை ஏன் வலிய சுமந்து மற்றவர்களுக்கு கொடுக்கிறார்கள்.. ஏன் இந்த அரிதாரம் என தோன்றும். ஆனால், இப்போது இந்த நொடி.. அதன் அர்த்தம் விளங்கிற்று ‘என்ன இப்போ சிரிப்போமே.. உலகம் இன்னும் சுழலுகிறதே..’ என இந்த நொடி ஒரு தைரியம் அவளுள் மின்னுமிறது. அதற்குதான் எல்லோரும் புன்னகைக்கிறார்கள் போல. நம்பிக்கையை பரப்ப.. தையரித்தை விதைக்க என புன்னகை பல அர்த்தங்களை கொண்டதென புரிந்தது மங்கைக்கு.

அப்படியே உள்ளே சென்றாள்.. 

வாசுதேவன் தலையசைத்து வரவேற்றார் “உட்காரு லலிதா.. காபி சொல்றேன்” என்றார்.

லலிதா தலையசைத்தாள்.

வாசுதேவன் “வீட்டில் எல்லாம் ஓகேவா..” என்றார்.

“தெரியலை..” என்றாள் நிமிர்ந்து அமர்ந்துக் கொண்டு சலிப்பாக.

வாசுதேவன் “உன் அண்ணனிடம் ஒரு வார்த்தை நான் சொல்றேனே” என்றார்.

“வேண்டாம்.. அப்போது அவர்கள் பேச்சை கேட்கவில்லை.. அதான் போல.. விடுங்கோ. இப்போதும் நான் அவரோட வாழ்ந்ததற்கு எதற்கும் வருத்தப்படலை. சந்தோஷமாகத்தான் இருந்தேன். இப்போது இந்த பிரிவும் ஒரு ரோல்தான் எங்களுக்குள்ள..” என்றாள்.

வாசுதேவன் அவளிடம் ஒரு டாகுமென்ட் எடுத்து வைத்தார்.. அழகான கருப்பு வண்ண கோப்பில்.

இதுவரையில் திடமாக இருந்தவளின் கைகள் அதை தொட்டதும் லேசான நடுக்கம்.. தன் கண்ணாடியை எடுத்து அணித்துக் கொண்டாள் அந்த நேரத்தில் தன்னை சுதாரித்துக் கொள்ள முயன்றாள். நடுக்கம் குறைந்தது. படித்தாள்.

சென்ற மாதம் இந்த தேதியிலிருந்து தியாகராஜன் லலிதா இருவருக்கும்  சட்டரீதியா விவாகரத்து செல்லுபடியாகும். இனி அவர்கள் இருவரும் தனித்தனியாக தங்களின் வாழ்க்கையை வாழலாம் என சமாச்சாராம் இருந்தது.. படிக்கும் போதே.. எழுத்துகளை கண்ணீர் மறைத்தது.

கண்ணாடியை எடுத்துவிட்டு கண்களை துடைத்துக் கொண்டாள்.

இப்போது அந்த ஜூனியர் பெண் காபி கொண்டுவந்தாள்.

லலிதா தன்னை சுதாரித்துக் கொண்டு.. “பர்பெக்ட் டைமிங்..” என சொல்லி காபியை வாங்கிக் கொண்டாள். இப்போது அந்த பெண் புன்னகைக்கவில்லை.

அமைதியாக காபி குடித்தனர்.

வாசு “வீடு செட் ஆகிடுச்சா.. ஏதாவது பிரச்சனையா” என்றார்.

லலிதா “இல்ல.. அண்ணா, ரொம்ப நல்லா பேசுறாங்க ஹவுஸ்ஓனர், மண்ணி என்னைபற்றி சொல்லியதாக சொன்னாங்க.” என்றாள்.

வாசு புன்னகைத்து “தனியாக இருக்கேன்னு நினைக்காத.. எதுவாக இருந்தாலும் கூப்பிடு.. இப்போவெல்லாம் டிவோர்ஸ் பெரிய விஷயமேயில்ல” என்றார். லலிதாவை ஆறுதல்படுத்தும் விதமாக.

லலிதா பதில் சொல்லாமல் அமைதியானாள்.

சற்று நேரத்தில் விடைபெற்று கிளம்பினாள்.

நேராக தன் வீடு வந்தாள். மணி 7க்கு மேல். ஜனனி வந்திருந்தாள் பள்ளியிலிருந்து அன்னையை பார்த்ததும் “ஏன் ம்மா, லேட்” என்றாள்.

“லேட் ஆகிடுச்சி.. ஏதாவது சாப்பிட்டியா” என்றாள். அப்போதே கீழே, பிஸ்கட் கவர் கண்ணில் பட்டது. அன்னை “என்ன இது.. டஸ்ட்பின்’ல போடு..” என்றார்.

ஜனனி அப்போதுதான் படிக்க செல்ல.. இப்போது அன்னை சொல்லவும் சலித்துக் கொண்டே அந்த வேலையை செய்தாள்.

லலிதா.. கனகச்சிதமாக தான் கொண்டு வந்த கோப்பினை சாமி படத்திற்கு முன் வைத்தாள். குளித்து வந்தாள். இரவு உணவு தயார் செய்தாள்.

ஜனனி பத்தாம் வகுப்பு.. எனவே, நடுநடுவே பெண் என்ன படிக்கிறாளா.. எப்போது டெஸ்ட்.. என்ன வேண்டும்.. என பேசிக் கொண்டும்.. பெண் ஒப்புவிக்கும் பாடங்களை கேட்டுக் கொண்டும் இரவு உணவு தயாரித்தாள்.

அதன்பின் துணி மடித்து வைத்து.. ஆங்காங்கே இருந்த சிலபல பொருட்களை எடுத்து வைத்து என.. சின்ன சின்ன வேலைகளை முடித்தாள். இப்போதுதான் இந்த வீடு வந்து ஒருவாரம் ஆகிற்று. அதனால் சாமான்கள் இன்னமும் அதன் இடம் சேராமல் இருந்தது.

அன்னையும் மகளும் உண்ணத் தொடங்கினர்.. அந்த நேரத்தில் ப்ரணவ் அழைத்தான். திருச்சியில் முதல் வருடம் மருத்துவம் படிக்கிறான். அன்னை “சாப்பிட்டியா” என்றார்.

“ம்.. இட்லி, நல்லாவே இல்ல.. எனக்கு ஹாஸ்டல் வேண்டாம்.. எப்போது மாறுவீங்க” என்றான்.

“இரு டா.. இந்த சமஸ்டார் முடியட்டும் இன்னமும் இரண்டு மாசம் இருக்கு.. நீ எதவாது ஆர்டர் போட்டுக்கோ” என்றார்.

மகனுக்கு என்ன சொல்வதென தெரியவில்லை.. இப்படி அன்னையிடம் கேட்பது பிடிக்கவில்லை.. அதே நேரம் இங்கே பொருந்திக் கொள்ளவும் முடியவில்லை.. “சரி நீங்க சாப்பிட்டீங்களா” என்றான்.

அன்னை இந்த கேள்விக்குதான் திக்குமுக்காடி போனார்.. பாவம் மகன் அங்கே சரியாக உண்ணாமல் இருக்க.. என்ன சொல்லுவது என தெரியாமல் விழித்தார்.. “ம்.. டா.. இரு சுமித்ரா ஆன்ட்டி கூப்பிடுறாங்க.. பேசிட்டு உனக்கு கூப்பிடுறேன்” என சொல்லி அழைப்பினை துண்டித்தாள்.

உணவினை விழுங்கினாள் லலிதா. மகளிடமும் ஏதும் காட்டிக் கொள்ள கூடாது என உள்ளே எழுந்து சென்றாள்.

ஜனனி டிவி பார்த்துக் கொண்டே உண்டுக் கொண்டிருந்தாள்.

வேலையெல்லாம் முடித்துக் கொண்டு மகனுக்கு அழைத்தால் லலிதா “சாப்பிட்டியா ஏதாவது” என்றாள்.

அவனும் “வெளிய போய் சாப்பிட்டோம் ம்மா..” என தொடர்ந்தான். “நாங்க நாலுபேர் வீடு பார்க்க போகிறோம் சொல்லிட்டேன்.. இங்கே சீனியர் ஒருத்தர் சொன்னார்.. அவர்கள் அப்பார்ட்மெண்டில் வீடு இருக்காம்.. அடுத்த மாசம் வெக்கேட் பண்றாங்களாம்.. நாங்க அட்வான்ஸ் என்ன எதுன்னு கேட்டிருக்கோம்..” என்றான்.

அன்னை “சரிப்பா.. ஏற்பாடு செய்துக்கலாம். அப்புறம் அப்பாகிட்ட பேசு” என்றார்.

மகனோ “ம்மாஆஅ.. எதற்கு” என்றான் கோவமாக.

“என்ன டா.. இப்படி கேட்க்கிற.. சொல்லணுமில்ல” என்றாள்.

“போம்மா” என சொல்லி அழைப்பினை துண்டித்துவிட்டான். அன்னைக்கு யோசனை.. மகன் தனியே இருக்கிறான்.. படிக்க வேண்டும்.. இதெல்லாம் அவனிடம் சொல்ல கூடாது என்றாலும்.. ஜீவனாம்சம் என பிள்ளைகள் செலவு அவருடையதாகிறது. அத்தோடு.. அவளுக்கு ஒரு பயம் கடந்த இரண்டு வருடங்களாக.. பிள்ளைகள் தங்களின் நெருக்கடிகளை பார்க்கிறார்களே.. ஏதாவது தப்புதண்டா நடந்திடுமோ என பயம். மீண்டும் மகனுக்கு அழைத்தாள்.. அவனும் இரண்டாம் முறை அழைக்கும் போது எடுத்தான்.

அன்னை அதட்டலாக “இங்க பார் ப்ரணவ்.. எனக்கும் அப்பாக்கும்தான் ஒத்துவரவில்லை. நீ அவரிடம் வாரம் ஒருமுறை பேசணும் சொல்லிட்டேன். பீஸ் அவர்தானே கட்டுகிறார்.. அப்புறம் ஏதும் சொல்லாமல் இருப்பியா. போன் செய்யும் போது அவரிடம் சொல்லிடு சொல்லிட்டேன். இப்போ போய் ஒழுங்கா படிக்கிற வழியை பார்” என்றார்.

மகன் “சரி.. சொல்றேன்..” என எரிச்சலாக சொல்லிவிட்டு அழைப்பினை துண்டித்தான்.

கதவினை பூட்டிவிட்டு மகளோடு வந்து அமர்ந்தாள் கட்டிலில். மகளுக்கு தலை கோதிக் கொடுத்தாள்.. ஜனனி உறங்கிவிட்டாள். தானும் கண்களை இறுக்கமாக மூடி உறக்கத்தினை வரவழைக்க முயன்றாள். ஆனால், கண்கள் வலித்தது.. பாதை இதென.. மீண்டும் ஒரு தீர்மானம்.. முன்பாவது நான் ஒருத்தி மட்டும்தான்.. அவனுக்காக, என் பாதையை செய்துக் கொண்டேன். இப்போது பிள்ளைகளோடு நிற்கிறேன்.. அவனில்லை.. ம் அவரில்லை என்னருகே.. என கண்ணில் நீர் வழிந்தது.

எதோ விவாகரத்து இன்றுதானே கிடைத்தது.. இப்போதுதான் தனியாக இருக்கிறாள் என இல்லை. பதினெட்டு மாதங்களுக்கு முன்.. பிள்ளைகளோடு அவளின் தனி வாழ்க்கை தொடங்கிவிட்டது.

கனவில் கூட கண்டதில்லை, சின்ன சின்ன சண்டைகள்.. முரண்பாடுகள்.. உப்புபெறாத கருத்து மோதல்கள்.. எல்லாம் இவ்வளவு பெரிய விவகாரத்திற்கு காரணமாகும் என கனவில் கூட எண்ணியதில்லை லலிதா.

நிமிர்ந்து படுத்துக் கொண்டாள்.. ஆகாயம் மேலே இருக்கிறது என அவனோடு இருந்த போது இருந்த நம்பிக்கை.. இப்போது இல்லை. இந்த மேல்சுவர் எப்போது இடிந்து விழுமோ என பயம் அவள் கண்களில்.. விழித்தேயிருந்தாள். எப்படி பிள்ளைகளை கரை சேர்ப்பேன்.. என மனமெனும் குரங்கு.. இந்த அமைதியான இரவு நேரத்தில்தான் தறிகெட்டு ஓடுகிறது.