மணிப்புறாவும் மாடப்புறாவும் -25(final)

அத்தியாயம் 25(final)

தர்ஷினியை சுடுவதற்காக பாண்டுரங்கன் குறிபார்த்து நின்றிருக்க, அவன் முதுகில் குண்டுகள் துளைத்ததில் கீழே சரிந்தான். மூவர் குண்டடிபட்டு இறந்ததில் அந்த இடமே இரத்த குளமாக காட்சியளித்தது.

தர்ஷினிக்கு இன்பா கொடுத்திருந்த துப்பாக்கியை வீட்டிலிருந்து கிளம்பும் போதே மறக்காமல் எடுத்து வந்திருந்தான். தர்ஷினி இருக்கும் இடத்தை கண்டறிந்து இன்பாவும் சரவணனும் உள்ளே நுழைய, அவர்கள் கண்டது கீழே விழுந்து கிடந்த தர்ஷினியையும் அவளை சுட தயாராக நின்றிருந்த பாண்டுவையும்தான்.

நொடியும் தாமதியாமல் சரவணனுக்கு முன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் பாண்டுவை சுட்டு வீழ்த்தினான் இன்பா.

பாண்டுரங்கனை சுட்டு வீழ்த்திய இன்பா துப்பாக்கியை கீழிறக்கி தர்ஷினியை நோக்கி ஓடினான்.

அருகில் இருந்த நசீரைப் பார்த்து “என்னாச்சுடா?”என கேட்டான்.

“அவன் அடிச்சிட்டான் கீழே விழுந்துட்டா. மயக்கமா இருக்கா போல அண்ணா” என்றான்.

தர்ஷினியின் தலையை தன் மடியில் தாங்கியவன், அவள் கன்னங்களைத் தட்டி “தர்ஷினி… தர்ஷினி…” என எழுப்பினான். அசைவு இருந்தது, ஆனால் கண்களை திறக்கவில்லை.

“இன்பா இங்க எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன். உடனடியா ரெண்டுபேரையும் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணுங்க” என்றான் சரவணன்.

அந்த மருத்துவமனையில், படுக்கையில் இருந்த தர்ஷினி மெல்ல கண்விழிக்க, அவள் கைகளைப் பிடித்துக் கொண்டிருந்த இன்பாவைதான் முதலில் பார்த்தாள். தன் கை பிடித்திருந்த இன்பாவின் கையை அழுந்த பற்றினாள்.

“உனக்கு ஒன்னும் இல்லடி. அதிர்ச்சியில மயங்கிட்ட. நீயும் குழந்தையும் நல்லா இருக்கீங்க” என்றான்.

சிரித்த தர்ஷினி “நசீர் எப்படி இருக்கான்?” என கேட்டாள்.

“நல்ல அடி. ஆனா… பயப்படும்படி ஒன்னும் இல்லை நல்லா இருக்கான்” என்றான் இன்பா.

அருகில் இருந்த லட்சுமி, அவள் கண் விழித்ததை கூறுவதற்காக வெளியே சென்றார். சில நொடிகளில் மொத்த குடும்பங்களும் அறைக்குள் வந்து விட்டனர்.

எல்லோரையும் தர்ஷினி பார்த்தாள். பொதுவாக “நான் நல்லா இருக்கேன்” என்றாள்.

சுப்ரியா அருகில் வர, அவளைப் பார்த்து, “என்னடி நீ பார்த்த மாதிரியே எல்லாம் நடந்திடுச்சா…?” என கேட்டாள்.

சிரித்த சுப்ரியா “அந்த பாண்டுரங்கனும், இன்னும் அவன் ஆளுங்க 2 பேரும்தான் செத்துப் போயிருக்காங்கடி. நீ மயங்கி கீழே விழுந்திருக்க. நான்தான் கன்ஃபியூஸ் பண்ணி எல்லாரையும் கவலைப்பட வச்சிட்டேன்” என்றாள்.

“இல்லடி இதை நீ முன்னாடியே சொல்லலைன்னா… நானும், இன்பாவும் ஜாக்கிரதையா இருந்திருக்க முடியாது” என்றாள். அதை ஆமோதிப்பது போல சிரித்தான் இன்பா.

இப்போது எல்லோருக்குமே எல்லா விஷயமும் தெரிந்து இருக்க, அவர்கள் பேசிக்கொள்வது புரிந்தது.

கூட்டம் போட வேண்டாம் என்று செவிலியர் வந்து கூற, இன்பாவை தவிர மற்றவர்கள் வெளியே சென்றுவிட்டனர்.

“இன்பா” என அழைத்தாள் தர்ஷினி.

“என்னம்மா…?” அந்த குரலில்தான் எத்தனை காதல்…

“என்னை உட்கார வை” என்றாள். நடந்துமுடிந்த நிகழ்ச்சிகளால் உடலும் மனமும் சோர்வாக இருக்கவே, அவளுக்கு உதவி தேவைப்பட்டது. படுக்கையில் சாய்ந்த வண்ணம் உட்காரவைத்தான்.

“நான் ரெண்டு கொலை பண்ணிட்டேன். என்னை அரஸ்ட் பண்ணிடுவாங்களா?” என கவலையுடன் கேட்டாள்.

“யார் சொன்னா? அவனுங்க போதைப்பொருள் கடத்தும் போது ஒருத்தருக்குள்ள ஒருத்தன் சண்டை வந்து மாறி மாறி சுட்டுக்கிட்டு செத்துப் போயிட்டானுங்க. இன்ஃபார்மர் மூலமா தகவல் கிடைச்சு அங்க போன ஏசிபி சரவணன் நேரிலேயே எல்லாத்தையும் பார்த்திருக்கிறார்” எனக்கூறி கண் சிமிட்டினான்.

“அவன் அடிச்சதுக்கு அப்புறம் நான் கீழ விழுந்துட்டேன். அதான் ஞாபகம் இருக்கு. அப்புறம் என்ன நடந்தது?” என கேட்டாள்.

பாண்டுரங்கன் அறைந்த கன்னத்தில் தடம் இன்னமும் இருக்க, “ராஸ்கல்… எப்படி அடிச்சிருக்கான் பாரு” எனக் கூறிக் கொண்டே கன்னத்தை தடவிக் கொடுத்தான்.

எவ்வாறு அந்த இடத்திற்கு வந்தடைந்தார்கள் என்பதை கூறிய இன்பா, “அக்கரைக்கு வந்துட்டோம். அங்க நீ எங்க இருக்கேன்னு டிராக் பண்ணி அங்கேயும் வந்துட்டோம்’ என்றான்

“எப்படி டிராக் பண்ணின? நான்தான் வாட்ச் கட்டிக்கவே இல்லையே?” என கேட்டாள்.

“நேத்து நைட் நீ தூங்குனதுக்கப்பறம் உன்னை பார்த்தேன். வாட்ச் எல்லாம் நீ கட்டியிருக்கல. கழுத்தில் தாலி… அதை தவிர வேற எதுவும் இல்லை” எனக் கூறி கண் சிமிட்டினான்.

பட்டென்று அவன் தோளில் ஒரு அடி வைக்க, அடித்த அவள் கையை பிடித்துக் கொண்டவன், “வலிக்கவே இல்லடி. கொஞ்ச நேரம்னாலும் நானும் செத்துதான் போயிட்டேன்” என்றான்.

“வரவர ரொம்ப டயலாக் பேசுற. விஷயத்தை சொல்லுடா” என்றாள் தர்ஷினி.

“எனக்கு என்னமோ மனசுல உறுத்துச்சு. என்கிட்ட இன்னொரு மைக்ரோ ஜிபிஎஸ் டிராக் டிவைஸ் இருந்துச்சு. அதை உன் தாலி செயின்ல ஃபிக்ஸ் பண்ணிட்டேன். ஆனா அத வச்சு ஒரு கிலோமீட்டர்குள்ள தான் டிராக் பண்ண முடியும். அதை வச்சிதான் நீ இருந்த இடத்தை கண்டுபிடிச்சேன்” என்றவன் பின் நடந்ததையும் விவரித்தான்.

“அடப்பாவி…. நீயுமா…?”

“என்ன நீயுமா…? அவனுங்க எல்லாம் வாழவே தகுதியில்லாதவனுங்க. நீ சொல்வியே… சமுதாயத்துக்கு நல்லது பண்ணனும்னு… அதைத்தான் நம்ம 2 பேரும் பண்ணியிருக்கோம், அவ்வளவுதான். இதுக்கு மேல இதை பத்தி பேசாத” என்றான்.

“நான்தான் சொன்னேன்ல. எனக்கு எதுவும் ஆகாது… எதுவும் ஆக நீ விட மாட்டேன்னு”

“சுப்ரியா சொன்னதிலிருந்து என்ன பாடு பட்டேன்னு எனக்குதான் தெரியும். எதுக்குடி கார்ல போய் ஏறுன?”

“நசீருக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா என்ன பண்றது? என் மனசு சொல்லிச்சு. எனக்கு எதுவும் ஆகாது அப்படின்னு. நசீருக்காகத்தான் ரிஸ்க் எடுத்து போனேன். அதான் நீ ஒரு ஆள ரெடி பண்ணி வீட்டுக்கு வெளில நிறுத்தி வச்சிருந்தியியே… அவன் எப்படியும் என்னை ஃபாலோ பண்ணுவான்னு நினைச்சேன்” என்றாள்.

அவளை முறைத்தானே ஒழிய பதில் ஒன்றும் கூறவில்லை.

“நீ என்னையவே கேள்வி கேட்காதே. சத்ரியன் பென் டிரைவில் என்ன அனுப்பி இருந்தார் தெரியுமா?”

“எல்லாம் தெரியும். உன்னை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி உனக்கு ஒன்னும் இல்லை மயக்கம்தான் அப்படின்னு டாக்டர் சொன்னதுக்கு அப்புறம் நசீரை பார்க்கப்போனேன். அவன்தான் உன்னோட டிரைவ்ல ஏதோ இருக்குன்னு சொன்னான். நான் உடனே பார்த்துட்டு அதை சரவணனுக்கு அனுப்பிட்டேன். அவர் இப்போ டிஜிபியை பார்க்கத்தான் போயிருக்கார்”

“கமிஷனர் ஏதோ ஃபிராடுன்னு சத்ரியன் எழுதியிருந்தாரே…?”

“அதுவும் சரவணன்கிட்டதான் இருக்கு. அதையும் சேர்த்து எடுத்துட்டு போயிருக்கார்” என்றான்.

எல்லாவற்றையும் கேட்டவள், “இன்பா…” என மீண்டும் அழைக்க,

“என்ன பசிக்குதா…?” என சிரித்து கொண்டே கேட்டான். அவள் “ஆமாம்… ரொம்ப…” என கூற, அவன் ஏற்கனவே பஷீரிடம் சொல்லி வாங்கி வந்திருந்த சாப்பாட்டை கொடுத்தான்.

இத்தனை நாட்களாக ஒருவித அலைப்புறுதலோடு இருந்த இன்பாவின் மனம் நிம்மதியடைந்தது.

டிஜிபியிடம் ஆதாரங்களை காட்டினான் சரவணன். அவர் அந்த கேஸை சரவணனிடமே ஒப்படைத்தார்.

அஜந்தா கெமிக்கல் ஃபேக்டரியில் சட்டவிரோதமாக போதைப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. மனிஷ் பாண்டே அந்தத் தொழிற்சாலைக்கு பினாமிதான். உண்மையில் அதன் உரிமையாளர் ரூபானந்தா. ரூபானந்தாவின் ஆசிரமத்தில் அந்தப் போதை பொருட்கள் கை மாற்றப் படுகின்றன.

ஆசிரமத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில், சட்டவிரோதமாக போதை தரும் காளான்களும் வளர்க்கப்படுகின்றன. ரூபானந்தா சாமியார் போர்வையில் திறம்பட சில ஆண்டுகளாக இதை செய்து வந்தான். இதற்கு சில அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் உடந்தை.

மனிஷ் பாண்டே தொழிற்சாலையில் கழிவுகளை சரியான முறையில் வெளியேற்றாமல் போனதை சத்ரியன் கண்டறிந்தார். அந்த விஷயத்தில் மனிஷ் பாண்டே மெத்தனமாகவே இருந்தான். அதன் மூலமாகத்தான் தொழிற்சாலை மூடப்படும் நிலை வந்தது. மீண்டும் திறக்கப்பட்ட உடன் கழிவுகள் சரியான முறையில் வெளியேற்றப்பட்டன. உடனடியாக எல்லாம் சரிசெய்ய படவே சத்ரியனுக்கு சந்தேகமாக இருக்க, என்னவென்று ஆராய, நடக்கும் சட்டவிரோத செயல்களை கண்டுபித்தான்.

லிங்கேஷ் மன அமைதிக்காக ரூபானந்தா ஆசிரமம் செல்ல, அங்குதான் அவனுக்கு போதை மருந்து பழக்கம் உண்டானது. தீய பழக்கங்களிலிருந்து வெளிவர அமெரிக்கா சென்றான். போதை மருந்துகளால் ஏற்படும் சீரழிவுகள் பற்றி அங்கு எடுத்துரைக்கப்பட, இயல்பிலேயே நல்லவனாக இருந்த லிங்கேஷ் குற்ற உணர்ச்சிக்கு ஆளானான். பல இளைஞர்களும் மாணவர்களும் போதை மருந்துக்கு அடிமையாகி இருப்பது அவன் அறிந்த விஷயமே. இதைப் பற்றி கூறி ரூபானந்தாவை இதையெல்லாம் விட்டு விடும்படி எச்சரித்தான். ரூபானந்தா மறுக்கவே இந்த விஷயங்களை வெளிப்படுத்திவிட வேண்டும் என்ற எண்ணத்துடனே இந்தியா வந்தான். ஆனால் ரூபானந்தாவின் கைக்கூலி பாண்டுரங்கன் மூலமாக கொலை செய்யப்பட்டான்.

இவை எல்லாவற்றையும் ஆராய்ந்து, ஆதாரங்களை சேகரித்து கமிஷனரிடம் சத்ரியன் ஒப்படைக்க செல்ல, அந்த கமிஷனரே கருப்பு ஆடாக மாறிப் போயிருந்தார். அதைத் தெரிந்துகொண்ட சத்ரியன், தன்னிடம் இருந்த இன்னொரு ஆதாரங்கள் அடங்கிய பென்டிரைவை ஆட்டோ டிரைவரின் மூலமாக தர்ஷினியின் கையில் கிடைக்குமாறு செய்தான்.

சத்ரியனை கொன்றுவிட்டு, ஆட்டோ டிரைவர் மூலமாக தர்ஷினிக்குத்தான் பென்டிரைவ் அனுப்பப்பட்டிருக்கிறது என்பதை அறிந்துகொண்ட பாண்டுரங்கன் அவன் அடியாட்களிடம் அதை கைப்பற்றுமாறு கூறினான். அவர்கள் தர்ஷினி இருந்த ஏரியாவில் நோட்டம் விட்டுக் கொண்டிருக்க, இவர்களை மீறி அந்தப் பென் டிரைவ் தர்ஷினியின் கைகளில் கிடைத்துவிட்டது.

தர்ஷினி வீட்டில் போலீஸ் பாதுகாப்பு இருப்பதாக மாரி கூறியிருக்க, முன்னேற்பாடாக நசீரை கடத்தி வைத்திருந்தான் பாண்டுரங்கன். அவனைக் காட்டி மிரட்டி, தர்ஷினியையும் கடத்தி விட்டான்.

அன்றே தர்ஷினியும் நசீரும் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். மனிஷ் பாண்டேவை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அடி பொறுக்க முடியாமல் அப்ரூவராக மாறி விட்டான். ரூபானந்தாவின் ஆசிரமம் மூடப்பட்டு அவனும் கைது செய்யப்பட்டான். பள்ளி கல்லூரிகளில் போதை மருந்துகள் சட்டவிரோதமாக சப்ளை செய்யும் தரகர்களும் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இதில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அன்று எல்லா தொலைக்காட்சிகளிலும் இதுதான் தலைப்புச் செய்தியானது. நாட்டையே அதிர செய்த இந்த குற்ற பின்னணியை கண்டுபிடித்த சத்ரியன் இறந்து போனாலும், அவன் என்ன நினைத்தானோ அது நடந்தேறி விட்டது.

சோஃபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த தர்ஷினி, “இந்த போலி சாமியாரை பார்க்கதான் பௌர்ணமி பௌர்ணமி எங்களை எல்லாம் விட்டுட்டு நீங்க ரெண்டு பேரும் போனீங்க…?” என தன் அன்னையையும் அத்தையையும் குறை கூறிக் கொண்டிருந்தாள்.

“ரெண்டு பேரும் போய் பார்த்ததனாலதான் நீ எங்க இருக்கன்னு கண்டுபிடிக்கவே முடிஞ்சது. அவங்கள ஒன்னும் சொல்லாத விடு” என்றான் இன்பா.

“இனிமே கோயிலைத் தவிர வேற எங்கேயாவது யாரையாவது சாமின்னு சொல்லிக்கிட்டு பார்க்க போங்க… அப்புறம் இருக்கு உங்களுக்கு” என்றாள் தர்ஷினி.

லட்சுமியும் பத்மினியும் பாவமாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“ரெண்டு பேரும் பாவம்டி. எவ்ளோ நேரம்தான் இதையே சொல்லி சொல்லி அவங்களை திட்டிக்கிட்டு இருப்ப…? விடேன்” என்றான் இன்பா.

பூரணி தன் கணவர் பிரபஞ்சனுடன் வந்தார். பூரணி உள்ளே வந்துவிட, பிரபஞ்சன் தயங்கி வாசலிலேயே நின்றிருந்தார். பிரபஞ்சன் தயக்கமாய் இன்பாவை பார்க்க, எழுந்து சென்று அவரை கை பிடித்து உள்ளே அழைத்து வந்தான் இன்பா.

“ சாரிடா இன்பா” என பிரபஞ்சன் கூற, “என்ன மாமா இது? இப்படி எல்லாம் பேசி என்னை சங்கடப்படுத்தாதீங்க” என்றான். தர்ஷினியும் அவர்களிடம் இயல்பாகவே பேசினாள்.

“இப்போ இந்த கேஸ் எடுத்து நடத்தினதால எனக்கும் கெட்ட பெயர்” என பிரபஞ்சன் வருத்தமாகக் கூற,

“இன்னும் என்கிட்ட நிறைய பொதுநல வழக்கு போடுறதுக்கு மேட்டர் இருக்கு. நீங்க அதை எல்லாம் வாதாடி ஜெயித்து கொடுங்க. கெட்ட பெயர் எல்லாம் நல்ல பெயர் ஆகிடும்” என தர்ஷினி கூற, மாமா கோபம் அடையப் போகிறார் என இன்பா பார்த்திருக்க, “நல்ல யோசனை தர்ஷினி. நீ என்னன்னு சொல்லு. கேஸ் போட்டுடுவோம்” எனக்கூறி அதிர்ச்சியளித்தார் பிரபஞ்சன்.

மாலையில் களைத்துப் போய் வீடு வந்தான் சரவணன். அவனது களைத்த தோற்றத்தைப் பார்த்து விட்டு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள் சுப்ரியா. குடித்தவன், சோர்ந்து போய் சோஃபாவில் சாய்ந்து கொண்டான். அவனது சட்டையின் பொத்தான்களை நீக்கி சட்டையை கழற்றி விட்டாள்.

சுப்ரியா நகர்ந்து போக, அவளை தடுத்து அமரவைத்து, அவள் மடியில் படுத்துக் கொண்டான். மெல்ல அவன் நெற்றியை அழுத்தி விட்டாள் சுப்ரியா. கண் மூடியிருந்த சரவணன் மனைவியின் அக்கறையில் புன்னகைத்தான்.

சில நிமிடங்கள் அந்த இதத்தை ரசித்தவன், சுப்ரியா கையைப் பற்றி உள்ளங்கையில் முத்தம் வைத்தான்.

“எத்தனை நாள் டயர்டா வீட்டுக்கு வந்து டிரஸ் கூட மாத்தாம, குடிக்கத் தண்ணி தர கூட ஆளில்லாமல் அப்படியே படுத்திருக்கேன் தெரியுமா? நீ வந்ததுக்கு அப்புறம் ரொம்ப நிம்மதியா இருக்கேன்” என்றான்.

சிரித்த சுப்ரியா, “கொஞ்ச நாளைக்குதான் இப்படி வீட்டுக்கு வந்ததும் ஃப்ரீயா நீங்க இருக்கலாம்”

“ஏன் கொஞ்ச நாளைக்கு அப்புறம் என்ன ஆகும்?”

“உங்களுக்கு பையனோ பொண்ணோ பொறந்துட்டா இப்படி ஃப்ரீயா இருக்க விட மாட்டாங்க” என்றாள்.

“பிறக்கிற வரையிலும் ஃப்ரீதானே?” என்றவன் விஷயம் புரிந்தவனாய் எழுந்தமர்ந்து அவள் முகத்தைப் பார்க்க, சுப்ரியாவின் முக மலர்ச்சியே செய்தியை உறுதிபடுத்தியது.

“நான் அப்பா ஆகப் போறேன்னா சுப்ரியா?” என அவள் வாய் மொழியாகவும் உறுதிப்படுத்த சரவணன் கேட்க, ஆமாம் என்பதாய் தலையசைத்தாள்.

இரத்த சொந்தங்கள் என்று யாரும் இப்போது இவர்களுக்கு இல்லாமல் இருக்க, தங்களுக்கென தாங்கள் உருவாக்கிய புதிய உறவில் இருவரும் பூரிப்படைந்தார்கள்.

மாலையில் தர்ஷினியை உட்கார வைத்து திருஷ்டி சுற்றப் போனார் லட்சுமி. இன்பாவையும் பிடித்து இழுத்து தன் அருகில் அமர வைத்துக்கொண்டாள் தர்ஷினி.

“எனக்கு எதுக்குடி?” எனக் கேட்டான் இன்பா.

அவனிடம் கிசுகிசுப்பாக, “ஓவர் ஸ்மார்ட்டா இருக்க. நானே உன்னை ஓவரா சைட் அடிக்கிறேன்னா பாத்துக்கோயேன். அதுவும் அந்த வொயிட் ஷர்ட் பிளாக் பேண்ட்ல மயங்கிதான் போறேன்டா. வெளியில எத்தனை பேர் சைட் அடிப்பாங்க. நீயும் உக்காந்துக்க. உனக்கும் சுத்தி போடட்டும்” எனக் கூற,

“என்னை நீ சைட் அடிக்கிறதே இப்பதாண்டி எனக்கு தெரியுது” என்றவன் வெட்கப்பட்டுக்கொண்டே தலையைக் கோதிக் கொள்ள,

“வேணாண்டா…. இப்படி எல்லாம் பண்ணினா அத்தை இருக்காங்கன்னு பார்க்க மாட்டேன். பச்சக்னு முத்தம் கொடுத்திடப் போறேன்” என தர்ஷினி கூற, இவள் செய்தாலும் செய்வாள் என பயந்துகொண்டே சாதாரணமாக முகத்தை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.

இருவருக்கும் பூசணியில் சூடம் ஏற்றி, அதை சுத்தி லட்சுமி திருஷ்டி எடுக்க,

“தர்பூசணிக்கே பூசணியால சுத்திறியேம்மா…” என கிண்டல் செய்தான் இன்பா.

“சும்மா இருடா” என கடிந்து கொண்டே வெளியே சென்றார்.

“அம்மா நடுரோட்டில் அதை உடைச்சிடாத. உன் மருமக உன்னை போலீஸ்ல புடிச்சுக் கொடுத்திடுவா” என இன்பா கத்த, “அவ முன்னாடியே சொல்லிட்டா நான் ஓரமாதான் உடைக்கிறேன்” என பதிலுக்கு கத்தினார் லட்சுமி.

“என்னை ஓவரா ஓட்டுற இல்ல…? உனக்கு கொடுக்கலாம்னு நெனச்ச முத்தம் கேன்சல்டா காட்டுபூச்சி” எனக் கூறிக் கொண்டே அறைக்குள் சென்றாள் தர்ஷினி.

அவள் பின்னாலேயே வந்த இன்பா, “ என்னடி தர்பூசணி… ஹோட்டல்ல ஆர்டர் கொடுத்துட்டு கேன்சல் சொல்ற மாதிரி சொல்லிட்டு போற…?” எனக் கேட்டான்.

அவளது கைப்பையை ஆராய்ந்து கொண்டிருந்த தர்ஷினி, “டேய் அந்த கன் கொடுடா. நானே வச்சிக்கிறேன்” என்றாள்.

“இனிமே எதுக்குடி அது?”

“இன்னும் எனக்கு கண்ணுக்கு தெரியாத நிறைய எதிரிகள் இருக்காங்கதான். இன்னும் நான் எழுத எழுத எதிரிகள் கூடிக்கிட்டே போவாங்க. ஒரு ஸேஃப்டிக்காக என்கிட்டயே இருக்கட்டும்” என்றாள்.

“உனக்கு கன் வச்சுக்க லைசென்ஸ் அப்ளை பண்ணியிருக்கேன். சீக்கிரம் கிடைச்சுடும். வேற கன் வாங்கித்தரேன்” என்றவன்

“என்னடி கன் கேட்குற அளவுக்கு தைரியம் வந்துடுச்சா?” என கேட்டான்.

“ம்ஹூம்… பயம் வந்துடுச்சு” என்று தர்ஷினி கூற, கேள்வியாய் அவள் முகத்தை பார்த்தான்.

“எங்க எனக்கு ஏதாவது ஆகிடுமோன்னு பயம் வந்துடுச்சு. சாக பயமில்லை. உன்னை தனியா விட்டுட்டு போக பயம். நான் இல்லாம நீ என்ன கஷ்டப்படுவியோன்னு பயம். என் இன்பா அழுதுடுவானோன்னு பயம்” என தர்ஷினி கூற, இன்பா நெகிழ்ந்து போய் அவளைப் பார்த்திருக்க, அவனை நெருங்கி வந்தாள் தர்ஷினி.

“எல்லாத்துக்கும் மேல எனக்கும் ஆசை இருக்கு. இந்த மணிப்புறாவுக்கு மாடப்புறாவை விட்டுட்டு எங்கேயும் பறந்து போற ஐடியா இல்லை” என்றாள்.

இருவரும் நெருங்கி நிற்க, தர்ஷினியின் இடுப்பை வளைத்து தன்னோடு இறுக்கிய இன்பா “சரி கேன்சல் பண்ணின முத்தத்தை இப்ப கொடுடி” என காதலுடன் கேட்டான்.

மாடப்புறாவை முத்தமிட்டது மணிப்புறா.