சில நொடிகளில் எல்லாம் நடைபெற்று விட்டன. காவலர்கள் இன்பாவுக்கும் சரவணனுக்கும் உடனடியாக விஷயத்தை கூற அவர்களும் வந்து விட்டனர்.
“உங்களை எதுக்கு அனுப்பி வச்சேன்? தர்ஷினி காரிலே ஏறுற வரை என்ன வேடிக்கை பார்த்துகிட்டு இருந்தீங்களா? முதல்ல தர்ஷினி வீட்டை விட்டு வெளியே ஏன் அனுப்புனீங்க? இடியட்ஸ்” என காவலர்களை திட்டிக் கொண்டிருந்தான் சரவணன்.
“சார்…. நான் கூட வெளியில இருந்து வாட்ச் பண்ணிக்கிட்டேதான் இருந்தேன். எதுவும் தப்பா இருக்கிற மாதிரி படவே இல்லை. அவங்களுக்கு ஒரு போஸ்ட் வந்துச்சு. அது கூட நான் வெளியில் இருந்தே என்ன யாருன்னு விசாரிச்சேன். அவர் மேல சந்தேகம் எதுவும் இல்லன்னு கன்ஃபார்ம் பண்ணிட்டுதான் அனுப்பினேன். மேடம் அதை பிரிச்சி மொபைல்ல ஏதோ பார்த்துகிட்டு இருந்தாங்க. அப்புறம் ஃபோன்ல பேசினாங்க. திடீர்னு வெளியில வரவும், ஒரு கார் வந்து நின்னுச்சு. நான் யாருன்னு பார்க்கிறதுக்காக நெருங்குறத்துக்குள்ள அவங்க டக்குனு கார்ல ஏறிட்டாங்க. கார் போயிடுச்சு. நான் உடனே அந்த காரை ஃபாலோ பண்ணிட்டு போனேன். இங்கே இருந்து ஒரு கிலோ மீட்டர் கூட போகலை என் வண்டி பங்க்சர் ஆகிடுச்சு. கார் எங்க போனதுன்னு தெரியலை” என்றான் அந்த பிரைவேட் ஏஜென்சியின் டிடெக்டிவ்.
இன்பா தலையில் கை வைத்து கண்களை மூடி சோபாவில் அமர்ந்திருந்தான்.
“இன்பா இப்படி சோர்ந்து உட்கார்ந்திட்டா தர்ஷினிய எப்படி கண்டுபிடிக்கிறது?” என அவனிடம் கடிந்து கொண்ட சரவணன், அந்த “கார் நம்பரை சொல்லுங்க” என டிடெக்டிவ் ஏஜென்சி நபரிடம் கேட்டான்.
“ நோட் பண்ணி வச்சிருக்கேன் சார்” என்றவன் கார் நம்பரை கூறினான்.
சரவணன் கைப்பேசியை எடுத்து கொண்டு தள்ளி நின்று பேச ஆரம்பித்தான். சுப்ரியாவும் வந்துவிட்டாள்.
“என்னடா… தர்ஷினிய யார் கடத்திட்டு போனா? அவ மாசமா வேற இருக்கா… என்கிட்ட காலையிலேயே ஒரு வார்த்தை சொல்லிட்டு போனியா… அவளை வெளியே விட்டிருப்பேனா?” என லட்சுமி அழுதுகொண்டே கேட்க, பத்மினியும் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு அழுதார்.
“ தர்ஷினி வீட்டுக்கு தான் வந்திருக்கா. நீ என்ன பண்ணிக்கிட்டு இருந்த?” என ரஹீம் பாய் நூர்ஜஹானை கடிந்துகொண்டார்.
சாரங்கபாணியும் முருகேசனும் செய்வதறியாது நின்று கொண்டிருந்தனர்.
லட்சுமி பெருங்குரலெடுத்து அழ ஆரம்பிக்க, “கொஞ்ச நேரம் எல்லாரும் அமைதியா இருங்க. அமைதியா இருக்க முடியலன்னா இங்கிருந்து கிளம்புங்க. என்னை டென்ஷன் பண்ணாதீங்க” என கத்தினான் இன்பா.
“இன்பா கோபப்படாதீங்க. கோவத்துல எதுவும் யோசிக்க முடியாது. தர்ஷினிக்கு ஒன்னும் ஆகாது” என்றாள் சுப்ரியா.
“இன்னைக்கு நான் அவளை விட்டுட்டு போயிருக்கவே கூடாது. முட்டாள்தனம் பண்ணிட்டேன். அவளுக்கு நான் கொடுத்த ஜிபிஎஸ் வாட்சை வீட்டுல இருந்ததால கட்டிக்கவே இல்லை. சத்ரியன் ஏதோ பென்டிரைவ் இவளுக்கு அனுப்பி வச்சிருக்கார். அதுக்காகத்தான் இவளை யாரோ எதையோ சொல்லி மிரட்டி கடத்தி இருக்காங்க” என்றவன் சத்ரியன் தர்ஷினிக்கு எழுதிய குறிப்பை காட்டினான்.
பெண்கள் அழுது கொண்டிருக்க, அவர்களை சமாதானம் செய்தாள் சுப்ரியா. எதேச்சையாக டீபாயை பார்க்க அங்கு ஒரு புத்தகம் தென்பட்டது. அதை கையில் எடுத்தாள். புத்தகத்தின் பின் அட்டையில் கருடனின் படம் சிறியதாக போடப்பட்டிருந்தது.
“இன்பா நான் பார்த்த கருடன் படம் இதுதான்” என புத்தகத்தைக் காட்டி கூறினாள். சரியாக அந்த நேரம் சரவணனும் கைப்பேசியில் பேசிவிட்டு வந்துவிட்டான்.
ஸ்ரீ ரூபானந்தா சுவாமிகளின் ஆசிரமத்தில் இருந்து கொடுக்கப்பட்ட புத்தகம் அது. கையில் வாங்கிய இன்பா, லட்சுமி பத்மினி இருவரையும் பார்த்து “இந்த மாதிரி படத்தை அந்த ஆசிரமத்தில் பார்த்திருக்கீங்களா?” என கேட்டான்.
“இது அந்த ஆசிரமத்தோட நிறைய இடங்கள்ல வரைஞ்சு வச்சிருப்பாங்க. அங்கேயே இருக்கிற சில தொண்டர்கள் அவங்க கையில் பச்சை குத்தி இருக்கிறவையும் பார்த்திருக்கிறேன்” என்றார் பத்மினி.
“அந்த ஆசிரமத்தோட ஆள்தான் யாரோ தர்ஷினிய கடத்தி இருக்கணும். சத்ரியன் அந்த ஆசிரமம் சம்பந்த பட்ட எதையோ பென் டிரைவ்ல சேவ் பண்ணி வச்சிருந்திருக்கணும். அதான் தர்ஷினிய கடத்தியிருக்காங்க”
“இவர் சொன்ன இன்னோவா கார் இன்னும் சிட்டி லிமிட்சை தாண்டலை. தர்ஷினியோட ஃபோன் ஐஎம்இஐ(imei) நம்பர் வச்சி ட்ரேஸ் பண்ணினதுல சோழிங்கநல்லூரில் இருந்த ஒரு டஸ்ட்பின் ல இருந்து கிடைச்சிருக்கு” என்றான் சரவணன்.
“அப்போ அந்த ஆசிரமத்துக்கு போய் தர்ஷினிய தேடி பார்க்கலாமா?”
“இல்லை இன்பா. ஆசிரமம் காஞ்சிபுரத்தில் இருக்கு. எல்லா செக்போஸ்ட்ல டோல்கேட்ஸ்ல செக் பண்ண சொல்லிட்டேன். கார் சோழிங்கநல்லூர் டோல்கேட் கிராஸ் பண்ணி இருக்கு. அதுக்கப்புறம் எங்கேயும் கார் போகலை” என்றான் சரவணன்.
“தர்ஷினிய வேற எங்க வச்சிருப்பாங்க? அவள எங்க வச்சிருப்பாங்கன்னு ஒரு ஐடியா கிடைச்சதுன்னா அவளை ஈசியா என்னால ட்ரேஸ் பண்ண முடியும்” என்றான் இன்பா.
அங்கிருந்த காவலர்களில் ஒருவர், “என் பொண்டாட்டியும் ரூபானந்தாவோட பக்தை. ஒவ்வொரு பௌர்ணமிக்கும் ஆசிரமம் போவா. அப்படி எப்பவாவது போக முடியலைன்னா அங்கங்க அந்த ஆசிரமத்தோட மடம் இருக்கும். அங்க போவா. அந்த ஆசிரமத்துக்கு நிறைய இடத்தில மடங்கள் இருக்கு” என்றான்.
சரவணன் உடனடியாக கைப்பேசியில் யாரிடமோ பேசிவிட்டு, “சோழிங்கநல்லூர் தாண்டி அக்கரையில் ஒரு மடம் இருக்கு. நம்ம அங்க போகலாம் இன்பா” என கூற, உடனே செல்லத் தயாரான இன்பா, ஏதோ நினைத்து அறைக்குள் சென்று நிமிடத்தில் திரும்பினான்.
“வாங்க போகலாம்” என சரவணனிடம் கூற, அவர்கள் அக்கரை நோக்கி புறப்பட்டனர்.
ஆள் அரவமற்ற அந்த சாலையில், புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருந்த அந்த கட்டிடத்திற்குள் மாரியும், தாஸும் தர்ஷினியை அழைத்துச் சென்றார்கள்.
நசீருருக்கு பக்கத்திலேயே மற்றொரு நாற்காலியில் அவளையும் கட்டி வைத்தனர். நசீர் மயக்கத்தில் இருந்தான்.
“நான்தான் பென்டிரைவை கொடுத்துட்டேனே… அவனை விட்டுடுங்க. ப்ளீஸ்…” என்றாள் தர்ஷினி.
“பென் டிரைவ் மட்டும் போதும்னா உன்னை எப்பவோ விட்டிருப்போம்” என்ற மாரி, தாஸைப் பார்த்து “அண்ணனுக்கு போன் பண்ணுடா இங்க தானே இருக்கேன்னு சொன்னார். எங்க காணோம்?” எனக் கேட்டான்.
“இங்கதாண்டா இருக்கேன்” என கூறிக்கொண்டே கையில் ஒரு துப்பாக்கியுடன் வந்தான் பாண்டுரங்கன்.
அவனிடம் பென்டிரைவை மாரி கொடுக்க, அவனுடைய மொபைலில் போட்டு ஓட்டிப் பார்த்தான். அந்த பென் டிரைவை கீழே வைத்து, அருகில் இருந்த சுத்தியலால் அடித்து நொறுக்கினான்.
தர்ஷினியை பார்த்து, “பொம்பளையா அடக்கமா வீட்டில் இல்லாம பத்திரிகையில ஓவரா கூவுனது நீதானே…? வேற பேர்ல எழுதினா எங்களுக்கு தெரியாதுன்னு நினைச்சிகிட்டியா? பணத்துக்காக பல் இளிக்கிறவங்க நிறைய பேர் இருக்காங்க” என்றான் பாண்டுரங்கன்.
தர்ஷினிக்கு சாம்பசிவத்தின் நினைவு வந்தது.அவன்தான் மணிப்புறா யார் என்பதை கூறியிருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டாள்.
“இனிமே நான் எதுவும் எழுத மாட்டேன். எங்களை விட்டுடு” என கெஞ்சுதலாய் கூறினாள் தர்ஷினி.
“எங்க கிட்ட வந்துட்டா அப்புறம் ஸ்ட்ரைட்டா மேலதான் போகணும். ரெண்டு பேரையும் முடிச்சு நடுக்கடலில் போட்டுடலாம்” என மாரி,தாஸ் இருவரையும் பார்த்து கூறினான் பாண்டுரங்கன்.
தர்ஷினி அப்பொழுதுதான் பாண்டுரங்கனை நன்றாக உற்று கவனித்தாள். அவனுடைய கழுத்தில் கருடன் படம் போட்ட டாலர் இருந்தது. உடனே அவன் இரண்டு கைகளையும் பார்க்க, வலது கையில் கருடன் பச்சை குத்தப்பட்டு இருந்தது. சுப்ரியா பார்த்தது என்பது தெரிந்ததும், இதை ரூபானந்தா ஆசிரமத்தில் பார்த்த நினைவே அப்போதுதான் தர்ஷினிக்கு வந்தது.
மனதிற்குள் திகில் பரவினாலும், இன்பா அவளுக்கு கூறியிருந்த வார்த்தைகளை நினைவுபடுத்தி, பயத்தை அடக்கி, என்ன செய்யலாம் என யோசிக்க ஆரம்பித்தாள்.
“எங்களை கொன்னாலும் இந்த உண்மை எல்லாம் வெளியில வரதான் போகுது” என்றாள் தர்ஷினி.
பாண்டு அவளை பார்க்க, “இந்தப் பெண் டிரைவில் இருந்தது எல்லாத்தையும் கூகுள் ட்ரைவில் சேவ் பண்ணி இருக்கேன். எப்படியும் உண்மை வெளியில் வரும்” என்றாள்.
ஆத்திரத்தில் அவள் கழுத்தை நெறித்தான் பாண்டு. தர்ஷினி மூச்சு விட சிரமப் பட, லேசாக கண்களைத் திறந்த நசீர், “அவளை எதுவும் செய்யாதீங்க. ப்ளீஸ்” என மெல்ல முனகினான்.
“நான் கரெக்டாதான் சொல்றேன். நீதான் ஏதோ தப்பா போடுற. என் கட்டை அவிழ்த்து விடு. நானே ஓபன் பண்ணி டெலிட் பண்றேன்” என்றாள்.
“வேணாம்ண்ணா… இவ ஏதோ ப்ளான் பண்றா” என்றான் தாஸ்.
“நான் ஒரு பொண்ணு. நீங்க மூணு பேரு இருக்கீங்க. என் ஃப்ரெண்ட்ட வேற கட்டி வச்சிருக்கீங்க. என்ன செய்ய முடியும் என்னால…” என கேட்டாள்.
பாண்டு அவளது கட்டுகளை அவிழ்த்து விட சொன்னான். மாரி கட்டுகளை அவிழ்த்து விட்டான். பாண்டுவிடமிருந்து கைப்பேசியை வாங்கிக்கொண்ட தர்ஷினி, டிரைவை திறக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். பெண்தானே என அலட்சியமாக நின்று கொண்டிருந்தான் பாண்டு.
சமயம் பார்த்து தர்ஷினி பாண்டுவின் வயிற்றில் குத்த அவன் நிலைகுலைந்தான். நொடியில் அவன் கையில் இருந்த துப்பாக்கியை பறித்துக் கொண்டாள். பாண்டுவின் முன்னால் துப்பாக்கியை நீட்டி,
“கிட்ட யாராவது வந்தா இவனை சுட்டுடுவேன்” என மிரட்டினாள். மூவரும் அதிர்ந்து போய் நிற்க, நசீரை கட்டியிருந்த கயிற்றை மாரியைக் கொண்டு அவிழ்த்துவிட செய்து, பாண்டுவை அதே நாற்காலியில் அமரவைத்து கட்ட சொன்னாள்.
நசீர் அரை மயக்கத்தில் இருந்தவன், கட்டவிழ்ந்த பிறகு, சோர்வாக இருந்தாலும் சுயநினைவு பெற்றிருந்தான்.
“நசீர் அந்த ஃபோனை எடுத்து இன்பாவுக்கு கால் பண்ணு… சீக்கிரம்…” என்றாள்.
“தர்ஷினி நம்ம இங்கிருந்து போயிடலாம் வா” என அழைத்தான் நசீர்.
“இவங்களை அப்படியே விட்டுட்டு போக முடியாது. என் கையில தான் கன் இருக்கே. நீ கால் பண்ணு” என்றாள்.
முதலில் அதிர்ந்து போன பாண்டுரங்கன், இப்பொழுது கொஞ்சம் யோசித்து, “டேய் மாரி துப்பாக்கியை கையில் வச்சிருந்தா அவளுக்கு சுட தெரிஞ்சிடுமா? போ… போய் ஒரு அறை குடுத்து கன்னை பிடுங்கு” என்றான்.
மாரி தர்ஷினியை நெருங்கிவர, தாஸ் பாண்டுரங்கனின் கட்டுகளை அவிழ்த்து கொண்டு இருந்தான். தன்னை நெருங்கி வரும் மாரியை பார்த்தவள், ஒரு நொடி தயங்கினாள். இன்பாவையும் தன் வயிற்றில் இருக்கும் சிசுவையும் நினைத்துக்கொண்டாள். கண்களை மூடி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு துப்பாக்கியால் சுட்டாள். தர்ஷினி கண்களைத் திறக்க மாரி இடதுபக்க நெற்றியின் ஓரமாய் குண்டை வாங்கி இறந்து போய் கீழே விழுந்தான். நசீர் அதிர்ச்சி அடைந்து நின்றான்.
தாஸ் பாண்டுவின் கட்டுகளை நீக்கி இருக்க, அவர்களை நோக்கி துப்பாக்கியை காட்டினாள். தாஸ் பயந்துபோய் இருக்க, அவனை தனக்கு முன்னால் கவசம் போல் நிறுத்திய பாண்டு தர்ஷினியை நெருங்கி வந்தான். மீண்டும் கண்களை மூடி தர்ஷினி சுட தாஸ் குண்டுகளை அவன் உடம்பில் தாங்கிக் கொண்டான். அவளை நெருங்கிவிட்ட பாண்டு அவளது கன்னத்தில் ஓங்கி அறைய, துப்பாக்கி ஒரு மூலையில் விழ தர்ஷினியும் கீழே விழுந்தாள்.
சடலமாக இருந்த தாஸை கீழே விட்ட பாண்டு துப்பாக்கியை கையில் எடுத்துக் கொண்டான். நடந்து போன சம்பவங்களின் வீரியத்தாலும், கீழே விழுந்த அதிர்ச்சியாலும், பயத்தாலும் தர்ஷினி மயங்கிப் போயிருந்தாள்.
“தர்ஷினி…” என அழைத்துக் கொண்டே கீழே விழுந்து கிடந்த தர்ஷினியை நோக்கி நசீர் செல்ல, தர்ஷினிக்கு குறி வைத்து அவளை சுட தயாராக நின்றிருந்தான் பாண்டுரங்கன்.