மாலை நேரம் தோட்டத்துச் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள் தர்ஷினி. அவளுக்கு அருகில் நின்று கொண்டிருந்த இன்பா, “நீ கொஞ்ச நாள் ஆஃபீஸ் போகாம வீட்டிலேயே இருக்கியா?” என கேட்டான்.
“நீ பரீட்சித்து மகாராஜா கதை கேள்விப்பட்டு இருக்கியா? எங்க இருந்தாலும் நடக்கிறது நடக்கும். கவனமா இருந்துக்குறேன். வீட்டிலேயே எல்லாம் இருக்க சொல்லாத… ப்ளீஸ்” என்றாள்.
“நீ இதுக்கு ஒத்துக்க மாட்டேன்னு தெரியும். கேட்டுப் பார்ப்போமேன்னு கேட்டேன். மணிப்புறாங்கற பேர்ல எழுதறதையாவது கொஞ்ச நாளைக்கு நிறுத்தி வை” என்றான்.
“அதெல்லாம் முடியாது இன்பா. பத்திரிக்கை துறையில ஏதாவது சாதிக்கணும் அப்படிங்கிறது என்னோட நெடுநாள் கனவு. இப்பதான் எனக்கு ஜாப் சாடிஸ்ஃபேக்சன் கிடைச்சிருக்கு. என்னை இதை நிறுத்த சொல்லாத” என்றாள்.
“நமக்கு ஒரு ஆபத்தும் வருதுன்னு தெரியும் போது அது வராமலிருக்க கொஞ்ச நாள் உன் பிடிவாதத்தை விட்டுக் கொடுக்கக் கூடாதா?”
“நீ சொல்ற மாதிரி எனக்கு பிடிச்சதை செய்யாம வீட்டிலேயே முடங்கிக் கிடந்தா ரொம்ப ஸ்ரெஸ் ஆகிடும். இதுக்கு சாவே பரவாயில்லைன்னு….” என தர்ஷினி பேசிக்கொண்டிருக்க,
“ஷட் அப் தர்ஷினி…” என கோபமாக கத்தியவன் உள்ளே சென்று விட்டான். மனதின் பாரம் அழுத்த பெரிய மூச்சுகள் எடுத்து வாய் வழியே விட்டு தன்னை சாதாரணமாக்கி கொள்ள முயன்று கொண்டிருந்தான் இன்பா. அவனை பின்னாலிருந்து அணைத்தாள் தர்ஷினி.
“சாரி…” என்றாள்.
தன் இடுப்பை சுற்றி வயிற்றில் பிணைந்திருந்த தர்ஷினியின் கைகளை பிடித்து விலக்க முயல அவள் இன்னும் இறுக்கினாள். அவன் முதுகில் தன் கன்னம் வைத்து அழுத்தியவள் “கோவப்படாத ப்ளீஸ்” என்றாள்.
“சரி விடு” என்றான்.
“நீ கோவமா இருக்க. அதான் விட சொல்ற. நான் விடமாட்டேன்” என்றாள்.
“கோபம் எல்லாம் இல்லடி. இப்படி வா” என தனக்கு முன்னால் அவளை இழுத்து நிறுத்தியவன், “நான் சொல்றத நீ கொஞ்சம் கேட்கணும் தர்ஷினி. உன் உயிர் மட்டும் இல்லை. நம்ம குழந்தையோட உயிர்… ஏன் என்னோட உயிர் கூட உன்கிட்டதான் இருக்கு. நீ நெனச்சத தைரியமா செய்யலாம். கொஞ்சம் பொறுமையா இருன்னுதான் சொல்றேன்.நீ ஆஃபீஸ் போ. இனி நான்தான் உன்னை கூட்டிட்டு போவேன். நான்தான் உன்னை அழைச்சிட்டு வருவேன். நீ ஆஃபீஸ்லதான் இருக்கணும் ஃபீல்டு எங்கேயும் போகக்கூடாது”
தர்ஷினி மறுத்துப் பேச வாய் திறக்க, “நீ ஒத்துக்கலைன்னா இந்த ரூம்லயே வச்சு உன்னை பூட்டிடுவேன்” என்றான்.
“கொஞ்ச நாளைக்குதான் தர்ஷினி. சுப்ரியா பார்த்த ஆள் யாருன்னு தெரிஞ்சிட்டா… அப்புறம் நீ ஃப்ரீயா உன் வேலையை செய்யலாம்” என்றான்.
சரி என ஒத்துக் கொண்டாள் தர்ஷினி.
“இதுவரைக்கும் உன்கிட்ட ஏதாவது மிரட்டற மாதிரி யாராவது பேசி இருக்காங்களா?” என கேட்டான்.
“என்கிட்ட பேசினது இல்லை. ஆனா மணிப்புறாங்கற பேர்ல நான் எழுதிய ஆர்டிகல்ஸ்க்கு நிறைய பேர்கிட்ட இருந்து ஆஃபீஸ்க்கு மிரட்டல் வரும். நான்தான் மணி புறங்கிறது யாருக்கும் தெரியாது இல்லையா?”
“இது வரைக்கும் தெரியாது இனிமே தெரிய வரலாம். நீ யார்கிட்ட இருந்து எல்லாம் எதிர்ப்பு வந்ததுன்னு லிஸ்ட் ரெடி பண்ணி கொடு”
“இவனை நான் படுத்தலாம்னு பார்த்தா… இவன் என்னை படுத்துறான்” என முணுமுணுத்துக் கொண்டே லிஸ்ட் தயார் செய்ய ஆரம்பித்தாள் தர்ஷினி.
“நீ ரெடி பண்ணி வை. நான் வெளியில போயிட்டு வந்துடுறேன்” எனக்கூறி வெளியே கிளம்ப தயாரானான்.
“என்னை லீவ் போட சொல்லிட்டு நீ எங்க வெளில போற?” என கேட்டாள்.
“போயிட்டு வந்து சொல்றேன். நீ வீட்டை விட்டு எங்கேயும் வெளியில் போகக்கூடாது. ஃபோன் பக்கத்திலேயே இருக்கணும்” எனக் கூறி வெளியில் சென்று விட்டான்.
இரவில் தாமதமாகத்தான் வீட்டிற்கு வந்தான் இன்பா. தர்ஷினியை தவிர மற்றவர்கள் உறங்கி விட்டார்கள். ஏற்கனவே சாப்பிட்டிருந்தாலும் இன்பாவுடன் அமர்ந்து கொஞ்சமாக மீண்டும் சாப்பிட்டாள்.
அறைக்கு வந்தவன் “லிஸ்ட் எங்க?” எனக் கேட்டான். ஒரு காகிதத்தை எடுத்து தர்ஷினி நீட்ட வாங்கிப் பார்த்தான்.
“என்னடி இது? மளிகை கடை லிஸ்ட் மாதிரி இவ்ளோ பேரு…?”
கண்களை மூடி பெருமூச்சு விட்டவன், அந்த காகிதத்தை பத்திரப் படுத்தினான்.
வீட்டிற்கு வரும்பொழுது கொண்டு வந்திருந்த பையிலிருந்து, ஒரு கைக்கடிகாரத்தை எடுத்து அவளிடம் காட்டினான்.
“என்னடா இது கிஃப்ட் எல்லாம்?”
“தர்ஷினி… இந்த வாட்ச் நீ வீட்டைத் தவிர வேற எங்க வெளியில போறப்பவும் எப்பவும் கட்டியிருக்கணும், கழட்டக்கூடாது. இதுல ஜிபிஎஸ் டிவைஸ் இருக்கு. நீ இருக்கிற இடத்தை எப்பவும் நான் டிராக் பண்ணிக்கலாம்” என்றான்.
அவளது கைப்பையை எடுத்து அந்த கைக்கடிகாரத்தை அதில் வைத்தான். தான் கொண்டு வந்திருந்த பையிலிருந்து சிறிய ஸ்ப்ரே ஒன்றை எடுத்து அவளிடம் காட்டி, “இதை ஸ்பிரே பண்ணினா எதிரே உள்ளவங்க மயக்கம் ஆயிடுவாங்க. யாராவது உனக்கு தொந்தரவு பண்ண வந்தா யோசிக்காத உடனே யூஸ் பண்ணிடு” எனக் கூறினான்.
அதைக் கையில் வாங்கிக் கொண்டவள் “சரியா ஒர்க் ஆகுதான்னு செக் பண்ணி பார்க்கவா?” என அவனது முகத்தில் அடிக்கப் போக, “விளையாடாம இரும்மா ப்ளீஸ்” என்றான்.
அந்த ஸ்பிரேயை கைப்பையில் பத்திரப்படுத்திக் கொண்டாள்.
“இதையும் வச்சுக்க” என அவளிடம் இன்பா நீட்டிய பொருளைப் பார்த்து தர்ஷினி அதிர்ந்தாள். இன்பாவின் கையில் கைத்துப்பாக்கி ஒன்று இருந்தது.
“என்னடா இது?” என பயத்துடன் கேட்டாள்.
“பயப்படாத தர்ஷினி. உனக்கு ஏதாவது ஆபத்துன்னா ஒரு நொடி கூட யோசிக்காத… உனக்கு ஆபத்து ஏற்படுத்தப் போறவன் கண்டிப்பா கெட்டவன். பயப்படாம இதால சுட்டுடு”
“சுட்டுட்டு என்னை ஜெயிலுக்கு போக சொல்றியா?”
“நான் போக விட்டிடுவேனாடி? நீ தைரியமா சுடு. நான் பார்த்துக்குறேன்” என்றான்.
“வேணாண்டா… இது எனக்கு வேண்டாம். இதையெல்லாம் உனக்கு எங்கேயிருந்து கிடைக்குது? போய் திருப்பி கொடுத்துடு” என்றாள்.
“இங்க பாரு இது உன்னோட பாதுகாப்புக்கு மட்டும் இல்லை. நம்ம குழந்தையோட பாதுகாப்புக்கு. உனக்கு ஏதாவது ஆச்சுன்னா நம்ம குழந்தைக்கும்…” என்றவன் சொல்லாமல் நிறுத்தி, “பயப்படாத தர்ஷினி தற்காப்புக்காகதானே நீ செய்ற. கன் வச்சுக்க லைசன்ஸ் வாங்க டைம் எடுக்கும். இதை வச்சுக்க. உன்கிட்ட இது இருக்கிற விஷயம் யாருக்கும் தெரிய கூடாது” எனக்கூறி அதை அவளது கைகளில் திணித்தான்.
இவ்வளவு நேரம் இருந்த விளையாட்டுத்தனம் போய் கலக்கமாக இன்பாவை தர்ஷினி பார்க்க, “எதுக்கும் யாருக்கும் பயப்படாதே தர்ஷினி. பயம் உன்னை யோசிக்க விடாம செஞ்சிடும். கடைசி நொடியில் கூட நீ தப்பிக்க சேன்ஸ் கிடைக்கும். என்ன ஆபத்து வந்தாலும் எனக்கு தெரியப்படுத்தனும். அப்படி எனக்கு தெரிய படுத்த முடியாட்டாலும் பதட்டப்படாம… பயப்படாம எப்படி தப்பிக்கலாம்ன்னு மட்டும் யோசி. நீ தப்பிக்க என்ன வேணா செய்”
அவள் முகம் கொஞ்சம் தெளிவடைந்தது போல இருந்தது.
“என் தர்ஷினி எவ்வளவு தைரியமான பொண்ணு. உன்னால எதுவும் செய்ய முடியும். யாரையும் சமாளிக்க முடியும்” எனக்கூறி தன் தோளோடு அணைத்துக் கொண்டான்.
“இது என்னடா தீபாவளி துப்பாக்கி மாதிரி இல்லை. எப்படி இதுல சூட் பண்றது?” என கேட்டாள்.
அந்த துப்பாக்கியை எவ்வாறு இயக்க வேண்டும் என்று அவளுக்கு விளக்கிக் கூறினான்.
தர்ஷினிக்கு வியர்த்து வழிந்தது. அவளுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தவன், “நீ ஸ்ட்ராங்ன்னு எனக்கு தெரியும். ஆனா எதிரிகள்கிட்ட நீ ஸ்டார்ங்ன்னு காட்டிக்க வேண்டாம். அப்பதான் அவங்க அசட்டையா இருப்பாங்க. புரிஞ்சுதா?” என்றான்.
“ம்…” என்றாள்.
“சரி தூங்கலாம் வா” என்றான்.
“சத்தியமா எனக்கு தூக்கம் வராதுடா”
“எல்லாம் வரும். நான் தூங்க வைக்கிறேன் வா” என்றவன், அவளைப் படுக்க வைத்து, அவள் அருகில் படுத்து, அவளின் தலை கோதி, இமை நீவி மெல்ல தூங்கவும் வைத்தான்.
அடுத்த நாள் அலுவலகத்தில் அவனை கொண்டு வந்து விட்டவன், செங்கதிர் பத்திரிக்கை முதன்மை ஆசிரியர் வெங்கட்ராகவனை சந்தித்து பேசினான். அவரிடம் எல்லாவற்றையும் விளக்கிக்கூற, அவரும் அதிர்ச்சி அடைந்தார்.
“கொஞ்ச நாளைக்கு தர்ஷினிக்கு பிரச்சனை வர மாதிரி எதுவும் எழுதாம நான் பார்த்துகுறேன்” என உறுதியளித்தார். நசீரிடம் மட்டும் இன்பா இந்த விஷயத்தை கூறி எச்சரித்திருந்தான்.
தனியார் டிடெக்டிவ் நிறுவனம் மூலமாக தர்ஷினிக்கு ஷாடோ ப்ரொடக்ஷன் அளிக்கவும் ஏற்பாடு செய்திருந்தான். இப்படியாக இன்பாவுக்கு தோன்றிய எல்லா வகையிலும் தர்ஷினிக்கு பாதுகாப்பு அளித்திருந்தான்.
சுப்ரியாவிடம் பேசி அவள் பார்த்த ஆளை பற்றி விசாரித்தான். நிழல் உருவமாக இருந்ததால் அவளால் சரியாக எந்த அடையாளத்தையும் கூற முடியவில்லை. சரவணன் எந்த நேரம் வேண்டுமென்றாலும் எந்த உதவி வேண்டுமென்றாலும் செய்ய தயாராக இருப்பதாக உறுதி கூறினான்.
இவற்றை மீறி எதுவும் நடந்து விடாது என அசட்டையாக இல்லாமல் எப்பொழுதும் விழிப்புடன் இருந்தான் இன்பா.
“என்ன நடந்தாலும் நீ என்மேல வச்சிருக்கிற காதல் என்னை உன்கிட்ட இருந்து பிரிக்கவே பிரிக்காது” என்றாள் தர்ஷினி.
அவளைப் பார்த்து சிரித்தானே ஒழிய பதில் எதுவும் கூறவில்லை.
தர்ஷினி மணிப்புறா என்ற பெயரில் மக்களுக்கு தெரியாத விஷயங்களை எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருந்தாள். எந்தவிதமான பிரச்சனைகளைப் பற்றியும் எழுதவில்லை. அதனால் முன்புபோல அலுவலகத்துக்கு மிரட்டல்களும் வருவது இல்லை.
நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. தர்ஷினிக்கு மூன்றாவது மாதம் முடியும் நிலையில் இருந்தது. அன்று விடுமுறை தினம் என்பதால் எல்லோரும் வீட்டில் இருந்தனர். ரவி அவனது நண்பனுக்கு பிறந்தநாள் என்று அதற்காக கிளம்பி சென்று விட்டான். ரம்யாவின் வகுப்பில் படிப்பவனாக இருந்தாலும் ரம்யாவுக்கு அந்த நண்பன் அவ்வளவு பழக்கம் இல்லை என்பதால் அவள் செல்லவில்லை. சுபாஷினி செல்ல முருகேசன் அனுமதிக்கவில்லை. அதனால் ரவி மட்டும் சென்றிருந்தான்.
பள்ளியைத் தவிர வெளியில் எங்கு சென்றாலும் அவன் கைப்பேசி எடுத்து செல்வான். இரவு நேரம் பத்தை கடந்தும் வராததால் இன்பா அவனுக்கு அழைத்தான். வந்துவிடுவதாக கூறி வைத்து விட்டான்.
இன்பா தன் அன்னையை உறங்கச் சொல்லி விட்டு ரவிக்காக காத்துக் கொண்டிருந்தான். தர்ஷினியும் அவனுடன் அமர்ந்து கொண்டாள்.
“நீ கண் விழிக்க வேண்டாம். போய் தூங்கு” என்றான்.
“ரவி வரட்டும். எனக்கு தூக்கம் வரலை” என்றாள்.
வற்புறுத்தி சொன்னாலும் அவள் கேட்க மாட்டாள் என்று உணர்ந்து இன்பா விட்டுவிட்டான். இருவரும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
11 ஆகியும் ரவி வராமல் போகவும் மீண்டும் அவனுக்கு அழைத்தான் இன்பா.
ரவியின் குரலில் வித்தியாசம் தென்பட இன்பா புருவம் நெறிதான். குடித்து இருப்பானோ என சந்தேகம் கொண்டான்.
கைப்பேசியை வைத்துவிட்டு யோசனையாக இன்பா இருக்க, “என்ன…?” எனக் கேட்டாள் தர்ஷினி.
“வந்துட்டு இருக்கான்” என மட்டும் சொன்னான்.
தர்ஷினி அவனது தோளில் சாய்ந்தபடியே தூங்கிவிட்டாள். அவளை தூக்கி கொண்டு போய் படுக்கையில் படுக்கவைத்தான். அவளுக்கு போர்வையைப் போர்த்திவிட்டு, வெளியே செல்ல பார்க்க, அவனது கையைப் பற்றிக் கொண்டாள்.
“ரவி வந்தா காலிங் பெல் அடிப்பான். இல்லைனா ஃபோன் பண்ணுவான். என் கூட கொஞ்ச நேரம் படு” என்றாள். அவள் கேட்டவிதம் இன்பாவுக்கு மறுக்க முடியாமல் போக, அவளுடன் படுத்துக்கொண்டான். தர்ஷினி உறங்க, தன்னை அறியாமல் இன்பாவும் உறங்கிவிட்டான்.
உறங்கிக்கொண்டிருந்த தர்சஷினிக்கு, ஓய்வறை செல்லவேண்டும் போல இருக்க சென்று வந்தாள். நேரத்தைப் பார்த்தாள். இரண்டை நெருங்கிக்கொண்டிருந்தது. ‘ரவி வந்துட்டானா.? இன்பா எழுந்து போன மாதிரியே தெரியலையே…?’ என நினைத்துக்கொண்டே ரவியின் அறைக்கு சென்று பார்த்தாள். அவன் இன்னும் வந்திருக்கவில்லை. தாமதிக்காமல் இன்பாவை எழுப்பினாள்.
இன்பா கண் விழிக்கவும், “ரவி இன்னும் வரலை” என்றாள்.
அவனும் பதறி எழுந்து விட்டான். ரவியின் கைப்பேசிக்கு அழைக்க அது அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக செய்தி வந்தது. சட்டையை எடுத்து அணிந்து கொண்டவன், வண்டி சாவியை கையில் எடுத்துக்கொண்டு, “நான் போய் பார்த்துட்டு வரேன். நீ பத்திரமா இரு” என்றான்.
“நானும் வரவா?” என தர்ஷினி கேட்க, அவளை முறைத்து, “ஒழுங்கா கதவை சாத்திட்டு வீட்டுல இரு” எனக்கூறி வெளியில் செல்ல கிளம்பினான்.
‘கடவுளே ரவிக்கு ஒன்றும் ஆகி இருக்கக்கூடாது’ என அவசரமாக வேண்டுதல் ஒன்றை வைத்தாள் தர்ஷினி.