மணிப்புறாவும் மாடப்புறாவும்-20

அத்தியாயம் 20

காலையில் தர்ஷினி வாந்தி எடுக்கும் சத்தத்தில்தான் கண் விழித்தான் இன்பா. எழுந்து சென்று குளியலறையில் வாந்தி செய்து கொண்டிருக்கும் தர்ஷினியின் தலையை தாங்கி பிடித்தான். அவளுக்கு ஓரளவு வாந்தி நின்றது போல இருக்கவும் வாய் கொப்பளிக்க செய்து வெளியே அழைத்து வந்தான்.

“என்னடி இப்படி வாந்தி எடுக்குற?”

“நல்ல பசி இன்பா. சரி ப்ரஷ் பண்ணிட்டு அதுக்கப்புறம் சாப்பிடலாம்னு போனேன். வெறும் வயிரா இருக்கவும் வாமிட் வந்துட்டு. எதுவும் சாப்பிட்டா சரியாகிடும்” என்றாள்.

“வாந்தி வருது எதுவும் வேணாம்னு சொல்வாங்கன்னுதான் கேள்விப்பட்டிருக்கேன். நீ என்னடி சாப்பிட்டா வாந்தி வராதுன்னு சொல்ற?”

“சீரியஸா… முந்தாநாள் கூட அப்படித்தான் பசி எடுத்து நான் எதுவும் சாப்பிடலை. அதுதான் வாமிட் பண்ணினேன். சாப்பிட்டதுக்கு அப்புறம் வாமிட் நின்னுடுச்சு. நீ போய் எதுவும் சாப்பிட எடுத்துகிட்டு வா. எனக்கு திருப்பி வயித்தை புரட்டது” என்றாள்.

நேரம் ஆறு கூட ஆகியிருக்கவில்லை. இன்னும் யாரும் எழுந்து கொள்ளவில்லை. அறுவைசிகிச்சைக்கு பிறகு லட்சுமியும் சற்று தாமதமாகத்தான் எழுகிறார். இன்பா சமையலறை சென்று பார்த்தான். டீ, காபி போட தெரியும். தோசை ஊற்றுவான். மற்றபடி சமையல் எல்லாம் அவனுக்கு தெரியாது.

சுற்றும் முற்றும் பார்க்க ப்ரெட் பாக்கெட் இருந்தது. தோசைக்கல்லில் நான்கு ப்ரெட்களை டோஸ்ட் செய்தான். வெங்காயம் தக்காளி வெள்ளரிக்காயை நறுக்கி இரண்டு ப்ரெட்களுக்கு இடையில் வைத்தான். அவசரமாய் அவன் செய்த சாண்ட்விச்சை எடுத்து வந்து கொடுத்தான்.

உடனே கையில் எடுத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள். அவளையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் இன்பா.

“ஏண்டா என்னையே பார்க்கிற..? எனக்கு வயிறு வலிக்கப் போகுது. இந்தா வேணும்னா நீ ஒரு கடி கடிச்சிக்க” என நீட்டினாள்.

“நான் இன்னும் ப்ரஷ் பண்ணவே இல்லடி”

“அப்போ திரும்பிக்க… என்னை பார்க்காதே”

“நான் பார்த்து உனக்கு வயிறுவலி வந்துடுமா? ஒழுங்கா சாப்பிடு” என்றான்.

விரைவாக சாப்பிட்டு முடித்தவள் “அவ்ளோ தானா?” எனக் கேட்டாள்.

“அம்மா எழுந்திரிக்கட்டும் தர்ஷினி. இதுதான் எனக்கு தெரிஞ்சது” என்றான்.

“பரவாயில்லை இப்ப வயிறு புரட்டல… நீ என்ன பண்ற…? இது மாதிரி இன்ஸ்டன்ட்டா செய்ற மாதிரி ஏழு எட்டு ஐட்டம் கத்து வச்சுக்க. அத்தையை போய் தொந்தரவு செய்ய முடியாது. எனக்கு பசிச்சா நீயே செஞ்சு கொடுத்திடு” என்றாள்.

“என் புள்ளையை நீ பெத்து தரதுக்குள்ள என்னை நல்லா வச்சு செய்யப் போறேன்னு சொல்லு” என்றான்.

“ரொம்ப சலிச்சுக்கிற.. நான்தானே கஷ்டப்பட்டு பெத்துக்க போறேன். உனக்கு என்ன ஜாலியா இருக்க. இந்த சாப்பாடு கூட யாருக்கு? உன் பிள்ளைக்குதானே…? இன்னும் கொஞ்ச நாள்ல என் வயிறு பலூன் மாதிரி ஆயிடும். நடக்க மூச்சு வாங்கும். ஒழுங்கா புரண்டு கூட படுக்க முடியாது. எனக்கு பிடிச்ச டிரஸ் கூட போட்டுக்க முடியாது. எல்லாத்துக்கும் மேல வலிக்க வலிக்க புள்ளை நான்தானே பெத்துக்கனும்? அதுக்கப்புறம் கூட…”

“அம்மா தாயே… என்ன செய்யணும்னு சொல்லு. எல்லாம் செய்றேன். நீ பேசுறதுல எனக்கு மூச்சு வாங்குது” என கூறிய இன்பா பெரிய கும்பிடாய் போட தர்ஷினி சிரித்து விட்டாள்.

“சீரியஸா சொல்றேன் டி… இனிமே உன்னை எதுவும் சொல்ல மாட்டேன். பக்கம் பக்கமாக எப்படி பேசுற?”

லட்சுமி எழுந்ததும் தர்ஷினி சென்று அவரிடம் கூறினாள். அவருக்கு தலைகால் புரியவில்லை. அவ்வளவு சந்தோஷப்பட்டார்.

“நான் போய் அம்மா, நூரு அம்மா எல்லார்கிட்டயும் சொல்லிட்டு வந்துடுறேன்” என சந்தோஷமாக கூறிவிட்டு ஓடினாள் தர்ஷினி.

“ஏய் பார்த்து தர்ஷினி… மெல்ல… நடந்து போ” என லட்சுமி கூற, “ஓகே அத்தை” என்றவள் ஓட்டத்தை நிறுத்தி வேகமாக நடந்து போனாள். அவள் வேகமாய் நடப்பதை பார்த்து பயந்து போனார் லட்சுமி.

“என்னடா இன்பா…? இவ இப்படி இருக்கா?” எனக் கேட்டார்.

சிரித்த இன்பா, “அவ அவளோட பிரக்னன்சிய என்ஜாய் பண்றாம்மா” என்றான்.

“முதல்ல சாயந்திரம் இவளுக்கு சுத்திப் போடணும்” என கூறிக் கொண்டே அங்கிருந்து லட்சுமி செல்ல, சரவணனும் சுப்ரியாவும் வந்தனர்.

“வாங்க… வாங்க…” என சிரித்த முகத்துடன் வரவேற்றான் இன்பா. சுப்ரியாவின் முகம் கலக்கமாய் இருப்பதை பார்த்து யோசித்தவன், ‘எதுவாக இருந்தாலும் அவர்களே சொல்லட்டும்’ என எதுவும் கேட்காமல் இருந்தான்.

“தர்ஷினி எங்கே?” எனக் கேட்டான் சரவணன்.

“அவ அம்மா வீட்டுக்கு போயிருக்கா.. குட் நியூஸ் சொல்ல” என்றான்.

“தர்ஷினி ப்ரக்னண்ட்டா இருக்காளா?” எனக் கேட்டாள் சுப்ரியா.

“ஆமாம்” என முகமலர்ச்சியுடன் கூறினான் இன்பா.

இருவரும் வாழ்த்துவார்கள் என இன்பா எதிர்பார்த்திருக்க, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“இன்பா உங்ககிட்ட தனியா பேசணும்… மாடிக்கு போகலாமா?” எனக் கேட்டான் சரவணன். மூவரும் மாடிக்கு சென்றார்கள்.

சுப்ரியா சொல்ல முடியாமல் தயங்கி நிற்க, சரவணன் ஆதரவாய் இன்பாவின் தோளை பற்றிக்கொண்டான்.

“இந்த நேரத்துல உங்ககிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியலை. ஆனா எச்சரிக்கை பண்ணனும்ங்கறதுக்காக சொல்றேன்” என்றவன் நேற்று இரவு சுப்ரியா தர்ஷினி பற்றி கண்ட காட்சியைக் கூறினான்.

கரைபுரண்ட வெள்ளம் நொடியில் வடியுமா? இன்பாவின் சந்தோஷம் வறண்டு, அரண்டு போய் சுப்ரியாவை பார்த்தான். சுப்ரியா கண்களில் கண்ணீருடன் நின்றிருந்தாள்.

இன்பாவின் மூளை செயலிழந்து போயிருந்தது.

“சாரி இன்பா. குட் நியூஸ் கேட்டு சந்தோஷமா இருக்கிற உங்ககிட்ட இதைச் சொல்ல வேண்டியதாப் போச்சு. தர்ஷினிய கேர்ஃபுல்லா பாத்துக்கணும். அதுக்காகத்தான் உங்ககிட்ட சொல்றோம்” என்றான்.

கலங்கிப் போன கண்களில் இருந்து கண்ணீர் வராமல் முயற்சி செய்து அடக்கிக் கொண்டவன், குரலை செருமி, “நீ என்ன பார்த்தேன்னு விளக்கமா சொல்லு சுப்ரியா” என்றான்.

“ஒரு மாதிரி தெளிவில்லாமல் இருந்தது. யாரோ ஒரு ஆளைப் பார்த்தேன். ஃபேஸ் சரியா தெரியலை. ஃப்ளோர்ல ஒரே ரத்தமா இருந்தது. நம்ம தர்ஷினி கீழே கிடந்தா. மூச்சு பேச்சு எதுவும் இல்லை. நான் பொறுமையா பார்க்கறதுக்குள்ள இவர் என்னை கூப்பிடவும் எல்லாம் கலைஞ்சு போச்சு. அதுக்கு மேல ஒன்னும் தெரியலை” என்றாள்.

உயிரை யாரோ உருவுவது போல இருந்தது இன்பாவுக்கு. முகத்தை தன் இரு கைகளால் அழுந்தத் துடைத்துக் கொண்டவன், “இது நடந்ததிடுமா சரவணன்?” என குழந்தை போல கேட்டான்.

“இன்பா இப்போ நீங்க எமோஷனல் ஆக இதை சொல்ல வரலை. தர்ஷினியை ஜாக்கிரதையா பார்த்துக்குங்கன்னு சொல்லதான் வந்திருக்கோம். தர்ஷினிக்கு யாரெல்லாம் எதிரிங்க இருக்காங்கன்னு முதல்ல ஒரு லிஸ்ட் எடுப்போம். சுப்ரியா பார்த்த அந்த ஆள்தான் தர்ஷினிய ஏதாவது பண்ணனும். அவனை நம்ம முன்கூட்டியே கண்டுபிடிச்சிட்டா இதை தடுக்க சேன்ஸ் இருக்கு” என்றான்.

“எதிரின்னு யாரை குறிப்பிட்டு சொல்றது? இப்போ மணிப்புறாங்கிற பேர்ல சண்டே சண்டே இவர் எழுதுற ஆர்டிகலால எவ்ளோ எதிரிகள். இதுல யாருன்னு கண்டு பிடிக்கிறது?” என்றான்.

“தர்ஷினிய இதையெல்லாம் கொஞ்ச நாள் ஸ்டாப் பண்ண சொல்லுங்க”

“என்னன்னு சொல்லி அவளை ஸ்டாப் பண்ண சொல்லுவேன். இது அவளுக்கு தெரிஞ்சா அவளோட டே டு டே லைஃப் பாதிக்கப்படாதா? இப்போ அவ பிரக்னண்ட் வேற…” என தன் தலையை பிடித்துக் கொண்டான் இன்பா.

“என்னடி சுப்பு… மூணு பேரும் இங்க என்ன பண்றீங்க? காலையிலேயே என்ன திடீர் விசிட்?” என கேட்டுக்கொண்டே தர்ஷினி தேநீர் கோப்பைகளை தட்டில் வைத்து எடுத்துக்கொண்டு வந்தாள்.

லட்சுமிதான் தர்ஷினியிடம் தேநீர் கொடுத்து அனுப்பியிருந்தார்.

“ஒன்னும் இல்லமா. நேத்திலிருந்து சுப்ரியா ரொம்ப அப்செட். நேத்து எங்களுக்குள்ள சண்டை. உன்னை பார்த்தா பெட்டரா ஃபீல் பண்ணுவான்னு நான்தான் அழைச்சிட்டு வந்தேன்” என்றான்.

“நீ அவரை நாலு போடுறதை விட்டுட்டு ஏண்டி அப்செட் எல்லாம் ஆகுற? இன்பாகிட்ட கேட்டு பாரு. எவ்ளோ வாங்கியிருப்பான் தெரியுமா என்கிட்ட” எனக் கூறி இன்பாவை பார்த்தாள்.

“ஹேய் இன்பா… நீ ஏன் இப்போ அப்செட்டா இருக்க?” என இன்பாவிடம் கேட்டாள் தர்ஷினி.

“அப்படியெல்லாம் இல்லை. நான் நல்லாதான் இருக்கேன்” என்றான் இன்பா.

“சுப்பு உன் மூட் மாறுற மாதிரி உனக்கு ஒரு குட் நியூஸ் சொல்லவா?” எனக் கேட்டாள்.

அவள் என்ன சொல்லப் போகிறாள் என மூவருக்கும் தெரிந்தது.

“சீக்கிரம் எனக்கும் இன்பாவுக்கும் குட்டி பாப்பா வரப்போகுது” என சுப்ரியாவிடம் கூறினாள் தர்ஷினி. சுப்ரியா தர்ஷினியை அணைத்துக்கொண்டாள். சுப்ரியாவின் காதில் ரகசியமாய், “நீயும் சீக்கிரமா குட் நியூஸ் சொல்லு. அப்புறம் உன்னை அண்ணா அப்செட் ஆக்கவே மாட்டார். நம்ம அவங்களை வச்சு செய்யலாம்” என்றாள்.

சுப்ரியாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. தர்ஷினிக்கு தெரியாமல் கண்ணீரைத் துடைத்து விட்டு அவளிடம் இருந்து விலகியவள், “ஜாக்கிரதையா இருடி. நாங்க கிளம்புறோம் லேட் ஆகுது” என்றாள்.

“என்ன வந்தீங்க.. உடனே கிளம்புறீங்க? சாப்பிட்டு போகலாம்” என்றாள் தர்ஷினி.

அதற்கு மேல் அங்கு இருந்தால் அழுது, தானே காட்டிக் கொடுத்து விடுவோம் என்ற பயத்தில் சுப்ரியா சரவணனின் முகத்தை பார்க்க, “இல்லமா… இன்னொரு நாள் வரோம்” எனக் கூறி சுப்ரியாவையும் அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

“என்ன இன்பா… திடீர்னு வந்தாங்க. உடனே கிளம்பிட்டாங்க” எனக் கேட்டாள் தர்ஷினி.

“அதான் வேலைக்கு போக லேட் ஆகுதுன்னு சொன்னாங்கல்ல விடு” என்றான்.

“சரி வா கீழ போகலாம்”

“தர்ஷினி இன்னைக்கு லீவு போடுறியா? நானும் வீட்ல இருக்கேன்” என கேட்டான்.

“லீவா…?”

“ப்ளீஸ்டி…”

“ரொம்ப கெஞ்சுற… இன்னைக்கு மட்டும்தான் அடிக்கடி கேட்கக்கூடாது ஓகேவா?” என்றாள்.

“சரி” என்றான் இன்பா.

இருவரும் கீழே வந்தனர். பத்மினியின் வீட்டிலிருந்தும் ரஹீம் பாய் வீட்டிலிருந்தும் அனைவரும் வந்திருந்தனர். தர்ஷினியிடம் எல்லோரும் ஏற்கனவே வாழ்த்து கூறியிருந்தனர். இப்போது இன்பாவிடமும் எல்லோரும் வாழ்த்துக்கள் கூற, தன் மனதின் துயரத்தை மறைத்து அவர்களிடம் புன்னகை புரிய சிரமப்பட்டு கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் எல்லோரும் சென்று விட்டனர். ரவியும் ரம்யாவும் பள்ளிக்கு சென்றுவிட்டனர். வடகம் செய்யப் போகிறேன் எனக் கூறி லட்சுமியும் பத்மினி வீட்டிற்கு சென்று விட்டார்.

தங்கள் அறையை ஒதுங்க வைத்துக் கொண்டிருந்தாள் தர்ஷினி. இன்பா அவளை வேலை செய்ய விடாமல் தடுத்து தன்னோடு அணைத்துக் கொண்டான்.

“என்னடா?” எனக் கேட்டாள் தர்ஷினி.

“ஒன்னும் இல்லைடி” என்றான்.

“எனக்கு ஒன்னும் ஆகாது. பயப்படாத” என்றாள் தர்ஷினி.

திகைத்துப்போன இன்பா “என்ன சொல்ற?” எனக் கேட்டான்.

“சரவணன் அண்ணன் உன்கிட்ட சுப்ரியா நேத்து பார்த்தத்தை சொல்லிட்டு இருக்கும்போதே நான் மாடிக்கு வந்துட்டேன். சரி… தெரியாத மாதிரியே இருந்துப்போம்ன்னு இருந்தா… நீ என்னடான்னா வாழ்வே மாயம் பாட்டு பாடுற. எனக்கு பார்க்க சகிக்கலை” என்றாள்.

“என்னடி நீ இவ்ளோ சாதாரணமா இருக்க? அதைக் கேட்டதிலிருந்து எனக்கு எப்படி இருக்கு தெரியுமா?” என்ற அவனது குரல் உடைந்து அவன் கண்கள் கலங்கி போயிருந்தன.

“என்னடா நீ?” என்றவள், அவன் அணைப்பிலிருந்து விலகி அவன் முகத்தை தன் கைகளில் தாங்கி, “நீ இருக்கும்போது எனக்கு எதுவும் ஆக விட்டுடுவியா?” எனக் கேட்டாள்.

இல்லை என்பதாக இட வலமாய் தலையாட்டினான் இன்பா.

“அப்புறம் என்ன? சுப்ரியாவுக்கு இப்படி இதே மாதிரி நடக்கிறது தேர்ட் டைம். முதல் தடவ அவங்க அப்பாகிட்ட சொல்லியும் அவர் இக்னோர் பண்ணிட்டார். லிங்கேஷ் விஷயத்துல… அவ லிங்கேஷ்கிட்ட இதை பத்தி சொல்லவே இல்லை. ஆனா என் விஷயம் அப்படி இல்லை. உடனே வந்து சொல்லிட்டா. நம்ம கேர்ஃபுல்லா இருப்போம். எனக்கு தெரியும்… எனக்கு ஒன்னும் ஆகாது. ஒன்னும் ஆக நீ விடமாட்ட. நான் ரொம்ப நாள் உன்னை டார்ச்சர் பண்ணி, உன்கிட்ட சண்டை போட்டு, உனக்கு இன்னும் ரெண்டு பிள்ளைங்க பெத்துக்கொடுத்து அவங்க கூடவும் சேர்ந்து உன்னை டார்ச்சர் பண்ணி, அப்புறம் அப்பப்ப கொஞ்சம் ரொமான்ஸ் பண்ணி, அப்பப்ப இப்படி முத்தம் கொடுத்து…” என்றவள் அவனது இதழ்களில் முத்தமிட்டு “அப்புறம்தான் செத்துப் போவேன்” என்றாள்.

இன்பாவின் விழிகளில் இருந்து கண்ணீர் எட்டிப்பார்த்தது.

“உனக்கு ஒன்னும் ஆகாதுல்ல..?” எனக் கேட்டான் இன்பா.

“ஒன்னும் ஆகாது. நீ பயப்படாத. எனக்கு தெரியும்… நான் இல்லாம நீ ரொம்ப கஷ்டப்படுவன்னு. உன்னை அப்படி எல்லாம் கஷ்டப்பட விடுவேனா…?” என தர்ஷினி கேட்க, அவளை தன்னோடு சேர்த்தணைத்த இன்பா, “நான் இருக்கேன் டி. உனக்கு எதுவும் ஆக நான் விடமாட்டேன்” என்றான்.

தர்ஷினிக்கும் கண்ணீர் வர, இன்பாவின் சட்டையின் ஈரம் அவளை காட்டிக் கொடுத்தது.

“என்னம்மா…? என்கிட்ட இப்படி பேசிட்டு அப்புறம் ஏன் அழற?” எனக் கேட்டான்.

“எனக்கு எதுவும் ஆகாதுன்னு 99% நம்பிக்கை இருக்கு. அந்த 1% எதுவும் ஆயிடுச்சின்னா…?”

“அப்படியெல்லாம் எதுவும் ஆகாது”

“ஆயிடுச்சின்னா…?”

இன்பா பதில் கூறவில்லை.

“நீ குடிகாரனா மாறிடாத. என்னையவே நினைச்சுக்கிட்டு இல்லாம நீ உன் வாழ்க்கையை அடுத்து மூவ் பண்ணனும். இன்பசாகரன் இந்த தர்ஷினிக்கு பிடிச்ச இன்பாவாதான் எப்பவும் இருக்கணும். அழுமூஞ்சியா இருக்க கூடாது. ப்ராமிஸ் பண்ணு” என அவன் அணைப்பில் இருந்து கொண்டே கை நீட்டினாள்.

“உனக்கு ஒரு கஷ்டம்ன்னா இந்த இன்பா அங்க வருவான். உனக்கும், நம்ம பிள்ளைக்கும் எதுவும் ஆக விடமாட்டான். இன்பா இருக்கிறவரை தர்ஷினியும் இருப்பா” எனக்கூறி நீட்டிய அவளது கையில் தன் கையை வைத்து “இது சத்தியம்” என்றான்.

“என்னை நம்புறீல்ல…?” என இன்பா கேட்க, மேலும் கீழுமாய் தர்ஷினி தலையசைக்க, அவள் தலையை வருடி கொடுத்தான். இன்பாவின் மனம் இப்போது பரிதவிக்கவில்லை. தர்ஷினிக்கு எதுவும் ஆபத்து நேராமல் காக்க என்ன செய்ய வேண்டும் என யோசிக்க ஆரம்பித்திருந்தது.