மஞ்சள் காட்டு மைனா 7 2 8807 “இந்த தேங்காய் தோப்பு உங்களுதா?” என்று தேவா கேட்க. “ஆமா மாப்பிள்ளை. சுத்தி பத்து ஏக்கருக்கு தென்னந்தோப்பு தான்” என்றார் பெண்ணை பெற்றவர். “கோழி பண்ணை இருக்குன்னு சொன்னாங்க“ “அதுவும் இருக்கு மாப்பிள்ளை“ “ம்ம். பொண்ணுக்கு எதை கொடுக்கிறீங்க?” “ஆஹ்ன்“ “தேவா. என்ன இது” என்று தந்தை அதட்ட, “அவர் பொண்ணுக்கு தானே கேட்டேன். எனக்கா கேட்டேன்” என்றான் மகன். “மாப்பிள்ளை கேட்கிறது சரிதான். நாங்க இன்னும் சொத்து பத்தி ஏதும் கலந்தாலோசிக்கலை. பேசிட்டு சொல்றோம்” “சரி அப்போ பேசிட்டு சொல்லுங்க” என்று சட்டென எழுந்தான் தேவா. “பொண்ணை பிடிச்சிருக்கான்னு ஏதும் சொன்னாத்தானே, மத்ததை பேச முடியும் தம்பி” என்று பெரியவர் ஒருவர் கேட்க, “எனக்கு டீ பிடிக்கலை. இன்னொரு முறை வரும் போது நல்லா போட்டு கொடுங்க. அப்புறம் சொல்றேன்” என்றான் தேவா. “எம்மா ஜெயா. என்னம்மா இதெல்லாம்? உன் மகனுக்கு விருப்பப்பட்டு தான் அழைச்சுட்டு வந்தியா?” என்று அவரிடம் கேட்டார்கள். “பெரியப்பா. அது தேவா கொஞ்சம் விளையாட்டா பேசுவான். நீங்க தப்பா எடுத்துக்காதீங்க“ “விளையாட்டா? இது வினயமா இல்லை தெரியுது“ “இந்த வீட்ல நீங்க மட்டும் தான் விவரமா இருக்கீங்க” என்று அவருக்கு பாராட்டு பத்திரம் வாசித்தான் கிரிமினல் லாயர். “சரிதான்” என்று அவர் தலையசைத்து கொண்டார். பசுபதிக்கு அதற்கு மேலும் அங்கு அமர்ந்திருக்க இயலாமல், “நாங்க போன் பண்றோம் மச்சான்” என்று எழுந்து கொள்ள, அவரை பின்பற்றி வீட்டினரும் விடைபெற்றனர். ஜெயலட்சுமி எல்லோர்க்கும் சொல்லி கொள்ள, யாரும் அவருக்கு சரியாக விடைகொடுக்கவில்லை. “பொண்ணு பார்க்க கூட்டிட்டு போனதுக்கு என் சொந்தத்தை முடிச்சு உட்டுட்டான்” என்று ஜெயலட்சுமி வழி நெடுக பெரிய மகளிடம் புலம்பி கொண்டு வந்தார். “அத்தை. தேவா உண்மையாவே பொண்ணு பார்க்க சம்மதம் சொன்னாரா?” என்று பெரிய மருமகன் வேறு கேட்க, மாமியார் என்ன சொல்வார்? பொத்தாம் பொதுவாக தலையாட்டி வைத்தார். “ம்மா. என்னம்மா இது? உறுதி பண்ண போகுதுன்னு தானே, எங்க வேலை எல்லாம் விட்டுட்டு வந்தோம்” என்று இளைய மகள் வீட்டுக்கு வந்ததும் ஆரம்பித்தாள். “தேவா ஏன் இப்படி பண்ணார்? அவருக்கு பொண்ணை பிடிக்கலையா?” என்று சின்ன மருமகன் கேட்க, “ம்மா. உங்களை தானே கேட்கிறோம்” என்றாள் கீதா கொஞ்சம் கோவமாக. “என்னக்கா கேட்கிற?” என்று தேவா வர. “என்ன தேவா இதெல்லாம்? பொண்ணு பார்க்க போன இடத்துல போய் யாரும் சொத்தை பத்தி பேசுவாங்களா?” என்று கேட்க. “எல்லாம் பேசுறது தான்” என்றவன் பார்வை சின்ன மாமாவிடம் சென்று வந்தது. “பொண்ணை உறுதி பண்ணிட்டு, மூணாவது மனுஷங்க மூலமா பேசணும் மச்சான்” என்றார் அவர். அனுபவம் சொன்னது. “உங்களை கேட்டிருக்கணும் மாமா. தப்பு தான்” என்று ஒத்து கொண்டவன், “அடுத்த பொண்ணை பார்க்கும் போது இதை ஞாபகம் வைச்சுகிறேன்” என்றான் நல்லவனாக. “இப்போ பார்த்த பொண்ணுக்கு என்ன குறை?” என்று கீதா கேட்க, “அவங்க வீட்ல யாருக்கும் நல்ல டீ போட தெரியலை. எனக்கு வேண்டாம்” என்றான் தேவா. “அப்புறம் எதுக்குடா சொத்தை பத்தி எல்லாம் பேசி வைச்ச?” என்று ஜெயலட்சுமி பொறுக்க மாட்டாமல் கேட்டார். “ஏன் கேட்க கூடாதா? சரி. விடுங்க. இன்னொரு பொண்ணை பாருங்க. அப்போ கேட்கலை” “இன்னொரு பொண்ணை பார்க்கணுமா?” “பார்க்கணுமான்னு கேட்டா என்ன அர்த்தம்? பார்க்கணும். ஒத்த மகனுக்கு பொண்ணை தேடுறதை விட உங்களுக்கென்ன பெரிய வேலை இருக்க போகுது. தேடுங்க போங்க” ஜெயலட்சுமிக்கு கொஞ்சம் மகிழ்ச்சி தான். துளசியை மறந்துவிட்டான் போல. நல்ல பொண்ணா தேடி பிடிச்சு அவனுக்கு கட்டி வைச்சிடணும். செல்வி பார்வையாளாக மட்டும் இருந்தவள், பசுபதியுடன் தனியே பேசினாள். எப்போதும் அவர்கள் இருவருக்குள்ளும் நல்ல புரிதல் உண்டு. “என்ன ரகசியம்?” என்று கீதா உள்ளே நுழைய, “தேவா கல்யாணம் பத்தி தான்” என்று முடித்து கொண்டார் பசுபதி. வைரவேல் வீட்டிற்குள்ளே வரவில்லை. அப்படியே பைக் எடுத்து கொண்டு தோட்ட வீடு சென்றுவிட்டார். தேவா எப்போதும் போல இரவு உணவுடன் வர, “பஞ்சாயத்து எல்லாம் முடிஞ்சுதா?” என்று கேட்டபடி உணவு உண்டார் மனிதர். “மகனை தனியே விட்டு வந்துட்டு, இப்போ என்ன கேள்வி“ “தப்பு தான். என் அண்ணன் குடும்பத்தை உன்கிட்ட தனியே விட்டு வந்திருக்க கூடாது” என்று அவர் கவலையாக சொல்ல, மகன் கடுப்பாக அவரை பார்த்து வைத்தான். செல்வி, கீதா ஒரு நாள் இருந்துவிட்டு, அவரவர் வீடு கிளம்பிவிட, இவர்களுக்கு எப்போதும் போல் சென்றது. தேவா அவனின் அலுவகத்திற்கு வரும் நேரமெல்லாம் துளசியை கண்டு கொள்வதே இல்லை. அப்படி ஒருத்தி அங்கிருக்கிறாள் என்பதை அவன் கண் கண்கள் காட்டுவதே இல்லை. வைரவேல் மகனுக்கு எதிராக முதல் கேஸை எடுக்க, தேவா அவரை விட்டேனா பார் என்று சரிக்கு சரி நின்றான். “வேலைக்காக பணம் கொடுத்தவர்கள் அந்த ஆதாரத்தை கொடுக்க“ “பணம் கொடுத்தது உண்மை தான். ஆனா அதெல்லாம் என் கட்சிக்காரர்கிட்ட இவங்க வாங்கின கடன்” என்றான் தேவா. வைரவேலுக்கு அவன் பேச்சில் கோவம் தான். ஆனால் என்ன செய்ய முடியும்? அதற்கான அக்ரீமெண்டை பக்காவாக நீதிபதி முன் சமர்ப்பித்தான். “என் கட்சிக்காரங்க கையெழுத்து போடலை” என்று வைரவேல் சொல்ல, “அதை நிரூபிக்க சொல்லுங்க” என்றான் இவன். அது உண்மையான கையெழுத்து தானா என்பதை ஆராய நீதிபதி உத்தரவிட்டு, வழக்கு தள்ளி போனது. வைரவேல் மகனை முறைத்து செல்ல, துளசி அவரின் பின் தேவாவை முகம் சுளித்து பார்த்தாள். ஓரக்கண்ணால் அவளின் பார்வை இவனை சீண்ட வைக்க, அவளை கடக்கும் போது வேண்டுமென்றே பெண்ணை இடித்துவிட்டு சென்றான். நல்ல வலுவான இடி என்பதால் துளசி பக்கத்தில் இருந்த தூணில் முட்டி நின்றாள். கை வலிக்கவே செய்தது. பின்னிருந்து அவனை முறைக்க, “ச்சு. இன்னும் நல்லா இடிச்சிருக்கணும்” என்ற ஏமாற்றம் அவனுக்கு. அன்றிரவு தேவா வீட்டிற்கு வந்த நேரம், ஜெயலட்சுமி மகிழ்ச்சியுடன் மகனுக்கு உணவு வைத்தவர், “தேவா இன்னொரு சம்மந்தம் வந்திருக்கு. பொண்ணு போட்டோ உனக்கு அனுப்பியிருக்கேன், பார்த்துட்டு சொல்லு” என்றார். “உடனே பார்க்கிறேன்” என்று அப்போதே எடுத்து பார்த்தவன், “போட்டோல ஒன்னும் தெரியலம்மா” என்றான். “சரி நேர்ல பார்க்க போலாமா?” “போலாமே. அதைவிட வேறென்ன வேலை இருக்கு” என்றான் மகன். “சரி. நான் நல்ல நாள் பார்த்துட்டு சொல்றேன். பொண்ணு வீட்டுக்கும் தகவல் அனுப்பிடுறேன்” “முதல்ல செய்ங்கம்மா“ “அப்புறம் தேவா. அங்க வந்து சொத்தை பத்தி எல்லாம் பேச கூடாது தம்பி“ “பேச மாட்டேன்” என்றான் சமத்தாக. ஜெயலட்சுமி மகிழ்ந்து போய் மகனுக்கு நெய் தோசை ஊற்றி கொடுக்க, “அடுத்து பொடி தோசைம்மா” என்றான் மகன் சலுகையாக. “இதோ தேவா” என்று அவனுக்கு போதும் என்று சொல்லும் வரை ஊற்றி கொடுத்தார் அன்னை. “நீங்க சாப்பிடலை” என்று அப்பா, சித்தப்பாவை கேட்டான். “உன்னை பார்த்தே எங்களுக்கு வயிறு நிறைஞ்சிடுச்சு” என்றனர் இருவரும். “அவன் மேல ஏன் கண்ணு வைக்கிறீங்க. தேவா நில்லு அம்மா உனக்கு சுத்தி போடுறேன்” என்று அவனுக்கு சுத்தி போட்டே மகனை நகரவிட்டார் அன்னை. “மகனே. முதல் முறையா எனக்கு ஒரு நல்லது பண்ணியிருக்கு. நன்றிடா மகனே” என்றார் பசுபதி. தேவா நின்று அவரை சந்தேகமாக பார்த்து, “என்ன நல்லது?” என்று கேட்டான். “இத்தனை வருஷமா உன் அம்மாவை விவரமானவன்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா இல்லை. அப்படி இல்லவே இல்லை“ “ஏன்? என் விவரத்துக்கு என் குறை?” என்று ஜெயலட்சுமி சண்டைக்கு நிற்க, “ஒரு குறையும் இல்லை. அடிச்சு பட்டைய கிளப்புற. போ. அந்த பொண்ணு வீட்ல பேசு போ” என்றார் பசுபதி. “க்கும், நீங்க சொல்லலைன்னாலும் நான் பேசத்தான் போறேன். உங்களுக்கு தான் மகன் மேல அக்கறை இல்லை. நானும் அப்படியே இருக்க முடியுமா என்ன?” என்று நொடித்து சென்றார் ஜெயலட்சுமி. “அப்படி கேளுங்கம்மா. அண்ணனுக்கும், தம்பிக்கும் மகன் மேல அக்கறை இல்லை” என்று தேவா இருவரையும் பார்த்து வெட்டி கொண்டு சென்றான். இங்கு அண்ணனும், தம்பியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். துளசியின் விடுதலை வழக்கு மிகவும் நல்ல படியாக சென்று கொண்டிருந்தது. வைரவேல் ஆதாரத்துடன் சந்தோஷின் பெண் தொடர்பு பற்றி நிரூபித்தார். அவளுக்கு சாதகமாக எல்லாம் சென்ற நிலையில், வைரவேலுக்கு விபத்து ஏற்பட்டது. துளசி தவித்து நிற்க, தேவா கோவத்தில் கொதித்து நின்றான். “எங்க வந்த நீ?” என்று வைரவேலை பார்க்க வந்த துளசியிடம் பாய்ந்தான் தேவா. துளசிக்கு குற்ற உணர்ச்சியில் கண்கள் கலங்கி போனது.