மஞ்சள் காட்டு மைனா 7 1 8624 மஞ்சள் காட்டு மைனா 7 முதல் நாள் வழக்கில், துளசி அவளுக்கு விடுதலை வேண்டும் என்று தெளிவாக சொல்ல, சந்தோஷும், எனக்கு என் மனைவி வேண்டும் என்று உறுதியாக நின்றான். வழக்கு தள்ளி போனது. தெரிந்தது தானே, அடுத்து என்ன என்று வைரவேல் துளசியிடம் பேசினார். மகள் முடிந்த வரை எல்லாவற்றையும் தானே பார்த்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் வளர்மதி அமைதியாக அமர்ந்திருந்தார். ஆனால் அம்மாவாக மனதுக்குள் மிகப்பெரிய போராட்டம். ஏனோ இப்போதெல்லாம் மனதின் தளர்ச்சியால் உடலும் தளர்ந்து போல உணர்கிறார். மகளின் தைரியம் அவர் என்றால், அவரின் தைரியம் அவர் மட்டுமே! நினைவு தெரிந்த நாளில் இருந்தே வளர்மதிக்கு, எல்லாம் என்னால முடியும் என்ற ஆணித்தரமான நம்பிக்கை. பிறந்த வீட்டினருக்கு அந்த தன்னம்பிக்கை அடங்கா தனமாகவும், புகுந்த வீட்டினருக்கு அது திமிராகவும் தான் தெரிந்தது. சரவணன் மட்டுமே அந்த தன்னம்பிக்கையை ஆராதிக்க, வளர்மதி அவரின் காதலை முழு மனதாக ஏற்று கொண்டதுடன், அவருடன் அதே காதலுடன் வாழவும் செய்தார். ஆனால் அதுவும் விரைவில் முடிந்து போக, வளர்மதி இன்னமும் கடினமாக மாறிப்போனார். அந்த கடினமே அவரை இப்போது பந்தாடி கொண்டிருக்கிறது என்றால் மிகையில்லை! இளக்கமாக மாற வேண்டும், மகளுடன் அன்பாக இருக்க வேண்டும், அவளின் வாழ்க்கையை சிறப்பிக்க வேண்டும், கடைசி காலத்தை இன்னமும் உறுதியாக கடக்க வேண்டும் என்று தினம் ஆயிரம் சிந்தனை. எதார்த்தத்தில் இது எல்லாம் அவருக்கு வாய்க்காமலே போய்விடுமோ என்ற அச்சம் அவரை அதிகளவில் ஆக்கிரமிக்கிறது. இதோ இப்போதும் அந்த ஆனந்தி குடும்பத்தை ஒரு கை பார்க்க, கடலளவு கொந்தளிக்கிறது. ஆனால் மகள்? அவளுக்கு அவரை விட்டால் யார் இருக்கிறார்? பல்லை கடித்து கொண்டு எல்லாவற்றையும் வேடிக்கை பார்ப்பது போல் பார்த்து கொண்டிருக்கிறார். “என்னம்மா?” என்று மகள் அம்மாவின் கைப்பற்ற, “சொல்லு துளசி” என்றார் வளர்மதி. “காபிம்மா” என்று அவர் முன் ஆவி பறக்கும் கப்பை காட்டினாள். “ஓஹ்” என்று அவர் எடுத்து குடிக்க, துளசிக்கும் அம்மாவின் சமீப கால மாற்றங்கள் புரியத்தான் செய்தது. அதனாலே விரைவில் சந்தோஷுடனான போராட்டத்தை முடித்து கொள்ள வேண்டும் என்று முயன்று கொண்டிருக்கிறாள். “நீங்க கிளம்புங்கம்மா. நான் ஈவினிங் வந்துடுறேன்” என்றாள் துளசி. “இல்லை நாம ஒன்னாவே போலாம். லீவ் எடுத்தாச்சு இல்லை” என்றுவிட்டார். வைரவேல், “இதுக்கு அப்புறம் வேலை ஒன்னுமில்லை துளசி. நீங்க கிளம்புங்க. நானும் கிளம்புறேன்” என்றார் வைரவேல். தேவாவிற்கு பெண் பார்த்து உறுதி செய்வது பற்றி அவர் சொல்லியிருந்ததால், “சரி” என்று அம்மாவும் மகளும் கிளம்பிவிட்டனர். வைரவேல் அண்ணன் வீட்டிற்கு செல்ல, “தாத்தா” என்று குட்டீஸ் அவரை சூழ்ந்து கொண்டனர். “தங்கங்களா” என்று அவர்களை கையில் அள்ளி கொண்ட வைரவேல், செல்வியின் மூத்த மகன் தலையை கலைத்துவிட்டார். வளர்ந்துவிட்டான். “பத்தாவது படிக்கிறான். அதனாலே ஊருக்கு பெரிகாக வர முடிவதில்லை” என்றாள் செல்வி. “பசங்களுக்கு கொடு செல்வி” என்று வாங்கி வந்த பொருட்களை அவள் கையில் கொடுத்துவிட்டு, மாப்பிள்ளைகளிடம் நலம் விசாரித்தார். “அண்ணி. ஏதும் வாங்கிட்டு வரணுமா?” என்று ஜெயலக்ஷ்மியிடம் கேட்டார். “தேவாவை மட்டும் அழைச்சுட்டு வந்துடுங்க தம்பி. வேறெதுவும் வேண்டாம்” என்றார் அவர். “எங்க தேவா? காலையில இருந்து அவனை பார்க்கலை” என்று கேட்க, “அவன் காலையிலே கிளம்பிட்டான் சித்தப்பா. உங்களுக்கு தெரியாதா?” என்று கீதா பதிலுக்கு கேட்டாள். “அவனுக்கு ஆயிரம் வேலை இருக்கும்மா. எல்லாத்தையும் சொல்லிட்டு இருக்க முடியுமா? நான் அவனுக்கு போன் பண்றேன்” என்று அவரின் அறைக்கு சென்று தேவாவிற்கு அழைத்தார். “இப்போ என்ன வேணும் உங்களுக்கு?” என்றே போன் எடுத்தான். “டேய் எதுக்கு இப்போ எடுத்ததும் கடிக்கிற?” “வீட்ல இருந்து நீங்க மட்டும் தான் கூப்பிடாம இருந்தீங்க?” “எனக்கெப்படி இது தெரியும். சரி சொல்லு. எங்க இருக்க? எப்போ வீட்டுக்கு வர?” “வராம எங்க போயிடுவேன். வரேன். வைங்க போனை” என்று வைத்துவிட்டான். ‘இவனோட‘ வைரவேல் சலித்த கொண்டார். மாலை போல் எல்லாம் தயாராகிவிட, தேவாவும் வந்துவிட்டான். “என்ன வந்துட்டான்?” என்று பசுபதி, வைரவேலுக்கு மட்டும் ஆச்சரியம். மற்றவர்களுக்கு அப்பாடா வந்துட்டான் என்ற ஆசுவாசம். “வேஷ்டி கட்டுடா” என்று பசுபதி சொல்ல, “பொண்ணு பார்க்கத்தானே போறோம். இல்லை கையோட தாலி கட்டி தூக்கிட்டு வர போறோமா?” என்று கேட்டு வைத்தான். “என்னவோ போட்டு வந்து தொலை” என்று அவர் கடுப்படித்துவிட்டு செல்ல, தேவா தான் காரை எடுத்தான். பசுபதி சட்டென இறங்கி கொண்டவர், பெரிய மகளின் காருக்கு சென்றுவிட்டார். “லட்சுமி நீயும் என்னோட வந்துடு” என்று மனைவியை அழைக்க. “நான் என் மகனோட வரேன்” என்று பந்தாவாக அமர்ந்துவிட்டார். வைரவேல், “நான் பைக்ல வரேன்” என்று நழுவ பார்க்க, தேவா காரை எடுத்த வேகத்தில் அவரின் பைக்கை இடிப்பது போல் சென்றான். “தேவா. என்னடா பண்ற?” என்று ஜெயலட்சுமி மகனின் வேகத்தில் பயந்து போக, ” டேய். டேய் இடிச்சு வைச்சுடாத. உன்னோடே வரேன்” என்று வைரவேல் பதறி கத்திவிட்டார். “அது” என்று தேவா சடன் பிரேக் அடித்து நிறுத்த, ஜெயலட்சுமி அரண்டேவிட்டார். நல்லவேளை சீட் பெல்ட் போட்டிருக்க, மகனும் அவரின் முழங்கையை பற்றியிருந்தான். ஓர் நிமிடம் தலை கிறுகிறுவென வர, கண்களை விரித்து முழித்து பார்த்தார் அன்னை. “அண்ணி. நீங்க ஓகே தானே?” என்று வைரவேல் கதவு திறந்து கேட்க, “அவங்க ஓகே தான். மகன் நான் இருக்கும் போது என் அம்மாவுக்கு என்ன கவலை. நீங்க முதல்ல வண்டியில ஏறுங்க” என்றான் தேவா. ஜெயலட்சுமி கோவமாகி மகனின் கையை தட்டிவிட்டவர். “ஏண்டா இப்படி பண்ண?” என்று சத்தமிட்டார். “உங்க கொழுந்தனை கேளுங்க. என்னை ஏன் கேட்கிறீங்க?” என்று மகன் தோள்களை குலுக்கி கொண்டான். “அவரை வரச்சொன்னா வர போறார். அதுக்காக இப்படி தான் பயமுறுத்துவியா?” “இப்போ என்ன பொண்ணு வீட்டுக்கு போறோமா இல்லையா?” ஜெயலட்சுமிக்கு மகனின் கேள்வியில் ரத்த அழுத்தம் எகிற தான் செய்தது. ஆனால் என்ன செய்ய? “கிளம்பு தேவா போலாம்” என்றார் வைரவேல் பின்னிருந்தபடி. “ம்ம்” என்றவன் பாட்டை சத்தமாக அதிரவிட்டபடி கார் எடுத்தான். காது வலித்த போதும் ஜெயலட்சுமி ஏன் என்று கேட்க வேண்டுமே? மகள்கள் பெண் வீட்டிற்கு சென்று சேர்ந்து போன் செய்ய, இவர்கள் இன்னும் பாதி வழியில் தான் இருந்தனர். “கொஞ்சம் வேகமா தான் போயேன் தேவா” என்று வைரவேல் கடிந்துகொள்ள, “எனக்கு இப்படி தான் போக தோணுது. உங்களுக்கு கஷ்டமா இருந்தா நீங்களே வந்து காரை ஓட்டுங்க வாங்க” என்று நடுவழியிலே காரை வேறு நிறுத்திவிட்டான். “டேய்” என்று அவர் கடுப்பாக, தேவா பின்னருக்கையில் அமர்ந்தும்விட்டான். பின்னால் வந்தவர்கள் எல்லாம் இஷ்டத்துக்கு திட்டி, ஹார்ன் அடிக்க, “தம்பி நீங்க எடுங்க வாங்க. நேரமாச்சு” என்று ஜெயலட்சுமி மகனை முறைத்து அழைக்க, அவரும் வேறு வழி இல்லாமல் காரை எடுத்தார். “நல்ல விஷயத்துக்கு போகும் போது எல்லார்கிட்டேயும் திட்டு வாங்க வைச்சுட்டான்” என்று ஜெயலட்சுமி பொருமி கொண்டார். பெண் வீட்டில் இவர்கள் வருவதற்காக எல்லாம் வாசலிலே காத்திருக்க, “கொஞ்சம் லேட் ஆகிடுச்சு” என்று சிரித்து சமாளித்தார் ஜெயலட்சுமி. தேவா இறங்கி அவர்கள் வீட்டை ஆராய்ந்து, சுற்றியுள்ள தென்னை தோப்பையும் பார்த்தான். “வாங்க மாப்பிள்ளை. வாங்க” என்று பெண்ணை பெற்றவர் இவன் கை பற்றி அழைக்க வர, பேண்ட் பேக்கெட்டில் இருந்து கைகளை எடுக்க வேண்டுமே? அவர் தடுமாறி கை இழுத்து கொள்ள, இவன் பந்தாவாக தலையசைத்து உள்ளே நுழைந்தான். ‘ரைட் ஏதோ பண்ண போறான்‘ வைரவேல் முனகி கொண்டார். சம்பிரதாய பேச்சுக்கள் எல்லாம் முடிந்து பெண்ணை அழைத்து வந்தனர். அவள் கையால் காபி கொடுக்க, “எனக்கு டீ வேண்டும்” என்றான் தேவா. பசுபதி பல்லை கடித்து, காபியை முழுங்க, ஜெயலட்சுமி சங்கடமாக அண்ணன் குடும்பத்தை பார்த்தார். “இதோ போடுறோம்” என்று டீ தயாரித்து பெண்ணின் கையில் கொடுத்தனுப்பினர். “சர்க்கரை பத்தலை” என்று அப்படியே வைத்தான். “வேற டீ எடுத்துட்டு வாங்க” என்று பெண்ணின் வீட்டில் சொல்ல, “எனக்கு டீ குடிக்கிற ஆசையே போய்டுச்சு” என்றான் தேவா. “நல்லது. நாம பேச வேண்டியதை பேசலாம்” என்றார் பசுபதி.