“யோசிக்க என்ன இருக்கு செல்வி? நாம அவன் நல்லதுக்கு தான் பண்ணுவோம்”
“ம்மா. அவன் விருப்பம் ஒன்னு இருக்கே”
“அது எல்லாம் காலாவதி ஆகிடுச்சு”
“ம்மா. நாம கொஞ்சம் பொறுமையா இருக்கலாம்ன்னு தோணுது”
“ம்ஹூம். அந்த பொண்ணு துளசியோட பிரச்சனையில இவன் எங்க தலையை கொடுத்திடுவானோன்னு நான் பயந்திட்டே இருக்க முடியாது செல்வி”
“கல்யாணம் பேசுறதால மட்டும் நாம அவனை தடுக்க முடியும்ன்னு உங்களுக்கு தோணுதா” செல்வி தம்பியை பற்றி அறிந்தவளாக சொன்னாள்.
“அதுக்கு தான் சட்டு புட்டுன்னு கல்யாணத்தை பண்ணி வைச்சுடலாம்ன்னு உங்களை வரவச்சிருக்கேன். அண்ணாகிட்ட பேசிட்டேன். நாளைக்கு நல்ல நாள். பொண்ணு பார்க்கிறது பேருக்கு தான். பூ வைச்சு உறுதி பண்ணிட்டு தான் வர போறோம்”
“எனக்கு என்னமோ இது சரிப்பட்டு வரும்ன்னு தோணலைம்மா” என்றாள் செல்வி.
“உன்கிட்ட துளசி பத்தி சொல்லியிருக்க கூடாது. அவனே சரி சொன்னாலும் நீ விட மாட்ட போல.” என்று அம்மா கோவமாக பொரிந்தார்.
“ம்மா. எதுவும் நமக்குள்ள இருக்கிற வரை பிரச்சனையில்லை. நீங்க பொண்ணு பார்த்து, பேசி, இன்னொரு குடும்பம் உள்ள வந்து, இவன் ஏதும் செஞ்சு வைச்சு பெரிசாகிட கூடாதுன்றது தான் என் கவலை” என்றாள் செல்வி.
“அதெப்படி பெருசாகும். ஆகாது. துளசி மேல உன் தம்பிக்கு இருந்த கிறுக்கு பத்தி நான் உன் தங்கச்சிகிட்ட கூட நான் சொல்லலை. ஊர் வாயை அடக்கினாலும், இவ வாயை அடக்க முடியாதுன்னு தான். அப்படி எல்லாத்தையும் சமாளிச்சுட்டு பண்ண வேண்டியது தான்” என்றார் ஜெயலட்சுமி கணக்காக.
“என்னமோ சொல்றீங்க” என்ற செல்வி சாப்பாடு பையை வைத்த நேரம்,
“தேங்க்ஸ்க்கா” என்று அவளை தோளோடு அணைத்து, கிட்சன் வாயில் வழியே கிளம்பிவிட்டான் தேவா.
“இவன் எப்போ வந்தான்?” என்று இருவரும் முழிக்க,
“தேவா வண்டி சத்தம் கேட்டுச்சே, எங்க அவன் கிளம்பிட்டானா?” என்று கீதா வர, அம்மாவும் பெரிய மகளும் சமாளித்து கொண்டனர்.
“உன் சித்தப்பாக்கு ஏதோ வேலைன்னு தோட்ட வீட்டுக்கு சாப்பாடு கொண்டு போயிருக்கான்” என்று ஜெயலட்சுமி சொல்ல.
“அதென்ன நாங்க எப்போ வந்தாலும் சித்தப்பாக்கு வேலை வந்திடுது. இவனும் தோட்ட வீட்டுக்கு ஓடிடுறான்” என்று கீதா ஆரம்பிக்க, அதன் பின் மாப்பிள்ளைகளை விட இவளை சமாளிப்பது தான் பெரிய தலை வலியாகி போனது.
“என்னம்மா கீதா?” என்று பசுபதி வந்தமர்ந்த பின்னே அவள் சத்தம் அடங்க,
“தம்பி தோட்ட வீட்டுக்கு போயிட்டான். சித்தப்பா வேலைன்னு” என்று அவள் முனக,
“அதுக்கென்ன இப்போ? அவங்க வேலையை அவங்க பார்க்கட்டும். நீ என்ன நிக்கிற லட்சுமி? எல்லோருக்கும் சாப்பாடு வை” என்றார் அவர் தலைவராக.
பசுபதியை மீறி வேறென்ன பேச?
தோட்ட வீட்டில் சின்ன தந்தையும் மகனும் உணவை உண்ணும் நேரம், தேவாவின் போன் ஒலித்தது.
தேவா அவருக்கு பதில் அளிக்காமல் போனை எடுத்து பேசி வைத்தவன், “நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன் சித்தப்பா. நீங்க படுங்க” என்று நிற்காமால் பைக்கில் பறந்துவிட்டான்.
“என்ன சார் இந்த நேரத்துல கூப்பிடுறீங்க?” என்று சுந்தரத்துக்கு எதிரில் அமர்ந்தான் தேவா.
சந்தோஷ் இவனுக்கு சாப்பிட கேட்க வேண்டாம் என்று மறுத்துவிட்டவன் கேள்வியாக பார்க்க, கணேசனும் வந்தார்.
சந்தோஷின் பக்கம் இவர் தான் கேஸ் எடுத்திருக்க, அவர் முகமோ சுருங்கியிருந்தது.
“இங்க பாருங்க சார் நீங்க கேஸை எடுக்கவே முடியாதுன்னு சொல்லிட்டீங்க. அதனால தான் நீங்க சொன்ன இவருக்கே கேஸ் கொடுத்தோம். ஆனா இவர் நாங்க சொல்றதை கேட்க மாட்டேங்கிறார்” என்றார் சுந்தரம்.
கணேசன் கோவமாக, “உங்களுக்கு தேவை விவாகரத்து கிடைக்க கூடாது அவ்வளவு தானே? நான் பார்த்துகிறேன் சொல்லிட்டேன். ஆனாலும் நீங்க என்னை இப்படி எல்லாம் செய்ய சொன்னா என்னால செய்ய முடியாது” என்றார் கணேசன்.
தேவா நன்றாக நிமிர்ந்தமர, “அதான் ஏன்னு நானும் கேட்கிறேன். ஒரு பொண்ணு மேல அவதூறு சொல்லித்தான் கேஸ் நடத்தணும்ன்னு இல்லையே?” என்று கணேசன் இரு பெண்ணை பெற்றவராக பொரிந்தார்.
“கல்யாணத்துக்கு முன்னாடி துளசி வேற ஒரு ஆளை விரும்புச்சுன்னு தானே சொல்ல போறோம். அதுல என்ன பெரிய அவதூறு வந்திட போகுது” என்று சுந்தரம் சாதாரணமாக கேட்க,
“தேவா. இது சரிப்பட்டு வராது, நீயே இவங்ககிட்ட பேசு” என்றார் கணேசன்.
“தேவா சார் நீங்களே சொல்லுங்க. என் மகனோட அந்த பழக்கத்தை அவங்க கோர்ட்ல நிரூபிச்சுட்டா துளசிக்கு கண்டிப்பா விவாகரத்து கிடைச்சுடும். அப்புறம் என் மகனுக்கு என்ன பதில்? அதனால சும்மா நாமளும் இதை சொல்வோம். கேஸ் கொஞ்சம் இழுக்கும். அதுக்குள்ள நாம துளசியை சரிகட்டிடலாம்” என்றார் சுந்தரம்.
“க்கும். சார் உங்க மகனோட பழக்கம் கல்யாணத்துக்கு முன்னாடி தானே? அவங்க நிரூபிச்சாலும் ஒன்னும் பிரச்சனையில்லை. நாம பார்த்துக்கலாம்” என்றான் தேவா.
“அதெப்படி? என் மகன் கல்யாணத்துக்கு அப்புறம் வெளிநாடு போன ப்ரூப் எல்லாம் எடுத்து வைச்சிருக்காங்க. அதை வைச்சு ஏதும் செஞ்சா?”
“உங்க மகன் அந்த பொண்ணை செட்டில் பண்ண தானே போனார். அப்புறமென்ன?” என்று கேட்டார் கணேசன்.
“சார் எதுக்கு நாம ரிஸ்க் எடுக்கணும். அவங்க அதை சொன்னா நாமளும் இதை சொல்லணும். அவ்வளவு தான்” என்றார் சுந்தரம் உறுதியாக.
“சந்தோஷ். நீங்க என்ன சொல்றீங்க?” என்று தேவா அவனை கேட்க,
“இதை சொன்னா தான் துளசிக்கு விவாகரத்து கிடைக்காதுன்னு சொல்லலாம் சார்” என்றான் அவன்,
வெடித்து வந்த நல்ல வார்த்தையை உள்ளுக்குள் அடக்கி கொண்ட தேவா, போனை டேபிளில் தட்ட ஆரம்பித்தான்.
சந்தோஷ் போன் வர எழுந்து தனியே செல்ல, “சார் உங்களுக்கு துளசி மெயின் இல்லை. சொத்து தான் மெயின்னு எனக்கு தெரியும். அதை வேணா நாம அவுட் ஆப் கோர்ட் போய் பேசலாம்” என்றார் கணேசன்.
“நீங்க சொல்றது உண்மை தான். துளசி போனாலும் எனக்கு கவலையில்லை. ஆனா என் மகன் விட மாட்டேங்கிறான். அவனை நான் சமாளிச்சிடுவேன்னாலும், அம்மாவும், மகளும் சொத்தை பத்தி பேசவே விட மாட்டேன்கிறாங்களே ” என்றார் சுந்தரம் கோவமாக.
“நாம இன்னொரு முறை பேசி பார்க்கலாம். தேவா நீ மனசு வைச்சா முடியும். உன் சித்தப்பாகிட்ட பேசு” என்றார் கணேசன்.
“நான் பார்க்கிறேன் சார்” என்று தேவா கிளம்ப, அவனுடனே வந்த கணேசன்,
“இவங்க ரொம்ப மோசமா இருக்காங்க தேவா. அந்த பொண்ணுகிட்ட இருந்து சொத்தை வாங்கி கொடுத்தா மட்டும் தான் அந்த பொண்ணு தப்பிக்கும். இல்லை இவங்க எது செய்யவும் தயங்க மாட்டாங்க” என்றார் வருத்தமாக.
தேவாவிற்கும் புரிந்தது. ஆனா அவளுக்கு புரியலையே?
மறுநாள் வைரவேலுக்கு முன் அலுவலகத்திற்கு சென்ற தேவா, துளசி வரவும் அவளை டேபிளில் வைத்தே எங்கும் நகர முடியாதபடி கட்டம் கட்டினான்.
ஏற்கனவே துளசிக்கு சற்று பதட்டமாக தான் இருந்தது. இன்று முதல் கேஸ் ஆரம்பமாக போகிறது.
நிச்சயம் விவாகரத்து வேண்டாம் என்று தான் சந்தோஷ் சொல்வான்.
கேஸை இழுத்தடிக்கவும் முயல்வார்கள். திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. அதன் பின்னே வளர்மதி, துளசி முடிவெடுத்து கோர்ட் வரை வந்திருக்கிறார்கள்.
இங்கு என்ன செய்ய காத்திருக்கிறார்களோ? என்ற துளசியின் பதட்டத்தை இன்னும் கூட்டுவது போல தேவா இவள் முன் அமர்ந்திருக்கிறான்.
“இங்க பாரு நான் சொல்றதை பொறுமையா கேளு” என்று தேவா சொல்ல,
வைரவேல் எங்கு என்பது போல் துளசி போன் எடுத்து அவருக்கு அழைக்க போனாள்.
“ச்சு. பேசிட்டு இருக்கேன்” என்று அந்த போனை பறித்து தன் கையில் வைத்து கொண்டவன்,
“உன் மாமா குடும்பம் சரியான கேடி குடும்பம்ன்னு உனக்கு நல்லா தெரியும். அவங்க போற வழி சரியில்லை”
“நீங்க மட்டும் என்ன?” என்று இடையிட்டு கேட்டுவைத்தாள் துளசி.
“வாயை திறந்த கொன்னுடுவேன். மூச்” என்று அதட்டலிட்டவன்,
“என்னை பத்தி பேச சொல்லும் போதெல்லாம் கமுக்கமா இருந்துகிட்டு இப்போ பேசுற” என்று தலை முடியை வேகமாக கோதிவிட்டு கொண்டான்.
“அந்த சந்தோஷுக்கு உன்மேல எக்கச்சக்க பைத்தியம் போல. கொஞ்சம் லூசுன்னு கூட தோணுது. அவன்கிட்ட இருந்து நீ தப்பிக்கணும்ன்னா பேசாம அவங்க சொத்தை அவங்களுக்கு தூக்கி எறிஞ்சிடு” என்றான்.
“சரி உன் தாத்தன் சொத்து தான். பிச்சை போடுற மாதிரி போட்டுவிடு”
“அவ்வளவு பெரிய பிச்சை எல்லாம் என்னால போட முடியாது”
“நீ முக்கியமா, சொத்து முக்கியமா”
“இரண்டும் தான் முக்கியம்”
“இவளை. போண்டா கோழி மாதிரி இருந்துகிட்டு என்கிட்ட மட்டும் எகிறினா ஜெயிக்க முடியாது. எதார்த்தம் வேற. புரிஞ்சுக்க பாரு. இல்லை உன் மாமனுங்க புரிய வைப்பாங்க”
“புரிய வைக்கட்டும். நான் பார்த்துகிறேன்”
“அடிங்க. சொல்லிட்டே இருக்கேன். கேட்க மாட்டியா? ஒழுங்கா அந்த சொத்தை தூக்கி போடுற வழியை பாரு. இல்லை. றெக்கைய பிச்சு விட்டுடுவேன்” என்று எழுந்து நின்று இவளின் முகத்துக்கருகில் வந்து மிரட்டினான்.
“உங்களுக்கு எந்த சொத்தை கொடுக்கிறேன்னு சொல்லியிருக்காங்க” என்று அவன் கண்களை பார்த்து கேட்டாள் பெண்.
தேவா முகம் இறுக, “நான் தூக்கி போட்டா உங்களுக்கும் கிடைக்கும் தானே?” என்று கேட்டுவிட,
தேவாவின் முகத்தில் ஏறிய அனல் துளசி மேலும் அடித்தது.
“என்ன, என்ன சொன்ன? இப்போ சொல்லு. சொல்லுடி” என்றவன், ஆத்திரத்துடன் டேபிளை அடித்த அடியில் அதன் மேலிருந்த பொருட்கள் எல்லாம் சிதறியது.
துளசி உதறிய கால்களை வலுவாக சேர்த்து வைத்து கொண்டவள், “நீங்களும் என்கிட்ட மில்லை கேட்டீங்க தானே. உங்களுக்கும் அவங்களுக்கும் என்ன வித்தியாசம்? சொத்து, பணம் தானே எல்லாம்”
“ஆமா. அப்படி தான். அப்படிதாண்டி. எனக்கு அதுதான் முக்கியம். சொல்லிட்டேன் இல்லை. கொடு. இப்போவே எனக்கு கொடு. மில் எல்லாம் கொடு. கொடுடி” என்றவன் கண்கள் சிவந்து போனதுடன், கைகளும் தளர்ந்துவிட்டது.
தேவாவின் கோவத்தில் பயந்து வந்தாலும், ‘நான் சொன்னதில என்ன தப்பு? இவரும் காசு, பணம்ன்னு தானே இருக்கார்’ துளசிக்கு அவளின் எண்ணத்தில் மாற்றமில்லை.
“என்னமோ நீ தூக்கி போட்டா பொறுக்கிட்டு போறவன் மாதிரி நான் உன் கண்ணுக்கு தெரியறானா? ஒருகாலத்துல உன் பின்னாடி அலைஞ்சவன் தான். அதுக்காக பொறுக்கி மாதிரி பேசுற. பெரிய இவ. உலக அழகி, ரதி. அப்படியே மயங்கி விழுந்துட்டேன் பாரு. அவ்வளவு தான் உன் லிமிட்டு. பார்த்துக்கோ” என்று பொரிந்தவன்,
“இவ்வளவு பேசினத்துக்கு அப்புறம் நீ எப்படியாவது போ. இனி உன் விஷயத்துல நான் தலையிட்டேன்னா என்னை ஏன்னு கேளு. சரிதான் போடி” என்றவன் வேகமாக அலுவலகத்தை விட்டு வெளியேறிவிட்டான்.
வைரவேல் சிறிது நேரம் கழித்து போனில் அழைத்தவர், “இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம நம்பர் வந்திடும். கிளம்பி வா துளசி” என, கோர்ட் சென்றாள் பெண்.
வளர்மதி அங்கிருந்தவர், மகளின் கையை பாதுகாப்பாக பற்றி கொண்டார்.
பசுபதி அந்த நேரம் தம்பிக்கு அழைத்தவர், “நாலு மணிக்கு வீட்டுக்கு வந்திடு. தேவாவுக்கு பொண்ணு பார்க்க போகணும்” என்றார்.
“பொண்ணு பார்க்க எல்லாம் நான் எதுக்குண்ணா, நீங்களே பாருங்க” என்று வைரவேல் சொல்ல,
“டேய். உறுதி பண்ற மாதிரி தான் உன் அண்ணி சொல்லிட்டு இருக்கா. நீ இல்லாம எப்படி? வந்து சேரு” என்று வைத்துவிட, வைரவேல் மூச்சை இழுத்துவிட்டார்.
“இங்க முடிஞ்சதும் நீ வீட்டுக்கு போயிடு துளசி. நான் கொஞ்சம் வெளியே போகணும்” என்றார்.
“சார் அஞ்சு மணிக்கு ஒருத்தர் உங்களை மீட் பண்ண வரேன்னு சொல்லியிருக்கார்” என்று துளசி சொல்ல,
“நாளைக்கு பார்த்துக்கலாம்ன்னு சொல்லிடும்மா. இன்னைக்கு தேவாவுக்கு பொண்ணு பார்த்து உறுதி பண்ணுது” என்றார்.
“சரி சார்” என்று துளசி முடித்து கொண்டாள். அவளின் வழக்கும் ஆரம்பித்தது.