மஞ்சள் காட்டு மைனா 5

துளசியின் பார்வையில் கடுப்பாகி சுற்றி கொண்டிருந்த தேவா, மாலை போல சந்தோஷை சந்திக்க சென்றான்.

“சார் எப்போ மீட் பண்ணலாம்?” தொடர்நது போன் செய்து கொண்டிருந்தான் சந்தோஷ்.

“அலுவலகத்தில் இல்லை. வீட்டிற்கு வந்துவிட்டேன்” என்று சொல்லியும் விடவில்லை.

அவனின் தொல்லை தாங்க முடியாமல், “சந்தோஷ். வரேன். பேசலாம்” என்று அழைப்பை துண்டிக்க,

“தேவா” என்று பசுபதி மகனை முறைத்து நின்றிருந்தார்.

“ப்பா. வந்து பேசலாம்” என்று தேவா நழுவ பார்க்க,

“வேணாம் தேவா. நீ போற வழி சரியில்லை. துளசி விஷயத்துல நீ தலையிடுறது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல” என்றார்.

“ஏங்க. நம்ம மகன் புருஷன், பொண்டாட்டி பிரிய கூடாதுன்னு நினைக்கிறான். நியாயத்துக்கு நீங்க சந்தோஷபடணும். அதை விட்டு தேவாவை திட்டிகிட்டு இருக்கீங்க” என்று ஜெயலக்ஷ்மி இடையில் வந்தார்.

“லட்சுமி உனக்கு ஏதும் தெரியாது. நீ பேசாம இரு” என்று மனைவிக்கு சொல்ல,

“உங்களுக்கு தான் ஒன்னும் தெரியலை. சந்தோஷ் பையன் இப்போ திருந்தி பொண்டாட்டி கூட வாழ ஆசைப்படுறான். துளசி கொஞ்சம் விட்டு கொடுத்தா தான் என்ன?” என்றார் ஜெயலட்சுமி.

“ஓஹ். அப்போ புருஷன் தப்பு பண்ணிட்டு, திருந்திட்டேன். என்னோட வாழ வான்னு கூப்பிட்டா பொண்டாட்டி போயிடணும் இல்லை” என்று பசுபதி மனைவியை உறுத்து விழிக்க,

“என். என்ன பார்வை எல்லாம் தினுசா இருக்கு? சந்தோஷ் பண்ணது கல்யாணத்துக்கு முன்னாடி. இப்போ அவன் ஒழுங்கா தானே இருக்கான்” என்றார் அவர் விடாமல்.

“நல்ல பையன், நாணயமானவன்னு நம்பி தானே வளர்மதி பொண்ணை கொடுத்திருக்கு. அதுக்கென்ன பதில் வைச்சிருக்க?”

“சரி நீங்க உங்களுக்குள்ள பேசிட்டு இருங்க. நான் வந்திடுறேன்” என்று தேவா நிற்காமல் கிளம்பிவிட,

பசுபதி மனைவியை ஒரு மார்க்கமாக பார்த்து நின்றவர், “என்ன அந்த பையனுக்கு சப்போர்ட் அதிகமா இருக்கு?” என்று கேட்டார்.

“நீங்க தான் எதையும் யோசிக்காம போனா, நானும் அப்படியே இருக்கணுமா என்ன? ஏற்கனவே உங்க மகனுக்கு அந்த பொண்ணு மேல ஒரு கிறுக்கு. இப்போ அவ விவாகரத்து வாங்கி தனியா நின்னுட்டா என் மகன் என்ன முடிவெடுப்பான்னு எனக்கு தெரியாதா?” என்றார் அம்மா.

“உன் மகனுக்காக, துளசி எப்படியோ தொலையட்டும்ங்கிற”

“என்னங்க நீங்க? சந்தோஷ் இப்போ சரியா இருக்கிறதால தான் சொன்னேன்”

“உனக்கு ரொம்ப தெரியுமோ? யாரோ என்னவோ சொல்றாங்கன்னு கேட்டுகிட்டு பேசிட்டு இருக்காத. நான் ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்க மாட்டேன். கொஞ்சமாச்சும் நல்ல மனசோட இரு” என்று மனைவியை எச்சரித்தார் மனிதர்.

“அப்படி என்ன கெட்ட மனசோட இருந்துட்டேன். என் மகன் நல்லா இருக்கணும்ன்னு நினைக்கிறது கெட்ட மனசா?”

“ஆமா. துளசி அந்த கேடுகெட்டவனோட வாழணும், உன் மகன் நல்லா வாழணும்ன்னு நினைக்கிறது ரொம்ப நல்லா மனசோ? உனக்கு அவ்வளவு பயம் இருந்தா தேவாகிட்ட பேசி உன் அண்ணா மகளை நிச்சயம் பண்ணி வைச்சுக்கோ” என்று சென்றார் மனிதர்.

ஜெயலக்ஷ்மிக்கு அந்த யோசனை பிடித்துவிட, மகனிடம் பேசுவதற்காக இப்போதிலிருந்தே காத்திருக்க ஆரம்பித்தார்.

“உட்காருங்க சார்” என்று தேவாவிற்கு  இருக்கை காட்டினான் சந்தோஷ்.

இருவரும் ஓர் உணவகத்தில் இருக்க, சந்தோஷுடன் வந்த ஆட்கள் சற்று தள்ளி இருந்தனர்.

சாப்பிட, குடிக்க என்று ஆர்டர் கொடுத்த பின், “சொல்லுங்க” என்றான் தேவா.

“என்னோட கேஸ் பத்தி தான் சார். அடுத்து என்ன செய்ய போறோம்ன்னு”

“சந்தோஷ். இன்னமும் நான் கேஸ் எடுக்கிறேன்னு உங்ககிட்ட உறுதியா சொல்லலை” என்றான் தேவா.

“சரி. இப்போ நான் கேட்கிறேன். நீங்க என்னோட கேஸ் எடுங்க” சந்தோஷ் கேட்க.

“வீட்ல அப்பா ரொம்ப பிரச்சனை பண்ணிட்டிருக்கார். இப்போ கிளம்பும் போது கூட சண்டை தான்” என்றான் தேவா சலிப்புடன்.

“உங்க சித்தப்பாக்கு எதிரா நீங்க கேஸ் எடுக்க வேணாம்ன்னு சொல்றாரா?”

“எனக்குமே பிடிக்கலை சந்தோஷ். என் சித்தப்பா இப்போதான் பிராக்டிஸ்க்குள்ளே வந்திருக்கார். அவருக்கெதிரா நான் நிக்க வேணாம்ன்னு யோசிக்கிறேன்”

“ஓஹ்”

“நீங்க கணேசன்  சார்கிட்ட பேசுங்க. அவர் உங்க கேஸை பெட்டராவே டீல் பண்ணுவார்”

“நாம கேஸுக்குள்ளே போக வேண்டாம் சார். உங்க சித்தப்பா மூலமா சமாதானம் பேச்சு வார்த்தைக்கு போலாம். நீங்க முன்ன நில்லுங்க” என்றான்.

“எந்தளவு சரிப்பட்டு வரும்ன்னு எனக்கு தெரியல சந்தோஷ். அவங்க பேச ரெடியா இருக்கிற மாதிரி எனக்கு தெரியலை”

“பேசியே ஆகணும் சார். அதெப்படி துளசி என்னை விவாகரத்து பண்ணலாம்?” என்று சந்தோஷ் சட்டென கோபம் கொண்டான்.

தேவா அவனை புருவங்கள் சுருங்க பார்க்க, “எஸ். அங்க சுவாதியோட வாழ்ந்தேன் தான். ஆனா அது ஜஸ்ட் லிவ் இன். அதுக்காக என் பொண்டாட்டியை நான் விட்டுடணுமா? ஏன் கல்யாணத்துக்கு முன்னாடி யாரும் அப்படி, இப்படி இருக்கிறதில்லையா என்ன?” என்று ஆவேசம் கொண்டான்.

“அவங்களுக்கு அது பெரிய விஷயமா இருக்கலாம்” என்று தேவா தோள் குலுக்க,

“துளசி குணத்துக்கு எல்லாம் பெரிய விஷயம் தான்” என்றான் சட்டென குளிர்ந்து போய்.

“என்னை பார்த்ததும் பயந்து நடுங்குவா பாருங்க. அப்படியே அவளை அள்ளிக்கலாம்ன்னு வெறியா இருக்கும். போதை சார். அவ தெளியாத போதை” என்றான் கண்களை மூடி.

தேவாவிற்கு, “இது வேறா” என்றிருக்க,

“அவளை போய், துளசியை போய் எப்படி விடுறது சார். முடியாது. முடியவே முடியாது. சொத்தும் எனக்கு தான். அவளும் எனக்கு தான்” என்றான் திரும்ப கோவமாக.

‘அய்யே பைத்தியம்’ தேவா ஊப் என்று மூச்சை விட்டவன்,

“சொத்து வேணும்ன்னா நாம பேசி பார்க்கலாம்” என்றான்.

“அவ எனக்கு சொந்தமாகிட்டா சொத்தும் எனக்கு சொந்தமாகிடும் சார். அதனால அதை பத்தி கவலையில்லை” என்றான் சந்தோஷ்.

“நல்லது. தெளிவா இருக்கீங்க”

“நீங்க எனக்காக ஒருமுறை துளசியை தனியா மீட் பண்ண  ஏற்பாடு பண்ண முடியுமா ப்ளீஸ்”

‘என்னது நான் ஏற்பாடு பண்ணனுமா? என்னை யாருன்னு நினைச்ச. சாவடிச்சிடுவேன்டா உன்னை’ என்று தேவாவின் உள்ளுக்குள் எங்கோ ஒரு ஆக்ரோஷ குரல்.

‘நீ இன்னமும் உயிரோட தான் இருக்கியா?’ என்று அதனை அசட்டை செய்த தேவா, “ட்ரை பண்றேன் சந்தோஷ்” என்று கிளம்பிவிட்டான்.

வைரவேல் மகனின் சந்திப்பை அறிந்து இவனுக்காக காத்திருக்க, “தேவா உன்கிட்ட பேசணும்” என்று ஜெயலக்ஷ்மி மகன் வீட்டிற்குள் நுழைந்ததுமே ஆஜராகிவிட்டார்.

“சொல்லுங்கம்மா” என்று வைரவேல் பக்கத்திலே பொத்தென்று அவரை இடித்துக்கொண்டு விழுந்தான்.

“ச்சு. தள்ளி உட்காருடா” என்று வைரவேல் அவனை தள்ள,

முடிஞ்சா தள்ளிக்கோ என்பது போல் அமர்ந்திருந்தவனிடம், “அப்பா உன்கிட்ட பேசினார் இல்லை. என் அண்ணா பொண்ணு பத்தி” என்று ஜெயலட்சுமி ஆர்வமாக விசாரிக்க,

“பேசினார். பேசினார்” என்றான் தேவா.

“சரி. அப்போ பொண்ணு பார்க்க வரோம்ன்னு அண்ணனுக்கு தகவல் சொல்லிடலாமா? நீ அவளை நேர்ல பார்த்துட்டா நாம மேற்கொண்டு ஆக வேண்டியதை பார்க்கலாம்”

“நேர்ல பார்த்தா போதுமா? எனக்கு பிடிக்க வேண்டாமா?” என்று கேட்டான் மகன்.

“கண்டிப்பா பிடிக்கும். அப்படியே கிளி மாதிரி இருப்பா”

“வளைஞ்ச மூக்கை வைச்சுகிட்டா”

“தேவா”

“சொல்லுங்கம்மா”

“நான் இந்த வாரத்தில நல்ல நாள் பார்த்துட்டு சொல்றேன். அன்னைக்கு பொண்ணு பார்க்க போலாம். சரி தானே?”

“சொல்றீங்களா? கேட்கிறீங்களாம்மா?”

“அம்மாக்கு சொல்ல அதிகாரம் உண்டு. அப்படியே கூட வைச்சுக்க” என்று சென்றார் ஜெயலட்சுமி.

“என்ன சித்தப்பா உங்க அண்ணி என்னென்னமோ பேசிட்டு போறாங்க” என்று அவரின் மீசை முடியை பற்றி இழுத்தான்.

“கையை எடுடா” என்று தட்டிவிட்ட மனிதர்,

“அவங்க பையனுக்கு அவங்க பேசிட்டு போறாங்க. அதுல தப்பென்ன இருக்கு? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி தனியா சுத்திட்டு இருக்க போற?”

“ஏன் நீங்க இத்தனை வருஷமா தனியா சுத்தலை?”

“தேவா. உடனே என்கிட்ட வராத. என் கதை வேற”

“எல்லாம் தெரியும். விசாரிச்சுட்டேன். லவ் பெயிலியர். அப்படியே மகனை மாதிரி அப்பனும்”

“டேய். உனக்கு இதெல்லாம் யார் சொன்னா? கட்டு கதையை போய் நம்புற”

“ரீல் அந்து போச்சு சித்தப்பு” என்றான் தேவா.

“இதை அப்பறம் பேசுவோம். சந்தோஷை மீட் பண்ண போன போல” என்று கேட்க,

“ஆமா. உன் கிளையண்ட்கிட்ட பேசணுமாம். வாய்ப்பு கொடுக்க சொல்லி கேட்கிறான்” என்றான் தேவா.

“செருப்பு தான் அவனுக்கு சொல்லி வை” என்று வைரவேல் கொதித்துவிட்டார்.

“எதுக்கு இப்போ இவ்வளவு  கோவப்படுறீங்க” தேவா அவரை கேள்வியாக பார்த்தான்.

“இனி இந்த சமாதான பேச்சை எல்லாம் தூக்கிட்டு வர கூடாது சொல்லிட்டேன்” என்றார் வைரவேல்.

“யார் வந்தா இப்போ? நீங்க கேட்டீங்க நான் சொன்னேன். அவ்வளவு தான்”

“ம்ம். அதோட நிறுத்திக்கோ” என்று வைரவேல் மகனை தள்ளிவிட்டு சென்றார்.

“இந்த வீட்ல இருக்க எல்லோருக்கும் எதோ ஆச்சு. என்னென்னமோ பண்ணிட்டு இருக்கீங்க. சரியில்லை பார்த்துக்கோங்க” என்று நடு ஹாலில் இருந்தபடியே சத்தமாக சொன்னான் தேவா.

மறுநாள் அலுவலகத்திற்கு வர, துளசி மிகவும் தீவிரமாக எதையோ எழுதி கொண்டிருந்தாள்.

“அப்படியென்ன எழுதுற” என்று அந்த பேப்பரை பிடுங்கி பார்த்தான் தேவா.

“கேஸுக்காக நோட்ஸ். ம்ம்” என்று முழுதும் படித்தவன்,

“எல்லாம் தப்பு” என்று பேப்பரில் மொத்தமாக கோடிழுத்தான் தேவா.

துளசி அவனை பார்க்க கூட செய்யாமல், அந்த பேப்பரை எடுத்து வைத்துக்கொள்ள,

“உன்கிட்ட பேசணும்” என்றான்.

“எனக்கு பேச ஒன்னுமில்லை” என்று துளசி திரும்ப எழுத போக,

“எனக்கு இருக்கு. முதல்ல நிமிர்ந்து பாரு” என்று அதட்டினான்.

“இஷ்டமில்லை” என்று பதில் வர.

“அடிங்க” என்று அவள் முன் டேபிளில் தட்டினான்.

“ச்சு”

“நீ இப்படி இருக்கிறதால தான் அந்த லூசு எதை எதையோ பேசிட்டு இருக்கு, மனுஷங்க கண்ணை பார்த்து பேச உனக்கென்ன அப்படி ஒரு பயம்? அவனை பார்த்து நடுங்கிறதால தானே அவன் கண்டபடி உளறிட்டு இருக்கான்”

“அதுக்கு பேர் பயம் இல்லை. அருவெறுப்பு” என்றாள் பெண்.

“ஆஹ்ன்”

“ஆமா. அவனை பார்த்தாலே எனக்கு அசிங்கத்தை பார்த்த மாதிரி தான் இருக்கு” என்றாள் தேவாவின் கண்களை நேராக சந்தித்தபடி.

அவளின் பார்வையில் தேவா தான் கண்களை விலக்க, “நாங்க கண்ணை பார்த்தா உங்களுக்கு இப்படித்தான் இருக்கும். தைரியம் வேணும்” என்றாள் துளசி.

“ஹேய். எனக்கு என்ன தைரியம் இல்லை” என்று தேவா எகிறியவன்,

“என், என்ன இப்போ? பாரு. எவ்வளவு நேரம் பார்க்கிறியோ பாரு. நானும் பார்க்கிறேன்” என்று அவள் முன் டேபிளில் அமர்ந்து கொள்ள, துளசி போயா என்பது போல வேலை பார்க்க ஆரம்பித்தாள்.

“க்கும். அவன், சந்தோஷ் அந்தளவு எல்லாம் இல்லை. கொஞ்சம் கவுன்சிலிங் கொடுத்தா தேறிடுவான். யோசிச்சு முடிவெடு” என்றான் தேவா.

துளசி யோசிக்கவெல்லாம் இல்லை. கையில் இருந்த பேனாவால் அவன் உள்ளங்கையை பதம் பார்த்துவிட்டாள்.

“ஸ்ஸ். ஹேய்” என்று தேவா கையை உதற,

துளசி முனை உடைந்த பேனாவை தூக்கி அவன் நெஞ்சின் மீதே எரிந்தவள், “இனி என் விஷயத்துல பேச கூடாது” என்று விரல் நீட்டி எச்சரித்தாள்.

“என்னாச்சு?” என்று வைரவேல் வேகமாக வந்தவர், தேவாவின் உள்ளங்கையில் இருந்த காயத்தை பார்த்து அதிர்ந்து போனார்.

ரத்தம் வழிய ஆரம்பிக்க, “டேய் என்னடா இது? துளசி எதாவது துணி இருந்தா எடு” என்று அங்கும் இங்கும் பார்க்க,

துளசி அவளின் கர்சீப் எடுத்து தேவா கையில் கட்டு போட போனாள்.

“அடிங்க. குத்துறதையும் குத்திட்டு, கட்டு போட வரியா? என்னை தொட்ட உன்னை கொன்னுடுவேன்” என்று அவளின் கையை உதறினான்.

அதில் ரத்தம் துளசி மேல் எல்லாம் சிதற, “ம்ப்ச்” என்றாள் துளசி.

வைரவேல் மகன் சொன்னதில் அதிர்ந்து போக, தேவாவின் கையை வலுக்கட்டாயாமாக பற்றினாள் துளசி.

“சித்தப்பா. என் கையை விட சொல்லுங்க. இல்லை நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது” என்று தேவா கையை இழுத்தபடி குதிக்க,

துளசி கர்சீப்பில் கட்டிவிட்டவள், சட்டென அவன் கையை விட்டாள். அதில் தேவா டேபிளை இடித்து நின்றவன், பெண்ணை கடித்து குதறுவது போல பார்த்து வைத்தான்.

“என்னடா தேவா இது? துளசி என்னமா சொல்றான்” என்று வைரவேல் இருவரையும் மாறி மாறி பார்க்க,

“இவ நல்லதுக்கு தான் சொன்னேன். அதுக்கு போய் என்னை குத்திட்டா” என்று தேவா பேச.

“எனக்கு எது நல்லதுன்னு உங்களுக்கு எப்படி தெரியும்? என் விஷயத்துல முதல்ல நீங்க ஏன் பேசுறீங்க?” என்றாள் துளசி.

“ஏன் பேசினா என்ன? அப்படித்தான் பேசுவேன். உன்னால என்ன செய்ய முடியும்? ஆஹ்ன். இப்போ குத்திட்டா, எதோ நான் கொஞ்சம் ஏமாந்துட்டேன். இனி கிட்ட வந்து பாரு” என்றான்.

“தேவா. நாந்தான் உன்கிட்ட சொன்னேன் இல்லை. அந்த சந்தோஷ் பத்தி இனி நீ துளசிகிட்ட பேசாத” என்றார் வைரவேல்.

“என்ன சித்தப்பா. ஏன் பேச கூடாது. அதான் ஓடி ஓடி கல்யாணம் பண்ணா இல்லை. கொஞ்சம் முயற்சி பண்ணி அவன் கூட வாழ்ந்தா என்ன இப்போ?”

“தேவா” என்று வைரவேல் மகனை அதட்டலிட்டார்.

“உனக்கு முழு விஷயம் தெரியாது” என்றார்.

“உங்களுக்கு அந்தாள் கேஸ் வேணும்ன்னு தானே இப்படி எல்லாம் பேசிட்டு இருக்கீங்க” என்று துளசி கேட்க.

“ஆமா, அப்படித்தான். எனக்கு கேஸ் வேணும். நான் பேசுறேன்” என்றான் தேவா திமிராக.

“ச்சே” என்று துளசி வெளியே போக.

“என்னடா ஆச்சு உனக்கு? ஏன் இப்படி எல்லாம் பேசிட்டு இருக்க” என்று வைரவேல் ஆதங்கம் கொண்டார்.

“என் கையால இவளுக்கு எப்படி விவாகரத்து வாங்கி கொடுப்பேன்? என்னால முடியாது” என்றான் தேவா.

“தேவா”

“இவ நல்லா இருந்தா நான் நல்லா இருப்பேன் சித்தப்பா. அவளை நல்ல படியா இருக்க சொல்லுங்க”

“அந்த சந்தோஷ் கூட இருந்தா அவ கண்டிப்பா நல்லா இருக்க மாட்டா”

“அப்போ விவாகரத்து தான் ஒரே வழியா?”

“ஆமா”

தேவா நெஞ்சை நீவிவிட்டு கொண்டவன், “ஸ்ஸ்” என்றான் வலித்த உள்ளங்கை காயத்தால்.

 “ஏன் இவ்வளவு வலிக்குது சித்தப்பா? சின்ன காயம் தானே?” என்று கசங்கிய முகத்துடன் வைரவேலிடம் கேட்டான்.

“சின்னது தான். ஆனா ஆழம் அதிகம் தேவா. வலிக்க தான் செய்யும்” என்றார் மகன் தோள்தட்டி.

“பழகிடும் இல்லை” என்றான் தனக்கு தானே.