கந்தன் கோவிலில் ஒட்டு மொத்த குடும்பமும் குவிந்திருந்தனர்.
அமர்க்களமான பூஜை, அதை தொடர்ந்து அன்னதானம் என்று ஏற்பாடுகள் வேகமாக நடந்து கொண்டிருந்தது.
வைரவேல். அவரை முன்னிட்டு அவரின் பெற்றவர்கள் வேண்டிக்கொண்ட வேண்டுதல் இது.
“என்றைக்காவது மகன் மனது மாறி திருமணம் முடித்து, குழந்தை மனைவியிடம் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் அன்று இந்த வேண்டுதலை நிறைவேற்றி விடு”என்று பசுபதிக்கு சொல்லியிருந்தனர்.
அதை முன்னிட்டு அதிகாலையிலே வெகு விமரிசையாக அங்காளி, பங்காளிகள் எல்லோரையும் வரவைத்து பூஜை ஆரம்பித்தது.
வைரவேல், மாலதியுடன் அவரின் ஐந்து வயது மகன் ராகவ் முன்னிலையில் நிற்க வைக்கப்பட, “தேவா” என்று உடனே மகனை அழைத்தார் சின்ன தந்தை.
“நீ நில்லு. பெரியவன், சின்னவன் எங்க துளசி?” என்று அவர்கள் நால்வரையும் குடும்பமாக நிற்க வைத்து, அவர்களுக்கு பின்னே வைரவேல் நின்றார்.
“வேலு. உன்னோட வேண்டுதல் இது” என்று பசுபதி சொல்ல,
“இருக்கட்டும்ண்ணா. எனக்கு தான் நம்பிக்கை இல்லையே” என்றுவிட்டார் வைரவேல்.
“சாமி முன்னாடி வைச்சு என்ன பேசிட்டிருக்க நீ?” என்று பெரியவர் கண்டிக்க,
“நான் சொல்லலைன்னாலும் உங்க சாமிக்கு இது தெரிஞ்சிருக்கும். தெரியலைன்னா எப்படி சாமியாவர்?” என்று பதில் கேள்வி கேட்டு நிற்க,
“நீங்க விடுங்கண்ணா அவனை பத்தி தெரியாதா” என்று பசுபதி அந்த பேச்சை முடித்து, தம்பியுடன் மகனையும் கோவமாக பார்த்தார்.
“நான் ஏற்கனவே மூட் அவுட்ல இருக்கேன். உங்க அண்ணன் என்னை முறைக்கிறார். அப்புறம் நான் பேசாம கிளம்பிடுவேன்” என்று சித்தப்பாவிடம் கடுப்படித்தான் தேவா.
“அவர் கோவமா பார்க்கிறது என்னமோ புதுசு மாதிரி சிலிர்த்துகிற” என்றார் வைரவேல்.
“மூட் அவுட்டா இருக்கேன்னும் சொன்னேன்” என்று மகன் நினைவுபடுத்த,
“இருந்துக்கோ. கதை கேட்டா எனக்குத்தான் தலை வலிக்கும்” என்று உஷாராக பின் வாங்கிவிட்டார்.
“பொண்டாட்டி கூட சண்டையா இருக்கும்” என்று வைரவேல், மாலதியிடம் முணுமுணுக்கவும் செய்ய,
“உங்க ஜுனியர் இப்படி இருக்க நீங்க தான் காரணம்” என்றான் மகன் இடையில் வந்து.
“இவனை வைச்சுக்கிட்டு மனசுல கூட நினைக்க முடியாது. இதுல ரகசியம் வேற பேசினேன். என்னை சொல்லணும்” என்று தலையில் அடித்து கொண்டவர், வெகு தீவிரமாக சாமியை பார்க்க செய்ய,
“உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. மறந்துட்டீங்க” என்றான் தேவா.
“இனி நம்பிடுவேன் போல” என்றார் வைரவேல்.
“சித்தப்பா” என்று மகன் காண்டாக,
“துளசி. உன் புருஷனை கொஞ்சம் கூப்பிடுமா” வைரவேல் சொல்ல, துளசி மௌனமாக இருவரையும் பார்த்து திரும்பி கொண்டாள்.
“எவ்வளவு ஏத்தம் இவளுக்கு?” தேவா பொரும,
“பூஜையை பாரு தேவா” என்று ஜெயலட்சுமி மகனை அதட்டினார்.
“உன் மகன் எங்கடா?” என்று அதற்குள் காணாம போன தேவா பெரிய மகன் சித்தார்த்தை தேட,
“அந்த அடங்காதவனோட அம்மாவை கேளுங்க. எனக்கு தெரியாது” என்றான் தேவா.
“நான் போய் தம்பியை கூட்டிட்டு வரேன்” என்று ராகவ் ஓடிவிட,
“சித்தார்த் போகும் போதே அண்ணன்காரனுக்கு கண்ணை காட்டிட்டு தான் போயிருப்பான். அவ்வளவு தான். இரண்டும் சேர்ந்து ஆட்டம் போட போயாச்சு” என்றார் பசுபதி.
“போய் கூட்டிட்டு வா தேவா” என்று பெரிய அக்கா செல்வி தம்பியை விரட்ட,
“நான் போறேன். நீ இரு” என்று வைரவேல் கிளம்ப பார்க்க,
“அடுத்து நீ எஸ்கேப் ஆக பார்க்காத. நீ இங்கேயே நில்லு வேலு. நானே போய் இரண்டையும் ஓட்டிட்டு வரேன்” என்று பசுபதி சுதாரித்து சென்றார்.
“இவங்களை வைச்சுக்கிட்டு ஒரு பூஜையை நிம்மதியா பண்ண முடியுதா பாரு. அப்பனுங்க மாதிரி புள்ளைங்களும் இருக்கு. பாவம் பசுபதி” என்று பங்காளிகள் பேச,
பசுபதி ஒருவழியாக இரண்டையும், இரண்டு கையால் பற்றி இழுத்து கொண்டு வந்தார்.
பூஜையும் நல்லபடியே முடிந்துவிட, அடுத்து அன்னதானம். “பொறுப்பா நின்னு பாருங்க” என்று மகன், தம்பியை வைத்தே அன்னதானத்தை நடத்தினார் பசுபதி.
குடும்பத்தினர் உணவு முடித்து ஓரிடத்தில் அமர்ந்துவிட, வீட்டு மாப்பிள்ளைகள் மறுத்தும் உதவி செய்தனர்.
செல்வியின் பெரிய மகன் தான் எல்லா பிள்ளைகளையும் மேய்க்க, சித்தார்த் மட்டும் துளசியின் கட்டுப்பாட்டில்.
“அண்ணி. என் டாய் காணோம். தம்பியும், நானும் போய் தேடவா?” என்று ராகவ் அவளிடம் கேட்டு கொண்டிருந்தான்.
“ராகவ். டாய் புதுசா வாங்கிக்கலாம். உன் தம்பியை அனுப்புறதா இல்லை” என்று துளசி சொல்லிவிட,
“டேய் அண்ணா கேட்காத விடு” என்றான் ஐந்து வயது சித்தார்த் எனும் ரோஷக்காரன்.
ராகவ், சித்தார்த் இருவருக்கும் இரண்டு மாத வித்தியாசம் மட்டுமே. ஆனாலும் அண்ணன் என்று தான் அழைக்க வேண்டும் என்பது மகனுக்கு தேவா விதித்த கட்டளை.
“அதான் உன் தம்பி சொல்லிட்டான் இல்லை. நீ உன் சின்ன தம்பியை கொஞ்சம் வைச்சுக்கோ” என்று அவளின் இரண்டு வயது மகன் ஜீவா’வை கொடுத்தாள்.
ராகவ் தம்பியை வைத்து அங்கேயே விளையாட, “உன் கூட சேர்ந்தா மட்டும் தான் ராகவ் சேட்டை. மத்தபடி அவன் நல்லவன்” என்றாள் அகல்யா.
“அத்தை” என்ற சித்தார்த் ஏதும் பேசிவிட்டால் தேவா தோலை உரித்துவிடுவான். அதனாலே கோபத்துடன் அமர்ந்து கொண்டான்.
“அகல்யா என்ன பேச்சு இது. பசங்களுக்கு விளையாடணும். சும்மாவே இருக்க முடியுமா” என்று செல்வி தங்கையை கடிந்து கொண்டவள்,
“துளசி. அவங்களை நான் பார்த்துகிறேன். என்கிட்ட விடு” என்று மூவரையும் அழைத்து கொண்டு செல்ல, சித்தார்த் பெரிய அத்தைக்கு முத்தம் கொடுத்து ஓடினான்.
துளசிக்கு புன்னகை. “என்ன இருந்தாலும் உன் மகனுக்கு பெரிய அத்தை மேலதான் பாசம் ஜாஸ்தி” என்று அகல்யா நொடிக்க,
“நீ அவன்கிட்ட நடத்துகிற மாதிரி தான், அவன் உன்கிட்ட நடந்துப்பான். அப்படியே உன் தம்பி அவன்” என்றார் ஓய்வெடுத்து கொண்டிருந்த ஜெயலட்சுமி.
“உன் மகனுக்கும் என்னை விட பெரிய அக்காவை தான் பிடிக்கும். அதான் அவன் மகனும் அப்படியே இருக்கான். மத்தபடி நான் என்ன அவன்கிட்ட மோசமா நடத்துகிறேன்? சொல்லுங்கம்மா” என்று அகல்யா கேட்க,
“அண்ணி. அவனை விடுங்க. சேட்டை அவனுக்கு. நீங்க வாங்க நாம போய் காபி குடிச்சுட்டு வருவோம்” என்று துளசி அவளை அழைத்து கொண்டு செல்ல,
“என் மருமக தேறிட்டா. சமாளிச்சிக்குவா” என்று ஜெயலட்சுமி நிம்மதி கொண்டார்.
மாலதி அங்கு பரிமாறும் இடத்தில் கணவனுக்கு உதவிக்கு நிற்க, “உன்னை விட்டு உன் பொண்டாட்டி நகர மாட்டேங்கிறா வேலு. காத்திருந்து காட்டினாலும் நல்ல புள்ளையை கட்டியிருக்க” என்று பாட்டி ஒருவர் சொல்லி செல்ல,
வைரவேலுக்கு முகம் மட்டுமில்லை அகமும் மலர்ந்தது. மாலதியுடனான ஒவ்வொரு நாளும் அவரே நினைத்து பார்க்காதளவு புரிதலை கொடுத்து கொண்டிருக்கிறது.
துணை, அன்பை தேடி ஓர் பந்தம். மாலதியின் தேடல் உண்மை என்பதை அவரின் பங்களிப்பு சொல்லி கொண்டிருக்கிறது.
வைரவேல் ஓர் நேசத்தை இழந்தவர் என்பதாலே அவருக்கு அதன் மதிப்பு தெரியும்.
இருவரும் தாமதித்து இணைந்தாலும், உள்ளார்ந்த அன்பு அவர்கள் பந்தத்தை பலமாக காத்து நிற்கிறது.
“தேவா எனக்கான உறவை சரியாக தேர்ந்தெடுத்திருக்கிறான்” என்று மகன் மீது இப்போதும் பெருமை.
அவர்கள் வாழ்க்கை அவர்கள் கையில் என்றாலும், மகனையும் அதில் இணைக்காமல் விடமாட்டார் வைரவேல்.
“என்ன சித்தப்பா?” என்று தேவா, அவர் பார்வையில் அருகில் வந்துவிட,
“பத்தவைச்சுட்டான்” என்று வைரவேல் மகனை கோவமாக பார்க்க,
“இப்போ வேலை சரியா செய்றேன்” என்று சென்றான் தேவா.
மாலை போலே எல்லாம் அங்கிருந்து அவரவர் வீடு கிளம்ப, துளசி நேரே அம்மாவை பார்க்க சென்றாள்.
சரவணனின் பரம்பரை வீட்டில் தான் வளர்மதி, ஆனந்தி இருவரும் வசிக்கின்றனர். ஆனந்திக்கு காய்ச்சல், வளர்மதி அவருக்காக வேண்டி கோவிலுக்கு செல்லவில்லை.
“எப்படி இருக்கீங்க அத்தை?” என்று நலம் விசாரித்தாள் துளசி.
“இருக்கேன் துளசி” என்ற ஆனந்தி, பிள்ளைகள் நலம் விசாரித்தவர் முன்னைக்கு இப்போது நன்றாக தேறியிருந்தார்.
உடல் சுகத்தில் இல்லை, மனதளவில்! சந்தோஷ் அம்மாவிற்கும் துரோகத்தை தான் பரிசளித்திருந்தான்.
சுவாதி, துளசி கொடுத்த வழக்கில் சந்தோஷ் மீதான குற்றம் உறுதியாகும் நிலை.
“என்னை விட்டுடாதீங்கம்மா. எனக்கு உங்களை விட்டா யாரும் இல்லை” என்று சந்தோஷ் அம்மாவின் காலை பிடித்து கேட்டிருந்தான்.
சுந்தரம் மீது பண மோசடி, கொலை மிரட்டல், கணக்கில் காட்டாத பணம் என்று பல குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு அவருக்கான தண்டனையும் கிடைத்து, சிறையில் இருக்கிறார்.
தேவா இதற்காக அதிகமே வேலை பார்த்திருக்கிறான். சுந்தரம் அவனை பல வழியில் தாக்கவும் முயன்றிருக்கிறார். தேவா அடிபட்டும் பின் வாங்கவில்லை.
முதலில் துளசி மூலம் வங்கி கணக்கை முடக்கி, அவரின் கையில் பணப்புழக்கத்தை தடை செய்தான். அவரின் எல்லா ஆட்டமும் அதில்தான். ஆட்களும் அதனை கொண்டுதான் எனும் போது அவருடன் யார் தான் இருப்பர்.
அதனோடு கையில் வைத்திருக்கும் ஆதாரங்களை வைத்து அவரை கோர்ட்டில் சந்தித்தான். துளசியிடமும் ஓர் வழக்கை கொடுத்து வாதாட வைத்தான். அவருக்கான தண்டனையில் மனைவியின் பங்கும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான் தேவா.