மதிய உணவிற்கு வைரவேலை அழைத்து சோர்ந்து போனார் மாலதி.
“ஏன் டென்சன் எடுத்துகிற. வெளியே சாப்பிட்டுப்பார்” என்று ஜெயலட்சுமி சொல்ல,
“வீட்ல தான் சாப்பிடுவேன்னு காலையில மெனு கொடுத்ததே அவர்தான்க்கா” என்றார் மாலதி.
“அத்தை நான் வேணா போய் கொடுத்துட்டு வரவா?” என்று துளசி கேட்க,
“இல்லை. இல்லை வேண்டாம்” உடனே அத்தைகள் மறுத்துவிட்டனர். துளசியை தனியாக எங்கேயும் அனுப்ப கூடாது என்பதை தேவா மிகவும் உறுதியாக சொல்லியிருந்தான்.
“சரி. நான் ஆபிசுக்கு போன் பண்றேன்” என்று துளசி அலுவலகத்திற்கு அழைக்க,
“தேவா, சித்தப்பா இரண்டு பேருமே ஆபிஸ் வரலை” என்றான் அருண்.
‘அம்மாவை மீட் பண்ணதானே போனார். ஒருவேளை மாமாவும் அங்கதான் இருப்பாரோ?’ என்று வளர்மதிக்கு அழைத்து கேட்க, “இங்க இல்லை” என்றார் அவர்.
“ம்மா. உங்களை மீட் பண்ண அவர் போன்ல கேட்டாரே”
“இல். இல்லையே. நான் வீட்ல, க்கும் மில்லுக்கு வந்துட்டேன்” என்று வைத்தார் வளர்மதி.
என்னடா இது?
“அத்தை. மாமா கேஸ் விஷயமா வெளியே இருக்கிற மாதிரி இருக்கு. ஆபிஸ் வந்ததும் கூப்பிட சொல்லியிருக்கேன்” என்றாள் துளசி.
“உன் புருஷன் கதை என்ன?” என்று மாமியார் கேட்க,
“அவரும் வெளியே தான் இருக்காராம் அத்தை” என்றாள் மருமகள்.
“அப்போ இரண்டு பேரும் சேர்ந்து தான் எங்கேயோ போயிருக்கணும்” என்றார் ஜெயலட்சுமி.
துளசியின் போன் ஒலிக்க கணவனா என்று வேகமாக எடுக்க, தெரியாத எண்.
சுந்தரமா? துளசி சந்தேகத்தில் எடுக்காமல் விட, மெசேஜ் வந்து விழுந்தது.
சுந்தரம் தான். “உன் புருஷன் எல்லா சொத்தையும் எழுதி வாங்க போறான்” என்று அனுப்பியிருந்தார்.
‘இவருக்கு வேற வேலை இல்லை’ துளசி அதை ஒதுக்கி தள்ள, தேவா புகைப்படம் வந்து விழுந்தது. இன்று அவன் அணிந்திருந்த உடை. வளர்மதியும் அவனுடன் தான் இருக்கிறார்.
“உன் அம்மாகிட்ட சாமர்த்தியமா பேசி, பத்திரம் பண்ண தயார் பண்ணிட்டிருக்கான்”
“உன்னை கையெழுத்து போட வைச்சிடுவாங்க”
“நான் சொல்றதை நம்பலைன்னா உனக்கு தான் நஷ்டம்”
“பொண்ணு பார்க்க போன இடத்துல கூட சொத்தை கேட்டிருக்கான். உன்னை அவன் கல்யாணம் பண்ண சொத்தும் ஒரு காரணம்”
“உன் தாத்தா கொடுத்த அத்தனை சொத்தும் அவனுக்கு வேணும். என்னதான் காதலிச்சாலும் இரண்டாவதா கல்யாணம் பண்ணிப்பாங்களா? இவன் பண்ணிப்பான். கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துங்க கிடைக்கும் இல்லை”
“என் மகன் கெட்டவன்னா தேவா ரொம்ப நல்லவனா? நான் பண்ண அத்தனை கேடுகெட்ட வேலைக்கும் அவன் தான் துணை நிக்கிறான். தேவா பணத்தாசை பிடிச்சவன்”
“பாரு பத்திரம் எல்லாம் ரெடியாகிட்டு இருக்கு” என்று அதற்கான ஆதாரங்களை அனுப்பினார்.
பத்திரம் எழுதுபவரிடம் தேவா பேசுவது, வளர்மதி அவனிடம் பைல் கொடுப்பது என்று பல புகைப்படங்கள்.
இறுதியாக அவர் அனுப்பிய மெசேஜ், அதனுடன் இருந்த புகைப்படம், புகைப்படத்தில் இருந்தவரின் வீடியோ என்று துளசி நிலை குலைந்து போனாள்.
கண்ணீர் வழிய ஆரம்பித்தது. வலியில் துடிக்கும் இதயத்தை இரு கைககளாலும் அழுத்தி பிடித்து கொண்டாள்.
‘முடியவே முடியாதா?’
என் வேதனை தீராதா?
வாழணும்ன்னு ஆசைப்படும் போதெல்லாம் அழுகை தான் எனக்கு வாய்க்குமா?
“துளசி” என்று அறைக்கதவு தட்டப்பட்டது.
“டீ குடிக்க வா துளசி” என்று மாலதி அழைத்து கொண்டிருந்தார்.
மாலை ஆகிவிட்டது. முகத்தை நன்றாக கழுவிக்கொண்டு வெளியே சென்றாள்.
“என்னாச்சு. ஏன் முகம் வீக்கமா இருக்கு?” என்று அத்தைகள் மருமகளை கண்டவுடனே கேட்டனர்.
“தூங்கிட்டேன்” என்று துளசி நமநம குரலில் சொல்ல, எப்படி நம்புவது?
மௌனமாக டீ குடிக்க ஆரம்பிக்க, வைரவேல் வந்தார்.
“வந்துட்டீங்களா? மதியம் சாப்பிட்டிங்க தானே?” என்று மாலதி கேட்க,
“ஆச்சு” என்றமர்ந்தார் வைரவேல்.
“சோர்ந்து போயிருக்கீங்க. டீ குடிங்க” என்று கொடுத்தவர், “தேவா எங்க?” என்று கேட்க,
“எனக்கெப்படி தெரியும்” என்றார் மனிதர்.
“இல்லைங்க காலையில் இருந்து தேவாவையும் காணலை. அதான்”
“நான் என்ன பண்றது? அவனை என்ன கையிலே வைச்சுட்டா சுத்த முடியும்” படபடவென பொரிந்தார்.
பெண்களுக்கு அதிர்ச்சி! முதன்முறையாக தேவா பற்றி இவ்வாறு பேசுகிறார்.
அவரிடம் தெரிந்த மாற்றத்தில் மேற்கொண்டு எது கேட்கவும் பெண்கள் தயங்கினர்.
வைரவேல் கையில் இருந்த டீயும் ஆற ஆரம்பித்தது. அதையே வெறித்து பார்த்திருந்தார் மனிதர்.
வெளியே கார் நிறுத்தும் சத்தம் கீரிச்சிட்டு கேட்டது.
“சித்தப்பா” என்று தேவா வீட்டிற்குள் வந்தான். துளசி கணவன் வரவும் எங்கோ பார்வையை வைத்தாள்.
“எங்க போயிருந்தீங்க நீங்க?” என்று தேவா வைரவேல் முன் நின்றான்.
என்ன? என்று மகனை அவர் பார்க்கவில்லை.
“சித்தப்பா. உங்களை தான் கேட்கிறேன். இன்னைக்கு முழுசும் எங்க இருந்தீங்க” என்று அவர் தோளில் கை வைத்தான் தேவா.
அடுத்த நொடியே அவன் கை தட்டி விடப்பட்டதுடன், “நான் எங்க இருந்தா உனக்கென்னடா?” என்று வெடித்தார் வைரவேல்.
“சுந்தரத்தை போய் பார்த்திருக்கீங்க” தேவா கோவமாக கேட்க,
“பார்த்தேன். என்னாங்குற இப்போ?” வைரவேல் எழுந்து மகனுக்கு நேராக நின்றார்.
“என்ன சொல்லி உங்களை வர வைச்சான்”
“சொல்ல முடியாது”
“சித்தப்பா. நீங்க தேவையில்லாத வேலை பார்க்கிறீங்க”
“என் இஷ்டம்”
“அப்படி விட முடியாது”
“நீ யாருடா என்னை விட?”
“சித்தப்பா”
“என்னடா. என்ன குரல் உசத்துற?”
“ஏங்க. தேவாகிட்ட ஏன் இப்படி பேசுறீங்க?” மாலதி தாங்காமல் இடையிட்டார்.
துளசி நடப்பதில் அரண்டு போயிருக்க, ஜெயலட்சுமி போன் எடுத்து பசுபதிக்கு பேசி கொண்டிருந்தார்.
“தேவாகிட்ட பேச கூடாதா? பெரிய இவனா இவன்?” என்று கேட்டார் வைரவேல்.
“சித்தப்பா. நாம வெளியே போலாம்”
“உன்கூட நான் எதுக்குடா வரணும்? வர முடியாது”
“சித்தப்பா” என்று தேவா பின் கழுத்தை அழுத்தமாக தேய்த்துவிட்டான்.
“அவனோட எந்த கான்டெக்ட்டும் வைச்சுக்காதீங்க” என்றான் வரவழைத்து கொண்ட பொறுமையுடன்.
“உன்னை விட நான் பெரியவன், எனக்கு புத்தி சொல்ற வேலை வைச்சுக்காத”
“புத்தி சொல்ல தேவைப்பட்டா சொல்வேன்” என்றான் தேவா.
“பொறுமையா பேசு தேவா” ஜெயலட்சுமி மகனை அடக்கினார்.
“உங்க கொழுந்தனுக்கு முதல்ல சொல்லுங்க. அந்தாளை போய் இவர் எதுக்கு பார்க்கணும்?” என்று அன்னையிடம் வெடித்தான்.
“அண்ணி. நான் எங்க போகணும், யார்கிட்ட பேசணும்ன்னு இவன் முடிவு பண்ணுவானா?” என்று வைரவேலும் அண்ணியிடம் கேட்டார்.
“முடிவு பண்ணுவேன். ஏன் பண்ண கூடாது. நீங்க அந்தாளை இனி சந்திக்கவே கூடாது”
“திரும்ப திரும்ப என் விஷயத்துல தலையிடுற. என்னடா? என்ன ரொம்ப குதிக்கிற?” என்று தேவா தோள்களில் அடித்து அவனை தள்ளினார் மனிதர்.
தேவா தடுமாறி நிற்க, துளசி ஓடிவந்து கணவன் கை பற்றினாள்.
“ஏங்க இதென்ன?” என்று மாலதி கணவன் கை பற்றி தடுக்க,
“தம்பி. எதுவா இருந்தாலும் பொறுமையா பேசலாம். இருங்க உங்க அண்ணன் வந்திடட்டும்” என்று ஜெயலட்சுமி மறுபுறம் கொழுந்தனை நிதானமாக்க முயன்றார்.
வைரவேல் மகனை கோவமாக பார்க்க, மகன் நெஞ்சம் ஏறி இறங்க தந்தையை முறைத்தான்.
“முறைக்கிற. என்னை முறைக்கிற நீ” என்று வைரவேல் அதற்கும் கோவம் கொள்ள,
“தேவா. நீ வா. ரூமுக்குள்ள இரு. துளசி அவனை கூட்டிகிட்டு போ” என்று மகனை இழுத்துவிட முயல, தேவாவோ இருந்த இடம் விட்டு அசைவேனா என்று நின்றான்.
“போடா. ஒழுங்கா என் பார்வையை விட்டு விலகிடு” என்று வைரவேல் ஒற்றை விரல் நீட்டி எச்சரிக்க,
“போக முடியாது. என்ன பண்ணுவீங்க? அடிப்பீங்களா? அடிங்க. அடிங்க பார்க்கலாம்” என்று வைரவேலை நோக்கி சென்றான் தேவா.
“ஏங்க என்ன பண்றீங்க?” என்று துளசி அச்சத்தில் கத்தி, அவன் கையை இறுக்கமாக பிடித்தாள்.
“நீ ஏண்டி பயப்படுற? உன் மாமா என்னை என்ன பண்றார்ன்னு நானும் இன்னைக்கு பார்த்திடுறேன்” என்று வைரவேலை எதிர்கொண்டே நின்றான் தேவா.
“தம்பி. அவனை விடுங்க. சின்ன பையன். நீங்க உட்காருங்க. உங்க அண்ணன் வந்ததும் அவர்கிட்ட பேசுங்க. உங்க மகன் தப்பு ஏதும் பண்ணியிருந்தா சொல்லுங்க. அவனை கண்டிக்கலாம்” என்று ஜெயலட்சுமி கொழுந்தனை சமாதானம் செய்தார்.
“மகனா?” என்று வைரவேல் சொல்லி நிறுத்த,
“ஏன் மகன் இல்லையா? நான் உங்க மகன் இல்லை” என்று தேவா ஆக்ரோஷமாகிவிட்டான்.
“எனக்கு மகன் கிடைக்க கூடாதுன்னு தான் நீ இவங்களை எனக்கு கல்யாணம் பண்ணி வைச்சியாமே?” என்று மாலதியை கைநீட்டி வைரவேல் வார்த்தைகளை கொட்ட, மாலதி அதிர்ச்சியுடன் கணவனை பார்த்தார்.
“தம்பி. பார்த்து பேசுங்க” என்று ஜெயலட்சுமி வெகுண்டார்.
தேவா ஒருவார்த்தை கூட உதிக்காமல் தந்தையை வெறித்தான்.