மஞ்சள் காட்டு மைனா 25

இதுதான் காதலா! ஒருவரை காதலித்தால் இப்படித்தான் இருக்குமா?

நேற்றிரவு தேவா உச்சரித்த ஒவ்வொரு வார்த்தையும் அச்சடித்தது போல் அவளின் மனதில் பதிந்து போனது. துளசி நாள் முழுதும் அவனையே யோசித்திருந்தாள்.

தேவாவின் கண்ணீர் அவளின் கையை இப்போது சுட்டது போல் உணர்ந்தாள்.

சந்தோஷுடனான திருமணம் முடிவான நேரம் அவள் கைப்பற்றி கேட்டானே! கண்ணீர் அவள் மேல் சிந்தினானே!

அப்போது அதை கடந்துவிட்டாள். ஆனால் இன்று என்னமோ அதிலே உழன்றாள்.

காதல் சிரிக்கவும் வைத்து, அழவும் வைக்குமா? துளசி அவளின் கேள்விகளை இரவு தூங்க வந்தவனிடம் கேட்டாள்.

இன்பம், துன்பம் இரண்டுமே வேண்டும் என்றால் அவன் காதலித்தால் போதும்! என்றான்.

ஆகாயத்துலயும் மிதந்திருக்கேன்! அதள பாதாளத்துக்கும் போயிருக்கேன் என்றான்.

“அப்படி காதலிக்க தான் வேணுமா?” துளசி கேட்க,

“காதலிச்சே ஆகணும்ன்னு ஒத்த கால் தவம் பண்ணலை. வேணும்ன்னேவா செய்வாங்க. வந்திடுச்சு. என்ன பண்ண சொல்ற?” என்றான் தேவா.

“சின்ன பிள்ளையில் இருந்து நீங்க என்னை சீண்டதான் செய்வீங்க?” துளசி உர்ரென வினவ,

“ஆமா உன் அப்பா கை பிடிச்சுட்டே சுத்துவ, கியூட்டா வேற இருந்து தொலைப்ப. வம்பிழுக்க தான் தோணும். நான் என்ன பண்ணட்டும்” தேவா தோள்களை குலுக்கினான்.

“என்கிட்ட எல்லாம் பாசமா நடந்துப்பாங்க. நீங்க மட்டும் தான் அழ வைப்பீங்க. அதனாலே உங்களை எனக்கு பிடிக்கிறதில்லை” துளசி இப்போதும் கடுப்பானாள்.

“பிடிக்காட்டி போகுது போடி. ரொம்பத்தான்” கணவன் கோவமானான்.

“என் அம்மா உங்களை அடிச்சதுக்கு என்னை மிரட்டினவர் தானே நீங்க?”

“கூப்பிட்டு கேட்டதே உனக்கு மிரட்டுறதா? பாரு இப்போவும் என் விரல் இப்படி இருக்க உன் அம்மாதான் காரணம்”

“விரல் நல்லாத்தான் இருக்கு. நீங்க சும்மா சொல்லிட்டு இருக்கீங்க”

“ஹேய். இங்க நல்லா பாருடி. எலும்பு லைட்டா வளைஞ்சு இல்லை” அவள் முகத்துக்கே நேரே நீட்டினான்.

“கண்ணை குத்திடாதீங்க” என்று அவன் விரலை பிடித்து பார்க்க, பெண்ணுக்கு சரியாகத்தான் தெரிந்தது. சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மாட்டான். விதண்டாவாதக்காரன்!

“படிக்கலைன்னா அடிக்கத்தான் செய்வாங்க. நீங்க படிச்சிருக்கணும். கூட சேட்டை வேற. கிளாஸ்ல ரொம்ப முரண்டு பண்றீங்கன்னு அம்மா வீட்ல வந்து அப்பாகிட்ட சொல்வாங்க” என்றபடி அவன் விரலை வருடினாள்.

“அந்த வயசுல அப்படித்தான் இருப்பாங்க. அதுக்காக பச்சை பிள்ளையை விரல் எலும்பே மாறுற அளவுக்கா அடிக்கிறது? இங்க எல்லாம் கூட செய்” என்று மீதம் உள்ள விரல்களையும் மனைவியிடம் நீட்டினான்.

‘இவர் பச்சை பிள்ளையா?’ துளசிக்கு பொறுத்து கொள்ள முடியவில்லை.

அப்போதே பெரிதாக தான் வளர்ந்திருப்பான்.

“பச்சை பிள்ளை தான் காதலிக்குமா?” துளசி கேட்டுவிட,

“என்னமோ டவுசர் போட்டதில் இருந்தே காதலிக்கிற மாதிரி கேட்கிற. சும்மா பிடிக்கும். அவ்வளவு தான்” என்றவன்,

“வயசு கோளாறு அதான் போந்தா கொழிக்கிட்ட போய் கவுந்துட்டேன்” என்று உதடு பிதுக்கினான்.

“இப்போவும் வயசு கோளாறா என்ன?”

“ம்ம். காதல் கோளாறு”

ஆரம்பிச்சுட்டார்! துளசி காண்டாகி அவன் விரல்களை தள்ளிவிட்டாள்.

“அவ்வளவு தைரியம்” என்று கண்ணை உருட்டி மிரட்டினான்.

“ஏன் என் தைரியத்துக்கு என்ன குறை? உங்களையே கல்யாணம் பண்ணியிருக்கேன் பார்த்துக்கோங்க” என்றாள் கெத்தாக.

“அடிங்க. என்னடி என்னையே?” தேவா படக்கென எழுந்து மனைவி முகத்துக்கு நேரே வந்தான்.

துளசி அவன் நெற்றியில் ஒற்றை விரல் வைத்து அவன் முகத்தை பின்னால் தள்ளியவள், “நீங்க ரொம்ப சாதுவா?” என்று கேட்டாள்.

“நீ சாதுன்னு எல்லோரையும் ஏமாத்துறது போல எனக்கு வராது”

“நான் சாதுதான். நீங்க தான் என்னை இப்படி மாத்திட்டீங்க” அவன்மேல் குற்றம் சாட்டினாள்.

“அவ்வா! அவ்வா! கேடிடி நீ” என்று வாய் மேல் கை வைத்தான் தேவா.

“என்கிட்ட பம்மிட்டு என்னை என்னவோ ரவுடி ரேஞ்சுக்கு பில்ட் அப் பண்ணதே நீதாண்டி” என்று அவள் மேல் இவன் குற்றம் சாட்டினான்.

“இல்லைன்னா நீங்க ரொம்ப அப்பிராணி தான் இல்லை” துளசி கண்களை இடுக்கினாள்.

“இந்த தேவா எப்படி இருந்தா உனகென்னடி? போய் தூங்கு போ” என்று அவன் தூங்க செல்ல,

“இப்போ நான் மிஸஸ் தேவா. எனக்கு இருக்கு” என்று அவன் கையை பிடித்தாள் துளசி.

“என்னடி சும்மா சும்மா கை பிடிக்கிற. கண்ட்ரோல் மிஸ் ஆகுது இல்லை”

“கண்ட்ரோலா இருந்து என்ன சாதிக்க போறீங்க?”

“ம்ப்ச். முதல்ல விடுடி”

“பதில் வரலையே”

“நான் உன்கிட்ட வந்துடுவேன் பரவாயில்லையா?” என்று தேவா பார்த்த பார்வையில், துளசியின் காதோரம் சட்டென சூடானதுடன் அவளின் பிடியும் தளர்ந்தது.

வா’ன்னு சொல்ல மாட்டேங்கிறாளே! கணவனுக்கு ஏமாற்றம்!

வா’ன்னு கூப்பிட்டா மட்டும் போயிடுவியா? அவனின் காதல் கேள்வி கேட்டது.

தெரியலை. எனக்கு அவ வேணும். ஆனா? காதலின் பிடியில் சிக்கி தவிக்கும் தேவா.

அந்த காதலே அவன் மனைவிதானே!

இருவரும் அமைதியாக அவரவர் இடத்தில படுக்க, துளசியிடம் அசைவு நிற்கவில்லை.

மனைவி பக்கம் திரும்பி படுத்தவன், “ரொம்ப யோசிக்காத. தூங்கு. பார்த்துக்கலாம்” என்றான்.

துளசியும் கணவனை பார்க்க, தேவாவும் மனைவியை பார்த்தான்.

இருவரின் கண்களும் மற்றவரோடு கலக்க, தேவா கை மெல்ல மனைவி பக்கம் நீண்டது.

துளசியின் இதயம் வேகமாக துடிக்க, உதடுகளை கடித்து கொண்டாள்.

மனைவியின் மாற்றத்தை ரசித்தபடி, அவளின் உச்சந்தலையை வருடினான் தேவா.

இதய துடிப்பு நார்மலாக, உதடுகளை விடுவித்தாள் பெண்.

தேவா மெலிதாக வருடிவிட, துளசி சுகமாக கண்களை மூடினாள்.

தேவா அதன் பின் தூங்கவே இல்லை.

“எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு. வீட்டுக்கு வர லேட்டாகும்” என்று தேவா காலை உணவின் போது சொல்ல,

“தேவா. நான் உன்கிட்ட பேசணும்” என்றார் பசுபதி.

“நீங்க விருந்துக்கு போக ஆரம்பிக்கணும். உங்களுக்கு தனியா எதாவது திட்டம் இருந்தா சொல்லுங்க. அதுக்கேத்தது  போல நான் அவங்களுக்கு சொல்லிடுறேன்” என்றார்.

‘தனி பிளானா?’ தேவா திரும்பி மனைவியை பார்க்க,

என்னை எதுக்கு பார்க்கிறார். இவரோட! திரும்புங்க என்று கண்ணை அசைத்தாள்.

“என்னடி கேட்கிறார்?” என்று பரிமாற அருகில் வந்த மனைவியிடம் விசாரித்தான்.

இவருக்கு தெரியாதாக்கும்! துளசி அடிக்கண்ணால் கணவனை முறைத்தாள்.

“ஹேய் சொல்லுடி” என்று அதட்ட,

“ஹனிமூன் பத்தி கேட்கிறார்” என்ற துளசி கணவனை ஆராய்ந்தாள்.

நைட்டெல்லாம் இவர் தூங்கவே இல்லையா என்ன?

என்னவோ தீவிர சிந்தனையில் இருந்தான். புருவங்கள் சேர்ந்தே இருந்தது.

“ப்பா. நானே உங்ககிட்ட சொல்றேன். கொஞ்சநாள் எங்கேயும் போக முடியாது” என்று முடித்துவிட்டான்.

வீட்டினர் முகம் பார்த்து கொண்டனர். விருந்து பற்றி கவலையில்லை. தேனிலவு ஏன் போகவில்லை? துளசியின் மேல் எல்லார் பார்வையும் தொட்டு வந்தது.

“அத்தை உங்களை மீட் பண்ணனும்” என்று தேவா போனில் கேட்டு கொண்டே கார் எடுத்தான்.

துளசி கணவனுக்கு பின்னால் வந்தவள், அம்மாவையா மீட் பண்ண போறார்? ஏன்?

“அத்தைகிட்ட சொல்லிடும்மா. நான் ஆபிஸ் கிளம்புறேன்” என்று வைரவேல் பைக் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.

“லன்ச் எடுத்துட்டு போகாம கிளம்பிட்டாரா?” என்று மாலதி அவசரமாக ஓடிவந்தார்.

“லன்ச் கொடுத்துக்கலாம் அத்தை. நான் கூட போறேன்” என்று துளசி சொல்ல,

“ம்ஹூம் நீ வேணாம் துளசி. போன் பண்ணா வீட்ல வந்து சாப்பிட்டுக்க போறார்” என்றார் மாலதி.

பெண்கள் மூவருமாக கோவிலுக்கு கிளம்பினர். சிறிது காலம் கவனமாக இருக்க வேண்டும் என்பதால் மூவருடன் பசுபதி சென்றார்.

ஜெயலட்சுமி பூஜை கொடுத்திருக்க, தேவா முதலிலே முடியாது என்றுவிட்டான். வைரவேல் எப்போதுமே வருவதில்லை.

நல்லபடியே பூஜை முடிந்து வீடு திரும்பினர். தேவா, வைரவேல் இல்லை என்ற குறை மட்டும் மிச்சம்.

“அப்படியே சின்ன அப்பனும், மகனும் ஒரே மாதிரி இருக்காங்க. கூப்பிடுறோம்ன்னு கூட வந்து தலை காட்டிட்டு போறதில்லை” என்று பசுபதி காரில் வைத்து பேசினார்.

“முதல்லே இருந்து இரண்டு பேரையும் பிரிச்சு விட்டிருக்கணும். உனக்கு நான் துணை, எனக்கு நீ துணைன்னு ஜோடி சேர்ந்துட்டாங்க. சின்னது கூட என் பேச்சை கேட்கிறதில்லை” என்றார்.

“கோவிலுக்கு போய்ட்டு வரும் போது இதென்ன பேச்சு. பிரிச்சு விடணும் அது இதுன்னு. அமைதியா இருங்க” என்று ஜெயலட்சுமி கணவனை கண்டித்தார்.

“மகன் பேச்சு வந்தா போதும் பாய்ஞ்சு வந்திடுவியே. பூஜை அவங்க கல்யாணத்துக்கு தானே கொடுத்த. அவங்களே வரலைன்னா என்ன பலன்?” என்று கேட்டார்.

“அதான் அவங்க பொண்டாட்டிங்க இருக்காங்க இல்லை. கடவுள் சேர்ந்தே தான் ஆசீர்வாதம் கொடுப்பார். உங்களை மாதிரி பிரிச்சு பேசமாட்டார்”

“முதல்ல நல்ல புத்தி கொடுக்கட்டும்”

“கோவிலுக்கு போயிட்டு வந்தா உங்களுக்கு சாமி வந்திடும். நேரா என் கொழுந்தன், மகன் மேல தான் வருவீங்க”

“சாமி வந்து கையில வேப்பிலை வைச்சா ஆடிட்டு இருக்கேன். கார்ல கமுக்கமா தானே உட்கருந்திருக்கேன்”

“அதான் வாயிலே ஆடுறீங்களே. போதும்” என்று பெரிய தலைகள் தங்களுக்குள்ளே போரிட, மாலதியும், துளசியும் பம்மிக்கொண்டு இருக்குமிடம் தெரியாமல் வீடு வந்து சேர்ந்தனர்.

அவரவர் கணவனை பற்றி கேட்டால் பதில் சொல்ல முடியாது என்ற உஷாராம்!