மஞ்சள் காட்டு மைனா 20 10045 மஞ்சள் காட்டு மைனா 20 அதிகாலையிலே துளசியின் போன் ஒலித்தது. கண்களை திறக்க முடியாமல் நல்ல தூக்கம். “ச்சு” என்ற தேவாவின் குரலில் துளசி கண்களை திறந்தாள். நேற்றிரவு கணவனை மடி தாங்கி உறங்க வைத்ததும், பின் அவன் தலையை தலையணையில் நகர்த்தி வைத்து தானும் படுத்தது நினைவிற்கு வந்தது. அருகருகே ஆழ்ந்த தூக்கம். முந்தின இரவு தூங்காததால் இருக்கலாம். திரும்ப போன் ஒலிக்க, துளசி எழுந்து சென்று எடுத்தாள். ஏதோ தெரியாத எண். சுருங்கிய புருவத்துடன் எடுத்த நேரமே, “எனக்கு என் மகன் வேணும்” என்று அவளின் காதில் இரைந்தார் சுந்தரம். “ஹலோ. ஹேய். நான் கேட்கிறது கேட்குதா? துளசி” என்று திரும்ப கத்த, “சொல்லுங்க” என்றாள் பெண். போனை வைத்துவிடவே மனம் விரும்பியது. ஆனால் அவரின் கோவத்தை மீறி மனிதரின் குரலில் கலக்கம். “அதான் சொன்னேனே, எனக்கு என் மகன் வேணும். உன் புருஷன் அவனை என்ன பண்ணான்னு கேட்டு சொல்லு. இல்லை உன் மில்லை தரை மட்டமாகிடுவேன்” என்று மிரட்டினார் சுந்தரம். துளசி போனை வைத்துவிட்டாள். அவருக்காக பேச நினைத்தால் அவர் மில் வைத்து மிரட்டவும் கோவம். சுந்தரம் விடாமல் வீட்டின் எண்ணுக்கு அழைக்க, துளசி ஹாலுக்கு வந்து போன் எடுத்தவள், “எதுக்கு இப்போ விடாம கூப்பிடுறீங்க. உங்க மகனை பத்தி எங்களுக்கு ஒன்னும் தெரியாது” என்றாள் துளசி. “ஏய் உன் புது புருஷனுக்கு தெரியும், அவன்தான் உன் முன்னாள் புருஷனை ஏதோ பண்ணிட்டான்“ “வார்த்தையை பார்த்து பேசுங்க“ “அதானே உண்மை. என் மகன் உனக்கு முன்னால் புருஷன் தான். சொல்ல போனால் என் மகன் வந்தா அவன்தான் உனக்கு எப்போவும் புருஷனாவும் இருப்பான்” “என்ன மிரட்டுறீங்களா?” “உண்மையை சொல்றேன். என் மகன்மேல நான் உயிரையே வைச்சிருக்கேன்னு உனக்கு நல்லா தெரியும். அவனுக்கு மட்டும் எதாவது ஆச்சு, உன் புது புருஷனை தடம் தெரியாம முடிச்சு விட்டுடுவேன்“ “இதை ஏன் என்கிட்ட சொல்றீங்க? அவர்கிட்ட பேசுங்க. இந்த மிரட்டலை எல்லாம் அவர்கிட்டே விடுங்க“ “என்ன அவ்வளவு தைரியமா? என் பொண்டாட்டி உனக்கு ஆதரவா இருக்கிற திமிர். கல்யாணத்துக்கு எல்லாம் வந்துட்டா இல்லை. பேசத்தான் செய்வ. ஆனா அவளுக்கு நல்லா தெரியும். என் மகனுக்காக நான் யாரையும் எதுவும் செய்வேன்னு. அதனால தான் என் கண்ணுல படாம ஆட்டம் காட்டுறா. உன் புது புருஷன் தான் அவளையும் எங்கேயோ வைச்சிருக்கான் போல. கண்டுபிடிச்சேன் வை அப்புறம் இருக்கு அவளுக்கு, உன் புருஷனுக்கு எல்லாம்“ துளசிக்கு சட்டென ஏதோ அச்சம். ஆனந்தி எங்கிருக்கிறார்? “இங்க பாரு நைட்டுக்குள்ள என் மகன் என்கிட்ட வந்தாகணும். இல்லை அந்த வைரவேலுக்கு லேசா பண்ணிட்டேன். உன் புது புருஷனை தட்டி தூக்கிட்டு உன்னை என் மகனோட வாழ வைப்பேன்” என்று போனை வைக்க, துளசி அங்கேயே அமர்ந்துவிட்டாள். சுந்தரம் மிரட்டுவது போல் எல்லாம் செய்துவிட முடியாது என்ற தைரியம் உண்டு எனினும், சுந்தரத்தை சாதாரணமாகவும் எடை போட்டு விட முடியாது. இந்த ஓர் வருடத்தில் அவரின் அராஜகங்களை கடந்த தான் வந்திருக்கிறாள். என் மகனோட வாழ வா என்று அத்தனை வழியிலும் தொல்லை கொடுத்திருக்கிறார். வளர்மதி ஓர் கட்டத்தில் அவரின் வேலையை விட்டுவிடலாம் என்று எண்ணுமளவிற்கு பள்ளி கூடத்திலும் ரகளை செய்தவர் சுந்தரம். மில் பக்கம் போக கூடாது என்று கட்டுப்படுத்தி வைத்திருந்தவர் ஆனந்தி. என் அண்ணா மில் அது என்ற பாசம். இப்போது அந்த கட்டுப்பாடும் இருப்பதாக தோன்றவில்லை. ஆனந்தியையவே எதிரியாக பார்க்கிறார். என்ன செய்ய? சந்தோஷ் உண்மையாவே தேவாவிடமா இருக்கான்? “துளசி” என்று வளர்மதி வந்தவர், “என்னாச்சு தூங்கலையா?” என்று கேட்டபடி மகளை ஆராய்ந்தார். தேவா மேல் நம்பிக்கை இருந்தாலும் கற்ற படிப்பினை அவரை கலக்கம் கொள்ள வைத்தது. “கொஞ்ச நேரத்துக்கு முன்னதான் எழுந்தேன்ம்மா” என்று துளசி பதில் சொல்ல, “வேறொன்னும் இல்லையே” என்று கேட்டார். “ம்மா. நான் ஓகே” என்று அவரின் கைப்பற்றி கொண்டாள். “சரி. சரி துளசி. நீ போய் குளிச்சிட்டு வா. நான் அதுக்குள்ள காபி போடுறேன்” என, துளசி அறைக்குள் சென்றாள். தேவா தூக்கத்திலே இருக்க, சத்தமில்லாமல் குளித்து வந்தாள். மாலதியும் வந்திருக்க, மூவருமாக காபி குடித்தனர். “அண்ணி போன் பண்ணியிருந்தாங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல வேன் வந்திடுமாம்” என்று வைரவேல் வந்தவர், “தேவா இன்னும் எழலையா துளசி. அவனை கிளம்ப சொல்லு” என, சரியென தேவாவை சென்று எழுப்பினாள் துளசி. தேவா கண் விழித்ததும் துளசி முகம். எவ்வித தொந்தரவும் இல்லாமல் நன்றாக தூங்கி எழவும் அவளின் முகம் ஏதோ அழகான கனவு போல் இருந்தது. சுருங்கிய கண்கள் விரிந்து, உதடுகள் புன்னகைத்து, முகம் மலர்ந்து, “துளசி” என்றான். “ஆஹ்” என்ற துளசி அப்படியே நின்றுவிட்டாள். தேவாவின் மலர்ந்த முகம், அவன் புன்னகை என்று அந்த நொடி அவ்வளவு அழகாக தெரிந்தான். “ஹேய்” என்ற தேவாவிற்கு தூக்கம் முழுதும் தெளிந்துவிட்டது. “கோவிலுக்கு போகணும்ன்னு” என்று பெண் மென்குரலில் சொல்ல, “டைம் ஆகிடுச்சா. இதோ குளிக்க போறேன்” என்று அவன் குளிக்க செல்ல, துளசி கணவன் பின்னால் செல்லும் கண்களை தடுக்கும் விதமாக கதவு தட்டப்பட்டது. “தேவா குளிக்க போயிட்டானா? அவன் பேக்மா” என்று வைரவேல் கொடுக்க, துளசி வாங்கி அறையில் வைக்க, மீண்டும் அவளின் போன் ஒலித்தது. சுந்தரம் தான் திரும்ப அழைத்தார். இவள் எடுக்காமல் போக, மெசேஜ் வேகமாக வந்து விழுந்தது. படித்த பெண்ணுக்கு வேர்த்து போனது. நம்ப முடியாமல் திரும்ப பார்க்க, இன்னொரு புகைப்படம் வந்து விழுந்ததுடன், வாய்ஸ் மேசேஜும் இருந்தது. கொஞ்சம் அச்சத்துடனே கேட்டவள், நிற்க முடியாமல் அமர்ந்துவிட்டாள். தேவா குளித்து துண்டுடன் வர, துளசி கண்கள் அவன் மேலே. இமைக்காமல் அவள் பார்த்த பார்வையில், ‘என்ன இப்படி பார்க்கிறா?’ என்று தன்னை பார்த்து கொண்டான். துண்டு கூட கீழே விழலையே! அவ்வளவு அழகா இருக்கோமா? இல்லை மோசமா இருக்கோமா? சிக்ஸ் பேக் எல்லாம் இல்லைன்னாலும் அழகா தாண்டா இருக்க! அதுக்காக கண்ணு சிமிட்டாம கூட பார்க்கிற அளவுக்கு அழகா என்ன? ம்ஹூம் என்னையே என்மேல சந்தேக படவைக்கிறா? “துளசி. ஹேய்” என்று அவளின் தோள் தட்ட, “ஹான்” என்றாள். “என் சூட்கேஸ் ஏதும் சித்தப்பா கொடுத்தாரா? இங்கதான் இருக்கா” என்று எடுத்து கொண்டவன், இரண்டடி வைத்து திரும்ப மனைவியை பார்க்க, அதே பார்வை. “ஆத்தாடி” என்று ஓட்டமாக ஓய்வறைக்குள் அடைந்து கொண்டான். ஒருவேளை வேற பார்வையா இருக்குமா? கட்டுடல் மேனி கண்டு மயங்கி போயிட்டா சொல்றியா? என்று அவனின் மனசாட்சி கிண்டலடிக்க, ஏன் மயங்கமாட்டாளா? அதெல்லாம் மயங்குவா? யார்கண்டா இப்போவே மயங்கி போனமாதிரி தான் இருக்கா? இதுதான் பகல் கனவு! அவ பயந்த மாதிரி தான் இருந்தா? அப்போ என்னை அரைகுறையா பார்த்து பயந்துட்டாளா? அவ்வளவு மோசமாவா இருக்கேன்! உடை அணிந்திருந்தவன் தன்னை முன், பின் பார்த்தான். இல்லை. அப்படி பயந்தா அவளுக்கு கண்ணு கோளாறு! ஆனாலும் ஏன் அப்படி பார்த்தா? கேள்வியுடனே வெளியே வர, துளசி அதே இடத்தில், பார்வை மட்டும் சுவற்றில் நிலைத்திருந்தது. தேவா மனதில் ஓர் ஏமாற்றம். ‘அதானே கொஞ்ச நேரம் என்னை சந்தோஷ படவிட மாட்டா. பக்கா பொண்டாட்டி!’ “நான் கிளம்பிட்டேன் போலாமா?” என்று கடுகடு குரலில் கேட்டான். “துளசி” என்று அவள் தோள் தட்டி, “கோவிலுக்கு கிளம்பலாமான்னு கேட்டேன்” என்றான். “கோவிலுக்கா?” “நம்ம குலதெய்வ கோவிலுக்கு போகணும்னு தானே என்னை எழுப்பின?” “ஆ. ஆமா“ “அப்புறம் என்ன. கிளம்பு“ “இல். இல்லை. நான்“ “நீ ரெடியாகணுமா?” என்று மனைவியை பார்த்தவனுக்கு, புது மஞ்சள் தாலி, விரித்துவிட்ட கூந்தல், நெற்றில் மின்னும் குங்குமம், பொலிவான முகம் என்று அவள் அழகாக தான் தெரிந்தாள். “இதுவே போதும் தான். ஆனா உனக்கு ரெடியாகணும்ன்னா சீக்கிரம் தயாராகிடு. வேன் வந்திடும்” என்று அறைக்கு வெளியே செல்ல போக, “ஏங்க” என்று அவன் கைப்பற்றி நிறுத்தினாள். ஜில்லென அவள் கைகள் தீண்டியதில், “க்கும். என்ன?” என்று கேட்டான். “நாம. நாம இங்கேயே இருக்கலாமா?” என்று கேட்டாள். “இங்கேயேவா?” “நம்ம ரூம்க்குள்ளவே. வெளியே எங்கேயும் போக வேண்டாம்“ இவ தெரிஞ்சு பேசுறாளா? தெரியாம பேசுறாளா? தேவா உதடுகளை அழுத்தமாக மூடி திறந்தவன், “என்னாச்சு உனக்கு? ரூமுக்குள்ளவே எப்படி இருக்க முடியும்?” என்று கேட்டான். “ஏன்? ஏன் இருக்க முடியாது? நாம இருக்கலாம். நீங்க சொல்லிடுங்க” என்றாள். “எதாவது நினைப்பாங்கடி“ “நினைச்சா நினைக்கட்டும், நாம இப்போ புருஷன், பொண்டாட்டி தானே?” என்று வேகமாக கேட்டாள். “அதுதாண்டி வம்பு. புது மாப்பிள்ளையும், பொண்ணும் ரூமுக்குள்ளே இருந்தா? புரியுதா என்ன சொல்றேன்னு?” என்று மனைவியிடம் மெதுவாக கேட்டான். துளசிக்கு புரிந்தது. ஆனாலும் வெளியே செல்ல கூடாது. “பரவாயில்லை. நாம இருக்கலாம்” என்றாள். “ம்ஹூம். உனக்கு என்னமோ ஆச்சு?” “ஆமா ஆச்சு. நீங்க இங்கேயே இருங்க” என்று அவன் கையை இறுக்கமாக பற்றி கொண்டாள். “இப்போதான் ஆகணுமா? நைட் எல்லாம் சும்மாதானேடி இருந்தோம். மடியில போட்டு தூங்க வைச்சுட்டாளே” என்று அங்கலாய்த்து கொண்டான் புது மாப்பிள்ளை. “துளசி. தேவா” என்று கதவை தட்ட, “வரோம்” என்று தேவா குரல் கொடுக்க, “இல்லை நாங்க வரலை” என்று துளசி குரல் கொடுத்தாள். “ஷ்ஷ். ஹேய் என்னடி செய்ற?” தேவா அவளை அடக்க, “ம்ம்மா. நாங்க வரலை” என்றாள் துளசி இன்னும் சத்தமாக. “இவளோட” என்று அவள் வாயை கை வைத்து மூடிய தேவா, “பைவ் மினிட்ஸ் நாங்க வரோம்” என்றான். துளசி அவன் கைகளை விலக்க முனைய, தேவா மறுகையால் அவளின் கைகளை வளைத்து தனக்குள் முழுவதுமாக அவளை இணைத்து கொண்டான். “ம்ம்ம்ம்ம்” என்று துளசி அவனுக்குள் அசைய, “அசையாம நில்லு. என்னை சோதிக்காத” என்றான் கரகரத்த குரலில். துளசி கண்களை விரித்து அவனை முறைத்து பார்த்தாள். இருவரின் உடலும் ஒட்டிக்கொண்டது போல நெருக்கம். “இங்க பாரு நீ பண்ற சேட்டையில தான் பிடிச்சு வைச்சிருக்கேன். என்னை முறைக்காத” என்றான். துளசி அவன் கையை வலுவாக விலக்கி, “நாம எங்கேயும் போகலை” என்றாள். “அப்போ இதுக்கு நீ முறைக்கலையா?” என்று இருவரின் நெருக்கத்தை கண்களால் காட்டி கேட்டான். “இன்னும் கூட என்னை பிடிச்சு வைச்சுக்கோங்க. நாம ரூமை விட்டு போக கூடாது” என்றாள் துளசி. “என்னடி ஓவர் நைட்ல தேவா பொண்டாட்டியா மாறி நிக்கிற” என்ற துளசியின் கணவனுக்கு காலையில் இருந்து நடபத்து எல்லாம் கனவு போல் தான் இருந்தது. “நாம கொஞ்சம் தள்ளி நின்னுக்கலாமா?” என்று அவன் கைகளை விலக்க, அதே நெருக்கம் தான். என்னவென்று பார்த்தால் அவன் மனைவி கைகள் அவனை வளைத்திருந்தது. முழுவதுமாக அவளின் கைகளுக்குள் அவனை பிடித்திருந்தாள் பெண். “உனக்கு என்னவோ ஆகிப்போச்சு. எனக்கும் ஆக வைக்க பார்க்கிற? நான் மயங்க மாட்டேன்” என்றவன் கண்களோ அவளின் மினுமினுத்த உதடுகளில் மையம் கொண்டது. இருவரின் உதடுகளும் ஒன்றிரண்டு அடி இடைவெளியில்! சட்டென வறண்ட தொண்டையை நினைத்து கொண்டான். “காபி குடிச்சியா?” என்று கேட்டான். சத்தமா தானே கேட்டேன். ஏன் இப்படி ஹஸ்கி வாய்ஸ் வருது! “ஹ்ஹம்” என்று துளசி சொல்ல, “எனக்கு காபி ரொம்ப பிடிக்கும்” என்றான் தேவா. “எடுத்துட்டு வரவா?” “க்கும். நீ தேற மாட்ட. என் கோவத்தை நான் மெயின்டைன் பண்ண வேண்டியது தான்” என்றான் தேவா.