மஞ்சள் காட்டு மைனா 19 1 9321 மஞ்சள் காட்டு மைனா 19 மணமக்கள் கோவிலில் இருந்து மண்டபத்திற்கு வந்தனர். “எதாவது சாப்பிட்டுக்கோங்க. அப்புறம் மேடையில் இருந்து இறங்க நேரமாகிடும்” என்று செல்வி சொல்ல, “எனக்கு காபி மட்டும் கொடுங்கக்கா” என்றான் தேவா. துளசியை பார்க்க, “எனக்கும் அண்ணி” என்றாள். “லேட் ஆகிடும் துளசி. சாப்பிட்டுக்கோ” என, “பசிக்கலை அண்ணி” என்றுவிட, இருவருக்கும் காபி வந்தது. இதுவரை தன்னிடம் பேசாத கணவனை பார்த்து கொண்டே துளசி காபி குடிக்க, தேவாவோ ஏதோ ஏற்பாட்டை பற்றி வைரவேலிடம் கேட்டு கொண்டிருந்தான். “எல்லாம் வர ஆரம்பிச்சுட்டாங்க. இன்னுமா காபி குடிக்கிறீங்க?” என்று ஜெயலட்சுமி அறைக்குள் வர, “இப்போ என்ன காபி குடிக்கவா? வேண்டாமா?” என்றான் மகன். “டேய். சீக்கிரம் குடின்னு தானே சொல்றேன்“ “பொறுமையா தான் குடிப்பேன்“ “தேவா. நம்ம MLA பங்காளி வந்து காத்திட்டிருக்கார்” என்று பசுபதியும் வர, “நான் தான் இன்னைக்கு MLA, MP எல்லாம். வெய்ட் பண்ணட்டும் இப்போ என்ன?” என்று தேவா சொல்ல, “என்ன பேச்சு இது? கூட இருக்க ஆளுங்க எல்லாம் எப்போ மாப்பிள்ளை வருவார்ன்னு கரைச்சல் கொடுக்கிறாங்க தேவா” என்றார் தந்தை. “யார் அது? இதோ போறேன்” என்று காபி கப்புடனே அறையை விட்டு வெளியேற, “தேவா. டேய் தேவா.” “ஏங்க இவன் என்ன பண்றான்?” “சாமி. நில்லு துளசி வரட்டும்” என்று குடும்பத்தினர் இவன் பின் ஓட, “என்ன சித்தப்பா?” என்று MLA முன் சென்று நின்றான் தேவா. “அட புது மாப்பிள்ளை. என்னப்பா? மருமக எங்க?” என்று அவர் கேட்க, “காபி குடிச்சிட்டு இருக்கோம். உங்க ஆளுங்க தலைவர் காத்திருக்கார், சீக்கிரம் வர சொல்லுங்கன்னு ஏதோ கரைச்சல் கொடுத்ததா சொன்னாங்க. அதான் அப்படியான்னு சித்தப்பாகிட்டே கேட்டுட்டு போலாம்ன்னு வந்துட்டேன்” என்றவன் சுற்றியுள்ளவர்களை பார்த்தான். அந்த கட்சி வேஷ்டியில் அதிகம் இவன் பங்காளிகள் என்பதால், “இன்னொரு கல்யாணத்துக்கு போகணும் தேவா. அதுக்காக கேட்டிருப்பாங்க” என்றார் MLA. “சரி சித்தப்பா. நீங்க அங்க பார்த்துட்டே இங்க வாங்க” என்று காலி கப்பை எரிந்துவிட்டு அறைக்கு திரும்பிவிட்டான். ‘இவன் என்ன நம்மை போக சொல்றானா?’ MLA கேள்வியாக பசுபதியை பார்க்க, “அண்ணா. அந்த கல்யாணத்துக்கு நீங்க தான் தாலி எடுத்து கொடுக்கணும்ன்னு சொன்னேன். அதனால தேவா சொல்லியிருப்பான்” என்றார் அவர் சமாதானமாக. “அதுக்காக இங்க வந்தவரை அங்க போங்கன்னு சொல்லலாமா?” என்று கட்சி வேஷ்டி ஒன்று எகிற, “அவசரப்படுத்தினா சொல்லலாம்” என்று வைரவேல் முன் வந்து நின்றார். வைரவேலை பார்த்ததும் MLA, “சரி. சரி வந்ததும் வந்தாச்சு. புது ஜோடிகளை ஆசீர்வாதம் பண்ணிட்டே போறேன்” என்று அமர்ந்துவிட்டார் அவர். “அது!” என்று வைரவேல் அண்ணனை அழைத்து கொண்டு சென்றார். “உங்ககிட்ட எங்கேயோ லாக் ஆகியிருக்கார். என்னன்னு இப்போவே சொல்லிடு வேலு.” என்று பசுபதி தம்பியின் காதை கடித்தார். “நம்ம தோட்ட வீட்ல பார்ட்டி பண்றேன்னு எல்லா வேலையும் பண்ணிட்டார். கேமராவை கவனிக்கலை” “ச்சே. இவனுங்களோட” என்று பசுபதி தலையில் அடித்து கொண்டு சென்றார். “எல்லா பெரிய மனுஷங்களுக்குள்ளும் எதாவது சில்லறை தனம் இருக்கும். அதுக்கென்ன நாங்க என்ன பண்றதாம்” என்று தம்பி முணுமுணுத்து கொண்டு சென்றார். “சரி இப்போவாது மேடைக்கு கிளம்பலாமா?” என்று செல்வி கேட்க, “போலாம்க்கா” என்று மாலையை கையில் எடுத்தவன், “இந்தா போட்டு விடு” என்று துளசியிடம் நீட்டினான். “நீயே போட்டுக்கலாம். இங்க சடங்கு ஒன்னும் நடக்கலை” என்றார் ஜெயலட்சுமி. “எனக்கு பொண்டாட்டி வந்திட்டா. அவ போடுவா. ம்ம். போடு” என, ‘என்ன பண்றார் இவர்?’ சங்கடத்துடன் தேவா கழுத்தில் மாலையை அணிவித்தாள் துளசி. துளசி கழுத்தில் மணமாலை அப்படியே இருந்ததில் இருவரும் மேடைக்கு சென்றனர். முதல் ஆளாக கட்சி வேஷ்டி மேடைக்கு வந்து ஆசீர்வாதத்தை அள்ளி தெளித்து இறங்கிவிட, “சாப்பிட வாங்கண்ணா” என்று பசுபதி தான் அவர் பின்னே வந்தார். “இல்லை இருக்கட்டும்” என்று அவர் கிளம்பிவிட, பசுபதி மகனையும், தம்பியையும் முறைத்தார். “முதல்ல உங்க அண்ணனுக்கு அந்த வீடியோவை அனுப்பி விடுங்க சித்தப்பா. பட்டா பட்டி டேன்ஸ் பார்க்கட்டும்” என்று தேவா கிண்டலாக சொல்ல, “ச்சீ. சும்மா இருடா. என் அண்ணன் பாவம்” என்று வைரவேல் தலையை உதறி கொண்டு சென்றார். நிமிடங்கள் வேகமாக ஓட, ஆனந்தி மண்டபத்திற்குள் வந்தார். தனியாக உடன் யாருமில்லை. ஒட்டு மொத்த ஆட்களும் ஆர்வமாக மேடைக்கருகில் கூடிவிட்டனர். வளர்மதி முன் சென்று, “வா ஆனந்தி” என்று அவர் கைப்பற்றி அழைத்து வர, புது மணமக்கள் அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர். “நல்லா இருங்க. சந்தோஷமா இருங்க” என்று ஆனந்தி வாழ்த்தி, துளசியை நெஞ்சார அணைத்து கொண்டார். விழியோரம் கண்ணீர் துளிர்த்து அதை சுண்டி விட்டு கொண்டவர், நகையை பரிசளித்தார். துளசி வாங்க தயங்க, “உங்க பாட்டி நகை” என்றார் ஆனந்தி. அம்மாவை பார்த்து அவர் தலையசைத்த பின்னே, துளசி நகை பெட்டியை வாங்கினாள். அதிக கனமாக இருந்தது. இவருக்கென்று ஏதும் வைத்து கொள்ளவில்லை என்பதை தான் அந்த கனம் சொன்னது. “ஏன் அத்தை?” என்று துளசி தாளமாட்டாமல் கேட்டுவிட்டாள். “இந்த மூக்குத்தி எனக்கு போதும்” என்று அவர் அணிந்திருந்ததை தொட்டு காட்டியவர், வயிறார சாப்பிட்டே கிளம்பினார். நேரம் நீண்டு ஒரு வழியாக விருந்தினர்கள் வருகை குறையவும், “அவ்வளவு தான் சாப்பிட்டு கிளம்புங்க. நல்ல நேரம் முடியறதுக்குள்ள வீட்டுக்கு போகணும்” என்றார் ஜெயலட்சுமி. “பேமிலி போட்டோ எடுக்கணும்” என்று தேவா சொல்ல. “அதை அப்பறம் பார்த்துப்போம் தேவா. நல்ல நேரம் இதை விட்டா உச்சி பொழுதுக்கு மேல தான்” என, “இருக்கட்டும்மா. இப்போ என்ன?” என்றுவிட்டவன் இரு அக்கா குடும்பத்தையும் மேடைக்கு வர வைத்து போட்டோ எடுக்க வைத்தான். அடுத்து வளர்மதி, அப்பாம்மா, சித்தப்பா, சித்தி என்று எடுத்து கொண்டே இருந்தான். “போதுமா. இப்போ கிளம்பலாம்” என, “என் பொண்டாட்டியோட தனியா எடுக்கணும்“ “தேவா“ ம்ஹூம். ஆள் போட்டோ எடுக்க போஸ் கொடுத்து கொண்டிருந்தான். துளசி அவன் கைகளுக்குள் நெளிய, “ஷ்ஷ்” என்று அவள் காதுக்கருகில் ஒரு அதட்டல். “கொஞ்சம் லூசா பிடிங்க” என்று துளசி அவன் கை அழுத்தத்தில் சொல்ல, தேவா அதன்பின்னே தன் பிடி உணர்ந்து கைகளை தளர்த்தினான். ஜெயலட்சுமி ஒருபக்கம் கோவமாக நிற்க, துளசிக்கு சிரிக்க வருவேனா என்றது. “நாம அப்புறம் எடுத்துப்போமா?” என்று தன் முகம் பார்த்து நின்றிருந்த தேவாவிடம் கேட்க, “எனக்கு வீட்டுக்கு போக வேண்டாம்” என்றான் தேவா. “என்ன?” என்று பெண் அதிர. “மேடம். அப்படியே நில்லுங்க” என்று புகைப்படக்காரர் சொன்னார். “ஒரு நிமிஷம்” என்றவள், “என்ன சொன்னீங்க?” என்று கணவனிடம் கேட்டாள். “எனக்கு வீட்டுக்கு போக வேண்டாம்” என்றான் திரும்ப. “ஏன் போக வேண்டாம்? உங்க வீட்டுக்கா இல்லை எங்க வீட்டுக்கா?” என்று சந்தேகமாக கேட்டாள். “எங்கப்பா வீட்டுக்கு“ “ஏன்?” “உனக்கு ஞாபகம் இருக்காது. எனக்கு மறக்காது” “என்ன பண்ணேன் நான்” தேவா பார்வையில் இதயத்தின் துடிப்பு அதிகமாகியது. தேவா பதில் சொல்லாமல், துளசி விரலை சுற்றி அவளை தனக்கருகில் கொண்டு வந்தான். துளசி கணவன் கைகளுக்குள் முழுவதுமாக அடங்கிவிட்டவள், பதில் வேண்டி தேவா கண்களை பார்த்தாள். அவர்களின் அந்த நெருக்கம் புகைப்படமாக பதிவானது. அதன்பின் உணவுண்ண அமர்ந்து, அங்கும் சில புகைப்படங்கள் எடுக்கப்பட்டது. தேவா பார்க்க சாதாரணமாக இருந்தான். சிரித்தான், அவளுக்கு இனிப்பை ஊட்டிவிட்டான். துளசியை ஊட்டிவிட சொல்லி உண்டான். ஆனாலும்? “ம்மா. அவங்க சாப்பிட்டுட்டாங்க. வீட்டுக்கு கிளம்பலாமா?” என்று அகல்யா வர, நல்ல நேரம் எப்போதோ முடிந்து போயிருந்தது. ஜெயலட்சுமி பல்லை கடித்து கொண்டு அமர்ந்திருக்க, “என்னாச்சு அண்ணி?” என்று வளர்மதி கேட்டார். “உங்க மருமகன் வேலையை காட்டிட்டான். ஏன்னு எனக்கு தெரியலை” என்றார். “எதை மனசுல வைச்சு இப்படி பண்ணான்னு எனக்கு கேட்டு சொல்லுங்க” என, “நான் டீச்சர் வீட்டுக்கு போறேன்” என்று வந்தான் தேவா. “தேவா” என்று வளர்மதி அதிர. “ஏன் நான் வர கூடாதா அத்தை?” என்று உரிமையாக கேட்டான். “நீ வராம? உங்க வீடு தான். ஆனா முதல்ல உங்க வீட்டுக்கு போய்ட்டு“ “எல்லாம் என் வீடு தான். எங்க போனா என்ன? ம்மா. நான் கிளம்புறேன், வந்து எங்களை விட்டுட்டு வாங்க. கிளம்புங்க” என்று அம்மா கைப்பற்றி எழுப்பினான் மகன். “தேவா” என்ற ஜெயலட்சுமிக்கு கண்கள் கலங்கிவிட்டது. “நான் ஏதாவது பேசிட்டேனா? என்னன்னு சொல்லு. எதுக்கு இப்போ அங்க வர மாட்டேங்கற” என்று கேட்க. “ம்மா. நீங்க பேசினா நான் வராம இருந்திடுவேனா? நம்ம வீடும்மா அது” என்றான் மகன். “துளசி அங்க வர மாட்டேன்னு சொல்லிட்டாளா?” என்று அகல்யா கோவத்துடன் கேட்க, “அயோ அண்ணி. நான் அப்படி சொல்லலை” என்றாள் பெண் வேகமாக. “அப்புறம் என்ன தேவா? உனக்கு உன் மாமியார் வீட்டுக்கு போகணுமா? இன்னைக்கு மட்டுமா இல்லை அங்கேயே செட்டில் ஆக போறியா?” என்று அகல்யா மேலும் பேச, “அகல்யா. நான்தான் அவனை அங்க போக சொன்னேன். வேறெதுவும் உனக்கு தெரியணுமா?” என்றார் பசுபதி. “இல்லைப்பா. தம்பி சொல்லவும்” என்று அவள் உடனே பின் வாங்க, “லட்சுமி. ஆக வேண்டியதை கவனி. எழுந்திரு. கார் ரெடியா. நீங்களும் இன்னைக்கு அங்கேயே தங்கிக்கோங்க வேலு” என்று பசுபதி எல்லோரையும் விரட்டி, மணமக்களை வளர்மதி வீட்டு வாசலில் நிறுத்தினார். மணமக்களுக்கு ஆரத்தி எடுக்கப்பட்டு வீட்டுக்குள் வர, “இங்கேயேவாது விளக்கேத்த சொல்லுங்க அண்ணி” என்றார் ஜெயலட்சுமி. துளசி விளக்கேற்ற, பால் பழம் கொடுக்கப்பட்டது. மதிய உணவும் அங்கேயே ஏற்பாடு செய்து தன் குடும்பத்தை உண்ண வைத்தான் தேவா.