மஞ்சள் காட்டு மைனா 17

“இந்த சந்திப்பு தேவையாம்மா?” என்று துளசி கேட்க,

“ஒரு முறை பேசித்தான் பார்ப்போம்” என்று வளர்மதி அதையே தான் திரும்ப சொன்னார்.

துளசிக்கு பழைய நினைவுகள் எல்லாம் கசப்பே. அதையே மீண்டும் பேசுவதில் பெண்ணுக்கு எப்படி விருப்பமிருக்கும்?

ஆனந்தி அறைக்குள் வர, “உட்காருமா” என்று வளர்மதி அவரை வரவேற்று அமர வைத்தார்.

துளசி அவருக்கு குடிக்க கொண்டு வந்தாள். ஆனந்தி அதை மறுத்துவிட்டார்.

“உங்ககிட்ட பேசிட்டு கிளம்பணும்” என்றவர்,

“சந்தோஷ் பத்தி எனக்கு ஒன்னும் தெரியலை. அம்மாவா இருந்துகிட்டு நான் இதை சொல்றதுக்கு வெட்கபடுறேன். ஆனா முடிஞ்சு போனதை இனி ஆராயறதுல பலனில்லை”

“என்னால துளசி வாழ்க்கையில நிறைய கஷ்டப்பட்டுட்டா. சந்தோஷ் அவளுக்கு எல்லாமா இருப்பான்னு நான் நம்பினேன். அவன் கொஞ்சம் என் அண்ணா போல அமைதின்னு”

“அவனோட அப்பாவை சொல்லாதீங்க” துளசி பட்டென கோபம்கொண்டாள்.

“அது தப்புன்னு நானே உணர்ந்துட்டேன். இவன் குள்ளநரி. அவன் அப்பாவை போலவே வளர்ந்து நிக்கிறான்” என்றார்.

“ஏதோ தப்பு பண்ணிட்டான். திருந்தி வாழுவான்னு நினைச்சேன். உன்னையும் அதனால தான் வறுபுறுத்தினேன். ஆனா அவன் கோவத்தை, நடவடிக்கையை பார்த்ததுக்கு அப்புறம் என் மனசை நான் மாத்திக்கிட்டேன்”

“இனியும் உன் வாழ்க்கையில் அவன் தேவையில்லைன்னு தான் கோர்ட்ல நானே சாட்சி சொன்னேன். ஆனா சந்தோஷும், அவன் அப்பாவும் திரும்ப ஏதோ பண்ண பிளான் போடுறாங்க. எத்தனை நாளைக்கு என்னால அவங்களை தடுக்க முடியும்ன்னு எனக்கு தெரியலை”

“அண்ணி. சீக்கிரம் என் அண்ணன் மகளுக்கு ஒரு நல்லது பண்ணிடுங்க, அவளை இனியும் இப்படி விடாதீங்க. அதான் விவாகரத்து கிடைச்சிடுச்சு இல்லை. நல்ல மாப்பிள்ளை பாருங்க” என்று வளர்மதியிடம் சொன்னார்.

“துளசிக்கு கண்டிப்பா நல்லது பண்ணத்தான் வேணும். ஆனா உடனே மாப்பிள்ளை எப்படி? உங்க வீட்டுக்காரருக்கு சொத்து தான் வேணும்ன்னா அதை துளசி கொடுக்க ரெடியா இருக்கா” என்றார் வளர்மதி.

ஆனந்தியிடம் ஓர் மெல்லிய புன்னகை. விரக்தி, தோல்வி, நிராசை என, அந்த பெண்மணி ஓர் நிமிடம் மௌனித்தவர், “துளசிக்கு சொத்தை முழுசா எழுத சொன்னதே நாந்தான்” என்றார்.

அம்மாவும், மகளும் அதிர்ந்து போக, “ஆமா. அப்பாகிட்ட சொல்லி நாந்தான் துளசி பேருக்கு எல்லா சொத்தையும் எழுத சொன்னேன். என் அண்ணன் தான் எங்களுக்கு நிலைக்கலை. துளசியாவது எங்களுக்கு வேணும்ன்னு அந்த முடிவெடுத்தோம்”

“எனக்கு என் அண்ணனை ரொம்ப பிடிக்கும். அவருக்கும் என் தொழில் தவிர என்னை பிடிக்கும். நாங்க அடிக்கடி பேசிப்போம். நான் அழுகையில தேடுற ஒரே ஜீவன் என் அண்ணா தான். அவரை எங்ககிட்ட இருந்து நீங்க பிரிச்சிட்டீங்கன்னு கோவம்”

“ஆனா அது உண்மையில்லைன்னு அப்புறம் புரிஞ்சது. அவருக்கு எங்களை பிடிக்கலை. சாது என் அண்ணன். அவர் பொண்ணுக்கு நான் கஷ்டத்தை கொடுத்துட்டேன்” என்ற ஆனந்தியின் அடைக்கட்டிய கண்களில் இருந்து கண்ணீர் சிந்திவிட்டது.

சுண்டி விட்டு கொண்ட ஆனந்தி, “இப்போ பேச்சு சொத்தை பத்தி இல்லை. துளசி தான். சந்தோஷ் இவளை விட கூடாதுன்னு வைராக்கியம் வைக்கிறான். அவங்கப்பா மகன் எதாவது பண்ணிப்பான்னு அவனுக்கு துணை நிக்க முடிவெடுக்கிறார்”

“சந்தோஷ் எங்களுக்கு ஒத்தை புள்ள. இந்த ஆஸ்தி, அந்தஸ்து எல்லாம் அவன் இருந்தா தான். அதனாலே சந்தோஷ் அப்பா எந்த எல்லைக்கும் போவார். உங்களை எச்சரிக்க வந்தேன். சீக்கிரம் நல்ல முடிவா எடுங்க” என்று எழுந்து கொண்டார்.

இன்று துளசி அவருக்கு மருமகள் இல்லை என்றாலும், என்றும் அவள் அவரின் அண்ணன் மகள் தானே!

துளசியின் தலையில் கை வைத்து வருடிவிட்டவர், சட்டென வெளியேறிவிட்டார்.

“ம்மா” என்றாள் துளசி. அவளுக்கு விக்கி கொண்டு வந்தது.

“ஷ்ஷ் துளசி” என்று வளர்மதி மகளை தன்னோடு அணைத்து கொண்டார்.

சந்தோஷ் பற்றிய பயம் இல்லை. ஆனந்தியின் வார்த்தைகள் அவளை எங்கோ கீறிவிட்டு சென்றது.

வலித்தது. ஏன் வலிக்கிறது? ஏன் கண்ணீர் நிற்காமல் வருகிறது? ஏன் மனது இப்படி தவிக்கிறது? எல்லாவற்றுக்கும் ஒரே பதில் சரவணன். அவளின் தந்தை.

அப்பாவின் தங்கையிடம் இருந்து, அவரின் குடும்பத்திடம் இருந்து தங்களுக்கான சொந்தம் கிடைக்கும். இனி நானும், அம்மாவும் தனியாள் இல்லை. அப்பா பிறந்து வளர்ந்த வீட்டில் நான்! சந்தோஷ். அப்பா போலவே அமைதி, பொறுமையாக பேசினான்.

இரண்டொரு முறை தான் திருமணத்திற்கு முன்பு சந்தித்தது. சரவணனை அவனில் தேடி, அவராகவே அவனை கண்டது என் தவறு. அதனால தான் என்னால் அவனை கண்டுபிடிக்க முடியவில்லையோ?

அம்மாவின் நெஞ்சிலே தலை சாய்த்து கொண்டாள் மகள்.

வளர்மதியும் உணர்ச்சி வசப்பட்டிருந்தார். ஆனந்தியின் அன்பு உண்மை. ஆனால் தேர்ந்தெடுத்த வழி தவறு.

சரவணனின் தங்கை, அவரின் ரத்தம் இவர்களுக்கு துரோகம் செய்யவில்லை. போதும், இது போதும்.

ஆனந்தி கொடுத்த எச்சரிக்கையை தான் இப்போது பார்க்க வேண்டும். அவரும் மகளுக்கு ஓர் நல்ல துணையை அமைத்து கொடுத்துவிட வேண்டும் என்றுதான் நினைத்திருந்தார். இப்போது அதை விரைவாக செய்ய வேண்டும்.

‘தேவா’ மனதில் அடிக்கடி வருபவன். துளசிக்கு பிடிக்க வேண்டும் என்ற இடத்தில் அடிபட்டு போகிறான்.

என்ன செய்ய? யாரை பார்க்க? என்று தொடர்ந்த நாட்களில் வளர்மதி முழு மூச்சாக அதில் இறங்கினார்.

‘பையன் நல்லவனாக இருக்க வேண்டும், மற்ற எதுவும் வேண்டாம்’ அவரின் நிபந்தனை இது ஒன்று தான்.

சில மாப்பிள்ளைகளும் அவரின் நிபந்தனைக்கேற்று கிடைத்தனர்.

விஷயம் வைரவேல் காதிற்கு எட்டியது. “தேவா” என்று உடனே மகனை தேடிக்கொண்டு வந்துவிட்டார்.

அவன் காலை உணவுக்கு அமர்ந்திருந்தவன், “சொல்லுங்க சித்தப்பா” என்றான்.

“டேய். டீச்சர் துளசிக்கு மாப்பிள்ளை பார்த்திட்டிருக்காங்க” என,

“தெரியும் சித்தப்பா. ஆனந்தி மேடம் என்கிட்ட பேசினாங்க. சந்தோஷும், சுந்தரமும் எதோ திட்டம் போடுறாங்கன்னு சொன்னாங்க. நீங்களே டீச்சர்கிட்ட பேசுங்கன்னு சொல்லிட்டேன்” என்றான்.

“தேவா. என்ன பேசுற நீ? அவனுங்களை நம்மால சமாளிக்க முடியாதா? அதுக்கெதுக்கு துளசிக்கு உடனே கல்யாணம் பண்ணனும்?” வைரவேல் கோபம்கொள்ள,

“எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்காது சித்தப்பா. தேவையில்லாத ரிஸ்க் எடுக்க கூடாது”

“டேய். சரி விடு. அப்படின்னா நாம உனக்காக துளசியை கேட்டு போவோம்”

“ச்சு. சும்மா இருங்க சித்தப்பா. ஆகாத கதை பேசிகிட்டு” என்றவன் “இன்னும் சட்னி வைங்கம்மா” என்றான்.

“என்னம்மா. வைங்க” என்று அமைதியாக இருந்த ஜெயலட்சுமியிடம் கேட்க,

“எதுக்கு இப்போ நல்லவன் மாதிரி பேசிகிட்டு இருக்க? அந்த துளசியை தவிர நீ வேற யாரையும் கட்ட போறதில்லை. அப்புறம் என்ன? பொண்ணு கேட்டு போவோம்” என்றார்.

“ம்மா. உங்களுக்கு அவளை பிடிக்காது”

“உனக்கு பிடிச்சு தொலைச்சிருக்கு இல்லை”

“இப்போ பிடிக்கலை”

“நான் நம்பிட்டேன். நடிக்காத தேவா. இது விளையாட்டு இல்லை” என்றார் ஜெயலட்சுமி.

“ஆமா தேவா. டீச்சர் மாப்பிள்ளையை பார்த்துட்டா நமக்கு கஷ்டமா போயிடும் சாமி. உனக்கு எதாவது கோவம் இருந்தா அதை காட்ட வேண்டிய நேரம் இது இல்லை. வாய்ப்பு எல்லா நேரமும் நமக்கு கிடைக்காது தம்பி.”

“சித்தப்பா. எனக்கு அந்த வாய்ப்பே வேணாம்”

“வேணாம்ன்னா. அப்புறம் ஏண்டா பார்க்கிற பொண்ணை எல்லாம் கழிச்சுவிட்ட?” என்று அம்மா கேட்டார்.

“ஆஹ் என்னமோ நூறு பொண்ணை பார்த்த மாதிரி பேசுறீங்க?” தேவா கடுப்பு கொண்டான்.

“ஆயிரம் பொண்ணு பார்த்தாலும் நீ ஏதவாது தூக்கிட்டு வருவ. எனக்கு அதுக்கெல்லாம் தெம்பில்லை. உன் ஆசை பைங்கிளியவே நீ கட்டிக்கோ போ”  என்றார் ஜெயலட்சுமி.

“ம்மா. உங்களுக்கு பொண்ணு பார்க்க கஷ்டமா இருந்தா சொல்லுங்க நானே எனக்கு பார்த்துகிறேன். அதை விட்டு தேவையில்லாத பேச்சு வேண்டாம்”

“அந்த சீமை சித்ராங்கியும் உனக்கு நீயே பார்த்துகிட்டு பொண்ணு தான்”

“ம்ம்மா”

“தேவா. எனக்கு ஆயிரம் புத்தி சொன்னவன் நீ. உனக்கு நான் என்ன சொல்ல? நம்ம விதியில இல்லாதவங்க நாம என்ன செஞ்சாலும் நமக்கு கிடைக்க மாட்டாங்க. அதுக்கு நானே உதாரணம். ஆனா உனக்கு அப்படி இல்லை. துளசி உனக்கான பொண்ணுன்னு தோணுது சாமி” வைரவேல் சொல்ல,

“இல்லை சித்தப்பா. எனக்கு அப்படி தோணலை” என்றான் தேவா.

“தேவா”

“நான் இப்போ சொல்றது தான். எனக்கு அவ வேணாம்.”

“உன் விருப்பம் துளசி தான் தேவா”

“நான் மறுக்கலை சித்தப்பா. ஆனா என்னை வேணாம்ன்னு தூக்கி போட்டவளோட என் வாழ்க்கையை நான் அமைச்சுக்க விரும்பலை, அதுக்கு நான் தனியா கூட இருந்திடுவேன்” என்று முடித்து கொண்டான்.

அதன்பின் வீட்டில் யார் என்ன பேசியும் தேவா கேட்கவில்லை. செல்வி தம்பிய வீட்டுக்கு வரவைத்தும் பேசி பார்த்தாள்.

“க்கா. எனக்கு அவ வேணுமே வேணும்ன்னா நினைச்சிருந்தா எப்போவோ எங்க கல்யாணம் நடந்திருக்கும். அன்னைக்கும் நான் அப்படி நினைக்கலை, இன்னைக்கும் நினைக்கலை. நாளைக்கும் நினைக்க மாட்டேன். நான் கோவத்தில் எல்லாம் இந்த முடிவு எடுக்கலை. என்னமோ எங்களுக்குள்ள சரியா இல்லை. அப்படியே இருக்கட்டும்” என்றான் தம்பி.

இப்படி ஒரு நாள் என் வாழ்க்கையிலா? அவளை கேட்க வேணாம்ன்னு சொல்றேனா? எனக்கு உண்மையிலே கிறுக்கு பிடிச்சிருக்கு!

‘என் விருப்பம் ஒன்று தான். அது அவள் தான். ஆனா அதுக்காக எல்லாம் அவகிட்ட திரும்ப போய் கேட்க முடியாது’

என் காதல்ல என்ன குறை கண்டா? என்னை வேணாம்ன்னு எவ்வளவு சுலபமா சொன்னா! நான் என்ன அவ்வளவு ஈஸியா போயிட்டேனா!

எப்போதுமே அதை நினைத்தால் மனது ஆறமாட்டேன் என்கிறது.

போகட்டும். அவளுக்கு மடியிலே போட்டு தாலாட்டுற ஆள் தான் சரியா வருவான்.

ஏற்கனவே ஒருமுறை இந்த வலியை நான் அனுபவிச்சுட்டேன். திரும்ப ஒருமுறை பட்டுக்கிறேன். அவ்வளவு தான்.

எப்போதும் போல் இருந்தான். இயல்பாக துளசியை அலுவலகத்தில் வைத்து வம்பிழுத்தான்.

இன்று கூட, “தேவா சார் இந்த மாச வாடகை வரலையே?” என்று கட்டிட உரிமையாளர் வர.

“இந்த மாச வாடகை இவங்ககிட்ட வாங்கிக்கோங்க சார்” என்று துளசியை கை காட்டினான்.

“நானா?” என்று பெண் முழிக்க,

“ஆமா இனி ஒரு மாசம் நாங்க, ஒரு மாசம் நீங்க கொடுங்க. பாதி ஆபிஸ் உங்களுக்குன்னு எடுத்துகிட்டீங்க இல்லை” என்றான் தேவா.

“இது அநியாயம். முழு ஆபிஸும் நீங்க தான் பயன்படுத்துறீங்க, நாங்க சின்னதா டேபிள் தான் போட்டிருக்கோம்” என்று துளசி சொல்ல.

“இவ்வளவு பெரிய டேபிள் உனக்கு சின்னதா? சார் நீங்களே சொல்லுங்க இது சின்னதா?”

“கொஞ்சம் பெருசு மாதிரி தான் இருக்கு” என்றார் அவர்.

“அதான் ஓனரே சொல்லிட்டார் இல்லை. வாடகை எடுத்து வை” என்றான் அதிகாரமாக.

“சார்கிட்ட கேட்டுட்டு தான் கொடுப்பேன்”

“அதுவரைக்கும் இவர் வெய்ட் பண்ணிட்டு இருப்பாரா? முதல்ல பணத்தை கொடு”

“என்கிட்ட இப்போ பணம் இல்லை”

“காலையில கூட கிளையண்ட் ஒருத்தர் பணம் கொடுத்தார் இல்லை. அதை கொடு”

‘அதுக்குள்ள கண் உறுத்திடுச்சு’ துளசி திட்டி கொண்டே அவருக்கு பணம் கொடுத்தாள்.

வைரவேல் வரவும் முதல் ஆளாக அவரிடம் சொல்ல, “இருக்கட்டும் விடுமா” என்றுவிட்டார் அவர்.

தேவா அவளை பார்த்து கெத்தாக புருவம் தூக்கி விட்டு வெறுப்பேற்றினான்.

அன்று மாலை துளசியை சீக்கிரம் வீட்டுக்கு வர சொன்னார் வளர்மதி. மாப்பிள்ளை ஒருவன் அவளை பார்க்க வருவதாக இருந்தது.

“ம்மா. என்னம்மா இது?” பெண் திகைக்க,

“நல்லா விசாரிச்சுட்டேன் துளசி. நல்ல புள்ள தான்” என்றார் வளர்மதி.

“ம்மா. யாரையும் நம்ப வேண்டாம். கொஞ்ச நாள் போகட்டும் ப்ளீஸ்”

“துளசி. இந்த மாப்பிள்ளை பத்தி முழுசா தெரியும். தேவா தான் விசாரிச்சான்”

“ம்மா” துளசிக்கு அதிர்வு.

“ஆனந்தி அவன்கிட்ட பேசிட்டு தான் நம்மளை பார்க்க வந்திருந்தா. சூழ்நிலை சரியில்லை. சீக்கிரம் முடிங்கன்னு சொன்னதும் அவன் தான்”

“ம்மா. அவர் எப்படி?”

“தேவாவை சந்தேகப்படுறியா துளசி” என்று அதுவரை அமைதியாக இருந்த மாலதி கேட்டார்.

“இல்லவே இல்லை அத்தை. அவர், அவருக்கு நான்” என்று பெண் திணற,

“அவனுக்கு உன்மேல விருப்பம் அதானே, தெரியும். நாங்க கூட அவன்கிட்ட பேசி பார்த்துட்டோம். உன்னை அவனுக்கு கேட்கலாம்ன்னு. என்னமோ தேவா முடியவே முடியாதுன்னு நின்னுட்டான்”

“பெரிய மாமா காலையில கூட பேசினார். தேவா பிடிகொடுக்கலை. நான் இப்படியே இருந்திட மாட்டேன். சித்தப்பாக்கு பேசினது எனக்கும் தான்ப்பா. முதல்ல அவளுக்கு ஒரு நல்லவனோட கல்யாணம் முடியட்டும். அப்புறம் என் கதையை பார்ப்போம்ன்னு சொல்லிட்டான்” என,

“அவருக்கு நான் இப்போ இரண்டாவது தெரியறேன் போல. அதான் கேட்க வேணாம்ன்னு சொல்லியிருப்பார்” என்றாள் துளசி.

“துளசி என்ன பேசுற நீ?”

“இல்லை அத்தை. நான் எதார்த்தத்தை சொல்றேன். என்ன இருந்தாலும் நான் இப்போ டிவோர்சி. இரண்டாவதா  கல்யாணம் பண்ண எத்தனை பேருக்கு பிடிக்கும்ன்னு சொல்ல முடியாது இல்லை”

“தேவா அப்படி நினைக்க மாட்டான் துளசி” என்றார் வளர்மதி.

“தெரியாதும்மா. இன்னொருத்தன் என்னை தொட்டிருக்கான். வலுக்கட்டாயமா என்னை. ச்சு. வேணாம்மா. அவர் முடிவு சரிதான்” என்றுவிட, கேள்விப்பட்ட தேவா தான் கண்களை மூடி நின்றுவிட்டான்.

“தேவா” என்று வைரவேல் மகன் தோளை தட்ட,

“என்னை கொன்னுடுவா சித்தப்பா. இவ  நிச்சயம் என்னை கொன்னுடுவா” என்றான் தேவா.

“இவளுக்கு கல்யாணம் நடந்தப்போ கூட எப்படியோ தாங்கிகிட்டேன் சித்தப்பா. கொஞ்சநாள் பித்து பிடிச்சு அலைஞ்சேன் தான். ஆனா இப்போ உண்மையாவே பைத்தியம் ஆகிடுவேன் சித்தப்பா. என்னை ஆக்கிடுவா இவ”

“என்ன பேசுற நீ”

“டிவோர்சியாம் அதனால என் முடிவு சரின்னு சொன்னாளா? ஆஹ். காதல் சாபம். இல்லை இல்லை. என் காதல் தான் சாபம். என்னை அது வாழவும் விடாது, சாகவும் விடாது” என்று அரற்றினான்.

“சாமி நிதானத்துக்கு வா”

“தப்பானவ மேல நான் என் காதலை வைச்சுட்டேனா? இல்லை, அவ நல்லவ தான் சித்தப்பா. முயல் குட்டி மாதிரி சாது, அழகு. நாந்தான் தப்பு சித்தப்பா. என் காதல் சரியில்லை போல”

“ஒருவேளை நான் அவளை காதலிக்கவே இல்லையோ? ஆமா அப்படித்தான். இல்லைன்னா அவளை வீடு புகுந்து தூக்கியிருக்க மாட்டேனா? ஆனா அப்படி வலுக்கட்டாயமா அவளை கல்யாணம் பண்ணிக்க எனக்கு இஷ்டமில்லையே, என்ன செய்யட்டும் நான்?” என்று அங்கும் இங்கும் நிலையில்லாமல் நடந்தான்.

தலையை கலைத்துவிட்டான். முழங்கை சட்டையை மடித்து விட்டான். தொடையை குத்தி கொண்டான். நெஞ்சை அடித்து கொண்டான்.

“என்னடா பண்ற நீ?” என்று வைரவேல் அவன் கையை பற்றிக்கொள்ள,

“நெஞ்சு அடைச்சு போன மாதிரி இருக்கு சித்தப்பா” என்றான் மகன்.

“தேவா” மகனின் சிவந்துவிட்ட கண்களில் வைரவேல் தவித்து போனார்.

“அந்த புள்ள ஏதோ எதார்த்தமா பேசிடுச்சு சாமி. அவளோட கஷ்டம் அப்படி. உன்னை பேசணும்ன்னு பேசியிருக்காது தம்பி”

“எதார்த்தத்தை பேசுறவ என்னை வைச்சு பேசியிருக்க கூடாது. நான் அப்படியா சித்தப்பா? நீ சொல்லு உன் மகன் அப்படியா?”

“இல்லை. இல்லை தேவா”

“இன்னொருத்தன் தொட்டதுல நான் வேணாம்ன்னு சொல்றேனா? என்னை அசிங்கப்படுத்திட்டா சித்தப்பா”

“இவளால நான் ஒரு நிமிஷம் கூட சந்தோஷ பட்டது இல்லை. என் துரதிஷ்டம் என் காதல். என் ஜாதகமே அப்படி தான் இருக்கும். நீ சொன்னது உண்மை, என் தலைவிதியில இவதான் இருக்கா”

“எனக்கு இவகிட்ட இருந்து விடுதலையே கிடையாது சித்தப்பா. நடக்கட்டும். என்ன நடக்குதோ நடக்கட்டும். பேசுங்க. என் மகனை கட்டிக்கோன்னு கேளுங்க” என்றான் தேவா.