“அப்புறம் எப்படி பொண்ணை உறுதி பண்றது? ஊருக்கு சொல்றது? அவங்க வீட்டு ஆளுங்களுக்கிட்ட முறைப்படி பேசுறது. இதெல்லாம் செஞ்சு தான் ஆகணும் வேலு” என்று பசுபதி சொல்லிவிட, வேறு வழி இல்லாமல் வைரவேல் வாசலுக்கு வெளியே அமர்ந்திருந்தார்.

வீட்டுக்குள் செல்லவில்லை, மாலதியை பார்க்கவில்லை. மாப்பிள்ளை எனும் முத்திரை அவரை மிகவும் சங்கட படுத்தியது. 

“அப்புறம் மாப்பிள்ளைக்கு என்ன போடுவீங்க?” என்று தேவா ஆரம்பித்து வைக்க, உறவுகள் சிரித்தனர்.

துளசி மட்டும் அவன் பேச்சில் முகத்தை சுளித்தாள். 

“என்ன போடணும்ன்னு சொல்லு. போட்டுடலாம்” என்று வளர்மதி முன் நின்று சொல்ல,

“தேவா சும்மா இருடா” என்று அதட்டினார் வைரவேல்.

“நீங்க சும்மா இருங்க சித்தப்பா. தங்கமான மாப்பிள்ளையை தாரவார்க்க போறோம். பொண்ணு வீட்டு ஆளுங்களுக்கு உங்க மதிப்பு தெரியுதான்னு பார்க்க வேணாமா?” என்றான் தேவா.

“அவரோட மதிப்பு தெரியறதால தான் தங்கத்துக்கு இணையான தங்கத்தை நாங்களும் கொடுக்கிறோம்” என்று மாலதியை முன் நிறுத்தினார் வளர்மதி.

“சரியா சொன்னம்மா” என்று பசுபதி ஆதரவு தெரிவிக்க, ஜெயலட்சுமி கண்களோ தள்ளி நின்றிருந்த துளசி மேல் தான் அடிக்கடி சென்று வந்தது.

ஏன் பார்க்கிறார், எதற்க்கு பார்க்கிறார் என்று அவருக்குமே புரியவில்லை. தேவா கூட அவள் பக்கமே திரும்பவில்லை. இவர் தான் பார்த்திருக்க, துளசிக்கு அவர் பார்வை தெரியாமல் இல்லை. 

‘நான் இங்க இருக்கிறது அவங்களுக்கு பிடிக்கலையோ?’ 

வைரவேல் மாமாவை பார்க்க போறப்போ எல்லாம் அவங்க நடந்துகிட்ட விதம் அதை தான் சொல்லுது. ஆனா நான் என்ன பண்ண முடியும்? 

மாலதிக்கு இவர்கள் தான் செய்தாக வேண்டும். கடமை என்றில்லை. அவர் மேலான அன்பில் செய்வது. அதிலும் வைரவேல் மாப்பிள்ளை எனும் போது கட்டாயம் முன் நிற்பார்கள்.

அன்றே முகூர்த்த நாளை குறித்தனர். அடுத்த மாதம் திருமணம். தேவா முன்னின்று மடமடவென எல்லா திட்டமும் போட்டுவிட்டான்.

மண்டபம், பத்திரிக்கை, தாலி எடுக்க, உடை எடுக்க என்று எல்லாவற்றையும் பேசி முடித்து தான் கிளம்பினர்.

“ண்ணா. கல்யாண வேலையை நீ செய்ண்ணா. தேவா வேணாம்” என்று வைரவேல் வீட்டுக்கு செல்லவும் அண்ணனிடம் சொன்னார்.

“ஏன்? என்னாச்சு வேலு?”

“நான் அவனுக்கு செய்ய வேண்டிய வயசுல அவன் எனக்கு செய்வானா?” என்று முகத்தை சுருக்க,

“இவ்வளவு தானா? பயந்து போயிட்டேன்” என்று ஆசுவாசம் கொண்டவர்,

“உன் மகனுக்கு அந்த கொடுப்பினை இருக்கு செய்றான்” என்றார்.

“ண்ணா”

“வேலு உனக்கு தெரியும் நான் சொன்னாலும் அவன் கேட்க மாட்டான். இப்போ அவன் முயற்சியில தான் நீ மனசு வைச்சிருக்க. அவனை போய் செய்யாதன்னு எப்படி சொல்ல?” என்று அவர் முடித்துக் கொண்டார்.

நாட்களும் வேகமாக நகர, ஏற்பாடுகளும் அதே வேகத்தில் நடந்தன.

வைரவேல் எதிலும் இல்லை. மாலதி எல்லாவற்றிலும் இருக்கும்படி தேவா பார்த்து கொண்டான். புடவை, நகை, பத்திரிக்கை எல்லாம் அவர் விருப்பம் மட்டும் தான்.

ஜெயலட்சுமிக்கும் மாலதியிடம் பழகுவது எளிதாக இருந்தது. அமைதியான பெண்மணி. ஜெயலட்சுமியின் படபடப்புக்கு சரியாக பொருந்தி கொண்டார்.

“மருமக எடுக்கிற வயசுல கொழுந்தன் பொண்டாட்டி உறவு வருது. ஆனா இதுவும் நல்லாத்தான் இருக்கு” என்று மகள்களிடம் சொல்லி கொண்டார்.

முகூர்த்த நாளும் வந்துவிட்டது. தாலி கட்டுறது மட்டும் கோவிலில் வெகு சிறப்பாக நடந்து முடிந்தது.

“உனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனா அம்மா வேண்டிகிட்டது. அவங்களுக்காக கோவில்ல வைச்சு தாலி கட்டிடுடா போதும்” என்று தம்பியிடம் பேசினார் பசுபதி. 

ஏற்கனவே அவசரப்பட்டு சம்மதம் சொல்லிட்டோமோ என்று வைரவேல் திணறி கொண்டிருக்கிறார். இதில் இது வேறா? 

எப்படியோ வைரவேல் ஒருமாதிரி நடுங்கி சமாளித்து மாலதி கழுத்தில் மூன்று முடிச்சிட்டுவிட்டார். 

குடும்பத்தினர் ஒருமாதிரி ஆனந்த கண்ணீரில் அர்ச்சத்தை தூவினர்.

தேவா “வாழ்த்துக்கள் சித்தப்பா” என்று அவருக்கு கை கொடுக்க, வைரவேல் மகனை அணைத்து கொண்டார்.

இருவருக்கும் நெஞ்சம் நெகிழ்ந்தது. நிமிடம் அப்படியே நின்று பிரிந்தனர். சித்திக்கு கை கொடுத்தான்.

பசுபதி பெற்றவர்களை நினைத்து கொண்டார். தம்பிக்கான உறவு வந்துவிட்டது. 

“ஆசீர்வாதம் பண்ணுங்க” என்று பசுபதி தம்பதி காலில் புதுமணமக்கள் விழுந்தனர்.

மற்ற யார் காலிலும் விழுக வைரவேல் மறுத்துவிட்டார். போதுமென முதல் ஆளாக மாலையை கழட்ட, “போட்டோ எடுக்காம மாலையை ஏன் கழட்டுறீங்க. நில்லுங்க. சித்தி நீங்களும் வாங்க” என்று இருவரையும் நிற்க வைத்து ஜோடி போட்டோ எடுத்தான் துணை மாப்பிள்ளை தேவா.

மகன் துணை மாப்பிள்ளையாக நிற்பதில் வைரவேலுக்கு ஏகப்பட்ட வெட்கம் கலந்த சங்கடம். எப்படியோ திணறி சில போட்டோக்கள் எடுத்து கொண்டுவிட்டார்.

அதன்பின் மண்டபத்திற்கு வர, ஊர் ஆட்களும், உறவுகளும் வர ஆரம்பித்தனர். வைரவேல், மாலதியுடன் ஓரிடத்தில் அமர்ந்துவிட, எல்லாம் தேடி வந்து பேசி சென்றனர்.

“அடுத்து உனக்கு தான் தேவா” என்று இவனிடம் கேலி பேசி செல்ல,

“இங்கேயே பொண்ணை பார்த்திடுவோமா மச்சான்” என்றான் அருண்.

“பாரு. பாரு. நம்மூர்ல இத்தனை பொண்ணுங்க இருக்காங்களாடா” என்று ஆச்சரியப்பட்டு போனான் தேவா.

“இதுல பாதிக்கு பாதி வெளியே தான் படிக்குதுங்க, வேலை பார்க்குதுங்க மச்சான்” 

“நாம மட்டும் தான் உள்ளூர்லே இருந்து மோசம் போயிட்டோமா மாப்பிள்ளை” என்று தேவா அங்கலாய்த்து கொள்ள,

“இப்போ கூட என்ன மச்சான்? நீ பொண்ணை பார்த்து ஓகே சொல்லு முடிச்சிடலாம்” என்ற அருண்,

“அந்த பொண்ணு பாருடா. நல்ல ஹோம்லி லுக்” என்று ஓர் பெண்ணை காட்டினான்.

“அந்த ரெட் சுடியா? ம்ஹூம். மூக்கு லைட்டா வளைஞ்சிருக்கு” என்றான் தேவா.

“சரிதான். அதோ அந்த கிரீன் சுடி”

“ம்ப்ச். ரொம்ப ஒல்லியா இருக்கு. சரியான வெய்ட் இருந்தா தான் அழகு”

“அந்த மஞ்சள் புடவை”

“முடி என்னடா இவ்வளவு நீளம் இருக்கு. இடுப்புக்கு நின்னா தான் அழகு”

“இந்த பொண்ணு”

“ம்ஹூம். ஏன் உன் டேஸ்ட் இப்படி இருக்கு? இந்த ஹைட் இருந்தா எப்படி? என் நெஞ்சளவு இருக்கணும்”

“சரி உன் அத்தை பொண்ணு”

“அவளை பார்த்தா ஹார்மோன் வேலை செய்ய மாட்டேங்குது”

“ஒன்னுவிட்ட மாமா பொண்ணு”

“என்னடா சேரி கலர் அது? பிஸ்தா கிரீன் கலர் சேரி தான் செம”

“டேய் அதோ அவதான் இப்போ நம்மூர் அழகி. மாடர்ன், ஹோம்லி இரண்டு லுக்கும் இருக்கு” 

“ச்சு. காது சின்னதா இருக்கு. ஜமிக்கி போட்டா லுக் அப்படி இருக்கணும். மயில் ஜிமிக்கி போட்டிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும். இந்த பொண்ணுக்கு எடுக்கவே இல்லை”

“தேவா” என்று அருண் நண்பனை நிதானமாக அழைத்தான்.

“என்ன மாப்பிள்ளை”

“இப்போ நீ சொன்ன எல்லாம் துளசிகிட்ட தான் இருக்கு”

தேவா முகம் சட்டென கசங்கி போனது. அடிவயிற்றில் இருந்து ஏதோ ஒன்று வேகமாக மேலெழுந்து வந்து அவனை நடுங்க செய்தது. கைகளை ஒன்றோடு ஒன்று பிணைத்து கொண்டான்.

“பார்க்கிற எல்லார்கிட்டயும் அவளை தேடாத மச்சான்”

“நான் ஏன் அவளை தேட போறேன்? இப்போ நீ தான் அவளை எனக்கு ஞாபக படுத்துற” என்று வார்த்தைகள் வேகமாக, கோபத்துடன் வந்து விழுந்தது.

“நான் ஞாபக படுத்துறேனா? நீ மறந்திருந்தா இதெல்லாம் ஏண்டா சொல்ற. மூக்குல ஆரம்பிச்சு ஹைட், வெய்ட், முடி, இன்னைக்கு துளசி போட்டிருந்த சேரி கலர், ஜிமிக்கி வரை எல்லாம் அவதான்”

“இந்த உலகத்திலே அவமட்டும் தான் என் நெஞ்சளவுல இருக்காளா என்ன?

“ஆமா. அவமட்டும் தான் உன் நெஞ்சுக்குள்ளே இருக்கா மச்சான்”

“என்னை வேணாம்ன்னு சொன்னவ, எனக்கும் வேணாம் தான். நீ லூசு மாதிரி பேசாம வேற வேலை இருந்தா பாரு போ” என்று அருண் தலையை தட்டிவிட்டு சென்றான் தேவா.

“போடா போ, உன்னை எனக்கு தெரியாது பாரு” என்று அருண் கத்த,

துளசி திகைத்து போய் அமர்ந்திருந்தாள். தனியே அறைக்குள் அடைந்து கொண்டவளுக்கு, வாசலில் வைத்து தேவா, அருண் பேச்சு முழுதாக கேட்டது.

தேவா முடி பற்றி சொன்ன நேரம் துளசி சந்தேகம் கொண்டவள், அவன் சேலை கலர், ஜிமிக்கி பற்றி பேசும் போது அதிர்ந்துவிட்டாள்.

காலையில் இருந்து இருவரும் ஒரே இடத்தில் தான் இருக்கிறார்கள். துளசி சில நேரம் தேவாவை எதேச்சையாக பார்த்திருக்க, அவன் அப்படி கூட இவள் பக்கம் திரும்பிய ஞாபகமே இல்லை.

ஆனால் இன்று அவள் அணிந்திருந்த மயில் ஜிமிக்கி வரை சரியாக அவன் சொன்னதில், பெண்ணுக்கு உதட்டின் மேல் வேர்வை அரும்பிவிட்டது.

தேவா காதல் தெரியும். ஆனால் இந்தளவு காதல் என்று தெரியாது. 

முதன் முதலாக அவன் காதல் ஆழத்தை, தீவிரத்தை பெண் உணர செய்தாள். விரல்கள் தன்னை போல் ஜிமிக்கியை தொட்டு சென்றது.