மஞ்சள் காட்டு மைனா 16

வைரவேல் நேரம் கேட்டு கூட இரண்டு வாரம் கடந்துவிட்டது. தேவா தன் சிறிய தந்தையிடம் அது பற்றி பேசவில்லை.

மற்றதில் எப்படியோ, இதில் மாலதியும் அடங்கியிருக்கிறார். திருமணத்திற்காக அவரை கட்டாயப்படுத்தினான் தான்.

ஆனால் மாலதியை கட்டிக்க சொல்வதில் அவரை நெருக்கவில்லை. முழு மனதாக அவர் சம்மதிக்க வேண்டும்.

இல்லையென்றால் நாளை வைரவலுடன் மாலதி மட்டுமில்லை, ஒட்டு மொத்த குடும்பமும் தான் வருத்தப்பட வேண்டியதாகிவிடும். 

அதனாலே அவன் வேலையை அவன் பார்க்க, வைரவேல் எப்படி மறுப்பு சொல்வது என்று தீவிரமாக யோசித்து கொண்டிருக்கிறார்.

மாலதிக்கு வேறு யாரேனும் கூட திருமணம் செய்து வைத்துவிடலாம். பாவம் தனியே இருக்க வேண்டாம். கரிசனை கொண்டாரே தவிர கட்டிக்கொள்ள நினைக்கவில்லை.

அன்றிரவு தேவாவும், இவரும் தோட்ட வீட்டில் தங்கி கொள்ள, “சாமி” என்றழைத்தார்.

“சொல்லுங்க சித்தப்பா” என, 

“அவங்களுக்கு நாம வேற யாரையாவது பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கலாம். நான் வேணாம் தேவா” என்றார்.

தேவா பதிலின்றி அவரை கோவமாக பார்க்க, “என்ன தேவா?” என்று கேட்டார்.

“அவங்களுக்கு வேற யாரும் இல்லாம உங்களை கட்டிக்க கேட்கலை” என்றான் மகன்.

“நம்மூர்ல சில பேர் அவங்களை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டுட்டாங்க. பொண்டாட்டி இல்லாத நம்ம பங்காளி தங்கராஜ் கூட கேட்டார். அவரும் நல்ல வசதி தான். ஆனா அவங்க யாருக்கும் சரி சொல்லலை. உங்களுக்கு மட்டும் தான் சொன்னாங்க” 

“இருங்க சித்தப்பா நான் பேசி முடிச்சிடுறேன். மாலதி சித்திக்கு உங்க மேல ஒரு நல்ல அபிப்ராயம் இருக்கு. உங்களை மதிக்கிறேன்னு சொன்னாங்க. இப்போ அவங்களுக்கு தேவை நம்பிக்கையான ஒரு துணை மட்டும் தான்”

“ஆனா நீங்க, ச்சு. போங்க சித்தப்பா. வீணா போற உங்க வாழ்க்கையை அவங்களாவது வாழ்ந்துகிட்டும். உங்களுக்கு வேணாம்ன்னா போங்க. அவங்களுக்கு வேணும் அவ்வளவு தான். இனியாவது சரியா யோசிங்க” என்று கோபத்துடன் தூங்க சென்றான்.

வைரவேலுக்கு மகனின் கோவத்தில் முகம் சுருங்கி போனது. ஏதோ தவறு செய்வது போல் தேவா அவரை நினைக்க வைத்துவிட்டான்.

இரண்டு நாள் மனிதர் அமைதியாக சுற்ற, “வேலு. உன்கிட்ட பேசணும்” என்று பசுபதி தம்பியை தனியே அழைத்தார்.

அவர் கையில் ஒரு பத்திரிக்கை கொடுக்க, பிரித்து பார்த்த வைரவேல் கசங்கிய முகத்துடன் அண்ணனை பார்த்தார்.

“அந்த புள்ள உன்கிட்ட பேசணும்னு பல முறை முயற்சி எடுத்துச்சா?” என்று அண்ணன் கேட்டார்.

“எனக்கு இஷ்டம் இல்லைண்ணா. அவங்க வழி வேற, நாம அதுல என்னன்னு போக” என்றார் எங்கோ பார்த்து.

“உன்னால அந்த புள்ள அழுகுது தம்பி. என்னை சந்திச்சே ஆகணும்ன்னு தோட்டத்துக்கு வந்திடுச்சு” 

“நீங்க ஏதும் கோவமா பேசிட்டிங்களா?” வேலு அண்ணனை அறிந்தவராக கேட்டார்.

“அழுகிற புள்ளகிட்ட என்னன்னு கோவப்பட? ஏன் அவரை அப்படியே விட்டுட்டீங்கன்னு அவ்வளவு கண்ணீர். நாங்க சொல்லிட்டோம் அவன் கேட்கலை நாங்க என்ன பண்ணன்னு கேட்டேன்”

“இதுல அவங்க அழுக என்ன இருக்குண்ணா? இப்படித்தான் எதாவது சொல்வாங்கன்னு நான் பேசலை” என்றார் வைரவேல்.

“அவளுக்கு நிம்மதி வேணாமா வேலு? நம்மால ஒரு உசுரு தனியா தவிக்குதுன்னு அந்த புள்ள மறுகுது தம்பி” 

“பெத்த பொண்ணுக்கு கல்யாணம் வைச்சிட்டேன். ஆனா என்னால சந்தோஷமா என் பொண்ணு கல்யாணத்தை எடுத்து செய்ய முடியலை. நெஞ்சு எல்லாம் அடைச்சுக்குது. நீ குடும்பமா நல்லா இருக்க. அங்க ஒருத்தர் உன்னால குடும்பம் இல்லாம தனியா நிக்கிறார்னு குற்ற உணர்ச்சியில் செத்துக்கிட்டு இருக்கேன். என்னை காப்பாத்தி விட சொல்லி உங்க தம்பிகிட்ட சொல்லுங்கய்யானு’ கை எடுத்து கும்பிடுது தம்பி. நான் என்ன சொல்லட்டும் நீயே சொல்லு?” என்று தம்பியிடம் கேட்டார்.

வைரவேல் தொண்டை அடைக்க எங்கோ வெறிக்க, “அவர் நேசத்துக்கான தகுதி எனக்கு இல்லை. பெத்தவங்களுக்காக அவரை விட்டுட்டேன். தனியா நின்னு என்னை பாவியாக்க வேணாம்ன்னு அவர்கிட்ட சொல்லுங்கய்யான்னு கண்ணீர் விட்டுட்டே போச்சு அந்த புள்ள. ஏன் வேலு இப்படி?” என்றார் அண்ணனும் வேதனையுடன்.

“நான் ஒன்னு சொல்லட்டா வேலு அந்த புள்ள உன்மேல வைச்ச நேசம் உண்மை. அதனால தான் நீ தனியா நிக்கிறதுல தவிக்குது. போதும் வேலு நீயும் பட்டு, அந்த புள்ளையும் படுத்தாத. விட்டுடு. அந்த புள்ளைய நிம்மதியா விட்டுடு”

“உன் விருப்பம் இப்போ அந்த புள்ளைக்கு சுமையாகிடுச்சு. தாங்க முடியலைன்னு கண்ணீர் விடுற நேசம் சாபமாகிடுது வேலு”

“ண்ணா நான்” என்றவருக்கு வார்த்தைகள் வருமுன்னே கண்ணீர் வந்துவிடும் என்ற பயம். 

“அப்பா பண்ணது தப்பு. அவருக்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்” என்று கை குவித்து, தலை வணங்கி மன்னிப்பை வேண்ட, 

“அண்ணா என்னண்ணா பண்றீங்க?” என்று அவர் குவித்த கையை பிடித்து பதறிவிட்டார் வைரவேல்.

“அம்மா படுக்கையில் உன்னை கெஞ்சி, அப்பா உன்னையே பார்த்து உசுருவிட்டுன்னு எதுக்கும் நீ கரையாம போயிட்ட. மனசு விட்டு போச்சு வேலு. கடைசி முறையா கேட்கிறேன் வேலு. கல்யாணம் பண்ணிக்கோயா. நம்ம குடும்பத்தை பாவம் சுமக்க வைச்சிடாத. ஏழேழு தலைமுறைக்கும் உன் கண்ணீர் தடம் போகாது தம்பி. அப்பா பண்ணது தப்பு தான்யா. மன்னிச்சு விட்டுடு. அவரோட எங்களை எல்லாம் மன்னிச்சு விட்டுடு”

“ண்ணா. என்னண்ணா பெரிய வார்த்தை எல்லாம் பேசுற. நான் அப்படியா? நம்ம குடும்பம் நல்லா இருக்கணும்ண்ணா. தேவா. அவன் வம்சம் செழிக்கணும்ண்ணா. நீ கல்யாண நாளை குறி. நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றார் வைரவேல்.

“வேலு. நீ உண்மையா தான் சொல்றியா தம்பி?” என்று பசுபதி தம்பியின் இரு கைகளையும் கெட்டியாக பிடித்து கொண்டார்.

இத்தனை வருட போராட்டம் முடிவுக்கு வர போகிறதா? என் தம்பி குடும்பஸ்தன் ஆக போகிறானா?

“ண்ணா நான் உண்மையா தான் சொல்றேன். நீங்க நாளை குறிங்க” என்று வைரவேல் ஆணித்தரமாக சொன்னார்.

பசுபதி உடனே தம்பியுடன் வீட்டுக்கு ஓடி மனைவி, மகனுக்கு சொல்ல, “சந்தோசம் தம்பி. ரொம்ப ரொம்ப சந்தோசம் தம்பி” என்று ஜெயலட்சுமி கலங்கிய கண்களுடன் கொழுந்தனிடம் சொல்ல,

மகன் மட்டும் அவரை சந்தேகமாக பார்த்து நின்றான். “என்ன சாமி?” என்று வைரவேல் கேட்க,

“உண்மையா தான் சொல்றீங்களா சித்தப்பா?” என்று தேவா கேட்க.

“பேச்சுக்கு கூட நான் இதை எப்போவும் சொன்னதில்லை தேவா. இப்போ மனசார சொல்றேன். நாள் பாரு. சிம்பிளா கோவில்ல வைச்சு”

“ம்ஹூம். அந்த கதையே வேண்டாம். பெரிய அளவுல செய்யலைன்னாலும், சின்ன மண்டபம் பிடிச்சு செய்றோம். ஊருக்கே சோறு போடுறோம்” என்றான் தேவா முகம் மலர.

“மண்டபமா? தேவா என்னடா, சித்தப்பாவை சங்கட பட வைக்காத சாமி” என்று வைரவேல் சொல்ல, 

“ஒரு சங்கடமும் இல்லை. நாள் குறிக்கிறோம், ஜே ஜேன்னு கல்யாணம் பண்றோம்” என்று அவரை இறுக்கமாக அணைத்து கொண்டான் மகன்.

வைரவேல் மகனின் முதுகில் தட்டி கொடுக்க, தேவா கண்களை அவரின் சட்டையிலே துடைத்து நிமிர்ந்தான். 

மறுநாளே மகள்களை வரவைத்து பசுபதி தன் குடும்பத்துடன் மாலதி வீட்டுக்கு சென்றார். மாலதியின் சொந்தங்கள் வந்திருக்க, வளர்மதி தான் எல்லாம் எடுத்து செய்தார்.

மாலதி வீட்டு பெரியவர்களிடம் பசுபதி முறையாக பெண் கேட்டார். அவர்களும் சரியென, அன்றே மாலதிக்கு வைரவேலை உறுதி செய்தனர்.

வந்திருந்தவர்களுக்கு பந்தி பரிமாறப்பட, துளசி அம்மாவிற்கு உதவியாக நின்றாள். உடன் மில்லில் வேலை பார்ப்பவர்களும் வந்திருக்க சமாளிக்க முடிந்தது.

பசுபதி குடும்பம் உதவிக்கு வர, வளர்மதி மறுத்துவிட்டார். “மாலதிக்கு நான் செய்றேன். நீங்க மனசார சாப்பிட்டு போங்க” என்றுவிட்டார்.

மாலதி கணவனை பிரிந்த நேரம், பிறந்த வீட்டில் ஆதரவு இல்லை. பாரமாக  தான் தெரிந்தார். தன் தேவைக்காக வளர்மதி மில்லில் வேலைக்கு சேர்ந்துவிட்டார். 

அவரின் அண்ணன்கள் போனால் போகிறது என அவர்களின் பழைய வீட்டை அவருக்கு கொடுத்திருந்தனர். மாலதியும் அவர்களை தொந்தரவு செய்வதில்லை. ஏதேனும் விசேஷத்துக்கு அழைத்தால் போவார். அவ்வளவு தான்.

இதோ இப்போது தான் வளர்மதி அழைப்பின் பேரில், பசுபதி மேல் கொண்ட மரியாதையில் எல்லாம் உறுதி செய்ய வந்துவிட்டனர். 

“வேற யாரும் மாப்பிள்ளைன்னா வந்திருக்க மாட்டாங்க. வைரவேல் ஐயாங்கிறதால மொத்த குடும்பமும் வந்தாச்சு” என்று மாலதி உடன் வேலை செய்பவர் நொடித்து கொண்டார். 

“வந்தாங்க இல்லை அது போதும். நீ வேலையை பாரு” என்று வளர்மதி அவரை கண்டித்து அனுப்பி வைத்தார்.

மாலதி முகம் அமைதியாக இருக்க, வைரவேலுக்கு இந்த உறுதி எல்லாம் தேவையா என்றிருந்தது.