அகல்யா மட்டும் தான் படபடப்பாக ஏதோ பேசி கொண்டிருந்தாள். குழந்தைகள் அங்கும், இங்கும் சென்று கொண்டிருக்க, வைரவேல் மகனுடன் தங்கிவிட்டார். அவரின் ஆதரவு மகனுக்கு எப்போதும், எந்த நிலையிலும் உண்டே!
“மிஸ் காபி கொண்டு வர சொல்லுங்க” என்றான் தேவா.
அகல்யா, மருமகன்கள், குழந்தைகளை தவிர எல்லார் பார்வையும் சட்டென துளசியை தொட்டு சென்றது. அவள் மொபைலில் பார்வை பதிந்திருந்தாள்.
குழப்பத்துடன் தேவாவை பார்க்க, அவனோ காபி எடுத்து வந்தவரை பார்த்து முகம் மலர்ந்தான்.
தேவாவிடம் அவர் காபியை நீட்ட, “சித்தப்பாக்கு கொடுங்க சித்தி” என்றான்.
“ஆஹ்” மொத்த குடும்பமும் திகைக்க, வைரவேலுக்கு சொல்லவும் வேண்டுமா?
துளசி சட்டென விழிகளை உயரத்தினாள்.
“மாலதி. கொடும்மா” என்றார் வளர்மதி.
அவர் கொஞ்சம் தயங்கி வைரவேலுக்கு காபியை நீட்ட, மனிதர் எங்கு எடுப்பது. அவருக்கு தான் கை நடுங்கி கொண்டிருக்கிறதே!
“எடுங்க சித்தப்பா” என்று மகன் அவர் கைப்பற்றி காபி கோப்பையை எடுக்க வைத்தான்.
“தேவா” என்று அவனிடம் கோவப்படுவதற்கு கூட தொண்டை அசைய மாட்டேன் என்று ஸ்ட்ரைக் செய்தது.
கோப்பை பிடித்த விரல்கள் கிடுகிடுவென ஆட, ‘என்னை மாதிரியே இருக்கார்’ தேவாவிற்குள் அவன் நினைவு.
துளசி திருமணம் கேள்விப்பட்டு சண்டையிட்ட நேரம் இப்படி தானே நின்றிருந்தான்.
“ம்ஹ்ம்” என்று பெரு மூச்சுவிட்டவன், தன் குடும்பத்தினரை அவதானித்தான்.
மருமகன்கள் மறைத்துவிட்ட அதிர்ச்சியுடன் இயல்பாக கோப்பையை எடுத்து கொண்டார்கள். முன்னமே கொஞ்சம் மேம்போக்காக சொல்லி வைத்திருந்ததால் சமாளித்து கொண்டார்கள் போல.
அகல்யாவிற்கும் செல்வி சொல்லியிருந்தாலும், திடீரென நடப்பதில், “தேவா. என்னடா?” என்று தம்பியிடம் கேட்டாள்.
“இவங்க மாலதி. சித்தப்பாக்கு பேசலாம்ன்னு”
“இல்லை. இது வேண்டாம் தேவா. சாரி என்னை மன்னிச்சிடுங்க” என்று மாலதியிடம் சொல்லி, கோப்பையை வைத்துவிட்டார் வைரவேல்.
“சித்தப்பா” என்று தேவா அவர் கை பிடிக்க,
“விடுடா என்னை” என்று மகனிடம் அடிக்குரலில் கோபம்கொள்ள,
“ஏன் விடணும்? நில்லுங்க. நாம பேசணும். பேசி முடிச்சுட்டு தான் கிளம்புறோம்” என்றான் மகன் அவருக்கும் மேல்.
“தேவா மக, மருமகன்ங்க முன்னாடி என்ன பண்ற சாமி? எனக்கு தலை நிமித்த முடியலடா”
“உங்க பொண்ணுங்களும், மருமகன்களும் என்ன சொல்ல போறாங்க? உங்களுக்கு ஒரு நல்லது நடக்கிறது அவங்களுக்கும் சந்தோஷம் தான்” என்றான்.
“சித்தப்பா. நாங்க எல்லாம் குடும்பமா வாழும் போது, நீங்க தனியா இருக்கிறது எங்களுக்கு வருத்தமா இருக்கு. ப்ளீஸ் சித்தப்பா, உங்களுக்காக யோசிங்க” என்றாள் செல்வி.
“செல்வி ஏன்ம்மா நீங்க எல்லாம் என் குடும்பம் இல்லையா?” என்று வைரவேல் வேதனையுடன் கேட்க,
“அக்கா நான் சித்தியை காட்ட தான் உங்களை வர சொன்னேன். இவங்க தான் மாலதி சித்தி. நம்மூர் தான். குழந்தை இல்லைன்னு இவரை வேணாம்ன்னு முன்னாள் கணவர் விட்டுட்டாங்க. தனியா தான் இருக்காங்க. இந்த மில்ல தான் வேலை பார்க்கிறாங்க. வயசும் மூணு வயசு தான் வித்தியாசம். வேறெதுவும் கேட்கணும்னு கேளுங்க. ம்மா. கேளுங்க” என்றான் தேவா.
“தம்பிக்கு பிடிச்சா போதும் தேவா. எங்களுக்கு மாலதியை தெரியும். ரொம்ப சாந்தோஷம்” என்று ஜெயலட்சுமி மனதார சொன்னார்.
“க்கா. நீங்க கிளம்புங்க. நாங்க பேசிட்டு வரோம்” என்று செல்விக்கு சொல்ல, அக்கா குடும்பம் இரண்டும் கிளம்பியது.
தாங்கள் நிற்கவா, வேண்டாமா? என்று துளசி அம்மாவை பார்க்க அவர் அங்கு இருக்க தான் வேண்டும் என்று மகளுக்கு கண் காட்டினார்.
மாலதி நடக்கும் எதிலும் பேசாமல், அமைதியாக நிற்க, ஜெயலட்சுமி தானே அவர் பக்கம் சென்று நின்று கொண்டார்.
“இப்போ கேளுங்க சித்தப்பா? நாங்க உங்க குடும்பம் இல்லையான்னு கேட்டீங்க இல்லை. உங்க குடும்பமா இருந்தாலும் அப்பான்னு எங்கப்பாவை தான் கூப்பிடுறோம்” என்றுவிட்டான் தேவா.
“தேவா என்ன பேசுற நீ?” என்று பசுபதி மகனை கண்டிக்க,
“என்னை நீ அப்பான்னு கூப்பிடவே வேண்டாம்டா. ஆனா மகன்னு எனக்கு நீ இருக்க இல்லை. அது போதும் எனக்கு” என்றார் வைரவேல் கொஞ்சம் கோவமாக, அதிக வேதனையாக.
“உறவு முறையில நான் உங்க மகன் தான். உங்க மேல எவ்வளவு தான் பாசம் இருந்தாலும், உங்களோடே நான் எப்போவும் இருக்க முடியுமா என்ன?”
“இருக்காதடா. உன்னை இருன்னு நான் கேட்கவும் இல்லை”
“கேட்டாலும் முடியாதுன்னு தான் சொல்றேன். சும்மா எப்போ பார்த்தாலும் கஷ்டத்திலே சுகம் காண நினைக்காதீங்க சித்தப்பா”
“தேவா”
“இருக்கிறதை தான் சொல்றேன். உங்க குடும்பம் உங்களை தோற்க்கடிச்சிடுச்சுன்னு அவங்களை இன்னும் எத்தனை வருஷத்துக்கு தண்டிப்பீங்க? பாட்டி, தாத்தா போயே போயிட்டாங்க. ஆனாலும் உங்க பழிவெறி தீரலை இல்லை”
“உங்களை நீங்களே தான் அதிகம் கஷ்டப்படுத்திகிறீங்க சித்தப்பா” என்றான் தேவா.
“உங்க விருப்பம், இனி என்ன பண்ணாலும் கிடைக்காது. அது முடிஞ்சு போச்சு. நீங்க இருக்கீங்க. உயிரும், உணர்வும் உள்ள மனுஷனா? உங்களுக்கே நீங்க என்ன பதில் சொல்ல போறீங்க?”
“மனசு மட்டும் நீங்க இல்லை. உங்க உடம்பும் தான் நீங்க. உடம்பு இருந்தா தான் மனசு. இல்லாத ஒன்னை துரத்தி பிடிக்கிறேன்னு, இருக்கிறதை சிதைக்கிறீங்க”
“தேவா ஏதேதோ பேசாத. என் மனசு இல்லாத ஒண்ணா?” வைரவேலுக்கு கோவம். இத்தனை வருடம் ஓர் தவம் போலே மனிதர் வாழ்ந்துவிட்டார். அது முற்றிலும் இல்லை என்றால்?
“இல்லை தான். ஆசைப்பட்டது இல்லைன்னா ஆசைப்பட்ட உங்க மனசு மட்டும் இருக்குதா என்ன?”
“நீ என்னை பேசி பேசி ஏமாத்த பார்க்கிற?”
“ஆல்ரெடி நீங்க ஏமாந்து தான் இருக்கீங்க? ஆமா, தாத்தா, பாட்டியை தண்டிக்கிறேன்னு, உங்களை நீங்களே ஏமாத்தலை. வயசு போயிடுச்சு, இளமை போச்சு, முடி நரைச்சு துணைக்கு கை பிடிக்க வேண்டிய நிலையில கூட வீம்பா தனியா தான் நிப்பேன் சொன்னா கீழே தான் விழணும்”
“அதுவும் உங்களுக்கு கிடைக்கிறது எப்படிப்பட்ட துணை தெரியுமா? மாலதி சித்தி பார்க்காத கஷ்டமா? அவங்க கை எல்லாம் தாங்கி ஸ்ட்ராங்கா இருக்கு. நீங்க எல்லாத்தையும் விட்டு நடுங்கிட்டு இருக்கீங்க. சொல்லா போனால் நான் மாலதி சித்திக்கு அநியாயம் பண்றேனோன்னு தோணுது”
“டேய் அதிகமா பேசாத”
“ஆமா. அவங்ககிட்ட இரண்டு முறை தான் பேசினேன். நான் நடந்து வந்த பாதையை திருப்பி பார்க்கிறதில்லை தேவா. புது பாதையை மனசார ஏத்துக்கிறேன்னு எவ்வளவு அழகா சொன்னாங்க தெரியுமா? நீங்க என்னடான்னா”
“டேய். இதுக்கு மேல பேசாத. அப்படி அவங்க அவ்வளவு தெளிவுன்னா வேற யாரையும் பார்க்க வேண்டியது தானே? என்னை ஏண்டா உயிரை வாங்குற?”
“உனக்கு இயற்கையே தெரியலை சித்தப்பா. வீக்கா இருக்கிறவங்களுக்கு ஸ்ட்ராங்கானா துணை தான் வேணும்” என்றான் தேவா.
“திரும்ப, திரும்ப என்னை வீக் சொல்லாத தேவா”
“இருக்கிறதை தான் சொல்றேன். கல்யாணமா, நானான்னு ஒரு கை பார்க்கிறதை விட்டு, பயந்துகிட்டு, நடுங்கிக்கிட்டு, வேணாம், ஒரு செடி, ஒரு பூன்னு காஞ்சு போன செடியை பிடிச்சு தொங்கிட்டு இருக்கீங்க”
“என்னடா. விட்டா என் தம்பியை ஓவரா பேசிட்டு இருக்க? வயசில் நீ எல்லாம் அவன் பக்கத்துல கூட நிக்க முடியாது. ஒரு ஜல்லிக்கட்டு விடாம போவான். எவ்வளவு போட்டி, பரிசுன்னு அப்போ நம்மூருக்கு அவன்தான் ஹீரோ” என்று பசுபதி பெருமையாக சொன்னார்.
“உங்க தம்பியை நீங்க தான் மெச்சிக்கணும். சும்மா இருங்கப்பா” என்று சலித்த மகன்,
“சித்தி உங்களுக்கு சித்தப்பா ஓகேவா?” என்று மாலதியிடம் கேட்டான்.
“நான் அவர்கிட்ட கொஞ்சம் பேசிக்கவா தேவா?” என்று மாலதி வினவ,
“தாராளமா சித்தி. வாங்க, வாங்க நாம வெளியே போலாம்” என்ற தேவா எல்லோரையும் வெளியே கிளப்பி கொண்டு சென்றான்.
வைரவேலுக்கு ஓடிவிட வேண்டும் என்பது தான். மாலதி அவரை நெருங்கி வர, மனிதர் திடமாக நிற்க முயன்று பார்வையை எங்கோ வைத்தார்.
“என்னை மன்னிச்சிடுங்க, என்னால தான் உங்களுக்கு இந்த சங்கடம்” என்றார் மாலதி.
“ஆஹ். இல். இல்லை, அப்படி இல்லை” என்று மனிதர் தடுமாற,
“நான் உங்ககிட்ட உதவி தான் கேட்கிறேன். என்னோட கடந்த வாழ்க்கை சொல்லிக்கிற மாதிரி இல்லை. குழந்தை இல்லாதது எல்லோரையும் விட எனக்குதான் அதிகம் வலிக்குது. என்னால என்ன பண்ண முடியும்? என் விதின்னு ஏத்துக்கிட்டேன்”
“வயசு போக போக பயமா இருக்கு. நான் மட்டுமே இருக்க வீடு என்னை மிரட்டுது. தனியா சாப்பிட்டு, தனியா தூங்கி, முடியலை. சில நேரம் நினைச்சுட்டே தூங்குவேன் காலையில எழுந்திருக்காமலே போயிட்டா கூட நல்லா இருக்கும்ன்னு”
“ஏங்க, ஏங்க என்ன பேசுறீங்க?” மனிதாபிமானம் கொண்ட மனிதன் வருத்தம் கொண்டார்.
“இருக்கிறதை தான் சொல்றேன். முதல்ல தனிமை வேணும்னு தோணுச்சு. இப்போ வேணவே வேணாம்ன்னு தோணுது. நாலு சுவத்துக்குள்ள என்னோட ஒரு ஜீவன். சாப்பிட, தூங்கன்னு உங்களுக்கு பக்கத்துல என்னை வைச்சுகிட்டா போதும்”
“நான் வாழுறதுக்கு காத்து, சாப்பாடு, தண்ணீர் மாதிரி துணையும் ஓர் அத்தியாவசியம். அந்த துணையா நீங்க இருந்தா போதும். உதவியா கூட செய்ங்க” என்றார் மாலதி.
மாலதியின் பேச்சில் உணர்ந்த வலியில், வைரவேலுக்கு முகத்தில் அடித்தது போல் மறுக்க முடியவில்லை. மிகவும் தர்ம சங்கடம் கொண்டவர், “எனக்கு, நான் அப்புறம் சொல்லவா?” என்று கேட்டார்.
மாலதி சரியென்றார். வைரவேல் அங்கு நிற்காமல் வேகமாக வெளியே வர, “அதுக்குள்ள பேசிட்டிங்களா?” என்று கேட்டான் மகன்.
“உனக்கு நான் ஏன் பதில் சொல்லணும்? போடா” என்று நடையை கட்ட,
“பத்திரிக்கை அடிக்க கொடுத்துடவா சித்தப்பா?” என்று கத்தி கேட்டான் மகன்.
“டேய், டேய் மானத்தை வாங்கி தொலையாத” என்று போன வேகத்தில் திரும்பி வந்து மகன் கைப்பற்றி இழுத்து சென்றார் வைரவேல்.