மஞ்சள் காட்டு மைனா 14

செல்வி அம்மா வீட்டிற்கு வந்திருந்தாள். ஜெயலட்சுமி மகளை வர வைத்திருந்தார்.

“உனக்கு ஆயிரம் வேலை இருக்கும். அம்மாவை எல்லாம் உனக்கு எங்க ஞாபகம் இருக்க போகுது? நானா உன்னை கூப்பிட்டா கூட, நாளைக்கு வரேன், அடுத்த வாரம் வரேன்னு சொல்ற. உங்க யாருக்கும் நான் தேவையில்லை” என்று கோவத்தில் பேசி போனை வைத்திருக்க, செல்வி அன்று மாலையே வந்துவிட்டாள்.

“என்னாச்சும்மா?” என்று கேட்க,

“இனி நான் உன் தம்பிக்கு பொண்ணு பார்க்கிறதா இல்லை. அதை சொல்லத்தான் கூப்பிட்டேன்” என்றார் ஜெயலட்சுமி.

‘என்ன பண்ணான்னு தெரியலையே? அப்பாவும் எதுவும் சொல்லலை’ செல்விக்குள் யோசனை.

“வீட்டுக்கு மூத்தவ நீ? நாளைக்கு வந்து என் தம்பிக்கு ஏன் கல்யாணம் பண்ணலைன்னு என்னை கேட்டிடாத” என்றார்.

“ம்மா. என்ன ஆச்சுன்னு சொல்லுங்க” என்று செல்வி கேட்க,

“என்ன ஆகணும்? அந்த பொண்ணு கிறுக்கு எல்லாம் உன் தம்பிக்கு இன்னும் போகலை. அதே கிறுக்கன் தான் இவன்”

“துளசியா?”

“அவளே தான். வீட்டுக்கு வந்த மகராசி இடது கால் வைச்சு வீட்டுக்குள்ள வந்துட்டான்னு, புது வீடு கட்ட எழுந்துட்டான்”

“என்னம்மா சொல்றீங்க?” செல்விக்கு அதிர்ச்சி.

“அண்ணி. அதுக்காக அவன் வீடு கட்ட நினைக்கலை. வேற காரணம் இருக்கு. அவன்கிட்டே கேட்போம்” என்றார் வைரவேல்.

“தம்பி. அவனை பெத்தவ நான், எனக்கு கொஞ்சம் கூடவா அவனை கண்டுபிடிக்க முடியாது” என்றார் ஜெயலட்சுமி.

“நாம கேட்டா தலையை சுத்தி மூக்கை தொட வருவான். ஆனா காரணம் இது தான்” உறுதியாக சொன்னார்.

“ம்மா. சித்தப்பா சொல்றது போல, அதுக்காக எல்லாம் புது வீடு கட்ட முடியுமா என்ன? தம்பிக்கு வேற எதாவது காரணம் இருக்கும்” என்றாள் செல்வி.

“அக்கா. எப்போ வந்த?” என்று தேவா கேட்டபடி அம்மா, அக்காவிற்கு இடையில் அமர,

“தள்ளி போடா” என்று ஜெயலட்சுமி அவனை தள்ளிவிட்டார்.

“ஏன் என் மம்மி கோவமா இருக்காங்க? யார் என்ன பண்ணீங்க” என்று மற்ற இருவரை பார்த்து மிரட்டலாக கேட்டான் தேவா.

“தேவா புது வீடு கட்ட போறியா?” என்று செல்வி கேட்க.

“ஆமாக்கா. பூஜைக்கு நாள் குறிச்சுட்டு போன் பண்ண நினைச்சேன்” என்றான் தேவா.

“நம்ம வீடே நல்லா தான் இருக்கு தேவா?”

“இருக்கு தான். ஆனா புது ஜோடிங்களுக்காக தனி வீடு”

“உனக்கா தேவா? பொண்ணு முடிவான பின்னாடி இதெல்லாம்”

“அக்கா. உன்கிட்ட இருந்து நான் இதை எதிர்பார்க்கலைக்கா” என்றான் தம்பி முகத்தை சுருக்கி.

“என்ன தேவா?” செல்வி புரியாமல் பார்க்க,

“எல்லாத்தையும் சொல்ற அப்பா உன்கிட்ட இதை சொல்லலையா? அப்போ என்னோட முடிவு சரிதான்”

“என்னன்னு சரியா சொல்லு தேவா”

“நம்ம வீட்ல நான் மட்டுமா பேச்சுலர். சித்தப்பா இருக்கார் இல்லை. அவருக்கு தனி வீடு வேணாமா? அவரோட கல்யாணம் முடியறதுக்குள்ள கிரஹப்பிரவேசம் முடிச்சிடணும்” என்றான்.

“டேய். எப்போ பார்த்தாலும் என் தலையையே ஏன் உருட்டுற? ஒழுங்கா இருந்துக்கோ” என்று வைரவேல் எச்சரித்தார்.

மகளின் முன் இதெல்லாம் பேசுவதில் வைரவேலுக்கு கடுப்பு.

செல்விக்கும் இதில் தான் என்ன பேசுவது என்ற சங்கடம். அம்மாவை பார்க்க, அவரும் பார்த்துக்கோ உன் தம்பியை என்று கண்ணை உருட்டினார்.

“ம்மா. நல்ல நாள் பார்த்து சொல்லுங்க. சித்தியை பார்க்க போகணும்” என்றான் அம்மாவிடம்.

“சித்தியா? யாரடா சொல்ற? பார்த்து வைச்சிருக்கியா?” என்று ஜெயலட்சுமி அதிர்ச்சியுடன் மகனை பார்த்தார்.

வைரவேலுக்கு என்ன பண்ணி வைச்சிருக்கானோ என்று கிலியாகிவிட்டது.

“ஆமா. சித்தி ரெடி. சித்தப்பா மூணு முடிச்சு போடுறது மட்டும் தான் பாக்கி”

“தேவா” என்று வைரவேல் குரல் உயர்த்த,

“நீங்க என்ன கத்தினாலும், சித்தி யாருன்னு இப்போதைக்கு சொல்றதா இல்லை. நாள் குறிச்சுட்டு சொல்லுங்க. நேர்ல கூட்டிட்டு போறேன்” என்றான் தேவா.

“என்னை ஏண்டா இப்படி படுத்துற?” வைரவேல் தலை பிடித்து கொண்டார்.

விளையாட்டுக்கு எல்லாம் பேசும் ஆள் இல்லை தேவா. அவன் முதல் முதலாக இதுபற்றி பேசும் போதே வைரவேல் அவனை அடக்க பார்த்தார். ஆனால் அவன் பெண் வரை முடிவு செய்து வைத்திருக்க, மனிதருக்கு சித்தம் கலங்கியது போலானது.

திருமண விஷயத்தில் அப்பாம்மா, அண்ணா, சொந்த பந்தங்களை எல்லாம் ஓர் கை பார்த்தவர். ஆனால் தேவா என்று வரும் போது அவருக்குள் பயம்.

இவனிடம் கோவம் எல்லாம் வேலைக்கு ஆகாது. பொறுமையாக பேசி புரிய வைத்துவிட வேண்டும். வைரவேல் தனக்குள் முடிவாகி கொண்டார்.

செல்வி தம்பியை தனியே பிடித்தவள், “என்ன கண்ணு இதெல்லாம். சரிப்பட்டு வருமா?” என்று கேட்டாள்.

“க்கா. சரியா வரும். என்னை நம்பு” என்றான் தேவா.

“அவரை காலத்துக்கும் தனியா விட முடியாதுக்கா. அவர் அடிபட்டு ஹாஸ்பிடல் படுத்தப்போ தான் அவரோட தனிமை என்னை பயமுறுத்துச்சு. வேணாம்க்கா. அவருக்குன்னு யாராவது வேணும்” என்றான்.

சித்தப்பாவிடம் அவனுக்கு இருக்கும் ஒட்டுதலை முழுதும் உணர்ந்த செல்வி, தம்பிக்கு துணை நிற்க வேண்டும் என்று நினைத்து கொண்டாள்.

“அப்போ அந்த புது வீடும் அவருக்காக மட்டும் தானே தேவா?”

ஓர் நொடி முழு மௌனம். எங்கோ பார்வை பதித்தவன், “என் காதலை தான் வேணாம்ன்னு சொல்லிட்டா, என் வீடு அவளை என்னக்கா பண்ணுச்சு? இடது கால் வைச்சு வீட்டுக்குள்ள வராக்கா. தெரியாதவங்க கூட அப்படி பண்ண மாட்டாங்க. நம்மளோடது மூணு தலைமுறை வீடு. எல்லோரோட கௌரவத்தை நானே சிதைச்சுட்ட மாதிரி, என்னை வேணாம்ன்னு சொன்னப்போ வலிச்சதை விட அதிகமா வலிச்சதுக்கா. சும்மா லெப்ட்லே என்னை டீல் பண்றா. வேணாக்கா. அப்படியொரு வீடும் வேணாம். அவளும் வேணாம்” என்றான் தேவா.

அடி வயிற்றில் இருந்து பாய்ந்து வந்த கசப்பை முழுவதுமாக உணர்ந்தான் தேவா.

காதல் கசக்குது!

செல்விக்கு தம்பியின் வார்த்தைகளில் கண்ணீர் தேங்கிவிட்டது. தேவா என்றால் வேறு. என் முன் நிற்பவன் வேறு. இதுதான் உண்மையான தேவாவா?

“ம்ம்மா. அவன் வீடு கட்டட்டும், நீங்க எதுவும் பேசாதீங்க” என்றாள் அம்மாவிடமும் பெரிய மகள்.

“அதுக்குள்ள உனக்கு மந்திரம் போட்டுட்டானா? இதுக்கு தான் நான் அவன்கிட்ட தனியா பேசுறதே இல்லை” என்று கழுத்தை வெட்டினர் அன்னை.

“ம்மா. சித்தப்பா விஷயத்திலையும் அவனுக்கு சப்போர்ட் பண்ணுங்க. முடிஞ்சா அப்பாகிட்ட சொல்லி சித்தப்பாகிட்ட பேச வைங்க”

“செல்வி இத்தனை வருஷம் யார் பேச்சையும் கேட்காத உன் சித்தப்பா இப்போ மட்டும் கேட்பாரா?”

“ம்மா. சித்தப்பாக்கு அதே வயசு இல்லைம்மா. நிறைய மாறிடுச்சு. அவரும் மாறியிருந்தா நல்லது தானே”

“மாறியிருந்தா எனக்கும் சந்தோஷம் தான் செல்வி. அண்ணி அம்மா மாதிரி சொன்னாலும் என்னால ஓர் அளவுக்கு மேல செய்ய முடியலை. இதோ இப்போகூட அப்பா, தேவா இருக்கிறதால கவலை இல்லை. நர்ஸ் வைச்சாலும் இவங்க தான் செய்றாங்க. நாளைக்கே தேவாவுக்கு கல்யாண ஆகி, வர மருமக சின்ன மாமனாருக்கு செய்வாளா? நான் இருக்கிறவரை வயித்துக்கு பிரச்சனையில்லை. இல்லைன்னா, எனக்கும் அடிக்கடி அவரை நினைச்சு மனசு பிசையத்தான் செய்யுது.” என்றார் ஜெயலட்சுமி.

“நல்லதா நடக்கும்மா. கவலைப்படாதீங்க” என்றாள் செல்வி.

வைரவேல் அறையில் இந்த பேச்சு கேட்கத்தான் செய்தது. நாள் முழுதுக்கும் வேலை, அது இது என்று சுற்றி கொண்டிருப்பார். இப்போது முழு ஓய்வில் இருக்கிறார்.

தனிமை நிச்சயம் கொன்றது. ஆனால் அதற்காக திருமணம் தான் ஒற்றை முடிவா என்ன?

 இரவு தேவா அறைக்கு வரவும், “சாமி” என்றார் வைரவேல் பாசத்துடன்.

“கேஸ் பத்தி பேசணும் சித்தப்பா” என்றான் உடனே.

“நாளைக்கு ஓர்  முடிவு வந்திடும். விவாகரத்து உறுதியா கிடைச்சுடும்” என்றான்.

“என்ன தேவா சொல்ற? என்ன பண்ண?” என்று மகிழ்ச்சியுடன் கேட்டார் வைரவேல்.

“கோர்ட்டுக்கு வர முடியுமா சித்தப்பா” என்று கேட்க,

“வந்திடுவேன். நானும் எத்தனை நாளா கேட்டுட்டு இருக்கேன்” என்று இப்போதே பரபரத்தார்.

“சரி நாம நாளைக்கு ஒண்ணா போயிடலாம். இப்போ ரெஸ்ட் எடுங்க சித்தப்பா” என்றான்.

மறுநாள் இருவரும் ஒன்றாக செல்ல, துளசி, அம்மாவுடன் காத்திருந்தாள்.

வழக்கு விசாரணைக்கு வர, “சந்தோஷ் நார்மலா இருக்கார்” என்று ரிப்போர்ட்டை பார்த்து சொன்னார் நீதிபதி.

“தேவா சார் அவங்க கட்சிக்காரரை காப்பாத்த பார்க்கிறார் மை லார்ட். துளசிக்கு முதல்ல இருந்தே சந்தோஷை கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லை. மூணாவது ஆள் இதுக்குள்ள இருக்காங்க” என்று எதிர்தரப்பு வழக்கறிஞர் அதையே மீண்டும் பேசினார்.

சாட்சிக்கு ஊரில் இருந்து ஆட்களை வர வைத்தார். துளசி மேல் தான் தவறு என்பது போல பேச வைத்தனர். தேவா அவர்கள் யாரையும் குறுக்கு விசாரணை செய்யவே இல்லை.

“என் கட்சிக்காரருக்கு மனைவியுடன் சேர்ந்து வாழவே விருப்பம். துளசி காதலை மன்னிச்சு ஏத்துக்க அவர் தயாரா இருக்கார்” என்று முடித்தார்.