வைரவேல் போன் பேசி கொண்டிருக்க, “சித்தப்பா” என்று வந்தான் தேவா.
“இரு” என்று சைகையில் சொல்லி, போன் பேசி வைத்தவர் முகத்தில் கோவம்.
“இப்போ என்ன?” என்று அவரின் பக்கத்திலே படுத்துகொண்டான் தேவா.
“டேய் இங்க வேணாம். எழுந்திரு” என்று சின்ன தந்தை மகனை அதட்ட,
“ஏன் படுத்தா என்ன?” என்று இன்னும் சட்டமாக படுத்தான்.
“உன்னோட. டேய்” என்று வைரவேல் கடுப்பானார்.
உடல்நிலை சரியில்லாத என்னோட கட்டிலில் மகன் படுக்க வேண்டாம் என்பது தந்தைக்கு. ஆனால் இவனா புரிந்து கொள்வான்? அப்படியே புரிந்தாலும் கேட்டுக்கொள்வானா?
“விஷயத்துக்கு வாங்க. யார் போன்ல?” என்று தேவா கேட்க,
“சந்தோஷை எக்ஸாமைன் பண்ண ஹாஸ்பிடல்ல நம்மாள் ஒருத்தன் இருக்கான். ரிப்போர்ட் அவனுக்கு சாதகமா தான் கொடுத்திருக்காங்களாம்” என்றார்.
“இது தெரிஞ்ச விஷயம் தானே?” என்றான் கூலாக.
“சுந்தரம் கேஸை ஜெயிக்க எந்தளவு வேணும்ன்னாலும் போவார். அவரோட வக்கீல் எனக்கு அவரை பத்தி தெரியாதா” என,
“அப்புறம் நாம எதுக்கு எதிர்தரப்புல உசுரை கொடுத்து வாதாடணும்? சந்தோஷ் சமயத்துல வெறிபிடிச்ச மாதிரி நடந்துகிறான். அவங்க அம்மா ஆனந்திக்கு கூட இந்த விஷயம் தெரியல”
“எப்படி தெரியும் சித்தப்பா. அந்த பையன் படிச்சது, வேலை பார்த்தது எல்லாம் வெளியே தான். மகனை பத்தி தெரிஞ்சு அவனுக்கு வைத்தியம் பார்க்காம, மறைக்க தான் பார்த்திருக்கார். இந்த ஒரு வருஷமா இங்கேயே இருக்கவும் தான் அவனோட அம்மாவுக்கும் தெரிஞ்சது, நமக்கும் தெரிஞ்சது”
“தெரிஞ்சதுக்கான விலை ரொம்ப அதிகம் தேவா” என்றார் துளசியை மனதில் வைத்து.
“அடுத்து என்ன பண்ண போற? எப்படி கேஸை கொண்டு போக போற?” என்று கேட்டார் வைரவேல்.
“ஏன் சித்தப்பா நீங்க ஏன் கல்யாணம் பண்ணிக்கலை?”
“தேவா நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லு” சித்தப்பா கோவம் கொண்டார்.
“சொல்லுங்க. எனக்கு தெரிஞ்சாகணும்” தேவா எழுந்தமர்ந்தான்.
“தெரிஞ்சு என்ன பண்ண போற? போடா போய் ஆகுற வேலையை பாரு” என்று விரட்ட,
“சித்தப்பா. சொல்லுங்க. எனக்கு தெரியணும்” என்றான் தேவா பிடிவாதமாக.
“தேவா என்ன தம்பி? அந்த பேச்சை விடு சாமி”
“சொல்லுங்க. இல்லை நான் போய் உங்கண்ணாகிட்ட கேட்பேன்”
“அதை மட்டும் செஞ்சு தொலைச்சிடாத. இப்போ தான் அவர் என்கிட்ட சாதாரணமா நடந்துகிறார்”
“ஓஹ் நீங்க கல்யாணம் பண்ணிக்காத கோவம் தானா?”
“அது முக்கியமான காரணம்” என்றார்.
“சரி சொல்லுங்க”
“எதுக்கு இப்போ இப்படி பிடிவாதம் பிடிக்கிற?” என்று சலித்து கொண்டவர் மகன் அசையாமல் போனதில் கண்களை ஆயாசத்துடன் மூடி கொண்டார்.
“நம்மூர் தான் அவங்க. காலேஜ் படிக்கும் போது பார்த்தேன். பிடிச்சது”
“உங்க காலேஜா”
“இல்லை. அவங்க படிக்கலை. மில்லுல வேலை பார்த்தாங்க. பஸ்ல ஒண்ணா தான் போவோம். என்னோட விருப்பத்தை சொன்னேன். அவங்க முதல்ல பயந்தாலும் ஓகே சொல்லிட்டாங்க. இரண்டு வருஷம் அப்படியே போச்சு. அவங்களுக்கு மாப்பிள்ளை பார்த்தாங்க. நான் நம்ம வீட்ல முதல்ல பேசினேன். வேற ஆளுங்க, வசதி குறைவு, நமக்கு சரிசமம் இல்லைன்னு உன் தாத்தா பயங்கர சண்டை”
“அப்போ உன் தாத்தா கை நம்மூர்ல ரொம்ப ஓங்கி இருந்துச்சு. பெரிய குடும்பம், தலைவர், வசதின்னு எல்லாம். உன் பொண்ணுக்கு என் பையனை கேட்குதான்னு, அவங்க வீட்ல போய் உன் தாத்தா கலாட்டா பண்ணிட்டார். பயந்து போனவங்க ஒரே நாள்ல அவங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைச்சுட்டாங்க. அவ்வளவு தான்” என்றார் வைரவேல்.
“சண்டை போட்டீங்களா?”
“போட்டேன். என்ன பிரயோஜனம்? அவங்களுக்கு என்னை விட அப்பாம்மா முக்கியம். பெத்தவங்களுக்காக விருப்பத்தை தூக்கி போட்டுட்டாங்க”
“நீயும் தூக்கி போட்டு வேற கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே?”
“இப்போ எதுக்கு இவ்வளவு சூடா பேசுற?” மகனை கண்கள் திறந்து பார்த்தார்.
“அவங்களுக்கு நாம வேணாம்ன்னா, நமக்கும் அவங்க வேணாம் தான் சித்தப்பா”
“வேணாம் தான். ஆனால் ஆசை வைச்ச மனசு அப்படியே தானே இருக்கு. அதை என்ன பண்ண தேவா?”
“அதை பிடுங்கி போட்டுடணும் சித்தப்பா” தேவாவிடம் அவ்வளவு கோவம்.
வைரவேல் சட்டென சுதாரித்தார். இவன் என்னை பற்றி பேசுறானா? இல்லை இவனை பற்றியா?
“நீ சொல்றது சரிதான் தேவா. முடிஞ்சு போனதை விட்டுட்டு, அடுத்து பார்த்திருக்கணும்” என்றார்.
“இப்போவாவது புரிஞ்சதே? நான் அப்பாகிட்ட பேசுறேன்” என்றான் தேவா.
“என்ன பேச போற?” அவர் ஓய்வாக கட்டிலில் சாய்ந்து கொண்டார்.
“உங்களுக்கு பொண்ணு பார்க்கிறதை பத்தி தான்”
“ஆஹ்ன்” அவர் அதிர்ந்து படக்கென நிமிர, கால்களில் சுருக்கென வலி.
“பார்த்து சித்தப்பா” என்று மகன் அவர் உதவிக்கு வர,
“தள்ளி போடா. எப்போ பார்த்தாலும் ஆகாத கதை பேசிகிட்டு” என்று எரிச்சல் கொண்டார் வைரவேல்.
“எல்லாம் ஆகுறது தான். அறுபது, எழுபதுல எல்லாம் கல்யாணம் பண்ணிக்கிறாங்க. உங்களுக்கு என்ன?”
“என் கதையை நான் பார்த்துகிறேன். நீ கிளம்பு போ. போடா”
“எனக்கு என் அம்மா பார்க்கிறாங்க. என் சித்தப்பாக்கு தான் அம்மா இல்லையே. நான் பார்க்கிறேன்”
பசுபதி அமர்ந்தேவிட்டார். ஜெயலட்சுமி இதென்ன புதுசா என்று மகனை சந்தேகமாக பார்த்தார்.
“என் அம்மா கடைசி நிமிஷம் வரைக்கும் போராடி தான் போய் சேர்ந்தாங்க. இவன் ஒத்துக்கவே இல்லை” என்றார் பசுபதி.
“அதென்ன உங்க அம்மா? இதுலே ஓரவஞ்சனை தெரியுது. பாவம் என் சித்தப்பா” தேவா வேறொரு பஞ்சாயத்துக்கு அடிக்கல் நாட்ட பார்க்க,
“நீ எங்க வரேன்னு எனக்கு தெரியும். என்னைவிட அவன்தான் இந்த வீட்டுக்கு செல்லம். அவனுக்கே அது தெரியும்” என்றார் பசுபதி.
“நம்ப மாட்டேன். விரும்பினவங்களை பிரிச்சிட்டு என்ன செல்லம், வெல்லம்ன்னு”
“நீ நம்பலைன்னா போகுது. இவனுக்கு அந்த பொண்ணை தவிர வேற பொண்ணே வேணாம்ன்னா நாங்க என்ன செய்றது? எங்கப்பாகிட்ட கடைசி வரை யாரும் எதிர்ல நின்னு பேசிட முடியாது. அப்படிப்பட்டவர்கிட்ட சண்டையே போட்டான். ஆனாலும் நடக்கலை. அதுக்காக இவன் வாழ்க்கையை அழிச்சுகிட்டா நாங்க என்னடா பண்ண முடியும்?” என்று பசுபதி ஆவேசம் கொண்டார்.
“ண்ணா. பழசு எல்லாம் தேவையில்லை. நான் ரெஸ்ட் எடுக்கணும். இவனை கூட்டிட்டு போங்க” என்றார் வைரவேல்.
“ரெஸ்ட் எடுங்க. நான் பொண்ணு பார்க்க போறேன்”
வைரவேல் பக்கத்தில் இருந்த ஆப்பிளை தூக்கி அவன் மேல் அடிக்க, கேட்ச் பிடித்து கொண்டவன், “மம்மி” என்று அம்மாவிடம் சென்றான்.
“எனக்கு பொண்ணு பார்க்கும் போது, சித்தப்பாக்கும் பாக்கிறீங்களா?” என்று கேட்க, ஜெயலட்சுமிக்கு வாயில் வண்ணம், வண்ணமாக வர பார்த்தது.
“உனக்கே நான் இனி பார்க்கிறதா இல்லை” என்றார் பல்லை கடித்து.
“ஏன்? ஏன் பார்க்க மாட்ட?” மகன் எகிற,
“அன்னைக்கு ஹாஸ்பிடல் வைச்சு என்னமா ஆடின. உனக்கு போய் பொண்ணு பார்த்து என் மரியாதையை நானே கெடுத்துக்கிறதா இல்லை”
“அந்த கதை எல்லாம் விடுங்க. நீங்க பொண்ணு பாருங்க. இந்த முறை நான் சமத்தா வந்து ஓகே சொல்லிட்டு வரேன்” என்றான் மகன்.
“ம்ஹூம். எனக்கு நம்பிக்கை இல்லை”
“அப்பா மேல சத்தியம் வைக்கவா”
“பிஞ்சிடும்டா உனக்கு” பசுபதி பாய்ந்துவிட்டார்.
“உன்மேல வைடா பார்க்கலாம்” என்று தந்தை சொல்ல,
“உங்களுக்கு ஒத்த மகன் நான். என்னை நம்பி எத்தனை பேர் இருக்காங்க. அப்படி எல்லாம் வைக்க மாட்டேன்”
“அந்த எத்தனை பேர்ல அந்த பொண்ணும் இருக்கா தானே?” என்று ஜெயலட்சுமி கண்களை உருட்ட,
“எந்த பொண்ணு?” என்றான் மகன் புரியாதவனாய்.
“நடிக்காதடா. அதான் அந்த துளசி”
“அந்த மேடம் என்னோட கட்சிக்காரர். அவ்வளவு தான். இப்போ என்ன சித்தப்பாக்கு பொண்ணு பார்க்க மாட்டேன்னு சொல்றீங்களா?”
“விளையாடாத தேவா”
“நான் என்ன விளையாடுறேன்? வீட்ல மூத்தவருக்கு எல்லாம் மூத்தவரை வைச்சுக்கிட்டு நான் எப்படி கல்யாணம் பண்ணிக்கிறது?”
“அதுக்கு?”
“அவருக்கு முடிச்சுட்டு தான் எனக்கு”
“அதை சொல்லுடா மகனே. நீ இவ்வளவு தம் கட்டி பேசினது இதை சொல்றதுக்கு தானே” என்றார் பசுபதி.
“உங்களுக்கு தான் தம்பி மேல அக்கறை இல்லை. நானும் அப்படியே இருக்க முடியுமா என்ன? என் மம்மி என்னை அப்படி வளர்க்கலை” என்று அம்மாவின் கன்னம் பிடித்து கொஞ்சினான் நல்லவன்.
“கையை எடுடா” என்று ஜெயலட்சுமி மகனை அடித்தார்.
இப்போது தான் ஒரு வரன் உறுதியாகும் போல் இருந்தது. மகனின் காதல் பற்றி சொல்லி வைத்திருந்தார். அவர்களும் பரவாயில்லை என்று பெண் பார்க்க வர சொல்லியிருக்க, அதை கெடுக்கவே மகன் கிளம்பியிருக்கிறான்.
‘எப்படி தெரிஞ்சது இவனுக்கு?’
அதை, இதை பேசி மகனை சம்மதம் சொல்ல வைத்துவிடலாம் என்று அன்னை திட்டம் போட்டால், மகனோ முடிந்து போனதை திரும்ப புதிதாக ஆரம்பித்து வைக்கிறான்.
வைரவேல் திருமணம் எல்லாம் நடக்கும் விஷயமா? ஜெயலட்சுமி மருமகளாக வந்த நாளில் இருந்து பார்க்கிறார்.
“நீயும் உன் சித்தப்பா போல தான் இருக்க போறியா?” என்று ஆதங்கத்துடன் கேட்டுவிட்டார் ஜெயலட்சுமி.
“அண்ணி அவன் அப்படி எல்லாம் இருக்க மாட்டான். அதுக்கு நான் உத்திரவாதம் கொடுக்கிறேன்” என்றார் வைரவேல்.
“அப்போ இவனை பொண்ணு பார்க்க வர சொல்லுங்க”
“நானே வரேன்னு தான் சொல்றேன்ம்மா”
“சம்மதம் சொல்லுவியா?”
“கண்டிப்பா. பொண்ணு பிடிச்சா போதும். அடுத்த முகூர்த்தத்துல டும், டும் கொட்டிடலாம்”
“மாமா” வெளியே இருந்து குரல் வந்தது.
தேவா தோள்கள் சட்டென விரைக்க, பெற்றவர்கள் வெளியே சென்றனர்.
துளசி தான் வாசலிலே தயங்கி நின்றிருந்தாள்.
“வாம்மா துளசி. உள்ள வா” என்று பசுபதி அழைக்க, ஜெயலட்சுமி அவளையே பார்த்திருந்தார்.
“சார்கிட்ட ஒரு சைன் வாங்கணும்” என்றாள் துளசி.
“வாங்கிக்கோ. உள்ள வா முதல்ல”
“இல்லை நீங்களே வாங்கி கொடுங்க”
“துளசி என்னம்மா இது?”
“கோர்ட்டுக்கு போகணும். நேரமாச்சு”
“ஜெயா அவளை உள்ள கூப்பிடு” என்று மனைவிக்கு சொன்னார் பசுபதி.
“வர வேண்டாம்ன்னு நான் எப்போ சொன்னேன்? வலது காலை எடுத்து வைச்சு வா’ன்னு கூப்பிடணுமா என்ன? வேலைக்கு தானே வந்திருக்கா. வர சொல்லுங்க” என்றார் ஜெயலட்சுமி.
“உள்ள வாம்மா. உன் பேர் துளசி தானே. உள்ள வா” என்றார் அவளிடமும்.
பசுபதி, “அட வாம்மா” என, துளசி வீட்டுக்குள் வந்தாள். ஆனால் இடது கால் வைத்து வீட்டுக்குள் வந்தாள்.
வைரவேல் அறைக்கு நேரெதிர் வாசல். தேவா கண்கள் அவள் கால்களில் தான் நிலைத்தது.
“அதுதான் உங்க சாரோட, அதான் மாமாவோட ரூம்” என்று கைகாட்டினார் ஜெயலட்சுமி.
துளசி உதட்டை அழுத்தமாக கடித்து கொண்டவள், அறை வாயிலுக்கு வந்தாள்.
“வா துளசி” என்று வைரவேல் அழைக்க, தேவா வழியிலே நின்றிருந்தான்.
“அவளுக்கு வழி விடு தேவா” என்று மகனுக்கு சொல்ல, தன்னை நிமிர்ந்து பார்க்காத பெண்ணை தான் அவன் பார்த்திருந்தான்.
“தேவா” என்று வைரவேல் கண்டிக்க, அதன் பின்னே லேசாக வழிவிட்டான்.
துளசி ஒதுங்கி சென்றாலும், அவளின் உடை அவன்மேல் உரசாமல் இல்லை.
“இன்னைக்கு ஜட்ஜ்கிட்ட கொடுத்தாகணும்ன்னு தான் உங்களை தொந்தரவு பண்ணிட்டேன்” என்றாள் துளசி.
“இருக்கட்டும்மா. தேவா பேனா கொடு” என்று கேட்டு வாங்கி கையெழுத்திட்டு கொடுத்தார்.
“காபி எடுத்துக்கோமா” என்று ஜெயலட்சுமி வர,
“வேணாங்க” என்று பேப்பரை அடுக்கியபடி சொன்னாள் துளசி.
‘மரியாதை தெரியாதவ. முகத்தை பார்த்து கூட சொல்ல மாட்டாளா’ ஜெயலட்சுமி நொடித்தார்.
வைரவேலுக்கு சங்கடம். மறைத்து கேஸ் பற்றி துளசியிடம் கேட்டார். துளசி பதில் சொன்னாள்.
பெண் அமர கூட இல்லை. நின்றபடியே பேச, “உட்காரும்மா” என்று இடையிடையே வைரவேல் சொல்லிப் பார்த்துவிட்டார்.
காதில் விழுகாதது போல பதில் சொல்ல, பேப்பரை எடுக்க என்றிருக்க, அவளின் கையில் இருந்து பைல் பிடுங்கப்பட்டது.