கந்தன் படத்திற்கு முன்பு மிகவும் பயபக்தியுடன் வேண்டி கொண்டிருந்தான் தேவா.
அவனின் உள்ளங்கைக்குள் இருந்த காகித உறையை கந்தனுக்கு முன் வைத்தவன், சாஷ்டாங்கமாக விழுந்து எழுந்தான்.
தேவாவின் அம்மா ஜெயலக்ஷ்மி கந்தனோடு சேர்த்து, அந்த காகித உறைக்கும் பூஜை செய்தார்.
“நல்லா பண்ணுவ கண்ணு” என்று மகனின் நெற்றியில் திருநீறு பூசிவிட.
“தேங்க்ஸ்ம்மா” என்றான் மலர்ந்த புன்னகையுடன் தேவா.
“என்ன பூஜை எல்லாம் பலமா இருக்கு?” என்று வந்தார் வைரவேல்.
“சித்தப்பா” என்று தேவா படக்கென காகித உறையை எடுத்து பேக்கெட்டில் வைக்க,
“என்னடா அது?” என்று மகனை சந்தேகமாக பார்த்தார் வைரவேல்.
“எக்ஸாம் ஹால் டிக்கெட் தம்பி” என்று ஜெயலக்ஷ்மி இருவருக்கும் உணவு வைக்க,
“இப்போ என்ன எக்ஸாம் உனக்கு?” என்று வைரவேல் விசாரித்தார்.
“ஸ்பெஷல் எக்ஸாம் சித்தப்பா” என்றான் மகன்.
“அரியர் எக்ஸாமா?” என்று வைரவேல் கேட்க,
“சித்தப்பா எனக்கு அரியர் எல்லாம் இல்லை” என்றான் மகன்.
“அப்புறம் என்னடா?”
“ம்மா எனக்கு போதும். நான் கிளம்புறேன்” என்று பாதி உணவிலே எழுந்துவிட்டான்.
“அண்ணி எனக்கும் போதும்” என்று மகன் பின்னாலே வந்தவர், அவன் வண்டியில் ஏறிக்கொண்டார்.
“ச்சு. சித்தப்பா” என்று வண்டியை நிறுத்திவிட்டான் தேவா.
“அப்படி என்ன ஸ்பெஷல் எக்ஸாம்க்கு போறேன்னு நானும் பார்க்கணும்” என்றார் வைரவேல்.
“சித்தப்பா படுத்தாதீங்க. எனக்கு நேரம் ஆகுது” என்று வாட்சை பார்த்து எரிச்சல் கொண்டான்.
“இல்லை நானும் வருவேன்” என்று அடமாக இருக்க
“அப்புறம் என்ன நடந்தாலும் என்னை கேட்க கூடாது பார்த்துக்கோங்க” என்றான் தேவா எச்சரிக்கையாக.
அதில் வைரவேலுக்கு லேசாக உதைக்க, “எங்க இரண்டு பேரும் கிளம்பிட்டீங்க?” என்று அந்த வீட்டின் பெரிய மனிதர் பசுபதி முன் நின்றார்.
“அப்பா அது மாணிக்கம் அய்யாவை பார்க்க போறேன்” என்று மகன் பம்ம,
“அதுக்கு எதுக்கு இவனை கூட்டிட்டு போற? அங்கேயும் வந்து கம்மியூனிசம் பேசி வம்பிழுக்கவா?” என்று தம்பியை பார்த்து கேட்டார் பசுபதி.
“நான்தான் கூப்பிட்டேன், இருக்கட்டும்ப்பா” என்று மகன் சொல்ல,
“என்னவோ பண்ணு. நான் மாணிக்கத்துக்கு போன் பண்ணி பேசுறேன்”
“இல்லை, இல்லைப்பா. நானே பார்த்துகிறேன்”
“இவனோட சகவாசம் வேறெப்படி இருக்கும். முதல்ல இவனை கழிச்சு கட்டிட்டு உருப்படுற வழியை பாரு தேவா” என்று பசுபதி மகனுக்கு புத்தி சொன்னார்.
வைரவேல் யார் யாரையோ பேசுவதாக எங்கேயோ பார்த்திருக்க, “நேரம் ஆச்சு. நான் கிளம்புறேன்ப்பா” என்று தேவா விட்டால் போதுமென வண்டியை எடுத்து கொண்டு பறந்துவிட்டான்.
“உங்களுக்கும், உங்க அண்ணனுக்கும் இடையில் நான் தான் கிடைச்சேனா? எப்போ பாரு என் உயிரையே ஏன் வாங்குறீங்க?” என்று வழி நெடுக தேவா கடுப்படித்து கொண்டே வந்தான்.
“டேய் நீ பேசாத. அந்த மாணிக்கம் எல்லாம் ஒரு ஆளுன்னு அவன்கிட்ட போய் ஜுனியரா சேரப்போறியா நீ?” என்று வைரவேல் பேச,
“நீங்க சரியா இருந்திருந்தா எனக்கு ஏன் இந்த தலையெழுத்து எல்லாம்?” என்று தேவா வண்டியை நிறுத்த,
“இங்க ஏன் நிறுத்தின?” என்று வைரவேல் கோவிலை பார்த்து கேட்டார்.
தேவா பைக் கண்ணாடி பார்த்து முன் உச்சி முடியை சரி செய்து கொண்டவன், காகித உறையை பத்திரமாக கையில் எடுத்து கொண்டான்.
“இங்கேயும் வந்து பூஜை பண்ணனுமா உனக்கு? ம்ஹூம் எதுவோ சரியில்லை. ஆமா அதென்ன அண்ணிகிட்ட ஸ்பெஷல் எக்ஸாம் சொல்லிட்டு, உன் அப்பன்கிட்ட மாணிக்கம் பத்தி பேசுற? உண்மையை சொல்லு என்னடா பண்ண போற?” என்று வைரவேல் கேட்க, அவனோ யாரையோ எதிர்பார்த்து நின்றிருந்தவன்,
“சித்தப்பா. லைட்டா பதட்டமா இருக்கு” என்று நெஞ்சை நீவிவிட்டு கொண்டவன், “சரியா சொல்லிடுவேனா?” என்றும் கேட்டான்.
“என்ன. என்ன சொல்லிடுவியா? தேவா. தங்கம், என்னடா பண்ண போற? சரி வேணாம். என்னவா இருந்தாலும் நீ பார்த்துக்கோ. நான் கிளம்புறேன்” என்று நடையை கட்ட பார்க்க,
“இருங்க சித்தப்பா. நீங்க இருக்கிறது தைரியமா தான் இருக்கு” என்றான் தேவா விடாமல்.
“டேய் மகனே. சித்தப்பாக்கு கலவரம், சண்டை எல்லாம் புதுசு இல்லை தான். ஆனா உன் அப்பன்கிட்ட மட்டும் என்னை கோர்த்து விட்டுடாத. அப்புறம் சித்தப்பா தனிக்குடித்தனம் தான் போகணும்”
“தனிக்குடித்தனம் போறது எல்லாம் நமக்கென்ன புதுசா? மாசத்துல பாதி நாள் அப்படித்தான் இருக்கோம்”
“எல்லாம் உன்னாலதாண்டா. இப்போ கூட நீ தான் ஏதோ பண்ண போற? ஆனா உன் அப்பன் கண்ணுக்கு நான் தான் தெரிவேன்”
“இதுக்கு தான் நான் முதல்லே வராதீங்க சொன்னேன் இல்லை. இப்போ என்ன? பேசாம நில்லுங்க” என்றவன், யாரையோ பார்த்துவிட்டதில் திரும்ப முன் உச்சி முடியை கோதி கொண்டான்.
“யார் அது?” என்று வைரவேல் பார்த்தவர்,
“டேய் இது என்ன புதுசா? இந்த ஆட்டத்துக்கு நான் வரலை” என்று வேட்டியை கட்டி கொண்டு ஓட்டம் பிடிக்க பார்க்க, விட்டேனா பார் என்று அவரின் கையை இறுக்கமாக பற்றி இழுத்து கொண்டு சென்றான் தேவா.
“வேணாம்டா தேவா. சொன்னா கேளு. இது சரி வராது, செமத்தியா வாங்கிடுவோம்டா”
“நாம பண்ண மத்தது மாதிரி இது இல்லை. உன் அப்பன் நடுவீட்ல கட்டி வைச்சு தோலை உரிச்சிடுவார்”
“தேவா. டேய்” என்று அவர் மகன் காதில் பேசி கொண்டே வர, அவனோ காரியமே கண்ணாக, ஓர் பெண்ணின் முன் நின்றான்.
அந்த பெண்ணோ அதிர்ந்து போனதுடன், இருவரையும் கலவரமாக பார்த்து வைத்தாள்.
“பயப்படாதம்மா. பயப்படாத. என் மகன் சும்மா பேசத்தான் வந்திருக்கான்” என்று வைரவேல் வேகமாக சொல்ல,
“பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்ற தேவா அந்த காகித உறையை பெண்ணிடம் நீட்டினான்.
“ம்ஹூம் எனக்கு வேண்டாம்” என்று பெண்ணவளின் கண்கள் கலங்கி போனதுடன், அக்கம் பக்கம் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தாள்.
அவளின் நேரம் அந்த காட்டு கோவிலில் யாருமே இல்லை.
பிறந்த நாள் என்று கோவிலுக்கு வந்தது தவறா?
கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று அவளின் அம்மாவிடம் கேட்டதிற்கு, “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். வீட்ல இரு” என்று சொல்லிவிட்டு தான் சென்றிருந்தார்.
அவரை மீறித்தான் வந்திருந்தாள். இதில் இது வேறா? என்று பெண்ணுக்கு இப்போதே நெஞ்சம் அடித்து கொள்ள ஆரம்பித்தது.
“துளசி” என்று தேவா அழுத்தமாக அழைக்க, அவளின் கண்களில் அணைக்கட்டியிருந்த கண்ணீர் வடிந்தே விட்டது.
“ஹேய் பாப்பா. இப்போ ஏன் அழுகிற, அழாத” என்று வைரவேல் பதட்டத்தில் குரலை உயரத்திவிட, அது மிரட்டலாக பெண்ணுக்கு தெரிந்ததில், அச்சம், அழுகை இரண்டும் கூடிவிட்டது.
“இவளோட” என்று அந்த காகித உறையை பிரித்து, அதில் இருந்த செயினை எடுத்து அவள் முன் நீட்டினான்.
“வேண். வேண்டாம். வேண்டாம்” என்று துளசி அங்கிருந்து ஓட பார்க்க, தேவா சட்டென அவள் கையை பிடித்துவிட்டான்.
“டேய்” என்று வைரவேல் பதற,
தேவா எதை பற்றியும் கவலைப்படாமல், செயினை அவளின் உள்ளங்கைக்குள் அழுத்தமாக வைத்தவன், “என் மனசு உனக்கு தெரியும், நீ தான் எனக்குள்ள இருக்க. சீக்கிரம் இதை உன் கழுத்துல எதிர்பார்க்கிறேன்” என்றான்.
துளசியோ விட்டால் போதுமென அழுகையுடன் அங்கிருந்து வேகமாக செல்ல, “என்னப்பா ஆச்சு. ஏன் அந்த பொண்ணு அழுதிட்டு போகுது?” என்று கோவிலை பூட்டி கொண்டு வந்தவர் கேட்க,
“ஆஹ்ன் விழுந்திடுச்சு. அதான்” என்று வைரவேல் சொன்னாலும், அந்த மனிதர் நம்பாமல் இருவரையும் சந்தேகமாக பார்த்து சென்றார்.
“ரைட்டு இன்னைக்கும் ஏதோ சம்பவம் இருக்கு” என்று வைரவேல் முனக,
“ஏன் சித்தப்பா இப்படி இருக்கா?” என்று தேவா சலித்து கொண்டான்.
“டேய் அந்த பொண்ணோட வளர்ப்பு அப்படி. வளர்மதி டீச்சர்ன்னா ஊரே பயப்படுது, அவங்க பொண்ணு எப்படி இருக்கும்?”
“அதுக்காக இப்படியா? நான் அவளை காலேஜ் சேர்ந்ததுல இருந்து பார்க்கிறேன். இப்போவரை அப்படியே தான் இருக்கா. இதுல மேடம் வக்கீலுக்கு படிச்சு, வாதாடி, ஜெயிச்சு, ம்ம்ம். ரொம்ப கஷ்டம்”
“அப்புறம் என்ன இதுக்கு நீ அவளுக்கு செயின் கொடுத்த. வேணாம்ன்னு விட வேண்டியது தானே”
“முடியலை, பிடிச்சு போச்சு. போய் தொலையட்டும்ன்னு தோண மாட்டேங்கிதே” என்ற பெருமூச்சுடன் நின்றான் தேவா.
“அப்புறம் பெருமூச்சு விடு, இப்போ வண்டியை எடு. அந்த மாணிக்கத்தை போய் பார்த்துட்டு வருவோம். இல்லை உன் அப்பனை சமாளிக்க முடியாது” என, தேவாவும் அவரை பார்க்க சென்றான்.
வைரவேலை பார்க்கவுமே மாணிக்கத்துக்கு புரிந்து போனது. அது போலவே, “எத்தனை கேஸ் வைச்சிருக்க? இதுவரை எவ்வளவு கேஸ் ஜெயிச்சிருக்க? ம்ஹூம். எத்தனை முறை ஜட்ஜ் முன்னாடி நின்னிருக்க சொல்லு” என்று அவரை கரைச்சல் கொடுத்து,
“ஒழுங்கா ஓடிடுங்க. இனி உங்களை பார்த்தேன் அவ்வளவு தான்” என்று அவர் டென்க்ஷனாகி கத்தி,
“போக தான் போறோம். போயா” என்று மகனை அழைத்து கொண்டு வந்துவிட்டார் வைரவேல்.
தேவாவிற்கு எண்ணமெல்லாம் துளசியே நிறைந்திருந்ததில், இதையெல்லாம் அவன் கண்டுகொள்ளவில்லை. இருவரும் நன்றாக சுற்றிவிட்டு மாலை வீட்டிற்கு செல்ல, அங்கு வளர்மதி டீச்சர்.
பசுபதி கையில் அந்த செயின். ‘முடிஞ்சு’
தேவா சுருங்கிய புருவத்துடன் தந்தை முன் நின்ற நேரமே, அவன் கன்னம் பழுத்து போனது.
“ஏங்க” என்று ஜெயலக்ஷ்மி பதற.
“கை வைக்கிற வேலையெல்லாம் இருக்க கூடாது அண்ணி” என்று வைரவேல்,
“முதல்ல உன்னை வெளுத்திருந்தா இவன் இன்னைக்கு இப்படி இருந்திருக்க மாட்டான்” என்று தம்பியிடம் ஏறிக்கொண்டு சென்றார் பசுபதி.
“அய்யா. நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன். இனி உங்க பையன் என் பொண்ணு பின்னாடி வர கூடாது. பார்த்துக்கோங்க” என்று வளர்மதி சொல்ல,
“வரமாட்டான்ம்மா. நான் பார்த்துகிறேன்” என்றார் பசுபதி உறுதியாக.
“ஏன் உங்க பொண்ணுக்கு தேவாவை விட பையன் கிடைச்சிடுவானா? அப்படியென்ன பண்ணிட்டான்னு எல்லாம் வரிஞ்சு கட்டிட்டு நிக்கிறீங்க? ஆசைப்பட்ட பொண்ணுகிட்ட விருப்பத்தை சொல்றது ஒன்னும் தப்பில்லை. புடிச்சா பிடிக்குது சொல்லணும் இல்லை பிடிக்கலை சொல்லணும். இதென்ன” என்று வைரவேல் எகிற,
“இங்க பாருங்க. என் பொண்ணுக்கு யார் வேணும், வேணாம்ன்னு நான் பார்த்துகிறேன். இத்தனை வருஷம் அவளை ஒத்த மனுஷியா நின்னு வளர்த்த எனக்கு அவளை யாருக்கு கட்டி கொடுக்கணும்ன்னு தெரியாதா என்ன?” என்று வளர்மதி கோவமாக கேட்க,
“தெரியாது” என்றான் தேவா.
“நீ பேசாத. அப்புறம் நல்லா இருக்காது சொல்லிட்டேன்” என்று அவன் முன் விரல் நீட்டி எச்சரித்தார் வளர்மதி.
“நான் ஏன் பேசக்கூடாது? அப்டித்தான் பேசுவேன். நீங்க என்ன நல்லா இருக்காது சொல்றது. நான் சொல்றேன் நல்லா இல்லை. நீங்க அவளை வளர்த்த விதமே நல்லா இல்லை” என்று தேவா சொல்லிவிட,
“என் வளர்ப்பை பத்தி பேச நீ யாருடா?” என்று வளர்மதி கோவத்தில் கொதித்துவிட்டார்.
“ஆஹ்ன் உங்க மருமகன்” என்று தேவா சொல்ல,
“தேவா. இன்னும் ஒரு வார்த்தை நீ பேச கூடாது” என்று பசுபதி மகன் கை பற்றி இழுத்து அவனை கண்டித்தார்.
“என்கிட்ட வேணாம்ன்னு சொல்ற தைரியம் கூட இவங்க பொண்ணுக்கு இல்லை. இவங்க என்னமோ பேசுறாங்க” என்று அப்போதும் தேவா பேச,
“இங்க பாருங்க அய்யா உங்க மேல இருக்கிற மரியாதையில தான் நான் உங்ககிட்ட சொல்ல வந்தேன். இதுவே வேற யாரும்ன்னா நான் போலீஸ்கிட்ட தான் போய் இருப்பேன்” என்றார் வளர்மதி.
“இப்போ கூட போங்க. யார் வேணாம்ன்னு சொன்னா” என்று வைரவேல் குதிக்க,
“டீச்சரம்மா இனி என் மகன் உங்க பொண்ணு பின்னாடி வர மாட்டான். சத்தியம் இது” என்று பசுபதி சொல்லிவிட,
“ப்பா.” என்றான் தேவா கோவமாக.
“உங்கள நம்பித்தான் போறேன்” என்று வளர்மதி இவனை முறைத்து செல்ல,
“நான் வைச்ச சத்தியம் உன் அம்மா மேல. பார்த்து நடந்துக்கோ” என்று சென்றார் பசுபதி.
“ஏன் இவர்மேல வைக்க வேண்டியது தானே? அண்ணி மேல சத்தியம் வைக்கிறார்” வைரவேல் நக்கலாக,
“தேவா. அப்போ அந்த ஸ்பெஷல் எக்ஸாம் இதுதானா? அம்மாவையே பூஜை பண்ண வைச்சுட்டியே. என்னடா இது” என்று ஜெயலக்ஷ்மி கடுப்பாக மகனின் தோளில் தட்டி சென்றார்.