அந்த அழகான இயற்கை எழில் கொஞ்சும் மலை வாசஸ்தலத்தில் சூரிய உதயத்தைக் காணவே ஆயிரம் கண்கள் போதாது.
அந்த அதிகாலை வேளையில் குளிர் காற்றில் சில்லிட்ட கைகளை தேய்த்துவிட்டுக் கொண்டே மலை உச்சியில் நின்றபடி, மேகக்கூட்டங்களுக்கு நடுவே சூரியக் கதிர்கள் உதயமாகும் காட்சியை ரசித்துக் கொண்டிருந்தனர் கௌதமும், மகிழினியும்.
நகரத்தின் பரபரப்பிலும், இரைச்சலிலும் இருந்து விடுபட்டு சற்றே மனதை ஆசுவாசப் படுத்திக்கொண்டு இயற்கையோடு பயணிக்க அவர்களுக்கு அப்பயணம் அவசியமான ஒன்றாய் அமைந்தது.
வளைந்து நெளிந்த சாலைகள் ஒரு புறம்.. காட்சி முனைகள் ஒரு புறம் என அந்த அமைதியான அழகான சூழலில் லயித்துப்போய்,
“இத்தனை வார்த்தை இருக்கும்போது எதுக்கு உன் தம்பி புரியாம பேசிட்டு இருக்கான். நான்கூட அந்த ஏகாம்பரம் அங்கிள் பொண்ணு ரம்யாவை இவன் இங்க வந்து நினைக்குறான்னு தப்பா புரிஞ்சுட்டேன்” என விஜய் கீர்த்தனாவைப் பார்க்க,
“எங்களுக்கு அவன் முதல் தடவை சொல்லும் போதே அர்த்தம் புரிஞ்சுது. உங்களுக்கு தான் புரியலை. இதுக்குதான் சொல்லுறது சண்டே ஆனா வீட்ல இருங்கன்னு. ப்ரெண்ட்ஸ் கூட கிரிக்கெட் விளையாட போனா இப்படித்தான்” என்று சலித்துக்கொண்டாள்.
“எல்லார்த்துக்கும் நான் கிரிக்கெட் ஆடுறது தான் காரணமா உனக்கு?”
“அப்புறம்? வைஷுக்கு தமிழ் கத்துக்கொடுக்க மாஸ்டர் வர்றாருன்னு சொல்லியும் அன்னைக்கு ப்ரெண்ட்ஸ் கூப்பிட்டாங்கன்னு அந்த ஓட்டம் ஓடுனீங்க” என்றாள் என்றோ ஒரு ஞாயிறு நடந்த நிகழ்வை.
விஜய் பரிதாபமாய் நின்றிருக்க,
“சரி சரி வாங்க அங்க போலாம். ஒரு செல்ஃபி எடுத்துக்கலாம்” என்று மகிழினி அழைக்கவும், பேச்சை விடுத்து நகர்ந்தனர்.
நாழிகைகள் நகர, மேலும் சில இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு காருக்குத் திரும்பியதும், “வைஷுவை கூட்டிட்டு வந்திருக்கலாம் அண்ணி” என்றாள் மகிழினி.
“அவளுக்கு ஹில்ஸ் ஒத்துக்காது மகிழ். ஒருநாள் போய்ட்டு வந்து சளி, காய்ச்சல்னு ரொம்ப சிரமப்பட்டுட்டா. அதான் அத்தை வேண்டாம்னு சொல்லிட்டாங்க. நமக்கே மூச்சு வாங்குது பாரு” என்று காரில் ஏறிக்கொள்ள,
கெளதமோ மகிழோடு எடுத்த புகைப்படங்களை ரசித்தபடி மெல்ல வர, விஜய் ஹாரன் கொடுக்கவும் வேகமாய் வந்தான்.
சில நிமிடங்கள் அமைதியாய் இசையில் கழிய,
“எதாவது இண்ட்ரெஸ்டிங்கா பேசிட்டு வாங்க. போர் அடிக்குது” என்றான் விஜய்.
“இண்ட்ரெஸ்டிங்கா?” என யோசித்த கீர்த்தனா,
“டேய்! கெளதம். உன் லவ் ஸ்டோரி சொல்லேன். உங்க மாமாவுக்கு மட்டும் சொல்லுவ.. கூடப்பொறந்தவ என்கிட்ட சொல்லணும்னு தோணலையா?” என,
‘இதுக்கு பேசாமையே வந்திருக்கலாம்’ என நினைத்த விஜய்,
“கீர்த்து! அவன் என்கிட்ட அதெல்லாம் சொல்லலை. எனக்கும் தெரியாது” என அவளைப் பார்க்க,
அவளோ, ‘வாயை மூடவும்’ என சைகை செய்ய,
சிரித்த கௌதமிடம்,
“அதான் உங்கக்கா கேக்குறாளே.. சொல்லுடா. இப்போவாச்சும் உன் டைரெக்சன்ல என்னோட ரோல் என்னன்னு சொல்லு” என்று ஸ்டீரிங்கைத் தட்டினான்.
“சரி சரி சொல்லுறேன்” என்றவன் மகிழினியைப் பார்க்க,
அவளோ சிறு ஒப்புதலுடன் புன்னகைத்தாள்.
“ஒரு நாள் லேட் நைட் ஆபிஸ் போய்ட்டு திரும்பி வரும் போது ஒரு ஆக்சிடென்ட்..” என்று தொடர்ந்த கெளதம் அந்த நாளிற்குள்ளேயே சென்றிருந்தான்.
அன்றைய நாள்!
அவன் வழக்கமாய் வீடு திரும்பும் நேரத்தைத் தாண்டியிருக்க, பசியோடு தான் வந்து கொண்டிருந்தான் கௌதம்.
வழியில் சாப்பிட்டுவிட்டு செல்வதா இல்லை வீட்டில் ப்ரட் ஆம்லெட்டுடன் முடித்துக் கொள்வதா என்பதில் தீர்வு காண முடியாமல் வந்து கொண்டிருந்தவனது கவனத்தை வழியில் நின்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோவும் சாலையில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணும் கவர, காரை அவசரமாய் ஓரம் கட்டினான்.
இன்னுமாய் நெருங்க, சாலையில் மற்றொரு பெண் காணக் கிடைக்க,
“என்னாச்சுங்க” என்ற அவனது குரலில் அவன் புறம் திரும்பியவள்,
“சார். ஆக்சிடென்ட் ஆகிடுச்சு. நெறைய ப்ளட் லாஸ் ஆகிருக்கு. ஆம்புலன்ஸ் இன்னும் வரலை. சீக்கிரம் ஹாஸ்பிட்டல் கொண்டு போகணும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்” என அவள் மொழியும் விழியும் கெஞ்ச,
“சரி வாங்க” என அவளையும் அழைத்துக்கொண்டு அந்தப் பெண்மணியை பின்னால் கிடத்தி தாமதிக்காது அடுத்து வந்த அரசு மருத்துவமனை சென்றிருந்தான் கௌதம்.
தீவிரப் பிரிவில் அவரை அனுமதித்துவிட்டுக் காத்திருக்க,
“எப்படி நடந்துச்சுன்னு தெரியலைங்க. நான் வரும் போது இவங்க விழுந்திருந்தாங்க. ஆம்புலன்ஸ் வர லேட் ஆகவும் நானும் ஹெல்ப் கேட்டுட்டே இருந்தேன். ஆனா எல்லாருமே ஹெசிடேட் பண்ணாங்க” என்றாள் கவலையாய்.
“அப்போ இவங்க உங்க அம்மா இல்லையா?” என கெளதம் ஆச்சர்யமாய்க் கேட்க,
இல்லை எனத் தலையசைத்தவள் பதற்றமாய் இருக்க,
“சரி அதான் டைம்க்கு ஹாஸ்பிட்டல்ல சேர்த்தாச்சே நீங்க ஏன் ரொம்ப டென்ஷனா இருக்கீங்க? உங்களை பார்த்து நான் கூட உங்க அம்மா தானோன்னு நினைச்சுட்டேன்” என இயல்பாய்ச் சொல்ல,
“ஒருத்தரோட கஷ்டத்தை புரிஞ்சுக்க அவங்க சூழ்நிலையில நம்மள நிறுத்திப் பார்த்தாவே போதும். என் அம்மாவாதான் இருக்கணும்னு அவசியம் இல்லையேங்க. என் அம்மா வயசுல இருக்குற வேற ஒருத்தரோட ஒரு அம்மா. அவ்ளோ தான்” என அழுத்தமாய்ச் சொல்ல,
கௌதம் தன்னுடைய வார்த்தைகளை வாபஸ் வாங்குவதாய்க் கையை உயர்த்தினான்.
இழப்பு மற்றவருடையது எனும்போது எதுவுமே வலிக்காது. அதுவே தன்னுடையது என்று வந்தால்?
அதுவரை கிளம்ப நினைத்தவன் இப்போது சிந்தனை வயப்பட்டு அப்படியே நின்றுவிட்டான்.
“பக்கத்துல ஒரு பி.ஜில” என ஆரம்பித்த அவர்களது உரையாடல்கள் நீண்டது.
அலுவலகத்தில் ஆரம்பித்து பேட்மிட்டனில் பயணித்து சமீபத்திய தேர்தல் முடிவுகளைத் தாண்டி எப்போதோ அவளது வாழ்க்கைக்குள் சென்றுவிட்டிருந்தது பேச்சு.
அவளுக்கும் தன் கதையை ஏன் அவனிடம் சொல்கிறோம் என்ற எண்ணம் எழவில்லை. அதேபோல் அவனைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் விரும்பவில்லை. மனித மனங்களைப் பற்றியான அவளது புலம்பல்களையே முன்வைத்தாள்.
சில பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் தேவையில்லை. ஒரு ஜோடி காதுகள் போதுமானது தானே?
அவனோடு பேசுவது அவளுக்குப் பிடித்திருந்தது. அவனுக்கு அவள் பேசுவதைக் கேட்கப் பிடித்திருந்தது.
காரை சர்விஸ் செய்ய சர்விஸ் ஸ்டேஷனையும் தொடர்பு கொண்டு பேசிவிட்டு அவன் வைக்க, அடிபட்ட பெண்மணியின் உறவினர்கள் வந்து சேரவும் இருவரும் விடைபெற்றுக் கிளம்பினர்.
“உங்க பிஜி எந்த ஏரியா?” எனக் கேப் புக் செய்வதற்காகக் கேட்க,
“இங்க இருந்து இரண்டு தெரு தான். நான் நடந்தே போயிடுவேன்” என்றிட,
“அந்த டீ கடையை தாண்டி ஒரு லெப்ட் எடுத்தா போதும். இடையில அண்ணாச்சி கடை இருக்கு. அவர் க்ளோஸ் பண்ண இன்னும் நேரமிருக்குங்க” என அவளது பாதுகாப்பை உறுதி செய்தாள்.
“சரி.. பார்க்கலாம். நைஸ் டு மீட் யூ” என கெளதம் தன் கையை நீட்டினான்.
தயங்கியவாறே அவன் கையைப் பற்றியவள்,
“தேங்ஸ்ங்க” என்று விடைபெற,
“உங்க பேரு?” என்றதும் திரும்பியவள்
“மகிழினி” என்றாள்.
அவன் பெயரைத் தெரிந்துகொள்ள அவள் விரும்பியிருக்கவில்லை போலும்.. தலையசைத்துவிட்டுக் கிளம்பியிருந்தாள்.
மீண்டுமொரு சந்திப்பை எதிர்பார்த்து அவன் போகும் வழியெல்லாம் விழிகளால் வலை வீசினான். வார விடுமுறையில் அந்தப் பிஜி பக்கம் கூட விசிட் அடிப்பது வழக்கமாகியது.
அவள் வலையில் சிக்காத மானாய்ப் போய்விட, தேடலின் முடிவில் அவளோடான அவனது முதல் சந்திப்பைத் தீர்மானித்த இயற்கையிடமே அதையும் விட்டுவிட்டான்.
சில விஷயங்கள் நம் கையில் இல்லை என்று புரியும் போது அதை இயற்கையிடம் விட்டுவிட வேண்டும்.
நமக்கானதை நமக்குத் தேவையான நேரத்தில் நம்மிடம் கொண்டுவந்து சேர்ப்பதில் இயற்கையை மிஞ்ச ஆளில்லை.
அப்படி கெளதம் அவளை மறக்கவிருந்த ஒரு தருவாயில் அவர்களது இரண்டாம் சந்திப்பு நிகழ்ந்தது.
ஒரு மழை நாளில்!
ஒரு கஃபேவின் முன்பு ஒதுங்கியிருந்தான் கெளதம்.
நனைந்த தன் கேசத்தை சரிசெய்து கொண்டிருந்த வேளையில் அருகிலிருந்த புத்தகக் கடையில் நின்றிருந்தவள் அவனது பார்வையில் விழுந்தாள்.
மகிழ்?!
யோசித்தவனின் மூளையிலுள்ள நியூரான்கள் மின்னலாய் ‘அவளேதான் டா’ என்று சிக்னல் தந்ததோடு அல்லாமல்,
ஹேய் மின்னலே! ஹேய் மின்னலே!
என் கண்ணிலே.. நெஞ்சிலே.. சொல்லொணா கன்னலே!
எனப் பின்னிசையிட்டு முடித்திருந்த மறுநொடி அவள் முன்பாக நின்றிருந்தான் கெளதம்.
“மேடம் நீங்க கேட்டிருந்த புக் ரெண்டு காப்பி தான் வந்துச்சு. நேத்து தான் ஒருத்தர் வந்து ஒன்னு வாங்கிட்டு போனாரு. இன்னொரு காப்பி இப்போ தான் ஒருத்தர் கால் பண்ணி கொஞ்ச நேரத்துல வர்றதா சொல்லி ப்ளாக் பண்ணியிருக்காரு” என்ற கடைக்காரரின் தகவலால் சற்றே ஏமாற்றம் அடைந்தவள்,
“அவர் நம்பர் இருந்தா அவர் கிட்ட கொஞ்சம் பேசிப் பார்க்கறீங்களா?” என்றாள்.
கௌதம் அந்தப் புத்தகத்திற்கான தொகையை ஸ்கேன் செய்யப் போக, வங்கி சர்வர் சதி செய்தது. வாலட்டிலும் இரண்டு நூறு ரூபாய் தாள்கள் மட்டுமே இருக்க,
“நான் கொடுக்கிறேன்” என மகிழே அத்தொகையைக் கொடுத்திருந்தாள்.
“யுவர் ஜி பே நம்பர் ப்ளீஸ்?” எனக் கிடைத்த வாய்ப்பில் அவன் கேட்க,
“அப்போ இதை நீங்களே வெச்சுக்கோங்க” என்றபடி விழிகளை உருட்டினாள் அவள்.
“சரீரீரீ..” என்பதாய் சிரிப்போடு பின் வாங்கினான்.
இருவரும் அங்கிருந்து வெளியேறி சாலைக்கு வரவும், பெருமழையைப் பொழியத் தயாரானதாய் வானம் இடியோடு ஒரு முன்னறிவிப்பு விட,
அதில் சற்றே திடுக்கிட்ட மகிழினி கௌதமின் கையை இறுகப் பற்றியிருந்தாள். அதில் அவனுள்ளும் ஒரு இடி இன்பமாய் வந்து போனது.
“சாரி” என்று அவள் விலகினாலும், அடித்த காற்றில் அவன் முகத்தை மூடிய அவள் துப்பட்டாவை விலக்கியவனுக்கு அவள் வாசனை மட்டும் விலக மறுத்து உடன் பயணித்தது.
“மழை ஹெவியா வரும் போல” எனச் சொல்லி அவன் வாயை மூடவில்லை. அதற்குள் வானம் கொட்ட ஆரம்பித்தது.
“கமான்..” எனத் தயங்காது அவள் கையைப் பற்றி அருகிலிருந்த மனு’ஸ் கஃபேவிற்குள் அழைத்து வந்திருந்தான் கெளதம். அதன் வாயிலில் நின்றபடி சில்லிட்ட தன் கைகளை தேய்த்துக் கொண்டாள் மகிழினி.
நான்கு சக்கர வாகனங்கள் எல்லாம் மின்னல் வேகத்தில் நகர, இரு சக்கர வாகன ஓட்டிகள் மட்டும் கிடைத்த இடத்தில் ஒதுங்கியிருந்தனர்.
ஒரு கார்னர் டேபிள். அதில் இருவரும் எதிரெதிரே அமர, மகிழினியின் பார்வை கண்ணாடித் தடுப்புகளின் வழியே மழையை ரசித்தது.
பின்னணியில் மெல்லிசை
சூடான ஒரு காஃபி
கையில் பிடித்த புத்தகம்
என்பது அவளது ரசனையாகியிருக்க,
எதிரே அமர்ந்தபடி
அவளை மட்டுமே ரசிப்பது
அவனது ரசனையாகிப் போயிருந்தது.
நாழிகைகள் அழகாய் நகர, சில மணித்துளிகளில் மழை விட்டிருந்தது.
அறைக்குத் திரும்பிய மகிழினியின் மனம் நடந்த நிகழ்வுகளையே சுற்றி வந்தது. எந்தக் கவலையுமின்றி அவள் புத்தகத்தில் தொலைந்து போன அரிதான நிமிடங்களை எண்ணிப் பார்த்தாள்.
நானா இது? இப்படியும் என் வாழ்வில் ஒரு நாளா? என நினைத்தவளுக்கு, அவனது அருகாமையில் தன் மனம் கவலைகளற்று பாதுகாப்பாய் இருந்தது புரிந்தது.
புதிதாய் வானிலை மாறியதுபோல் மகிழினியின் மனநிலையிலும் ஒரு மாற்றம்.