செவிப்பொன் சேர்ப்பு விழா!
நதிப்படுகையோடு அமையப் பெற்றிருந்தது அந்தக் கோவில்.
அதன் வளாகத்தில் பட்டுப் பாவடையில் இளமானாய் துள்ளித் திரிந்து கொண்டிருந்தாள் ஐந்து வயது மகிழினி.
“மகிழ் குட்டி! இங்க வா. பூ வெச்சு விடுறேன்” என்ற அவளது அன்னை பத்மினியின் குரலுக்குக் கட்டுப்பட்டு வர,
மல்லிச்சரத்தை அவளுக்குச் சூடி அழகு பார்த்தவர்,
“என் கண்ணே பட்டிடும் என் தங்கம்” என திரிஷ்டி கழித்தார்.
“நீ சொன்னாலும் சொல்லலைனாலும் என் மக தங்கம் தான்” என்றவாறே வந்தார் நந்தகோபால்.
“அப்பாஆ..”
ஆசையாய் அழைத்த மகிழினியைத் தூக்கி செல்லம் கொஞ்சியவர், தன்னை முறைத்துப் பார்க்கும் மனைவியை என்னவென்று பார்க்க
“உங்க மக தங்கம்ன்னா அப்போ நான் என்ன?” என்று கேட்க,
“நாட்டியப்பேரொளி நடனம் ஆடிறாதீங்க. நீங்க என் தங்கத்தை பெத்த பெரிய தங்கம்” என்றதில் பத்மினி கலகலவென சிரித்தேவிட்டார்.
அவர் சிரிப்பு அவர்களையும் தொற்றிக்கொண்டது.
இதை சற்று தொலைவில் சீர்வரிசைத் தட்டுகளோடு வந்துகொண்டிருந்த பத்மினியின் அண்ணன் ராஜேந்திரன் பார்க்கவும் அவர் அகம் மகிழ்ந்து போனார்.
‘இந்த சந்தோசம் என்னைக்கும் என் தங்கச்சி குடும்பத்துல நிலைச்சு இருக்கணும்’ என மனதார நினைத்தார்.
அவரது எண்ணத்திற்கு நேர்மாறாக இருந்தது அவரது துணைவியான சிந்தாமணியின் எண்ணம்.
‘இவ்வளவு சீர் வாங்குறோம்னு அவளுக்கு சந்தோசத்தை பாரு. யார் சொத்தை யார் அனுபவிக்குறது? இந்த மனுசனுக்கு எடுத்து சொன்னாலும் புரியாது. என் வாயை அடைக்குறதுலையே குறியா இருப்பாரு. இப்படியே போனா நாளைக்கு நானும் என் புள்ளையும் தெருவுல தான் நிக்கணும். சீக்கிரம் இதுக்கு ஒரு முடிவு கட்டணும்’ என்று எண்ணியபடியே நின்றிருக்க,
“என்ன அப்படியே நின்னுட்டு இருக்க? எல்லாம் சரியா இருக்குதான்னு பாரு” என்ற ராஜேந்தரனின் குரலில் நினைவுக்கு வந்த சிந்தாமணி,
“வா வினோத்” என தன் மகனை அழைத்துக் கொண்டு விருப்பமே இன்றி நகர்ந்தார்.
இருபத்தியோரு தட்டுகளில் வகைவகையான சீர்வரிசைப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. பாரம்பரியப் பொருட்களும், அலங்காரப் பொருட்களும், ஆடை ஆபரணங்களும், பண்ட பாத்திரங்களும், பலகாரங்களும் இடம்பெற்றிருக்க,
“எதுக்கு அண்ணா இவ்வளவு?” என்ற பத்மினிக்கு,
“என் மருமகளுக்கு நான் செய்யுறேன்” என்று தன் தாய்மாமன் உரிமையை.. உறவை நிலைநாட்டியவர்,
“மகிழ் குட்டி. எல்லாம் உனக்குத்தான். பிடிச்சிருக்கா பாரு” என அவர் கையில் வைத்திருந்த வைரத்தோடைக் காண்பிக்க,
‘இந்த மனுஷன் இதை என்கிட்ட காட்டவேயில்லையே. இதுக்கு இனி எவ்வளவு செலவாச்சோ’ எனப் பார்த்தார் சிந்தாமணி.
சில நாழிகைகள் உற்றாரோடு உரையாடலில் நகர்ந்திருக்க..
மகிழினி மற்ற சிறார்களோடு சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தாள். வினோத் மட்டும் சற்று தொலைவில் ஆற்றோரம் நின்றிருப்பதைக் கண்ட நந்தகோபால்,
“வினோ! இங்கயே விளையாடு. ரொம்ப தூரம் போகக்கூடாது. ஆத்துல தண்ணி நிறைய போயிட்டு இருக்கு. ஜாக்கிரதை” என எச்சரித்தார்.
“ஓகே மாமா” என பின்னால் வந்துகொண்டான்.
 சில நிமிடங்களிலேயே ராஜேந்திரன் மடியில் மகிழினியை அமர்த்தி உற்றார் உறவினர் சூழ இனிதாய் நிகழ்ந்தேறியது காதணி விழா.
“வினோ! பாப்பா அழுதா வாழைப்பழத்தை வாயில் வெச்சிடு” என்று சிலர் எடுத்துக்கொடுக்க..
அவன் காத்திருப்பை வீணடித்த மகிழினியோ வலியைப் பொறுத்து அமைதியாய் இருந்துகொண்டாள்.
“சத்தமே இல்லாம சமாளிச்சுட்டாளே” என அங்கிருந்தோர் அவளைப் பாராட்ட.. அது பிடிக்காத வினோத்தோ கட்டாயமாய் அவள் வாயில் பழத்தை திணித்திருந்தான்.
அதில் கண்கள் கலங்கிப்போனது மகிழினிக்கு,
“அறிவிருக்கா டா உனக்கு. இப்படியா பண்ணுவ” என ராஜேந்திரன் காயவும்,
“அவனை ஏன் இப்போ திட்டுறீங்க? நீ வாடா” என வினோத்தை சிந்தாமணி அவர் பக்கம் இழுக்க, அவனோ அவர் கையை உதறிக்கொண்டு வெளியே ஓடினான்.
“உன்னை சொல்லணும். பையனை வளர்த்தி வெச்சிருக்கா பாரு” என்று ராஜேந்திரன் மேலும் கொதித்துப்பேச,
“அண்ணா! விடுங்க சின்ன பையன் தானே. பெருசு பண்ண வேண்டாம்” என்ற பத்மினி,
“மகிழ்! இதுக்கெல்லாம் அழுகக் கூடாது” என்று மகிழினியைத் தூக்கி சமாதனம் செய்தவாறே வெளியே அழைத்துச் செல்ல, நந்தகோபாலும் அவர்களைப் பின்தொடர்ந்தார்.
முகம் வாடிப்போயிருந்த மகளைக் கண்டு,
“இங்க பாரு மகிழ்! சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் இப்படி சோர்ந்து போய் அழுகக்கூடாது” என்ற பத்மினியிடம்,
“அப்போ அவன் செஞ்சது தப்பில்லையா மா” எனப் பாவமாய் கேட்டவள்,
“எனக்கு அவனை பிடிக்கவே இல்லை” என்றாள்.
“அவன் செஞ்சது தப்புதான். ஆனா நீ மன்னிச்சிடு. இதையே நெனச்சிட்டு வெறுப்பை வளர்த்துக்க கூடாது. அதுதான் உங்க மாமா கண்டிச்சிட்டாரே” என்றார் நந்தகோபால்.
“எங்கே இப்போ கொஞ்சம் சிரி பார்க்கலாம். மகிழ் சிரிக்காம மங்கி மாறி இருக்க” என்ற பத்மினிக்கு,
“அதை பெரிய மங்கி சொல்லுது மகிழ்” என்று சொல்லி முறைப்பைப் பெற்றுக்கொண்ட நந்தகோபால்,
“இது என்ன வம்பாப்போச்சு? அவ தங்கம்னா நீ பெரிய தங்கம் அப்படித்தானே இதுவும்” என்று நியாயம் பேச,
கலகலவென சிரித்துவிட்டாள் மகிழினி.
அவளைப் பார்க்க வந்த ராஜேந்திரனோ, “இங்க வா சாமி. மாமாகிட்ட வா. அந்தப் பய வரட்டும் நான் சூடு வைக்குறேன்” எனப் பேச,
“வேண்டாம் மாமா. நீங்கதான் அப்போவே திட்டிட்டிங்களே” என்றுவிட்டாள்.
அவள் இயல்பானதே அவருக்கு நிம்மதியளித்தது.
அந்த நிம்மதி நீடிக்காதபடி, சில நிமிடங்களிலேயே பல எதிர்பாராத சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழத் தொடங்கின.
மதிய விருந்து சென்றுகொண்டிருந்த நேரம் அது. அனைவரும் பந்தியில் இருந்த வேளை.. உணவு பரிமாறிக் கொண்டிருந்த ராஜேந்திரன்,
“சிந்தாமணி! சமையல் கூடத்துக்கு போய் ஒரு அன்னவாளி எடுத்துட்டு வா” என,
பதில் தராது எங்கோ பார்த்தபடி சிந்தாமணி நின்றிருக்க,
“அண்ணி இருக்கட்டும். நானே போறேன்” என்று நிலைமையை புரிந்துகொண்டு தானே சென்றார் பத்மினி.
அந்நேரம்!
“ஐயோ! யாராவது வாங்களேன் வினோத் தண்ணில விழுந்துட்டான்”
கூக்குரல் செவிகளைத் தீண்டியதும் பாத்திரங்கள் எடுக்கச் சென்ற பத்மினி அடித்துப்பிடித்து ஆற்றங்கரைக்குச் செல்ல, அவர் கண்ட காட்சியில் நெஞ்சம் பதறிப்போனார்.
வினோத் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு ஒரு பாறையைப் பிடித்தவாறு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான்.
“ஐயோ! புள்ளை தண்ணில விழுந்திருச்சே.. யாராச்சும் வாங்களேன்.. காப்பாத்துங்களேன்..” என்று கூச்சலிட்டவர் மறுநொடியே தாமதிக்காது உள்ளே இறங்கிப் போராடி அவனையும் பிடித்திருந்தார்.
“அத்தை…” என்று அழுகும் அவனுக்கு,
“பயப்படாத. கெட்டியா பிடிச்சுக்கோ. அத்தை இருக்கேன்” என்று ஆறுதல் மொழிந்தவர் விழிகள் உதவிக்கு யாரேனும் வரமாட்டார்களா என்ற எதிர்பார்ப்பில் படபடத்தது.
விசயம் அறிந்து நந்தகோபால் விரைந்து வந்திருக்க, பின்னால் ஒவ்வொருவராய் ஆற்றை நோக்கி வரத்துவங்கினர். அதற்குள் வினோத் பிடித்திருந்த பாறை வழுக்கத் துவங்க, தாமதிக்காது நீரில் இறங்கியிருந்தார் நந்தகோபால்.
பத்மினிக்கு சற்றே நம்பிக்கை வந்திருந்தது. நீந்தி அவர்கள் அருகில் வந்த நந்தகோபால்,
“கையை கொடு பத்மினி” என தன் கையை நீட்ட,
“பிள்ளையை பிடிங்க முதல்ல” என தன் முழு பலத்தையும் திரட்டி வினோத்தை நந்தகோபாலின் பிடிக்கு நகர்த்தியிருந்தார்.
அவர் அவனைச் சுமந்தபடி பத்திரமாய் கரை சேர்த்துத் திரும்ப மேலும் இரண்டு பேர் அவரோடு நீரில் இறங்கி இருந்தனர்.
ராஜேந்திரன் மகிழினியோடு வந்த வேளையில் அவர்கள் கண்ட காட்சி இதுவே!
கையில் பிடிபட்டதெல்லாம் நழுவிக் கொண்டே போக கழுத்தளவு தண்ணீரில் பெரிதாய் போராடிக் கொண்டிருந்தார் பத்மினி.
இனிப் பிழைக்க மாட்டோம் என்று எண்ணியவர், இறுதியாய் மகிழினியைப் பார்த்துவிடத் தவித்த வேளையில்
“அம்மாஆஆ” என்று அவள் கத்திக் கதறியது காதில் விழ,
ஒரு முறை தன் ஆசை மகளை ஆசை தீரப் பார்த்தவர்,
“மகிழ்.. பத்திரம்” என்றபோது பிடி தளர்ந்திருந்தது.
“பத்மினி.. பாறையை பிடி.. பத்மினி..” எனக் கூறியபடியே நந்தகோபாலும் அவரை எப்படியாவது காப்பற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் முன்னேறிச் செல்ல,
“அண்ணே! அங்க ஆழம் அதிகம். போகாதீங்க. நில்லுங்க” என்ற மற்றவர்கள் குரல் அவர் செவிகளைச் சென்றடையவில்லை.
அவர் பத்மினி மட்டுமே அவர் நினைவில்.
இறுதியில் இருவரும் மறைந்தே போயிருந்தனர். அது சுழலுள்ள பகுதி என்பதால் இனி அவர்களைத் தேடுவது கடினம் எனப் புரிந்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
“அப்பாஆ… அம்மாஆ..”
“எனக்கு பயமா இருக்கு. சீக்கிரம் வந்துருங்க..” என்று கண்ணீர் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த மகிழினி, சில நொடிகளில் மயங்கிச் சரிந்திருந்தாள்.
என்ன நடந்ததென்று தெரியாமல் கண்ணிமைக்கும் நேரத்தில் அன்புத் தங்கையையும் அவள் கணவரையும் இழந்துவிட்டதை நம்ப மறுத்து மரத்துப்போய் நின்றிருந்தார் ராஜேந்திரன்.
“ராஜேந்திரா! இப்படி ஆகிடுச்சே டா. பத்மினி நம்மள விட்டு போய்டா டா” என கட்டி அழுத பெரியவரிடம்,
“இல்லை.. இது என் பத்மினியா இருக்காது பெரியப்பா. என் பத்மினி சமையல் கட்டுக்கு தானே போனா. அவ அங்கதான் இருப்பா. மாமா அவகூடத்தான் இருப்பாரு. நான் போய் அவங்களை கூட்டிட்டு வரேன்” எனப் பிதற்றிக் கொண்டிருக்க,
“என்னப்பா நீயே இப்படி பேசுனா எப்படி? இந்த பிள்ளையை கொஞ்சம் பாருப்பா” என்ற குரலில் சுயநினைவின்றி கிடந்த மகிழினியைக் கண்டார்.
அவளருகே அமர்ந்து அவள் தலையை தன் மடியில் கிடத்தியவர், ஒரு பெருங்கூச்சலோடு தலையில் அடித்துக்கொண்டு வெடித்து அழுக ஆரம்பித்தார்.
“ஐயோ.. எஞ்சாமி போய்ட்டாளே.. என்னைய விட்டுட்டு போய்ட்டாளே!
எம்புள்ளைய காப்பாத்திக் கொடுத்துட்டு உம்புள்ளைக்கு நீயில்லாம போயிட்டியே பத்மினி!
புள்ள கண்முழிச்சு எங்க அம்மா, அப்பா எங்கன்னு கேட்டா நான் என்ன சொல்லுவேன்? தாயில்லாம இனி இந்த பிள்ளையை எப்படி வளப்பேன். யாரு இருந்தாலும் நீ இருக்குற மாதிரி வருமா பத்மினி?
மாமாவையும் கூட கூட்டிட்டுப் போய்ட்டியே” என துக்கம் தொண்டையை அடைக்கப் புலம்ப,
“என்னங்க…” என்ற சிந்தாமணியை ஆக்ரோசமாய் பார்த்தவர்,
“பாவி பாவி. நீ ஒழுங்கா இருந்திருந்தா இன்னைக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்காதே. இந்த சின்னப் பிள்ளை வாழ்க்கையே செதஞ்சு போச்சே. இப்போ சந்தோசமா உனக்கு?”
“இல்லங்க..” என அவருக்கும் குரல் கம்மியது.
“’இவ்வளவு சீர் செனத்தி செய்யுறீங்களே பதிலுக்கு உங்க தங்கச்சி என்ன செஞ்சா’ன்னு கேட்டியே.. இன்னைக்கு அவ உயிரையே கொடுத்துட்டு போய்ட்டா.
இனி இந்தக் கடனை நீ எப்படி தீர்ப்ப?
காலத்துக்கும் எங்களை கடனாளி ஆக்கிட்டு போய்ட்டியே தங்கம்”
உடைந்து புலம்பியவருக்கு என்ன சமாதனம் கூறுவதென்று தெரியாது உறவுகள் அத்தனையும் வேதனையின் வெளிப்பாட்டுடன் நின்றிருந்தனர்.
எத்தனை ஆனந்தமாய்த் துவங்கிய நாள்! இப்படி முடிவுபெறும் என நினைத்தும் பார்த்திருக்கவில்லை யாரும்.
மகிழினியின் முகத்தை அசையாது அப்படியே வெகு நேரம் பார்த்திருந்தவர், பின் ஒரு முடிவிற்கு வந்தவராய் தன் மனதை திடப்படுத்திக் கொண்டு அவளை தோள்மீது போட்டுக்கொண்டு நடந்தார்.
ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இருவரின் உடல்களும் தீவிர தேடுதலுக்குப் பின் மறுநாள் கண்டுபிடிக்கப்பட்டு ராஜேந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டது.
மின்னல் வேகத்தில் எல்லாம் முடிக்கப்பட்டு நான்கு நாட்கள் ஓடியிருந்தன.
நடந்தது தெரியாமல்.. நாட்கள் நகர்வது தெரியாமல்.. இறுதியாய் பெற்றோர் முகத்தைக் காணக்கூட முடியாதபடி மருத்துவமனையில் இருந்தாள் மகிழினி.
கண்முன் பெற்றோருக்கு நடந்த அசம்பாவிதத்தைக் கண்ட அதீத அதிர்ச்சியால், கடுங்காய்ச்சலால் அவதியுற்று தீவிர பாதிப்புகளுடன் மயக்கத்திலேயே இருக்க, தீவிரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தாள்.
உடல்நலம் சற்று தேறியிருப்பதாய் இன்று காலை மருத்துவர் தெரிவிக்கவும் தான் உயிரே வந்தது ராஜேந்திரனுக்கு.
சோர்வான முகத்தோடு அவளருகில் அமர்ந்திருக்க, மெல்லக் கண்விளித்தவள் சுற்றிலும் பார்த்துவிட்டு அவரிடம் கேட்டாள்..
“அம்மா எங்க மாமா?”
அவர் உடைந்து அழுகவும் தான் அவளுக்கு நடந்தது அத்தனையும் மெல்ல நினைவுக்கு வந்தது.
நெஞ்சம் படபடக்க.. விழிகளில் நீர்பெருக..
 “அம்மாஆஆஆ”
அலறியபடி திடுக்கிட்டு விழித்தாள் மகிழினி.
“மகிழ்! என்னாச்சு” என கெளதம் பதறிப்போக,
விஜய் காரை ஓரமாய் நிறுத்தியிருந்தான்.
எங்கு இருக்கிறோம் என்று உணரவே மகிழினிக்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டது. கீர்த்தனா, விஜய்யோடு காரில் பெங்களூருக்கு பயணம் செய்துகொண்டிருப்பது புரியவும் தான் சற்றே அமைதியானாள்.
“முதல்ல தண்ணி குடி”
கெளதம் தண்ணீர் பாட்டிலைக் கொடுக்கவும் சிறு நடுக்கத்தோடு வாங்கியவள் அதைப் பருகிவிட்டுக் கொடுக்க, ஏசியின் குளுமையிலும் அவளுக்கு வியர்த்துப் போயிருந்தது.
“அத்தை! என்னாச்சு உங்களுக்கு?” என்ற அக்கறை கலந்த வைஷுவின் குரலில்,
தன்னை நிதானப்படுத்திக் கொண்ட மகிழினி,
“ஒரு கெட்ட கனவு வைஷு. நீ பயந்துட்டியா?” என்று கேட்க,
“அவ மட்டும் பயக்கலை மா.. கொஞ்ச நேரத்துல கார் என் கண்ட்ரோல விட்டு விண்வெளிக்குப் போயிருக்கும்” என்ற விஜய்யின் கலவரக் குரலில்,
“ரொம்ப கத்திட்டனோ? ஸாரி” என அனைவரையும் சங்கடமாய் பார்த்தாள் மகிழினி.
“இட்ஸ் ஓகே மகிழ். நீ ரெஸ்ட்லஸா இருக்கேன்னு நெனைக்குறேன். கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு போலாம்” என்ற கீர்த்தனா,
“ஐயா விண்வெளி நாயகா.. ஒரு நல்ல ஹோட்டல் ஆஹ் பார்த்து நிறுத்துங்க ரெப்ரெஷ் பண்ணிக்கலாம்” என்றாள் விஜய்யிடம்.
கெளதம் மட்டும் கொஞ்சம் அப்செட்டாக இருந்தான். அதை கவனித்த மகிழினி,
“ஒன்னும் இல்லை கெளதம். ஏதோ டிஸ்டர்ப் ஆகிடுச்சு” என்றதும்,
“இன்னைக்கும் அதே கனவா மகிழ்” என்றான் மெதுவாய் வருத்தம் கலந்த குரலில்.
மெல்லத் தலையசைத்தாள்.
அவன் எதுவும் பேசவில்லை. அவள் கையை எடுத்து தன் கைகளுக்குள் பாதுகாப்பாய் வைத்துக்கொண்டான்.
அவள் அவன் தோள்மீது தலை சாய்த்துக்கொண்டாள்.
எல்லா மௌனமும் பேசும்..
அதை எல்லோராலும் புரிந்துகொள்ள முடியாது.
அவள் மௌனமாய் பேச..
புரிதலின் நிழலில் அவளை இளைப்பாற வைத்தான் கெளதம்.