வெறுமை சுமந்திருந்த வீட்டில் ஆளுக்கொரு திசையில் சத்யமூர்த்தியும், கலைச்செல்வியும் தஞ்சம் அடைந்திருந்தனர்.
வாயிற்கதவு திறக்கும் சத்தம் கேட்கவும் சத்யமூர்த்தி வெளியே வந்து பார்க்க, முன்பு அவருடன் பணியாற்றிய சக பேராசிரியர் ஒருவர் தான் வந்து கொண்டிருந்தார்.
“வாங்க வாங்க மதிவாணன்” என்று மலர்ந்த முகத்தோடு வரவேற்க,
“பார்த்து ரொம்ப நாள் ஆகிடுச்சு. நல்லா இருக்கீங்களா சார்?” என்றவாறே உள்ளே வந்தார்.
“நான் நல்லா இருக்கேன். இன்னும் இந்த சாரை தான் விட மாட்டிங்குறீங்க” என்றதில் இருவரும் புன்னகைக்க,
உள்ளே இருந்த கலைச்செல்வியும் அவரை வரவேற்றபடி வந்தார்.
“வீட்டுக்காரம்மாவுக்கு அன்னைக்கு கொஞ்சம் சுகமில்லை. அதான் ரிசப்ஷன்க்கு வரமுடியாம போயிட்டு” என,
“ஓஹ்! இப்போ பரவாயில்லையா?” என்று சத்யமூர்த்தி விசாரிக்க,
“இப்போ நல்லா இருக்காங்க. அதான் உங்களையும் மணமக்களையும் நேர்ல பார்த்து வாழ்த்து சொல்லிட்டு போகலாம்னு கிளம்பி வந்துட்டேன்” என்று மதிவாணன் சொல்ல,
“அடடா, இப்போ தான் அவங்க எல்லாரும் என் பொண்ணு வீட்டுக்குக் கிளம்புனாங்க. கொஞ்சம் முன்னாடி வந்திருந்தீங்கன்னா பார்த்திருக்கலாம். இருங்க போன் பண்ணுறேன்” என்றவரிடம்,
“பரவாயில்லை இருக்கட்டும் விடுங்க. இன்னொருநாள் பார்த்துக்கலாம்” என்றுவிட்டார் மதிவாணன்.
இருவரும் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருக்கவும் கலைச்செல்வி தேநீரோடு வந்திருந்தார்.
அவர்களது உரையாடலின் தொடர்ச்சியாய்,
“எல்லாருக்கும் சொல்லலை மதிவாணன். உங்களுக்கும் அன்பரசனுக்கும் மட்டும் தான் அழைப்பு. சிம்பிளா முடிச்சிட்டோம்” என்ற சத்யமூர்த்தி அவரது கைபேசியில் இருந்த ஒரு புகைப்படத்தைக் காண்பிக்க,
“அன்பரசனைப் பார்த்து ரொம்ப நாள் ஆகிடுச்சு” என்றவாறே அதைக் கையில் வாங்கிய மதிவாணன், அவரது நண்பரின் புகைப்படத்தைப் பார்த்தபின் அதிலிருந்த அனைவரின் மீதும் பார்வையைச் செலுத்த, அவர் விழிகள் ஓரிடத்தில் ஆச்சர்யத்தில் நிலைத்தது.
“இந்தப் பொண்ணு? மகிழினி தானே?” என்று வியப்பில் வினவ,
“ஆமாம். அவள உங்களுக்கு தெரியுமா?” என்றார் கலைச்செல்வி அதே வியப்பில்.
“தெரியாம என்னங்க. என்னோட ஸ்டுடென்ட் தான். எத்தனை பேருக்கு பாடம் எடுத்தாலும் ஒரு சிலரை நமக்கு மறக்காது இல்லைங்களா. அப்படித்தான் இந்த பொண்ணும்” என்றவர்,
“’வாழ்க்கைல நீ ரொம்ப கஷ்டப்பட்டுட்ட, நாளைக்கு நல்ல இடத்துக்கு தான் போவே’ன்னு நான் சொன்னது இன்னும் நினைவிருக்கு” என்றார் கடந்த கால நினைவுகளை முன்னிறுத்தி.
“என்ன சொல்லுறீங்க மதி. நான் நம்ம காலேஜ்ல பார்த்ததில்லையே?” என்று யோசித்த சத்யமூர்த்திக்கு,
“சார் நான் இங்க ஜாயின் பண்ணுறதுக்கு முன்னாடி ஈரோட்டுல ஒரு காலேஜ்ல வொர்க் பண்ணிட்டு இருந்தேன். அங்க தான் படிச்சா இந்தப் பொண்ணு” என்றவர் மேலும்,
“ப்ச்.. நல்லா படிக்கக் கூடிய பொண்ணு. டிகிரி வாங்குறதுக்குள்ள ஒரு வழி பண்ணிட்டான் அந்தப் பாவி” என்றார் அந்நிகழ்வுகளைத் துளியும் விரும்பாதவராய்.
புரியாது பார்த்த சத்யமூர்த்திக்கு,
“மகிழினியோட சொந்தக்கார பையன் தான் சார். எங்கயோ இருந்தவன் பாதியில ட்ரான்ஸ்பர் வாங்கி இங்க வந்து அந்த பொண்ணு நிம்மதியவே கெடுத்துட்டான்” எனவும்,
“தயவு செய்து கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க” என்றார் கலைச்செல்வி.
அவர்கள் அறியாத மகிழினியின் வாழ்க்கைப் பக்கங்களை சொல்லத் தயங்கிய மதிவாணன், பின் சத்தியமூர்த்தியின் குணத்தை மனதில் கொண்டு மெல்ல சொல்லத் துவங்கினார்.
சில வருடங்களுக்கு முன்பு…
பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த கையோடு,
“சார் ப்ளீஸ் சார்.. எனக்கு ஒரே ஒரு சான்ஸ் மட்டும் கொடுங்க சார்” என்று பரிதவிப்பாய் நின்றிருந்த அந்த பதின்வயது பெண்ணிடம்,
“உனக்கு சான்ஸ் கொடுக்க ஒரே ஒரு காரணம் மட்டும் சொல்லு மா” என்ற தாளாளருக்கு,
“சார்! கம்மியான மார்க்ஸ் எடுத்திருந்தாலும் படிப்பு  தடைபடக் கூடாதுன்னு பல லட்சங்களைக் கட்டி பாதுகாப்பா படிக்க வைக்க அப்பா அம்மா இருக்குறவங்களுக்கு எல்லாம் சான்ஸ் கிடைக்குறப்போ.. யாரும் இல்லாம என் தேவைகளை நானே பார்த்துட்டு படிப்ப வெச்சு மட்டுமே வாழ்க்கைல முன்னேறனும்னு நினைக்குற எனக்கு ஏன் கொடுக்கக் கூடாது?” என்றிருந்தாள் அவள்.
மெச்சுதலாய் பார்த்திருந்த தாளாளரிடம்,
“சார் நீங்க பீஸை பத்தி யோசிக்காதீங்க. நான் படிச்சு வேலைக்கு போனதும் என் கடனை நான் அடைச்சிடுவேன்” என்றாள் உறுதியாய்.
“உன் பேர் என்ன மா?”
“மகிழினி”
“உனக்கு சீட் கன்பார்ம். நம்ம ஹாஸ்டல்லயே தங்கி படிக்கலாம்” என்றவர் மதிவாணனிடம் திரும்பி,
“மதி! இந்த பொண்ணுக்கு வேண்டியதை ஏற்பாடு பண்ணிக் கொடுங்க. ஃபுல் ஸ்காலர்ஷிப் போட்டுக் கொடுங்க” என்றுவிட்டு,
“நீ நல்லாப் படிச்சு வாழ்க்கையில முன்னேறு. ஃபீஸ் எல்லாம் திருப்பித் தர வேண்டாம் அதுக்கு பதில் உன்னால முடிஞ்ச உதவியை உன்னைப் போல இருக்கறவங்களுக்கு செய்” என்றார் அந்தப் பெரிய மனிதர்.
அந்த சம்பவமும் அவள் பெயரும் மதிவாணனுக்கு மனதில் பதிந்து போனது.
அவள் தேர்ந்தெடுத்தது அவருடைய பிரிவான அக்கௌன்ட்ஸ் என்பதால் அடுத்தடுத்து வந்த நாட்களில் அவருக்கு நன்கு பரிச்சயமாகிப் போனாள் மகிழினி.
காலையில் வகுப்பறை.. மாலையில் லைப்ரரி.. இரவு ஹாஸ்டல் என்பது தான் மகிழினியின் ஒரு நாள் என்பது. ஒரு வட்டத்திற்குள் வந்து நின்றது அவள் வாழ்க்கை.
அந்த வட்டம் பாதுகாப்பான வட்டமாய் இருந்தது.
கல்லூரியின் தொடர் விடுமுறை காலங்கள் மட்டுமே அவளுக்கு கலக்கத்தைக் கொடுத்தது. தங்களது கூடுகளில் அவளுக்கும் அடைக்கலம் தரும் நேசப்பறவைகளின் நட்பால் அவற்றையும் கடந்து வந்திருந்தாள் மகிழினி.
இரண்டு வருடங்கள் எந்தவித இடையூறுமின்றி சுகமாய் சென்றிருந்த வேளையில்,
எதிர்பாராமல் வந்து நின்றான் அவன்.
அத்தனை நாள்கள் மகிழினியை எங்கெங்கோ தேடி அலைந்து, இறுதியில் அவள் இருப்பிடத்தை எப்படியோ தெரிந்து கொண்டவன் முதல் வேலையாய் செய்தது, தான் பயின்ற கல்லூரியில் இருந்து இடமாற்றம் செய்து இந்தக் கல்லூரியில் தன்னை சேர்த்துக் கொண்டது தான்.
இப்போது அவள் முன் வந்து நிற்க,
அவன் வரவு நல்வரவாய் இருக்கவில்லை.
“வி..னோத்..”
வார்த்தை வராதவளாய் அதிர்ந்து போய் நின்றிருந்தாள் மகிழினி.
“என்ன மகிழ் அவ்வளவு ஈஸியா என்கிட்ட இருந்து தப்பிச்சிடலாம்னு நெனச்சியோ” என்றவனின் பார்வை அவளை ஆராய்வதாய் இருந்தது.
நிகழ்பவை எதுவும் புரியாது பார்த்திருந்த மகிழினியின் தோழி வர்ஷினியோ,
“மகிழ்! க்ளாஸ்க்கு டைம் ஆச்சு. வா போலாம்” என்று சொல்லவும்,
“கிளாஸ்க்கு டைம் ஆனா நீ போ. அவளை ஏன் கூப்பிடுற? இனி அவ கிளாஸ்க்கு எல்லாம் வரமாட்டா. என்னை டைம்க்கு மீட் பண்ணனுமே” என மகிழினியைப் பார்த்து கண்சிமிட்ட,
அவளுக்கோ கண்கள் கலங்கலாயிற்று.
“ஹலோ யார் நீங்க? தேவையில்லாம பேசிட்டு இருக்கீங்க” எனக் கவிதா கேட்கவும்,
”ரொம்ப நாளைக்கு அப்பறம் சந்திச்ச லவ்வர்ஸ் நாங்க பேசிட்டு இருக்கோம், குறுக்க வரக்கூடாதுன்னு தெரியாதா உங்களுக்கு” என்றான் எரிச்சலாய்.
“என்ன மகிழ்!” என வர்ஷினி அவளைப் பார்க்க,
“நீங்க போங்க நான் வரேன்” என்ற மகிழினியின் மனம் துவண்டே போய்விட்டது.
அவளே கூறியபின் வேறு என்ன செய்வதென்று அவர்கள் அங்கிருந்து நகர்ந்ததும்,
“வினோத்! இப்போ என்ன வேணும் உனக்கு?” என்றாள் முடிவாய்.
“என்ன வேணும்னு உனக்கு தெரியாதா?”
“……….”
“நீதான் வேணும்”
“……….”
“கடைசியா பார்த்ததுக்கு இப்போ ஆளே ரொம்ப மாறிட்ட. ஹ்ம்ம்.. ஐ லைக் இட்” என்றவனது பார்வை நேர்மையானதாய் இருக்கவில்லை.
அதைச் சகிக்காதவலாய்,
“மாமா போனதுமே உங்களோட எந்த உறவும் இல்லைன்னு நான் தான் விலகிட்டேனே. அப்பறம் எதுக்கு நான் எங்க போனாலும் பின்னாடியே வந்து இப்படி தொல்லை கொடுக்கறீங்க?” என்றாள் வெறுப்பாய்.
“நீ நமக்குள்ள உறவில்லைன்னு சொன்னா இல்லாம போய்டுமா? அந்தாளு.. உன் மாமன்.. மேல போறதுக்குள்ள உன்னை எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சுட்டு போவான்னு பார்த்தா அதையும் பண்ணலை. சரி நீ எங்க போய்ட போறன்னு நெனச்சா இப்படி ஓடி வந்து என்னை சுத்தல்ல விட்டுட்ட” என்றவன்,
“எப்படி மகிழ் உன்னால என்னை விட்டுட்டு போக முடிஞ்சுது. நீ இல்லாம பைத்தியம் பிடிச்சிடுச்சு எனக்கு” என்றான் வருத்தம் கலந்த குரலில்.
அதற்குமேலும் அவனுக்குப் பேச வாய்ப்பளிக்காது,
“எனக்கு கிளாஸ்க்கு டைம் ஆச்சு” என்றுவிட்டு அவள் நகர,
“இப்போ போ. இனி என்னைவிட்டு எங்கயும் போக முடியாது. சாயந்தரம் இதே இடத்துல வெய்ட் பண்ணுறேன். வந்துரு..” என்றவன்,
“வரணும்” என்று தீவிரமாய் சொல்ல,
திரும்பிப் பார்க்காது நகர்ந்திருந்தாள்.
நரகத்தில் இருந்து தப்பித்தவளுக்கு நரகமே அவளைத் தேடி வந்தது போல் இருந்தது.
அன்று மதிய உணவிற்காக விடுதிக்குச் சென்றவள், அறை நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியே வராது அப்படியே அமர்ந்துவிட்டாள்.
விஸ்தரித்த வானத்தை கூண்டுக் கிளிபோல் யன்னலின் ஓரம் அமர்ந்தவாறு பார்த்திருந்தாள்.
மாலை அறைக்குத் திரும்பிய தோழிகளுக்கு அவள் அமர்ந்திருந்த நிலையே எதையோ உணர்த்த,
“மகிழ் என்னாச்சு?” என விசாரித்தாள் வர்ஷினி
“காலைல வந்தானே அவன் யாரு மகிழ்? அவனுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்? அவன் ஆளும் மூஞ்சியும் பார்த்தாலே கடுப்பாகுது” என்றாள் கவிதா.
அதற்குள் மற்ற இரு தோழிகளான ரேவதியும், அஸ்வினியும் அவர்களைத் தேடி அந்த அறைக்குள் வந்திருந்தனர்.
“அவன் என்ன உன்னை லவ்வர்னு எல்லாம் சொல்லிட்டு இருக்கான். அதை கேட்டுட்டு நீயும் அமைதியா இருக்க?” என வர்ஷினி தொடர,
“ஆமா மகிழ். அப்பவே கேட்கலாம்னு இருந்தோம் நீ டல்லா இருக்கவும் அப்பறம் பேசிக்கலாம்னு விட்டுட்டோம். சாப்பிடவும் நீ தனியா வந்துட்ட. திரும்ப வராம ரூம்லயே இருந்துட்ட. என்ன தான் பிரச்சனை?” எனக் கேட்டாள் கவிதா.
எந்தக் கேள்விக்கும் பதில் இல்லை அவளிடம்.
வர்ஷினி சென்று அவள் முகத்தைப் பற்றி அவர்கள் புறம் திருப்ப, மூக்கின் நுனி சிவந்து கண்களும் முகமும் வீங்கிப் போய் இருந்தாள் மகிழினி.
அதுவரை அமைதியாய் இருந்தவள் தன் தோழிகளைக் கண்டதும் வெடித்து அழுக,
“மகிழ் எதுவா இருந்தாலும் சொல்லு. நாங்க இருக்கோம். பார்த்துக்கலாம். உனக்குள்ளயே வெச்சு இப்படி கஷ்டப்படாத” என்று வர்ஷினி தேற்ற,
தன் கதையை அவர்களிடம் சொல்லத் துவங்கினாள் மகிழினி.
“அவன் பேரு வினோத்”
“அவன் வேற யாரும் இல்லை. என்னோட சொந்த தாய்மாமா பையன்”
“என்னைவிட ரெண்டு வருஷம் பெரியவன்”
ஒரு நெடிய பெருமூச்சை வெளியேற்றி,
“அவனால தான் நான் இன்னைக்கு யாருமில்லாம இப்படி தனியா நிக்குறேன்” என்றாள்.
அதுவரை அமைதியாய் வந்த அவளது வார்த்தைகள் இதைச் சொல்லும்போது பெரும் வேதனையோடும், தீரா வலியோடும், ஒருவித வெறுப்போடும் வெளிப்பட்டது.
ஆதரவாய் அவள் கரம் பற்றினாள் வர்ஷினி. அதில் மகிழினி மேலும் சொல்லத் துவங்கினாள்.
“அப்பா அம்மா போனப்பறம் நான் எங்க மாமா வீட்ல தான் வளர்ந்தேன். சின்ன வயசுல இருந்தே எங்க அத்தையோட எனக்கு பெருசா எந்தவொரு அட்டேச்மென்ட்டும் இருந்தது இல்லை. அவங்க வீட்ல தேவையில்லாம இருக்கற உயிருள்ள ஒரு பொருளா தான் என்னை பார்த்தாங்க” என்றவள்,
“ஆனா எங்க மாமா என்னை அவரோட உயிரா நினைச்சாரு” எனும் போது அவள் விழிகளில் இருந்து சில துளிகள் தரையில் சிந்தின.
“இந்த வினோத் சின்ன வயசுல எல்லாம் என்கிட்ட அன்பா தான் நடந்துக்கிட்டான். அத்தை ஏதாவது திட்டினாலும் எனக்காக அவங்களை எதிர்த்துப் பேசுவான். ஆனா நாள் போகப் போக அவன் நடவடிக்கை எதுவும் சரியா இல்லை. என்கிட்ட நடந்துக்குற விதமும் மாறுச்சு”
சில விசயங்களை அவர்களிடம் கூட பகிர முடியாதவளாய் தன்னிரு கண்களையும் அழுந்த துடைத்துக் கொண்டு,
“மாமாவுக்கு ஒருநாள் விசயம் தெரியவும் யோசிக்காம அவனை ஹாஸ்டல்ல சேர்த்துட்டாரு. கொஞ்ச நாள் நிம்மதியா இருந்தேன். அதுவும் கடவுளுக்கு பொறுக்கலை. மாமாவும் என்னைத் தனியா விட்டுட்டு போய்ட்டாரு” என்றாள் ஒரு பெருமூச்சோடு.
சில நொடிகள் அறையில் பலத்த மௌனமே நிலவியது.
“உங்க அத்தை இருக்காங்களா?” என மெல்ல வினவினாள் கவிதா.
“இருக்காங்க. வினோத் ஹாஸ்டல் போறதுக்கு நான்தான் காரணம்னு அவங்களுக்கு என்மேல முதல்லையே கோபம் இருந்துச்சு. மாமா போகவும் எனக்குன்னு பேச ஆள் இல்லாதது ரொம்ப வசதியாப் போச்சு அவங்களுக்கு” என்றாள் கசப்பாய்.
“அதுக்கப்பறம் உங்க அத்தை உன்னை அங்க இருக்க விட்டாங்களா மகிழ்?” – வர்ஷினி
“ஒரு கண்டிஷனோட ஒத்துக்கிட்டாங்க. அம்மாவோட நகைகள், எங்க பழைய வீடுன்னு மாமா அவரை கார்டியனா போட்டு எனக்குன்னு நிறைய பத்திரப்படுத்தி வெச்சிருந்தாரு. நான் மேஜர் ஆகாம அவர் போனதும் அதெல்லாம் விட்டுக் கொடுத்தா இங்கயே இருக்கலாம்னு சொன்னாங்க”
“நீ என்ன செஞ்ச?” – அஸ்வினி.
“வேற என்ன செய்யுறது. இதுதானே உங்க ஆசை நல்லா இருங்கன்னு எல்லார்த்தையும் கொடுத்துட்டேன்” என்றாள் மகிழினி வெறுமையாய்.
“ஏன் அப்படி செஞ்ச? அது ஒன்னும் அவங்களோடது இல்லையே உன் அம்மா உனக்காக விட்டுட்டு போனது” – ரேவதி.
“அந்த நேரத்துல எனக்கு போறதுக்கு பாதுகாப்பான இடம்னு வேற எதுவும் இல்லை. நானும் லெவன்த் படிச்சிட்டு இருந்தேன். அதையும் பாதியில விட முடியாம.. இருந்த ஒரு ஆதரவையும் இழந்துட்டு பைத்தியம் பிடிச்ச மாதிரி அங்க வாழ்ந்துட்டு இருந்தேன். அன்னைக்கு எதை பத்தியும் யோசிக்குற நிலைமைல நான் இல்லை” என்றவள்,
“அவங்க செஞ்ச ஒரே நல்ல விசயம் என்னை ஹாஸ்டல்ல சேர்த்ததுதான். இல்லைன்னா அந்த சைக்கோ வினோத் கிட்ட மாட்டிக்கிட்டு வேற முடிவை நோக்கி தான் நகர்ந்திக்கணும்” என்று முடித்தாள்.
“இப்படி எல்லாம் பேசாத மகிழ். அதுதான் ஒன்னும் ஆகலையே. விடு.. இனி அதைப் பத்தி பேச வேண்டாம்” என வர்ஷினி சொல்லவும்,
“ஆமா இனி பேச வேண்டாம். மணி இப்போவே ஏழு ஆகிடுச்சு. எனக்கும் பசிக்குது. அப்படியே கேண்டீன் போயிட்டு கிரௌண்ட்ல ரௌண்ட்ஸ் போலாம்” என்ற கவிதாவை அஸ்வினியும், ரேவதியும் ஆமோதிக்க..
“எழுந்திரு மகிழ். வா வா” என மகிழினியின் கையைப் பிடித்து இழுத்துச் சென்றாள் வர்ஷினி.
ஐவரும் உணவருந்திவிட்டு காற்றோடு பல கதைகள் பேசிக் கதைத்தபடியே நடைபயில, எதிர்பாராத விதமாய் வந்து சேர்ந்தது அச்செய்தி.
மூச்சிரைக்க ஓடிவந்த அவர்களது வகுப்புத் தோழி ஒருத்தி,
“மகிழினி! உன்னை எங்க எல்லாம் தேடுறது?” என மேலும் கீழுமாய் வேக மூச்சுக்கள் வாங்க,
“ஏன் என்னாச்சு? அவளை எதுக்கு தேடுன” என்ற வர்ஷினிக்கு,
“உனக்கு விசயம் தெரியாத வர்ஷு, யாரோ மகிழினியைப் பத்தி தப்பு தப்பா நம்ம டிபார்ட்மெண்ட் என்ட்ரன்ஸ் வால்ல எழுதி இருக்காங்க” என்றதில் உடல் உறைய அதிர்ந்துபோய் நின்றிருந்தாள் மகிழினி.
“அதுவும் நம்ம மதி சாரோட சேர்த்துவெச்சு” என்றதில் நெஞ்சம் அடைத்தது அவளுக்கு. மறுநொடியே கால்கள் வலுவிழக்க, அப்படியே கீழே உடைந்தமர்ந்தாள் மகிழினி.
இது யாருடைய வேலை என்று அவளுக்கு நன்கு தெரியும். அதன் காரணமும் தெரியும். இருந்தாலும் இந்த அளவிற்குச் செல்வான் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை அவள்.
மகிழினியைப் பார்த்த வர்ஷினி இதை இப்படியே விடக்கூடாது என்று முடிவு செய்தவளாய்,
“கவி! நீங்க இங்கயே இருந்து இவளை பத்திரமா  பார்த்துக்கோங்க. நாங்க இப்போ வந்திடுறோம்” என்றவள்,
“என்கூட வா ரேவதி” என மற்றவளை தன்னுடன் அழைத்துக் கொண்டு வேகமாய் வார்டனின் அறைக்குச் சென்றாள்.
அவரிடம் விசயத்தை விளக்கி.. மதிவாணனுக்கு அழைத்து ஒன்றுவிடாமல் மகிழினி பற்றி அனைத்தையும் தெரிவித்திருந்தாள்.
மறுமுனையில் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றிருந்தார் மதிவாணன்.
அன்று காலை மகிழினியோடு வினோத் பேசுவதை மதிவாணனும் கவனித்திருந்தார். எப்பொழுதும் சரியாக வகுப்பிற்குச் செல்லும் மகிழினி இன்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தது அவருக்குமே வித்தியாசமாய்ப்பட்டது.
வினோத்தின் உடல்மொழியும் கூட சரியில்லாது இருக்க.. மகிழினி அவ்விடம் விட்டு நகர்ந்ததும் அவனை அழைத்து கண்டித்திருந்தார் மதிவாணன்.
அவர் நினைத்ததைப் போல மாலை வேளையிலும் அவன் அவ்விடம் நின்று மகிழினிக்காய் காத்திருக்க,
“இங்க என்ன பண்ணுற? காலைல தானே அவ்வளவு தூரம் எடுத்துச் சொன்னேன். இனி நீ இந்த காலேஜ்லயே படிக்க முடியாதபடி செஞ்சிருவேன் பார்த்துக்கோ. ஒழுங்கா கிளம்பு முதல்ல” என இம்முறை வலுவாக கண்டிக்க,
அவனுக்கு அவர் மீதும் துவேஷம் வந்திருந்தது. அவரை மீறி மகிழினியை கைப்பற்ற முடியாதவனாய்,
“நீ என்ன என்னை படிக்க முடியாதபடி செய்யுறது.. நான் உன்னை பாடம் நடத்த முடியாதபடி செய்யுறேன்” என இப்படியொரு காரியத்தை செய்யத் துணிந்திருந்தான்.
இதன்பின் கூண்டில் அடைபட்ட கிளியாய் மகிழினி யார் முகத்திலும் விழிக்க திராணியற்றவளாய் தான் இழுத்த இழுப்பிற்கு வந்துவிடுவாள் என்று வினோத் நினைத்திருக்க.. அதன்பின் நடந்தவைகளே வேறு.
இன்று நினைத்துப் பார்த்தாலும் அன்றைய நாளின் தாக்கம் சிறிதும் குறையாது இருந்தது மதிவாணனுக்கு.
இதை மதிவாணன் சத்யமூர்த்தியிடம் சொல்லி முடிக்கவும்,
“என்ன சொல்லுறீங்க மதிவாணன்? இப்படி எல்லாம் நடந்ததா?” என அவர் அதிர்ந்துபோக,
“அப்பறம் என்னாச்சுங்க” எனப் பதறினார் கலைச்செல்வி.
“மேனேஜ்மென்ட்ல அவனை டிஸ்மிஸ் செஞ்சுட்டாங்க மா. இத்தனை வருஷம் நேர்மையாவும் நாணயமாவும் வேலை செஞ்சிருக்கேன். யாரோ கண்டதையும் கிறுக்குனா எல்லாரும் அதை நம்பிடுவாங்களா என்ன” என்றவர் ஒரு பெருமூச்சை வெளியேற்றி,
“ஆனா மகிழினி தான் ரொம்பப் பாவம். அவளை யாராலையும் தேற்றவே முடியலை. யாரோடையும் எதுவும் பேசாம ரொம்ப முடங்கிப் போயிட்டா அந்தப் பொண்ணு. கடைசியா பட்டமளிப்பு விழாவுல பார்த்தது. அப்போதான் சொன்னேன், ‘எங்க இருந்தாலும் நீ நல்லா இருப்பமான்னு’ ஒரு புன்னகையோட என் காலை தொட்டு வணங்குனா” என்றவர் கண்கள் கலங்கிப்போனது.
“அன்னைக்கு கிளம்பிப் போனவதான். எங்க இருக்கா எப்படி இருக்கான்னே யாருக்கும் தெரியலை. எங்க இருந்தாலும் நல்லா இருக்கனும்னு நெனச்சுக்கிட்டேன்” என்றவர் கண்களை துடைத்துக்கொண்டு,
“ஆனா இன்னைக்கு எனக்கு மனசு நெறஞ்சிருக்கு சார். மகிழினியை நல்ல இடத்துல தான் கடவுள் சேர்த்திருக்காரு” என்றார் மனதார.
சத்யமூர்த்திக்கு மனதே பாரமாய் இருந்தது.
“சார்! நாம பேசிக்கிட்ட இந்த விசயம் மகிழினிக்கு எக்காரணத்தைக் கொண்டும் தெரிய வேண்டாம். போனது போகட்டும். இனியாவது அவ நிம்மதியா இருக்கட்டும்” என்றார் மதிவாணன்.
“அவ இல்லாதப்போ நீங்க இங்க வந்ததும் நல்லதுக்கு தான். இல்லைன்னா எங்க மருமகளைப் பற்றி எங்களுக்கு தெரிய வந்திருக்காது” என்ற சத்யமூர்த்தி,
“அவ எங்க வீட்டுப் பொண்ணு. நாங்க பத்திரமா பார்த்துக்குறோம். நீங்க கவலைப்படாதீங்க” என்று நம்பிக்கை அளிக்கும் விதமாய் அவர் கைகளைப் பிடித்துக்கொண்டார்.