நல்வரவு!
வண்ண வண்ண விளக்குகளால் கண் சிமிட்டிக் கொண்டிருந்தது அந்தப் பலகை.
வரவேற்புத் தோரணங்கள் அந்த பரந்த வாயிலின் இருபுறத்தையும் நன்கு அலங்கரித்திருந்தன.
பார்வையைச் சற்று உள்ளே செலுத்தினால் அங்கு நடுநாயகமாய் வினைகள் போக்க வல்லவரான விநாயகப் பெருமான் வீற்றிருந்தார்.
அவர் அருளால் பல தடைகளைத் தாண்டி கெளதம், மகிழினியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இனிதே நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அவ்விடம் நிற்கத் துளியும் விருப்பம் இல்லாவிட்டாலும் வலிய வரவழைத்த புன்னகையோடு அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தார் கலைச்செல்வி.
அவருக்குப் பக்கபலமாய் நின்றிருந்தார் சத்யமூர்த்தி.
அவருக்குத் தெரியும் கலைச்செல்வியின் மனநிலை எப்படி இருக்குமென்று. சில நிமிடங்களேனும் தனியே விட்டுச் சென்றால், யாராவது எதையாவது பேசி அவரை கலங்கச் செய்துவிடக் கூடும் என்பதால் அருகிலேயே நின்றிருந்தார்.
யார் என்ன கேட்டாலும் தானே அதற்குத் தகுந்த பதிலை வழங்கி சிக்கலின்றி அவர்களது இல்ல நிகழ்வை நடத்திக் கொண்டிருந்தார்.
அப்படி இருந்தும்,
“அக்கா! கொஞ்சம் இப்படி வாங்க” என்று கலைச்செல்வியின் ஒன்றுவிட்ட தங்கை ஒருவர் அவரது கையைப் பற்றி சற்று தள்ளி அழைத்து வந்திருக்க,
அங்கு ஒரு கூட்டமே அவர்களுக்காக காத்திருந்தது.
“என்ன அக்கா உங்க முகத்துல சிரிப்பையே காணோம்?” என பிள்ளையார் சுழியிட்டு,
“பொண்ணுக்கு அம்மா அப்பா சொந்த பந்தம்னு யாரும் இல்லையாமே? நீங்க எப்படி க்கா ஒத்துக்கிட்டிங்க? நம்ம குடும்பத்துக்குன்னு ஒரு வழக்கம் இருக்கில்ல” என்று துவங்கி,
“அண்ணி வேண்டாம்னு தான் சொல்லியிருப்பாங்க. கெளதம் தான் வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணிட்டு வந்திருப்பான். இல்லண்ணி?” என ஒருவர் கேட்டுவைத்து,
“இந்தக் காலத்து பசங்களை நம்பவே முடியாது. அண்ணனும் அண்ணியும் எப்படி எல்லாம் வளத்துனாங்க. அவங்களை இப்படி நிற்க வெச்சுட்டானே இந்தப் பையன். பாவம்” என பரிதாபப்பட்டு,
“என் பையனா இருந்திருந்தா இந்நேரம் வீட்டுலையே சேர்த்திருக்க மாட்டேன்” என மற்றொருவர் சொல்லவும் கலைச்செல்வியின் முகம் முற்றிலும் மாற்றம் கண்டிருந்தது.
நான்கு பேர் நான்கு விதமாய் பேசி முடித்திருக்க,
“என்ன மா இங்கயே நின்னுட்டீங்க. நீங்க சாப்டிங்களா இல்லையா? முதல்ல போய் சாப்பிடுங்க” என்று அவ்விடம் வந்தார் சத்யமூர்த்தி.
“இல்ல மாமா! அக்கா முகமே வாடியிருக்கு. நீங்க என்னென்ன கனவெல்லாம் கண்டிருப்பீங்க இப்போ சிம்பிளா இப்படி ரிசெப்ஷன் வைக்குற மாதிரி ஆகிடுச்சு. அதைதான் பேசிட்டு இருந்தோம்” என,
“ஆமா அண்ணா. கெளதம்க்கு எங்க சொந்தத்துல கூட ஒரு பொண்ணு பார்த்து வெச்சிருந்தேன். பெரிய இடம் நல்ல சொத்துபத்து. இவன் என்னடானா இந்த மாதிரி ஒரு பொண்ண கூட்டிட்டு வந்திருக்கான். நீங்க ஒத்துக்கிட்டு இருந்திருக்கக் கூடாது அண்ணா” என வருத்தம் தெரிவித்தார் அவருக்கு சகோதரி ஆகப்பட்டவர்.
முதலில் அவர்களைப் பேசவிட்டு பொறுமையாய் கேட்டவர் பின்னர் தெளிவான குரலில்,
“அதுனால என்ன சந்திரா.. நாங்களா பார்த்திருந்தாக் கூட இப்படி ஒரு பொண்ணை தேடிப் பிடிச்சிருக்க முடியாது. மகாலெட்சுமி மாதிரி ஒரு மருமக வந்திருக்கா” என்றவர்,
“பசங்க சந்தோசத்தை விட வேறென்ன இருக்கு? ஏதோ தப்பு பண்ணிட்டாங்க அதுக்காக வாழற பசங்களை வெளிய அனுப்பிட்டு நம்ம என்னத்த கொண்டுபோகப் போறோம்” என்றவாறே கலைச்செல்வியைப் பார்த்து,
“இல்லையா கலை?” என்றார் அவருக்கும் படும்படி.
அதில், பல பாடங்கள் அடங்கியிருந்தது. வீட்டில் நடப்பது வீட்டோடு இருக்க வேண்டும் என்பது பிரதான பாடமாய் அமைந்தது.
அதோடு நிறுத்தவில்லை அவர்.
“சந்திரா! உன் பையன் கவினுக்கு நீங்க எல்லாரும் தான் நல்ல இடமாப் பார்த்து கல்யாணம் பண்ணி வெச்சீங்க. ஆனா ரெண்டே மாசத்துல அவங்களுக்குள்ள ஒத்துவராம இன்னைக்கு விவாகரத்து வரைக்கும் வந்திருச்சு பாரு. உனக்கும் உன் பையன் வாழ்க்கையை நெனச்சு எவ்வளவு மனவருத்தம் இருக்கும்” என அவர் வீட்டு நிலைமையை அவருக்கே உதாரணம் காட்டியவர்,
“நாம பார்த்து பண்ணி வைக்குற கல்யாணமே சில நேரங்கள்ல தவறாப் போய்டுது. ஊருக்காகப் பார்த்து நம்ம பிள்ளைக வாழ்க்கை ஒண்ணுமில்லாம போய்டக் கூடாதில்ல. அவங்க ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக்கொடுத்து மனமொத்து மகிழ்ச்சியா வாழுறது தானே நமக்கு வேணும்” என்று முடித்தார்.
“சூப்பரா சொன்னிங்க மாமா” என்று வந்த விஜய்,
‘எங்க மாமா ஊருக்கே பாடம் எடுப்பாரு. அவருக்கு நீங்க பாடம் எடுக்க வந்தா சும்மா விட்டிடுவாரா’ என சத்யமூர்த்தியை பெருமிதமாய் பார்த்தான்.
சூழ்ந்திருந்த உறவுகள் மத்தியில் சந்திராவால் மேற்கொண்டு பேசமுடியாது போக,
“நீங்க சொன்னா சரிதான் அண்ணா. அப்போ நாங்க கிளம்புறோம். ஒருநாள் குடும்பத்தோட நம்ம வீட்டுக்கு வாங்க” எனப் புன்னகைத்து இடத்தை காலி செய்தார்.
தன் கண்களையே நம்ப முடியாது பார்த்திருந்தான் கெளதம்.
அவன் அப்பாவுக்கு இப்படி ஒரு முகம் இருக்கும் என்று அவன் கனவிலும் நினைத்திருக்கவில்லை.
“என்னடா அப்பாவை சைட் அடிக்குற?” என்ற கீர்த்தனாவிடம்,
“ப்ச்! நம்ம எம்டனா இப்படி பேசுறது?” என பார்வையை விலக்காது கேட்க,
“கொழுப்பு தான்டா உனக்கு. அப்பா ஸ்ட்ரிக்டா இருந்தாலும் ரொம்ப நல்லவர். உனக்கு தான் அவரைக் கண்டாலே ஆகாதே. அதுதான் நீ அவரை சரியா புரிஞ்சுக்கல. ஆனா அம்மா அப்படி இல்லை” என்றவள்,
“அங்க கொஞ்சம் பாரேன்” என்று அவனுக்குக் காண்பித்து,
“இவ்வளவு நாள் சாந்த ஸ்வரூபியா இருந்தவங்க திடீர்னு சாமுண்டி தேவியா அவதாரம் எடுத்துட்டாங்க. மாமியாரா போஸ்டிங் வாங்குனாவே அப்படித்தான் போல” எனப் பேசிக்கொண்டிருக்க,
“அம்மாவை கிண்டல் பண்ணாத” என்றான்.
“ஓஹோ! நீங்க இன்னைக்கு அடிச்சுக்குவீங்க நாளைக்கு சேர்ந்துக்குவீங்கன்னு தெரியும் தம்பி. நாளைக்கே, ‘அன்னை ஓர் அலையம்’னு நீ பாட.. பதிலுக்கு மம்மி, ‘பேர் சொல்லும் பிள்ளை நீதானே’ன்னு பாடுவாங்க. எனக்கு என்னைக்கும் எங்கப்பா தான் நிரந்தரம்” என்று கீர்த்தனா சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
“கீர்த்தி இங்க வா மா” என்று அவளை அழைத்த சத்யமூர்த்தி,
“வைஷுவை நான் பார்த்துக்குறேன் நீ மாப்பிள்ளையை அழைச்சிட்டுப் போய் சாப்டுட்டு வா. ரொம்ப டயர்டா இருக்க பாரு” என்றார் அக்கறையாய்.
‘எப்புடி’ என தம்பியிடம் கண்காட்டிவிட்டுச் செல்ல,
‘இவருக்கு எப்போதும் அவரு பொண்ணு தான்’ எனப் பொறாமையாய் பார்த்திருந்தான் கெளதம்.
அனைத்தையும் வேடிக்கை பார்த்தவாறு ரசித்துக் கொண்டிருந்தாள் மகிழினி.
சத்யமூர்த்தி அவரது வாயால் அவளை ‘மருமகள்’ என்று சொல்லியதே மகிழினியின் மனதை நிறைத்து விட்டிருந்தது.
கலைச்செல்வி இம்முறை எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தது மாற்றத்திற்கான முதல் படியை அவர் எடுத்து வைக்கத் துவங்கிவிட்டதை உணர்த்தியது.
பெரிய பிரச்சனைகள் எதுவுமின்றி சிறு சலசலப்புகளை அனைவரும் இணைந்து கையாளவும் அவர்களது இல்ல நிகழ்வு இனிதே நிறைவுக்கு வந்தது.
“க்ரூப் போட்டோ” என புகைப்படக் கலைஞர் சொல்லவும்,
“அம்மா.. வாங்க” என ஒரு ஓரமாய் அமர்ந்திருந்த கலைச்செல்வியை மேடைக்கு அழைத்தாள் கீர்த்தனா.
“நான் எதுக்கு?  நான் வரலை” என்றார் அவர்.
“அத்தை வாங்க. நீங்க தானே கௌதமுக்கு அம்மா. இந்த வயசுல இனி அவனை வேற யாருக்கு தத்து கொடுக்க முடியும்” என்ற விஜய்யை கீர்த்தனா முறைக்கவும்,
“கெளதம் கூப்பிடணும்னு நினைக்குறாங்க போல கீர்த்து” என்றான் முணுமுணுப்பாய்.
இருவரும் கௌதமைப் பார்க்க.. அவன் அம்மாவை அறிந்தவனாய்,
“அம்மா.. வாங்க..” என்றான்.
சலனமற்ற பார்வையோடு மறுப்பேதும் தெரிவிக்காது சில நொடிகளிலேயே மேலே வந்தார்.
‘இவனுக்கு எப்போதும் அவன் அம்மா தான்’ என சத்யமூர்த்தி நிச்சயம் நினைத்திருக்கக் கூடும். பிரத்யேக அழைப்பு அவசியமின்றி அவரே மேடைக்குச் சென்றார்.
இருக்கையில் கலைச்செல்வியையும் சத்யமூர்த்தியையும் அமரச்செய்து அவர்களுக்குப் பின்னால் கௌதமும் மகிழினியும் நின்றிருக்க,
மெல்ல தன் கையை தன் தந்தையின் தோள்மீது வைக்கச்சென்ற கெளதம் சிறு இடைவெளிகளில் தயக்கம் காட்ட,
அதை அறிந்த சத்யமூர்த்தி அவர் கரத்தைக் கொண்டு தயங்கி நிற்கும் அவன் கரத்திற்கு சிறு அழுத்தம் கொடுத்து அவர்மீது பதியவைக்க,
அதில் ஒருநொடி இன்பமாய் அதிர்ந்த கெளதம், பின் இயல்பாய் நின்றுகொண்டான்.
அவன் அப்பாவின் அதரங்களில் அவரையையும் மீறி சிறு புன்னகை தானாய் உதித்தது.
அந்த அழகிய தருணத்தை தவறவிடாமல் சரியாய் புகைப்படம் பிடித்துக்கொண்டார் புகைப்படக் கலைஞர்.
பின் வைஷ்ணவியை அவர்களது மடியில் இருத்தி சில புகைப்படங்கள், கீர்த்தனா விஜய்யோடு சிலது என எடுத்துக் கொண்டிருந்தனர்.
இறுதியாய் கபில்ஸ் ஷூட் நேரம் வந்ததும் விதவிதமான போஸ்களில் பிளாஷ்கள் அடித்துத் தள்ள, கௌதமும் மகிழினியும் ‘போதும் ஆள விடுங்க’ என்று சொல்லும் அளவிற்கு எடுத்துத் தள்ளிவிட்டனர்.
அன்றைய நாள் அனைவருக்கும் அயர்ச்சியைக் கொடுத்திருந்தாலும் அனைவரது மனதையும் ஒருவித நிம்மதியால் நிறைத்திருந்தது.
அவர்களது நாழிகைகளும்.. நாட்களும் அப்படியே அமைதியாய்.. அழகாய்.. நகர்ந்திருந்தன.
புதுவிடியல்!
அந்த நாளின் விடியல் இளங்கதிர்களோடு சேர்த்து புதுப்பொலிவையும்.. புத்துணர்ச்சியையும் கொண்டுவந்திருந்தது.
கீர்த்தனாவும், விஜய்யும் பெங்களூருக்குக் கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். கௌதமையும், மகிழினியையும் தங்களோடே தங்கள் இல்லத்திற்கு விருந்திற்காக அழைத்துச் செல்லத் திட்டமிட்டிருந்தனர்.
“மாப்பிள்ளையும் நீயும் இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போலாமல்ல கீர்த்தி” என்றார் கலைச்செல்வி.
“நாங்க வந்தே ஒன் வீக் மேல ஆகிடுச்சு ம்மா. ரெண்டு நாள்ல எனக்கு முக்கியமான மீட்டிங் ஒன்னு இருக்கு. ஆபிஸ்க்கு போயே ஆகணும். அவருக்கும் நிறைய லீவ் ஆகிடுச்சு” என்ற கீர்த்தனா,
“அவரோட அக்காவும் இன்னிக்கு ஊருக்கு கிளம்புறாங்க. அத்தை வேற அங்க தனியா இருப்பாங்க. அங்க போய் தான் வைஷுவை இனி ப்ளே ஸ்கூல்ல சேர்க்கணும். நிறைய வேலை இருக்கு” என்றவாறே ஒரு சூட்கேசை எடுத்து வைத்து நிரப்பிக் கொண்டிருக்க,
“எனக்கு இனி வைஷு நியாபகமாவே இருக்கும். இந்த தடவை நான் அவளை சரியாய் கவனிக்கவே இல்லை” என்றார் கவலையாய்.
அவர் சொல்வதும் சரிதான். ஒவ்வொரு முறையும் பேத்தி வருகிறாள் என்றால் அவர் கால்கள் தரையில் படியாது. கடலை உருண்டை, எள்ளு உருண்டை என சத்தான பலகாரங்கள் செய்வதில் இருந்து அவளைக் குளிக்க வைத்து.. சாப்பாடு ஊட்டி.. தூங்கவைப்பது முதல் அவர் தான் ஆசையாய் பார்த்துப் பார்த்து செய்வார்.
இருவரும் கோவிலுக்குச் செல்வது, அருகிலிருக்கும் பூங்காவில் விளையாடுவது, ஷாப்பிங் செல்வது என இனிமையாய் பொழுதுகள் கழியும்.
ஆனால் இம்முறை அவர் மனம் எதைப் பற்றியும் சிந்திக்கும் வாய்ப்பை வழங்கவில்லை கலைச்செல்விக்கு. அதைத் தாமதமாக உணர்ந்தவர் உள்ளத்தில் கவலை ரேகைகள்.
கீர்த்தனா பேசுவதற்குள்,
“அம்மாச்சி! தூக்குங்க” என அவர் வருத்தத்தைப் போக்க ஓடி வந்தாள் வைஷ்ணவி.
அவளை அள்ளி எடுத்து அவள் இரு கன்னங்களிலும் முத்தமிட்டவர்,
“வைஷு குட்டி ஊருக்கு போறீங்களா?” என,
“ஹ்ம்ம்” என்றாள் வேகமாய் தலையசைத்து.
“அங்க போய் சமத்தா இருக்கனும் அம்மாவுக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது. அம்மாச்சி இந்த தடவ உனக்கு பொம்மை புது ட்ரெஸ் எதுவுமே வாங்கித்தரலை. சாரி டா கண்ணு. அடுத்த டைம் வரும்போது எல்லாம் வாங்கி வெச்சிருக்கேன் சரியா” என,
“பரவால்ல அம்மாச்சி. நான் அத்தை கிட்ட கேட்டேன் ஏன் அம்மாச்சி என் கூட விளையாடலைன்னு. அவங்க உங்களுக்கு உடம்பு சரியில்லை.. சரியானதும் விளையாடுவாங்கன்னு சொன்னாங்க. எனக்கு அத்தையே நிறைய ட்ரெஸ் டாய்ஸ் எல்லாம் வாங்கி கொடுத்தாங்க” என்றாள் மழலை மொழி மாறாது.
கலைச்செல்வி அமைதியாகி விட,
“வைஷு நீ அப்பா ரெடியான்னு பாரு” என்று மகளை அனுப்பிய கீர்த்தனா,
“அம்மா! கௌதமையும் மகிழினியையும் எங்களோட அழைச்சிட்டு போறோம். விருந்து முடிச்சிட்டு வரட்டும். இப்போ விட்டா அடுத்து அவங்களுக்கும் ஆபிஸ் வேலை இருக்கும் வரமுடியாம போய்டும்” என,
வெறும் தலையசைப்பை மட்டும் அவளுக்குக் கொடுத்தார்.
“கிளம்பலாமா கீர்த்து” என விஜய் வரவும்,
“கெளதம் ரெடியா?” என கேட்கும்போதே
“ரெடி. நாங்களும் வந்துட்டோம்” என்று கௌதமும் மகிழும் தயாராகி நின்றிருந்தனர்.
நேரம் தாமதிக்காமல் அவர்களது லக்கேஜ்களை காரில் அடுக்கிவிட்டு சத்யமூர்த்தி மற்றும் கலைச்செல்வியிடம் விடைபெற வர,
“போயிட்டு வரோம் மாமா. போயிட்டு வரோம் அத்தை” என்றாள் மகிழினி.
“பார்த்து போயிட்டு வாங்க” என்றார் சத்யமூர்த்தி.
கடந்த சில தினங்களாய் இருவரும் இயல்பான உரையாடல்களுக்கு வந்திருந்தனர்.
கலைச்செல்வியிடம் எப்போதும் போல் இம்முறையும் பதில் வராது என்று எதிர்பார்க்க.. அவரோ இம்முறை சிறு தலையசைப்பைத் தந்து அவளை ஆச்சர்யப்படுத்தி இருந்தார்.
மகிழினியின் அகமும் முகமும் நிறைந்திருக்க.. அவர்கள் விடைபெற்றுக் கிளம்பினர்.
அவர்களது கார் மறையும் வரை இமைக்காது பார்த்திருந்துவிட்டுத் திரும்பிய சத்யமூர்த்திக்கும், கலைச்செல்விக்கும் வீடே வெறுச்சோடிக் காணப்பட்டது.