இரண்டு மாதங்கள் முழுதாய் முடிவடைந்திருந்தன.
அன்று மகிழினியின் பிறந்தநாளும் கூட.
“உன் பர்த்டேக்கு அங்க இருப்பேன்” என கெளதம் சொல்லியது அவள் நினைவிலாடியது.
தன் பிறந்தநாளிற்கு எப்படியும் வீடு வந்துவிடுவான் என்ற உறுதியோடு அவள் இருந்தாள். ஆனால் அவன் வர மேலும் ஒருவாரம் ஆகும் என்ற செய்தி கிடைக்க, மகிழினிக்கு மனதே இல்லை.
கண்மூடி கை கூப்பி கதிர்வேலனை வணங்கியவள் மனமோ,
‘கௌதமை பார்க்கணும் போல இருக்கு முருகா. அவர் வந்தா நல்லா இருக்கும். நீ கொஞ்சம் மனசு வெச்சு வர வையேன்’ என சிபாரிசு வைக்க,
‘மாமியாருக்கும் மருமகளுக்கும் இதே வேலையாய்ப் போச்சு. ஆ ஊ ன்னா என்கிட்ட வந்து நின்னுற வேண்டியது. சரி நீ வேற பொறந்தநாள் அன்னிக்கு கேட்டுட்ட பாவம். ஏற்பாடு பண்ணுறேன்’ என அவன் நினைத்தான் போலும் சரியாக அவளது கைபேசி சிணுங்கியது.
திரையில் மிஸ்டர். மகிழ்!
உற்சாகமாய் “கெளதம்” என்றவள் அவனைப் பேச விடாமல்,
“எங்க இருக்கீங்க?” என்றாள் ஆவலாய்.
“இரு காட்டுறேன்” என்றவன் புர்ஜ் கலிஃபாவோடு செல்ஃபி அனுப்ப, ஆர்வமாய் கைபேசியைப் பார்த்தவள் முகம் இப்போது அனிச்சமாய் வாடியது.
“ஹேப்பி பர்த்டே மகிழ் குட்டி” என்று அவன் சொன்னதெல்லாம் அவள் செவிகளுக்கு எட்டவில்லை.
“மகிழ்ழ்…..” என்றதில்,
“ஹான்.. ஓகே ஓகே” என்றாள் ஈனஸ்வரத்தில்.
“ஓகே ஓகே வா?” என்றவன் பின்னணியில் ஏதோ சலசலப்புகள் தொடர்ந்து கொண்டிருந்ததை அடுத்து,
“சரி நீ ஏதோ நெனப்பா இருக்க. நான் அப்பறம் கூப்பிடுறேன்” என்று விரைந்து அழைப்பைத் துண்டித்துக் கொண்டான்.
அவள் அதையெல்லாம் கவனித்தாளில்லை. அவன் வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டாள்.
“ஏதோ நெனப்பா? எல்லாம் அவன் நெனப்பு தான்னு புரியுதா பாரேன். அதுக்குள்ள அவசரம் போனை வெச்சாச்சு” என்று திட்டிக்கொண்டே வந்தவள் கலைச்செல்வியின் மீது மோதிவிட,
அவரோ தன் கையிலிருந்த பாத்திரத்தை நழுவாது பிடித்துவிட்டு,
“நீ என்ன சண்டைக்கு வர்ற மாதிரி வர்ற” என்றார் விசாரணையாக..
“ஐயோ! இல்லை அத்தை. டைம் ஆய்டுச்சுன்னு வேகமா வந்தேனா அதான்” என்றாள் அவசரமாய்.
“சரி வா. இங்க உட்காரு” என்றவர் அவளுக்கு ஒரு கப்பில் பால் பாயசம் எடுத்து வந்து கொடுக்க,
“என்ன ஸ்பெசல் அத்தை?” என்றாள்.
“இன்னைக்கு உனக்கு பிறந்தநாளாமே.. கெளதம் சொன்னான். அதான் பாயசம் செஞ்சேன். நல்லா இருக்கா?” என்றதில் அவள் கண்கள் கலங்கலாயிற்று.
மகிழினிக்கு பால் பாயசம் பிடிக்குமென அவள் அன்னை பத்மினி செய்து கொடுப்பது நினைவில் வந்தது. அவருக்குப் பின் அவளுக்காக ஒருவர் அவளுக்குப் பிடித்ததை செய்திருக்கிறார் என்றால் அது கலைச்செல்வி தான்.
“என்னாச்சு.. நல்லா இல்லையா?” என்றார் அவள் சோர்ந்த முகத்தை பார்த்து,
“நல்லா இருக்கு. இன்னும் கொஞ்சம் வைங்க” என்றாள் மனம் நிறைந்த புன்னகையோடு.
அதோடில்லாமல் காலை டிபன் மெனுவும் கூட அவளுக்குப் பிடித்தவைகளாகவே அவர் செய்திருந்தார். பார்த்துப் பார்த்து பரிமாறி அவள் வயிற்றை நிரப்ப,
“அத்தை, போதும். எந்திரிக்கவே முடியலை” என எழுந்து சென்று கை கழுவி வரவும்,
“என்னமா, கெளதம் எப்போ வர்றானாமா?” என்றார் சத்யமூர்த்தி மகனை அறிந்தவராய்.
“ப்ச்.. வரலையாம் மாமா” என்றாள் சிறுபிள்ளை போல்.
‘வராம இருக்க மாட்டானே’ என்ற சந்தேகத்தோடு கலைச்செல்வி தன் பணிகளைத் தொடர,
மகிழினியும் சத்யமூர்த்தி, கலைச்செல்வி இருவரையும் அழைத்து அவர்களது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு தன் அலுவலகத்திற்குக் கிளம்பினாள்.
சில நிமிடங்களில் அலுவலகம் வந்திருக்க அவள் இறங்கி உள்ளே செல்ல,
“மகிழினி” என்ற கீதாவின் சத்தமான குரலில், திரும்பினாள்.
அவளது அழைப்பில் சாலையைக் கடக்கவிருந்த ஹெல்மெட் அணிந்த அவனும் அவர்களை ஒரு முறை நோக்கினான்.
“என்ன இன்னைக்கும் கெளதம் ப்ரோ வரலையா? நேத்து அவ்வளவு ஆசையா சொன்ன. சொதப்பிட்டாரா” என்று கேட்டவாறே வந்தாள் அவளோடு வேலை பார்க்கும் கீதா.
“மெதுவா பேசு கீதா. பர்ஸ்ட் உள்ள போலாம் வா” என சிறு கண்டிப்போடு அவளை உள்ளே இழுத்துச் சென்ற மகிழினி, அங்கிருந்தவனை கவனிக்கவில்லை.
தன் ஹெல்மெட்டை விளக்கிய வினோத், உள்ளே சென்றவளையே பார்வையால் வெறித்தான்.
அன்று அவளது பிஜியில் வைத்து அவளை எச்சரித்த நாள் அவன் நினைவில் வந்து நின்றது.
அன்றைய மாலைப் பொழுதிலேயே அவளைச் சந்திக்கச் சென்றவனுக்கு, அவள் அந்த இடத்தை காலி செய்துவிட்டாள் என்ற தகவல் பேரதிர்ச்சியைக் கொடுத்தது.
அருகிலிருந்தோர் ஒருவர் விடாது விசாரிக்க,
‘எங்களுக்குத் தெரியாது.
போறியா இல்லை போலிசைக் கூப்பிடவா?
நீயாரு இதெல்லாம் கேட்க?
தெரிஞ்சாலும் சொல்லமாட்டேன். ஆனதை பார்த்துக்கோ’
இப்படியான பதில்களே அவனுக்குக் கிட்டியது.
அன்றிலிருந்து ஒரு இடம் விடாது அலசிக் கொண்டிருந்தான்.
அப்படியொரு நாள் சிக்னலில் கௌதமோடு மகிழினியை ஒன்றாய்ப் பார்த்ததில் இருந்து தினமும் இதே வழியாக சுற்றித் திரிந்தும், அவர்களைப் பற்றி எந்த தகவலும் கிடைக்காது போனது வினோத்திற்கு.
நீண்ட தேடுதலுக்குப் பின் இன்று தான் அவன் மீண்டும் மகிழினியைச் சந்தித்திருக்கிறான்.
“போடி போ.. எத்தனை நாளைக்கு இப்படி ஆட்டம் காட்டுவைன்னு பார்க்குறேன். இதுக்கெல்லாம் சேர்த்து வெச்சு இன்னைக்கு அனுபவிப்ப” என்றவன், ஒரு முடிவோடு அவளுக்காகக் காத்திருந்தான்.
நாழிகைகள் நகர்ந்திருக்க, அலுவலக நேரமும் முடிவை எட்டியிருந்தது.
வழக்கமாய் வரும் கருப்பு நிற கார் மகிழினிக்காய் காத்திருக்க, இயல்பாய் அதில் ஏறச் சென்றவளின் பார்வை டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்தவன் மேல் பதிந்தது.
தலையில் ஒரு கேப்போடு தன் முகத்திற்கும் மாஸ்க் அணிந்திருந்தான் அவன். எப்போதும் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெருமாள் தான் வருவார். இன்று இருப்பவன் புதிதாய் இருக்கவும், அவள் யாரென யோசித்தபடி நின்றாள்.
அவளது பார்வை அறிந்து,
“வழக்கமா வர்றவரு வரலை மேடம். அதான் ஐயா என்னை அனுப்பி இருக்காரு” என்றதில்,
“ஓஹ்!” என புருவம் உயர்த்தியவள் எப்போதும் போல் பின் சீட்டில் அமர்ந்து கொண்டாள்.
சில நிமிடங்களில் அந்தக் கார் அவர்களது இல்லத்திற்கு செல்லும் வழிக்கு மாறாக ஆள் நடமாட்டம் பெரிதாய் இல்லாத ஒரு கிளை சாலையில் பயணிக்க,
“இது வழி இல்லையே?” என்றாள் பார்வையைச் சாலையில் வைத்தபடி.
அவன் பதிலின்றி தொடர்ந்து பயணிக்க,
“உங்களைத் தான் கேட்குறேன்” என்றாள் அழுத்தமாய்.
ரியர் வியூ மிரரில் அவள் முகத்தைப் பார்த்தவன்,
“அந்த ரோட் ப்ளாக் ஆய்டுச்சு மேடம். அதான் சுத்தி போறோம்” என,
“வண்டியை நிறுத்துங்க” என்றாள் கோபமாய்.
அவன் நிறுத்தாதிருக்க,
“இப்போ நிறுத்தப் போறீங்களா இல்லை நான் கீழ குதிக்கவா?” என்றதில் வேகமாய் பிரேக்கை அழுத்தியவன், பின் அந்த மரங்கள் சூழ்ந்த சாலையின் ஒரு ஓரத்தில் வண்டியை நிறுத்தியிருந்தான்.
வேகமாய் காரை விட்டு கீழே இறங்கியவள் மறுநொடியே முன் இருக்கையில் வந்து அமர்ந்துகொண்டு,
“போலாம்” என்றாள் இயல்பாய்.
அவன் அப்படியே அவளை விழி விரித்துப் பார்க்க,
“அந்த கேப் பார்க்க சகிக்கலை. கொஞ்சம் கழட்டுங்க ப்ளீஸ். அப்படியே அந்த கூலர்ஸயும், மாஸ்கையும் கூட” என்றாள் சீட்டில் நன்றாய் சாய்ந்தமர்ந்து பார்வையை சாலையில் இருந்து திருப்பாது.
அவள் கூறியது போல் செய்துவிட்டு,
“எப்படி..?” என்றவனை இடைமறித்து,
“மருகு வெச்சா மாறுவேஷமா…?” எனப் புருவம் உயர்த்தினாள்.
அதில் அவனுக்குமே இதழோரம் புன்னகை அரும்பியது.
அவனைப் பார்த்து இரண்டு மாதங்கள் ஆகியிருக்க.. எப்படி இருக்கிறான் என அவனை முழுவதுமாய் ஆராய்ந்தது மகிழினியின் பார்வை.
‘நலம்’
அவளுக்கு வேண்டிய பதில் கிட்டவும்,
“எப்படி கண்டுபிடிச்சன்னு சொல்லு? வரும் போதே பார்த்துட்டியா” என்றான் ஆர்வமாய்.
அதில் அவன் விழிகளோடு தன் விழிகளைக் கலந்தவள் அவன் கையை தன் கைகளுக்குள் புதைத்துக் கொண்டு இருவருக்குமான இடைவெளியைக் குறைத்து,
“முன்னாடி கோடி பேரை நிக்க வெச்சாலும்.. கோடியில ஒருத்தனா உன்னை நான் கண்டுபிடிப்பேன் கெளதம்” என்றாள் அகத்தின் அடி ஆழத்திலிருந்து.
அந்த அளப்பரிய அன்பில் அவன் கண்கள் லேசாய் கலங்க,
“உன்னை எனக்குத் தெரியாம போய்டுமா.. போடா”
கலங்கிய விழிகளோடே அவள் இதழ்கள் காதல் மொழிய, மறுநொடியே அவனிதழ்களால் அவளுக்குள் தன் காதலைக் கடத்தினான்.
இத்தனை நாட்களாய் இருந்த பிரிவின் ஏக்கமெல்லாம் கரைந்திருந்த நொடி, தூரத்தில் ஒலித்த ஒரு ஹாரன் சத்தத்தில் நினைவுக்கு வந்தவர்களாய் இருவரும் விலகியிருந்தனர்.
ஈரமான இதழ்களோடு இன்பமாய் அதிர்ந்தவளிடம்,
“எப்படி என் சர்ப்ரைஸ்” என கெளதம் கண் சிமிட்ட,
“காலைல வரலைன்னு சொல்லி புர்ஜ் கலிஃபா பேக்ரௌண்ட் எல்லாம் அனுப்பிட்டு.. எப்படி டா வந்த? பொய்ய்ய்ய்….” என அவன் தோளில் அடிக்க,
‘என்ன மரியாதை எல்லாம் தேயுது? பரவாயில்லை இதுவும் நல்லா தான் இருக்கு’ என நினைத்தவன்,
“நான் அனுப்புனது பழைய செல்ஃபி மகிழ். உன்கிட்ட பேசுன ஃப்யூ செகண்ட்ஸ்ல பிளைட் ஏறிட்டேன்” என்று சொல்லி அவளிடம் இருந்து மேலும் சில அடிகளைப் பெற்றுக்கொண்டிருந்த போது, சரியாய் அவன் கைபேசி இசைத்தது.
“எல்லாம் ரெடியா? சரி வர்றோம்” என்று பேசிவிட்டு வைத்தவன்,
“உனக்கு நெறைய சர்ப்ரைஸ் காத்துட்டு இருக்கு. டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம். போலாமா” என,
“என்ன சர்ப்ரைஸ்?” என்றாள் மகிழினி ஆர்வமாய்.
“நீயே வந்து பாரு” என்று நேராக வீட்டிற்கு அழைத்துச் சென்றிருந்தான்.
அங்கு ஒரு கூட்டமே அவர்களது வருகைக்காகக் காத்திருந்தது.
வீட்டின் உள்ளே நுழைந்த மகிழினிக்கு அவள் கண்ட முகங்கள் அத்தனையும் பரிச்சயமே. அதில் ஓர்நொடி இன்பமாய் அதிர்ந்து தான் போனாள்.
அவளது கல்லூரித் தோழிகளான வர்சினி, கவிதா, அஸ்வினி மற்றும் ரேவதி புன்னகை முகங்களாய் அவள்முன் நின்றிருந்தனர்.
அவள் என்றும் மறவாத அவளது மதிப்பிற்குரிய பேராசிரியர் மதிவாணன் அவளையே அன்பொழுகப் பார்த்திருந்தார்.
கீர்த்தனா, விஜய், வைஷு ஒருபுறம் உற்சாகமாய் நின்றிருக்க.. சத்யமூர்த்தியும் அவரது நண்பரான ஏகாம்பரமும் ஒரு புறம் அமர்ந்திருந்தனர்.
இவர்களோடு புன்னகை முகமாய் கலைச்செல்வி அவளுக்காகக் காத்திருந்தார்.
நடப்பவை அனைத்தும் கனவா நினைவா என கௌதமைப் பார்த்தாள் மகிழினி.
ஆனந்தம்.. அழுகை… அதிர்ச்சியென அவள் அகம் ஆழிப்பேரலைகளால் அடித்துக் கொண்டிருந்தது.
“இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மகிழினி”
அனைவரும் ஒருசேரக் கூறியதில் அவளையும் மீறி அவள் கண்கள் கண்ணீர் மழையையே பொழிந்துவிட்டிருந்தது. இதெல்லாம் கௌதமின் ஏற்பாடு என்று நொடியில் அவள் மனம் அறிந்திருக்க,
“ரொம்ப தேங்க்ஸ் கெளதம்” என்றாள் உணர்வுபூர்வமாய்.
“நமக்குள்ள என்ன தேங்க்ஸ்? எல்லாருகிட்டயும் போய் பேசு மகிழ்” என்று அனுப்ப, அவளைச் சூழ்ந்துகொண்டனர் கல்லூரித் தோழியர்.
“நான் உன்னை நினைக்காத நாளே இல்லை மகிழ். இத்தனை வருசத்துல என்கிட்ட கூட பேசணும்னு தோணலையாடி உனக்கு?” – வர்சினி
“அந்த வினோத் எல்லாம் ஒரு ஆளுன்னு அவனுக்கு பயந்து எங்களை விட்டுட்ட பாரு. போ மகிழ் நீ இப்படி செய்வன்னு நான் நெனச்சும் பார்க்கலை” – கவிதா
“உன்னை புரிஞ்சுக்க முடியுது மகிழ். அந்த வினோத் தினமும் உன்னைத் தேடி எங்க வீட்டுக்கெல்லாம் வர ஆரம்பிச்சுட்டான்னு தான் நீ விலகிட்ட. ஆனா நீயும் எங்களுக்கு முக்கியம் தானே? உன்னை எப்படி நாங்க விட முடியும்?” – ரேவதி
“நீ எங்க இருக்க, உனக்கு என்ன ஆச்சுன்னு தெரியாம எங்களுக்கு நிம்மதியே இல்லை. அவன்கிட்ட மறுபடியும் மாட்டிட்டையோ.. அவன் உன்னை ஏதாவது செஞ்சிருப்பானோன்னு நெனச்சு நெறைய நாள் நான் தூங்கவே இல்லடி” – அஸ்வினி
“இதெல்லாம் ஏன் உனக்கு புரியலை” – வர்ஷினி
அனைவரும் அவரவர் மனதை அவளிடம் கொட்டியிருக்க,
“எல்லாரும் என்னை மன்னிச்சிருங்க. என்னால உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வந்திடக் கூடாதுன்னு தான் நான் யார்கிட்டயும் சொல்லாம தனியா வந்துட்டேன். உங்களைப் பார்க்காம.. பேசாம.. எனக்கும் தான் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. இருந்தாலும் நீங்க நிம்மதியா இருந்தா போதும்னு தான் வந்துட்டேன்” என்றவளுக்கு மேலும் பேச வார்த்தைகள் வராது துக்கம் தொண்டையை அடைத்தது.
நால்வரும் மகிழினியைக் கட்டிக்கொள்ள.. அவளும் இத்தனை ஆண்டுகளாய் அவர்களைப் பிரிந்த வருத்தத்தை எல்லாம் கொட்டித் தீர்த்திருந்தாள்.
“அழாத மா. இனி நீ அழவே கூடாது. கண்ணை துடைச்சுக்கோ” என்ற மதிவாணனின் குரலில் அவரை நிமிர்ந்து பார்த்தவள்,
“சார்…” என தழுதழுத்த குரலோடு அவர் கரத்தைப் பற்றிக்கொள்ள, அவள் கைகள் மெல்ல நடுங்கியது.
ஆறுதலாய் அவள் தலையைத் தடவியவர்,
“நான் அன்னைக்கு சொன்னதுதான். உன்கூட எப்போவும் நாங்க இருப்போம். தைரியமா இருமா. உன் மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும்” என மனதார வாழ்த்தினார்.
அவள் மனம் அளப்பரிய மகிழ்வில் நெகிழ்ந்துபோய் இருந்த நொடி,
“உள்ள வரலாமா?” என்றது ஒரு குரலில்.
அதில் அனைவரும் வாயிலைப் பார்க்க, அங்கு வினோத் நின்றிருந்தான்.
‘இவனா! இந்த சண்டாளன் இங்கயும் வந்துட்டானா’ என மதிவாணனும் மகிழின் தோழிகளும் அவனை அருவருப்பாய்ப் பார்க்க,
கெளதம் நொடியில் சூடாகிப் போயிருந்தான்.
“எல்லாரும் இங்கதான் இருக்கிங்களா..? அப்போ ரொம்ப நல்லதா போய்டுச்சு” என்று நக்கலாய்ச் சிரித்தவன்,
“என்ன மகிழினி.. ரொம்ப சந்தோசமா இருக்க போல?” என்றவாறே உள்ளே வர,
“நில்லு டா. வீடு திறந்திருந்தா நீ பாட்டுக்கு உள்ள வந்திடுவியா?” என கெளதம் அவனைத் தடுக்க,
“அட ஒரு நிமிஷம் பொறுங்க பாஸ். எனக்கு என் அத்தை மக கிட்ட ஒரு விசயம் பேசி தீர்க்கவேண்டி இருக்கு. அதைப் பேசி முடிச்சிட்டு அவளையும் அழைச்சிட்டு நானே போய்டுவேன்” என,
“அவ என் வைஃப்” என அழுத்தமாய்ச் சொன்ன கெளதம்,
“இனி நீ எது பேசுறதா இருந்தாலும் என்கிட்ட பேசு. அவகிட்ட உனக்கு எந்த உரிமையும் இல்லை” என்றான் ஆத்திரமாய்.
அதில் அதிர்ச்சியான வினோத், கௌதமின் வார்த்தைகளை நம்பாதவனாய் மகிழினியைப் பார்க்க..
அவளிடம் சவாலான சிரிப்பொன்று.
“நோஓஓ” என அலறிய வினோத்திற்கு தன் தலை வெடிப்பதுபோல் இருக்க, உலகமே அவன் காலடியில் நழுவிப் போயிருந்தது.