தன் மனம் கொண்டவனின் நினைவில் நாட்குறிப்பை நிறைத்தாள் மகிழினி.
இன்றோடு கெளதம் வெளிநாடு சென்று ஒரு மாதத்திற்கும் மேல் ஆகியிருந்தது.
அன்றைய தினம் விமான நிலையத்தில் அவனை மகிழ்ச்சியாய் வழியனுப்பி வைத்திருந்தாலும், அவளது விழிகளில் இருந்து அவன் மறையும் வரை மட்டுமே அது நிலைத்தது.
“மகிழ்..!”
அவளது முகத்தின் பிரதிபலிப்பு அப்படியே அவனிடம் வெளிப்படும்; அந்தக் கண்ணாடியும் தோற்றுப்போகும் அளவில். அதை அறிந்தவள் புன்னகையைத் தவிர அன்று வேறு எதையும் சூடிக்கொள்ளவில்லை.
“சரி நான் கிளம்புறேன் மகிழ். எதுனாலும் கால் பண்ணு. பத்திரம்”
நொடிக்கு நூறு முறை பத்திரம் சொல்லியவன் அவளைப் பிரிய மனமின்றி ஒரு அழுத்தமான அணைப்பில் தன் உணர்வுகளை எல்லாம் அவளுக்குக் கடத்திவிட்டுக் கடந்திருந்தான்.
விண்ணில் பறந்த விமானத்தையே சில நொடிகள் பார்த்திருந்தாள். அதனோடு அவளது இதயமும் சென்றதைப்போல்.
மனம் எங்கோ பயணிக்க.. கால்கள் அதன் திசையில் பயணித்தது. விமான நிலையத்தில் இருந்து எப்படி வெளியேறி காரில் அமர்ந்தாளென்று அவள் நினைவில் இல்லை.
எதையோ இழந்ததைப் போன்றதொரு உணர்வு மனதில் எழ, கண்கள் அவளையும் மீறி கலங்கிப் போனது.
“எதுக்கு இப்போ அழுகற? அவன் அங்க நிம்மதியா வேலை பார்க்க வேண்டாமா? நீ இப்படி இருந்தா அவன் நாளைக்கே திரும்பி வந்து நிப்பான்” என்ற கலைச்செல்வியின் உரிமையான கண்டிப்பில், கண்களைத் துடைத்துக் கொண்டாள் மகிழினி.
“கெளதம் கூட இல்லைன்னு நினைக்காத மா. எதுனாலும் எங்ககிட்ட சொல்லு. நாங்க இருக்கோம்” என்று ஆறுதல் மொழிந்தார் சத்யமூர்த்தி.
அதில் அவளது மனம் சற்றே ஆசுவாசம் கொண்டது.
மாலைப் பொழுதில் மூவரும் இல்லத்தை அடைந்திருக்க, என்ன செய்கிறோம் என்ற நினைவேயின்றி சாவியிட்ட பொம்மைபோல் செயல்பட்டுக் கொண்டிருந்தாள் மகிழினி.
‘மேல போறா.. கீழ வர்றா.. என்ன தான் பண்ணுறா?’ எனப் பார்த்தவாறே கலைச்செல்வி அவளை அழைக்க,
“மகிழினி….”
அவர் அழைப்பு கூட அவள் காதில் விழவில்லை.
அதில் அவர் சத்யமூர்த்தியைப் பார்க்க, அதை கவனித்த அவரும் ‘விடு’ என்றுவிட்டார் சைகையில்.
இரவு உணவை முடித்துக்கொண்டு எதுவும் பேசாமல் மகிழினி தன் அறைக்குத் திரும்பிவிட, மனம் கேளாத கலைச்செல்வியோ சிறிது நேரம் கழித்து மெல்ல மேலே சென்று வெளியில் இருந்தபடியே எட்டிப் பார்த்தார்.
அவள் அறையின் விளக்குகள் அணைந்திருக்க, உறங்கிவிட்டாள் போலும் என நினைத்தார். ஆனால் மகிழினியோ உறக்கமின்றி ஏதேதோ எண்ணங்களின் பிடியில் உழன்று கொண்டிருந்தாள்.
வெகுநேரம் கழித்து உறக்கம் மெல்ல அவள் கண்களைத் தழுவ, நினைவுகள் மட்டும் எங்கெங்கோ பயணித்துக் கொண்டிருந்தன.
சில நாழிகைகள் நகர்ந்திருக்க நிலவு நடுவானில் பயணித்த நேரம்,
“மகி..ழினி…”
வஞ்சமாய் வந்தது ஒரு குரல்.
மஞ்சத்திலிருந்து திடுக்கிட்டு விழித்தவள், அக்குரல் வந்த திசையைப் பார்த்தாள்.
திறந்திருந்த யன்னலின் அருகே ஒரு உருவம் நின்றிருக்க, அவ்விருட்டில் அது யாரென்று தெரியாத போதிலும் அவன் விழிகள் மட்டும் அவளையே வெறிப்பது நன்கு தெரிந்தது.
“நீ ஏதோ கெட்ட கனவு கண்டிருப்ப போல. இனி இங்க தனியா இருக்க வேண்டாம். கெளதம் வர்ற வரைக்கும் கீழ அத்தை கூடையே படுத்துக்கோ” என சத்யமூர்த்தி சொல்லவும்,
“சாரி மாமா.. லேட் நைட்ல உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேன். ஏதோ வந்த மாதிரி இருக்கவும் கொஞ்சம் பயந்துட்டேன். வேற ஒண்ணுமில்லை. நான் இங்கயே இருக்குறேன். நீங்க போய் தூங்குங்க” என்றாள்.
சத்யமூர்த்தி அவரது அறையில் ஓய்வெடுக்க.. கலைச்செல்வியும், மகிழினியும் கீழே இருந்த கீர்த்தனாவின் அறையில் உறங்கச் சென்றனர்.
“வெளிய சிசிடிவி இருக்கு.. அடுத்து க்ரில் கேட் இருக்கு.. மெயின் டோர் பூட்டியிருக்கு.. இத்தனையும் தாண்டி யாராலையும் உள்ள வரமுடியாது. நிம்மதியா தூங்கு” என்ற கலைச்செல்விக்கு, ஒரு தலையசைப்பைக் கொடுத்தவள் சற்று நேரத்தில் உறங்கியும் போனாள்.
அவள் உறங்கியதை உறுதி செய்தபின்னரே அவருக்கு உறக்கம் வந்தது.
அதிகாலையில் விழிப்பு வரவும் மெல்ல கண்விழித்த கலைச்செல்வி தன் அருகே மகிழினி இல்லாததைக் கண்டு பதறிப்போய் எழுந்தார்.
அவளோ தரையில் போடப்பட்டிருந்த விரிப்பில் அமர்ந்தவாறு என்னவோ சொல்லிக் கொண்டிருந்தாள்.
அவள் அவரது பார்வை வட்டத்தில் விழவும், ‘அங்க இருக்காளா…’ என்ற நிம்மதிப் பெருமூச்சோடு அவளருகில் சென்றார்.
“லம்ம்ம்… வம்ம்ம்… ரம்ம்ம்…”
ஒவ்வொன்றாய்ச் சொல்லியவாறு உடலிலுள்ள சக்ரங்களை எழுப்பி மூச்சுப்பயிற்சி செய்து கொண்டிருந்தவளை வேகமாய் உலுக்கியவர்,
“என்ன மா பண்ணுற?” எனக் கேட்க,
அதில் திடுக்கிட்டு கண்விழித்த மகிழினியோ, அதுவரை தன்னுள் அடக்கியிருந்த மூச்சை வேகமாய் வாய்வழியாக வெளியேற்றி,
“யோகா பண்ணுறேன் அத்த!” என்றாள் தன் நெஞ்சை நீவிக்கொண்டு.
“நல்லா பண்ணுற போ” என்றார் அவளை வித்யாசமாய்ப் பார்த்தவாறு.
“இது ரொம்ப நல்லது அத்தை. உங்களுக்கும் சொல்லித் தரவா?” என ஆசையாய் வினவியவளிடம்,
‘எதுக்கு இப்படி ஓடுறாங்க?’ என தன் தோள்களைக் குலுக்கிவிட்டு மீதம் இருந்த பயிற்சிகளைத் தொடரலானாள்.
நாழிகைகள் நகர்ந்திருந்தது.. எப்பொழுதும் போல் அன்று மகிழினி அலுவலகம் செல்லவேண்டி இருந்தது. இதுவரை கெளதம் உடன் அழைத்துச் சென்றிருக்க, இன்று பேருந்தில் செல்ல வேண்டுமென சிறிது முன்னதாகவே குளித்து முடித்து தயாராகி வந்தாள்.
பெரியோர்களிடம் சொல்லிக்கொண்டு கிளம்ப,
“எதுல போற?” என்றார் கலைச்செல்வி.
“பஸ்ல தான் அத்தை” என,
“இரு மா. கெளதம் உனக்கு வண்டி ஏற்பாடு பண்ணிட்டுதான் போயிருக்கான். பஸ்ல எல்லாம் போக வேண்டாம். ஒரு நிமிஷம் இரு” என தன் கைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்தார் சத்யமூர்த்தி.
‘கெளதம்ம்ம்…’ என மகிழினி மனதில் அவனை அர்ச்சிக்க,
சில நிமிடங்களில் ஒரு கருப்பு நிற கார் அவளை அழைத்துச்செல்ல வந்தது.
“சாயங்காலம் இதுலயே வந்துரு” என,
“எதுக்கு மாமா இதெல்லாம்.. நான் பஸ்லயே…” என அவள் முடிப்பதற்குள்,
“நீ எதுனாலும் உன் புருஷன் கிட்ட பேசிக்கோ. அப்பறம் அவன் வந்து ஆடுவான், இது தான் நீங்க என் பொண்டாட்டிய கவனிச்சுக்குற லட்சணமான்னு” என கலைச்செல்வி சொல்லவும்,
சரியாக அவளது கைபேசிக்கு கௌதமே அழைத்திருந்தான்.
அவள் அழைப்பை ஏற்று காதில் வைக்கவும்,
“என்ன மகிழ் கிளம்பிட்டியா?” எனக் கேட்டான்.
“ஹாஆஆன்..” என்றாள் கடுப்பாய்.
“நீ இன்னைக்கு யோகா பண்ணுனியா இல்லையா? இவ்வளவு டென்ஷன் ஆகக்கூடாதே” என,
“சரி நான் அப்பறம் கூப்பிடுறேன்” என வைத்துவிட்டாள்.
மகிழினி சென்றதும்,
“அவங்க ஏதோ பேசிட்டு இருப்பாங்க, நீ ஏன் அதை வேடிக்கை பார்த்துட்டு இருக்க? அவ பேசாமையே வெச்சுட்டா பாரு” என்ற சத்யமூர்த்திக்கு,
“ஆமா அவ பேசலைனாலும் உங்க மகன் அப்படியே விட்டிடுவான் பாருங்க. இந்நேரம் அவளுக்கு கூப்பிட்டு அவ ஆபிஸ் போய் இறங்குற வரைக்கும் பேசிட்டு தான் வைப்பான்” என மகனை அறிந்தவராய் சொல்லிவிட்டுச் செல்ல,
அவர் சொன்னது தான் அங்கு அரங்கேறிக் கொண்டிருந்தது.
கார் சாலையில் சென்று கொண்டிருக்க,
“பேசாம இருக்க மாட்டிங்களா கெளதம்? ஊரு உலகத்துல யாரும் பஸ்ல போறதில்லையா? நான் கேட்டனா உங்களை.. எதுக்கு இப்போ…”
டிரைவரை ஒரு பார்வை பார்த்தவாறு மெல்லிய குரலில் அவனை திட்டிக்கொண்டே சென்றாள் மகிழினி.
என்னதான் தைரியமாய்ப் பேசினாலும் உள்ளுக்குள் அவளுக்குமே ஒரு பயம் இருந்தது. கெளதம் இல்லாதபோது வினோத் தன்னை எங்கேனும் சந்தித்தால் என்ன செய்வதென்று.
அதற்காக அலுவலகம் செல்லாமல் இருக்க முடியுமா? எதையும் சமாளிப்போம் என்ற எண்ணத்தில் இருந்தாள்.
இரவு நடந்த விசயங்களைக் கூட அவள் கௌதமிடம் பகிர நினைக்கவில்லை. தனக்காக யோசித்து இப்படி ஏதாவது ஒன்றைச் செய்து வைப்பான் என்று அவள் சொல்லாமல் இருக்க, அவன் முன்னேற்பாடாய் அனைத்தையும் செய்துவிட்டுச் சென்றது அவளுக்கே ஆச்சர்யமாய் இருந்தது.
மறுமுனையில் அவன் எந்த பதிலும் அளிக்கவில்லை.
அவள் அர்ச்சனைகளை அமைதியாய் ரசிக்க மட்டுமே செய்தான். மனம் அவள் அருகாமைக்கு ஏங்கியது.
அவன் அமைதி கண்டு கைபேசியை காதிலிருந்து விலக்கி ஒருமுறை பார்த்தவள்,
“ஹலோ… கெளதம்… இருக்கீங்களா?” என,
“I need a long tight hug.. Right now”
உள்ளத்தை உணர்வுப்பூர்வமாய் உரைத்தான்.
அதில் மகிழினிக்கு விழிகள் ஈரமானது. சில நொடிகள் இருவருக்கும் இடையில் மௌனம் மட்டுமே பேசிக்கொள்ள, அவளது லேசான விசும்பல் தெள்ளத்தெளிவாய் அவன் செவிகளைத் தீண்டியது.
“ஏய் மகிழ்! என்ன நீ?” என்றவனது வருத்தம் அவன் குரலிலும் வெளிப்பட,
“ஒன்னும் இல்லை கெளதம்” என்றவள் நொடியில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு,
“முதல்ல போன வேலையை ஒழுங்கா முடிச்சிட்டு வாங்க” என்றாள் இயல்பான உரையாடலுக்கு வந்தவளாய்.
“வந்தா என்ன தருவ?”
அவன் பேச்சும் துள்ளலாய் மாறிப்போக,
“ம்ம்… விட்டுட்டு போனதுக்கு உதை தான் தரணும்” என்றாள்.
“இப்போவும் ஒன்னும் கெட்டுப் போய்டல மகிழ்.. நீ ஹ்ம்ம்னு ஒரு வார்த்தை சொல்லு உடனே டிக்கெட் புக் பண்ணிடறேன். லெட்ஸ் செலிப்ரேட் அவர் ஹனிமூன்”
“கௌ..த..ம்..” என பல்லைக் கடிக்க,
மறுமுனையில் அவனை யாரோ அழைக்க,
“ஓகே நீ ஆபிஸ் போய்ட்டு சொல்லு மகிழ். பை..” என அழைப்பைத் துண்டித்துக் கொண்டான்.
நேற்றைய கவலை ரேகைகள் சிறிதுமின்றி இதழோரம் உதிர்த்த புன்னகையோடு அலுவலகத்தில் அடியெடுத்து வைத்தாள் மகிழினி.
ஆனால் ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நிமிடங்களும் கடந்து செல்கையில் அவன் திரும்பி வரும் நாளையே அவள் மனம் பெரிதாய் எதிர்பார்த்துக் காத்திருந்தது.
அடுத்து வந்த நாட்கள் யாவும் சிறு நெருடலின்றி அவளை அந்தக் கூட்டில் அழகாய் பொருந்திப்போக வைத்தது.
அவள் எவ்வளவு சொல்லியும் கலைச்செல்வி தனது ரூம் மேட்டை மேல் அறைக்கு அனுப்புவதாய் இல்லை.
“யோகா பண்ணு.. ஆபிஸ் வேலை பண்ணு.. எதுனாலும் இங்கயே பண்ணு. உன் வீட்டுக்காரன் கிட்ட போன் பேசுறதுனா மட்டும் அங்க போய் பேசிட்டு வா” என்றுவிட்டிருந்தார் முடிவாய்.
கெளதம் இருந்திருந்தால் கூட கலைச்செல்வி அவ்வளவாய் மகிழினியோடு அளவளாவி இருக்க மாட்டார். ஆனால் இப்போதெல்லாம் அவரது வாயில் வருவது என்னவோ அவள் பெயராகத் தான் இருந்தது.
சத்யமூர்த்தி ஒய்வு பெற்ற நாளிலிருந்து கணக்கையே கையில் எடுக்காதிருக்க,
“மாமா! நீங்க ஏன் மேத்ஸ் ட்யூசன் எடுக்கக் கூடாது?” என்றிருந்தாள் மகிழினி அவரிடம்.
அவர் புரியாது பார்க்க,
“கட் ஆப் வேணும்னு மேத்ஸ்க்கு ஒரு நல்ல ஹேண்டை நெறைய பேர் தேடிட்டு இருக்காங்க. நீங்க ட்ரை பண்ணலாமே” என்று அவரிடம் தன் எண்ணத்தைத் தெரிவிக்க,
“நானும் யோசிச்சேன் மா. தினமும் தவறாம சொல்லித் தரணும். இதெல்லாம் சரிவருமான்னு விட்டுட்டேன்” என்றார்.
“நீங்க ஸ்டார்ட் பண்ணுங்க. ஈவ்னிங் ஆபிஸ்ல இருந்து வந்ததும் நானும் உங்களுக்கு சப்போர்ட் பண்ணுறேன். தினமும் ஒரு அஞ்சுல இருந்து எட்டு மணி வரைக்கும் கூட எடுத்தா போதுமே” என அவரை ஊக்குவிக்க, பெரிதாய்ச் சிந்தித்தார் சத்யமூர்த்தி.
அவருக்கு அவரது கணக்கை கையில் எடுக்கக் கசக்குமா என்ன?
மறுநாளே அதற்கான வேலைகளைத் துவங்கினார். ஒன்று இரண்டானது.. இரண்டு நான்கானது. இன்று கணிதத்திற்கு மட்டுமே இருபத்தி ஐந்து பேர் அவரிடம் ட்யூசன் வருகிறார்கள்.
அவருடைய பொழுதுகள் மீண்டும் பொலிவு பெறத் துவங்கியது. ஒய்வு அவரைத் தொய்வடைய வைக்க, மீண்டும் கணக்கை கையிலெடுக்கவும் புலியெனப் பாய ஆரம்பித்திருந்தார்.
“மேத்ஸ்ல மட்டும் ரொம்ப கம்மியா ஸ்கோர் பண்ணிட்டு இருந்தான். ரெண்டு மூணு ட்யூசன்ல சேர்த்துப் பார்த்துட்டோம். முன்னேற்றமே இல்லை. இப்படியே போனா கட் ஆப் போய்டும்னு ரொம்பவே பயந்தோம்ங்க சார்”
“ஆமாங்க சார். உங்களால தான் எங்க பையன் இன்னைக்கு மாடல் எக்ஸாம்ல சென்டம் வாங்கி இருக்கான். ரொம்ப நன்றி. இதே மாதிரி பப்ளிக்லயும் வாங்க வெச்சிடுங்க” என்ற பெற்றோரின் வேண்டுதல்களுக்கு,
“அதெல்லாம் வாங்கிடுவான். வாங்க வெச்சிடலாம்” என உறுதியாய்ச் சொன்னார் சத்யமூர்த்தி.
அவர்கள் மேலும் சத்யமூர்த்தியின் கற்பித்தல் குறித்து அவரைப் பெரிதாய் பாராட்டிவிட்டுச் செல்ல, கலைச்செல்விக்கு மனது நிறைந்து போனது.
அன்று அவரது நண்பன் ஏகாம்பரத்தின் முன்னிலையில் ஏற்பட்ட அவமானத்தால், இதுநாள் வரையிலும் மிகவும் சோர்வாகத்தான் காணப்பட்டார் சத்யமூர்த்தி.
இன்று பழையபடி அவர் மாறியிருக்க, அதில் அகம் மகிழ்ந்தவர் மகிழினியை ஒரு பார்வை பார்த்தார்.
அவளோ வேறு ஒரு மாணவனுக்கு ஏற்பட்ட சந்தேகத்திற்கு தீர்வு கண்டு கொண்டிருந்தாள்.
அன்று மகிழினி சொன்னது போலவே அவளது முழு ஆதரவையும் கொடுக்க, அது சத்யமூர்த்திக்கு பலமாய் இருந்தது. அவரது விருப்பமான செயலைச் செய்யும்போது அவருக்குமே மனம் மகிழ்ச்சியாய்.. நிறைவாய் இருந்தது.
நாளுக்கு நாள் அவளது குணத்தால் அவர்களது மனதில் நீங்காத ஒரு இடத்தைப் பிடித்திருந்தாள் மகிழினி.
கெளதம் உடன் இல்லாத குறையைத் தவிர சத்யமூர்த்தியும், கலைச்செல்வியும் வேறு எந்தக் குறையும் அவளுக்கு வைத்திருக்கவில்லை.
அதை எல்லாம் எண்ணிப் பார்த்தவளாய் தன் நாட்குறிப்பை நெஞ்சோடு அணைத்தவாறு நின்றிருந்தாள் மகிழினி.
“மகிழினி!”
“சாப்பிட வா. இன்னும் என்ன பண்ணுற?”
கலைச்செல்வியின் குரலில் திடுக்கிட்டவள்,
“இதோ வரேன் அத்தை” என்றுவிட்டு தன் நாட்குறிப்பை பத்திரப்படுத்தி பீரோவில் வைத்துவிட்டு கீழே வந்தாள்.
“ஆபீஸ்க்கு நேரம் ஆகலையா.. மணியைப் பாரு” என்றார்.
“கொஞ்சம் லேட் ஆகிருச்சு” என்றவள் விரைந்து காலை உணவை முடித்துக்கொண்டு,
“போய்ட்டு வரேன் மாமா. பை அத்தை” என மகிழ்ச்சியாய்க் கிளம்பினாள்.
மகிழ்வாய் விடைபெற்றவள் அறிவாளா அவள் மகிழ்வின் முகவரி இனி அவளிடமே இருக்குமா என்று?