“இதோ பாரு என்கிட்ட பேசாத… அவள் தான் ஒன்னையும் சொல்லமாட்டீங்கிறாள். மனசுல எதையோ வச்சிருக்காள்… நாம என்ன அந்நியமா ?” என ஆதங்கத்துடன் கேட்க,
“ஆமா, அவள் ஒன்னு சொல்லல…நீ ஒன்பது சொல்லிட்ட…ஏண்டா கடுப்படிகிற? அந்நியம் புண்ணியம்னு இங்க பேசு..அதுகிட்ட ஒன்னும் பேசிடாத” என முணுமுணுத்தபடியே, மலரிடம் சென்றான். அதற்குள் கோவிலை அவர்கள் நெருங்கியிருந்தனர்….
காலையிலையே கோவிலுக்கு எதிரில் உள்ள பொட்டலில் வண்டியை நிறுத்திவிட்டே பார்த்திபன், பூதத்தின் விழாவிற்குச் சென்றிருந்தான். பார்த்திபன் வண்டியை நோக்கி போக, பொட்டலுக்கு அருகே உள்ள கல் மண்டபத்தில் அமைதியாகச் சென்று அமர்ந்தாள் பனிமலர்!
முகத்தில் ஒருவித இறுக்கம் இப்போது சூழ்ந்திருந்தது. சற்று முன், பூதம் மற்றும் குறுஞ்சியின் விழாவில் ஆனந்தத்துடன் கலந்துகொண்டவளா இவள் என்ற கோணத்தில் அமர்ந்திருந்தாள்…
“என்ன மா? டல்லடிக்கிற ?” எனக் கேட்க,
“ஒண்ணுமில்ல அண்ணா… சும்மா உக்காந்துருக்கேன்” என மலர் பதில்கொடுக்க,
“அப்போ உன் மாமான்னு பிடிச்சிருக்கு. அப்படித்தானே ?”
“அப்படியுமில்லை எப்படியுமில்லை… நான் கொஞ்சம் தனியா இருக்கணும். போறீங்களா ?” என மலர் தோய்ந்த குரலில் கூற,
“இப்பமட்டுமென்ன கூட்டத்தோடவா இருக்க? உன் பேச்சு ஒன்னும் சுத்தப்படலியே….. இரு வரேன்” எனக் கூறிவிட்டு வண்டியை நோக்கி சென்றான்.
அங்குப் பார்த்திபன், பூஜைக்கான வேலைகளைப் பார்த்துக்கொண்டிருக்க, அங்கு ஐயர் ஒருவர் வாகனங்களுக்குப் பூசை செய்யும் முறையில் செய்ய ஆயுத்தமாகிக்கொண்டிருக்க, வண்டியை நோக்கி எதிர்திசையிலிருந்து பார்த்திபனின் குடும்பம் வந்துகொண்டிருந்தது….
“சரி நீ இங்க பூச போடறதை பார்த்துக்கோ” எனச் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே, சூரியவர்மன் பூவம்மாள் என அனைவரும் வந்துவிட, அவர்களின் தலைமையில் விட்டுவிட்டு மலரை நோக்கி கிளம்பினான்.
‘எங்கடா போற?’ என்ற மற்றவரின் கேள்வியைக் காதில் கூட வாங்கிக்கொள்ளாமல், விடுவிடுவென நடந்தான்.
அக்கோவில் சற்றே ஒதுக்குப்புறமாக அமையப்பெற்றிருந்தது…. ஆகையால், கோவிலுக்குச் சற்று அப்பால் காலி நிலங்களும் சில செடி கொடிகளும் அடர்ந்து மண்டிக்கிடந்தன. மலர் அமர்ந்திருந்த கல் மண்டபத்தை அடுத்தே அந்தச் செடி புதரும் இருக்க, இலக்கின்றி மலரின் பார்வை அந்தப் புதரின் திசையில் வெறித்துக்கொண்டிருந்தன.
அவளுக்குக் கோவிலின் கோபுரத்தை காண பிரியமில்லை….கோவிலுக்குள்ளும் செல்ல மனமில்லை…
அவள் கண் முன்னே, அவளுடைய தாய் தந்தை என இருவரும் துடிதுடித்து மரணித்தது, இதே போன்று ஒரு கோவிலின் வாசலில் தான்…. சாமியை காண சென்றவள், கும்பிட்டு வந்தபிறகு அவளுடைய குடும்பத்தைச் சடலமாகவே பார்த்தாள்…
அந்த நிமிடத்திலிருந்து அவளுக்குச் சாமியின் மீது பற்றற்றுப் போனது. தெய்வத்தின் மீது நம்பிக்கையை ஒட்டுமொத்தமாகத் தொலைத்தாள்…அதனால் வந்தநாளிலிருந்து அந்நொடி வரை எந்தக் கடவுளையும் வணங்கவில்லை. எந்தக் கோவிலுக்கும் போவதுமில்லை…
பூவைக்கும் விழா முடிந்து, பனிமலர் வாடிய முகத்துடன் வந்ததற்கான காரணமும் அவளுக்குக் கோவிலின் மீது நம்பிக்கை இல்லாமல் போனதே….
பார்த்திபனின் வாழ்வில் நிகழும் நல்ல நிகழ்வு என்ற காரணத்தினால் மட்டுமே, அவள் வந்திருந்தாள். மற்றபடி எக்காரணம் கொண்டும் கோவிலின் உள் நுழைய கூடாதென்ற உறுதியுடன் வந்திருந்தாள்…
‘ஒரே நாளுல என் கண்ணு முன்னால, என்னோட உலகத்தை எடுத்துகிட்ட. அவுங்க நல்லா இருக்கணும்னு தான் உன்கிட்ட வேண்டிக்க வந்தேன்…
வேண்டி முடுச்சு முழுசா பத்து நிமிஷம் கூட இல்ல…என்ன ஒண்ணுமில்லாதவளா நிக்க வச்சிட்ட?
அப்புறம் எதுக்குச் சாமி? உனக்கெதுக்குப் பூசை ? நான் எதுக்கு உன்னை நம்பணும் ? இந்த உலகத்துல கடவுள்னு ஒன்னு இல்லவே இல்ல…. இனி எந்தக் கோவில் வாசலையும் நான் மிதிக்கிறதாகவும் இல்ல’
இது தான் மலருடைய மனதின் கூப்பாடாக இருந்தது….அவளுடைய ஆதங்கம் கோபமாக மாறி இறுதியில் விரக்தியில் நின்றிருந்தது.
அவளுக்குக் கோவில் மீதோ தெய்வத்தின் மீதோ நம்பிக்கை இல்லை…. எந்தக் கோபுரத்தை கண்டாலும், அவளுடைய பெற்றோர்களின் மரண ஓலம் அவள் காதில் ஒலித்தன.
அவளுடைய மனம் புயலில் சிக்கிக்கொண்ட படகாய் அல்லாடியாது…மின்னல் தாக்கிய பாய்மரக்கப்பாலாய்ப் பற்றியெரிந்தது…
அப்போது தான், மலரின் மனதை கீறி இரணமாக்கும் மற்றொரு சம்பவம் அங்கே அரங்கேறியது. அவள் அமர்ந்திருந்ததற்கு எதிர்திசையில் புதரொன்று சலசலவென ஆட, ‘என்ன அது ?’ என்ற ரீதியில் பார்த்திருந்தாள்.
புதரிலிருந்து ஒரு சிறுமி அழுகையுடன் வெளிவரவும் பின்னே ஒரு நடத்தற வயதுள்ள ஆண், கிட்டத்தட்ட நாற்பதின் முற்பகுதியில் இருக்கும் நபரொருவர் வெளிவந்தான்.
“ஏய்… அழுவாத கண்னை தொடை. உனக்கு மிட்டாய் தானே கேட்ட? இந்தா இதுல ஐம்பது ரூபா இருக்கு. பெரிய மிட்டாயா வாங்கித் தின்னு.
மாமா கூப்பிடறாப்பலம் வரணும். இல்லனா, நீ அந்தக் கடைல மிட்டாய் திருடி சாப்பிடல? அதை உங்க அம்மா அப்பாகிட்ட சொல்லிடுவேன்.
இனிமேல் மிட்டாய் வேணும்னா மாமாகிட்ட வா” எனக் கோணல் சிரிப்புடன், அந்தச் சிறுமியின் கன்னத்தை அழுந்த தடவியபடி இறுதியில் லேசாகக் கிள்ளிவிட்டு செல்ல, அந்தச் சிறுமி கண்னை கசக்கிகொண்டே நடக்கத் தொடங்கினாள்.
சிறுமியின் பிராந்தியம் ஒன்பதிலிருந்து பத்து இருக்கலாம்… பெண் உடலில் சின்னச் சின்ன மாற்றங்கள் வர தொடங்கியிருந்த சமயம் அது. மலர் அதைச் சட்டென்று கண்டுகொண்டாள்…சென்றவனின் சிரிப்பும் பார்வையும் அவன் பேச்சும், சிறுமியின் அழுகையும் மலரின் மனதை பதக் பதக் என அடித்துக் கொள்ளச் செய்தது…
என்ன நிகழ்ந்திருக்குமென்று மலர் புரிந்துகொள்ள வெகு நேரம் பிடிக்கவில்லை…. சென்றவனைப் பிடித்துக் கன்னம் பழுக்க அடிக்கவேண்டுமென்று ஆத்திரம் வந்தது…
யோசிக்கவில்லை….கல்மண்டபத்திலிருந்து எழுந்தாள்…அவளுடைய மொத்த கோபமும் செல்கின்றவன் மீது திரும்ப, அந்தச் சிறுமியை நோக்கி சென்றாள்…
“பாப்பா…என்ன ஆச்சு சொல்லு? ஏன் அழகுற ? அவன் உன்ன ஏதாவது செஞ்சானா ? என்கூட வா, அவனைச் சும்மாவிடக்கூடாது?” என ஆவேசமாகப் பேச பேச, சிறுமி மேலும் அழுக தொடங்கினாள்.
“அழாத மா… என்னனு சொல்லுமா…” எனச் சிறுமியின் உயரத்திற்கு மண்டியிட்டு மலர் கேட்க,
“ஒண்ணுமில்லை…ஏதும் நடக்கல…யார்கிட்டையும் கேட்க வேணாம்…எனக்கு ஒண்ணுமில்லை…” என்ற வார்த்தைகளைக் கோர்வையாக இல்லாமல் திக்கி திணறி அந்தச் சிறுமி கூறிவிட்டு அங்கிருந்து ஓடிவிட, அப்படியே மலர் தளர்ந்து அமர்ந்தாள்….
மலரின் கண்களிலிருந்து கண்ணீர் நிற்காமல் வழிய தொடங்கியது. பார்த்திபனுக்கு இன்னதென்று தெரியாத போதும், மலரின் அருகே இருந்த சிறுமி ஓட்டம் பிடிப்பதும், மலர் ஓய்ந்த முகத்துடன் தளர்ந்து அமர்ந்திருப்பதும் தெரியவே, நிமிடமும் தாமதிக்காமல் இரெண்டே எட்டில் மலரிடம் ஓடினான்.
மலரின் தோள்களைத் தட்டி அவளைத் தூக்கி நிறுத்த முயன்றவன், “என்னாச்சு மலரு ? எதுக்கு இப்படி உக்காந்திருக்க ?” எனப் பார்த்திபன் கேட்டதும் தான் நிமிடம், கடலுக்கு அடியே வெடித்துச் சிதறிய எரியமலையாய், எரிமலையின் உஷ்னத்தைத் தாங்காத கடல் நீராய் பொங்கிவிட்டிருந்தாள்.
” ஏன் இந்த ஆம்பளைங்களாம் இப்படி இருக்கீங்க ? அப்படி என்னதான் வேணும் ? வயசு பொண்ணுக்கு மட்டும் தான் பாதுகாப்பு இல்லனு நினைச்சால், பொண்ணா பொறந்தாலே பாதுகாப்பு இல்லையா ?
கடவுளை நம்புற மனுஷங்களுக்குக் கடவுள் கூட இருக்குறதில்லை. சொந்த பந்தம்னு நம்புனா, நம்ப வச்சு கழுத்தறுக்குறாங்க… அக்கம் பக்கம் பழகட்டும்னு விட்டால், அவனுங்களும் வேலைய காட்டுறாங்க…
கடவுள் தான் இந்த உலகத்துல இல்லனு நினச்சேன். ஆனால், மனுஷங்களும் இல்ல மனுஷ தன்மையும் இல்லை. மிருகங்க…இரெண்டு கால் இரண்டு கையோட மனசு முழுக்க அழுக்கோட இருக்க மிருகங்க…
இவனுங்கள எல்லாம் துண்டு துண்டா வெட்டணும்” என ஆவேசமாகத் தன்னை மறந்து பேசிக்கொண்டிருக்க, பார்த்திபன் நிதானித்தான்…
“என்ன ஆச்ச? நிதானமா சொல்லு” எனப் பார்த்திபன் கேட்க,
அப்போது சுயத்தை இழந்தாள்…
“உன்கிட்ட சொல்லி என்ன ஆகப்போகுது? இதோ இந்தக் கோவில்ல இருக்கச் சாமிகிட்ட சொன்னேன்…செஞ்சாரா ? என் கண்ணுமுன்னாடியே என்னோட அப்பா அம்மாவோட உயிரை எடுத்துட்டாரு…
இப்போ இந்தப் பாப்பாகிட்ட சொன்னேன்…அந்த பொறுக்கி உன்ன என்ன செஞ்சான்னு சொல்லு. நான் இருக்கேனு… அந்தப் பொண்ணு செஞ்சதா ? இல்ல…ஓடிருச்சு….பயந்து ஓடிருச்சு…. ” என அழுகையும் விரக்தியும் கலந்து, மனம் நிலையில்லாமல் தவித்தபடி மலர் கூற கூற, பார்த்திபனுக்கு மெல்ல மலரின் நிலை புரிய ஆரம்பித்தது.
“நிதானமா இரு…மலர் நிதானமா இரு….” எனச் சற்றே குரல் உயர்த்தி, பார்த்திபன் அதட்டல் போட, சற்றே தெளிந்தாள்!
“நீ இங்க இருந்து வா… மொதல்ல அமைதியாகு…” எனக் கைபிடித்து அழைக்க, அவளிருந்த மனநிலையில் அவன் பின்னோடு சென்றாள், மலர்!
பார்த்திபன் நேராகக் கோவிலுக்குள் நுழைய முற்படச் சட்டென்று அதே இடத்தில் நிதானித்தாள். அடுத்த அடி மலர் எடுத்து வைக்கப் பிரியப்படவில்லை…
“என்னாச்சு ?”
“கோவிலுக்கு நான் வரல பார்த்திபன். என்ன கட்டாயப் படுத்தாதீங்க” எனப் பேச்சை கத்தரித்தாள்.
“கோவில்ல அமைதி கிடைக்கும்…நான் சொல்லுறேன்ல உள்ள வா” எனப் பார்த்திபன் வலியுறுத்த,