இந்த காலமும், நேரமும் தான் யாருக்காகவும் நிற்காதே. எப்போதுமே ஓடிக்கொண்டு இருக்கும் ஒரு ஜீவன் எனில், அது காலம் தான். அப்படித்தான் நாட்கள் பறந்தோடி, மாதங்கள் தொட்டு, அந்த மாதங்களும் கடந்து இதோ அர்ச்சனா –அச்சுதன் திருமணம் முடிந்தும் கூட பத்து நாட்கள் முடிந்திருந்தது.
எளிய முறையில் தான் திருமணம் செய்துகொண்டனர். ஸ்ரீரங்கம் கோவிலில் வைத்துத்தான் திருமணம். இரு குடும்பத்தினரும், பின் மிக மிக நெருங்கிய உறவுகளும், நட்புக்களும் மட்டுமே சூழ்ந்திருக்க, அச்சுதன் அர்ச்சனாவின் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவித்து, தன்னை அவளின் சரி பாதியாக்கிக் கொண்டான்.
திருமணம் முடிந்து, ரங்கநாதரையும், தாயாரையும் தரிசனம் செய்து முடித்து, பின் கோவில் சுற்றி, எல்லாம் முடிந்து வீடு வர, அன்று மாலையே வீட்டுத் தோட்டத்தில் தான் வரவேற்பு. அனிதாவின் வளைகாப்பு எப்படி நடந்ததோ, அதுபோலத்தான் ஏற்பாடு செய்திருக்க,
அதுவும் கூட மிக முக்கியமான பழக்கத்திலும், தொழில் முறையும் உள்ள ஆட்களுக்கு மட்டும் தான் அழைப்பு வைத்திருந்தனர்.
அனிதா, தங்கையின் திருமணத்தை முன்னிட்டு, குழந்தையோடு இங்கே கணவன் வீடு வந்திருந்தாள். ஆனாலும் கூட திருமணம், வரவேற்பு என்று எல்லாம் முடிந்து மறுநாளே தாய் வீடு சென்றுவிட்டாள்.
இதோ பிரகாஷும் கூட அவனது ஹோட்டலை கை மாற்றி விட்டவன், அவனுக்கென்று இருந்த லோனில் பாதியை செலுத்திவிட்டு, அடுத்து புதிதாய் அவர்களுக்கு இருக்கும் பண்ணை வீடுகளை வைத்து ‘அக்ரோ டூரிசம்..’ போல ஏற்பாடுகள் செய்துகொண்டு இருக்க, அவனுக்கு அலைச்சல்கள் நிறையவே இருந்தது.
அனிதாவிடம் “நீ ரொம்ப போட்டு மனசை குழப்பிக்காத அனி. நீ பேபியோட இங்க வரும்போது, உங்களோட நானுமே டைம் ஸ்பென்ட் பண்ணனும். அதெல்லாம் ப்ளான் பண்ணித்தான் இப்போ அலைஞ்சிட்டு இருக்கேன்…” என்று பிரகாஷ் சொல்லிவிட, அனிதாவிற்கு ஓரளவு மனது சமாதானம் அடைந்துவிட்டது.
இருந்தும் பயம். கணவனை யாரும் குறைவாய் பேசுவார்களோ என்று.
அது அவளது இயல்பே அப்படித்தான் என்கையில், அதை யாரும் அத்தனை பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை. ஓரளவு எல்லாமே சுமுகமாய் தான் சென்றுகொண்டு இருந்தது.
இதோ இப்போதும் கூட அர்ச்சனா ஆழ்ந்த உறக்கத்தில் தான் இருந்தாள். அச்சுதன் வழக்கம் போல எழுந்தவன், நடந்துவிட்டு வர “அச்சுதா…” என்றார் நீலவேணி.
“என்னம்மா?” என்று கேட்க,
“எதோ பிரண்ட் வீட்டு விசேசம் போகணும்னு சொன்ன…” என்று இழுக்க,
“அர்ச்சனா இன்னும் எழுந்துக்கவே இல்ல…” என்றவன், அறைக்குள் போக, அர்ச்சனா கண் விழித்திருந்தாள்.
அதுவும் எழுந்ததுமே அக்கா, மகளோடு வீடியோ காலில் கொஞ்சிக்கொண்டு இருந்தாள்.
ஆம்! அனிதாவிற்கு பெண் குழந்தை நல்ல படியாகவே பிறந்திருந்தது. அதுவும் அந்த நாளை இப்போதும் கூட அச்சுதன் மறந்திட மாட்டான். அனிதாவை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம் என்று அதிகாலை வேளையில் அர்ச்சனா அழைத்து அச்சுதனுக்குத் தான் சொன்னாள்.
“அப்.. அப்படியா?!” என்றவனுக்குமே பதற்றம் தான்.
நம்பெருமாள் குடும்பத்தின் அடுத்த தலைமுறை அல்லவா?!
‘தாயும் சேயும் நல்லபடியா இருக்கணும்..’ என்று வேண்ட, அடுத்த ஒருமணி நேரத்தில் அழகாய் பிறந்தது ‘ஆர்த்தி பாப்பா..’
பெண் குழந்தை என்றால் ஆர்த்தி என்றும், ஆண் குழந்தை என்றால் ஆரவ் என்று பெயர் வைக்கவேண்டும் என்று அனிதாவும், பிரகாஷும் முடிவு செய்திருக்க, அது குடும்பத்தினர் அனைவருக்குமே தெரிந்த ஒன்றாய் தான் இருந்தது.
பிரகாஷிற்கு முகம்கொள்ளா சந்தோசம்.
காதல் கை கூடி, திருமண வாழ்வு நகர்ந்து, தான் விரும்பிய பெண்ணோடு வாழ்ந்து ஒரு குழந்தைக்கு தகப்பன் ஆகும் நிகழ்வு என்பது, வார்த்தைகளால் சொல்லமுடியாத உணர்வைக் கொடுப்பது தானே. லேசாய் கண்கள் கலங்கி, பிரகாஷ் நின்று இருக்க, வீட்டில் அனைவருக்குமே சந்தோசம் தான்.
‘பாப்பா யார் மாதிரி இருக்கா?’ என்று அனைவரும் பார்த்து, அவரவர் பாணியில் பேசிக்கொண்டு இருக்க,
அச்சுதனுக்கு கையில் குழந்தையை வாங்க ஆசை. ஆனால் அவனுக்கு பயமாய் இருந்தது. இதுவரைக்கும் கை குழந்தையை எல்லாம் தூக்கியது இல்லையே. அனைவரும், பிள்ளை யார் போல என்று பேச, அச்சுதனோ, அர்ச்சனாவிடம் “அப்படியே உன்ன மாதிரியே இருக்கா அர்ச்சு…” என்று சொல்லிக்கொண்டு இருந்தான்.
“ஹா!” என்று அர்ச்சனா பார்க்க,
“அட நிஜமா.. உன்னோட நோஸ்ல இதோ இங்க சின்னதா ஒரு கட் இருக்கு பாரேன். அதுபோலவே பாப்பாக்கும் இருக்கு பாரேன்…” என்று சொல்ல, அவனை ஒரு பார்வை பார்த்து வைத்தாள் அர்ச்சனா.
“அட நிஜமா டி… பாரேன்.. எனக்கு என்னவோ இது குட்டி அர்ச்சனா போலவே இருக்கு…” என்று சொல்ல,
“அப்படியா?! இந்தாங்க தூக்குங்க பாப்போம்…”என்று கையில் வைத்திருந்த சிசுவை, அவனிடம் மெதுவாய் நீட்ட,
“நோ நோ..” என்றான் வேகமாய் அச்சுதன்.
“அட என்ன அச்சத்தான்?!” என,
“குட்டி பிள்ளைங்களை எல்லாம் எனக்கு தூக்கத் தெரியாது. பாரேன் எப்படி நெளியுறா அப்படின்னு…” என்று சொல்ல,
“உங்களுக்கு அடுத்து, வீட்ல இத்தனை பசங்க பிறந்திருக்காங்க. தூக்கத் தெரியாதாம் தூக்க…” என்று அர்ச்சனா கேலி பேச,
“அதுசரி..” என்றவனுக்கு இப்போதும் ஆர்த்தி பாப்பாவை பார்த்தாலும் ‘குட்டி அர்ச்சனா…’ என்றுதான் சொல்லுவான்.
இதோ இந்த பெரிய அர்ச்சனா நேர தாமதமாய் விழித்ததும் இல்லாமல், குட்டி அர்ச்சனாவோடு அலைபேசியில் கதைத்து கொஞ்சிக் கொண்டு இருக்க, அச்சுதனோ “அர்ச்சு…” என்றான் ஒரு அழுத்தக் குரலில்.
“ஹாய்..! குட் மார்னிங்…” என்று கணவனுக்கு சோபையாய் ஒரு புன்னகை பூத்தவள் “ஓகே தங்கம்.. சித்தி அடுத்து கால் பண்றேன்… டாட்டா…” என்று சொன்னவள், அலைபேசியை வைத்துவிட்டு எழுந்து நிற்க, அச்சுதனோ அவளைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தான்.
திருமணமாகி வந்ததும், இப்போது அவனது அறை, அவர்களின் அறையாய் மாறி இருக்க, அறையில் முக்கால்வாசிக்கு அவளின் பொருட்கள் தான்.
முதல் நாள் இரவு ஒரு விருந்து என்று சென்றிருக்க, வந்து உறங்கவும் நேரமாகி இருந்தது. இதோ இன்றும் ஒரு விசேசம். அச்சுதனின் கல்லூரி நண்பன். ஒருவிதத்தில் குடும்ப நட்பு என்றும் சொல்லலாம்.
அந்த நண்பனின் இரண்டாம் பிள்ளைக்கு மொட்டை, காது குத்து என்று வந்து நேரில் அழைப்பு வைத்துவிட்டான்.
வழக்கமாய், எப்போதுமே கல்லூரி நண்பர்களோ, இல்லை பள்ளிகால நண்பர்களோ தொடர்பில் இருப்பவர்கள் இப்படி வந்து அழைப்பு வைப்பது தான். முடிந்தால் அச்சுதன் சென்று வருவான்.
‘குடும்பஸ்தன் ஆகிட்ட.. ஒழுங்கா வந்து சேரு… அப்போதான் நாளைக்கு நாங்களும் உன் புள்ளைங்க விசேசத்துக்கு வருவோம்..’ என்று நண்பன் அழைத்த விதமே,
அச்சுதனை “சரிடா வர்றேண்டா…” என்று சொல்ல வைத்திருந்தது.
திருச்சிக்கும், தஞ்சைக்கும் இடைப்பட்ட ஒரு கிராமத்தில் தான் விசேசம். அர்ச்சனாவிற்கு மறந்து போனதா, இல்லை சீக்கிரம் தயாராகிடளாம் என்று எண்ணிவிட்டாளா என்று தெரியவில்லை.
“ஆர்த்தி குட்டி அழகு தானே அச்சத்தான்.. என்னைப் பார்த்ததுமே சிரிக்கிறா பாருங்க.. மூணு மாசம் அவளோடவே இருந்தேன்.. இங்க வரவே எனக்கு மனசில்லை தெரியுமா. நான் போனா என்னோடவே இருக்கா தெரியுமா அச்சத்தான்…” என்று சொல்லிக்கொண்டே அர்ச்சனா கூந்தலை அள்ளி முடிந்து கிளிப் போட,
“ஹ்ம்ம்…!” என்று அச்சுதன் ஒரு ஆழ்ந்த பெருமூச்சு விட,
“என்ன என்ன? மூச்செல்லாம் இத்தனை பெருசா வருது…” என்று அவளும் கேட்க,
“தினமும் பேபி, பேபின்னு சொல்ற.. ஆனா நமக்கு ஒரு பேபி வர்றதுக்கான எந்த வழியையும் காணோம்…” என்று அச்சுதன் வேண்டுமென்றே சீண்டுவது போல பேச,
“அதெல்லாம் பெரிய ப்ராசஸ் அச்சத்தான்…” என்றவள், குளியல் அறைக்குள் ஓடிவிட்டாள்.
இந்த பேசும் கூட இவர்களுள் தினமும் நடக்கும் ஒன்றுதான். அர்ச்சனா திருமணம் முடிந்ததுமே அன்றைய இரவிலேயே அச்சுதனிடம் சொல்லிவிட்டாள்.
“எனக்கு இங்க கொஞ்சம் அடாப்ட் ஆகணும் அச்சத்தான். உங்களோட இன்னுமே எனக்கு அட்டாச் ஆகணும்.. அதெல்லாம் தாண்டி எதுவுமே இயல்பா நடந்தா பெட்டர்…” என்று அவள் மனதில் இருப்பதை பேச, அச்சுதனுக்கும் இந்த எண்ணம் மனதில் இருந்தது தான்.
அதை அவள் வெளிப்படையாய் சொல்லவும் “ஓகே..” என்றுவிட்டான்.
ஆனாலும் கூட இந்த பத்து நாட்களாய், அவளைத்தான் சீண்டுவான். இதோ இப்போதும் கூட அவள் குளித்து வரவும் “பெரிய ப்ராசஸ் தான். ஆனா அதெல்லாம் இப்போதைக்கு வேண்டாம்னு சொன்னது நீங்கதான் அர்ச்சனா…” என்று கேலி போலவே பேச,
“அடடா…! ஸ்டார்ட் பண்ணிட்டீங்களா? என்னவோ எதுவுமே நடக்காதது போலத்தான்…” என்று சொல்ல,
“ஆ!” என்று வாயில் கை வைத்தவள் “என்ன நடக்கலைன்னு, உங்க லிப்ஸ் அண்ட் ஹேன்ட்ஸ் கிட்ட கேளுங்க சொல்லும்..” என்றபடி அவள் தலைவார, கண்ணாடியில், தனக்கு பின்னால் நிற்கும் கணவனின் உருவம் பார்த்துத்தான் பேசிக்கொண்டு இருந்தாள் அர்ச்சனா.
“அப்படியா.. லிப்ஸ் அண்ட் ஹேன்ட்ஸ்.. ஹ்ம்ம்?!” என்று அவன் ஒருவிதமாய் தலை அசைக்க,
“ஹேய்.. ஹேய்.. ஸ்டாப் இட்.. என்ன என்ன ஓடுது உங்க மைன்ட்ல?” என்று வேகமாய் திரும்பியவள், அவனை நேராய் பார்த்தே கேட்க,
“ஏன்? என்ன ஓடுதுன்னு நீ நினைக்கிற…” என்றவன் மெல்லவே அவளின் பக்கம் வர,
“அ.. அது.. அச்சத்தான்.. அது.. நான் எதுவும் நினைக்கல…” என்று படபடத்தவளுக்கு பட்டென்று ஒரு வெக்கம் வந்து ஒட்டிக்கொண்டது.
கடந்த இரண்டு நாட்களாய் அவ்வப்போது ஒருசில அத்துமீறல்கள் இருக்கத்தான் செய்தது. சில நொடிகளில் அவளுமே தன்வசமிழந்து, கண்களை காதலும் ஆவலும் தேக்கிப் பார்க்க, அச்சுதனுக்கோ அவளை அப்படி கிறங்கடித்து நிற்க வைப்பதில் ஒரு அலாதி சுகம்.
ஏதாவது பேசுவார்கள். கேலி கிண்டல் என்று ஏதேனும் பேசுவார்கள். அந்த பேச்சுக்கள் அங்கே தொட்டு, இங்கே தொட்டு ஏதேனும் விஷம அர்த்தத்தில் கொண்டு முடிய, அர்ச்சனாவோ ஒரு நிலைக்கு மேல் கொஞ்சம் இதோ இப்படி வெட்கம் பூத்து திணறி நிற்பாள்.
அச்சுதன் அந்த அவளின் திணறலைப் பார்க்கவே, அவளோடு அத்தனை வாயாடுவான்.
‘என்னென்ன பேசுறீங்க அச்சத்தான் நீங்க..?’ என்று அவன் முன்னே விரல் நீட்டிட,
“என்ன பேசிட்டேன் நான்?!” என்றபடி, நீட்டிய அவளது விரல் பற்றி, லேசாய் கடித்தும் வைப்பான். அவன் அப்படி கடிப்பான் என்று தெரிந்தே, அடிக்கடி அவள் விரல் நீட்டுவதும் கூட.
இதோ இப்போதும் கூட, அதுபோலவே எதோ பேச எண்ண, அச்சுதனுக்கு அழைப்பு இன்னும் ஒரு கல்லூரி நண்பனிடம் இருந்து “அச்சுதா கிளம்பிட்டியா?” என்று
“யா..! இன்னும் பத்து நிமிசம்டா..” என்று சொன்னவன், அலைபேசியை வைத்துவிட்டு “இதுவே லேட் அர்ச்சு…” என்றிட, அவள் தயாராகி விட்டாள்.
எப்போதும் குறைசொல்ல முடியாத அவளின் ஒப்பனை தான். அதிகமும் இல்லை. இல்லவே இல்லை என்றும் சொல்ல முடியாத அளவும் இல்லை. பார்ப்பதற்கு பளிச் என்றும், பாந்தமாகவும் செல்லும் இடத்திற்கு ஏற்ப அவள் உடுத்தும் உடையும் என்று அச்சுதனுக்கு இன்னும் இன்னும் அவளை பிடிக்கவே செய்கிறது.
புதுமணத் தம்பதிகள் அல்லவா, வேஷ்டி சட்டையிலும் சேலையிலும் சென்றால் தானே இன்னும் அழகு. அதுபோலத்தான் இருவரும் கிளம்பி இருந்தனர்.
நீலவேணிக்கு அத்தனை மனத் திருப்தி. நடந்திடவே நடந்திடாதோ என்று ஏங்கிக்கொண்டு இருந்த மகனது திருமணம். அதுவும் அவனின் சங்கதிகள் அனைத்தும் தெரிந்து, அவனை விரும்பி மணந்துகொண்ட மருமகள். இதற்குமேலே என்ன வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டார்.
இருவரும் தயாராகி வர, மருமகள் வைத்துக்கொள்ளவென்று அழகாய் கட்டி வைத்திருந்த மல்லிப் பூ சரத்தை அவளிடம் கொடுக்க ”ரொம்ப நீளமா இருக்கு அத்தை…” என்றாள்.
“அதுக்கென்ன இப்போ.. நீளமா கொஞ்சம் வளர்த்துட்டா போச்சு…” என்றவள், அவர் கொடுத்ததை வாங்கி தலையில் வைத்துக்கொள்ள, கணவன் மனைவி இருவரும் ஜோடியாகவே கிளம்பிச் செல்ல, அச்சுதனுக்கு காரில் செல்கையிலேயே அத்தனை உற்சாகமாய் இருந்தது.
பல வருடங்கள் கழித்து, கல்லூரி நண்பர்களை சந்திக்கிறான். அதுவும் குடும்பஸ்தனாய். அந்த உணர்வே தனியாய் தான் இருந்தது.
“என்ன அச்சத்தான் ரொம்ப ஜாலியா இருக்கீங்க போல?” என்று அர்ச்சனா கேட்க,
“ஜாலியான்னு சொல்றதை விட, ஹேப்பியா இருக்கேன் அர்ச்சனா…” என, இது போதாதா அவளுக்கு. அவனது சந்தோசம் அவளையும் ஒட்டிக்கொண்டது. அதே மகிழ்வோடு தான், நண்பன் வீட்டு விசேசத்தில் கலந்துகொள்ள, அச்சுதனை கண்ட நட்புக்கள் அனைவருமே ‘ரொம்ப சந்தோசம் டா…’ என்றுதான் சொன்னார்கள்.
சிலர் வெளியூரில் இருந்து கூட வந்திருக்க, அச்சுதன் முகத்தில் புன்னகை மாறவில்லை. மறையவில்லை.
விசேசம் முடிந்து, மதிய உணவு முடிந்து, பின் அரட்டையில் இறங்கி, அதோ இதோ என்று கிளம்பவே மாலை நேரம் ஆகிட, மதியத்தில் இருந்தே மேகமூட்டமாய் தான் இருந்ததோ. இப்போதோ கரிய மேகங்கள் சூழ்ந்து கொண்டு இருக்க, மழை இப்போதோ அப்போதோ என்று இருக்க,
“ஓகே டா பார்க்கலாம்.. எல்லாம் வீட்டுக்கு போயிட்டு மெசேஜ் போடுங்க…” என்று பேசிவிட்டு, காரை எடுக்க அப்படி மழை கொட்டத் தொடங்கியது.
சென்றுவிடலாம் என்றுதான் அச்சுதன் எண்ணியது, ஆனால் நேரம் செல்ல செல்ல, மழை வலுவாக அர்ச்சனாவும் கூட “என்ன அச்சத்தான் இப்படி மழை அடிக்குது…” என்று சொல்ல, சரியாய் நீலவேணியும் அழைத்துவிட்டார்.
“இங்கயும் நல்ல மழை அர்ச்சனா.. அதுதான் கால் பண்ணேன்.. மாட்டிக்கிட்டீங்களா?” என்று கேட்க,
“பார்த்தும்மா.. பொறுத்து வாங்க.. பக்கத்துல எதுவும் ஹோட்டல் போல இருந்தா ஸ்டே பண்ணிக்கோங்க.. மழை விட்டதும் கிளம்பிவாங்க…” என்றுவிட, காரை நிறுத்தியதுமே, அச்சுதனும் அதைத்தான் யோசித்தான்.
இன்னும் சில அடி தூரம் தான். செல்லும் வழியில் ஒரு நட்சத்திர உணவகம், தாங்கும் வசதியோடு இருக்கிறது. சென்றுவிடலாம் என்று எண்ணியிருக்க, மழை விடுவது போல் தெரியவில்லை. நீலவேணி எப்போதுமே, வெளியூர் பிரயாணம் என்றால், காரில் ஒரு செட் மாற்று உடை வைத்து விடுவார். இப்போதும் கூட அப்படித்தான் மருமகளிடம் இதை சொல்லியும் இருக்க
“நாங்க வந்துடுவோம் தானே அத்தை…” என்றாள்.
“இல்லம்மா.. எப்பவும் ஒரு செட் ட்ரெஸ் இருக்கிறது நல்லது.. வெளியூர்னு எங்க, எப்போ கிளம்பினாலும் வண்டியில ஒரு செட் ட்ரெஸ் இருக்கணும்..” என்று சொல்லியிருக்க, இதோ காரில் இருந்து இறங்கி, அவர்களுக்கான அறை பேசி, அறைக்குள் நுழையும் போதே தொப்பலாய் நனைந்து இருந்தனர்.
“நல்ல வேலை அச்சத்தான் கார்ல அத்தை ட்ரெஸ் வச்சு விட்டாங்க..” என்று சொல்லிக்கொண்டவள், உடை மாற்றி வர, அச்சுதனோ மும்முரமாய் அலைபேசியில், அதுவும் சிரித்தபடி மெசேஜ் தட்டிக்கொண்டு இருந்தான்.
எல்லாம் அவனது நண்பர்கள் குழு தான்.
பல வருடங்கள் கழித்து, அந்த வாட்ஸ் அப் க்ரூப்பிற்கு உயிர் வந்திருந்தது போல.
அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் வீடு போய் சேர்ந்திருக்க, மழை என்றதும் அனைவரும் விசாரித்துக்கொள்ள, அச்சுதனோ இப்படி இடையில் சிக்கிக்கொண்டதும், பின் இப்படி ரூம் எடுத்திருப்பது சொல்ல, கேலி கிண்டல்கள் ஆரம்பித்து விட்டது.
‘புது மாப்ள என்ஜாய் பண்ணுடா…’ என்று ஆரம்பித்தவர்கள், ஆண்களுக்கே உரிய வகையில் பேசிக்கொள்ள, அச்சுதனுக்கோ முகத்தில் தோன்றிய ஒரு உல்லாச புன்னகை மாறவே இல்லை.
அர்ச்சனா உடை மாற்றி வந்தும் கூட இதோ ஐந்து நிமிடம் மேலாகி இருந்தது. அவள் பேசுவது கூட, அவன் செவியில் ஏறாமல், அலைபேசியில் அரட்டையில் இருக்க,
“என்ன பண்ணிட்டு இருக்கீங்க நீங்க?” என்று கேட்டபடி அவனிடம் இருந்து அவனது அலைபேசியை பிடுங்கிப் பார்க்க, அவளது கண்களுக்கு அங்கே அவர்கள் கேலியில் ஆரம்பித்து, அடிக்கும் அரட்டை கூட்டு எழுத்து வடிவமாய் பட,
“ஏய் அர்ச்சு…” என்றவன், என்ன நினைத்தானோ மனைவி படிக்கட்டும் என்று விட்டுவிட்டானோ என்னவோ.
“ஆ!” என்று வாயில் விரல் வைத்தவள் “என்ன பேச்சு இதெல்லாம்.. பா…!” என்று அவனை அதிர்ந்து பார்க்க, அவனோ மெல்ல நகைத்துக்கொண்டான்.
“ஷ்..! எல்லாம் கிரீன் கிரீனா இருக்கு… நீங்க இப்படியெல்லாம் பேசுவீங்களா?” என்று கேட்க, அதற்கும் அவனிடம் புன்னகை தான் பதில்.
“இந்தாங்க பிடிங்க…” என்று அவள் சொன்னாலும், பொதுவாய் இந்த பேச்சுக்கள் எல்லாம், தங்களை வைத்து கேலி கிண்டலில் ஆரம்பித்து இருக்கிறது என்று தெரியவும், லேசாய் ஒரு கூச்சம் கூட வந்து ஒட்டிக்கொண்டது.
அலைபேசியை, அவன் கரத்தில் திணித்தவள் ஈரமாய் இருந்த அவளது கூந்தலை துவட்டிக்கொண்டே நகரப் பார்க்க, நண்பர்களின் பேச்சு கொடுத்த உந்துதலோ, இல்லை தனியாய் இப்படி ஒரு சூழலில் இருக்கும் மாற்றமோ, அதையும் தாண்டி ஒரு சாதா சல்வாரில், ஒப்பனைகள் எதுவுமின்றி, கழுத்தில் தாலி சங்கிலி மட்டும் அணிந்திருக்க, தனது ஈர முடியை துவட்டும் அவளின் ஓரப் பார்வையோ, இப்படி எதோ ஒன்று அச்சுதனை அர்ச்சனாவின் கரம் பற்றி இழுத்து, தன் மீது மோதிக்கொண்டு அவளை நிற்க வைத்தது.