அத்தியாயம் – 31

அர்ச்சனாவிற்கு அன்றைய இரவும் உறக்கம் வரவில்லை. கடந்த இரு தினங்களாய் நடக்கும் சங்கதி தான் இது. அது ஒரு இனிய படபடப்பு அவளுள். இதோ இப்போது கண்களை மூடினாலும், அச்சுதன் அன்று அவனது இமைகளை மூடிக்கொண்டு, ஒரு மந்தகாச புன்னகையோடு ‘ம்ம்ம்.. கிஸ் மீ…’ என்று சொன்னதே நினைவில் வந்து அவளை தள்ளாடச் செய்தது.

அவன் பக்கம் காதல் இருக்கிறதா என்று தெரியவில்லை என்றும் அவன் சொன்னாலுமே, அவன் பேச்சுக்களும், செயல்களும் என்று எல்லாமே அர்ச்சனாவிற்கு காதலாகவே தான் தெரிந்தது.

இதோ இப்போது கூட அவனோடு தான் பேசினாள்.

என்ன பேசினார்கள் என்று கேட்டால், அது இருவருக்குமே தெரியவில்லை.

‘ஸ்வீட் நத்திங்க்ஸ்…’ அதுபோலத்தான்.

ஆனாலும் அன்றைய தினம் அவளுக்கு இன்னமும் மறக்கமுடியவில்லை. பேச்சிலேயே அவளை ரொம்பவும் திணறச் செய்துவிட்டான்.

‘ம்ம்ம் கிஸ் மீ…’ என்று சொன்னவனை அதிர்ந்து அவள் பார்க்க, அவனது இதழில் இன்னும் புன்னகை விரிய, அதிலேயே கண்டுகொண்டாள், தன்னை சீண்டுகிறான் என்று.

“அச்சத்தான்…” என்று போலியாய் அவள் முறைக்க முயல, கண்களைத் திறந்தவன்

“நீதானே சொன்ன…“ என்று சொல்ல,

“நான் சொன்னா? உடனே இப்படி சொல்வீங்களா?” என்று கேட்டவளுக்கு வெட்கத்தில், இதழ்களின் ஓரங்கள் லேசாய் நடுங்கவும் கூட செய்தது.

“ஓ! அர்ச்சனாவுக்கு வெட்கம் எல்லாம் வரும்போலவே..” என்றவனிடம் ஒரு உல்லாச நகைப்பு.

“ச்சு..! போங்க…” என்று முகத்தை சுளிக்க,

 “ஹா.. ஹா…” என்று அதற்கும் சிரித்துக்கொண்டான்.

நிச்சயமாக அந்த நொடி, அவளோடு பேசிக்கொண்டு இருக்கும் இதோ இந்த நேரங்கள் எல்லாம் அச்சுதனுக்கு அப்படியொரு சந்தோசத்தைக் கொடுத்துக்கொண்டு இருந்தது. வாழ்வில் இப்படியான தருணங்கள் எல்லாம் வருமா என்று கூட அவன் எண்ணியது இல்லை.

அவளுக்கோ, வாழ்வில் இப்படியான நேரங்கள் எல்லாம் வராதா என்ற ஏக்கங்கள் நிறைய இருந்தது.

இன்று இருவருக்கும் அது நடந்துவிட, காரணமின்றி அவனுக்கு சிரிப்பும் பேச்சுக்களும் நீண்டுகொண்டே தான் போனது. அவளுக்கோ மனது நிறைந்து, அவனது பேச்சினில் அப்படியொரு பூரிப்பு அவள் முகத்தில்.

என்னதான் அவன் காதல் இருக்கிறதா தெரியாது என்றாலும், அவன் மனது என்னவென்று அவள் உணர்ந்தே இருந்தாள்.

“உங்க கிட்ட பேசிட்டு வந்து, முடிவு சொல்றேன்னு சொல்லிட்டு வந்தேன்..” என்று அர்ச்சனா மீண்டும் முகத்தை பாவம் போல் வைத்துகொண்டு சொல்ல,

“அடடா..!! அவ்வளோ நல்லவிதமாவா பேசிட்டு வந்த நீ?” என்றான் நம்பாத ஒரு குரலில்.

“என்ன நீங்க?” என்று அவன் முன்னே அவள் விரல் நீட்டி எதோ பேச வர,

“அடிக்கடி விரல் நீட்டுற நீ…” என்றவன், லேசாய் அவளுக்கு வலிப்பது போலவே தான் பிடித்தான்.

“ஷ்! யப்பா.. என்ன?” என்று அவள் திகைத்துப் பார்க்க,

“சும்மா…” என்று இரு தோள்களையும் குலுக்கியவன் “ம்ம்ச் ஒரு ப்ரோபோசல் இல்லை.. ஒரு கிஸ் இல்லை.. ஆனாலும் இது லவ் மேரேஜ்… ஹ்ம்ம்.. பாவம்டா அச்சுதா நீ…” என்று அவனுக்கு அவனே சொல்வது போல சொல்லிக்கொள்ள,

“என்ன பாவம்? என்ன பாவம்?” என்று வேகமாய் வந்து அவன் முன்னே நிற்க,

“வேண்டாம்.. நீ கிளம்பு..” என்றான்.

“ஏன்?!” என்று நெற்றி சுருக்கி கேட்க,

“ஜென்ட்ஸ் மைண்ட்செட் உனக்கு புரியுமா புரியாதா?” என்றான் வேகமாய்.

“என்ன அச்சத்தான்?” என்றவளுக்கு நிஜமாய் புரியவில்லை.

“சுத்தம்.. நீ என்ன பாரின்ல போய் இருந்தியோ தெரியலை. நீயோ கண்டதும் காதல்னு சொல்லிட்டு இருந்த. நானோ இப்போ உன்னை கல்யாணம் பண்ண போறேன்னு சொல்லிட்டு இருக்கேன். நீயும் நானும் இப்போ தனியா வேற இருக்கோம்.. நீயோ கிஸ் பண்ணனும் போல இருக்குன்னு சொல்ற. அப்போ என் மனசு என்னாகும்?” என்று அவன் நீட்டி விளக்கி பேச,

“அதுவா?!!” என்று இழுத்தவளுக்கு புரியாமல் எல்லாம் இல்லை.

முகத்தில் கொஞ்சம் செம்மை பூக்க “என்னாகும்?!” என்றாள் தாழ்ந்த குரலில்.

“வேணாம் அர்ச்சனா.. நீ என்னை ரொம்ப மனசு மாத்தி விடுற…” என்று பேச, அவளுக்கோ அத்தனை சல்லாபமாய் இருந்தது.

கிளம்பிடலாம் என்று தோன்றினாலும், கிளம்பவும் மனது வரவில்லை. இப்படியே, இங்கேயே இவனோடு இருக்கவேண்டும் போலவும் இருக்க, வீடு செல்லாமலும் இருக்க முடியுமா என்ன?!

அதுவும் இன்றுதான் அச்சுதன் திருமணத்திற்கு சம்மதம் என்றே சொல்லியிருக்கிறான். முதல் நாளே அவனைப் போட்டு ரொம்பவும் எல்லாம் பயப்படுத்தி விடக் கூடாது என்று அவள்பாணியில் எண்ணிக்கொண்டவள்,

“சரி… நான் கிளம்புறேன்…” என்று நகரப் பார்க்க,

அச்சுதனுக்குமே ‘இன்று தானே ஆரம்பித்திருக்கிறது…’ என்று அமைதியாய் தலையை ஆட்டி வைக்க,

“உங்க வீட்ல சொல்லிட்டீங்களா?” என்றாள்.

“எப்படியும் நீ வந்து சண்டை போடுவன்னு தெரியும்.. உன்னோட சண்டை போட்டு முடிச்சிட்டு, தெம்பா எங்கம்மா கிட்ட போய் சொல்லிக்கலாம்னு தான் இத்தனை நேரம் வெய்ட் பண்ணிட்டு இருக்கேன்..” என்றவன் “எப்படியும் அனிதா இந்நேரம் பிரகாஷ் கிட்ட சொல்லிருப்பா தானே…” என்றும் சொல்ல,

“இல்லை.. நான் வந்து பேசாம, யாரும் யாருக்கும் எதுவும் சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டு வந்தேன்…” என்று அர்ச்சனா சொல்ல,

“அர்ச்சனான்னு பேர் வச்சதுக்கு பதிலா, உனக்கு அதிகாரம்னு வச்சிருக்கலாம்…” என்று அச்சுதன்  வம்பிழுக்க,

“ஓஹோ! உங்களுக்கும் கூட அச்சுதன்னு வச்சதுக்கு பதிலா, அதிரசம்னு வச்சிருந்தா, கடிச்சு சாப்பிட்டு போயிட்டே இருந்திருப்பேன். இப்படி காதல்னு சுத்திட்டு இருக்க மாட்டேன்…” என்று அவளும் பதிலுக்கு பதில் பேசினாள்.

அச்சுதனோ “மேடம் பாரின் ரிட்டர்ன்.. நீங்க புரிஞ்சு பேசுறீங்களா, புரியாம பேசுறீங்களான்னு எல்லாம் எனக்குத் தெரியலை. ஆனா என் மைன்ட் என்னென்னவோ யோசனைக்கு எல்லாம் ஓடுது. சோ இப்போதைக்கு நீங்க கிளம்புறதே ரொம்ப உசித்தம்…” என்று சொல்லி, அவள் தோள் பற்றி, கதவு நோக்கி திருப்ப,

“என்னை இத்தனை நாள் எவ்வளோ சுத்தல்ல விட்டீங்க.. இப்போ நீங்க டெம்ப்ட் ஆகிட்டே இருங்க…” என்று ரகசிய குரலில் சொன்னவள், அவன் பதில் சொல்லும் முன்னமே, வேகமாய் கிளம்பியும் விட்டாள்.

‘பா… சாமி…’ என்று தலையை உலுக்கிக்கொண்டவனுக்கு ஒரு உல்லாச மனநிலை.

அதே மனநிலையோடு தான் வீடு வந்தவன், நீலவேணியிடம் முதலில் தன் முடிவினைக் கூற

“அச்சுதா… நீ.. நீ நிஜமா தான் சொல்றியா?” என்று கேட்டவருக்கு நம்ப முடியவில்லை.

அச்சுதன் – அர்ச்சனா இருவருக்குள்ளும் எதோ நடந்துகொண்டு இருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. ஆனால் மகனே அதுவாகினும் சொல்லட்டும் என்று நினைக்கும் போது தான், அவன் சென்னை சென்றது.

வழக்கமான செக்கப் என்று எண்ணியிருக்க, உடன் வருகிறேன் என்றவரையும் வேண்டாம் என்றுவிட்டான். சென்னையில் இருந்து வந்தவனும் கூட எதுவும் சொல்லவில்லை.

நீலவேணி கேள்வியை பார்த்தபோது கூட “எல்லாம் நார்மல் தான் ம்மா…” என்றுமட்டும் தான் சொன்னான். இப்போது வந்து இதனை எல்லாம் சொல்ல, மகனை இறுக கட்டிக்கொண்டு விட்டார் நீலவேணி.

“ரொம்ப.. ரொம்ப சந்தோசம் அச்சுதா.. எங்க நீ வாழ்கையில் அப்படியே தேங்கி நின்னுடுவியோன்னு பயந்துட்டேன்…” என்று நீலவேணி உணர்ச்சி ததும்ப பேச,

“ம்மா…” என்று ஆதுரமாய் அவர் தோள்மீது கரம் போட்டவன் “உண்மையை சொல்லுங்க அர்ச்சனா வந்தபிறகு, இப்படி நினைச்சு பயந்துட்டா இருந்தீங்க எல்லாம்?” என்று கேட்க, சட்டென்று நீலவேணி முகத்தில் ஒரு புன்னகை.

“போடா…” என்று அவனின் முதுகில் தட்ட,

“எல்லாம் மறைமுகமா அவளுக்கு சப்போர்ட்  தானே…” என்று சொல்ல,

“என்ன பண்றதுடா, நீயோ பிடிகொடுக்கவே இல்லை…” என்று நீலவேணி அவனோடு பேசிக்கொண்டு இருக்கும் போதே, தாமோதரனுக்கும், சுரேந்திரனுக்கும் அழைத்து விசயத்தைச் சொல்லிவிட்டார்.

விளைவு, அடுத்த அரைமணி நேரத்தில் குடும்பத்து உறுப்பினர்கள் அனைவருமே அச்சுதன் வீட்டினில் இருக்க, அர்ஜூனும் பவஸ்ரீயும் மட்டும் தான் இல்லை.

பிரசாந்த் கூட ‘அர்ஜூன் வந்திருந்தா, இன்னிக்கு அச்சண்ணாவ ஒரு வழி பண்ணிருக்கலாம்..’ என்று பிரகாஷ் காதில் முனுமுனுக்க,

பிரகாஷோ “சரி.. இப்போ இது லவ் மேரேஜா இல்லை அரேஞ்சுடு மேரேஜா அச்சண்ணா..” என்று கேட்க,

‘ஏன் டா?!’ என்பது போல பார்த்தான் அச்சுதன்.

பெரியவர்களோ “ரொம்ப சந்தோசம் அச்சுதா. இப்போதான் மனசுக்கு நிறைவா இருக்கு…”என்று அவனை வாழ்த்த,

பாமினியோ “கல்யாணம் இப்போ உடனே முடியுமா?” என்றார் நீலவேணியிடம்.

“அதுதான் யோசனை பாமி… கடை திறப்பு இருக்கு.. அடுத்து அனிதா பிரசவம்.. எப்போன்னாலும் வலி வரலாம் இல்லையா.. டெலிவெரி முடிஞ்சா அடுத்து மூணு மாசம் ஒன்னும் பண்ண முடியாது. அவங்களும் பாவம் தானே.. பேறுகாலம் பார்ப்பாங்களா இல்லை கல்யாண வேலை பார்ப்பாங்களா?” என்று பேச, இத்தனைக்கும் அச்சுதன் எதுவுமே பேசவில்லை.

“என்னண்ணா ஒன்னும் பேசாம இருக்க…” என்று பிரசாந்த் கேட்க,

“பெரியவங்க நிறைய யோசிப்பாங்கடா.. அவங்களே பேசி முடிவு பண்ணட்டும்.. சில டென்சன்ஸ் எல்லாம் மனசுல ஏத்திக்க கூடாது…” என்றவன்

“எனக்கு ஒரே ஒரு விஷயம் தான். கூடியமட்டும் கல்யாணம் ரொம்பவே சிம்பிளா இருந்தா ஓகே. ஆனாலும் அவங்க என்ன சொல்றாங்கன்னு கேட்டுட்டு முடிவு பண்ணிக்கலாம்…” என்று வீட்டினில் சொல்லிவிட,

அதன்படி, அச்சுதன் வீட்டினில் இருந்து, திருமண விசயமாய் அனைவரும் பேச வருவதாக கார்மேகத்திற்கு சொல்ல, அன்றைய மாலை பொழுது அனைவரும் அங்கே வர, அர்ச்சனா வழக்கமா உடையில் எப்போதும் போலவே இருக்க,

அர்ஜூன் தான் “என்ன அண்ணி.. பொண்ணு பார்த்து வந்திருக்கோம்.. ஒரு பஜ்ஜி வடை இதெல்லாம் எதுவும் இல்லை.. நீங்களும் இத்தனை கேசுவலா இருக்கீங்க?” என்று அவளை கிண்டல் பேச, அர்ச்சனா மற்ற நேரமாய் இருந்தால், பதிலுக்கு பதில் கேலி கிண்டல் என்று பேசி இருப்பாள்.

ஆனால் இன்றென்னவோ, அதெல்லாம் இல்லை. அனைவரையும் பார்த்து ஒரு புன்னகை சிந்தியவள், ஒரு ஓரமாய் சென்று அமர்ந்துகொண்டாள்.

கார்மேகம் மகளிடம் பேசினார் தான்.

“இதுக்கு மேல கல்யாணம் எதெல்லாம் நீங்க எல்லாம் பேசி முடிவு பண்ணிக்கோங்க டாடி.. ஆனா மேரேஜ் சிம்பிளா இருக்கட்டுமே.. ரொம்ப கிராண்ட் வெட்டிங் எல்லாம் வேண்டாம்.. எனக்கு அதுல எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்ல டாடி…” என்று சொல்லிவிட,

அவள் எதனை மனதில் வைத்துக்கொண்டு இப்படி சொல்கிறாள் என்று புரியாத தந்தையா அவர்.

“சரிடா பேசிக்கலாம்…” என்றுவிட்டார்.

இதோ பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.. அச்சுதன் – அர்ச்சனா திருமணம் பற்றி.

ஆனால் அர்ச்சனாவும் அச்சுதனும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. நடக்கும் அந்த நிகழ்வுகளை எல்லாம் ரசித்துக்கொண்டு இருந்தார்கள். அவரவர் பாணியில் அதனை கிரகித்தும் கொண்டார்கள்.

அது இதென்று பேசி, ஒருவழியாய் கடை திறப்பு, அனிதா பிரசவம் எல்லாம் முடிந்து அடுத்த மூன்று மாதத்தில் திருமணம் என்று முடிவு செய்ய, அதனை உறுதி படுத்தும் விதமாய், இதோ இன்னும் இரண்டு நாளில் வரும் முஹூர்த்த நாளில் வந்து நிச்சயம் செய்வதாய் பேச, அர்ச்சனாவோ மௌனியாய் தான் இருந்தாள்.

அச்சுதனுக்கு தன்னை பிடிக்கும் என்று தெரியும். அந்த பிடித்தம், காதலாய் மாறுமா என்பது அவளுக்கு இத்தனை நாளில் பெறும் சந்தேகமாய் இருந்தது. உறவு என்றவகையிலேயே அந்த பிடித்தம் நின்று விடவும் வாய்ப்புகள் உண்டுதானே.

அவனை அவள் கட்டாயப்படுத்தவும் விரும்பவில்லை.

ஆனால் அச்சுதனோ, காதல் என்பதனையும் தாண்டி இதோ இப்போது கல்யாணம் எனும் புள்ளியில் வந்து நின்றுவிட்டான்.

வாழ்வில் மிக முக்கியமான ஒரு முடிவு தான்.

அவள் எப்படி அவனுக்காக எல்லாம் யோசித்தாளோ, இப்போதெல்லாம் அச்சுதனும் அவளுக்காக நிறைய யோசிக்கிறான்.

அதற்கு சான்றே அவன் எடுத்துக்கொண்ட மருத்துவ பரிசோதனை.

மனதினில் இப்படி என்னென்னவோ ஓடிக்கொண்டு இருக்க, அர்ச்சனா அமைதியாவே இருக்க, அச்சுதனின் பார்வை எல்லாம் அவளைத்தான் கவனித்துக்கொண்டு இருந்தது.

“என்ன அச்சண்ணா.. அண்ணி இத்தனை அமைதியா இருக்காங்க?” என்று அர்ஜூன் பேச,

“இத்தனை பேர் இருக்கோம்ல டா…” என்று அச்சுதன் எதோ வேகத்தில் சொல்லிவிட,

“ஓஹோ..! அப்போ நீங்க தனியா இருந்தா தான், வாய் திறப்பாங்களோ…” என்றவன்

“இதுக்கு அனிதா அண்ணியே பரவாயில்லை.. எப்பவும் ஒரே மாடுலேஷன்…” என்று சொல்ல,

“டேய் ஆரம்பிக்காதீங்கடா…” என்றான் அச்சுதன்.

அவளுக்கே, என்ன திடீரென்று அமைதியாகிவிட்டாள் என்றுதான் இருந்தது. காலையில் அத்தனை ஆர்பாட்டம் செய்தவள், இப்போது அமைதியாய் இருக்கவும், இத்தனை பெரியவர்கள் இருக்கையில் எழுந்து சென்று அவளுடன் தனியே பேசுவது என்பதும் நன்றாய் இருக்காது தானே.

“என்னாச்சு?!” என்று அவளுக்கு மெசேஜ் தட்டிவிட, அவளது அலைபேசி அவளது அறையினியில் இருந்தது.

இப்படி பேசி, இரவு உணவு முடித்து, அனைவரும் கிளம்பும் வரையிலும் கூட அர்ச்சனா இப்படி அமைதியான ஒரு புன்சிரிப்போடு தான் சுற்றிக்கொண்டு இருந்தாள்.

அனிதாவோ கணவன் வந்திருக்க “இன்னிக்கு இங்கயே இருங்களேன்…” என்றாள்.

பிரகாஷோ “அதுசரி.. கிளம்புறதுக்கு முன்னாடியே இதை நீ சொல்லிருந்தா, வீட்லயே சொல்லிட்டு இங்க வந்திருப்பேன்.. ரெண்டு நாள்ல இங்க நிச்சயம். அதுக்கான வேலை எல்லாம் பார்க்கணும் தானே…” என்று சொல்ல,

“அதுதான் சொல்றேன்.. இங்க அப்பா ஒருத்தரா என்ன செய்வார்.. நானும் இப்படி இருக்கேன்… அங்க அத்தனை பேர் இருக்காங்க இல்லையா..” என்று பேச, பிரகாஷிற்கு அதுவும் சரியெனப் பட,

கார்மேகத்திடம் “என்னென்ன செய்யனும்னு சொல்லுங்க மாமா…” என்று பொறுப்பான மூத்த மருமகனை நின்று கேட்க,

“வீட்ல தானே மாப்ள நிச்சயம் வச்சுக்கலாம்னு சொல்லிட்டாங்க.. அதுனால இங்க ஏற்பாடெல்லாம் பண்ணிடலாம்…” என்றுவிட்டார்.

பிரகாஷோ, மனைவியைப் பார்க்க, இவர்களைப் பார்த்த சுமிதாவோ “அக்கா பிரகாஷ் இன்னிக்கு இங்க இருந்துட்டு வரட்டுமே. அனிதா பாவம் அவனையே பார்த்து வைக்கிறா…” என்று நீலவேணி மற்றும் பாமினியிடம் பேச, இப்படியாக அனைவரும் ஒருவழியாய் கிளம்ப, பிரகாஷ் மட்டும் இங்கே தங்கிவிட,

அச்சுதன் அனுப்பிய மெசேஜ், அர்ச்சனா இரவு உறங்க வரும்போது தான் பார்த்தாள்.

அதற்கு அவள் பதில் சொல்ல, அடுத்து அவன் அழைத்துவிட, அப்படியே பேச்சுக்கள் நீள, இதோ இன்று தான் அவர்களின் நிச்சயம் வீட்டளவில் எளிமையாய் முடிந்து இருந்தது.

அனிதாவின் விசேசம் ஒவ்வொன்றும் எத்தனை விமர்சையாய் நடந்ததோ, அர்ச்சனாவிற்கு எல்லாமே எளிமையாய் தான் நடந்தது. ஆனால் வீட்டளவில் என்றாலும், கார்மேகம் இரண்டே நாளில் வீட்டையே அப்படி புதுபித்து இருந்தார்.

ரோஜாவிற்கு துணையாய் அனைத்து வேலைகளிலும் முல்லை இருக்க, அனிதாவிற்கோ நடப்பதை எல்லாம் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிய, அர்ச்சனாவிற்கு அன்றைய தினம் அப்படியொரு இனிமையை கொடுத்தது.

இருவருமே இப்படியொரு தினம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை.

மெல்லிய ஒப்பனை தான் செய்திருந்தாள் அர்ச்சனா. எளிய அலங்காரம் தான். ஆனாலும் அதுவே அவளை பேரழகி போலத்தான் காட்டியது. அவளது இதழில் உறைந்திருக்கும் புன்னகையும், கண்களில் தெரியும் சந்தோசமும் அவளை இன்னும் இன்னும் அச்சுதன் கண்களுக்கு அழகாய் காட்ட,

கன்னத்தின் இரு பக்கமும் லேசாய் சந்தன, குங்குமம் பூசி லேசாய் தலை தாழ்ந்து அர்ச்சனா அமர்ந்திருந்த விதம், அச்சுதன் மனதில் அப்படியே ஒட்டிக்கொண்டது.

“அண்ணா ரசிச்சது போதும்.. எல்லாம் போய் பொட்டு வச்சாச்சு.. நீதான் போகணும்…” என்று பிரசாந்த் சொல்ல,

“போலாம் டா…” என்றான் வேண்டுமென்றே சோம்பலாய்.

“என்னண்ணா?” என்று கேட்க, அதேநேரம் அர்ச்சனா மெல்ல நிமிர்ந்து அச்சுதனைப் பார்க்க, அதன் பிறகு தான் அச்சுதன் எழுந்து செல்ல

“டேய் அர்ஜுனா…” என்று தம்பியை அழைத்தவன் “லவ் பண்றேன்னு சொன்னவனை எல்லாம் நம்பலாம் டா.. ஆனா கல்யாணமே பண்ணமாட்டேன்.. லவ் எல்லாம் இல்லை அப்படின்னு சொல்றவனை மட்டும் நம்பிடவே கூடாது..” என்று பேச,

பிரசாந்த் பேசியது அங்கே அனைவரின் காதிலும் விழுந்து வைக்க, அச்சுதன் திரும்பிப் பார்த்தவன் கூட ‘கொல்லப் போறேன் பாரு…’ என்று தம்பியை விரல் நீட்டி மிரட்டியவன், சிரித்தபடியே அர்ச்சனா பக்கம் போக, இருவருக்கும் வார்த்தைகள் எல்லாம் வரவில்லை.

அர்ச்சனா அருகில் கொஞ்சம் தள்ளித்தான் அச்சுதனுக்கு இருக்கை போட்டிருந்தார்கள். ஜோடியாய் அமரவைக்கவில்லை எனினும், அச்சுதன் கொஞ்சம் பக்கமாய் அமரட்டும் என்று இருக்கை போட்டிருக்க, அவனோ அர்ச்சனாவிற்கு நேராய் சென்று அமர்ந்துகொண்டான்.

இப்போதோ, அர்ச்சனா அவனைப் பார்த்த பிறகே எழுந்து, அருகில் வர நீலவேணியோ அவரின் வருங்கால மருமகளுக்கு பிரத்யேகமாய் வடிவமைக்கப் பட்டிருந்த வைர மோதிரம் கொண்டு வந்திருக்க, அச்சுதன் வரவும் அதனை மகன் கரத்தில் கொடுக்க,

அதனை கையில் வாங்கியவன், மற்றொரு கரத்தை அர்ச்சனா நோக்கி நீட்ட, அர்ச்சனாவோ அவளது இடக்கரத்தை அவன் பக்கம் நீட்ட, அழகாய் அவளது மோதிர விரலில் அச்சுதன் அந்த மோதிரத்தை அணிவித்துவிட, இளையவர்களின் கரகோஷத்தில், பெரியவர்களின் சந்தோசத்தில், அந்த இடமே அத்தனை ஆரவாரமாய் இருந்தது.

இருவருமே உறங்கும் முன்னர் ஒருவரோடு ஒருவர் பேசிவிட்டு உறங்கப் பழக, அன்றைய தினமும் அப்படித்தான்.

அச்சுதன் சொன்னான் “ரொம்ப சைலன்ட் ஆகிட்ட அர்ச்சனா நீ…” என்று.

அவளுக்குமே அதற்கான காரணம் தெரியவில்லை. பேச தோன்றவில்லை. மனது நிறைவாய் இருக்கும்போது பேச்சுக்கள் வராதோ என்னவோ.

ஆனால் அச்சுதனோடு தனியே அலைபேசியில் பேசுகையில் நிறைய பேசுகிறாள். இருந்தும் அவளிடம் ஒரு அமைதி குடிகொண்டுவிட்டது.