அத்தியாயம் 3

மாலையில் ராஜமாதாவை மீனாட்சி சந்திக்க வேந்தன்புரம் சென்றபோது அவளை எதிர்கொண்ட தீரன் அவளது அடையாள அட்டையை கொடுத்தபடி, “முதல் நாள் வேலை எப்படி போச்சு?” என்று சாதாரணமாக கேட்டான். தனது சந்தேக வட்டத்திற்குள் அவள் இருப்பதாக அவன் காட்டிக் கொள்ளவில்லை.

அவள், “நல்லா போச்சு” என்றாள்.

“ஹ்ம்ம்.. என்ன இந்த பக்கம்?”

“டெய்லி இந்த நேரத்தில் ராஜமாதா ரிப்போர்ட் பண்ணச் சொல்லி இருக்காங்க”

“அப்படியே என் கிட்டயும் சொல்லிடுங்க”

“ராஜமாதாவை பார்த்துட்டு வரேன்” என்று கூறி அவள் சென்றாள்.

மீனாட்சி அனுமதி பெற்றுக் கொண்டு ராஜமாதாவின் அறையினுள் சென்று அன்று நடந்தவற்றை சொல்லி முடித்தாள்.

ராஜமாதா அமைதியாக கேட்டுக்கொண்டாரே தவிர அவரிடத்தில் சிறு தலை அசைப்பு கூட இணக்கமாக இல்லை.

அப்பொழுது, “கிளாசிக் பியூட்டி” என்ற குரலில் மீனாட்சி திரும்பிப் பார்க்க, இளவரசியுடன் வந்த இளைஞன் தான் புன்னகையுடன் அதை கூறி இருந்தான். 

அவனது பார்வையை வைத்தே அவன் தன்னைத் தான் கூறி இருக்கிறான் என்று தெரிந்தாலும் எதுவும் சொல்லாமல் அவள் முன் பக்கம் திரும்ப, ராஜமாதா அவளை முறைத்துக் கொண்டிருந்தார்.

‘ரைட்டு’ என்று மனதினுள் நினைத்தவளுக்கு அந்த இளைஞன் தான் இளவரசன் என்று புரிந்து போனது.

ராஜாமாதா, “நீ கிளம்பலாம்” என்று முறைப்புடன் கடுமையான குரலில் கூற,

இளவரசன், “இந்த பியூட்டி யாருன்னு சொல்லலையே ராஜமாதா” என்றான். அவனது பேச்சு ராஜமாதாவிடம் என்றாலும் பார்வை மீனாட்சியிடமே இருந்தது. அதை உணர்ந்தாலும் அவள் அவன் பக்கம் திரும்பவே இல்லை.

ராஜமாதா இன்னும் கடுமையாக மீனாட்சியை முறைக்க, அவள் விட்டால் போதுமென்று அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

இளவரசன் செல்லும் மீனாட்சியையே பார்க்க, இளவரசி கோபக் குரலில், “அண்ணா” என்று அழைத்தாள்.

அவள் பக்கம் திரும்பிய இளவரசன் மென்னகையுடன், “நீயும் பியூட்டி தான்.. ஆனா அந்த பெண் கிளாசிக் பியூட்டி” என்றான்.

அவள் பல்லை கடித்துக் கொண்டு முறைத்தாள்.

அவனோ சிரிப்புடன், “உண்மை எப்போதும் பாகற்காய் தான்” என்றான்.

ராஜமாதா கோபத்துடன் சற்று குரலை உயர்த்தி, “விக்கிரமா” என்று அழைத்தார்.

அவரது கோபத்தில் சட்டென்று அடங்கியவன் அமைதியான குரலில், “என்ன ராஜமாதா?” என்றான்.

அவர் அதே கோபத்துடன், “உன் தந்தை செய்த தப்பை நீயும் செய்யாதே.. இந்த அரண்மனைக்கு ஒரு மலர்விழி போதும்” என்றார்.

சட்டென்று அவனது முகம் இறுகிவிட, “எனக்கு தராதரம் தெரியும்..” என்றான்.

“உன் பார்வை படக் கூட ஒரு தராதரம் வேண்டும்.. இனி அவள் பக்கமே உன் பார்வை செல்லக் கூடாது”

“இப்படி முன்னாடியே நீங்க தடா போட்டு இருந்தால் இந்நேரம் நான் தான் ராஜா..” 

“இப்பவும் நீ தான் ராஜா”

“உங்களுக்கு மட்டும் தான் நான் ராஜா.. நடைமுறையிலும் மக்கள் மனதிலும் அவன் தான் ராஜாவா இருக்கிறான்.. தொழில் நடக்கிற இடத்தில் எனக்கு மதிப்பே இல்லை.. நான் டம்மி பீஸ் மாதிரி தான் இருக்கிறேன்.. அவன் சொல்றதைத் தான் கேட்கிறாங்க.. இன்னைக்கு கூட நான் ஒரு சட்டத்தை போட்டா, அதை நான் செயல் படுத்தும் முன்னாடியே ஒண்ணுமில்லாம பண்றான்” என்று கோபமும் வெறுப்புமாக கொந்தளித்தான்.

“கூடிய சீக்கிரம் இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன்” என்று ராஜமாதா கூற, இளவரசன் நம்பிக்கை இல்லாமல் அவரைப் பார்த்தான்.

இளவரசி, “இப்படி தான் அவன் ராஜா ஆனதில் இருந்து சொல்லிட்டே இருக்கிறீங்க” என்றாள்.

‘இந்த முறை என் கணக்கு தப்பாது’ என்று மனதினுள் சொல்லிக் கொண்டவர், “சரி.. உங்க அறைக்கு போங்க” என்றார்.

இருவரும் அதே மனநிலையில் அவரவர் அறைக்கு சென்றனர்.

தீரனிடம் சென்று அறிக்கையை மீனாட்சி கூறியபோது, அவற்றை அமைதியாக கேட்டவன்,

“மகாராணி ஒத்துளைச்சாங்களா?” என்று கேட்டான்.

“ஹ்ம்ம்.. நல்லாவே ஒத்துளைச்சாங்க” 

“அப்போ முதல் சந்திப்பிலேயே மகாராணி மனதில் இடம் பிடிச்சிட்டீங்க போல!”

“நான் பாசிடிவ்வா.. நேர்மறையா பேசியதில் பிடிச்சு இருக்கலாம்”

அவள் ஆங்கில வார்த்தை பேசி, உடனே அதை தமிழில் சொன்னதை மனதில் கொண்டு, “டிக்சனரி தேவை இல்லை போல!” என்றான்.

அவனது எண்ணத்தை புரிந்தார் போல் அவள், “அப்படி சொல்ல முடியாது.. ஆனா ராஜாவோட எண்ணம் சரினு தோணுச்சு” என்றாள்.

அவன் பார்த்த பார்வையில், அவள் சிறு தோள் குலுக்கலுடன், “தோணுச்சு” என்றாள்.

பின், “சரி நான் கிளம்புறேன்” என்று கூறி நகர்ந்தவள் சற்று நேரம் நடக்கலாம் என்ற எண்ணத்தில் தோட்டத்திற்கு சென்றாள். 

தீரன் மனதினுள், ‘இப்போ வெளிப்படையா பேசுற மாதிரி இருக்கிறது.. இந்த பொண்ணு நமக்கே போக்கு காட்டுதே!’ என்று நினைத்துக் கொண்டான்.

தோட்டத்தில் நடந்துக் கொண்டிருந்த மீனாட்சி அப்படியே ரோஜாவனதின் தோட்டத்திற்குள் சென்றிருந்தாள்.

பல வண்ண ரோஜாக்களை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தவள், “முதல் நாளே திருட்டுத் தனம் செய்ய தனி தைரியம் வேண்டும்” என்ற குத்தலான கடுமையான குரலில் சட்டென்று திரும்பினாள்.

மாறவர்மசிம்மன் சிம்ம அவதாரமான சிங்கமாக நின்றுக் கொண்டிருந்தான். அவன் நின்ற தோரணையில் அவளுள் சிறு பயம் எழுந்தாலும் அதை திறமையாக மறைத்துக் கொண்டு சற்றே கோப விழிகளுடன், “நான் எந்த திருட்டுத் தனமும் செய்யலை” என்றாள்.

தன்னை கண்டு பயப்படாமல் எதிர்த்து பேசியவளிடம் சிறு சுவாரசியம் தோன்றினாலும் அதை சிறிதும் வெளியே காட்டிக்கொள்ளாமல், “இங்கே என்னை தவிர யாரும் வர அனுமதி இல்லை” என்றான்.

“அதை என்னிடம் யாரும் சொல்லவும் இல்லை, இங்கே என்னை யாரும் தடுக்கவும் இல்லை” என்றாள் நிமிர்வுடனே.

அவளது நிமிர்வில் மேலும் கவரப்பட்டவன் இப்பொழுதும் காட்டிக் கொள்ளாமல் கறார் குரலில், “நான் யாரென்று தெரியுமா?” என்று கேட்டான்.

“உங்கள் பேச்சை வைத்து நீங்க தான் ராஜா என்று நினைக்கிறேன்” என்றாள்.

மனதினுள் அவளுக்கு ‘சபாஷ்’ போட்டவன், “தைரியம் தான்” என்றான்.

“நம்மிடம் தவறு இல்லாத போது பயம் தேவை இல்லையே!”

“ஆனால் பிசியோதெரபிக்கும் ஆர்கியாலாஜிக்கும் கேர்-டேகருக்கும் சம்பந்தம் இல்லையே!” 

ஒரு நொடி தடுமாறியவள் ஆச்சரியமாக பார்த்தபடி, “சுத்த தமிழில் தான் பேசனும் என்பது உங்களால் எழுதப்படாத சட்டம்னு கேள்விப் பட்டேன்” என்று பேச்சை மாற்றினாள்.

“நீ அகராதி தேடியதையும், இந்த விஷயத்தில் நான் யாரையும் வற்புறுத்துவது இல்லை என்ற செய்தி உன்னை அடைந்ததாகவும் கேள்விப் பட்டேன்” என்றவன், “உறுதியான சட்டத்தை தவிர எந்த எழுதப்படாத சட்டத்தையும் நான் அமல் படுத்துவது இல்லை..” என்றான்.

தான் மகாராணி அறையில் பேசியது அவனுக்கு தெரிந்திருப்பதில் உள்ளுக்குள் ஆச்சரியம் கொண்டவள் வெளியே அவனிடம், “அப்போ உங்க கருத்து சரின்னு நான் சொன்னதும் உங்களுக்கு தெரிந்து இருக்குமே!” என்றாள்.

“கேட்ட கேள்விக்கு பதில்” என்றபடி அவன் அவள் விழிகளை ஊடுருவி பார்க்க,

அவள் தன்னை அறியாமல், “படிப்பு, வேலை.. எதுவும் நான் விரும்பியது எனக்கு கிடைக்கலை சார்.. கிடைத்ததையும் மத்தவங்க சொன்னதையும் தான் ஏத்துக்கிட்டேன்” என்று கூற,

“இப்போ யார் சொல்லி இங்கே வந்திருக்க?” என்ற கேள்வியில் சட்டென்று சுதாரித்தவள் தன்னை சமாளித்துக் கொண்டு, “நீங்க சொல்லி தான்” என்றாள்.

அவன் அதே ஊடுருவும் பார்வையை செலுத்த, 

நன்றாக சுதாரித்திருந்தவள், “நீங்க சொல்லி தானே ஏஜன்சி என்னை இங்கே அனுப்பி இருக்கிறாங்க” என்றாள்.

“சீக்கிரம் வந்த காரணம்?”

“முந்தின இடத்தில் ரிலீவ் ஆனதும் இங்கே வந்துட்டேன்”

“முந்தின இடத்தை விட்டு ஏன் வந்த?”

சிறு ஆச்சரியத்துடன் அவனை பார்த்தவள், “இந்நேரம் என்னோட ஜாதகமே உங்க கையில் இருக்குமே!” என்றாள்.

அவனது பார்வையில் அடங்கியவளாக, “இதுக்கு முன்னாடி பார்த்துட்டு இருந்த ஆன்ட்டியை அவங்களோட பையன் அவரோடவே லண்டன் கூட்டிட்டு போய்ட்டார்.. அதான் நான் ரிலீவ் ஆகிட்டேன்” என்றாள்.

இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை மறைகாணி பதிவில் பார்த்த தீரன் காவல் தலைவனை அழைத்துக் கொண்டு அவசரமாக இங்கே ஓடி வந்தான்.

மாறவர்மசிம்மனின் கடுமையான முறைப்பில்,

தீரன், “இங்கே வர அனுமதி இல்லைன்னு சொல்லலை.. மன்னிச்சுருங்க ராஜா” என்று கூற,

தலைவன் தலை குனிந்தபடி, “மன்னிச்சிருங்க ராஜா.. இந்த பக்கம் இருந்த காவலாளி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் உடம்பு சரி இல்லைன்னு அனுமதி கேட்டுட்டு கிளம்பி போனான்.. இரவு நேர காவலாளி இப்போ கொஞ்ச நேரத்தில் வந்திருவானேனு வேற காவலாளி போடலை.. தப்பு தான்.. இனி இப்படி நடக்காது.. மன்னிச்சிருங்க” என்றான். 

அப்பொழுது இரவு நேர காவலாளி மூச்சு வாங்க ஓடி வந்து நின்றான். ராஜாவை கண்டதும் தான் தான் தாமதமாக வந்துவிட்டோமோ என்ற பயம் அவனுக்கு.

தீரனிடம், “தண்டனையை நிறைவேத்திடு” என்று கூறிவிட்டு மாறவர்மசிம்மன் சென்றுவிட்டான்.

இரவு நேர காவலாளி கலவரத்துடன் தீரனைப் பார்க்க, தீரன் சிறு கவலையுடன் தலைவனைப் பார்த்தான்.

இரவு நேர காவலாளியை பார்த்து, “உன் மேல் தவறு இல்லை.. நீ வேலையை பார்” என்று அனுப்பிய தலைவன் தீரனிடம், “நான் செய்தது பெரிய தவறு.. தண்டனை தான் சரி” என்றான்.

மீனாட்சி புரியாமல், “என்ன தண்டனை?” என்று கேட்டாள்.

தீரன், “முப்பது சவுக்கடி தான் இதற்கு தண்டனை” என்றான்.

“வாட்!”

“இது சின்ன தண்டனை தான்”

“இந்த ஒரு இடத்தில் அரை மணி நேரம் ஆள் இல்லாததுக்கா இந்த தண்டனை?”

“எதிரி உள்ளே நுழைய ஒரு நிமிடம் போதுமே!” என்றான் தலைவன்.

“அம் வெரி சாரி” என்று அவள் வருத்ததுடன் கூற,

“உங்கள் மேல் எந்த தவறும் இல்லை” என்ற தலைவன் தீரனைப் பார்த்து தலையசைத்தான்.

இருவரும் கொலுவிருக்கை நோக்கி சென்றனர். அங்கே தான் விசாரணைகளும் தண்டனைகளும் நிறைவேற்றப்படும்.  

‘ஆத்தி நம்மளோட ஏமாத்து வேலை தெரிந்தால்!’ என்று மனதினுள் அலறிய மீனாட்சி, ‘இதுக்குனே ட்ரேயிண்டு ஆட்கள் இருக்க, கத்துக்குட்டியான என்னை அனுப்பி இப்படி மாட்டி விட்டுட்டீங்களே அங்கிள்! ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா இருக்கிறாங்க.. ஒழுங்கா அங்கிள் இங்கே இருக்கிறவங்களை பத்தி சொல்ல வந்ததை கேட்டு இருக்கணும்.. பெருசா நானே போய் தெரிஞ்சுக்கிறேன்னு சொல்லிட்டு வந்ததுக்கு தான் படுறேன்.. ஒரு நாளுக்கே நாக்கு தள்ளுதே!’ என்று நினைத்தபடி தனது அறைக்கு வந்ததும் நேராக ஆடை மாற்றும் அறைக்குத் தான் சென்றாள். 

பழைய கைபேசியை இயக்கி, “அங்கிள்ள்ள்ள்ள்ள்ள்” என்று குறுஞ்செய்தி அனுப்பினாள்.

அந்த பக்கம் இருந்து, “என்ன?” என்ற பதில் வந்தது.

“என்னை உசுப்பேத்தி இப்படி மாட்டி விட்டுட்டீங்களே!” என்று இவள் அனுப்ப,

ஒரு சிரிப்பு முகவடிக்கான குறியீடுடன், “என்ன நடந்துச்சு?” என்ற பதில் வந்தது.

கோப முகவடி குறியீடை அனுப்பியவள், “மாறன் ரொம்ப கேள்வி கேட்கிறான்..” என்று அனுப்பினாள்.

“ராஜானா சும்மாவா!” என்றவர், “ராஜா கேட்கிறார்னு சொல்லி பழகு” என்றும் சேர்த்து அனுப்பினார்.

“ரொம்ப முக்கியம்”

“முக்கியம் தான்.. உணர்ச்சிவசப்படும் நேரத்தில் மனதில் இருப்பது வெளியே வந்து விடும்.. என்னிடமும் இப்படியே பேசினா உன் மனதிலும் ராஜானு பதியும்”

“சரி” என்று அனுப்பியவள், “அவரோட பார்வையே உள்ளுக்குள் அள்ளுது” என்று அனுப்பினாள்.

“சைட் அடிக்கிறியா!”

மீண்டும் கோப முகவடி குறியீடை அனுப்பியவள், “பயத்தைச் சொன்னேன்” என்று அனுப்பினாள்.

“உனக்கு பயமா!” என்று அனுப்பியவர், “ஏன் அவன் சைட் அடிக்கிற மாதிரி இல்லையா?” என்று அனுப்பினார்.

“ப்ரீயா கொடுத்தாலும் எனக்கு இந்த டெரர் பீஸ் வேணாம்” என்று அனுப்பினாள்.

மீண்டும் சிரிக்கும் முகவடி குறியீடை அவர் அனுப்ப, இவள், “பை” என்று அனுப்பினாள்.

“ஜோக்ஸ் அபார்ட்.. உனக்கு இது நல்ல எக்ஸ்பிரியன்ஸ்.. உன்னால் கண்டிப்பா முடியும்.. உண்மையிலேயே உன்னால் மட்டும் தான் முடியும்” என்று அவசரமாக அனுப்பினார்.

அவள் அதை படித்தாலும் பதில் அனுபவில்லை. 

அவர், “உன்னை ராஜா கண்டு பிடித்தாலும் பிரச்சனை வராது” என்று அனுப்ப,

அவள், “அப்போ சொல்லிட வேண்டியது தானே?” என்று இப்பொழுது பதில் அனுப்பினாள்.

“இப்போ வேணாம்.. காரணம் உனக்கே தெரியும்”

‘ப்ச்’ என்று மனதினுள் சலித்தவள், “சரி.. மகாராணி ரூமுக்கு போகப் போறேன்.. பை” என்று அனுபியவள் இந்த முறை நிஜமாகவே கைபேசியை கழட்டி அதன் இடத்தில் வைத்துவிட்டு மகாராணி அறைக்குச் சென்றாள்.