அத்தியாயம் 15

உச்சகட்ட அதிர்ச்சியில் இருந்த மீனாட்சி வாய் திறந்து பேச திணறுகையிலேயே மாறவர்மசிம்மன் இறுக்கமான முகபாவத்துடன், “ரோஜாவனம் வா” என்று கூறி வேகமாக நகர்ந்தான்.

சில அடிகள் நகர்ந்து இருந்தவன் திரும்பி நகராமல் நின்றிருந்தவளைப் பார்த்து, “மீனாட்சி” என்று அழைத்தான்.

அவள் திடுக்கிட்டு அவனை திரும்பிப் பார்க்க, “வா” என்றான்.

அவள் சாவி கொடுத்த பொம்மையை போல் அவன் பின்னே சென்றாள்.

இளவரசன், ‘ச! என்ன பேசப் போகிறான் என்று தெரியவில்லையே!’ என்று குமைந்தான். பின், ‘கோபமா தான் இருக்கிறான்.. நம் திட்டம் பலித்து விடும்’ என்று கூறிக் கொண்டவன், ‘ஆனா ரோஜாவனம் அழைத்து செல்கிறானே!’ என்று குழம்பினான். பின் இறுதியாக, ‘கொலுவிருக்கை அழைத்துச் சென்றால் விஷயம் எப்படியும் கசிந்து விடும்.. உண்மை தெரிந்ததை காட்டிக் கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில் தான் ரோஜாவனம் அழைத்துச் சென்று இருப்பான்’ என்ற முடிவிற்கு வந்தவன் புன்னகையுடன் தனது அறைக்குச் சென்றான்.

ரோஜாவனத்திற்கு சென்றதும் அங்கிருந்த நீண்ட சோபாவில் அவளை அமருமாறு செய்கை செய்தவன் தானும் அதில் அமர்ந்தான்.

மீனாட்சி பேச வாய் திறக்கையில்,

மாறவர்மசிம்மன் இறுகிய குரலில், “என் அன்னையை சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்றதைப் போல் என்னையும் சாப்பாட்டில் விஷம் வைத்து கொல்லச் சொன்னாங்களா?” என்று கேட்டான்.

அவள் அதிர்ச்சியுடன் எழுந்து நின்றே விட்டாள். 

அவன் அலட்டிக் கொள்ளாமல், “சொல் தேவி” என்றான்.

இருந்த அதிர்ச்சியில் அவனது ‘தேவி’ என்ற அழைப்பை அவள் கவனிக்கவே இல்லை. அவள் கலங்கிய குரலில், “சத்தியமா உங்களைக் கொல்ல நான் இங்கே வரலை.. நான்..” என்றவளின் பேச்சை கையை நீட்டி தடுத்தான்.

அவள் தவிப்புடன் அவனைப் பார்க்க, அவனோ அவளை தீர்க்கமாக பார்த்தான்.

அவள் தவிப்புடன், “இளவரசர் சொல்லித் தான் அவங்க திட்டமே எனக்குத் தெரியும்.. ப்ளீஸ்..” என்றவளின் பேச்சை மீண்டும் இடையிட்டவன் கடுமையான குரலில்,

“உன்னை பேசாதே என்றேன்” என்றான்.

கலங்கி இருந்த விழிகளில் இருந்து கண்ணீர் வடிந்து விடவா என்ற நிலையில் இருக்க, அவள் தவிப்புடனும் ரணமாய் துடிக்கும் இதயத்துடனும் அவனைப் பார்த்தாள்.

அவளது தவிப்பை பார்க்க முடியாமல், அவன் கோபத்தை அடக்கிய நிதான குரலில், “ஆக, எந்த ஒரு சூழ்நிலையிலும் நான் உன்னை நம்புவேன் என்று நீ என்னை நம்பவில்லை” என்றான்.

சில நொடிகள் கழித்தே அவன் கூறியதின் முழு அர்த்தத்தையும் உணர்ந்தவள், “மாறா!” என்று கதறியபடி ஓடி வந்து அவன் மேல் விழுந்து அவனை அணைத்துக் கொண்டாள். 

எப்பொழுதும் அவளை அணைக்கும் கரங்கள் இன்று சிறிது கூட உயரவில்லை, ஆனால் அதை பற்றி அவள் சிறிதும் கவலைப் படவில்லை. 

இவ்வளவு நேரம் துயரத்தில் தேங்கி இருந்த கண்ணீர் இப்பொழுது ஆனந்த கண்ணீராக அவளது கன்னத்தில் கீழிறங்கியது. மகிழ்ச்சியுடன் அவனது முகம் முழுவதும் முத்தமிட தொடங்கி இருந்தாள்.

அவள் தன்னை நம்பவில்லையே என்ற கோபத்தில் இருந்தவனின் மனம் அவளது கதறலில் இளகத் தொடங்கி இருக்க, அவளது முத்தங்களில் அவனது கோபம் மெல்ல கரைந்தது. அவனது கரங்கள் மெல்ல அவளது இடையை சுற்றி வளைத்தது.

ஒரு நிமிடத்தில் நூறு முத்தங்களுக்கு மேல் கொடுத்திருந்தவள் சிறிது மூச்சு வாங்கியபடி அவன் கண்களை நோக்கினாள்.

அவளது இடையை இறுக்கி அவளை தன்னோடு நெருக்கியவன், “என் உதடுகள் மட்டும் என்ன பாவம் செய்தது தேவி!” என்று கேட்டான்.

அப்பொழுது தான், தான் இருக்கும் நிலையும் தனது செயலும் அவளது மூளையில் உரைக்க, நாணமும் கூச்சமுமாக விலகப் பார்த்தாள் ஆனால் அவளால் அசையக்கூட முடியவில்லை. 

சிறு கெஞ்சலுடன் அவள் அவனை நோக்க,

அவனோ பிடியை தளர்த்தியபடி, “நீ ஏற்படுத்திய மனக் காயத்திற்கு நீ தானே மருந்திட வேண்டும்..” என்றான்.

அதற்கு மேல் சிறிதும் யோசிக்காமல் அவனது உதட்டில் முத்தமிட்டு இருந்தாள். 

அன்று போல் சட்டென்று விலகாமல் நிதானமாக நீண்ட முத்தம் ஒன்றை கொடுத்து  விலகியவள், “என்னை மன்னி..” என்று முடிக்கும் முன் வன்மையாக அவளது இதழ்களை சிறையிட்டு இருந்தான்.

இதுவரை இல்லாத வகையில் சற்று வன்மையாகவே இதழணைத்து இருந்தான். அதில் இருந்தே அவனது காயத்தின் அளவு அவளுக்கு புரிய, அவனது முதுகை வருடிக் கொடுத்தாள். இந்த நிலையிலும் கூட தன்னை மன்னிப்பு கேட்க விடாமல் இதழ் அணைத்தவனின் மீது அவளுக்கு காதல் கூடியது.

நொடிகள் நிமிடமாக, தன்னை தொலைக்க தொடங்கியவனின் கரம் மெல்ல அவளது இடையில் இருந்து அவளது மேனியில் வலம் வர ஆரம்பித்தது. முதலில் அதிர்ந்தவள் பின் தனது நடுக்கத்தை மறைக்க முயற்சித்தபடி அமைதியாக இருந்தாளே தவிர அவனை தடுக்க நினைக்கவில்லை. 

ஆனால் அவளது நடுக்கத்தை உணர்ந்தவன் அவளது சரணாகதியில், தன்னவளை கௌரவிக்கும் பொருட்டு தனது உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்தான். அவளது முழு சரணாகதியில் அவனது காயம் மாயமாய் மறைந்தது.

இதழை பிரித்து நிறைவான புன்னகையுடன் அவளைப் பார்த்தவன் காதலுடன், “என் தேவி” என்றபடி அவளது நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டு அவளை விலக்கி தனது அருகே அமர வைத்தான்.   

அவள் அவனது நெஞ்சின் மீது கை போட்டு அணைத்தபடி அவனது தோளில் சாய்ந்துக் கொள்ள, அவன் மென்னகையுடன் அவளது தோளை சுற்றி அணைவாக கை போட்டான்.  

அந்த மோன நிலையை இருவருமே கலைக்க விரும்பவில்லை. 

சில நொடிகள் கழித்து அவள் மெல்லிய குரலில், “இளவரசர் பேசியதை நீங்க கேட்டதை தெரிந்து அதிர்ந்தாலும் உங்க மேல நம்பிக்கை இருந்துது.. எடுத்து சொல்லி புரிய வைக்க முடியும்னு தான் நினைத்தேன் ஆனா நீங்க மீனாட்சினு கூப்பிட்டீங்க!” என்று வருத்ததுடன் குற்றம் சாட்டும் குரலில் கூறியபடி அவனது முகத்தை அண்ணாந்து பார்த்தாள்.

‘ஆக என் தேவி என்னை நம்பி தான் இருக்கிறாள்!’ என்ற எண்ணம் தித்திப்பாய் அவனுள் இறங்கியது.

அவளை சமாதானம் செய்யும் வகையில் அணைப்பை இறுக்கி நெற்றியில் முத்தமிட்டவன், “நான் தேவி என்று தான் அழைக்க வந்தேன்.. ஆனால் விக்ரம் மறைவில் நின்றபடி நம்மை கவனிப்பதை நான் கண்டு கொண்டேன்.. அதனால் தான் உன் பெயரை சொல்லி அழைத்தேன்” என்றான்.

‘ஓ’ என்று மனதினுள் கூறிக் கொண்டவள், “என்னோட உண்மையான பெயர் மீனாட்சி இல்லை” என்றாள்.

அவன் அதிராமல், “யூகித்தேன்” என்றான்.

அவள் தான் கண்களை விரித்தபடி, “உங்களுக்கு தெரியாத விஷயம் என்று எதுவுமே கிடையாதா?” என்று கேட்டாள்.

அவன் மென்னகையுடன், “என் தேவியின் உண்மையான பெயர் தெரியாதே!” என்றான்.

“இப்போ தானே யூகித்தேன்னு சொன்னீங்க?”

“மீனாட்சி உனது உண்மை பெயராக இருக்காது என்று யூகித்தேன் ஆனால் உண்மையான பெயர் தெரியாது.. ஆனாலும் நூறு சதவிதமாக கருதவில்லை.. ஏனெனில் ஆசிரமத்தில் மீனாட்சி என்று கூறி தான் விசாரித்தார்கள்” 

“ஆசிரமத்தில் ஐயா வார்த்தையை மீறி யாரும் எதுவும் பேச மாட்டார்கள்.. காரணம் தெரியாவிட்டாலும் ஐயா ஒரு வார்த்தை சொன்னால், அதை ஆராயாமல் ஒத்துக்குவாங்க.. ஆசிரமத்தில், ஐயாவுக்கு மட்டும் நான் இங்கே வந்த காரணம் தெரியும்..  

இங்கே வரதுக்கு முன்னாடி மீனாட்சிங்கிற பெயரில் எல்லா சர்டிபிகேட்ஸ் ரெடி பண்ணோம்.. ராஜமாதாவுக்கு கூட என்னோட உண்மையான பெயர் தெரியாது.. இந்த பெயரை நான் சூஸ் பண்ண ரெண்டு காரணங்கள்.. ஒன்று ஆசிரமத்தில் என்னுடன் வளர்ந்த தோழியின் பெயர் மீனாட்சி.. அவளும் என்னோட ஒன்னா தான் டிப்ளமோ படிச்சா.. யு.ஜி-யிலும் என்னோட கிளாஸ்ஸில் மீனாட்சினு ஒரு பொண்ணு இருந்தா”

“ஆக கல்லூரிகளில் மேலோட்டமாக மீனாட்சி என்ற பெயரை மட்டும் கூறி விசாரித்த போது உனக்கு சாதகமான பதில் கிடைத்துவிட்டது..”

“ஹ்ம்ம்”

“இனி நான் கவனமாக இருக்க வேண்டும்.. யாரை பற்றி விசாரித்தாலும் புகைப்படத்தையும் காண்பித்து விசாரிக்கக் கூற வேண்டும்”

அவள் மென்னகைக்க, அவன், “சரி உன் பெயரை இப்போதாவது சொல் தேவி” என்றான்.

“பூங்குழலி” என்றவள், “நல்லவேளை நீங்க என்னை தேவினு சொல்லி தான் கூப்பிடுறீங்க.. மீனாட்சினு கூப்பிட்டு இருந்தால் ரொம்ப கஷ்டமா கில்டியா பீல் பண்ணி இருப்பேன்” என்றாள்.

“பூங்குழலி! பூங்குழலை போல் மென்மையான பெண்.. ஆனால் பொருத்தமான பெயர் இல்லையே!”