அத்தியாயம் 1

அதிசயமாக பொதிகை விரைவு தொடர்வண்டி முக்கால் மணி நேரம் முன்னதாக தென்காசி ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அந்த நிலையத்தில் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் தான் நிற்கும் என்பதாலும், மழை தூறிக் கொண்டிருந்ததாலும், மக்கள் பரபரப்பாக இறங்கிக் கொண்டிருக்க, தனது ஒற்றைப் பெட்டியையும் தோள்பையையும் எடுத்துக் கொண்ட மீனாட்சி நிதானமாக கீழே இறங்கினாள்.

மூச்சை இழுத்து விட்டு மழை சாரலையும் மண்வாசத்தையும் ரசித்து நுகர்ந்தாள். பின் அருகே இருந்த தேநீர் நிலையத்தில் தேநீர் வாங்கி அருந்தினாள். அந்த இளம்குளிருக்கு சூடான தேநீர் இதமாக இருந்தது. அவள் தேநீரை குடித்து முடித்த நேரத்தில் தூறல் நின்று ரயிலும் கிளம்பி இருக்க, நடைமேடையும் வெறிச்சோடி இருந்தது.

அவள் ரயில் நிலையத்திற்கு வெளியே சென்ற பொழுது ஒவ்வொரு வண்டியாக கிளம்பிக் கொண்டிருக்க, ஒரு சில ஆட்டோக்கள் மட்டுமே காலியாக இருந்தது. 

இரண்டு ஆட்டோ ஓட்டுனர்கள் வேகமாக அவள் அருகே வந்து, “எங்கமா போகணும்?” என்று கேட்டனர்.

“எழில்புரம் அரண்மனை” என்று அவள் சொன்னதும் அந்த இருவர் மட்டுமல்லாது அருகில் இருந்த ஓட்டுனர்களும் அவளை மேலும் கீழும் பார்த்தனர்.

‘என்னடா இப்படி பார்க்கிறான்க!’ என்று மனதினுள் நினைத்தவள், அவர்களிடம், “என்ன?” என்று புருவம் உயர்த்தியபடி கேட்டாள்.

சற்று முன்னால் வந்த ஒரு ஓட்டுனர், “அரண்மனைக்கே போகணுமா இல்லை பக்கத்தில் எங்கேயும் போகணுமா?” என்று கேட்டான்.

அவள் முறைப்புடன், “அரண்மனைக்குத் தான் போகணும்.. அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?” என்று கேட்டாள்.

அவன், “எனக்கு என்ன! இதுவரை யாரும் இப்படி வந்தது இல்லை.. அதான் கேட்டேன்” என்றான்.

“ஏன் வெளி ஊரில் இருந்து அரண்மனைக்கு யாரும் வேலைக்கு வந்தது இல்லையா?”

“சிலர் வந்திருக்காங்க.. ஆனா அவங்களை கூட்டிட்டுப் போக அரண்மனையில் இருந்தே வண்டி வரும்”

“ஓ! நான் ரெண்டு நாள் முன்னாடியே கிளம்பி வந்துட்டேன்.. நான் வரது தெரியாது”

இப்பொழுது அவன் மீண்டும் ஒருமாதிரி பார்க்க, அவள் எரிச்சலுடன், “இப்போ என்னை கூட்டிட்டு போக முடியுமா முடியாதா? இல்லை நான் டாக்ஸி புக் பண்ணி போய்க்கிறேன்” என்று பொரிந்தாள்.

“உங்களை கூட்டிட்டு போறதில் எனக்கு என்ன! உங்களை உள்ளே விடுவாங்களானு தான் யோசிச்சேன்”

“ஏன்? என் கிட்ட தான் அப்பாயின்மென்ட் ஆர்டர் இருக்குதே!”

“சரி வாங்க.. போய்கிட்டே பேசலாம்” என்றபடி அவளது பெட்டியை தூக்கியவன் மற்ற ஓட்டுனர்களை பார்த்து, “இந்த சவாரி நானே போறேன்” என்றான்.

பெட்டியை வண்டியில் ஏற்றியவன் அவள் ஏறியதும் வண்டியை கிளப்பினான்.

அவள், “இப்போ சொல்லுங்க.. ஏன் அப்படி சொன்னீங்க?” என்று கேட்டாள்.

“எனக்கும் எழில்புரம் தான்மா.. அங்கே அரண்மனைக்குனு சில கட்டுப்பாடுகள் இப்பவும் இருக்குது.. இப்பவும் ராஜா காலத்து அரண்மனையைப் போல் சும்மா கம்பீரமா இருக்கும்.. எங்க ராஜாவும் அப்படித் தான், வெளிநாட்டில் போய் படிச்சிட்டு பல தொழில்கள் பண்ணாலும், கம்பீரமா ராஜகளையுடன் தான் இருப்பார்..” என்றவனின் பேச்சை இடையிட்டவள்,

“மதிவாணன் சார் இறந்துட்டதா கேள்விப் பட்டேனே!” என்றாள்.

அவன் சோகமான குரலில், “ஆமா.. மூணு மாசம் முன்னாடி தான் ஒரு அக்சிடென்ட்டில் இறந்துட்டார்.. ரொம்ப நல்லவர்.. கோபமே வராது..” என்றான்.

“அப்போ ராஜானு இப்போ யாரைச் சொன்னீங்க?”

அவளைத் திரும்பி பார்த்தவன், “வேலைக்கு வர இடத்தைப் பத்தி விசாரிக்க மாட்டியாமா?” என்றான்.

“நான் விசாரிக்கலைனு உங்களுக்கு தெரியுமோ!” என்று அவள் சற்று கோபத்துடன் கூற,

அவன் லேசாக திரும்பி பார்த்தபடி, “இப்படி சொல்லாம கொள்ளாம கிளம்பி வந்ததுலேயே தெரியுதே!” என்றான்.

அவள் முறைக்கவும், “உண்மையைத் தான்மா சொல்றேன்..” என்றவன், “நான் ராஜானு சொன்னது இப்போ ராஜாவா இருக்கிற மகாராஜாவோட மூத்த பையனை”

“ஓ! மாறவர்மசிம்மன் சாரை சொல்றீங்களா?”

சட்டென்று திரும்பியவன், “அங்கே அரண்மனைக்கு போய் இப்படி பெயரைச் சொல்லிட்டு இருக்காதீங்க.. ராஜானு சொல்லி பழகுங்க” என்றான்.

அவள் சிரிப்புடன், “அப்போ மதிவாணன் சாரோட மனைவியை ராஜமாதானும், மற்ற பிள்ளைகளை இளவரசன் இளவரசினும் சொல்லணுமா?” என்று கேட்டாள்.

அவன், “நீங்க விளையாட்டா கேட்டாலும் அது தான் உண்மை.. அப்படித் தான் கூப்பிடனும்.. ஆனா மகாராஜாவோட அம்மா தான் ராஜமாதா.. இளவரசரோட அம்மா மகாராணி”

“அப்போ உங்க ராஜாவை கல்யாணம் பண்ணிக்கிறவங்க?”

“அவங்க ராணி.. இவங்க மகாராணி” என்றவன், “நல்லவேளை என்னோட ஆட்டோவுல வந்தீங்க.. இந்த விவரம் தெரியாம அரண்மனைக்கு போய் நீங்க பாட்டுக்கு தஸ்ஸுபுஸ்ஸுன்னு எதையாவது சொல்லி வச்சிருந்தீங்க, ராஜமாதா உடனே உங்க சீட்டை கிழிச்சு வெளியே அனுப்பி இருப்பாங்க.. ஆமா நீங்க என்ன வேலை பார்க்க வந்து இருக்கிறீங்க?”

“மாறன் சாரோட.. இல்லை.. உங்க மகாராணியை பார்த்துக்க வந்திருக்க கேர்-டேகர்”

“ஓ.. என்னோட மகாராணி இல்லை.. இனி உங்களுக்கும் அவங்க தானே மகாராணி”

“நான் என்ன நிரந்திரமாவா இங்கே இருக்கப் போறேன்!”

“இருக்கிறவரை உங்களுக்கும் அவங்க மகாராணி தான்.. அதுவும் நீங்க அரண்மனையில் வேற இருக்கப் போறீங்க”

“சரி.. உங்க ராஜா, ராஜமாதா, மகாராணி, இளவரசர், இளவரசி பத்தி சொல்லுங்க.. தெரிஞ்சுக்கிறேன்”  

“ஏதோ தெரிஞ்சுட்டு வந்தேன்னு சொன்னீங்க?”

“ஓரளவுக்கு தெரியும்.. விவரமா தெரியாதே!”

“நீங்க பொழச்சுப்பீங்கமா”

அவள் புன்னகையுடன், “தேங்க்ஸ்” என்றாள்.

“பாண்டிய ராஜவம்சத்தை சேர்ந்தவங்க.. ராஜா சிரிச்சு நாங்க பார்த்தது இல்லை ஆனா நியாயமானதை கேட்டால் உடனே செய்து கொடுக்கும் வள்ளல் பிரபு எங்க ராஜா.. அதே நேரத்தில் தப்போ, ஏமாத்து வேலையோ, துரோகமோ செஞ்சா தண்டனைகள் கடுமையா இருக்கும்.. அவரை எதிர்கிறவங்களுக்கு அவர் சிம்மசொப்பனம் தான்”

“ஆக உங்க ராஜா ஒரு டெரர் பீஸ்னு சொல்றீங்க”

அவன் முறைக்கவும், அவள் மென்னகையுடன், “நீங்க ராஜாவோட தீவிர ரசிகர் போல!” என்றாள். 

“இது அதுக்கும் மேல.. விசுவாசம்.. ஊரில் இருக்கும் எல்லோருக்குமே அவர் மேல் மரியாதையும் பாசமும் நன்றியும் விசுவாசமும் இருக்கும்.. அதே நேரத்தில் கொஞ்சம் பயமும் இருக்கும்”

“பார் டா! அப்படி என்ன செய்தார் உங்க ராஜா?”

“என்ன இப்படி கேட்டுட்டீங்க!” என்று பொங்கியவன், “அவர் பொறுப்பை கையில் எடுத்ததும் எங்க ஊருக்கு எவ்ளோ செய்து இருக்கார் தெரியுமா? மகாராஜாவும் செய்தார் தான் ஆனா இவர் அவருக்கு பல அடி மேல.. 

விவசாயிகளுக்கு எவ்வளவோ நல்லது பண்ணியிக்கார்.. ஸ்கூல் தரத்தை கூட்டி சிறப்பா மாத்தி இருக்கார், ஏழைகளுக்கு இலவசமாவும் மத்தவங்களுக்கு கம்மியான பீஸ்ஸில் காலேஜ் திறந்து இருக்கார்.. அதே மாதிரி தான் ஹாஸ்பிடலும்.. குறைந்த விலையில் மளிகை சாம்மான்கள் காய்கறிகள் கிடைக்கிற மாதிரி சூப்பர் மார்கெட் திறந்து இருக்கார், எங்க ஊரில் மால் கூட இருக்குது தெரியுமா! இதெல்லாம் போக கோவிலுக்கு கல்யாணத்துக்கு மருத்துவத்துக்கு படிப்புக்குனு நன்கொடை நிறைய கொடுக்கிறார்.. சுத்துவட்டாரதிலேயே இவ்வளவு செழிப்பான ஊர் எங்க ஊர் மட்டும் தான்.. அதுக்கு எல்லாம் எங்க ராஜா மட்டும் தான் காரணம்..” என்று நீளமாக பேசி முடித்தான்.

“அம்மாடியோவ்! எவ்ளோ பெரிய ஸ்பீச்!” என்று அவள் சிறு கிண்டலுடன் கூற, அவன் வண்டியை நிறுத்திவிட்டான்.

“நீங்க இறங்கி வேற வண்டியில போய்க்கோங்க” என்று அவன் கூற,

அவள் நிதானமாக, “இப்படி தான் நம்பி வந்தவங்களை நட்டாத்துல விடுறதுக்கு உங்க ராஜா சொல்லிக் கொடுத்து இருக்காரா?” என்று வினவ,

அவன் பல்லை கடித்துக் கொண்டு, “மகாராணியை பார்த்துக்க போற ஆளுனு தான் பொறுமையா பேசிட்டு இருக்கிறேன்” என்றான்.

“சரி நான் நடந்தே போறேன்.. இன்னும் என்ன பத்து கிலோமீட்டர் இருக்குமா?” என்றபடி அவள் பெட்டியை எடுக்கப் போக, 

அவன் வண்டியை கிளப்பியபடி, “நம்பி வந்தவங்களை எங்க ராஜா ஒரு நாளும் கைவிட்டது இல்லை.. அந்த ஒரு காரணத்துக்காகத் தான் இப்போ வண்டியை எடுக்கிறேன்” என்றான்.

ஒரு சாதாரண ஆட்டோகரனிடத்தில் இவ்வளவு விசுவாசமா என்று ஆச்சரியம் கொண்டவள், “சரி.. சரி.. உங்க ராஜாவை பத்தி நான் எதுவும் சொல்லலை.. இனி எனக்கும் அவர் தானே ராஜா” என்றாள்.

அவன் அமைதியாக வண்டியை ஓட்ட, அவள், “அதான் வெள்ளை கொடியை காட்டிட்டேனே! மத்தவங்களை பத்தியும் சொல்லுங்க” என்றான்.

“ராஜாவை தவிர பெருசா சொல்லிக்கிற மாதிரி யாரும் இல்லைமா.. மத்த யாருமே ராஜா மாதிரி மக்களுடன் பழகுறவங்க கிடையாது.. எல்லோரும் ராஜவம்சம்னு தள்ளி தான் இருப்பாங்க.. மகாராணியும் அப்படி தான் ஆனா  குணத்தில் அமைதியானவங்க..”

“மத்தவங்க பெயரையாவது சொல்லுங்க”

அவன் திரும்பி பார்க்கவும், அவள், “சும்மா சட்டு சட்டுன்னு திரும்பி பார்க்காம ரோட்டை பார்த்து வண்டி ஓட்டுங்க..” என்றாள்.

“நிஜமாவே பெயர் தெரியாதா?”

“முழு பெயர் தெரியாது அதான் கேட்டேன்.. உங்க ராஜா மகாராஜா முழுப்பெயர் மட்டும் தான் தெரியும்”

“அதெல்லாம் நாங்க எங்க வாயால் சொல்ல மாட்டோம்மா”

“அப்போ காலபோக்கில் அவங்க பெயரே உங்க சந்ததிகளுக்குத் தெரியாம போய்டுமே!”


“அது என்னவோ வாஸ்தவம் தான்மா.. ராஜமாதா பெயர் தெரியாது.. ராஜமாதானு தான் சொல்லுவாங்க.. முன்னாடி ஒரே ஒருமுறை மட்டும் எங்க அப்பத்தா சொல்லி கேட்டிருக்கிறேன்.. ஆனா ஞாபகம் இல்லை..”

“பார்த்தீங்களா! அதான் சொல்றேன்”

“ஹ்ம்ம்.. மகாராணி பெயர் மங்கையர்கரசி.. இளவரசர் விக்கிரமசெழியன்.. இளவரசி காஞ்சனமாலா..”

அப்பொழுது ஓட்டுனருக்கு கைபேசியில் அழைப்பு வரவும் அவன் அதை எடுத்து பேசியபடி வண்டியை ஓட்டினான்.

அவன் பேசி முடித்து வைத்ததும், அவள், “ராஜாவோட விதிகளை மட்டும் தான் மீற மாட்டீங்க போல!” என்றாள்.

அவன் புரியாமல், “என்னமா?” என்றான்.

“ட்ரஃப்பிக் ரூல்ஸ் கடைபிடிக்க மாட்டிக்கிறீங்கனு சொன்னேன்”

சற்று அசடு வழிந்தவன், “அப்படி எல்லாம் இல்லை மா.. வீட்டம்மா பேசுச்சு.. அதான்..” என்று இழுத்தான்.