அடுத்த அறைக்குச் சென்றதும் மீனாட்சி கண்களை விரித்தபடி, “வாவ்.. எவ்வளவு வித்யாசமான பொருட்கள்” என்றாள்.
அவளது முகத்தை உன்னிப்பாக பார்த்த மாறவர்மசிம்மன் அதில் உண்மையான உற்சாகம் தெரியவும் சகஜமானான்.
அந்த அறையில் ஒரு பக்கம் மண்ணில் செய்த பாத்திரங்கள் இருக்க, இன்னொரு பக்கம் அம்மி கல், ஆட்டுக்கல், உரல் என்று இருக்க, மற்றொரு பக்கம் பீங்கானால் செய்யப்பட தட்டுகள், கிண்ணங்கள், கரண்டிகள், வித்யாசமான பாத்திரங்கள் என்று நிறைய இருந்தன.
ஒரு மூலையில் நான்கு இரும்பு வளையங்கள் நான்கு கட்டங்களாக இருக்க, ஒவ்வொரு வளையத்திலும் ஒவ்வொரு மண் பானைகள் இருந்தன.
“தண்ணீரை சுத்தமான தண்ணீராக வடிகட்டி தரும் கருவி” என்றவன், “உனக்கு புரிவது போல் சொல்ல வேண்டும் என்றால், பில்ட்டர் இல்லை அக்குவாகாட் மாதிரி என்று சொல்லலாம்..”
கண்களை விரித்தவள், “இது எப்படி வேலை செய்யும்?” என்று கேட்டாள்.
“ஒவ்வொரு பானையிலும் வேர், மூலிகை என்று போட்டு வைத்திருப்பார்கள்.. மேலே இருக்கிற பானையில் தண்ணீரை ஊற்றுவார்கள்.. தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக கீழே இருக்கும் பானையில் விழும்.. அப்படியே அடுத்தடுத்த பானைகளிலும் நடக்கும்.. இதன் மூலம் குளிர்ச்சியான சுத்தமான மூலிகை தண்ணீர் கிடைக்கும்”
“வாவ்.. எப்படி யோசிச்சு இருக்கிறாங்க! சான்சே இல்லை!”
“இந்த அரண்மனைக்கு வந்த பிறகு, பழையபடி ஆங்கிலம் உன் வாயில் நர்த்தனம் ஆடுகிறது”
“அது சட்டுன்னு வந்துடுது” என்றவள் பீங்கான் பாத்திரம் ஒன்றை காண்பித்து, “இது என்ன? இதுல எதுக்கு சின்னதா ஓட்டை இருக்குது?” என்று கேட்டாள்.
“இது இரண்டு அடுக்கு பாத்திரம்.. இந்த ஓட்டையில் கொதிக்கிற நீரை உற்றி, ஓட்டையை அடைத்து, உள்ளே இருக்கும் அடுக்கில் உணவை வைத்தால் உணவு சூடாகவே இருக்கும்”
“ஓ! ஹாட் பாக்ஸ் மாதிரி”
“ஹ்ம்ம்.. அதே தான்”
“இதை இப்போ கூட யூஸ் பண்ணலாமே!”
“வேந்தன்புரத்தில் சிலதை பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறோம்..”
“ஓ!” என்றவள், “ஆயுதங்கள் எல்லாம் எங்கே இருக்குது?” என்று கேட்டாள்.
“மாடியில் இருக்கிறது.. இறுதியாக அதைப் பார்க்கலாம்” என்றபடி அவன் படிகளில் ஏற, அவளும் அவனுடன் ஏறினாள்.
அடுத்து சென்ற அறையில் கண்ணாடி தடுப்புக்குள் தங்கம், வெள்ளி மற்றும் பளிங்கினால் செய்த தட்டுகள், கிண்ணங்கள், கரண்டிகள் இருந்தன.
அவளது கண்களை உன்னிப்பாக கவனித்தவன் அதில் ஆசை இல்லாமல் ரசிப்புத் தன்மை மட்டுமே இருக்கவும் நிம்மதியாக உணர்ந்தான்.
இருந்தாலும் பொக்கிஷம் பற்றிய அவளது கேள்வி அவனது மூளையை குடைந்து கொண்டு தான் இருந்தது. சில நாட்களாக காதல் மயக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்த மூளை சற்றே விழித்துக் கொண்டதோ!
அவள் ஒவ்வொரு பொருளாக பார்த்துக் கொண்டிருக்க,
அவன் அங்கே இருந்த ஒரு வித்யாசமான பொருளை காட்டி, “இது என்ன என்று தெரியுமா?” என்று கேட்டான்.
அவன் காட்டிய இடத்தில் ஒரே வடிவமைப்பில் வெவ்வேறு அளவுகளில் நான்கு இருந்தன.
அவள் தெரியவில்லை என்பது போல் உதட்டை பிதுக்க,
அவன், “மது சேகரிக்கும் கருவிகள்.. இதெல்லாம் ஐந்து லிட்டர் பத்து லிட்டர் வரை பிடிக்கும்..” என்றான்.
“மது! ட்ரிங்க்ஸ் ஆ?”
“ஹ்ம்ம்” என்று அவன் மென்னகையுடன் கூற,
அவளோ முறைப்புடன், “எவ்வளவோ பாத்திரங்கள் இருக்குது.. அதை எல்லாம் விட்டுட்டு, இதை வந்து விம் போட்டு விளக்குறீங்க!” என்றாள்.
சற்று சத்தமாக சிரித்தவன், “கவலை வேண்டாம் தேவி.. எனக்கு இந்த பழக்கம் கிடையாது” என்றான்.
“ஹ்ம்ம்.. டி-டோட்டலர் னு விசாரிச்சதுக்கு அப்புறம் தான் இங்கே வந்தேன்”
“ஹ்ம்ஹும்” என்றவன், “வெளி உலகத்திற்கு தெரியாமல் நான் ரகசியமாக வைத்திருந்தால்!” என்று கேட்டு புருவம் உயர்த்தினான்.
“தெரியும்”
“என்ன தெரியும்?”
“இந்த ஒரு மாசமா பார்க்கிறேன் தானே!”
மென்னகையுடன் அவளது இடையை பற்றி நெற்றியில் முடியபடி, “ஆனாலும் வசமா சிக்கிட்டீயே!” என்றான்.
அவள் வெட்கத்துடன், “ஹ்ம்ம்” என்றாள்.
“என்னுடைய போதை எல்லாம் இந்த தேவிடம் மட்டும் தான்” என்றவனின் உதடுகள் அவளது முகத்தில் ஊர்வலம் செல்ல, மங்கை அவள் துவள ஆரம்பித்தாள்.
துவளும் அவளை தன்னுடன் இறுக்கி அணைத்தவனின் உதடுகள் அவளது கன்னத்தில் சற்று அழுத்தமாக பதிந்து பின் இதழில் வந்து இளைப்பாறியது.
சுவாசத்திற்காக இடைவெளி விட்டு விட்டு தேனிதழ்களை சுவைத்துக் கொண்டிருந்தவனின் உணர்வுகள் ஒரு கட்டத்தில் தடையை நீக்கி எல்லை கடக்க ஆணையிடவும் சட்டென்று சுதாரித்து விலகினான்.
அவனது திடீர் விலகலில் அவள் பிடிமானம் இன்றி தடுமாற, அவளை நெஞ்சில் சாய்த்தபடி அணைத்துக் கொண்டு அமைதியாக நின்றான்.
அவள் இன்னமும் அவன் இட்டுச் சென்ற மாய உலகதினுள் தான் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள்.
மெல்ல நிதானத்திற்கு வந்தவனின் மூளை அவளது நிலையை பயன்படுத்திக்கொள்ள கட்டளையிட, அவன் மெல்லிய குரலில், “இங்கே வருவதற்கு முன் என்னைப் பற்றி யாரிடம் விசாரித்தாய்?” என்று கேட்டான்.
அவள் மாய உலகில் மிதந்தபடி, “நான் எங்கே விசாரிச்சேன்!” என்றாள்.
“அப்புறம்?”
“அங்கிள் தான் சொன்னாங்க” என்று உளறியவள், “எந்த அங்கிள்?” என்ற கேள்வியில் சட்டென்று சுதாரித்து, “நான் வளர்ந்த ஆசிரம உரிமையாளர்” என்றபடி அவனை விட்டு விலகி நின்றாள்.
அவள் சுதாரித்துவிட்டதை புரிந்துக் கொண்டவன் அதைப் பற்றி மேலும் துருவி கேட்கவில்லை.
“நேரமாச்சு.. நான் கிளம்பனும்” என்று அவள் கூற,
அவன், “உடனே தப்பிச்சு ஓட பார்க்கிறியே!” என்றான்.
மனதினுள் திடுக்கிட்டவள் வெளியே சாதாரண குரலில், “எதில் இருந்து தப்பிக்க போறேன்!” என்றாள்.
“நான் எப்போ நெருங்கினாலும் மகாராணி பெயரை கூறி ஓடுவதில் தான் குறியாய் இருக்கிறாய்” என்று இருபொருள் படவே கூறினான்.
அவள் தனது சிறு திணறலை மறைத்தபடி, “அப்படி எல்லாம் இல்லை” என்றாள்.
அவன் மென்னகையுடன் அவளை சிறை பிடித்தபடி, “ஹ்ம்ம்.. என்னிடம் இருந்து நீ தப்பிக்கவே முடியாது” என்றான்.
அவனது முகத்தில் இருந்து அவன் கூறியதின் உட்கருத்தை அறிய முயற்சித்து முடியாமல் புன்னகைத்தபடி, “நான் தப்பிக்கணும்னு நினைக்கவே இல்லையே” என்றாள்.
“அப்படியா!” என்றபடி அவளது நெற்றியை முட்டினான்.
“ஹ்ம்ம்” என்றவள், “மகாராணி உடற்பயிற்சி நேரம் நெருங்கிடுச்சு..” என்றாள்.
“தப்பிக்க நினைக்கவில்லை என்றாய்!”
“வேலை இருக்கிறதே!”
“ஹ்ம்ம்” என்றபடி விலகியவன், “சரி வா.. இன்னும் இரண்டு அறைகள் தான் இருக்கின்றன” என்றபடி அழைத்துச் சென்றான்.
அடுத்து சென்ற அறையில் உடற்பயிற்சி செய்யும் கருவிகள் இருந்தன. அங்கிருந்த கருவிகள் கற்களால் உருவாக்கப் பட்டவையே.
கர்லாக்கட்டை மட்டுமே வெவ்வேறு எடைகளில் ஏழு இருந்தன.
அவற்றை காண்பித்து, “இதை நீங்க தூக்கிடுவீங்களா?” என்று கேட்டாள்.
அவன் மென்னகையுடன் தூக்கி சுற்றி காட்டினான்.
“இதில் பயிற்சி செய்வீங்களா?”
“இல்லை”
“ஏன்?”
“நீ வந்து கேள்வி கேட்பாய் என்று தெரியாதே!”
அவள் செல்லமாக முறைக்க, அவன் புன்னகைத்தான்.
வடையை போன்று வட்டமாக நடுவில் மட்டும் பிடிப்பதற்காக சிறு தடி போன்ற அமைப்புடன் இருந்த கருவிகளை காட்டி, “இதெல்லாம் என்ன?” என்று கேட்டாள்.
“டம்பெல்ஸ் மாதிரி.. இரண்டில் இருந்து பதினைந்து கிலோ எடை வரை இருக்கிறது”
“ஓ.. ஜிம்மில் சர்கில்லா வெயிட்ஸ் இருக்குமே! அது மாதிரியா?”
“ஹ்ம்ம்” என்றவன் அருகில் இருந்த கருவியை காண்பித்து, “இதில் கீழே அமர்ந்துக் கொண்டு, இடது புறம் இருக்கும் கல்லை இடது காலாலும் வலது புறம் இருக்கும் கல்லை வலது காலாலும் சரிவில் மேல் நோக்கி தள்ளி, பின் மெதுவாக கீழே இறக்க வேண்டும்.. மிகவும் கவனமாக செய்ய வேண்டும்.. தொடை மற்றும் கரண்டை பகுதி சதை வலுபெற செய்யும் உடற்பயிற்சி இது..
அடுத்து இந்த கல் முக்காலியில் அமர்ந்து கொண்டு தலை தரையில் தொடும் அளவிற்கு பின்னால் வளைந்து பின் நிமிர்ந்து அமர வேண்டும்.. இது வயிற்று பகுதிக்கான பயிற்சி.. இதை செய்தால் தொப்பையே இருக்காது”
“இது எல்லாமே ஜிம்மில் இருக்குதே”
“ஹ்ம்ம்.. நம் முன்னோர்கள் அந்த காலத்திலேயே யோசித்தது தான்.. அவங்க கற்களால் சற்று கடினமான முறையில் செய்தது இப்போது இரும்பு மற்றும் இரும்பு வடத்தை பயன் படுத்தி எளிதான முறையில் செய்யும் படி இருக்கிறது”
“இதெல்லாம் இப்போ தான் புதுசா பார்க்கிறேன்”
அவன் மென்னகைத்தான்.
பின், “சிலம்பு இருக்குது.. உங்களுக்கு சிலம்பு சுத்த தெரியுமா?” என்று ஆர்வத்துடன் கேட்டாள்.
அவன் அதை எடுத்து சுற்றி காட்டவும் கண் இமைக்க மறந்தபடி பார்த்துக் கொண்டு நின்றாள்.
சிலம்பை அதன் இடத்தில் வைத்தவன் அவள் முன் சொடக்கிடவும் அசடு வழிய சிரித்தாள்.
பின், “ஏய்! இது இளவட்டக்கல் தானே!” என்று கத்தினாள்.
(இளவட்டக்கல் – வழுவழுப்பாக எந்த பிடிமானமும் இல்லாமல் கைக்கு அகப்படாத முழு உருண்டை வடிவில் இருக்கும் கல். இளந்தாரிக்கல் என்றும் அழைக்கப்படும் இது 100கிலோ எடை வரை இருக்கும். திருமணமாக போகும் ஆண்களுக்கும், மன்னருடைய படைகளில் பணியாற்ற தகுதியை நிர்ணயிக்கும் சோதனை களமாக இந்த இளவட்டக்கல் இருந்திருக்கிறது)
“அதே தான்.. இதை தூக்கினால் தான் என்னை கல்யாணம் செய்து கொள்வாயா தேவி?” என்று புன்னகையுடன் கேட்டான்.
“கண்டு பிடித்து விட்டாயே!” என்றவன் போலியாக முகத்தை சோகமாக வைத்துக்கொள்ள, அவள் வாய்விட்டு சிரித்தாள்.
அவன் சட்டையை கழட்டியபடி அதை தூக்க ஆயுதமாக,
அவள், “ஏய்.. நான் சும்மா தான் சொன்னேன்..” என்றாள் சிறு அதிர்ச்சியுடன்.
புன்னகையை மட்டும் பதிலாக தந்தவன் கழட்டிய சட்டையை அவள் தோளில் போட்டான்.
உள்பனியனுடன் நின்றவனின் புஜங்கள் சங்கோஜத்தை அளித்தாலும், அதை விடுத்து, “ப்ளீஸ்.. வேண்டாம்.. எங்கேயாவது பிடிச்சுக்கப் போகுது” என்று பதறினாள்.
அவன், “பயம் வேண்டாம் தேவி.. கர்லாகட்டையை தான் பயிற்சி செய்வது இல்லை.. இதை தூக்கி பழக்கம் தான்..” என்றபடி அதை நெருங்கினான்.
அவள் செய்வதறியாது பயத்துடன் பார்க்க,
“இந்த பக்கமாக நகர்ந்து நில்” என்றவன் அவள் நகர்ந்ததும் தூக்க ஆரம்பித்தான்.
முதலில் குத்தாங்காலிட்டு உட்கார்ந்த நிலையில் கல்லை இரு கைகளாலும் சேர்த்து அணைத்து பிடித்தான். பின் லேசாக எழுந்து கல்லை முழங்காலுக்கு மேலாக நகர்த்தியபடி மெல்ல நிமிர ஆரம்பித்தான். பின்னே கொஞ்சம் கொஞ்சமாக கல்லை நெஞ்சின் மீது ஏற்றியவன் தோள்பட்டைக்கு பின்னால் கொண்டு சென்று கல்லை கீழே போட்டான்.
கல்லை தூக்கியவனை விட பார்த்த அவளுக்கு தான் மூச்சு வாங்கியது.
கல்லை அதன் இடத்திற்கு தள்ளியபடி நகர்த்தி வைத்தவன், கைகளை தட்டியபடி அவளை நெருங்கினான்.
அவள் வார்த்தைகளின்றி அவனை பார்த்துக் கொண்டே நிற்க, சட்டையை எடுத்து போட்டபடி, “சந்தோஷத்தில் இறுக்கி அணைத்து முத்தத்தால் முகத்தை ஈரமாக்குவாய் என்று நினைத்தேன்” என்றான்.
அவள் இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல், “எனக்கு வார்த்தையே வரலை” என்றாள்.
“வார்த்தை தானே வரலை! முத்தம் வரும்” என்று கூறி கண் சிமிட்டியபடி அவளது இடையை வளைத்து பிடித்தான்.