அத்தியாயம் 8

ஒரு வாரம் கடந்த நிலையில், அன்று மாலை மீனாட்சி ராஜமாதாவிடம் அறிக்கை சமர்ப்பிக்க சென்ற பொழுது,

ராஜமாதா, “காரியம் முடிந்ததா?” என்று கேட்டார்.

அரை நொடி தடுமாறியவள், “இன்னும் இல்லை ராஜமாதா” என்றாள்.

அவர் கோபத்துடன், “இன்னுமா அவனை உன்னிடம் மதி மயங்கச் செய்ய முடியவில்லை!” என்றார்.

“ராஜா மனதை மாற்றுவது அவ்வளவு எளிது இல்லையே!”

அவர் முறைப்புடன், “நீயும் அவனும் இந்த ஒரு வாரமாக தினமும் மாலையில்  ரோஜாவனத்தில் சந்தித்துக் கொள்வது எனக்குத் தெரியாது என்று நினைக்கிறியா? ரோஜாவனத்தினுள் உன்னை விட்டவன் மனதினுள் நீ இல்லை என்று சொல்றியா!” என்றார் கோபக் குரலில்.

“அப்படி சொல்லலை.. நான் எதைச் சொன்னாலும் கேட்கும் நிலைக்கு அவர் இன்னும் வரலைன்னு தான் சொன்னேன்”

“ஒரு வாரம் தருகிறேன்.. அதற்குள் அவன் நீ என்ன கூறினாலும் நம்பி செய்யும் நிலைக்கு வந்திருக்க வேண்டும்.. இல்லை உனக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்”

“சரி ராஜமாதா”

“அவன் உதவியுடன் தண்டனையில் இருந்து தப்பிவிடலாம் என்று கனவு காணாதே! நீ இங்கே வந்த காரணம் தெரிந்தால் அவனே உனக்கு தண்டனை கொடுத்துவிடுவான்”

அவள் அதிர்வுடன் அவரைப் பார்க்க, அவர் குள்ளநரித்தனமாக சிரித்தபடி, “நீ போகலாம்” என்றார். 

‘டேஞ்சரஸ் லேடி’ என்று மனதினுள் நினைத்தபடி தீரன் அறை நோக்கி சென்று கொண்டிருந்தவள் முன் வந்த இளவரசன், “தினமும் ரோஜாவனத்தில் ரகசிய சந்திப்பு நடக்கிறது போல!” என்றான் கோபம் கலந்த இகழ்ச்சி குரலில்.

அவள் நிதானமான குரலில், “எல்லோருக்கும் தெரிந்து நடக்கும் சந்திப்பு எப்படி ரகசிய சந்திப்பு ஆகும்?” என்று கேட்டாள்.

“முன்னாடியே இளவரசன் என்று யோசியாமல் கேள்வி கேட்பவள்.. இப்போ சொல்லவா வேண்டும்!” என்றான் குத்தலாக.

“உங்களுக்கு என்ன வேண்டும்?”

“கேட்டால் கொடுத்து விடுவாயா?” என்று ஒருமாதிரி குரலில் கேட்டபடி அவன் ஒரு அடி முன்னால் வர,

“வருங்கால ராணியிடம் மரியாதையுடன் பேசு” என்ற கடுமையான குரலைக் கேட்டு ஆர்வத்துடன் திரும்பியவள், அவனது அறிவிப்பு மூளையை எட்டியதும் சிறு அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள். 

இளவரசன் இகழ்ச்சியுடன் பார்த்தபடி, “வருங்கால ராணி தான் ஆனால் ராஜா நீ இல்லை.. நான்” என்றான்.

மாறவர்மசிம்மன் சத்தமாக சிரிக்க, இளவரசன் கோபமும் வெறுப்புமாக முறைத்துக் கொண்டு நின்றான்.

தீரன், “ராஜாவை மரியாதையுடன் பேசுங்க இளவரசே” என்றான்.

இளவரசன் கடும் கோபத்துடன், “சாதாரண வேலைக்காரன் நீ என்னை பேசுகிறாயா! எல்லாம் இவன் கொடுக்கும் இடம்” என்றான்.

மாறவர்மசிம்மனின் பார்வையில் தீரன் அமைதியாகிவிட, மாறவர்மசிம்மன், “ராஜாவிற்கே ஆலோசனை சொல்பவர் முதன்மை மந்திரி.. உனது தவறை தீரன் சுட்டிக்காட்டியதில் எந்த தவறும் இல்லை” என்றான்.

அதை கண்டு கொள்ளாத இளவரசன் இகழ்ச்சியாக உதட்டை வளைத்தபடி, “வருங்கால ராணி என்று நீ கூறினால் போதுமா? அதை இவள் சொல்ல வேண்டும்” என்றான்.

சிறு திடுக்கிடலுடன் மீனாட்சி மாறவர்மசிம்மனைப் பார்க்க, அவன் கண்களை மூடி திறந்து ‘உன்னை நான் அறிவேன்’ என்று சொல்லாமல் சொல்லவும் தான் நிம்மதியுற்றாள். அவளுக்கு மாறவர்மசிம்மன் மீது நம்பிக்கை இருந்தாலும் சற்று முன் ராஜமாதாவுடன் பேசியதில் மனம் சற்றே கலங்கி இருக்கவும் அவனைப் பார்த்தாள்.

மாறவர்மசிம்மன், “நடக்காத விஷயத்தை நான் பேச மாட்டேன்” என்றான்.

இளவரசனோ, “மிரட்டி நடக்க வைப்பதில் என்ன பெருமை!” என்றான்.

“நான் மிரட்டுகிறேனா! நல்ல வேடிக்கைப்பேச்சு!” 

“பிறகு ஏன் உனது அறிவிப்பை கேட்டு மிரட்சியுடன் பார்த்தாள்?” 

இதற்கு மாறவர்மசிம்மன் பதில் கூறும் முன் மீனாட்சி, “மிரட்டும் பழக்கமோ அவசியமோ ராஜாவிற்கு இல்லை.. நானும் மிரட்டலுக்கு பயப்படுகிறவள் இல்லை” என்றாள்.

இளக்காரமாக, “ஓ!” என்ற இளவரசன், “ராணி என்ற பதவி உன்னை பேச வைக்கிறது” என்றான்.

“இவர் ராஜாவாக இல்லை என்றாலும் நான் இவரைத் தான் கல்யாணம் செய்துப்பேன்” என்றாள்.

இளவரசன் இகழ்ச்சியாக பார்க்க, 

அவள் கைகளை கட்டியபடி அவனை தீர்க்கமாக பார்த்து, “உங்க கிட்ட ஒண்ணு கேட்கிறேன்.. ஒருவேளை என்னை மாதரி ஒரு சாதாரண பெண்.. நல்ல கவனிங்க, என்னை மாதிரினு தான் சொல்றேன், என்னைச் சொல்லலை.. என்னை மாதரி ஒரு சாதாரண பெண் உங்களை விரும்பி, நீங்களும் அந்த பெண்ணை விரும்பும் பட்சத்தில் ராஜமாதாவை எதிர்த்து அவளை கல்யாணம் செஞ்சுப்பீங்களா?” என்று கேட்டாள்.

மாறவர்மசிம்மன் உதட்டோர புன்னகையுடன் தன்னவளைப் பார்க்க, தீரன் மனதினுள் ‘சபாஷ்.. சரியான கேள்வி’ என்று கூறிக் கொண்டான். 

இளவரசன் பதில் கூற முடியாமல் நிற்க, 

அவள், “இனி இப்படி பேசாதீங்க.. முதலில் இருந்தே உங்களோட ஆர்வமான பேச்சை நான் ஆதரித்தது கிடையாது” என்றாள்.

மீனாட்சி மாறவர்மசிம்மன் முன் இவ்வாறு கூறியதை பெரிதும் அவமானமாக உணர்ந்த இளவரசனின் மனதினுள் ‘இவனிடம் நான் தோற்பதா!’ என்ற எண்ணமும் சேர்ந்துக்கொள்ள, அவளை கடுமையாக முறைத்தபடி, “இவனை நீ எப்படி கல்யாணம் செய்கிறாய் என்று பார்க்கிறேன்” என்று சவாலாக கூறிவிட்டுச் சென்றான். 

மாறவர்மசிம்மன் மீனாட்சியிடம், “அவனை விடு.. இன்று ஏன் தாமதமாகிவிட்டது? ரோஜாவனத்தில் உன்னைக் காணாமல் தான் உன்னைத் தேடி இங்கே வந்தேன்” என்றான்.

மீனாட்சி சிறிது சங்கடத்துடன் தீரனைப் பார்க்க, 

“சரி ராஜா நான் வேலையை பார்க்கப் போகிறேன்” என்ற தீரன் மாறவர்மசிம்மன் தலையசைத்ததும் விலகினான்.

மாறவர்மசிம்மன், “இப்போது சொல்” என்றான்.

அவள், “மகாராணி தூங்கி எழுந்திரிக்க கொஞ்சம் தாமதம் ஆகிருச்சு.. அதான்” என்றாள்.

“இன்று உன்னை கன்னிமாடம் அழைத்துச் செல்ல எண்ணி இருந்தேன்.. இப்போது நேரமாகிவிட்டது..”

அவள் முகத்தில் நாணம் தோன்றவும், அவன் உல்லாச புன்னகையுடன், “அக்கால ராஜாக்கள் பயன்படுத்திய பொருட்களை ஆர்வமாகவும் ஆசையாகவும் பார்ப்பாயே என்று நினைத்து தான் சொன்னேன்.. ஆனால் தேவியின் முகத்தில் தெரியும் நாணம் வேறு கதை சொல்கிறதே!” என்றான்.

“வேறு எந்த கதையும் இல்லை”

“அப்புறம் ஏன் நாணுகிறாய்?”

“வழியில் நின்னுக்கிட்டு என்ன பேச்சு இது?”

“அது நின்று கொண்டு” என்றவன், “உன்னிடம் தமிழ் படும் பாடு இருக்கிறதே!” என்றான்.

அவள் முறைப்புடன், “இப்போ ஆங்கில வார்த்தை இல்லாம பேசுறேன் தானே!” என்றாள்.

“அது போதுமா!”

“போதும் போதும்..” என்றவள், “நான் கிளம்புறேன்” என்றாள்.

“இன்று மாலையில் நீ ஓய்வு எடுக்கவில்லையே!”

“மகாராணி தூங்கிட்டு இருந்தப்ப ஓய்வில் தானே இருந்தேன்.. இப்போ மகாராணிக்கு உடற்பயிற்சி நேரம்”

“நன்றாக பேச்சை மாற்றிவிட்டு செல்கிறாய்”

“அப்படியே விட்டுவிடுகிற ஆளா நீங்க?”

“விடுவதற்கு நான் என்ன உன்னை அணைத்துக் கொண்டா நிற்கிறேன்!”

“அதிலேயே இருங்க!”

“காதலியிடம் வேறு எப்படி பேசுவது?”

“சரி அதை விடுங்க..”

“நான் தான்..” என்றவனின் பேச்சை இடையிட்டவள், “இந்த பேச்சே வேணாம் என்கிறேன்” என்றாள்.

“வேறு என்ன பேச?”

“கன்னிமாடம் நாளைக்கு கூட்டி போவீங்க தானே!”

அவன் செல்லமாக முறைக்கவும், அவள், “ஸ்ப்பா.. முடியலை.. நான் எல்லாம் ஆங்கிலம் கலக்காத தமிழ் பேசுறதே பெருசு.. இதில் சுத்த தமிழில் பேசலைன்னு முறைக்கிறது ரொம்ப அதிகம் சொல்லிட்டேன்.. இருந்தாலும் இவ்வளவு தமிழ் பற்று இருந்திருக்க வேணாம்” என்றாள்.

“தமிழ் எவ்வளவு அழகான இனிமையான மொழி தெரியுமா?” என்றவனின் பேச்சை இடையிட்டவள்,

“நாளைக்கு வந்து கதை கேட்கிறேன்.. இப்போ எனக்கு நேரமாச்சு.. நான் கிளம்புறேன்” என்று கூறிச் சென்றாள். தீரனை பார்த்து அன்றைய வேலைகளைப் பற்றி கூறிவிட்டே தேவிபுரம் சென்றாள்.

அதே நேரத்தில் ராஜமாதாவின் அறையில் இளவரசன், “அன்றைக்கு என்னை மட்டும் சொன்னீர்கள்! இப்பொழுது அவன் பழகுவதை எதுவும் கூற காணும்!” என்றான்.

ராஜமாதா, “உன்னிடம் தான் நான் சொல்வேன்.. அவனைப் பற்றி எனக்கு என்ன கவலை?” என்றார்.

“இன்னும் கொஞ்ச நாளில் பணிப்பெண் ராணியாக வருவாள்.. அப்பவும் இப்படி தான் சொல்வீர்களா?”

“நான் அமைதியாக இருந்தால் அதில் ஆயிரம் காரணம் இருக்கும்”

“அந்த ஆயிரத்தில் ஒன்றை என்னிடம் சொல்லுங்களேன்”

“விக்கிரமா!” என்று அவர் குரலை உயர்த்த, அவன் அமைதியானாலும் முகத்தில் கோபம் எஞ்சி இருந்தது.

இளவரசி, “பணிப்பெண் ராணியாக வந்துவிடக் கூடாது என்பது மட்டும் தான் உன் கோபத்திற்கு காரணமா?” என்று குத்தலாக வினவ,

அவன் அவளை முறைத்துவிட்டு வெளியேற முயற்சிக்க, ராஜமாதா, “விக்கிரமா” என்று அழைத்தார்.

அவன் திரும்பி பார்க்கவும் அவர், “உன் தாய்மாமன் இன்று அழைத்து பேசினான்.. அவன் மகன் ஒரு மாதத்தில் வெளிநாட்டில் இருந்து வந்து விடுவானாம்.. அவன் வந்ததும் காஞ்சனாவிற்கும் அவனுக்கும் நிச்சயம் செய்து கொண்டு, ஒரு வருடம் கழித்து திருமணத்தை வைத்து கொள்ளலாமா என்று கேட்டான்” என்றார்.

இளவரசி வெட்கத்துடன் தரை நோக்க, 

இளவரசன் கோபம் விடுத்து, “காஞ்சனா படிப்பை முடிக்கத் தானே காத்திருந்தோம்.. இப்போது இந்த ஒரு வருட இடைவெளி ஏன்?” என்று கேட்டான்.

“வெளிநாட்டில் தொழில் சம்பந்தமாக புதிதாக ஏதோ கற்றுக் கொண்டானாம்.. அதை தொழிலில் புகுத்தி ஒரு வருடமாவது தொழிலில் முன்னேறிய பிறகு தான்  திருமணம் என்று கூறிவிட்டனாம்” 

“சரி.. அப்படியே செய்யலாம்” 

“என்ன காஞ்சனா உனக்கும் சம்மதம் தானே?”

“உங்கள் விருப்பம் ராஜமாதா” என்றவள் வெட்கத்துடன் வெளியே ஓடிவிட்டாள்.

ராஜமாதா மென்னகையுடன், “சரி.. நாளை உன் தாய்மாமனிடம் பேசி விடுகிறேன்” என்றதும் சம்மதம் தெரிவித்து அவனும் வெளியேறினான்.

அடுத்த நாள் மாலையில் மீனாட்சி ஆர்வத்துடன் மாறவர்மசிம்மனுடன் கன்னிமாடம் நோக்கி சென்று கொண்டிருந்தாள்.

மாறவர்மசிம்மன் உதட்டோர புன்னகையுடன், “கன்னிமாடம் செல்வதில் இவ்வளவு ஆர்வமா!” என்றான்.

“நேற்றில் இருந்து இதையே சொல்றீங்க.. அது தான் இப்போ அந்தபுரமா இல்லையே!”

“ஆனால் உன் மனதில் அந்த நினைப்பு இருக்கிறதே!”

“அது நேத்து நீங்க கன்னிமாடம்னு சொன்னதும் சட்டுன்னு தோணுச்சு தான்.. ஆனா இப்போ பண்டை கால பொருட்களை பார்க்கும் ஆர்வம் மட்டும் தான்”

“என்னை பார்ப்பதற்கு கூட இவ்வளவு ஆர்வம் காட்டியது இல்லை” என்று அப்பொழுதும் அவன் சீண்ட,

அவள், “என்ன வேணா சொல்லிக்கோங்க.. இப்போ நான் எக்ஸ்சைட்டட் மூடில் இருக்கிறேன்” என்றாள்.

அவன் அவளை பார்த்த பார்வையில், “நோ.. நோ.. ஸ்…. ப்ளீஸ்.. ஓ! தயவு செய்து என் ஆங்கில சொற்களை பொறுத்துக் கொண்டு என்னை உள்ளே அழைத்து செல்லுங்கள்” என்றபடி கையெடுத்து கும்பிட, 

அவன் மென்னகையுடன், “வா” என்றான். அப்பொழுது அரண்மனை வாயிலுக்கு வந்திருந்தனர்.

அரண்மனை வாயில் காவலாளிகள் அவனது புன்னகை முகத்தை கண்டு அதிசயத்தை கண்டது போல் நிற்க, அவன் ‘என்ன’ என்பது போல் புருவம் உயர்த்தி பார்க்கவும் சட்டென்று சுயம் பெற்று பதறியபடி லேசாக தலை வணங்கி வணக்கம் செலுத்தினர்.

சிறு தலை அசைப்புடன் அதை ஏற்றுக் கொண்டவன், “யாரையும் உள்ளே அனுமதிக்காதீர்கள்” என்ற கட்டளையுடன் அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

ஆஜானுபாகுவான ஒரு காவலாளி வந்து பணிவுடன் வணங்கி நிற்கவும், சிறு தலை அசைப்புடன் அவனது வணக்கத்தை ஏற்றபடி தன்னிடம் இருந்த பெரிய திறவுகோலை கொடுத்தான்.

பணிவுடன் திறவுகோலை பெற்றுக் கொண்ட காவலாளி திறவுகோலை அந்த  பிரம்மாண்டமான பத்தடி உயரம் கொண்ட கதவின் நடுப் பகுதியில் இருந்த திறவுகோல் துளையினுள் பொருத்தி திருகினான். சிறு சத்தத்துடன் கதவின் உள் பூட்டு திறந்துகொள்ள, திறவுகோலை எடுத்து மீண்டும் பணிவுடன் மாறவர்மசிம்மனிடம் கொடுத்தான்.

பின் அந்த காவலாளி சிறு சிரமத்துடன் ஒற்றை ஆளாக வலதுபுற கதவை தள்ளி பின் இடதுபுற கதவை தள்ளினான். அவனது முயற்சியில் சிறு சத்தத்துடன் கதவுகள் திறந்துக் கொண்டது.

மாறவர்மசிம்மன், “நான் பார்த்துக் கொள்கிறேன்.. நீ செல்லலாம்” என்றதும் மீண்டும் பணிவுடன் வணங்கி சென்றான்.

மீனாட்சி அந்த பிரம்மாண்டமான கதவின் வேலைபாடுகளை கரம் கொண்டு வருடி ரசித்தபடி, “இதை நாமளே செய்து இருக்கலாமே?” என்றாள்.

மாறவர்மசிம்மன், “கதவை அசைத்துப் பார்” என்றான்.

அவளும் உடனே கதவை தள்ள முயற்சித்தாள் ஆனால் முடியவில்லை. அவனை திரும்பி பார்த்தவள் பின் தனது பலம் முழுவதையும் திரட்டி இரண்டு கைகளையும் வைத்து தள்ள முயற்சித்தாள், கதவு இம்மி கூட அசையவில்லை.

மென்னகையுடன் அவளது முயற்சியை பார்த்தவன், “விடு.. உன்னால் முடியாது” என்றான்.

கைகளை எடுத்தபடி அவனை பார்த்தவள், “அது என்ன என்னால் முடியாது! நீங்க தள்ளுங்க பார்ப்போம்” என்றாள்.

“முடியாது என்று இல்லை.. சற்று சிரமம் கொள்ள வேண்டும்” என்றவன் தனது பலத்தை திரட்டி கதவை தள்ளி காட்டினான்.

அவள், “வாவ்.. செம!” என்றாள்.

அவன் புன்னகையுடன், “சரி வா.. உள்ளே போகலாம்” என்றபடி அழைத்துச் சென்றான்.

அரண்மனை முழுவதும் இருந்த நுண்ணிய வேலைபாடுகளை, ஓவியங்களை ஆச்சரியத்துடனும் பிரம்மிப்புடனும் பார்த்தவள், “மத்த அரண்மனையை விட இது வித்யாசமா ரொம்ப அழகா இருக்குது” என்றாள்.  

“என்ன வித்தியாசம்?”

“இங்கே பழமை மாறாம இருக்குது.. மத்த அரண்மனைகளிலும் இதே போல் இருந்தாலும், அதெல்லாம் அசல் இல்லை.. அசலை நீங்க கொஞ்சம் நவீனப்படுத்தி இருக்கிறீங்க”

“ஹ்ம்ம்.. நீ அகழாய்வியல் படிச்சதை ஒப்புக் கொள்கிறேன்” 

“அகழாய்வியல்?” 

“தொல்பொருள் ஆய்வியலை.. அதாவது ஆர்கியாலாஜி.. அதை இப்படியும் சொல்லலாம்”

“ஓ!” என்றவள் அங்கிருந்த ஓவியங்களை பார்த்து, “இதெல்லாம் மூலிகையில் இருந்து எடுத்த கலர்ஸ்.. ம்ம்.. வண்ணங்கள் வைச்சு வரைந்ததா?”

“ஹ்ம்ம்..”

“அந்த காலத்திலேயே எவ்வளவு நிறங்கள் கொண்டு வந்திருக்காங்க! ஜஸ்ட் அமேசிங்”

“நம் முன்னோர்களின் திறமைகள் நமக்குத் தான் தெரிவது இல்லை”

“தெரிந்ததால் தானே இப்படி பாதுகாத்து வரீங்க!”

“பொதுவாக நம் மக்களை சொல்கிறேன்..”

“ஓ” என்றவள், “இங்கே வந்தால் நேரம் போறதே தெரியாது போல!” என்றவளின் பார்வை ஓவியங்களில் தான் இருந்தது.

அவனுமே ஓவியங்களை பார்த்தபடியே, “அது சரி தான்.. இந்த ஓவியங்கள் ஒவ்வொரு முறையும் புதிதாக பார்ப்பது போலவே நம்மை கவர்ந்து இழுக்கும்.. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கற்பனை தோன்றும்..” என்றான்.

“ஹ்ம்ம்”

“இங்கிருக்கும் மொத்த ஓவியங்களிலும் நூறுக்கும் மேற்பட்ட முகங்கள் இருக்கும்.. ஒன்று கூட மற்றொன்றோடு ஒத்துப் போகாது.. ஒவ்வொரு முகமும் தனித்தன்மையுடன் இருக்கும்..”

ஆச்சரியத்துடன் அவனை நோக்கியவள், “அப்படியா!” என்றாள்.  

“இன்னொரு நாள் ஓவியங்களை மட்டும் பார்க்க என்று வரலாம்.. இப்போது மற்ற அறைகளுக்கு செல்லலாம் வா”  என்று அழைத்துச் சென்றான்.

முதல் அறையில் குதிரை வண்டிகளும் பல்லக்குகளும் இருந்தன. 

அடுத்த அறையில் பல புகைப்படங்கள் இருந்தன. அதே அறையில் ஆங்காங்கே சிதைந்து இருந்த பெரிய மர பலகை இருக்க, அதில் அந்த அரண்மனையின் மன்னர்கள் பெயர்களும் அவர்கள் ஆட்சி புரிந்த காலமும் செதுக்கி இருந்தது.

அந்த பலகையை பார்த்தபடி, “வெளியே இதே மாதிரி ஒரு போர்டு பார்த்தேனே!” என்றாள்.

“ஹ்ம்ம்.. நடுவில் சரியா பராமரிக்காம கரையான் கொஞ்சம் அரிச்சிடுச்சு.. நான் ஆட்சிக்கு வந்ததும் இங்கிருக்கும் பொருட்களை நன்றாக பராமரிக்க ஆரம்பித்தேன்.. இதில் சில பெயர்கள் அழிந்ததால் வெளியே அந்த பலகை செய்து வைக்க ஏற்பாடு செய்தேன்”

“அழிஞ்ச பெயரை எப்படி கண்டுபிடிச்சீங்க?”

“இங்கே ஒரு அறையில் பழமைவாய்ந்த ஓலைச்சுவடிகள் நிறைய இருக்கின்றன.. அதில் இருந்து கண்டுபிடித்தேன்..”

“அதை நான் பார்க்க முடியுமா?”

“இல்லை.. ஓலைச்சுவடிகள் மற்றவர்கள் பார்வைக்கு கிடையாது”

“ஓ!” என்று அவளது குரல் சுருதி இறங்கி ஒலிக்க, முகமும் சற்றே வாடியது.

அவன், “நம்ம கல்யாணத்திற்கு பிறகு காட்டுகிறேன்” என்றதும், வெட்கத்துடன் கூடிய மகிழ்ச்சியுடன் அவள் முகம் மலர்ந்தது.

அடுத்த அறையில் அக்காலத்து மகாராஜாக்கள் மகாராணிகள் பயன்படுத்திய உடைகள், தலைப்பாகைகள் இருந்தன.  

அவற்றை பார்த்தவாறு, “சந்ராமா பொக்கிஷம் பற்றி ஏதோ சொன்னாங்க.. அது உண்மையா?” என்று கேட்டாள்.

சட்டென்று விழிகளும் மூளையும் கூர்மையுற அவளைப் பார்த்தவன், அவள் அதை சாதாரணமாக கேட்டது போல் தோன்றவும், “என்ன சொன்னாங்க?” என்று சாதாரண குரலில் கேட்டான்.

“ரணசிம்ம ராஜா கதையை சொல்றப்ப சொன்னாங்க.. ஏதோ ஒரு வார்த்தை சொன்னாங்களே! பஞ்ச.. பஞ்ச..” என்று அவள் திணற,

அவன், “பஞ்சரத்தினம்” என்றான்.

“எஸ்.. இது தான்.. நறுமுகை தேவிக்கு ராஜா வாங்கி கொடுத்த ஜுவெல்ஸ்.. ஸ்.. நகைகள் பற்றி சொன்னப்ப சொன்னாங்க.. ராணி இறந்ததும் ராஜா இந்த பொக்கிஷங்களை ரகசியமா மறைத்து வச்சிட்டார்னும்.. இப்போ கூட எங்கேயோ பொக்கிஷ புதையல் இருக்கிறதாவும் சொன்னாங்க”

“நானும் கேள்வி பட்டிருக்கிறேன்”

“அப்போ சும்மா வதந்தி தானா!”

“இருக்கலாம்” என்றபடி தோள்களை குலுக்கினான்.