தொலைவிலிருந்து ஆர்யன் பார்வையால் தங்களை எரிப்பது தெரியாமல் மிஷாலும், ருஹானாவும் சிரித்து பேசிக்கொண்டிருந்தனர். துணிப்பெட்டியை திறந்து பார்த்த ருஹானா அதில் ஒரு அழகிய ஏப்ரன் இருப்பதை பார்த்தாள். அதை வெளியே எடுக்காமல் அப்படியே தடவி பார்த்தாள். “நல்லா இருக்கே, மிஷால்!” என பாராட்டினாள்.
புன்னகையுடன் அதை ஏற்றுக்கொண்ட மிஷால் “அது உனக்கு இங்க அவசியம் தேவை தானே. நீ வந்தது எனக்கு தாங்க முடியாத சந்தோசம், ருஹானா!” என்றான். “எனக்கும் தான். உன்னையும் நம்ம அக்கம்பக்கமும் நான் ரொம்ப மிஸ் செய்தேன்” என்று ருஹானாவும் சொன்னாள்.
அதற்கு மேல் பொறுக்கமுடியாத ஆர்யன் சீட்பெல்ட்டை வேகமாக கழட்டுவிட்டு கார் கதவை திறந்தான். பின் எதோ யோசித்தவன் அவர்களை முறைத்தவாறே கதவை மூடி காரை கிளப்பி சென்றுவிட்டான்.
“சரி மிஷால்! நாம தொடங்குவோமா? இவானை அதிக நேரம் காக்க வைக்க முடியாது” என்ற ருஹானாவை வாவென மிஷால் உள்ளே அழைத்துச்சென்றான்.
சமையலறையில் அவள் ஏப்ரானை மேலே மாட்டவும் “உனக்கு இது ரொம்ப அழகா இருக்கு” என மிஷால் அவளை ரசித்துப் பார்த்தான். “நன்றி மிஷால், எல்லாம் எங்க வச்சிருக்கே?” என்று ருஹானா கேட்கவும் தன்னை நிலைக்கு கொண்டுவந்தவன் “அங்கே பானையில பொருட்கள் இருக்கு பாரு, தவா இங்க இருக்கு” என எல்லாவற்றையும் காட்டினான்.
“சரி மிஷால்! நான் பார்த்துக்கறேன். உன் குக் செய்றது போல நல்லா வரணும்.. பிஸ்மில்லாஹ்!” என கடவுளை வேண்டினாள். தலையாட்டிய மிஷால் அங்கே வேலை செய்யும் சதாமை அழைத்தான். “சதாம் உனக்கு உதவி செய்வான்” என சொல்ல, “ஏன் மிஷால்? நானே செய்வேனே!” என்று சொன்ன ருஹானா சதாமை பார்த்து புன்னகை புரிந்தாள்.
“இல்ல, நீயே எல்லாம் செஞ்சி சோர்வடையக் கூடாது. அதும் இல்லாம சதாமும் உன்கிட்டே இருந்து கொஞ்சம் கத்துக்கட்டும்” என மிஷால் சொல்ல, “ஆமா அக்கா” என சதாமும் ஆர்வமாக சொன்னான்.
“அப்போ சரி, வா இந்த வெங்காயம் வெட்டு” என அவனுக்கு ருஹானா உடனே வேலை கொடுக்க “சரி, நான் போய் மத்த வேலைய பார்க்கறேன்” என மிஷாலும் கிச்சன் விட்டு சென்றான். நெடுநாட்களுக்குப் பின் அவளுக்கு மிகப் பிடித்த வேலையை செய்யும் உற்சாகத்துடன் ருஹானா புன்முறுவலுடன் அடுப்பில் பானையை வைத்தாள்.
——-
“இவானை தனியா விட்டுட்டு அவ காதலனை சந்திக்க போயிருக்கா!” சத்தமாக பொருமியபடி ஆர்யன் கடுப்பாக காரை ஓட்டினான். தான் ஆத்திரப்பட்டாலும் ருஹானா திரும்ப திரும்ப வந்து அக்கறையாக, மென்மையாக மருந்து போட்டதும் அவன் நினைவுக்கு வந்தது. குழப்பமாகவும் கோபமாகவும் வீடு வந்து சேர்ந்தான்.
கதவை திறந்த ஜாஃபர் ஆர்யனை வரவேற்றுவிட்டு “நீங்க எதிர்பார்த்த பார்சல் வந்துடுச்சி, உங்க மேசையில வச்சிருக்கேன்” என சொன்னதை கேட்டு நின்றவன் எதும் பதில் சொல்லாமல் படியேறினான். அவன் கோப முகத்தை பார்த்துக்கொண்டிருந்த கரீமா “இந்த கோபத்துக்கு காரணம் அந்த சித்தியா தான் இருக்கும்” என்று ஆனந்தப்பட்டாள்.
———-
சாப்பிட மேசையை அழகாக அலங்கரித்த மிஷால் ஆர்டர் செய்து வரவழைத்த பூங்கொத்தையும் அங்கே வைத்தான். சதாம் கொண்டு வந்து கொடுத்த உணவு வகைகளை வட்டமாக அடுக்கினான். மேசையை சுற்றி பார்த்து திருப்தியான மிஷால் “நான் எடுத்து வைக்கவா, அண்ணா?” என கேட்ட சதாமையும் மறுத்த மிஷால் அவனை உள்ளே போக சொன்னான்.
கிச்சன் சென்ற சதாம் ருஹானா திரும்பி நின்று சூப்பை கிண்டிக் கொண்டுருக்கவும், அவள் செய்து வைத்த கத்திரிக்காயை திறந்து வாசம் பிடித்தான். அது அவனை அப்படியே உள்ளிழுக்கவும் ஒரு துண்டை எடுத்து வாயில் வைத்தான். திரும்பிய ருஹானா சதாமை பார்த்து சிரித்தாள்.
“மன்னிச்சிடுங்க அக்கா!”
“உனக்கு பிடிச்சிருக்கா?”
“நம்ப முடியாத சுவை, அக்கா”
“உங்க குக் செய்றதுக்கு கொஞ்சம் பக்கம் வந்தா கூட எனக்கு சந்தோசம் தான், சதாம்!”
“அவர் நல்லா தான் செய்வார். ஆனா நீங்க செய்றது அற்புதம், அக்கா”
ருஹானா அடக்கத்துடன் புன்னகை செய்ய, அங்கே வந்த மிஷால் “இவான் அங்கிள் சொல்லுவார் ‘செய்ற எந்த வேலையும் அன்போட செய்யணும்’ ன்னு. அதை அப்படியே ருஹானா கடைப்பிடிக்கிறா” என்று சொல்ல “என் அன்பு அப்பா” என ருஹானா கண்கலங்கினாள்.
“யா அல்லாஹ்! உன்னை வருத்தப்படுத்திட்டேனே!” என மிஷால் வேதனைப்பட்டான்.
“இல்ல மிஷால்! அப்பாவோட வார்த்தைகள் கேட்க மகிழ்ச்சியா தான் இருக்கு”
சதாம் வெளியே செல்ல மிஷாலும் உள்ளே வந்து வாசனை பிடித்தான்.
“அட்டகாசமா இருக்கு, ருஹானா”
“நன்றி மிஷால்! பரிமாற பாத்திரத்துல மாத்தினா என் வேலை முடிஞ்சது. நானும் கிளம்பலாம்”
“உனக்கு பசிக்கலயா? நான் டேபிள் செட் செய்துட்டேன். நாம ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாமா? சாப்பிட்டபின் நீ போலாம்”
“நன்றி மிஷால்! ஆனா எனக்கு நேரம் இல்ல. இவான்ட்ட சீக்கிரம் வரேன்னு வாக்கு கொடுத்துருக்கேன்”
மிஷாலின் முகத்திலிருந்த சிரிப்பு மறைய “ருஹானா! இவான் உன் உயிர்ன்னு எனக்கு தெரியும். ஆனா உனக்காகவும் நீ உன் நேரத்தை செலவழிக்கணும். வா உட்கார். கொஞ்சம் ஓய்வெடு, சாப்பிடு. அப்புறம் கிளம்பு” என்றான்.
“நன்றி மிஷால்! என்னை இவான் தேடுவான். நான் கிளம்பறேன்” என ருஹானா உறுதியாக சொன்னாள்.
சோகமான மிஷால் வெளியே சென்று தான் அலங்கரித்த மேசையை பார்த்துக்கொண்டே ஏதோ யோசனையில் ஆழ்ந்தான்.
———
கரீமா சல்மாக்கு வாங்கிய புது உடையை அவளுக்கு போட்டு அழகு பார்த்தாள். “இந்த டிரஸ்ல நீ ராணி மாதிரி இருக்கே! இது போல உடை தான் உனக்கு தகுந்தது” என்று அவளை கண்ணாடி முன் நிறுத்த சல்மாவுக்கும் தன் அழகுக்கு அழகு சேர்த்த ஆடையை பார்த்து மகிழ்ச்சியானது.
“உன்னை பயன்படுத்திக்கிற முட்டாள் உனக்கு தேவையில்ல. உன்னை கவனிச்சிக்கிறவன் தான் உனக்கு தேவை. பணத்துக்காக உன்னை விட்டுட்டு ஓடிப் போனவனுக்காக நீ அழப்போறியா இல்ல பணக்காரனை கட்டிக்கிட்டு அவனை பழிவாங்க போறீயா? திரண்ட சொத்துக்கு அதிபதியாக போறீயா? நீயே முடிவெடு” என தங்கையை கரீமா உருவேற்றினாள்.
சல்மா அக்கா பேச்சுக்கு சரியென தலையாட்டி ஆடைக்கு நன்றி சொன்னாள். “இந்த டிரஸ் உனக்கு பிடிச்சிருக்கு தானே. பார்ட்டில எல்லாரும் உன்னை தான் பார்க்கணும். நான் சொல்றபடி நீ கேட்டா உனக்கு எப்பவும் கவலையே இல்ல. சீக்கிரமே நீ ஆர்யனை கல்யாணம் செஞ்சிக்கணும், சல்மா. அப்புறம் பணம், அதிகாரம், செல்வாக்கு எல்லாம் நம்ம கைல. இந்த மாதிரி வாழ்க்கை உனக்கு வேணும் தானே?” என ஆசைக் காட்ட தன் துக்கமெல்லாம் தூக்கிப் போட்டு சல்மாவும் கரீமா வசம் வந்தாள்.
——–
உணவு மேசையில் ஆர்யன் முன்னே சல்மா பார்ட்டி ஏற்பாடுகளை விவரித்தாள். “அலங்காரம், மேஜிக்காரன், கோமாளி, மற்ற பொழுதுபோக்கு எல்லாம் சொல்லிட்டேன். சமையலுக்கு இன்னைக்கு பேசிடுவேன்” என சல்மா சொல்ல “அவங்கலாம் இங்க வருவாங்களா?” என அம்ஜத் பயத்துடன் கேட்டு கரீமாவை பார்த்தான்.
கரீமா பெருமையாக ஆர்யனை பார்த்துக்கொண்டே சல்மாவிடம் பேசினாள். “நீ ஆசைப்படுறதுலாம் சரி தான் சல்மா. ஆனா நாம சின்ன பார்ட்டி தான் கொடுக்க போறோம். சாராவே சமைச்சிடுவாங்க. உனக்கு இவான் மேலே இருக்குற பாசத்தால பெரிய ஏற்பாடா செய்றே. ஆனா அம்ஜத்க்கு இதெல்லாம் அலர்ஜி”
அம்ஜத்தும் நிம்மதியுடன் “ஆமா! ஆமா! சாரா நல்லா சமைப்பாங்க. நம்ம அமைதி கெட்டுப் போகாது” என பேசிக்கொண்டிருக்க, இவான் சாப்பிடாமல் இருப்பதை ஆர்யன் பார்த்தான். ஆனாலும் எதும் அவனை கேட்காமல் ஒரு ஸ்பூன் உணவை எடுத்து வாயில் வைத்தான். இவான் சித்தியின் காலி நாற்காலியை பார்த்து வந்த கண்ணீரை அடக்கிக் கொண்டான்.
“சித்தி எப்போ வருவாங்க?” சித்தப்பாவிடம் கேட்டான். ஆர்யன் பதில் சொல்லாமல் அவனும் ருஹானாவின் காலி நாற்காலியை பார்த்தான். கரீமா கண் காட்ட எழுந்த சல்மா “இவான்! நீ ஏன் மீட்லோஃப் சாப்பிடல? சரி தான். இத்தனை பெருசா இருந்தா நீ எப்படி சாப்பிடுவே?” என்று சொல்லி அவன் அருகே வந்து அதை சிறிய துண்டுகளாக வெட்டி வைத்தாள்.
பின் அவனுக்கு ஒரு துண்டு ஊட்டி விட்டாள். அவன் அதை மென்று விழுங்கும்முன்னே மற்றுமொரு துண்டையும் அவன் வாயில் திணித்தாள். ஆர்யன் ஸ்பூனை தட்டில் வைத்துவிட்டு சாப்பிடாமல் அமர்ந்திருக்க, கரீமா “சல்மா! உன் பார்ட்டி பிளான்லாம் பிரமாதமா இருக்கே!” என பாராட்ட சல்மா சிரிப்புடன் தலை ஆட்டினாள்.
“ஆர்யன் நீ அதை பார்க்கிறீயா?” என கரீமா கேட்க, அவனோ “தேவையில்ல. நீங்களே முடிவு செய்ங்க” என சுரத்தேயில்லாமல் சொன்னான். திரும்ப ருஹானாவின் இடத்தை பார்த்தவன் “இனிய உணவு” என்று சொல்லி எழுந்து சென்றுவிட்டான். மூவரும் அவனையே பார்த்திருந்தனர்.
திரும்ப சல்மா இவானுக்கு ஊட்ட முயல வாய் முழுவதும் உணவு வைத்திருந்த அவன் வேண்டாமென தலையாட்ட, ‘விட்டால் போதும்’ என சல்மா அவள் இடத்திற்கு வந்து சாப்பிட்டாள். அம்ஜத் இவானை கவலையுடன் பார்த்தான்.
——–
இவான் வரைந்து கொண்டிருக்க ருஹானா வேகமாக அவன் அறைக்கு வந்து அவனை கட்டிக்கொண்டாள்.
“உன்னை நான் அதிகமா மிஸ் செய்தேன், என்னுயிரே!”
“நானும் தான் சித்தி”
“உன்னை பார்க்கத்தான் வேகவேகமா வேலைய முடிச்சிட்டு வந்தேன். ஆனா டிராபிக்ல மாட்டிகிட்டேன். அதான் லேட் ஆகிடுச்சி. நீ என்னை மன்னிப்பியா?”
“நான் உங்க மேல கோவமா இல்லயே சித்தி!”
“ஆஹ்! என் உயிரே! ஐ லவ் யூ”
“நானும் சித்தி”
“சரி, சொல்லு. நான் இல்லாதபோது என்ன செய்திட்டு இருந்தே?”
“ஒளிய நிறைய இடம் கண்டுபிடிச்சி வச்சிருக்கேன்”
“நெஜமாவா? ரொம்ப ரகசியமா? எனக்கு சொல்ல மாட்டியா?”
“ம்ஹீம்! உங்களால என்னை கண்டுபிடிக்கவே முடியாது”
“தேனே! உன் வாசனையை வச்சே சித்தி உன்னை தேடி வந்துடுவேனே!” என்று கூறி இவானை கட்டிக்கொண்டு வாசம் பிடித்தாள். “இது தான் உலகத்திலயே சிறந்த வாசனை!” என்று ருஹானா அவன் கழுத்தோரம் பேச இவானுக்கு குறுகுறுக்கவும் அவன் சிரிப்புடன் சித்தியை விட்டு விலகி நின்றான்.
“சரி, சொல்லு. நீ சாப்பிட்டியா?”
“நான் சாப்பிட்டேன். சித்தப்பா தான் சாப்பிடவேயில்ல. அவருக்கு உடம்பு சரியில்லயா?” வருத்தமாக இவான் கேட்க அந்த வருத்தம் ருஹானாவையும் தொற்றிக் கொண்டது.