சையத் போனை மூடிவிட்டு “பிரச்சனைக்கான தீர்வு உன்கிட்டே தான் மறைஞ்சிருக்கு. உனக்கு அது இன்னும் தெரியல” என்று சொன்னார்.

சையத் சொன்னதை செயல்படுத்த கிளம்பிய ஆர்யன் கதவு தட்டப்படும் ஓசையில் நின்றான். தயக்கமாக ருஹானா உள்ளே வரவும், அவளை பார்த்து ஆச்சர்யப்பட்டான்.

“உங்களுக்கு நேரம் இருந்தா, நான் கொஞ்சம் பேசணும்” கதவருகில் நின்றே ருஹானா கேட்க லேசாக தலையசைத்தான். காயத்தை கையில் பிடித்தபடி மெதுவாக படியிறங்கி அவன் முன்னே வந்து நின்றாள். ஆர்யன் குனிந்து அவள் காயத்தை பார்த்தவன் “வலி இருக்கா?” என கேட்டான்.

“நான் நலம்” என்று சொன்னவள் மேலே பேசாது தரையில் வலது இடது என மாறி மாறி பார்த்தாள். அவள் முகத்தையே ஆர்யன் பார்த்துக்கொண்டிருக்க, அவள் ஒன்றும் சொல்லாமல் நிற்கவும் ஆர்யனே கேட்டான். “என்ன சொல்ல வந்தே?”

அவன் முஷ்டியை கண்ணால் காண்பித்த ருஹானா “உங்க கை” என சொல்ல அவனும் அவன் கையை திருப்பி பார்த்தான். “என்னை சுட்டவனை அடிச்சபோது பட்டது தானே அது?” என அவள் கேட்டாள். கை முஷ்டியை இறுக்கியவன் அவள் முகத்தை பார்த்தாலும் பதில் சொல்லவில்லை.

“உங்ககிட்ட பதில் இருக்கா?”

“உன் ரூம்க்கு போ. ஓய்வெடு. சுத்திட்டு இருக்காதே”

“நான் போக மாட்டேன். இது என்னை பற்றிய விஷயம் இல்ல. நான் எனக்காவும் வரல. அதுனால் நீங்க நான் சொல்றதை கேட்டுத்தான் ஆகனும்” அவள் உறுதியாக சொல்வதை கேட்டு ஆர்யன் அவளை கூர்ந்து பார்த்தான்.

கண்களை அங்குமிங்கும் திருப்பி சற்று யோசித்தவள் தைரியத்தை கூட்டி “நீங்க பயங்கரமான இருட்டு உலகத்தில இருக்கீங்க.. இதுல உங்க கூட இருக்கிற இவானுக்கு பாதுகாப்பு இல்ல” என சொல்லியே விட்டாள்.

இதுவரை ஏதோ சொல்கிறாள் என கேட்டிருந்தவன் இவானை பற்றி இப்படி சொல்லவும் கோபத்தின் வசப்பட்டான்.

“உங்களுக்கே எப்போ ஆபத்து வரும்னு தெரியாது. இதுல இவானை நீங்க எப்படி காப்பாத்துவீங்க? ஒரு நாள் உங்களுக்கு ஏதாவது நடந்துட்டா இவான் என்ன ஆவான்?” இரண்டு நாளாக அவள் மனதில் இருந்ததை வெளிப்படுத்தினாள்.

அவள் சொன்னதை கேட்டு இன்னும் கோபமடைந்தவன், “நீ உன் உடம்பை சரிப்படுத்து. இவானை கவனி. இனி இதை போல எல்லை மீறாதே. என் விஷயத்தில தலையிடாதே” கண்களை உருட்டி சொன்னான்.

அவள் திகைத்து பார்த்திருக்க “உன் பேச்சு முடிந்தது” என ஆர்யன் சொன்னான். இதற்கு மேல் நீ பேச தேவையில்லை என்பது போல அது இருக்க ருஹானா திரும்பி நடந்தாள். கையை இடுப்பில் வைத்துக்கொண்டு படியேறியவள் மேல் படிக்கட்டில் சற்று தடுமாறினாள். பின் சமாளித்துக் கொண்டவள் கதைவடைத்து சென்றாள். ஆர்யனும் அவனது உள் படுக்கையறைக்கு சென்று விட்டான்.

             ———–

இரவில் ஒரு பொட்டுத் தூக்கமும் அணுகவில்லை, ருஹானாவை. வலி ஒருபுறம் பிடுங்கி எடுக்க மறுபுறம் ஆர்யன் வதைத்துக் கொண்டிருந்தான். வீட்டில் அவன் தந்த சலுகையும், அதன்பின் அவன் கோப பார்வையும், பேச்சும் அவளை கண்மூட விடவில்லை. அதற்கு மேலும் படுக்கையில் கிடக்காமல் கம்பளிச்சட்டையை மேலே மாட்டிக்கொண்டு அவள் அறையின் வெளிமாடத்திற்கு சென்றாள்.

இலகு நடை நடந்து தோட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தவள் காதுகளுக்கு அம்பு பாயும் ஓசை கேட்டது. ஒலி வந்த திசை நோக்கி விழி திருப்பியவள் கண்டது விடாமல் வில் விட்டுக் கொண்டிருந்த ஆர்யனைத்தான். இகழ்ச்சியில் இதழ் மடித்தவள் ‘இராத்திரில என்ன செய்றான், பார். இவன் உலகம் மிக இருட்டானது’ என சொல்லி தலையை ஆட்டிக் கொண்டாள்.

அவள் எண்ண அலைகள் அந்த சொற்களை அவனிடம் கொண்டு சேர்த்ததோ?.. வில்லின் அம்பு பூட்டியவன் அதை விடுவிக்காமல் இவள் பக்கம் திரும்பி கோப கணை விடுத்தான். ருஹானாவின் மிரண்ட பார்வையில் வில்லையும் தழைத்தவன் அவளையே பார்க்க, அவள் திரும்பி உள்ளே சென்று விட்டாள். அவன் முன்னிலும் ஆக்ரோஷமாக அம்புகளை செலுத்த ஆரம்பித்தான்.

                ———-

காலையில் தோட்டத்தில் சித்தியும், இவானும் இன்பமாய் பேசியபடி கைகோர்த்து நடைபயின்றுக் கொண்டிருந்தனர். ரஷீத்துடன் மேல்மாடி மாடத்தில் அமர்ந்து கப்பல்களின் ஒப்பந்த கோப்புகளை பார்த்துக் கொண்டிருந்த ஆர்யன், காபி குடித்தபடியே எழுந்தவன் அந்த அழகிய காட்சியை கண்டான். இவான் ஏதோ சொல்ல, ருஹானா குனிந்து அவனை அணைத்துக்கொள்ள, மேலிருந்து அதை பார்த்த ஆர்யன் மனமும், முகமும் கனிந்தது. ரஷீத் கோப்புகளை காட்டி அவன் ஒப்புதல் கேட்க மனமே இல்லாமல் வேலைக்கு திரும்பினான்.

மாதுளை மரத்தில் நிறைய பூக்கள் பூத்திருக்க அதை இவானுக்கு ருஹானா காட்ட, அவனோ அந்த மரத்திலிருந்த பறவை கூட்டை காட்டி “அது என்ன, சித்தி?” என கேட்டான்.

“பறவைக்கூடு செல்லம். பறவைகளோட  வீடு”

“எல்லாருக்கும் வீடு இருக்குமா, சித்தி?”

“நிச்சயமா அன்பே!”

“அப்போ என் அம்மா வீடு எங்க இருக்கும்?”

திகைத்துப் போன ருஹானா என்ன சொல்வது என யோசித்தாள்.

“அம்மா கல்லறைல தானே இருக்காங்க. எனக்கு நஸ்ரியா அக்கா சொன்னாங்க. அந்த கல்லறை தான் அவங்க வீடா?” சோகமானான் இவான்.

இடுப்பை பிடித்துக்கொண்டு சிரமப்பட்டு அவன் உயரத்துக்கு மண்டியிட்டாள், ருஹானா “அவங்க உடம்பு மட்டும் தான் அங்க இருக்கும். அவங்க மனசு, அன்பு எல்லாம் உன்னை சுத்தித்தான் இருக்கும். நான் உனக்கு சொல்லி இருக்கேன்ல? உன் அம்மா உன்னை பார்த்துட்டே தான் இருப்பாங்க. நீ பேசுறது எல்லாமே அவங்களுக்கு கேட்கும். எப்பவும் உன்னோடவே தான் இருப்பாங்க. நீ சிரிச்சா அவங்க சந்தோசமா இருப்பாங்க. நீ அழுதா அவங்க வருத்தப்படுவாங்க”  கண்ணீர் விடும் அவனை தடவிக் கொண்டே சமாதானம் செய்தாள்.

“அம்மா என்னை பார்ப்பாங்க. ஆனா நான் அவங்களை பார்க்க முடியாதா?”

“நம்மால அவங்களை பார்க்க முடியாது. ஆனா அவங்களை சந்தோசப்படுத்த முடியும். நீ உங்க அம்மாக்கு மகிழ்ச்சி கொடுக்க ஆசைப்படுறியா?” அவன் முடியை ஒதுக்கி விட்டுக்கொண்டே கேட்டாள்.

ஆமென தலையாட்டியவன் “எப்படி?” என கேட்டான்.

“அவங்களை நினைச்சி பிரார்த்தனை செய்யும்போது…. நீ பெருசா சிரிக்கும்போது…. உன் அம்மா ரொம்ப ஆனந்தப்படுவாங்க” அவன் கன்னங்களை பிடித்து இழுத்து, தன் அழுகையை அடக்கிக்கொண்டு புன்னகைத்தாள்.

“நாம என் அம்மாக்கிட்ட போலாமா?”

அதிர்ந்த ருஹானா கேட்டாள், “எப்படி?”

“அம்மாவோட கல்லறைக்கு போகலாம். நான் அங்கே போய் பிரார்த்தனை செய்வேன். அவங்க சந்தோசப்படுவாங்க. என்னை தேடிட்டு இருப்பாங்கல”

“கண்டிப்பா போலாம், என் செல்லம்… வா” அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

———

ஆர்யன் அறையில் ரஷீத்துடன் கப்பல்களின் பயண விவரங்களை விவாதித்துக் கொண்டிருக்கும்போது கதவை தட்டிவிட்டு ருஹானா உள்ளே வந்தாள். ஆர்யன் லேசாக நிமிர்ந்து பார்த்துவிட்டு முன்னே இருந்த தாளை கையில் எடுத்து அதில் கவனத்தை வைத்தான். அவன் பக்கத்தில் நின்றிருந்த ரஷீத் அவளையே பார்க்க, இருவருக்கும் முன்னே வந்து நின்றவள், “நான் உங்ககிட்ட பேசணும். ரொம்ப அவசரமான விசயம்” என்றாள்.

“வேலையா இருக்கேன்” குனிந்த தலை நிமிராமல் பதில் வந்தது.

அவள் நகராமல் நிற்கவும் தலையை உயர்த்தி அவளை கடுமையாக பார்த்தான். அவள் ஒன்றும் பேசாமல் திரும்பி நடக்க, அவள் செல்வதையும், கதவருகே செல்லும்போது காயத்தில் கை வைப்பதையும் பார்த்துக்கொண்டே இருந்தான். அவள் போன பின்னும் செய்துக்கொண்டிருந்த வேலைக்கு திரும்பாமல் யோசித்துக்கொண்டே இருந்தான்.

அதை பார்த்த ரஷீத் “ஆர்யன்! கையெழுத்து?“ என கேட்கவும், அவன் காட்டிய இடத்தில் கையொப்பம் இட்டவன் ரஷீத் கிளம்பும்முன் வேகமாக வெளியே சென்றான். அவன் செல்வதை பார்த்துக்கொண்டே ரஷீத் முன்னே இருந்த காகிதங்களை அடுக்கினான். நேரே ருஹானா அறைக்கு சென்ற ஆர்யன், அவள் வலி தாங்காமல் பெரிய மூச்சுக்கள் எடுத்துக்கொண்டிருப்பதை பார்த்து கடுமையை குறைத்து அவள் அருகே சென்றான்.

“சும்மா சுத்திட்டு இருக்காதே. படுத்து ஓய்வெடு. சின்ன பிள்ளை போல செய்யாதே” என அவளுக்கு பேச வாய்ப்பு கொடுக்காமல் தன்மையாக சொல்லிவிட்டு கதவருகே வந்து அவளை திரும்பி பார்த்துவிட்டு கீழே சென்றான்.

கீழே சாரா வெளிக்கதவை திறக்க மிஷாலும், பர்வீனும் உள்ளே வருவதை பார்த்தான். மிஷாலை முறைத்து பார்த்த ஆர்யன் பர்வீனை யோசனையாய் பார்த்தான். “ருஹானா மேமை பார்க்க வந்துருக்காங்க” என சாரா சொல்ல, “இப்போ அவங்களை பார்க்க முடியாது” என்று பர்வீனை பார்த்து ஆர்யன் கூறினான்.

இரண்டு எட்டுக்கள் முன்னே வந்த மிஷால் “பார்க்க முடியாதா? இல்லை எங்களுக்கு பார்க்க அனுமதி இல்லயா?” என விறைப்பாக கேட்டான். அவனை ஆர்யன் முறைத்து பார்க்க, பர்வீன் “நாங்க காத்திருந்து ருஹானாவை பார்க்குறோம்” என பொறுமையாக சொன்னார்.

‘தன் திட்டம் எப்படி நிறைவேறப் போகிறது’ என பார்ப்பதற்காக கரீமாவும் அங்கே வந்தாள். “அவ வரவரை நாங்க காத்திருக்கிறோம்” என திரும்பவும் பர்வீன் சொல்ல, “நீங்க இன்னொரு முறை வந்து பாருங்க” ஆர்யன் இப்போதும் கோபப்படாமலே சொன்னான்.

“இங்க பாருங்க சார், நான் ருஹானாவோட அம்மா. அவளை நான் பார்த்து நெடு நாளாயிடுச்சி. நாங்க அவளை பார்க்காம இங்க இருந்து போக மாட்டோம்” என பர்வீன் குரலை உயர்த்தாமல் ஆனால் உறுதியாக சொன்னார். அவள் வலியில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அவளை எப்படி தொந்திரவு செய்வது என யோசித்து ஆர்யன் ஏதும் பேசாமல் நின்றான்.

“அவளுக்கு என்ன ஆச்சு? ஏன் அவளை நாங்க பார்க்க கூடாது? காரணம் என்ன?” என்று மிஷால் நேருக்கு நேராக ஆர்யனை கேட்டான். தனியாக வந்தால் உள்ளே விட மாட்டார்கள் என்று தெரிந்தே பர்வீனையும் அழைத்து வந்திருந்த மிஷால் எப்படியும் ருஹானாவை சந்தித்தே ஆக வேண்டும் என்ற பிடிவாதத்தில் பேசினான்.