ருஹானாவின் வீட்டுக்கு வந்த மிஷால் அது பூட்டி கிடப்பதை பார்த்து கவலையானான்.. அவன் போனை எடுத்து ருஹானாக்கு அழைப்பு விடுக்க… மயங்கி கிடப்பவள் அவன் அழைப்பை ஏற்பாளா..? இல்லை, அந்த அழைப்பு தான் அவள் மயக்கம் தெளிவிக்குமா?… முழு மணி சத்தமும் போய் நின்றது.. மேலும் கவலையானவன் கண்ணுக்கு ருஹானாவின் வளர்ப்பு பூனை பட்டது.. சிறிது மகிழ்ந்த அவன் அந்த பூனையை தூக்கி கட்டு போட்டிருந்த அதன் காலை தடவி கொடுத்தான்…
கையில் பழப்பைகளோடு பர்வீன் எதிர் வீட்டுக்கதவை திறந்துக் கொண்டிருந்தவர் மிஷாலை பார்த்து சிரித்தார்.. வீட்டுக்குள் வருமாறு அழைத்தார்…இருவரும் வீட்டிற்குள் நுழைய, “அஹ்! இந்த தன்வீரை பார்! எப்படி மேல்கோட்டை சோபால போட்டு வைச்சிருக்கான்..!” என்று தன் மகனை திட்டியபடி, அதை எடுத்து கோட் ஸ்டான்டில் மாட்டியவர், மிஷாலை சோபாவில் உட்கார சொன்னார்.. அவனுக்கு டீ போட உள்ளே செல்லப் போனவரை தடுத்த மிஷால், “ஆன்ட்டி! நான் சீக்கிரம் போகணும்.. ஹோட்டல்ல வேலை இருக்கு.. ரெண்டு நாளா ருஹானாக்கு போன் செய்றேன்.. அவ எடுக்கவே இல்ல.. அதான் நேர்ல பார்த்துட்டு போலாம்ன்னு வந்தேன்.. வீடும் பூட்டி இருக்கு” என அவரிடம் விசாரித்தான்..
“ருஹானா கிளம்பிட்டாளே…!” என்ற அவரது பதிலில் அதிர்ந்தவன்.. “எங்கே.. எப்போ..?” என வினவ.. “மடாபாக்கு… அவ சொந்தக்காரங்க வீட்டுக்கு போய்ட்டா.. கொஞ்ச நாள் இங்க இருந்து மாறி போனா அவ துயரங்கள்ல இருந்து விலக முடியுமான்னு அங்க போயிருக்கா..” என்றார், உண்மை அன்பு கொண்ட பர்வீன்.. “அப்படியா.. இது எனக்கு தெரியாதே” என அவனும் வருத்தப்பட… “மகனே..! கொடுமையான சம்பவங்கள் அவ வாழ்க்கையில அடுத்தடுத்து நடந்துடுச்சி.. ‘அங்க போனா இதெல்லாம் கொஞ்சம் நான் மறப்பேன்’னு அவ சொல்லும்போது என்னால மறுத்து பேச முடியல..”
“என்கிட்டே அவ சொல்லியிருந்தா.. நான் வேறவிதமா அவளுக்கு உதவியிருக்க முடியும்” என அவன் ஆதங்கப்பட.. “கடகடனு முடிவு எடுத்துட்டு உடனே கிளம்பிட்டா, மிஷால்.. எனக்கும் ஒன்னும் ஓடல.. இப்பவும் யாராவது எதிர் வீட்டு கதவை தட்டினா… ருஹானா கதவை திறக்க வர மாதிரி தான் எனக்கு தோணுது”.. பேசிக்கொண்டே சென்ற பர்வீன் வழக்கம்போல எதையோ மறந்தவர் எழுந்து சென்று மேசையில் இருந்து எடுத்து வந்து கொடுத்தார்.. “என்னது, ஆன்ட்டி..?” என்றவனுக்கு வந்த பதில் “ருஹானா விட்டு போனா, எலெக்ட்ரிசிட்டி பில்லுக்காக.. உன்கிட்டே கொடுக்க சொன்னா” என்பது அவன் வருத்தத்தை மேலும் அதிகப்படுத்தியது…
அவன் வருத்தத்தை போக்க நினைத்தவர்.., “உனக்கு ருஹானா நிறைய நன்றி சொல்ல சொன்னா.. இதை வாங்கிக்கோ” என சொல்லவும்… மறுத்த அவன், “இல்லை ஆன்ட்டி.. இது இவான் அங்கிள்க்காக செய்தது.. நீங்களே கஷ்டப்படறவங்க யாருக்காவது கொடுத்திடுங்க…” என்றான்.. “அவ சரியாகிடுவா.. இன்ஷா அல்லாஹ்..! என் மகள் உறுதியானவ… சீக்கிரமே அவளோட பழைய சந்தோஷ நாட்களுக்கு திரும்பிடுவா.. இன்ஷா அல்லாஹ்!” என பர்வீன் சொல்ல மிஷால் ஆமோதித்தான்…
———
“ருஹானா..! ருஹானா..! ருஹானா..!” என்ற அன்பான அழைப்பு கேட்க… முள் புதருக்குள் கிடந்த அவள் கண் சுருக்கி தலையை தூக்கினாள்… “எழுந்திரு.. நேரமாச்சே.. வா” என்ற குரலில் எழுந்து அமர்ந்தாள்… எரிக்கும் சூரியனை கை கொண்டு மறைத்தவள் பார்த்தது அழகிய தேவதை வடிவ பெண்ணை… “அக்கா…!” என ஆச்சரியமாக பார்த்து.. “ஆனா.. நீ….?” என்றவளுக்கு கண்ணீர் பொங்க.. “உன்னை எழுப்பத்தான் வந்தேன்” என்றது தேவதை.. “இது கனவு தானே?” என ருஹானா கேட்க .. “ஆமா…!” என்று கூறி அவளை அணைத்துக்கொள்ள.. “உன்னை நான் இழந்திட்டேன், அக்கா.. நான் தோத்து போயிட்டேன்.. என்னால முடியல.. இவானை வாங்க முடியல.. உன் பொக்கிஷத்தை என்னால மீட்க முடியல.. என்னை மன்னிச்சிடு” என்று சொல்லி அவள் கையில் முத்தம் கொடுத்தாள்…
ருஹானா முடியை கோதிய தேவதை, “மன்னிப்பு கேட்கறத்துக்கு நீ எந்த தப்பும் செய்யல… நாம ரெண்டுபேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்க்க ஏங்கினோம்… நான்தான் உன்கிட்டே மன்னிப்பு கேட்கணும்… நான் உனக்கு நல்ல அக்கா இல்லை.. உனக்காகநான் ஏதும் செய்யல”.. எனவும்.. ருஹானா, “அக்கா! இனிமேல் என்னால ஒன்னும் முடியாது.. என் சக்திலாம் வடிஞ்சி போச்சி… இந்த உலகத்துல ஏதும் எனக்கு இல்லை.. நானும் உன்கூட வரேன்..” என உருக்கமாய் கேட்டாள்..
தேவதை அழுத்தமாய் சொன்னது… “உன்னால வர முடியாது, ருஹானா.. நீ உறுதியா இருக்கணும்.. இவான் கூட நீ தான் இருக்கணும்.. அவன் சின்ன குழந்தை.. அவனுக்கு நீ தேவை.. உன்னை நம்பி தானே என் பையனை விட்டுட்டு வந்தேன்… நீயும் இல்லனா அவனுக்குன்னு யாரும் இல்ல… நீ வரேன்னு இவானுக்கு சத்தியம் செஞ்சி கொடுத்துருக்கே.. அவன் உனக்காக காத்திருக்கான்….”
கனவிலிருந்து விழித்த ருஹானா சரேலென்று தரையில் இருந்து எழுந்து “அக்கா…!” என அழைத்து சுற்றுமுற்றும் பார்த்தாள்… யாரும் இல்லாததை கண்டவள், “இவான்…!” என அழைத்து நெஞ்சில் கை வைக்க… இவான் சங்கிலி அங்கே இல்லை.. அதிர்ச்சியில் நன்கு சுரணை வரப் பெற்றவள், நாலாபுறமும் தேடினாள்.. நீளமாக இருந்த புற்களை விலக்கி உற்று உற்று நோக்க.. அங்கே மறைந்திருந்த சங்கிலியைக் கண்டு கொண்டாள்.. பாய்ந்து அதை எடுத்தவள் “இவான்…! தாத்தாவின் பரம்பரை..! என் அன்பு அக்காவின் பொக்கிஷம்…! என் ஆருயிர்..! நான் வரேன், என் கண்மணி..!” என்று கூறி முத்தமிட்டு நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள்…
கொடுஞ்சூரியன் அனலில்
சூரியகாந்தி மயங்கிட !
தேவதையின் சிறு சாரலும்,
நிழலைத் தேடும் சிறகின் கண்ணீரும்
ஊக்கநீராய் அமைந்தே
மயங்கியவளை எழுப்பியதே !!
——-
அர்ஸ்லான் மாளிகை
சமையலறையில் அடுப்பிற்கு அருகே இருந்த மேசையில், பல வண்ண காகித கப்பல்களை வைத்து அம்ஜத் தன் தம்பி மகனுக்கு விளையாட்டு காட்டி கொண்டிருந்தான்.. அவன் எதிரே இருந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்த இவான் தலையில் கப்பல் கேப்டன் அணியும் வெள்ளை நிற தொப்பி இருந்தது.. “உன் கப்பல்லாம் அழகா இருக்கு, கேப்டன்!” என உற்சாகமாக அம்ஜத் கப்பல்களை நகர்த்த.. மேசையில் தலை சாய்த்து இவான் சோர்வாக இருந்தான்.. “கமான் கேப்டன்! ஹார்பர்ல நிறுத்துங்க உங்க கப்பல்களை.. சுப்..சூப்.. “ என குரல் கொடுத்து இவானுக்கு முத்தம் கொடுத்தான்.. அப்போதும் இவான் அசையவில்லை.. “இந்த கப்பலை பாருங்க.. ஆர்யன் போல பெருசா இருக்கு” என்று சொல்லி பார்த்தான், அம்ஜத்.. ஒன்றும் பலிக்கவில்லை.. “வாங்க கேப்டன்…! பயணிகள்லாம் வந்துட்டாங்க!!” என எழுந்து நின்று அழைக்க.. அப்போது அங்கே வந்த சாரா.. “நானும் வரேன், கப்பல்ல ஏற போறேன்” என்று அம்ஜத் பின்னால் நின்று கொண்டார்… இவான் நகரக் கூட இல்லை.. “கப்பல் கிளம்புது…வாங்க கேப்டன்..” என அம்ஜத் அழைத்தான்..
சாரா, “ஏன் கேப்டன் கவலையா இருக்கார்? உங்க கப்பல் பழுதாகிடுச்சா?” என வினவ…. “சித்தி வரேன்னு சொன்னாங்க.. ப்ராமிஸ் செய்தாங்க.. என்னை விட்டு போய்டுவாங்களா.. என் அம்மா மாதிரி திரும்ப வர மாட்டாங்களா…” என இவான் படுத்தவாறே கேட்டான்… சாரா என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழிக்க… அம்ஜத் சொன்னான், “அவங்க போய்டுவாங்க… நிக்கவே மாட்டங்க… எப்பவும் நம்மள விட்டுட்டு போய்டுவாங்க” சோகமாக இவான் பக்கத்தில் உட்கார்ந்தான்…
சாரா சுதாரித்து, “அடடா! பேச்சு சுவையில நாம சாப்பாட்டை மறந்துட்டோமே.. நான் சமையல் செய்ய போறேன்.. இவான் கேப்டன் எனக்கு உதவி செய்ய போறாரு… செய்வீங்க தானே கேப்டன்?” என களிப்போடு கேட்க.. இவான் முகத்தில் சந்தோஷ ரேகை.. ஆர்வமாய் எழுந்தவனை சாரா தூக்கி சமையல் மேடையில் உட்கார வைத்தார்… “மீன் சமைக்கலாமா.. பெரிய மீன்..” என அவனை உற்சாகப்படுத்தினார்…
——
தன் அறையில், நீண்ட குழல் துப்பாக்கியில் குண்டுகள் போட்டு சரிபார்த்து கொண்டிருந்த ஆர்யன் பின்னால் ரஷீத் நிற்க.. அவன் முன்னால் மேசையில் லேப்டாப் பக்கத்தில் ஆர்யனுடன் இவான் நிற்கும் அழகான படம் இருந்தது… ரஷீத், “ஜெர்மனி கப்பல்ல எலக்ட்ரானிக் சரக்கு சரியா வந்து சேர்ந்துடுச்சி… எந்த பிரச்னையும் இல்லை” என சொல்ல.. துப்பாக்கியில் குறி பார்த்துக்கொண்டே ஆர்யன் “நல்லது” என ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னான்.. “அடுத்த ஒப்பந்தம் உடனே போடலாம்னு சொல்றாங்க.. ஜெர்மனிக்கு அடுத்து இத்தாலி கப்பல் தான் வரணும்.. எதோ சின்ன இடைஞ்சல் இருக்கு.. ஆனா நாம சரி செஞ்சிடலாம்..” என்று புன்னகையுடன் ரஷீத் சொல்லிக் கொண்டே போக… இடைமறித்தது, ஆர்யனின் கேள்வி.. “அந்த சித்தி தொல்லை முடிஞ்சதா?”…
“கவலைப்படாதீங்க…! கடலின் கடுங்குளிரும், உயிர் பயமும் அவ நாடி நரம்புகளை ஆட்டம் காண வச்சிருச்சி.. இனிமே அவ இங்க காலடி எடுத்து வைக்க மாட்டா…” என ரஷீத் பெருமையுடன் சொன்னான்… ஒரு கண்ணை மூடி துப்பாக்கியில் குறி பார்த்த ஆர்யனின் பார்வை, தற்செயலாக முன்னே இருந்த லேப்டாப்பில் பட.. இரு கண்களையும் விழித்து, விரித்து நோக்கினான்… அந்த திரையில் வீட்டு கேட்டின் அருகே ருஹானா நடந்து வந்து வீட்டின் உள்ளே நோட்டம் விடுவது தெரிந்தது.. சற்றருகே அவளது பெட்டியும், கைப்பையும் ஓரமாக இருந்தது… லேப்டாப்பை அருகே இழுத்து ஆர்யன் தெளிவாக பார்க்க.. பின்னால் நின்ற ரஷீத் அதிர்ந்து போனான்.. ஆத்திரத்துடன் ஆர்யன் ரஷீத்தை பார்க்க.. ‘என் உயிரை வாங்காம இவ போக மாட்டா போல’ என அவன் தலைகுனிந்து கொண்டான்.. ருஹானாவை பார்க்க பார்க்க ஆர்யனின் கண்கள் சுருங்கி மூச்சு வேகமாக வந்தது…