ஆர்யன் இவானை வெளிநாடு அழைத்து சென்றுவிட, அர்ஸ்லான் மாளிகை இனி தன் வசிப்பிடம் இல்லை என முடிவு செய்து வெளிக் கிளம்பிய ருஹானா, காட்டில் தனியே தவிக்க விட்டு சென்ற ஆர்யன் எதிரே இவானுடன் நிற்பதை கண்டு மெய்மறந்து நின்றாள். நன்றி ததும்பும் அவள் பார்வையும், அதில் கரைந்துப்போன அவன் பார்வையும் ஒன்றுடன் ஒன்று கலந்து நெகிழ்ந்திருக்க, சில நிமிடங்கள் கழித்தே சுற்றுப்புறம் உணர்ந்த ருஹானா இவானிடம் மண்டியிட்டாள்.
இவான் தன் வாழ்க்கையின் ஆதாரம் மட்டுமல்ல, வாழ்க்கையே அவன் தான் என்றிருக்கும் அவள், அவனை பிரிந்தபின் செய்வதறியாது தவித்தவள், ‘அந்த இடம் விட்டு செல்லவேண்டும்’ என்று மட்டும் தெளிவாக உடனே முடிவெடுத்தவள், ‘இவானை திரும்ப எப்படி எப்போது பார்க்க போகிறோம்?’ என்ற பரிதவிப்புடன் உணர்வற்ற வெறும் கூடாய் வெளியே அடியெடுத்து வைத்தவள், புன்சிரிப்புடன் நிற்கும் இவானை பார்த்ததும் உயிர் திரும்ப உடலில் பாய்ந்தது போல் உணர்ந்தாள்.
கண்ணீர் மல்க அவனை கட்டிக்கொண்டவள், சில நிமிடங்கள் அந்த உணர்வை அனுபவித்தாள். “என் ஆருயிரே! என் அன்பே” என ஆனந்தக்கண்ணீர் பெருக்கெடுக்க ஆசைதீர முத்தமிட்டவள், “அல்லாஹ்க்கு மிக்க நன்றி!” என சொல்ல, இவான் அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான்.
இந்த பாசமழையை ஆர்யனும் உணர்வு காட்டாமல் கவனித்திருக்க, பக்கத்தில் நின்றிருந்த சாரா, நஸ்ரியாவின் கண்களும் ஈரமாகின. தொலைவிலிருந்த கரீமாவும், சல்மாவும் விரைந்து அருகே வந்தனர்.
பக்கத்தில் இருந்த பெட்டியை பார்த்த இவான் சித்தியிடமிருந்து சற்று விலகி “சித்தி! நீங்க போறீங்களா?” என கேட்க, பெட்டியை பார்த்த ஆர்யன் முகமும் இறுகியது. ருஹானா அவனுக்கு பதில் சொல்ல யோசிக்க, வாசலில் இருந்த காவலாளி உள்ளே வந்து “சமூகசேவை நிறுவனத்திலிருந்து வந்துருக்காங்க” என அறிவித்தான்.
அதை கேட்டு அதிர்ந்து போன ருஹானா வேகமாக வெளியே வந்து பார்க்க, சிறுவர் விடுதி காப்பாளர் லைலாவும், மற்றொரு பெண் அதிகாரியும் அங்கே நின்றிருந்தனர். “நாங்க இவான் அர்ஸ்லானை கூட்டிட்டு போக வந்திருக்கோம்” என லைலா சொல்ல, ருஹானா திகைத்துப்போய் ஆர்யனை பார்த்தாள். ‘இவங்க என்ன சொல்றாங்க, கேளுங்க’ என அவளின் விழி பேச, ஆர்யன் அவளின் கண்ணின் கேள்வி கண்டும் மௌனமாகவே நின்றான்.
லைலாவிடம் திரும்பிய ருஹானா “உங்களுக்கு எப்படி?” என கேட்கவும், அவள் முழுதாக கேள்வியை முடிக்கும்முன் “நான் தான் வர்ற வழில அவங்களுக்கு தகவல் கொடுத்தேன்” என ஆர்யன் வாய் திறந்து பேச, வேகமாக அவன் புறம் பார்த்த ருஹானாவிடம் “நமக்கு இவானோட உரிமை கிடைக்கிறவரை அவன் அங்க விடுதியில இருப்பான்” என ஆர்யன் தெரிவித்தான்.
அதிர்ச்சியடைந்த ருஹானா இவானை பார்க்க, அவன் அத்தனை நேரமும் அவதிக்குள்ளான அவனுடைய சித்தியையே பார்த்திருந்தான். “இதுல கையெழுத்து போடுங்க” என லைலா ஒரு ஆவணத்தை ஆர்யனிடம் நீட்ட, ருஹானா குனிந்து இவானை அணைத்தாள். “அன்பே! நீ பயப்படாதே! இந்த ஆன்ட்டி உன்னை நல்லா…” என சொல்ல துவங்கவும், சித்தப்பாவை போலவே அவள் பேசுவதை மறித்த இவான் “நான் பயப்படல, சித்தி!” என வேகமாக சொல்லவும் ருஹானா அவனை ஆச்சரியமாக பார்த்தாள்.
“வரும்போது சித்தப்பா எனக்கு எல்லாம் சொன்னாங்க. அப்படித்தானே சித்தப்பா?” என ஆர்யனை துணைக்கழைத்த இவான், ஆர்யன் ஆமோதிக்கவும் சித்தியிடம் திரும்பினான். “சித்தி! நான் இப்போ போறேன். ஆனா அங்க கொஞ்ச நாள் தான் இருப்பேன். சீக்கிரமே வீட்டுக்கு திரும்பி வந்துடுவேன்” என சொல்ல, அழுகையோடு புன்னகைத்த ருஹானா “ஆமா செல்லம். சீக்கிரம் வந்துடுவே” என்றாள்.
சுற்றிலும் நின்ற மற்ற எல்லாரும் இவர்களை பாவமாக பார்க்க, கரீமாவும், சல்மாவும் வெறுப்புடன் பார்த்தனர்.
“அங்க இருக்கறவங்களுக்கு கொடுக்க சொல்லி சித்தப்பா நிறைய பரிசுகள் வாங்கி கொடுத்துருக்கார். அதை பார்த்து அவங்க சந்தோசப்படுவாங்க தானே, சித்தி?”
“ஆமா அன்பே! ரொம்ப சந்தோசப்படுவாங்க. நீ செய்தது மிக நல்ல செயல், கண்ணே!”
“நான் போறதால நீங்க கவலைப்படக்கூடாது, சித்தி”
“சரி, கவலைப்பட மாட்டேன் அன்பே”
“அப்புறம் நீங்க இங்க இருந்து போகக்கூடாது, சரியா?” பெரிய மனிதனை போல இவான் பேச, ஆர்யன் மனதில் இருந்ததை இவான் சொல்வதை கேட்டு ஆர்யன் அமைதியாகவே நின்றான்.
“நான் வரவரை எனக்காக இங்கயே காத்திருக்கணும்” என இவான் சொல்ல, ருஹானா வெளியேற்றும் திட்டம் வீணானதே என சகோதரிகள் இருவரும் பார்த்துக்கொண்டனர்.
“கண்டிப்பா போக மாட்டேன், செல்லம்”
“சத்தியமா, சித்தி?”
“சத்தியமா நான் எங்கயும் போக மாட்டேன், அன்பே” என்று இவானை தழுவிக்கொண்டாள்.
செஞ்சூரியனின் சிறுகுஞ்சவன்
அக்னி சிறகாய் வளரும்போது
தனியே பறந்திட அஞ்சிடுமா?
அன்பு மொழியை அனைவர்க்கும்
பகிர்ந்திட மறந்திடுமா?
தவிக்கும் தாய்க்கு தைரியம்கூறி
விடைபெறுகிறது, விரைவில்
மீண்டும் வருவேன் நான்..
அரவணைக்க காத்திரு நீ..!
ஆர்யனும் அவர்கள் அருகே மண்டியிட்டவன், “சிங்கபையா! நான் உனக்கு ஏற்கனவே சொன்னது தான். நான் உன்னை எப்பவும் பிரிய மாட்டேன். வெகு சீக்கிரமாவே உன்னை அங்க இருந்து கூட்டிட்டு வந்துடுவேன்” என உறுதிகூற இவான் சித்தப்பாவை கட்டிக்கொண்டான்.
இவானை லைலாவோடு அனுப்பிவிட்டு எல்லாரும் உள்ளே வர, சல்மா அவள் அறைக்கு வேகமாக சென்றவள் பொறுக்கமுடியாமல் அக்காவிடம் பொரிந்தாள்.
“நம்பவே முடியல. என்னால ஏத்துக்கவே முடியல, அக்கா. நம்மால அவளை வெளிய அனுப்பவே முடியல. எல்லாமே நமக்கு எதிரா நடக்குது”
“நான் அப்படி நினைக்கல, சல்மா”
“என்ன விளையாடுறியா?”
“அவளை உதற முடியல. உண்மை தான். ஆனா ஆர்யன் திரும்பி வந்துட்டானே. அது நல்ல செய்தி தானே! இப்படி நினைச்சி பாரு. ஒருவேளை ஆர்யன் திரும்பி வரலனா நீ யாரை கல்யாணம் செய்வே? அவன் இல்லனா எங்க இருந்து பணம் கொட்டும்?”
“சரி தான் அக்கா. அதுக்காக?”
“அந்த மாயக்காரியை நான் சீக்கிரமே துரத்திடுவேன். நீ மட்டும் பொறுமையா இரு”
——–
ஆர்யன் சோபாவில் அமர்ந்தவன், இத்தனை நாட்களாக அலைந்து திரிந்த உடல் களைப்பிலும், மனக் களைப்பிலும் காலணிகளை கூட கழட்டாமல் சோபாவில் சாய்ந்து படுத்து கண் மூடினான்.
கதவு தட்டப்படும் ஓசையில் கண் திறந்தவன், உள்ளே வருவது ருஹானா என்றதும் எதுவும் சொல்லாமல் எழுந்து அமர்ந்தான்.
அருகே வந்தவளை நிமிர்ந்து கேள்வியாய் பார்க்க “உங்களுக்கு நன்றி சொல்ல தான் வந்தேன். எனக்கு தெரியும், இவானை அங்கே அனுப்புறது உங்களுக்கு எவ்வளவு கடினமானதுன்னு” என ருஹானா சொல்ல, அவளை பார்த்தபடி கேட்டுக்கொண்டிருந்தான்.
“காலைல காட்டுல நான் கண்விழிச்சி பார்க்கும்போது நீங்க ரெண்டு பேரும் காணல. நான் ரொம்ப பயந்து போயிட்டேன். இவ்வளவு கவலையும், பயமும் என்னோட வாழ்க்கையில நான் அனுபவிச்சதே இல்ல”
ஆர்யன் தலை தாழ்ந்தது.
“இன்னொரு முறை அந்த கொடுமையை அனுபவிக்க என்னால முடியாது. இவான் இல்லாம நான் உயிர் வாழவே மாட்டேன்”
கண்கலங்க பேசும் அவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு திரும்ப பார்வையை எதிரே இருந்த சுவரில் பதித்தான்.
“தயவு செய்து அந்த வலியை திரும்ப எனக்கு கொடுக்காதீங்க”
அவளை பார்த்த ஆர்யன் “நான் என்ன செய்தேனோ, அது எல்லாமே இவானுக்காக தான் செய்தேன்” என்றான்.
ருஹானா தலை தானாக ஆமென ஆடியது.
“அவனை தவிர எனக்கு வேற எதும் பெருசில்ல. உனக்கும் அது தெரியும்”
இம்முறையும் ருஹானா அவன் சொல்வதை ஏற்றுக்கொண்டு தலையாட்டினாள்.
இருவரும் ஒருவரையொருவர் பார்த்திருக்க, கதவு தட்டி உள்ளே வந்த ரஷீத் “போலீஸ் வந்துருக்காங்க, உங்களை தேடி” என்றான்.
ருஹானாவுக்கு தூக்கி வாரிப்போட அவள் அப்படியே யோசனையாக நின்றாள். ஆர்யன் வேகமாக வெளியே வந்து ரஷீத் பின்தொடர படிக்கட்டில் இறங்க, இல்லை என தலையாட்டியபடி ருஹானா வேகமாக ஓடிவந்து அவர்களுடன் இணைந்து இறங்கினாள்.
தன்வீர் மற்றும் இரு காவல் அதிகாரிகளோடு வாசலில் கமிஷனர் வாசிம் நிற்க, ஆர்யனுக்கு அவனை பார்த்ததும் ஏற்கனவே அவனோடு நடந்த மோதல் நினைவு வர கோபமாக “மறுபடியும் நீயா?” என்றான்.
“சின்ன பையனை கடத்தினதா உன் மேல புகார் வந்திருக்கு, அர்ஸ்லான்” என வாசிமும் குறையாத கோபத்துடன் ஆர்யனை முறைத்தபடி சொன்னான்.
கரீமாவும், சல்மாவும் மலர்ச்சியுடன் பார்க்க, ருஹானா பதறி “எங்கயோ தப்பாகிடுச்சி, தன்வீர். நானே உனக்கு போன் செய்யணும்னு இருந்தேன். ஆனா…” என மேலே பேசும்முன் தடுத்த ஆர்யன் “இதுல நீ தலையிடாதே” என்றான்.
பின்னால் நின்ற கரீமா “ருஹானா! இது சரியான சமயம் இல்ல. ஆர்யன் கோவத்துல இருக்கான்” என ருஹானாவின் கையை பிடித்து இழுத்தாள்.
ஆர்யனும், வாசிமும் முறைத்து நிற்க “என்கூட போலீஸ் ஸ்டேஷன் வந்து பதில் சொல்லு” என வாசிம் கடுமையாக பேச “உன் ஹீரோ வேலையை இங்க காட்டாதே. முதல் முறை நீ இங்க வரும்போதே உன்னோட நோக்கம் என்னன்னு நான் புரிஞ்சிகிட்டேன்” என ஆர்யனும் பதிலுக்கு பேச, மூர்க்கமான வாசிம் கைவிலங்கை எடுத்து ஆர்யன் கையில் மாட்டினான்.