இவானை அணைத்துக்கொண்டு தூங்கி எழுந்த ருஹானா முதலில் பார்த்தது, நேற்றிரவு இருந்த அதே நிலையில் அமர்ந்திருந்த ஆர்யனை தான்.மெல்ல அவள் அருகே வர, அவளை தலை தூக்கி பார்த்த ஆர்யன் மீண்டும் தன் வேலையை தொடர்ந்தான்.
“ராத்திரியெல்லாம் நீங்க தூங்காம விழித்தே இருந்தீங்களா?” என ருஹானா கேட்க, அவளை நிமிர்ந்து பார்த்தவன் “தூங்குறதுக்கு சரியான நேரமா இது?” என பதில் கேள்வி கேட்டான்.
அவள் பதில் சொல்லாமல் அவனையே பார்க்க அவனும் பார்வையை திருப்பவில்லை. பின் பெருமூச்சு விட்டு எழுந்தவன் கூராக சீவி வைத்திருந்த கட்டையை எடுத்துக்கொண்டு ஆற்றுக்கு சென்றான்.
ருஹானா நெருப்பின் முன்னே அமர்ந்து இதமாக குளிர்காய, இவான் தூக்கத்திலிருந்து விழித்தான். தான் படுத்திருந்த சித்தப்பாவின் கோட்டை எடுத்து உதறியவன் அதை ஒரு மரக்கிளையில் மாட்டிவிட்டு சித்தியின் அருகே வந்தான்.
“முழிச்சிட்டியா, செல்லம்! வா”
“சித்தி! இந்த அழகான மரவீடு யார் கட்டினது? சித்தப்பாவா?”
“ஆமா அன்பே”
“இந்த நெருப்பும் சித்தப்பா தான் உருவாக்கினாங்களா?”
“நானும் இந்த இலையை எடுத்து போடவா?” என கேட்டபடி நெருப்பை பெருக்கினான்.
ஆர்யன் ஒரு கையில் கூரான கட்டையும், மறுகையில் பெரிய மீன்களை சேர்த்து மாட்டிய சிறு கட்டையும் கொண்டுவர “சித்தப்பா!” என இவான் ஆர்யனை நோக்கி ஓடினான்.
“இதை வச்சி இத்தனை மீனையும் பிடிச்சிட்டீங்களா, சித்தப்பா?” என அவன் ஆச்சரியமாக கேட்க, ருஹானாவின் முகத்திலும் அதே பாவனை. அது ஆர்யனை வசீகரிக்க, இவானுக்கு பதில் சொன்னாலும் அவன் பார்வை அழகாக அகன்ற அவளின் கண்களிலேயே இருந்தது.
அவன் அருகே நெருங்கி வரவும் அவன் இடது கையில் ஏற்பட்டிருந்த காயத்தை கண்டவள் பதறினாள்.
“அடிபட்டுருக்கே! காயத்தை கழுவி கட்டணுமே! ரத்தம் நிறைய வெளியே போகுது”
“அதுக்கெல்லாம் ஒன்னும் அவசியமில்ல” அவள் பதட்டத்தை கண்டும் அவன் அலட்சியமாக சொன்னான்.
அவன் அவளுடைய உதவியை மறுக்கவும், வேறு என்ன செய்வது என்ன தெரியாமல் “நான் இந்த மீனை சமைக்கிறேன்” என்று ருஹானா சொல்லவும், ஆர்யன் அவளிடம் தந்துவிட்டு நகர்ந்து சென்றான்.
சட்டையை கழட்டி காயத்தை ஆராய்ந்தவன் கிழிந்திருந்த சட்டையின் ஒரு கையை மேலும் கிழித்து இடது கையில் கட்டுப்போட்டான். ஒரு கையால் கட்டுப்போட சிரமமாக இருந்தாலும், ருஹானாவை திரும்பி பார்த்தவன் அவளை உதவிக்கு அழைக்கவில்லை.
மீனை சுத்தம் செய்துக் கொண்டிருந்தவளும் லேசாக திரும்பி பார்த்தாள். அவன் பனியனுடன் நிற்கவும் தயங்கியபடி திரும்பிக்கொண்டாள். அவனும் அவளுக்கு முதுகு காட்டி திரும்பி நின்று சட்டையை மாட்டிக்கொண்டான்.
“சித்தி! இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?” என இவான் கேட்க, அவனருகே வந்து அமர்ந்த ஆர்யன் “ரொம்ப பசிக்குதா, சிங்கப்பையா?” என கேட்டான். “லேசா, சித்தப்பா” என அவன் சொல்லவும் “இதோ! ரெடியாகிடுச்சி” என ருஹானா சுட்ட மீனை ஒரு இலையில் வைத்து இவானுக்கு கொடுத்தாள்.
இவான் சூட்டோடு வாங்கி ஆவலோடு சாப்பிட, ஆர்யன் அதை வாங்கி ஒரு கல்லில் மேல் வைத்து இவான் சாப்பிட வசதி செய்து கொடுத்துவிட்டு, அழகாக மீன் சமைக்கும் அவளையே பார்த்திருந்தான். அதற்குள் அடுத்த மீன் தயாராகிட ருஹானா அதை ஆர்யனுக்கு நீட்டினாள். “நீ சாப்பிடு” என அவன் சொல்ல “இல்ல.. நீங்க சாப்பிடுங்க.. அடுத்ததும் சீக்கிரம் தயாராகிடும்” என அவனை சாப்பிட சொல்ல அவன் மறுத்தான்.
“பரவால்ல.. நீ முதலில் சாப்பிடு” என அவன் அவளுக்காக மறுக்க, இப்படி கண்ணியமாக கவனித்துக்கொள்ளும் ஆர்யனை மனதிற்குள் வியந்து போனாள்.
“இப்படியே கேம்ப்பிங்லயே இருந்தா ஜாலியா இருக்கும். ஆனா அம்ஜத் பெரியப்பாவும் நம்ம கூட இருந்தா நல்லா இருக்கும். அவருக்கும் கேம்ப்பிங் பிடிக்கும் தானே, சித்தப்பா?” என இவான் கேட்க, ஆர்யனால் அவனுக்கு பதில் சொல்ல முடியவில்லை.
“இவான் செல்லம்! காலைல பார்த்தோமே அந்த எறும்புகளுக்கு மீன் தலையை போட்டுட்டு வரீயா?” என ருஹானா இவானை அனுப்பிவிட, ஆர்யன் அண்ணனை நினைத்து சோகமானான்.
“இவானை புது வாழ்க்கைக்கு நீங்க கூட்டிட்டு போறீங்கன்னா, இது போல அவனோட நிறைய கேள்விகளுக்கு நீங்க பதில் சொல்லி தான் ஆகணும். அவனோட பாச தேடலையும் நீங்க தடுக்க முடியாது. அவன் கவலைப்படறதையும் நீங்க மாத்த முடியாது”
ஆர்யன் அவளை முறைத்து பார்க்க “வேற வழிகளும் இருக்கு. அதுல யாருமே வருத்தப்பட வேண்டியதில்ல” என அவளால் முடிந்த அளவு ஆர்யனை திசை திருப்ப பார்த்தாள்.
சாப்பிட்டு முடித்ததும் அவர்களின் பயணம் ஆரம்பித்தது.
சிறிது தூரத்தில் பாதையை விட்டு தள்ளி கிடந்த கூழாங்கற்கள் இவானின் கவனத்தை ஈர்க்க, அவன் சித்தப்பாவின் அனுமதி பெற்று அதை சேகரிக்க சென்றான்.
“நாம எங்க போறோம்?” ருஹானா கேட்க ஆர்யனின் பதில் வரவில்லை. “எங்க போறோம்னு என்கிட்டே சொல்ல மாட்டீங்க தானே?” தெரிந்துக்கொண்டே என்ன கேள்வி இது என்பதுபோல ஆர்யன் பார்த்தான்.
“எங்க போறோம்னு எனக்கு தெரியல. இதுக்கு மேல என்ன நடக்கும்னும் எனக்கு தெரியல. என்ன ஆகுமோன்னு எனக்கு பயமா இருக்கு. ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம். நான் இவானோட எப்பவும் இருப்பேன். அவன் சந்தோசம் தான் எனக்கு முக்கியம். அதை தவிர எனக்கு வாழ்க்கைல எதும் வேணா. உங்களுக்கும் அப்படித்தான்னு எனக்கு தெரியும். என்னை நம்புங்க. இவான் விஷயத்துல எல்லாம் சரியா நடக்கும். நம்மை விட்டு அவன் பிரிய மாட்டான். நம்ம கூட அவன் எவ்வளவு மகிழ்ச்சியாவும், பாதுகாப்பாவும் இருக்கான்னு எல்லாரும் பார்க்க தான் போறாங்க. அவங்களுக்கு அதை பார்க்கற அந்த வாய்ப்பை நீங்க கொடுங்க”
நீளமாக பேசிய ருஹானா, ஆர்யனை சிந்திக்க விட்டுவிட்டு இவானோடு சென்று சேர்ந்து கொண்டாள்.
———
ஆர்யனையும் இவானையும் பார்க்காமல் சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடித்துக்கொண்டிருந்த அம்ஜத்தைகரீமாவால் சமாளிக்க முடியவில்லை. ஆர்யனின் இருப்பிடமும் தெரியாமல், அவளின் கோபம் எல்லை மீறிக்கொண்டிருந்தது. சல்மா அக்காவை தேற்றியும் தனது திட்டங்களெல்லாம் தடுமாறுவதை கண்டு அவளின் நிதானம் விடைபெற்றிருந்தது.
அந்த நேரம் காவல்துறையினர் வந்திருப்பதாக ஜாஃபர் தெரிவிக்க, தன்னை கட்டுபடுத்திக்கொண்டு அவர்களையும் சமாளித்து அனுப்பியவள் ரஷீத்தை போனில் அழைத்தாள்.
“ரஷீத்! இவானை பற்றி ஆர்யன் கிட்டே விசாரிக்க போலீஸ் இங்க வந்துட்டு போயிருக்காங்க. ஆர்யன் வெளியூர் போயிருக்கான்னு நான் சமாளிச்சி அனுப்பி இருக்கேன். உனக்கு ஆர்யன் இருக்கும் இடம் தெரிஞ்சா தயவு செய்து சொல்லு. இங்க நிலைமை கட்டுக்குள்ள இல்ல. திரும்பவும் போலீஸ் வந்து விசாரிச்சா என்ன செய்றது?”
“என்ன மாளிகைக்கும் போனாங்களா?” என ஆர்யன் வேகமாக வினவ, அதை கேட்ட ருஹானா “என்ன நடந்தது?” என்று கேட்க, ஆர்யன் அவளுக்கு பதில் சொல்லாமல் ரஷீத்தின் பேச்சில் கவனம் வைத்தான்.
“ஆமா! உங்களை வலைவீசி தேடிட்டு இருக்காங்க. நீங்க தான் இவானை வச்சிருக்கீங்கன்னு தெரிந்தா எல்லாமே நமக்கு பாதகமாகிடும். நாளைக்கு 11 மணிக்கு கப்பல் கிளம்புது”
“நாளைக்கு 11 மணிக்கா?” என ஆர்யனும் திருப்பி கேட்க, ருஹானா “என்ன நாளைக்கு 11 மணிக்கு?” என கேட்டாள்.
அவளுக்கு பதில் சொல்லாமல் ஆர்யன் போனை மூடி முன்னே நடக்க, “வா செல்லம்” என இவானை கூப்பிட்டுக்கொண்டு ருஹானாவும் பின்தொடர்ந்தாள்.
முன்னே நடந்த ஆர்யன் வலியால் இடது கையை பிடிக்க, ருஹானா அவன் காயத்துக்கு மருந்து தேடி திரும்பி பின்னே நடந்தாள்.
இவான் வால்பேரிக்காய் பழங்களை ஆர்யனுக்கு காட்ட அவன் அவற்றை பறித்து இவானுக்கு தந்தான்.
“நமக்கு நிறைய பழங்கள் கிடைச்சிடுச்சில, சித்தப்பா?” என இவான் சந்தோசப்பட ஆர்யன் அவன் தலையை செல்லமாக தடவினான்.
“சாரா ஆன்ட்டி பழங்களை கழுவிட்டு தான் எனக்கு சாப்பிட தருவாங்க” என இவான் சொல்ல “நாமும் அப்படியே கழுவிட்டு சாப்பிடலாம்” என சொன்ன ஆர்யன், நீர்நிலை ஏதும் இருக்கிறதா என பார்வையை சுழற்ற, அப்போது தான் ருஹானா இல்லாததை கவனித்தான்.
திகைத்து பார்த்த ஆர்யன் “உன் சித்தி எங்க, அக்னி சிறகே?” என கேட்க “எனக்கு தெரியலயே, சித்தப்பா” என அவன் பதிலளிக்க “ஒருவேளை…..” என ஆர்யன் ருஹானா மீது சந்தேகம் கொண்டான்.
“இதே இடத்தில இரு, இவான். நான் இப்போ வந்துடறேன்” என ஆர்யன் சொல்ல “சித்தியை கூப்பிட போறீங்களா?” என அவன் கேட்க ஆமென சொல்லி வேகமாக திரும்பி தேடி ஓடினான்.
மூலிகை தேடிக்கொண்டே வந்த ருஹானா ஒரு இடத்தில் அவளுடைய நிழலை பார்த்தே பயந்து கத்திவிட்டாள். பின் சமாளித்துக்கொண்டு மீண்டும் மருந்தை தேடி சுற்றிலும் பார்த்துக்கொண்டே நடக்க ஆரம்பித்தாள். இத்தனை பயம் உள்ளவள் ஆர்யனுக்கு மருந்து தேடி ஏன் தனியே வர வேண்டும்? அவன் சம்மதிக்க மாட்டானென தெரிந்து அவனுக்கு தெரியாமல் வர எந்த விசை அவளை உந்தி தள்ளியது?
இவான் நிற்பது கண்ணுக்கு தெரியும் தூரம்வரை வந்த ஆர்யன் திரும்பி இவானை பார்த்தான். அவன் சொன்ன இடத்தில் சொன்ன விதத்தில் அப்படியே இவான் நிற்பதை பார்த்து தைரியம் கொண்டவன், வேகமாக கோபத்துடன் ருஹானாவை தேடி ஓட துவங்கினான்.
அவள் தேடிவந்த மூலிகை இலை கிடைத்ததும் மகிழ்ச்சி அடைந்த ருஹானா அந்த புதரின் அருகே மண்டியிட்டு பறிக்க ஆரம்பித்தாள். அவள் பின்னே ஒரு பெரிய பாம்பு ஊர்ந்து வந்தது.
அவள் அதை கவனிக்காமல் இன்னும் இலைகளை பறித்துக்கொண்டே இருக்க, மிக அருகே சீறும் சத்தம் கேட்டு திரும்பியவள், படம் எடுத்து நின்ற பெரிய பாம்பை கண்டு “ஆ!” என்று அலறி பின்னால் விழுந்து விட்டாள்.
ஓடிவந்த ஆர்யன் பாம்பின் கழுத்தை பிடித்து தூக்கிவிட்டான். வெலவெலத்துப் போய் கீழே கிடந்த ருஹானா பாம்பையும், கோபமாக அதை பிடித்திருக்கும் ஆர்யனையும் பார்த்து நடுங்கி போனாள்.