புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 49  

இவானை தேடிவந்த காவலர் எதிரே வெலவெலத்துப் போய் ருஹானா நிற்க, மீண்டும் அதே கேள்வியை அவர் கேட்க, தைரியத்தை திரட்டிக்கொண்ட ருஹானா “இங்க அப்படி எந்த குழந்தையும் இல்ல” என சொன்னாள்.

“நாங்களே உள்ளே போய் தேடி பார்த்துக்கறோம்” என காவல் அதிகாரி உள்ளே செல்ல முற்பட, ருஹானா அவர் முன்னே வந்து தடுத்து நின்றாள். உள்ளே ஆர்யன் எதற்கும் தயாராக நின்றான்.

கடமையை செய்ய விடாமல் தன்னை தடுக்கும் ருஹானாவை ஆச்சரியமாக பார்த்த அதிகாரி “வழி விடுங்க மேம்! உங்க அனுமதியோட நாங்க உள்ளே போய் தேடுறோம்” என முன்னே காலடி எடுத்து வைக்க “பிஸ்மில்லாஹ்!” என்றபடி அங்கே ஜோஹ்ரா வந்தார்.

“இங்க என்ன நடக்குது? இந்த நேரத்துல நீங்க என்ன செய்றீங்க?” என அவர் அதிகாரியை பார்த்து வினவ “இங்க இவான் அப்படின்ற பையனை தேடி நாங்க வந்திருக்கோம். அவன் இங்க தான் இருக்கான்னு எங்களுக்கு துப்பு கிடைச்சது” என்று திரும்பவும் அவர் சொல்ல ஆர்யன் உள்ளே பதட்டமானான்.

ஜோஹ்ரா “இங்க யாரும் அப்படி இல்லயே. என் மகன் சேஹான், என் மருமகள் நக்கத், என் பேரன் ஃபாசில் தான் இங்க வசிக்கிறாங்க. என் பேரனுக்காக நான் தயிர் கொண்டு வந்தேன்” என சொன்னவர் “நக்கத்! இந்தா இதை வாங்கிக்கோ!” என்று ஒரு மண் பாத்திரம் நிறைய கெட்டித்தயிரை ருஹானாவின் கையில் வைத்தார்.

“காலைல அவன் எழுந்ததும் கொடு” என்று ருஹானாவிடம் கொடுத்த ஜோஹ்ரா, காவலர்களிடம் “உங்களுக்கு ஒன்னுமே கொடுக்கலயே? உள்ளே வரீங்களா? மோர் தரேன்” என விருந்தோம்பல் செய்தார்.

லேசாக இருந்த சந்தேகமும் விலகி செல்ல “வேணாம் பாட்டி. எங்களுக்கு வேலை இருக்கு” என அவர் உபசாரத்தை மறுத்தவர்கள் ருஹானாவிடம் மன்னிப்பு வேண்டி நகர்ந்தனர்.

“தவறான தகவல். இங்க அப்படி யாரும் இல்ல. நாங்க பக்கத்துல தேடி பார்க்கிறோம். கிராமத்தை சுத்தி செக்யூரிட்டி போடுங்க” என வாக்கிடாக்கியில் பேசியபடி அவர்கள் செல்ல, ஆர்யனுக்கும், ருஹானாவுக்கும் அவர்கள் பேசியது தெளிவாக கேட்டது.

“பாரேன் நக்கத்! நம்ம ஃபாசில் வயசு பையனை அவன் தாய் கிட்டே இருந்து பிரிக்க எப்படி தான் மனசு வந்ததோ? இன்ஷா அல்லாஹ்! குட்டி பையன் சீக்கிரமே கிடைக்கட்டும்” என ஜோஹ்ரா இறைவனை வேண்ட “இன்ஷா அல்லாஹ்!” என ருஹானாவும் சொல்ல “பனில நிக்காதே! உள்ளே போய் படு! நானும் துவா முடிச்சிட்டு படுக்க போறேன்” என்று அவர் சென்றுவிட்டார்.

நடந்த சம்பவத்திலிருந்து மீள முடியாமல் ருஹானா அதே இடத்தில் ஆணியடித்தது போல நிற்க, ஆர்யன் உள்ளே இருந்து வெளியே வந்தவன் வாசலை ஆராய்ந்தான், அவர்கள் சென்று விட்டார்களா என. பின்பே ருஹானாவின் புறம் திரும்பியவன் அவள் அதிர்ச்சியில் நிற்பதையும், அவள் கை நடுங்குவதையும் கண்டான்.

வேகமாக அவள் கையில் இருந்த தயிர் கிண்ணத்தை வாங்கியவன் “நிதானத்துக்கு வா. அவங்க போய்ட்டாங்க” என்றான். அப்போதும் அசையாத ருஹானா “சித்தி!” என இவான் குரல் கேட்கவும் வேகமாக உள்ளே வந்து இவானை கட்டிக்கொண்டாள்.

“சித்தி! அவங்க போய்ட்டாங்க தானே? திரும்ப வருவாங்களா?” என இவான் கேட்க, இருவர் மனதிலும் ஆம் எனும் பதில் தான் ஓடியது.

“யாராவது ரோட்டுல நம்மை பார்த்துட்டு போலீஸ்க்கு சொல்லி இருப்பாங்க. இதுக்கு மேலே இந்த இடம் பாதுகாப்பானது கிடையாது”

“எப்படியும் இந்த விஷயத்துக்கு ஒரு முடிவு வந்து தான் ஆகணும். எத்தனை நாள் இப்படி ஓடிட்டே இருக்க முடியும்?”

“தேவைப்பட்டா கடைசி வரை” என சுருக்கமாக முடித்த ஆர்யன் இவானை தூக்கிக் கொண்டு வெளியே ஓட இவான் “சித்தி!” என கூப்பிட்டான். “நானும் வரேன்” என கைப்பையை எடுத்துக்கொண்டு ருஹானாவும் அவர்கள் பின்னால் ஓடினாள்.

கார் நிறுத்தி இருந்த இடத்திற்கு ஆர்யன் செல்ல விழைய, அங்கே காவலர் இருந்தனர். வெளியே இருந்த ஒரு பெரிய கத்தியை மட்டும் எடுத்துக்கொண்டு பின்பக்கமாக ஆர்யன் வேகமாக செல்ல ருஹானாவும் தொடர்ந்தாள்.

——–

கமிஷனர் வாசிம் சையத் பாபாவின் உணவகம் நாடி வந்திருந்தான். வாகிதா வீட்டில் தங்குவதை முழுமனதாக ஏற்றுக்கொள்ளாமல் அவன் அத்தை தௌலத் தொல்லை கொடுத்துக்கொண்டே இருப்பதால் அவன் அமைதியை இழந்திருந்தான். தன் பெரியப்பாவிற்கு கொடுத்த வாக்கிற்காக மட்டுமே வாகிதாவை பாதுகாப்பது தன் கடமை என உறுதியாய் இருக்கும் வாசிமுக்கு அவளை நேசிக்கும் அவனின் உள்மனம் பற்றி புரிந்து கொள்ள முடியவில்லை.

மட்டன் உருண்டைகளை நெருப்பில் வாட்டிக் கொண்டிருந்த சையத், வாசிமின் குழப்பமான முகத்தை கூர்ந்து கவனித்தார். 

“மகனே! சுவையான மீட்பால் எப்படி செய்றதுன்னு உனக்கு  தெரியுமா?”

வாசிம் திரும்பி பார்க்க “அதிக பொறுமையால் தான்” என்று சொன்ன சையத் அதன் செய்முறையை சொல்வதோடு அவன் மனதை தெளிவிக்க முயன்றார்.

“மட்டன் கூட சேர்த்து இருக்குற பொருட்கள்லாம் அதோட கலக்க நேரம் பிடிக்கும்”

“அதோட அடிக்கடி திரும்பி போட்டா தான் எல்லா பக்கமும் ஒரே மாதிரி வேகும்”

“அது நல்லா வேகும்வரை பொறுமையா காத்திருக்கணும்”

“நம்மோட உள்ளுணர்வுக்கு தான் தெரியணும், அது தயாராகிடுச்சான்னு”

“எல்லாமே நேரம் சம்பந்தப்பட்டது தான்”

“எல்லாத்துக்கும் காலத்தோட ரகசிய தொடர்பு இருக்கு”

“வாழ்க்கை, காதல், நட்பு…. இது எல்லாத்தையுமே சரியான நேரம் வரும்போது நாம புரிஞ்சிக்குவோம்”

“புரியுதா?” என சையத் கேட்க, வாசிம் ஆமென தலையாட்டினான்.

“நான் எது கேட்டாலும் நீ பதில் சொல்ல மாட்றே? ஆனா நீ பெரிய குழப்பத்துல இருக்கே, அது எனக்கு தெரியுது. அது காதலால் வந்த குழப்பம்னு எனக்கு தோணுது”

“அப்படிலாம் எதுவும் இல்ல, சையத் பாபா. நான் கிளம்புறேன்”

“அது எப்படி நீ மீட்பால் சாப்பிடாம போவே, மகனே?”

தட்டில் கொண்டுவந்து வாசிம் முன்னே வைத்துவிட்டு சையத் முறைத்து பார்க்கவும், வாசிம் சிரித்துக்கொண்டே திரும்ப அமர்ந்தான்.

“ஆனா ரொம்பவும் நாள் கடத்தாதே, அது காதலா இருந்தா. நேரம் தப்பி போனா, உன் இளமை வீணா போய்டும். உன் மனசை மறைச்சி, அதிக பொறுமை காத்து வாழ்க்கைக்கு அவசியமானதை இழந்துடாதே. இப்போ சூடு ஆறும்முன்னே சாப்பிடு” 

வாசிம் யோசித்துக்கொண்டே சாப்பிட, சையத் அவனை பார்த்து சிரித்துக்கொண்டே அடுப்பில் உருண்டைகளை திருப்பி போட்டார். 

——-  

தூங்கும் இவானை கைகளில் ஏந்தியபடி ஆர்யன் காட்டுக்குள் நடக்க, கூடவே ருஹானாவும் நடந்து வந்து கொண்டிருந்தாள். குளிர் தாக்காவண்ணம் ஆர்யன் கோட்டை இவானை சுற்றி மூடி இருந்தான். அப்போது ஆர்யன் போன் அடிக்க அதை எடுக்க முடியாமல் அவன் சிரமப்பட, ருஹானா முன்வந்து இவானுக்காக கை நீட்டினாள்.

“என்கிட்டே கொடுங்க” என அவள் கேட்க, அவள் முகத்தை பார்த்தபடியே நீட்டிய அவள் கையில் அவன் இவானை வைக்க, இவானை வாங்கிக் கொண்ட ருஹானா தொடர்ந்து அடிக்கும் போனை கண்ணால் காட்டினாள். 

அப்போதும் ஆர்யன் அவளை பார்த்தபடியே நிற்க “போனை எடுக்கலையா?” என அவள் கேட்ட பின்னே சுயநினைவுக்கு வந்த ஆர்யன் போனை எடுப்பதற்குள் அது நின்று விட்டது. திரும்ப அழைக்க முடியாமல் தொலைபேசி சமிக்ஞையும் விடுபட்டது.

அசைவுகளில் விழித்துக்கொண்ட இவான் “சித்தி! நாம எங்க போறோம்?” என கவலையாக கேட்டான். ஆர்யன் “ஏற்கனவே நான் உனக்கு சொன்னேன்ல, சிங்கப்பையா? நாம கேம்ப்பிங் வந்துருக்கோம்” என சொல்ல, ருஹானா ஆர்யனை சலிப்பாக பார்த்தாள்.

ஆர்யன் அவளை கடுப்பாக பார்த்தபடி இவானை தன் கைகளில் வாங்கி கொண்டான். அப்படியே அவர்கள் அடர்ந்த காட்டுக்குள்ளே நடக்க இவான் நன்கு உறங்கி விட்டான்.

வெகு தூரம் சென்றபின் ஒரு மேடான இடத்தில் இருவரையும் தங்க வைத்த ஆர்யன், மரத்தின் கிளைகளை உடைத்து ஒரு பந்தல் நட்டு அதன் மேலே இலை, கிளை, கொடிகளை போட்டு ஒரு கொடிவீடு அமைத்தான். அதன் உள்ளே இவானை மடியில் போட்டுக்கொண்டு ருஹானா அமர்ந்திருக்க, ஆர்யன் முன்னே காய்ந்த கட்டைகள், சருகுகளை கொளுத்தி தீ மூட்டினான்.

கட்டைகளை கத்தி கொண்டு சீவி நெருப்பை பெருக்கி, குளிரிலிருந்து தப்பிக்க அவன் செய்யும் செயல்களை ருஹானா பார்த்தபடியே அமர்ந்திருந்தாள். இவான் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்லவும் அவனை கீழே படுக்க வைத்துவிட்டு ஆர்யன் பக்கத்தில் நெருப்பின் எதிரே ஒரு கல்லின் மீது வந்து அமர்ந்தாள்.

“இன்னைக்கு அவன்கிட்டே கேம்ப்பிங்ன்னு ஏமாத்திட்டீங்க! நாளைக்கு என்ன சொல்லுவீங்க? இப்படியே எத்தனை நாளைக்கு சமாளிப்பீங்க?” என கேட்க, கட்டையை சீவுவதிலேயே பார்வையை வைத்திருந்த ஆர்யன் “எத்தனை நாள் முடியுமோ அத்தனை நாளைக்கு” என்றான்.

கொழுந்துவிட்டு எரியும் நெருப்பை உற்று நோக்கியவன் “இவானுக்கு வாழ்க்கையோட கஷ்டநஷ்டங்கள் சமாளிக்க தெரியணும்” என்றான்.

“உங்களோட வாழ்க்கை கடினமானது. நிறைய கஷ்டங்கள் சந்திச்சிருக்கீங்க. அதுக்காக இவானும் அப்படியே சிரமப்படணுமா?”

அவளை திரும்பி பார்த்தவன் “நான் இவானுக்கு சத்தியம் செஞ்சி கொடுத்துருக்கேன், அவனை தனியா விட மாட்டேன்னு. நான் என்னோட வாக்குறுதியை காப்பாத்துவேன்” என்று சொல்லி மீண்டும் கட்டையை சீவ ஆரம்பித்தான்.

“உங்களுக்கு தெரியுமா, போலீஸ்ட்ட நான் ஏன் உங்களை காட்டிக்கொடுக்கலன்னு?”

சீவுவதை சட்டென நிறுத்திவிட்டு அவளை திரும்பி பார்த்தான்.

“இவானுக்காக…. அப்போ போலீஸ்ட்ட மாட்டியிருந்தா, இவானை கடத்தின குற்றம் நம்ம மேலே விழுந்திருக்கும். அடுத்து என்ன நடந்திருக்கும்னு என்னால நினைச்சி கூட பார்க்க முடியல”

அவளை அவன் திகைப்பாக பார்த்திருக்க “அதுக்கு அப்புறம் இவான் நமக்கு நிரந்தரமா திரும்ப கிடைச்சிருக்க மாட்டான்” என அவள் சொல்ல, அவள் வார்த்தைகளில் இருந்த உண்மையை அவன் யோசிக்கலானான்.

 

வாக்கு தேவனாய் அவன்….

நீதி தேவதையாய் அவள்..

ஆருயிரைக் காக்க போராட்டம்

எவ்வழி வசப்படும்?

    

“வாழ்க்கையில எப்பவும் கஷ்டங்களும், போராட்டங்களுமே இருக்கணும்னு அவசியம் இல்ல. ஒவ்வொரு நொடியும் சண்டை போடணும்னு தேவையும் இல்ல. சில சமயம் வேற பாதையிலும் நாம போகலாம்”

அவன் அமைதியாக நெருப்பில் இலைகளை அள்ளி போட, தூங்கும் இவானை திரும்பி பார்த்துக்கொண்ட அவள் தொடர்ந்து பேசினாள்.

“மென்மையான ஜீவனை நாமளும் மென்மையா தான் கையாளணும். கடுமை, முரட்டுத்தனம்ன்னு வன்மையா வழிநடத்தும்போது நீங்க தான் முதல்ல புண்படுவீங்க, வருத்தப்படுவீங்க. நான் சொன்னதுல ஏதாவது தவறு இருக்கா?” என மெதுமெதுவாக ருஹானா பேச ஆர்யன் பதில் ஏதும் சொல்லவில்லை.

சில நிமிடங்கள் அமர்ந்திருந்த ருஹானா ஒரு பெருமூச்சுடன் எழுந்து இவான் படுத்திருக்கும் இடம் சென்றுவிட்டாள். இவானின் தலையை தூக்கி மடியில் வைத்துக்கொண்டு சாய்ந்து அமர்ந்து கொண்டாள். ருஹானா சொற்கள் ஆர்யனின் மண்டைக்குள் வலம் வர வேகமாக கட்டைகளை சீவி தீயிலிட்டான்.

———-

“நைட்லாம் தூங்காம உன்னோட போனுக்காக காத்திருந்தா நீ இப்போ தான் சாவகாசமாக கால் செய்றியா? என்ன நடந்தது? போலீஸ் ஆர்யனை கண்டுபிடிச்சிட்டாங்க தானே?”

“இல்ல கரீமா மேம்! போலீஸ் போகும்போது அவங்க அங்க இல்ல”

“என்ன சொல்றே? அது எப்படி நடக்கும்?”

“தெரியல. போலீஸ் இன்னும் அந்த பக்கத்துல தேடிட்டு தான் இருக்காங்க”

“அக்கா! ஏன் இப்படி நிக்கிற? போன்ல என்ன சொன்னாங்க? என்ன ஆச்சு?”

“ஆர்யன் அங்க இருந்தும் தப்பிச்சிட்டான், சல்மா”

“அச்சோ! இப்போ என்ன ஆகும் அக்கா?”

“தகவலுக்காக காத்திருக்கறதை தவிர வேற வழி இல்ல”

——-